இமயமலை உச்சியில் புத்த மடம் ஒன்று இருந்தது. அங்கே எப்போதும் பனி படர்ந்து இருக்கும். அந்த மடத்திற்குச் செல்வதே கடின முயற்சியாக விளங்கியது. புத்த துறவிகள் இருவர் அந்த மடத்திற்குச் செல்வதற்காக மலை ஏறிக் கொண்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர், “”காற்று வேகமாக வீசுகிறது. பனியும் மிகுதியாகக் கொட்டுகிறது. நாம் வேகமாக நடந்தால்தான் மடத்தை அடைய முடியும். இல்லையேல் வழியிலேயே சாக வேண்டியதுதான்!” என்றார்.
இருவரும் வேகமாக நடக்கத் தொடங்கினர். அவர்கள் சென்ற வழியில் முதியவர் ஒருவர் விழுந்து கிடந்தார். வலி தாங்க முடியாமல் அவர் முனகிக் கொண்டிருந்தார். இருவரும் அருகே சென்று அவரைப் பார்த்தனர்.
“”மலைப் பாதையில் உருண்டு விழுந்ததால் இவர் கால் ஒன்று உடைந்துவிட்டது. இனி இவரால் நடக்க முடியாது. தாமதம் செய்தால் நம்மாலும் மடத்தை அடைய முடியாது. உடனே நாம் இங்கிருந்து புறப்படுவோம்!” என்றார் அவர்களில் ஒருவர்.
“”இந்த நிலையில் இவரை எப்படி இங்கே விட்டுச் செல்வது? நாம் இருவரும் இவரை எப்படியாவது மடத்திற்குத் தூக்கிச் செல்வோம். அங்கே உள்ளவர்கள் இவரைப் பார்த்துக் கொள்வர்!” என்றார் இன்னொருவர்.
“”நாமே உயிருடன் மடத்தை அடைவோமா என்பது தெரியவில்லை. அவரவர் வினையை அவரவரே அனுபவிக்க வேண்டும். இங்கேயே சாக வேண்டும் என்பது இவர் விதி. நீர் வந்தால் வாரும்; நான் போகிறேன்!” என்று சொன்னார் அவர். அடுத்தவரின் பதிலுக்குக் காத்திராமல் அங்கிருந்து வேகமாக நடக்கத் தொடங்கினார். கால் உடைந்து கிடந்தவரை அப்படியே விட்டுச் செல்ல இன்னொருவருக்கு உள்ளம் வரவில்லை. தன் உயிர் போனால் போகட்டும் என்று அவரைத் தோளில் தூக்கிக் கொண்டார். மலைப்பாதையில் ஏறத் தொடங்கினார்.
மிகுந்த எடையைத் தூக்கிச் சென்றதால் அந்தக் கடுங்குளிரிலும் அவருக்கு வியர்த்தது. துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு மலை உச்சியை நெருங்கினார். அவருக்கு முன்னே சென்ற துறவி அங்கே வழியில் இறந்துகிடந்தார். குளிர் தாங்காமல் அந்தத் துறவி விறைத்துப் போய் இறந்துவிட்டார் என்பது அவருக்குத் தெரிந்தது.
அவரைப் போல இந்தக் குளிரில், தான் ஏன் இறக்கவில்லை என்று சிந்தித்தார் அவர். அந்த முதியவரைத் தூக்கி வந்ததால் அதிகமாக மூச்சு வாங்கியது. அதனால் உடல் எங்கும் கூடுதலாக ரத்தம் பாய்ந்து வெப்பம் ஏற்பட்டது. அத்துடன் அந்த முதியவரின் உடல் சூட்டால் இருவரது உடலும் சூடு கண்டது. அதனால், கடுமையான குளிர் தன்னைக் கொல்லவில்லை என்பது அவருக்குப் புரிந்தது. பிறருக்கு உதவி செய்வதால் நம்மையே விளையும். அந்த உதவியே தன் உயிரைக் காப்பாற்றியது என்ற உண்மை அவருக்குப் புரிந்தது.
– நவம்பர் 19,2010