கதையாசிரியர்:
தின/வார இதழ்: அம்புலிமாமா
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: October 29, 2022
பார்வையிட்டோர்: 13,217 
 
 

(1991ல் வெளியான சிறுகதை, ஸ்கேன் செய்யப்பட்ட படக்கோப்பிலிருந்து எளிதாக படிக்கக்கூடிய உரையாக மாற்றியுள்ளோம்)

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமன் மீண்டும் மரத்தின் மீது ஏறி அதில் தொங்கும் உடலைக் கீழே வீழ்த்தினான். பின்னர் கீழே இறங்கி அதனைச் சுமந்து கொண்டு அவன் மயானத்தை நோக்கிச் செல்கையில் அதனுள் இருந்த வேதாளம் எள்ளி நகைத்து “மன்னனே. நீ இப்படி விடாப்பிடியாக இச்செயலை செய்ய முயல்வது கண்டு பரிதாபப்படுகிறேன். உனக்கு சிரமம் தோன்றாதிருக்க ஒரு கதையைக் கூறுகிறேன். கவனமாகக் கேள்” என்று சொல்லிக் கதையை ஆரம்பித்தது.

மங்களகிரியை மார்க்கசேனன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவனது மனைவி இரட்டைக் குழந்தைகளைப் பெற்று விட்டு இறந்து போனாள். மன்னன் அவர்களுக்கு வீரசேனன், சூரசேனன் என்று பெயர் வைத்து தக்க முறையில் வளர்த்து வந்தான். அவர்களுக்கு எல்லாக்கலையும் கற்பிக்க ஏற்பாடு செய்தான். வீரசேனன் சூரசேனன் பிறப்பதற்குச் சில நொடிகளுக்கு முன் பிறந்தவன். எனவே அவனை மன்னன் மூத்தவனாகக் கருதி அவனுக்குப் பட்டம் கட்டவும் தீர்மானித்திருந்தான்.

தன் இரு மகன்களும் விவாக வயதை அடைந்து விட்டதால் அவர்களுக்கு விவாகம் செய்து வைத்து மூத்தவனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவிட்டுத்தான் கானகம் போய் நிம்மதியாகக் காலம் கழிக்கப் போவதாக அவன் தன் இரு மகன்களிடமும் கூறினான்.

பிறகு அவன் “நான் இப்போதே பலநாட்டு அரச குமாரிகளின் உருவப் படங்களை வரவழைக்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் பெண்களை உங்களுக்கு மணம் செய்து வைத்து விடுகிறேன்” என்றான்.

அதைக்கேட்ட வீரசேனன் “தந்தையே! என்னை மன்னித்து விடுங்கள். நான் எந்த அரசகுமாரியையும் தேர்ந்தெடுத்து மணம் செய்து கொள்ளப்போவதில்லை. ஏனென்றால் நான் நம் ஆஸ்தான சிற்பியின் மகளையே மணக்க விரும்புகிறேன். வேறு எந்தப் பெண்ணையும் மணக்க மாட்டேன்” என்றான்.

அதைக்கேட்ட மார்க்கசேனன் திடுக்கிட்டான். வீரசேனனின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என்பது அவனுக்கு நன்கு தெரியும். அதனால் அவன் சூரசேனனைப் பார்த்து “நீ என்ன சொல்லப் போகிறாய்?” என்று கேட்டான். அவனும் “நாளைக்கு என் எண்ணத்தைக் கூறுகிறேன்” என்றான்.

மறுநாள் அவன் தன் தந்தையிடம் “நான் மிக மிக அழகாக உள்ள அரசகுமாரிகளில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்ள விரும்புகிறேன். எனவே தாங்கள் எல்லா அரசகுமாரிகளின் படங்களை வரவழைக்காமல் மிக அழகாக உள்ள அரசகுமாரிகளின் உருவப் படங்களை மட்டும் வரவழையுங்கள். நான் அவர்களில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்கிறேன்” என்றான்.

