ஆனந்தர் ஞானம் பெற்ற கதை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 19, 2012
பார்வையிட்டோர்: 10,245 
 
 

இளவரசர் சித்தார்த்தர் ஞானம் பெற்று கௌதம புத்தர் ஆனதும் அவருடன் வந்து சேர்ந்தார் புத்தரின் நெருங்கிய உறவினர் ஆனந்தர்.

இவர் புத்தர் மீது கொண்ட அன்பால் அவருடைய சீடனாகிவிட்டார். அதுமட்டுமல்ல மற்ற சீடர்களை விட புத்தரிடம் தனக்கு அதிக உரிமை உண்டு என நினைத்தார். அதன்படியே நடந்து கொண்டார்.

ஒரு நாள், “சித்தார்த்தா! நான் உனக்கு அண்ணன் முறை. நான் என்ன சொன்னாலும் நீர் கேட்க வேண்டும். எனக்காக நான் சொல்லும் மூன்று கட்டளைகளை ஏற்க வேண்டும்,” என்றார்.

“அந்த மூன்று கட்டளைகள் என்ன?” என்று கேட்டார் புத்தர்.

“நான் எப்பொழுதும் உம்முடனேயே இருக்க வேண்டும். எந்தச் சூழலிலும் என்னை வேறு நாடுகளுக்கு அனுப்பக்கூடாது. நான் உம்மைச் சந்திக்க யாருக்கு அனுமதி தந்தாலும் நீர் சந்திக்க வேண்டும். நள்ளிரவாக இருந்தாலும் முடியாது என்று சொல்லக்கூடாது. மூன்றாவதாக நீர் உறங்கும் போது உமது அருகிலேயே நான் உறங்க வேண்டும். வேறு அறைக்குச் சென்று துõங்கு என்று என்னிடம் சொல்லக் கூடாது. சரியா,” என்றார்.

http://www.budha.cz/img/budha.jpg

“அப்படியே செய்கிறேன்!” என்று வாக்குறுதி தந்தார் புத்தர். நாற்பத்திரண்டு ஆண்டுகள் புத்தருடனே தங்கியிருந்தும் ஆனந்தர் ஞானம் பெறவில்லை.

வெகு தொலைவிலிருந்து வந்து புத்தரின் சீடர்களான சிலர் சில நாட்களிலேயே ஞானம் பெற்றதை அறிந்த ஆனந்தர் தனக்கு மட்டும் ஏன் ஞானம் கிடைக்கவில்லை என்று வருந்தினார்.

இறக்கும் நிலையில் இருந்தார் புத்தர். அவரிடம் ஆனந்தர், “”இரவும் பகலும் உம்மைப் பிரியாமல் நாற்பத்திரண்டு ஆண்டுகள் கழித்து விட்டேன். இன்னும் நான் ஞானம் பெறவில்லை. நீர் இறந்தபின் என் நிலை என்ன ஆகும்?” என்று கண்களில் கண்ணீர் வழியக் கேட்டார்.

“வாழ்க்கையைப் பற்றி நீர் ஒன்றும் புரிந்து கொள்ளவில்லை. நீர் ஞானம் பெறுவதற்கு நானே தடையாக இருந்திருக்கிறேன். நான் இறந்தபிறகு நீர் ஞானம் பெற்றாலும் பெறலாம்.

“நீர் என்னிடம் மூன்று வேண்டுகோளை வைத்தீர். நான் அவற்றை ஏற்றுக் கொண்டது உம் வாழ்க்கைக்குத் தடையாயிற்று. நீர் எப்பொழுதும் என் அண்ணன் என்றே நினைத்துக் கொண்டு மற்றவர்களை விட என்னிடம் உமக்கு அதிக உரிமை உள்ளது என்று கருதினீர். உமக்காகத் தான் அந்த மூன்று வேண்டுகோளை ஏற்றுக் கொண்டேன். என் இறப்பு ஒன்று தான் நீர் ஞானம் பெற உமக்கு உதவி செய்யும்,” என்றார்.
அதன்பிறகு இறந்தும் போனார் புத்தர்.

ஞானம் பெற்ற சீடர்கள் அனைவரும் ஒன்றாகக் கூடினர். கடந்த நாற்பத்திரண்டு ஆண்டுகளில் புத்தர் என்னென்ன அறிவுரைகள் சொன்னாரோ அவற்றை எழுதி வைக்க வேண்டுமென்று நினைத்தனர்.

அங்கிருந்த யாருமே புத்தருடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் தொடர்ந்து இருந்தது இல்லை. அத்தனை ஆண்டுகளும் புத்தருடன் இருந்த ஆனந்தரோ இன்னும் ஞானம் பெறவில்லை. அதனால் அந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள அவர் அனுமதிக்கப்படவில்லை.

கூட்டம் நடக்கும் இடத்திற்கு வெளியே அமர்ந்து புலம்பியபடி இருந்தார் ஆனந்தர்.

“புத்தரே! உங்களுடன் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இடைவிடாமல் இருந்திருக்கிறேன். உங்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒவ்வொரு சிறு நிகழ்ச்சியும் என் உள்ளத்தில் பதிந்து உள்ளது. ஞானம் பெறாதவர் என்பதனால் எனக்கு அனுமதி இல்லையே. நான் என்ன செய்வேன்,” என்று அழுது புலம்பினார். வாழ்க்கையே அழிந்து விட்டது போல அழுதார்.
கண்ணீர் வெள்ளத்தில் நனைந்தார். அப்போது தன் தம்பி தான் புத்தர் என்ற அவருடைய ஆணவம் நீங்கியது. குழந்தையைப் போல ஆன அவர் அப்பொழுதே ஞானம் பெற்றார்.

வெளியே வந்த சீடர்கள் சில விளக்கங்கள் கேட்பதற்காக ஆனந்தரை தேடினர். அவர் கூறிய விளக்கங்களை கேட்டு ஆச்சரியமடைந்த சீடர்கள் அவர் ஞானம் பெற்றதை அறிந்து மகிழ்ந்தனர்.

புத்தரின் போதனைகளை எல்லாம் அதன்பிறகு ஆனந்தரே தொகுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *