முன்னொரு காலத்தில் மிகப்பெரிய செல்வன் ஒருவன் இருந்தான். அவன் மிகவும் கஞ்சன். வேலையாட்களை வருத்தி வேலை வாங்குவான். ஆனால் சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவான். செல்வன் மாதத் தொடக்கத்தில் வேலையாளை அமர்த்துவான். பெரியத்தொகையை சம்பளமாகக் கொடுப்பதாக சொல்லுவான். வேலையாள் மகிழ்ச்சியாக வேலையில் சேருவான். மாத இறுதி வரை
கடுமையாக உழைப்பான். மாதக் கடைசி நாளன்று செல்வன் வேலையாளை அழைத்து கொஞ்சம் பணம் கொடுப்பான். ”கடைக்குப் போய் ”ஆ” ”அய்யோ” வாங்கி வா … வாங்கி வராவிட்டால் உனக்குச் சம்பளம் கிடைக்காது ” என்பான். பணியாள் கடைத்தெருவுக்குச் சென்று எல்லாக் கடைகளிலும் விசாரிப்பான். ”ஆ!” ”அய்யோ!” கிடைக்காமல் திரும்பி வருவான். செல்வன் அவனுக்குச் சம்பளம் கொடுக்காமல் வீட்டுக்கு
அனுப்பிவிடுவான். எந்த வேலையாளும் அந்த கருமியிடம் சம்பளம் வாங்கியதே இல்லை.
இந்தச் செய்தியை அறிந்த ஓர் அறிவாளி கருமியிடம் சென்றான். அவனிடம் வேலைக்கு அமர்ந்தான். நாட்கள் சென்றன. மாதத்தின் கடைசி நாள் வந்தது. கருமி பணியாளை அழைத்தான். சிறு தொகையைக் கொடுத்தான்.
”கடைக்குப் போய் ”ஆ” ”அய்யோ” வாங்கி வா … வாங்கி வராவிட்டால் உனக்குச் சம்பளம் கொடுக்கமாட்டேன்” என்றான். ” சரி அய்யா! வாங்கி வருகிறேன்… ஆனால் அவை விலையேறி விட்டன… இன்னும் அதிகப் பணம் கொடுங்கள்” என்றான் பணியாள்.
கருமிக்கு ஒன்றும் புரியவில்லை… அவற்றை எப்படி வாங்க முடியும் என்று நினைத்தான். அவன் கேட்டத் தொகையைக் கொடுத்தான். அவன் பணத்தோடு திரும்பி வரப்போகிறான் என்ற நம்பிக்கையோடு இருந்தான் செல்வன்.
பணியாள் கடைத்தெருவுக்குப் போய் இரண்டு சாடிகள் வாங்கினான்… ஒரு சாடியில் ஒரு பூரானைப் போட்டான்… மற்றொன்றில் ஒரு தேளைப் போட்டுக்கொண்டு திரும்பி வந்தான்.
” அய்யா! இதோ நீங்கள் கேட்ட ”ஆ” ‘அய்யோ” என்று கொடுத்தான் பணியாள். கருமி வியப்புடன் ஒரு சாடியை வாங்கி அதனுள் கையை விட்டான். தேள் கொட்டியது. வலி பொறுக்க முடியாமல் ”ஆ” என்று கத்தினான் அவன்.
”பார்த்தீர்களா
அய்யா! இதுதான் ”ஆ” … இதைப்பாருங்கள் இதில் ”அய்யோ” உள்ளது” என்றான் வேலையாள். ”வேண்டாம் வேண்டாம்” என்று கத்தினான் கருமி. வேலையாள் தன் சம்பளத்தைப் பெற்றுக் கொண்டு மகிழ்ச்சியோடு
வீடு திரும்பினான். கருமி மனம் திருந்தி நல்லவன் ஆனான்.