ஒரு சில நாட்களில் மார்க்கசேனன் சில அழகிய அரசகுமாரிகளின் உருவப் படங்களை வரவழைத்து விட்டான். சூரசேனனும் அவற்றைப் பார்த்துவிட்டு முடிவில் புவனகிரி, உதயகிரி, சந்திரிகிரி ஆகிய மூன்று நாடுகளின் அரசகுமாரிகளின் படங்களைத் தனியாக எடுத்து வைத்து “தந்தையே! நான் இந்த மூன்று அரசகுமாரிகளையும் நேரில் கண்டு பேசிவிட்டு முடிவில் இவர்களில் ஒருத்தியைத் தேர்ந்தெடுத்து மணந்து கொள்கிறேன்” என்றான்.

மார்க்கசேனனும் “சரி. உன்னிஷ்டப்படியே செய். நீ புறப்பட்டு வருவதாக அந்த மன்னர்களுக்கும் தகவல் அனுப்புகிறேன். நீ புறப்படவும் ஏற்பாடுகளைச் செய்கிறேன்” என்றான். சூரசேனனும் மறுநாள் கிளம்பி முதலில் புவனகிரியை அடைந்தான்.

புவனகிரி மன்னனும் தானே வந்து சூரசேனனை வரவேற்றுத் தன் அரண்மனைக்கு அழைத்துச் சென்றான். அவனுக்கு எல்லா உபசாரங்களையும் செய்தபின் தன் மகளை அழைத்து வருமாறு அவன் பணிப்பெண்களுக்குக் கட்டளை இட்டான்.

சற்று நேரத்திற்குப் பின் அந்தப் பெண்கள் திரும்பி வந்து “அரசே! மன்னிக்க வேண்டும். இளவரசியார் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். நேற்றிரவு மயிலிறகு விசிறியால் வீசிக் கொண்டிருக்கையில் ஒரு மயிலிறகு பஞ்சணையில் விழுந்து விட்டது. இளவரசியார் அதைப் பார்க்கவில்லை. அது அவரைக் குத்தியதால் இரவு முழுவதும் அவர் உடல் வலித்தது. அதனால் அவர் தூங்கவில்லை. இப்போது தான் தூங்குகிறார். எனவே அவரை அரசகுமாரர் மாலையில் சந்திக்கலாம் என்று மகாராணியார் சொல்லச் சொன்னார்” என்றார்கள்.

சூரசேனன் அன்று மாலையில் புவனகிரி அரசகுமாரியைச் சந்தித்தான். அவளோடு அவன் மட்டுமே பூங்காவில் இருந்தான். அப்போது அவன் “உங்கள் திருமணம் தீர்மானிக்கப்பட்டால் நீங்கள் எனக்குப் பிரியமான நீலநிறத்தில் புடவை கட்டிக் கொள்வீர்களா?” என்று கேட்டான். அவளும் “இல்லை. எனக்குப் பிடித்தமான சிவப்பு நிறப் புடவையையே கட்டிக் கொள்வேன்” என்றாள்.

“விவாகம் ஆனதும் நீங்கள் முதலில் என் தந்தையின் கால்களில் விழுந்து வணங்குவீர்களா அல்லது உங்கள் தந்தையின் கால்களிலா?” என்று அவன் கேட்கவே அவளும் “முதலில் என் தந்தையின் கால்களில்தான்” என்றாள். அடுத்து அவன் “சரி, விருந்தில் நீங்கள் எனக்குப் பிரியமான பாயசத்தைக் குடிப்பீர்களா அல்லது உங்களுக்குப் பிடித்த இனிப்பைச் சாப்பிடுவீர்களா?” என்று கேட்கவே அவளும் “எனக்குப் பிடிதத் இனிப்பைத்தான் சாப்பிடுவேன்” என்றாள்.

இதன் பிறகு சூரசேனன் புவனகிரியிலிருந்து கிளம்பி உதயகிரி அரசகுமாரியைக் காணச் சென்றான். உதயகிரி மன்னன் பெயரளவில்தான் மன்னன். உண்மையில் நிர்வாகம் அவனது ராணியின் கீழ்த்தான் இருந்தது. அவள்தான் சூரசேனனை வரவேற்றாள். அந்த வரவேற்பின் போது அரசகுமாரி இல்லாதது கண்டு அவன் “உங்கள் மகளை வரச் சொல்கிறீர்களா?” என்று கேட்டான்.

உதயகிரி ராணியும் “என் மகள் தினமும் குளிக்கு முன் பாலேடு எடுத்து உடலில் பூசிக் கொண்டு குளிப்பது வழக்கம். இன்றும் அவள் அதனைத் தன் முகத்தில் பூசிக் கொண்டபோது பாலேடு அவளது கன்னத்தில் குத்தி காயப்படுத்தி விட்டது. அதனால் குளித்து முடித்தபின் வைத்தியரை வரவழைத்துக் காட்டினேன். வைத்தியர்களின் சிகிச்சையில் இருக்கிறாள்” என்றாள். அன்று மாலை சூரசேனன் உதயகிரி அரசகுமாரியைச் சந்தித்த போது அவன் புவனகிரி அரசகுமாரியிடம் கேட்ட கேள்விகளையே அவளிடம் சொல்லி விடைகளைக் கேட்டான். அவளும் “உங்களுக்குப் பிடித்தமான நீல நிறப் புடவையைக் கட்டிக் கொள்வேன். நீங்கள் விரும்புகிற பாயசத்தைச் சாப்பிடுவேன். உங்கள் தந்தையின் கால்களில் முதலில் விழுந்து வணங்குவேன்” என்றாள்.

சூரசேனன் உதயகிரியிலிருந்து கிளம்பி சந்திரகிரிக்குச் சென்றான். அவனை வரவேற்க மன்னனும் ராணியும் வந்திருந்தார்கள். அவனை அவர்கள் தம் அரண்மனைக்கு அழைத்துச் சென்றார்கள். அவர்களாகவே “அரசகுமாரா! நீ சற்று இளைப்பாறு. இன்று மாலை நீ அரசகுமாரியைச் சந்திக்கலாம்” என்று அவன் கேட்பதற்கு முன் கூறினார்கள்.

அப்போது சூரசேனன் “நீங்கள் நல்ல நேரம். சகுனம் என்றெல்லாம் பார்ப்பது உண்டா?” என்று கேட்க ராணியும் “அதெல்லாம் இல்லை.இன்று காலை எங்கள் மகள் கோவிலுக்குப் போய் விட்டுத் திரும்பிவந்து கொண்டிருந்த போது ஒரு பவளமல்லி மலர் அவள் தலைமீது விழுந்தது. அப்போதிருந்து அவள் தலைவலியால் கஷ்டப்பட்டுகிறாள்” என்றாள் கண் கலங்கியவாறே.

மாலையில் சூரசேனன் சந்திரகிரி அரசகுமாரியை அவளது அறையில் சந்தித்தான். அவளிடமும் அவன் மற்ற அரசகுமாரிகளிடம் கேட்ட அதே மூன்று கேள்விகளைக் கேட்டான். அவளோ “புடவை நிறத்தைப் பற்றிக் கவலைப்பட மாட்டேன். அது உடுக்க கனமானதா அல்லது இலேசானதா என்றே பார்ப்பேன். இனிப்பு எதைப் பரிமாறினாலும் சாப்பிடுவேன்.

ஏனெனில் அவற்றை விருந்தின் போது தயாரிப்பது என் பொறுப்பில் இல்லையே. நான் எல்லோருக்கும் விழுந்து வணங்கினால் என் இடுப்பு ஒடிந்து விடலாம். எனவே தனித்தனியாக ஒவ்வொருவர் கால்களிலும் விழுந்து வணங்காமல் எல்லோரையும் பார்த்துக் கை கூப்பி வணங்குவேன்” என்றாள்.

சூரசேனன் சந்திரகிரியிலிருந்து புறப்பட்டுத் தன் ஊரை அடைந்தான். அவன் தன் தந்தையிடம் “நான் சந்திரகிரி அரசகுமாரியை மணக்க விரும்புகிறேன். அவளே உலகின் எல்லோரையும் விட அழகானவள்” என்றான்.

வேதாளம் இந்தக் கதையைக் கூறி “மன்னனே! சாதாரணமாக எந்த இளைஞனும் தான் மணக்கப் போகும் பெண் அறிவாளியாயும் அடக்க ஒடுக்கமாய் இருப்பவளாயும் அழகாயும் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவான. வீரசேனனும் அப்படிப்பட்ட இளைஞன் தானே. ஆனால் அவன் தன் மனைவி மிகமிக அழகாக இருந்தாலே போதும் என ஏன் எண்ணினான்? இது நகைப் பிற்குரிய விஷயம்தானே. ஆனால் சூரசேனன் இவ்வாறு ஒரு முடி வுக்கு வர வேறு ஏதாவது கார ணம் இருந்தாலும் இருக்கலாம். உனக்கு இது நன்கு தெரிந்திருந்தும் நீ அதனைக் கூறாவிட்டால் உன் தலை வெடித்துச் சுக்கு நூறாகி விடும்” என்றது.

விக்கிரமனும் “இரட்டைக் குழந்தைகளான போதிலும் வீரசேனன் சூரசேனன் பிறப்பதற்கு ஒருசில நொடிகளுக்கு முன் பிறந்த தால் மன்னனின் மூத்த மகன் என்று கருதப்பட்டு சிம்மாசனத்தில் அமர உரிமை பெற்றான். அரசனாகப் போகும் வீரசேனன் அரசியல் அறிவே இல்லாத ஒரு சாதாரண ஏழைக் குடும்பப் பெண்ணை மணக்க உறுதி கொண்டு விட்டான். அவள் ராணியாகும் போது சூரசேனனின் மனைவியாகும் அரச குடும்பப் பெண்ணிற்கு அவளை மட்டமானவள் என்ற எண்ணமே தோன்றும். அதனால் சூழ்ச்சி பொறாமை, போட்டி என்றெல்லாம் ஏற்படும். அவனது மனைவி பட்டத்து ராணியாக முடியாவிட்டாலும் தான் பட்டத்து ராணியை விட ஏதோ ஒரு விதத்தில் உயர்ந்தவள் என்ற திருப்தி அவள் மனதில் குடிகொண்டிருக்க வேண்டும் என்று சூரசேனன் நினைத்தான். சாதாரணப் பவள மல்லிப்பூ தலைமீது விழுந்ததால் உதயகிரி அரச குமாரிக்குத் தலைவலி ஏற்பட்டது என்றால் அவளால் கனமான தங்கக் கிரீடத்தைத் தலையில் அணிய முடியாதே. இந்த பாரத்தைத் தாங்கமுடியாதவளால் ராஜ்யபாரத்தைத் தாங்க முடியுமா என்ன? குடும்பத்தில் அமைதியும் நாட்டில் கலகமோ குழப்பமோ ஏற்படக் கூடாது என நினைத்தே சூரசேனன் அறிவுக்கு முதலிடம் கொடுக்காமல் மிகமிக அழகான பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். இதுதான் உண்மையான காரணம்” என்று கூறினான்.

விக்கிரமனின் சரியான இந்த பதிலால் அவனது மௌனம் கலைந்து விடவே, அவன் சுமந்துவந்த உடலோடு வேதாளம் உயரக் கிளம்பி மீண்டும் முருங்க மரத்தில் ஏறிக் கொண்டது.

– மே 1991

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *