தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: May 4, 2013
பார்வையிட்டோர்: 7,974 
 
 

வெகு காலத்திற்கு முன்னர் சீனாவில் புகழ்பெற்ற சிற்பி ஒருவர் இருந்தார்.

ஒருநாள் பெரிய செல்வந்தர் ஒருவர், சிற்பியைத் தனது மாளிகைக்கு வரவழைத்தார். அந்த மாளிகையின் செல்வச் செழிப்பு கண்டு சிற்பி மிகவும் வியந்து போனார்.

அவன் அவனாகவேதனது வீட்டிற்கு வந்தபிறகும் சிற்பி, செல்வந்தரின் சுகபோக வாழ்வு பற்றியே எண்ணிக் கொண்டிருந்தார். தானும் ஒரு செல்வந்தனாக இருந்தால் எவ்வளவு நல்லது என்று எண்ணி ஏங்க ஆரம்பித்தார்.

சிற்பியின் கலையாற்றலில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஒரு தேவதை, அவருக்குத் தெரியாமல் அவருடனேயே இருந்து வந்தது. சிற்பி செல்வந்தனாக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறார் என்பது அந்த தேவதைக்குப் புரிந்தது.

அதனால், அவன் முன் தோன்றிய அந்த தேவதை, “நீ விரும்பியபடியே செல்வந்தனாவாய்!’ என்று ஆசீர்வதித்தது.

உடனே சிற்பியின் வீட்டில் ஏராளமான செல்வம் குவிந்தது. சிற்பி அளவற்ற மகிழ்ச்சியுடன் தேவதைக்கு நன்றி கூறினார்.

நாள்கள் சில நகர்ந்தன. செல்வத்தில் திளைத்துக் கொண்டிருந்த சிற்பி, தன்னுடைய பால்ய நண்பனும் அரசு அதிகாரி பொறுப்பிலிருந்தவருமான ஒருவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் உரையாடிக் கொண்டே வீதியில் வரும்போது, அந்த அதிகாரிக்கு மக்கள் தரும் வரவேற்பையும் மரியாதையையும் கண்டு வியப்படைந்தார் சிற்பி.

வீடு திரும்பியதும், அந்த அதிகாரிக்கு உள்ள செல்வாக்கைப் பற்றியே நினைத்துக் கொண்டிருந்தார் சிற்பி.

“நான் ஒரு அரசாங்க அதிகாரியாக இருந்தால் என்னைக் கண்டு மக்கள் எல்லோரும் பயப்படுவார்கள். மரியாதை செலுத்துவார்கள். நான் என் பகைவர்களைக் கூடப் பழிவாங்கிவிடலாம்’ என்று நினைத்தார்.

உடனே, தேவதை அவர் முன் காட்சியளித்தது.

“நீ, நினைத்தபடியே அரசு அதிகாரி ஆவாயாக!’ என்று வரம் தந்தது அந்த தேவதை.

அடுத்த நாளே சிற்பி அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளதாக மன்னரின் வீரர்கள் சிலர் அவர் வீட்டுக்கு வந்து சொல்லிவிட்டுச் சென்றனர். சிற்பியின் சந்தோஷத்திற்கு அளவேயில்லாமல் போய்விட்டது!

அரசு அதிகாரியான பின்னர், சிற்பி ஒருநாள் அருகிலுள்ள வனத்திற்குச் சென்றார். அங்கு சில மலைவாசிப் பெண்கள் விறகுகள் பொறுக்கிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கைது செய்து தண்டித்தார் சிற்பி (அரசு அதிகாரி).

இதைக் கேள்விப்பட்ட மலைவாசி மக்கள் கோபம் கொண்டனர்.

கூட்டமாகத் திரண்டு வந்து, சிற்பியை நையப் புடைத்துவிட்டனர்.

அடிபட்ட சிற்பி மயங்கி விழுந்தார்.

மயக்கம் தெளிவடைந்த போது, “சீச்சீ…இதுவும் ஒரு பிழைப்பா? அரசு அதிகாரிகளை மலைவாசிகள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லையே! அதனால் மலைவாசிகளில் ஒருவனாக இருந்தால்தான் நல்லது’ என்று சிற்பி நினைக்க ஆரம்பித்தார்.

உடனே தேவதை அங்கே தோன்றியது. மலைவாசிகளுடன் அவரைச் சேர்த்துவிட்டது. அழகிய மலைவாசிப் பெண் ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டு அங்கேயே தங்கிவிட்டார் சிற்பி. அங்கே விவசாயம் செய்து வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

ஒருநாள் சிற்பி, விவசாய வேலையில் ஈடுபட்டிருந்தபோது கடும் வெயிலடித்தது. அவரால் சூரிய வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. கோபத்துடன் சூரியனை நிமிர்ந்து பார்த்தார்.

வெப்பம் தாங்காமல் கண்களிலிருந்து நீர் வழிந்தது. அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு கரிய மேகம் சூரியனை முற்றிலுமாக மறைத்தது. சுற்றிலும் இருளாகிப் போனது.

இதைக் கண்ட மலைவாசியாக மாறியிருந்த சிற்பி, “ஆகா! என்ன ஆச்சரியம்! சுட்டெரிக்கும் சூரியனைக்கூட மறைக்கும் சக்தி கொண்டது இந்த உலகத்தில் இருக்கிறதா?’ என்று எண்ணியவர், இப்படிப்பட்ட சக்தி கொண்ட மேகமாக மாறினால் எவ்வளவு நன்றாக இருக்கும்? என்று நினைத்தார்.

உடனே அவர் முன் தேவதை தோன்றியது. “உன் விருப்பப்படியே நடக்கும்!’ என்று கூறி மறைந்தது.

உடனே சிற்பி மேகமாக மாறி வானுக்கு எழும்பினார்.

அப்போது, அவருக்கு உணவு கொண்டு வந்த, அவருடைய மனைவி இந்தக் காட்சியைக் கண்டு அலறினாள்.

அலறல் சத்தம் கேட்ட மலைவாசி மக்கள் ஓடோடி வந்தனர். அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கும்போதே, மேகமாக மாறிய சிற்பி உயரே பறந்தார்.

உடனே, அவர்கள் “ஓ… இதுவரை நம்முடன் இருந்தது சாதாரண மனிதன் அல்ல! நமது தெய்வமான மேகக் கடவுள். இந்தப் பெண் நமது தெய்வத்தின் மனைவி’ என்று கூறியபடியே மேகமாக மாறியிருந்த சிற்பியையும் அவரது மனைவியையும் வணங்கினர்.

மேகமாக மாறிய சிற்பி விண்ணில் மிதந்தார். அப்போது திடீரென்று ஒரு பெருங்காற்று வீசியது. அந்தக் காற்றின் வேகத்தில் மேகமாக இருந்த சிற்பி ஒரு கற்பாறையில் போய் மோதினார். கற்பாறையில் பட்ட மேகம் சிதறிப் போனது.

மேகமாக மாறிய சிற்பி, “என்னையே இந்தப் பாறை தூள் தூளாக்கி விட்டதே! பாறையின் ஆற்றல் மகத்தானது. அதனால் ஒரு பாறையாக மாறுவதுதான் என்றென்றைக்கும் நல்லது!’ என்று நினைத்தார்.

உடனே, தேவதை அவர் முன் தோன்றியது. அவர் விருப்பப்படியே அவரை ஒரு கற்பாறையாக மாற்றியது.

சில நாட்களுக்குப் பிறகு, அந்தச் சிற்பியிடம் முன்னர் பணியாற்றிய இளம் சிற்பி ஒருவன் வந்து அந்தக் கற்பாறையைப் பார்த்தான். அவன், “ஆகா! அற்புதமான பாறை! சிலை வடிக்க மிகவும் சிறப்பானது. இதை நமது குருநாதர் பார்த்தால் விடவே மாட்டார்..!’ என்று கூறி வியந்து நின்றான்.

இதைக் கேட்ட, பாறை வடிவிலிருந்த சிற்பிக்கு தன்னுடைய முதல் தொழிலின் மேன்மை புரிந்தது.

“மனம் ஆசைப்பட்டுக் கொண்டேதான் இருக்கும்! ஆசைப்படும் அனைத்தும் கிடைத்துவிட்டால், அதில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படும் என்பது இப்போது புரிந்துவிட்டது!’ என்று நினைத்த சிற்பி தனது செயலுக்காக மிகவும் வருந்தினார்.

“யாராக இருந்தாலும் அவனவன் அவனாகத்தான் இருக்க வேண்டும்! தனது தகுதிக்கு மீறி ஆசைப்படக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டேன். இனிமேல் நான் சிற்பியாகவே இருக்க விரும்புகிறேன்…’ என்று மனம் உருகி தனது தேவதையிடம் வேண்டினார்.

தேவதையும் அவர் முன்னே தோன்றியது!

“உன் விருப்பப்படியே ஆகட்டும். ஆனால் இனி நீ அழைத்தாலும் நான் வரவே மாட்டேன்…’ என்று கூறி மறைந்தது அந்த தேவதை!

பாறையாக இருந்தவர் உடனே சிற்பியாக மாறிப் போனார்.

– அ.சா.குருசாமி (நவம்பர் 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *