அணில்,ஆடு,இரக்கம்!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சுட்டிக் கதைகள்
கதைப்பதிவு: January 30, 2018
பார்வையிட்டோர்: 15,740 
 
 

அணிலுக்கு மனது சரியாயில்லை!

விடிந்தால் பக்ரித் பண்டிகை. பண்டிகைதின சந்தோஷம் சிறிதுமின்றி காணப்பட்டான்.

அவனது மனது முழுவதும் அந்த ஆடு பற்றிய சிந்தனை தான்!

அணில் முகமதுவை எல்லோரும் அணில் என்று தான் அழைப்பார்கள்.

அணிலின் வாப்பா கறீம் பாய் இராமநாதபுரத்திலிருந்து தேடிப்பிடிச்சு பக்ரித் பண்டிகைக்காக வாங்கிவரப்பட்ட செம்மறி ஆடு தான், அந்த ஆடு!

கொம்புகள் இரண்டும் நன்கு வளர்ந்து சுருண்டு சுருள் வடிவில் பக்க வாட்டில் நீண்டிருந்தது.

குறுகிய வால்!

அடர்த்தியான அதிக சுருள்களை கொண்ட வெள்ளை நிற உரோமம் கொண்டிருந்தது. பக்ரித் பண்டிகைக்கு ஆடு வெட்டிய பிறகு வெள்ளை நிறம் உரோமம் கொண்ட ஆட்டுத்தோலுக்கு தான் சந்தைகளில் அதிக மதிப்பு இருப்பதால் வியாபார நோக்கோடும் கறீம் பாய் தனது மொத்த அனுபவ அறிவோடு அந்த செம்மறி ஆட்டை தேர்ந்தெடுத்து வாங்கிவந்திருந்தார்.

அந்த ஆடு வீட்டுக்கு வந்ததிலிருந்தே அணில் வீட்டில் சந்தோஷம் எங்கும் நிரம்பியிருந்தது. அனைவருக்கும் கொண்டாட்டம். அனைவருமே ஆட்டை நன்றாக கவனித்துக் கொண்டனர்.

ஆட்டுக்கு குடிக்க தினமும் குடம் குடமாக தண்ணீர் வைப்பாள் அணிலின் தங்கை ஜரீனா. விலையுயர்ந்த ஷாம்பு போட்டு குளிப்பாட்டி துவட்டிவிடுவாள் அணிலின் அம்மா மெக்கருன்னிஷா. அந்த ஆடு படுத்திருக்கும் இடத்தை கூட்டி பெருக்கி சுத்தம் செய்திடுவார் அணிலின் நன்னி பாத்திமா.

தினமும் பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பியதும் வீட்டிலிருந்து சிறிது தூரத்தில் இருக்கும் இரயில்வே புறம்போக்கு நிலத்தில் உள்ள புல்வெளியில் அந்த ஆட்டை மேய்ச்சிட்டு வருவான் அணில்.

அப்படியான முதல் நாளில், இரயில்வே புறம்போக்கு நிலத்திற்கு ஆட்டை மேய்ப்பதற்காக அந்த ஆட்டை அழைத்துச் செல்ல பெரும் பாடுபட்டுப் போனார்கள் அணிலும், அவனது வகுப்புத் தோழன் சிவாவும்.

“ வரமாட்டேன்“ என்று அடம்பிடிக்கும் அந்த ஆட்டை பின்புறமிருந்து தள்ளிக்கொண்டு சென்றான் சிவா. முன்புறமிருந்து கழுத்தில் கயிறு கட்டி இழுத்துச் செல்ல படாத பாடுபட்டுப் போனார்கள்.

ஆடு தனது முன்னங்கால்களை முன்னோக்கி தரையில் பலம் கொண்ட மட்டும் .நன்றாக ஊண்டி நகர மறுத்தது.

அணிலுக்கு திடீர் யோசனை வந்தது!

ஆட்டின் கழுத்து கயிற்றை விட்டு விட்டு தரையில் ஊன்றிய ஆட்டின் கால்களை தன் கரங்களில் பிடித்து பின்னோக்கி இழுத்துக் கொண்டே சென்றான், அணில்.

ஒரு வழியாக மேய்ச்சல் இடத்திற்கு ஆடு வந்தாகிவிட்டது.

கழுத்தை தொங்கப்போட்டுக் கொண்டு எதையோ இழந்து தவிப்பது போன்று ஆடு புற்களை மேய மறுத்து அடம்பிடிக்கத் தொடங்கிவிட்டது.

அணிலின் தோழன் சிவா கை நிறையா நல்ல பசுமையான புல்லை பிடிங்கி வந்து ஆட்டின் வாயருகே தின்னக் கொடுத்தான். ஆடு முகத்தை திருப்பிக் கொண்டது.

சிவாவுக்கு தன் நண்பனின் முன்பு கௌரவ குறைச்சலாகி விட்டது.

அணிலும் சிவாவும் எவ்வளவு போராடியும் அவர்கள் தோற்றது தான் மிச்சம் என்றாகிவிட்டது.

அந்திச் சூரியன் மறையத் தொடங்கியதும் இருவரும் சேர்ந்து அந்த ஆட்டை தள்ளிக் கொண்டும், இழுத்துக் கொண்டும் வீடு வந்து சேர்ந்தனர்.

சிறிது நாட்களில் அணிலின் மகுடிக்கு அந்த ஆடு மயங்கி விட்டது போலும்!

அணிலுக்கு பின்னாடியே பின்தொடர்ந்து செல்கிறது!

ஆட்டின் கழுத்தில் கயிறு கட்டப்படவில்லை. ஆட்டின் முன்னங்கால்களை பிடித்து அணில் தூக்கிச் செல்வதில்லை. அணிலின் பேச்சை ஆடு கேட்கத் துவங்கி விட்டது.

அணிலின் நடைக்கு பின் தொடர்ந்து ஆடு நடக்கும். அணில் நின்றால் ஆடு நின்றுவிடும்.

சில நேரங்களில் தேவையில்லாமல் அணில் வேண்டு மென்றே நிற்பான். ஆடு தப்பாமல் அப்படியே நின்றுவிடும்.

வாகனங்கள் செல்லும் சாலைகளை கடந்து தான் மேய்ச்சல் இடத்திற்கு செல்லவேண்டும். அவ்வாறு மேய்ச்சல் இடத்திற்கு செல்லும் போது சாலைகளை கடக்கும் போது வாகனங்கள் தன்னை கடக்கும் வரை அணில் சற்று நின்று காத்திருப்பான். அப்போது ஆடு நின்று காத்திருக்கும். வாகனங்களில் செல்வோர் பார்க்கும் போது ஆடு அணிலின் கைப்பிடித்து சாலையை கடக்க காத்திருப்பது போல் தெரியும். அது அவர்களுக்கு ஒரு அதிசயமாக தெரியும்.

இது அணிலுக்கும். அவனது வகுப்புத்தோழன் சிவாவுக்கும் மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும்.

சிறிது நாட்களாகவே தொடர்ந்து பெய்து வரும் தென் மேற்குப் பருவ மழை காரணமாக மேய்ச்சல் இடத்தில் ஒரு பகுதியில் குளம் போல் தண்ணீர் தேங்கியிருந்தது. அதில் சிறுவர்கள் நீச்சல் அடித்து தண்ணீரில் குதித்து நீந்தி விளையாடிக் கொண்டிருந்தனர்.

சிவாவுக்கும் குளத்தில் குதித்து விளையாட ஆர்வம் மனதில் பொங்கி வழியவும் தனது துணிமணிகளை கழட்டி கரைமேல் போட்டுவிட்டு தண்ணீருக்குள் குதித்ததும், மறு கணமே ஆடு தண்ணீருக்குள் குதித்தது. சிவாவும், ஆடும் தண்ணீருக்குள் நீந்தி வருவதை கண்டதும் அணிலும் தண்ணீருக்குள் குதித்து விளையாடத் தொடங்கினான்.

ஆடு தண்ணீருக்குள் குதித்து குதித்து நீந்தி கரையேறி மீண்டும் குதிப்பதை பார்க்கும் போது மற்ற சிறுவர்களுக்கு வேடிக்கையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.

சிறுவர்கள் அனைவரும் அந்த ஆடுக்கு பின்னாடியே அணில் வீடுவரை வந்தார்கள். அவர்கள் அனைவரும் ஆடுக்கும் அணிலுக்கும், சிவாவுக்கும் புதிய நண்பர்களாயினர்.

ஒரு ஞாயிற்றுக்கிழமையில்….

மாலை நேரம். சென்னை மாநகராட்சி பூங்காவில் உள்ள ஊஞ்சலில் அணில் அமர்ந்து கொண்டதும், சிவா ஊஞ்சலைப் பிடித்து சிறிது தூரம் முன்னோக்கித் தள்ளிக் கொண்டுபோய் ஊஞ்சலை விட்டு விட்டு பக்கவாட்டில் சிவா ஒதிங்கிக் கொண்டதும் ஊஞ்சல் பலமுறை ஆடி நிற்கத் தொடங்கும் போது நொடிப் பொழுதில் ஊஞ்சலை ஆடு தன் தலையில் முட்டிக்கொண்டு சிறிது தூரம் வரை தள்ளிக்கொண்டு போய் விட்டு விட்டு பக்க வாட்டில் ஒதிங்கிக் கொண்டதும் வேடிக்கை பார்த்த சிறுவர்கள் புதிய நண்பர்கள் என எல்லோரும் கை கொட்டி ஆரவாரம் செய்தனர்.

சறுக்கு விளையாட்டு கூடாரத்தில் உள்ள இரும்பு படிகட்டுகளில் ஏறி உயரத்துக்குச் சென்றதும் மறு முனையில் சறுக்கி கீழே வந்தார்கள் சில சிறுவர்கள். அவ்வாறே ஆடு படிகட்டுகளில் ஏறிச் உயரத்துக்குச் சென்று தன் முன்னங் கால்கள் இரண்டையும் மடக்கிக் கொண்டும், பின்னங் கால்களை தோதாக மடக்கி அமர்ந்து கொண்டு சறுக்கி மெதுவாக தரையை வந்தடைந்தது. இதைக் கண்ட பூங்காச் சிறுவர்கள் சந்தோஷத்தில் துள்ளிக் குதித்தனர்.

அன்று–

மேய்ச்சல் இடத்துக்கு அருகே சிலர் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தனர்.

மேய்ந்து கொண்டிருந்த ஆட்டின் அருகே கால்பந்து வந்து விழுந்தது. உடனே அந்த கால்பந்தை லாவகமாக தன் தலையால் சற்று மேலே தூக்கி போட்டு ஓங்கி ஒரு முட்டு முட்டியதும் அந்த கால்பந்து விளையாடுபவர்களின் காலுக்கு தோதாக சென்று சேர்ந்தது.

அதிலிருந்து கால்பந்து விளையாடும் போதெல்லாம் விளையாட்டுக் களத்துக்கு வெளியே போய் விழும் கால்பந்தை அந்த ஆடுதான் தன் தலையால் முட்டி விளையாட்டுக் களத்துக்கு கால்பந்தை திருப்பிவிடும்!.அப்போது திடீரென்று ஆடு வழக்கத்துக்கு மாறாக தொடர்ந்து ஈனஸ்வர குரலில் கத்தியது. ஆடுக்கு ஏதோ விபரீதம் என்று உணர்ந்தவனாக ஆட்டின் அருகே சென்றான் அணில்.

ஆடு தன் முன்னங்கால்களை மாறிமாறி தரையில் வாரிக்கொண்டு இன்னமும் ” மே… ”என்று இடைவெளியே யில்லாமல் கத்தியது. அப்போது ஆட்டின் அருகே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று புல்வெளிக்குள் மறைந்ததை அணில் பார்த்து விட்டான். நல்லவேளை ஆட்டுக்கு வந்திருந்த விபரீதம் விலகியது.

ஆழ்ந்த யோசனையில் இருந்த அணிலை அவன் கண்ணில் பட்ட அந்தக் காட்சி அவனை சுயநினைவுக்கு கொண்டுவந்தது.

இரயில்வே ஒப்பந்த ராட்சத டிப்பர் லாரியிலிருந்து மலைப் போல் மண் சரிந்து உயர்ந்து கொண்டிருந்தது.

அருகில் தான் ஆடு மேய்ந்து கொண்டிருந்தது. அவன் எழுந்து சென்று ஆட்டின் கொம்பை பிடித்து இழுத்துக் கொண்டு டிப்பர் லாரி அருகே சென்றான்.

டிப்பர் லாரியிலிருந்து பின்புறமுள்ள கதவு கீழ்பகுதி அகலத் திறந்திருந்தது.அதன் வழியாகத்தான் மண் சரிந்து தரையில் விழுந்தது. மண் முழுவதுமாக கொட்டி முடித்ததும் டிப்பரின் பின் பகுதி மெல்ல மேல் நோக்கி சென்றுகொண்டிருந்தது. பின் கதவு திறப்பின் இடைவெளி கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது.

அவன் காத்திருந்த தருணம் வந்ததும் ஆட்டை லாரியின் பின் கதவு இடைவெளியில் தள்ளி விட்டதும் கதவு தானாக மூடிக்கொள்ளவும் சரியாக இருந்தது.

டிப்பர் லாரி மெல்ல மெல்ல நகர்ந்து சிறிது தூரத்தில் சென்று மறைந்ததும் ஒரு தீர்மானத்தோடு வீடு திரும்பினான், அணில்.

அம்மா தான் முதலில் பார்த்தாள். ” என்னடா அணிலு நீ மட்டும் தனியா வறீயே? ஆடு எங்கே?”

பதில் ஏதும் சொல்லாமல் அவனது அறையை நோக்கிச் சென்றான்.

” என்னங்க… விடிஞ்சா பெருநாள் அதுவுமா ஆடு மேய்க்கப் போனவன் அணிலு வெறுங்கையோடு வாரான். கேட்டாக்க அவன்கிட்ட இருந்து பதிலக் காணொம். அணில வந்து என்னன்னு கேளுங்க.” கறீம் பாயிடம் கத்திக்கொண்டிருந்தாள்.

” நீ போயி பேசாம உன் வேலையைப் பாக்கப் போறீயா இல்லையா? ” என்று அதட்டினார் கறீம்பாய்.

விடிந்ததும் வீட்டுக்கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு கதவைத் திறந்த அணிலுக்கு அதிர்ச்சியாய் இருந்தது!

சிநேகமாய் சிரித்தபடி ஆடு நின்றிருந்தது!

காணாமல் போயிருந்த ஆடு கிடைத்த சந்தோஷத்தில் எல்லோருக்கும் கேட்கும் விதத்தில் ” ஆடு வந்திருச்சு! எல்லாரும் வாங்க, காணாமல்போன ஆடு வந்திருச்சு ”கத்தினாள்,அணிலின் அம்மா.

அணிலின் முகவாட்டத்தை தெரிந்து கொண்ட அணிலின் அப்பா கறீம்பாய் சொன்னார் ” அணிலு என்ன இருந்தாலும் நான் உன்னப் பெத்தவன். உன்னப் பத்தி எனக்குத் தெரியாதா? இவ்வளவு நாளா ஆட்டைப் பிரியாதவன் விடிஞ்சா பெருநாள் ஆடு காணமப் போயிருமா? உனது ஆட்டின் சிநேகத்தை நான் புரியாமலில்லை!

கவலையை விடு! புது துணி உடுத்தி வா நமாஸ்க்கு நேரமாச்சு” என்றதும்,

சந்தோஷத்தில் ஒரு குதி குதித்தான் அணில். ஏதோ புரிந்து கொண்டது போல் ஆடும் ஒரு குதி குதித்தது!

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *