வாத்து முட்டைகளுடன் அன்னப்பறவை ஒன்றின் முட்டையும் கலந்துவிட்டது. இதை அறியாத வாத்து எல்லா முட்டைகளையும் அடை காத்தது. முட்டைகள் பொரித்துக் குஞ்சுகள் வெளிவந்தன.
ஒரு குஞ்சு மட்டும் வெள்ளை வெளேரென்று இருப்பதையும், அழகாக நடப்பதையும் கண்டு தாய் வாத்தும், மற்ற குஞ்சுகளும் பொறாமை கொண்டன.
எப்பொழுதும் அதைக் குறை சொல்லிக் கொண்டே இருந்தன. அவற்றின் தொல்லை தாங்காமல் தவித்தது அன்னப் பறவையின் குஞ்சு.
“என் மீது எந்தத் தவறும் இல்லையே. ஏன் என்னிடம் எல்லாரும் வெறுப்புக் காட்டுகின்றனர்’ என்று வருந்தியது அது.
அன்னப் பறவையின் கூட்டம் ஒன்று அங்கே பறந்து வந்தது. வாத்துக் கூட்டத்தில் அன்னப் பறவை ஒன்று இருப்பதைக் கண்டது.
“”நீ ஏன் இங்கே இருக்கிறாய்? எங்களுடன் வா,” என்று அழைத்தது அன்னப் பறவை ஒன்று.
“”நான் எங்கள் கூட்டத்துடன் இருக்கிறேன். எதற்காக என்னை உங்களுடன் அழைக்கிறீர்கள்? நீங்கள் யார்?” என்று கேட்டது அன்னப் பறவையின் குஞ்சு.
“”நீ வாத்து அல்ல. எங்களைப் போன்ற அன்னப் பறவை. வானத்தில் நீண்ட தொலைவு பறக்கும் ஆற்றல் உனக்கு உண்டு. உன் வடிவத்தை அந்த நீர்நிலையில் பார். எங்களைப் போலவே இருப்பது தெரியும்,” என்றது இன்னொரு அன்னப் பறவை.
நீர் நிலையில் தன் வடிவத்தை அப்பொழுதுதான் பார்த்தது அது. வாத்துக் கூட்டம் தன்னை வெறுப்பதன் காரணமும் புரிந்தது.
அன்னப் பறவைகளுடன் சேர்ந்த அது வானத்தில் பறந்து செல்லத் தொடங்கியது.
– ஜூன் 25,2010