கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 8, 2015
பார்வையிட்டோர்: 9,813 
 
 

பெரியநாயகி கொடுத்திருந்த தந்தி வெள்ளிக்கிழமை மத்தியானம் மூன்று மணிக்குத்தான் கிடைத்தது.

`அப்பாவின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது!’

எதுவும் செய்ய இயலாதவளாக அந்த எழுத்துகளை வெறித்துப் பார்த்தாள் தேவானை. நினைத்தவுடன் புறப்பட்டுப் போக, இந்தியா என்ன, கூப்பிடு தூரத்திலா இருக்கிறது!

அத்துடன், காலாவதியாகி இருந்த அவளுடைய மலேசிய கடப்பிதழை அப்படியெல்லாம் அவசரமாக புதுப்பிக்க இயலாது. அது கையில் கிடைப்பதற்குள், அப்பா இந்த உலகத்தைவிட்டே போனாலும் போய்விடுவார்.

அந்த நினைப்பில் வருத்தமில்லை. விரக்திதான். அம்மா இருக்கும்போதே வந்த யோசனைதானே!

`என்னை எதுக்கும்மா இவ்வளவு தூரத்திலே கட்டிக் குடுத்தீங்க?’ என்று தேவானை சிணுங்கியபோது, `நல்லாக் கேளு! அப்பவே நான் ஒங்கப்பாகிட்டே தலைபாடா அடிச்சுக்கிட்டேன். பக்கத்து வீட்டுப் பையன்! தெரிஞ்சவன், நல்லவன்! அதுக்காக கண்காணாம மகளை அனுப்பணுமான்னு எவ்வளவு கெஞ்சினேன்! ஹூம்! நான் சொல்றதை எப்போ கேட்டிருக்காங்க, இப்போ கேக்க!’ என்று பெருமூச்சு விட்டபடி தொடர்ந்தாள், ஆற்றாமையுடன். `வரதட்சணை எதுவும் வேண்டாம், மாமான்னு மாப்பிள்ளை சொல்லவும், ஒரே வாரத்திலே ஒன் கல்யாணத்தை நிச்சயம் பண்ணிட்டாங்க!’

அப்பாவுக்குத் தன்னைவிட பணம்தானே பெரிதாகப் போய்விட்டது என்ற வருத்தம் அப்போது எழுந்தது. ஆனால், பெற்றவளின் எண்ணப்போக்கு வேறுமாதிரி இருந்தது.

`இப்போ யோசிச்சா, அதுவும் நல்லதுதான்னு படுது. ரெண்டு காரும், பங்களாவுமா ராணி மாதிரியில்லே இருக்கே, நீ!’

தேவானை மௌனமாக இருந்தாள்.

கணவர் நல்லவர்தான். ஆனால், உலகத்தில் எல்லாரும் தன்னைப் போலவே இருப்பார்கள் என்று எண்ணி ஏமாந்தவர். வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தை சரிகட்ட, பங்களாவையும், பவுன் ஐம்பது வெள்ளியாக இருந்த காலத்தில் அவள் வாங்கி வைத்திருந்த நகைகள் பலவற்றையும் விற்க வேண்டியிருந்தது. அம்மாவிடம் இதையெல்லாம் சொல்லி, வீணாக அவளையும் கவலைக்கு உள்ளாக்குவானேன்!

`அடிக்கடி வரக்கூட முடியாது! ஆயிரக்கணக்கிலே இல்லே, பிளேனுக்கு அழணும்!’ என்று முணுமுணுக்கத்தான் அவளால் முடிந்தது.

`நாங்க இருக்கிறவரைக்கும்தானே வரப்போறே! போனப்புறம் வந்து என்ன ஆகப்போகுது!’

அதுதான் அம்மாவைக் கடைசியாகப் பார்த்தது.

அப்பாவை எப்போது இறுதியாகப் பார்த்தோம் என்று யோசித்தாள். மூன்று வருடங்களுக்கு முன்னர்.

அதற்கு முன்னால் ஒருமுறை போனபோது, `ஒங்களுக்கு என்ன வாங்கிட்டு வர்றதுன்னு தெரியலேப்பா. பெரியநாயகிக்கு ஜப்பான் நைலக்ஸ் புடவை, அம்மாவுக்கு பாதாம் பருப்பு, கோக்கோ…,’ என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும்போதே அப்பா குறுக்கிட்டார். ‘கோக்கோ விளையற ஊரா? அப்போ சாக்லேட் மலிவாக் கிடைக்குமே!’

`நீங்க சாப்பிடுவீங்களாப்பா?’ ஆச்சரியத்துடன் கேட்டாள் மகள்.

அப்பா ரொம்ப ஆசாரம். மணிக்கணக்காக பூசையறையில் உட்கார்ந்து கந்த புராணம் படிப்பார்.

அப்பா அலட்சியமாகப் பதிலளித்தார். `கையாலேயா பண்ணறான்! எல்லாமே மெஷின்தானே!’

