ஒரு கிராமத்தில் எள்ளை ஆட்டி எண்ணெய் எடுக்கும் செக்கானும் அவனுடைய மனைவியும் மகளும் குடிசையில் வாழ்ந்து வந்தனர். தினமும் செக்கான் ஆட்டிய எண்ணெய்யை கிராமத்து தெருக்களில் அம்மாவும் பொண்ணும் விற்று வருவார்கள். அப்படியொரு நாள் செக்கானின் மகள் எண்ணெய் விற்றுக்கொண்டே கையை வீசிவீசி வீதிகளில் வருகிறாள்.
அப்போது அந்தப்பக்கமாய் குதிரையிலே வீதியுலா வருகிறான் இராஜவின் மகன். கோவிலில் பட்டாசு சத்தம் கேட்டுக் குதிரை தறிகெட்டு ஓடுகிறது.
வீதியிலே எண்ணெய் விற்று வரும் செக்கான் மகள் மேலே குதிரை இடித்து கீழே விழுகிறான் இராஜாவின் மகன். பானை உடைந்து எண்ணெயெல்லாம் மண்ணில் ஊற்றி குப்புறக் கிடக்கிறாள் செக்கான் மகள்.
இருவரும் கண்களாலயேப் பார்த்துக் கொள்கிறார்கள். இராஜாவின் மகன் செக்கான் மகள் மீது காதல் கொள்கிறான்.
”எண்ணெய் விற்று வரும் செக்கான் மகளே உன்னுடைய பெயர் என்ன?” என்றான் இராஜாவின் மகன்.
பானை உடைந்த விரக்தியில் கோபமானாள் அப்பெண்.
”சரி, நான் ஒரு விடுகதை போடுகிறேன். அதற்கு சரியான பதிலை சொல்லிவிட்டால்.. அப்புறம் என்னுடையப் பெயரைச் சொல்லுகிறென் என்றாள்.
“வெடி போடு… பதில் சொல்லுகிறேன்” என்றான்.
“பூவிலே பிறந்து பூவிலே வளர்ந்த
புஷ்பராஜா மொவனே!
பூவிலும் பூ சிறும்பூ என்ன பூ?”
என்றாள் செக்கான் மகள்.
“எள்ளிலே பிறந்து எள்ளிலே வளர்ந்த
எண்ணை செக்கான் மொவளே!
இலைக்கு இலை சிறிய இலை என்ன இலை”
என்றான் இராஜாவின் மகன்.
”நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லையே”
”நீ சொன்ன விடுகதைக்கும் நான் சொன்ன விடுகதைக்கும் ஒரே விடைதான். அது இடைதாரம் செடி” என்றான்.
அவர்களுக்குள் காதல் பூ பூக்கிறது.
ஆசிரியர் குறிப்பு:
கொரோனா வைரஸ் காரணமாகக் கல்லூரிக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சொந்த ஊருக்கு வந்துள்ளேன். பல மாதங்களுக்குப் பிறகு அம்மா அப்பாவுடன் நீண்டதொரு உறவு. அப்போதுதான் அம்மாவிடம் கதை கேட்க ஆரமித்தேன். சின்ன வயசில் நிறைய கதைகள் சொல்லுவார்கள். ஒவ்வொரு நாள் இரவும் ஒரு கதையென கடந்த பத்து நாட்களிலும் பத்துக் கதைகள் கேட்டேன். இந்தக் கதைகள் யாவும் என்னுடைய கற்பனையில் உருவானவை அல்ல என்பதைச் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இக்கதைகள் முழுவதும் சேலம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் சொல்லக்கூடிய கிராமத்துக் கதைகளே ஆகும். கதைகள் பெரும்பாலும் சின்னச்சின்ன கதைகளைக் கொண்டே அமைந்துள்ளன.