அடுத்த முறை, ஞாபகமாக, விமான தளத்தில் ஒன்றரையடி நீள சாக்லேட்டை வாங்கினாள். பாலுடன், பாதாம், முந்திரி எல்லாம் போட்டது. அதைக் கையில் வாங்கிக்கொண்ட அப்பாவின் முகம் பிரகாசிப்பதை மனக்கண்ணால் கண்டு ஆனந்தப்பட்டாள்.

அவளை வரவேற்க வந்திருந்தாள் பெரியநாயகி.

`என்னடி, இவ்வளவு குண்டாப் போயிட்டே?’ என்று சிரித்த அக்காளிடம், `ஷூகர்!’ என்று, தனக்கு இனிப்பு வியாதி வந்திருக்கும் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டாள்.

`அப்பா முந்தி மாதிரி இல்லேக்கா. அம்மா போனதிலேருந்து, ஓயாம கத்திக்கிட்டு இருக்காரு!’ என்றாள் ரகசியக் குரலில் — பெங்களூரில் இவள் பேசுவது கோயம்புத்தூரில் இருந்தவருக்குக் கேட்டு விடுமோ என்று அஞ்சுவதுபோல்.

தேவானையால் நம்ப முடியவில்லை. சாத்வீகமான அந்த அப்பாவா!

`ஏன்?’ என்று கேட்டுவைத்தாள்.

`வயசான காலத்திலே ஒண்டியாத் திண்டாடறாரு. சாவுப் பயம் வேற!’ என்று நொடித்தவள், `நீ மொதல்ல அங்க போகாதே. எங்கூடவே தங்கிக்க. திரும்பிப் போக ஒரு வாரம் இருக்கறப்போ அங்க போனாப் போதும். அப்பாவைத் தாங்கிக்க ஒன்னால முடியாது!’ என்றாள் தங்கை, தேவானை பேசவே இடங்கொடுக்காது.

வீட்டுக்குப் போனதும், `எனக்குத் தெரியும். நீ எங்களுக்காக அள்ளிக்கிட்டு வந்திருப்பே!’ என்றபடி, உரிமையுடன் அக்காளின் பெட்டியைத் திறந்தாள் பெரியநாயகி.

மேலாக வைக்கப்பட்டிருந்த ஊதா நிறக் காகிதத்தில் சுற்றப்பட்டிருந்த பொருள் கண்ணில் பட, `ஹை! சாக்லேட்!’ என்று தாவி எடுத்தாள்.

`அது அப்பாவுக்கு!’ என்று தேவானை தர்மசங்கடத்துடன் மறுத்தபோது, பெரியநாயகியின் முகம் இறுகியது.

அப்போது எழுந்த அவமானத்தை ஒரு சிறு சிரிப்புடன் சமாளித்துக் கொண்டு, `வெளியிலே வாங்கினது எதையும் அப்பா சாப்பிட மாட்டாரே! மறந்துட்டியா?’ என்று கேட்டாள்.

`போன தடவை அப்பாதான் கேட்டார். மெஷின்ல பண்ணினது பரவாயில்லேன்னு சொன்னார்..!’

தங்கை முகத்தைச் சுளித்தாள். சாகப்போகிற வயசிலே சாக்லேட் ஒரு கேடா!

`நீயோ இனிப்பு சாப்பிட முடியாது. அது அப்பாவுக்கு!’ தேவானையின் மறுப்பை அலட்சியம் செய்தாள். `வெளியில் வெச்சா உருகிப் போயிடும்!’

மனதுக்குள், `வெளிநாட்டில் சீரும் சிறப்புமாக இருக்கிற உனக்கு, தங்கைக்கும் ஒன்றோ, இரண்டோ வாங்கி வர வேண்டும் என்று ஏன் தோன்றவில்லை? சரியான கருமி!’ என்று வைதாள்.

சாயங்காலம், கல்லூரி முடிந்து வந்த மகனிடம், `பெரியம்மா ஒனக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்காங்கன்னு பாரு!’ என்று ஒரு பெரிய விள்ளலைக் கொடுத்தாள்.

அவர்களுக்காக அக்காள் வாங்கி வந்திருந்த துணிமணிகள், கேமரா, ரேடியோ — இவையெல்லாம் இருக்க, அப்பாவுக்காக அவள் ஆசையாகக் கொண்டு வந்திருந்த ஒரே சாமானை அவள் வீட்டுக்கு வந்து விசாரித்தவர்களிடம் எல்லாம் காட்டி, `எவ்வளவு பெரிசு பாத்தீங்களா? ஏர்போர்ட்டிலே வாங்கினாளாம்!’ என்று பீற்றிக் கொண்டாள் பெரியநாயகி. அவர்களுக்கும் சிறிது கொடுக்க வேண்டியதாகப் போயிற்று.

அங்கிருந்து புறப்படும் நாள் வந்தபோது, ஏதோ விடுதலை கிடைத்ததுபோல் இருந்தது தேவானைக்கு. `சாக்லேட்?’ என்று நினைவுபடுத்தினாள்.

`இப்பவே எதுக்கு? புறப்படறப்போ எடுத்துக்கிட்டா போதும். உருகிடும்!’ என்று சால்ஜாப்பு சொன்னாள் தங்கை.

ஞாபகமாக, வாசலில் டாக்ஸி வந்து நின்றதும், மீண்டும் கேட்டாள் தேவானை.

உதட்டைச் சுழித்தபடி, ஒரு குழந்தையின் உள்ளங்கை அகலத்திற்கு ஒரு துண்டை உடைத்து, ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொடுத்தாள் பெரியநாயகி. மீதிப் பங்கு, மீண்டும் ஐஸ் பெட்டிக்குள் சரணடைந்தது.

அப்போது எழுந்த அதிர்ச்சியை, வருத்தத்தை, கீழுதட்டைக் கடித்தபடி அடக்கிக் கொண்டாள் தேவானை.

செல்லப் பெண்ணைக் கண்டு மலர்ந்த முதியவரின் முகம் அவள் அளித்ததை ருசித்ததும், இன்னும் விரிந்தது.

`ரொம்ப நல்லா இருக்கேம்மா! இன்னும் கொஞ்சம் வாங்கிட்டு வந்திருக்கக் கூடாது?’ என்று அவர் உரிமையாகக் கேட்டபோது, தேவானைக்கு அழுகை வந்தது.

அடுத்த முறை நேராக அப்பாவைப் பார்க்க வரவேண்டும். நிறைய சாக்லேட் வாங்கிக்கொண்டு வந்து, அவர் பூரிப்பதைப் பார்த்துத் தானும் மகிழ வேண்டும் என்று நிச்சயித்துக் கொண்டாள்.

ஆனால், அதற்கான வேளை வரவேயில்லை.

மறுநாளே இன்னொரு தந்தி வந்தபோது, அதைப் பிரிக்காமலே அழ ஆரம்பித்தாள்.

அப்பா.. நான்கு வயதுவரை அவளைத் தோளில் போட்டு `ஆட்டுக்குட்டி’ தூக்கிய அப்பா. அதற்குப்பின், முதுகில் உப்பு மூட்டை. ராத்திரி தூங்குகையில், கெட்ட கனவு கண்டு பயந்த போதெல்லாம் சமாதானப்படுத்தி, தன் பக்கத்தில் படுக்க வைத்துக்கொண்ட அப்பா.

அவள் பெரியவளானதும், எப்போதும்போல் அப்பா கன்னத்தைத் தொட்டுக் கொஞ்சியபோது, அவள் வெட்கப்பட, `அப்பாதானேம்மா!’ என்று சிறு வருத்தத்துடன் சொன்னவர்.

பள்ளி நாட்களில், படிப்பிலும் பேச்சுப் போட்டியிலும் அவள் பெற்ற ஒவ்வொரு வெற்றியையும் கோயிலில் விசேட ஆராதனைக்கு ஏற்பாடு செய்து கொண்டாடியவர்.

அதிகம் யோசியாது அவளுடைய திருமணத்துக்கு ஏற்பாடு செய்துவிட்டு, அதற்கு முதல்நாள் அவளிடம் தனிமையில், `நான் ராத்திரியெல்லாம் அழுதுக்கிட்டே இருந்தேன். இனிமே ஒன்னை எப்போ பார்ப்பேனோ!’ என்று குழந்தைபோல் ஏங்கியவர்.

தான் முதன்முறை கருவுற்றபோது, `தேவானை ஒரு நல்ல மகளாகவும், சிறந்த மாணவியாகவும் இருந்தாள். அவள் நல்ல தாயாகவும் இருப்பாள் என்பதில் எனக்குச் சந்தேகமே கிடையாது!’ என்று கணவருக்கு, முதன்முறையாக, கடிதம் எழுதி இருந்த அப்பா.

அந்த அப்பாவின் ஆசை கடைசியில் நிறைவேறாமலே போய்விட்டது.

`நாளைக்கு ஒன் பிள்ளைங்க ஒனக்கு எதுவும் செய்ய மாட்டாங்கடி. அவங்க பிள்ளைங்களுக்குத்தான் செய்வாங்க. அப்போ நீ வேதனைப் படறதையும் பாக்கத்தானே போறேன்!’ என்று உரக்கவே அரற்றினாள் தேவானை. ஓரிரு வாரங்கள் கடந்ததும், தங்கையிடமிருந்து நீண்ட கடிதம் ஒன்று வந்தது. `அப்பாவின் காரியங்கள் நல்லபடியாக நடந்தன. இருபதாயிரம் செலவழித்தேன்!’ என்று பெருமையாக எழுதியிருந்தாள்.

வெறி கொண்டவளாக, கடிதத்தைக் கிழித்துப் போட்டாள் தேவானை.

(தமிழ் நேசன், 2011)

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *