கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: August 19, 2016
பார்வையிட்டோர்: 8,405 
 
 

சாலை ஓரத்தில் ஒரு அடி உயரத்துக்கு கம்பு ஒன்றை நட்டு, வலை ஒன்றைப் பொருத்தி இருபுறங்களிலும் முளைக்குச்சிகளை இறுக்கிக் கட்டினான் நாச்சான். பிறகு மெல்ல நடந்து யானை படுத்திருப்பதான தோற்றம் கொடுத்திருந்த மலைப் பாறையில் ஏறி உட்கார்ந்து மடியிலிருந்த பீடிக்கட்டை எடுத்தான். காற்றின் விசிறலிலும் சாமர்த்தியமாக ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்து, வாயாலும் மூக்காலும் புகை விட்டான்.

மேற்கே போகிற உடுமலை பஸ் தடதடவென்ற சத்தம் போட்டுச் சென்று, திருப்பத்தில் நின்று பிரயாணிகளை இறக்கிவிட்டு மேலே போயிற்று. முன்பானால், பாறை மேல் ஏறி நின்று, இடைவெளியில் சோளக் கதிர்களும் மரங்களும், கத்தாழை மடல்களும் மறைப்பதையும் மீறி எக்கி, ஆவலுடன் பார்ப்பான். ஊருக்குள் புதிதாக யார், யாரைத் தேடி, என்ன விஷயம், விசேஷம் என்ற விபரங்கள் முழுதும் தெரியாமல் நிலைகொள்வதில் திருப்தி கிட்டுவதில்லை. பத்து நாட்களாக இவனையும் மீறிய செயலமைதி-விரக்தியா, தன் மேலேயே வெறுப்பா, கோபமாஏன் எதன்பேரில், என்றெல்லாம் புரியாவகை உணர்வின் இயக்கத்தில் இயந்திரம் தானியங்கியாகச் செயல்பட்டுக் கொண்டிருப்பதை மட்டும் கூறமுடியும்.

“கீச்…கீச்…”சென்ற சப்தம்.

பீடியை நன்றாக தம் இழுத்துக் கீழே வீசினான். “மாட்டிக்கிட்டியா?” என்று சொல்லிக்கொண்டே பாறையில் இருந்து குதித்து, சாலையைக் கடந்து வலையருகில் வந்தான். “கீச்…கீச்…”சென்று கத்தியபடி, கால்களை வலையின் துவாரங்களில் விட்டு, எடுக்கும் வகை தெரியாது விழித்த அணிலின் தலையைத் தம் உள்ளங் கைக்குள் அடக்கி, விடுவித்து ஒரு துணிப் பைக்குள் போட்டு, பை வாயை இறுக்கிக் கொண்டான்.

“ஆரு, நாச்சானா? என்னலே பண்றே? அணிப்புள்ளை வேட்டையா? இன்னிக்கு மேக்காலக் கடைல சொப்பு அடிச்சுட்டு உம்மட வளவுக்கு வந்திற வேண்டியதுதான். வறுவலுக்கும் பனங்கள்ளு மப்°க்கும் என்னமாயிருக்குந் தெரியுமா?” தெருவோடு போன குப்பன் நின்று நாக்கை சப்புக் கொட்டினார். அவரைப் பார்த்து இவன் சிரித்தான்.

“அண்ணாரு வந்தா வேணாமினா சொல்லிருவேன், ஐய வாங்களேன்! அணிலு கெடக்கு கெரகம். பனக்காட்டுல வேட்டைக்கார சாமி கோயிலு சமீபம் எடல் தறிச்சிருக்கேன். அதுல கீரி விளுந்திருக்கும். போயி அதையும் கொணாந்து ரெண்டையும் சேத்தே வறுவலு போட்டுத் தள்ளிரலாம். நெசமாத்தானுங்கோ அண்ணே, வரீங்களா?”

“அதோ ஒம்மட நங்கையாளே (அண்ணி) வருது. அவகிட்டே ஒரு வார்த்தை சொல்லிப்புருவோம். மறுக்கா வூட்ல சோறு கொளம்பு எல்லாம் வெச்சு என்னிய எதிர்பார்த்துகிட்டே இருப்பா! ”

கையில் நீண்ட குச்சியை வைத்து, “தா… தா…” என்று ஐந்தாறு செம்மறியாடுகளை ஓட்டி வந்த பெண்மணி, சாலையோர அணில் வலைப் பக்கம் ஆடுகள் போகாமல் வேறு பக்கம் விரட்டிவிட்டு, அவர்கள் அருகில் வந்து சிரித்தாள்.

“என்னுங்கோ கொளுந்தனாரு! அணிலு வேட்டை நடக்கறாப்பல இருக்கு. நம்மட வூட்டுக்கு ஒண்ணு ரெண்டு கெடைக்குமா? ”

“அதான் பாப்பா, நாச்சான் சொல்றான். மலங்காட்டுல எடல் தறிச்சிருக்கானாம். இந்நேரம் அதுல கீரிப்புள்ள உளுந்திருக்கும். அணிப்புள்ளை, கீரிப்புள்ளை கறி சாப்ட்டு எத்தினி நாளாவுது. இன்னிக்குத் தம்பி நம்மளைக் கவனிக்கப் போறானாம். நா இன்னிக்கு உன் சமையலுக்கு ஆளில்லையாத்தா-ஆமாஞ் சொல்லிப்புட்டேன்.”

“நல்லாருக்குது நாயம். அதும் பொண்டாட்டி அந்த மாரிப் பயகூட ஓடிப் போய் இன்னிப் பருவத்துக்கு சனியோட சனி எட்டு, ஞாயர் ஒம்பது, திங்க பத்து நாளாவுது. பாவம் ஆம்பளை. தானே தனியாப் பொங்கித் தின்னுது. அதுக்குப் போய் க°டம் கொடுக்கறேனு சொல்றீங்களே-நம்மட வூட்டுக்குக் கொணாங்க. நாஞ் சமைச்சித் தாரேன்” என்று பரிவுடன் நாச்சானைப் பார்த்துச் சொன்னாள் பாப்பா – குப்பனின் மனைவி.

“அட, ஆமா. ஏனுலே நாச்சான், ஒம்மட சம்சாரம் ஆட்டு யாபாரி மாரிப்பய கூட திலுப்பூருக்கு ஓடிப் போனாளாமே, கண்ணாலங்கூட கட்டிப் போட்டாளாமே…” நாச்சான் திரும்பி, வலையில் எத்தனை துவாரம் என்று எண்ணினான்; தொலைவில் ஊதியூர் மலை முகட்டில் தனியே ஒரு வட்டப்பாறை ஒட்டி நின்று, எந்நொடியும் காற்றில் பிய்த்துக் கொண்டு உருளும் எனத் தோற்றம் கொடுக்க இருந்ததை ஏன் என்று வெறித்து முறைத்தான்.

“என்னலே ரோசனை? சேமலை மே°திரிகிட்டேருந்து வெலகி அவ உன்னோட சேந்துகிட்டப்பவே எனக்குத் தெரியும். சேமலை எவ்வளவோ நல்ல மாருதிப் பய. அவனையே ஒதறிட்டு வர்ற கெரகம் ஒங்கிட்டே ரொம்ப நாளைக்குத் தறிச்சு நிக்காதுன்னு தெரியும்லே. அவளுக்குப் பொகியிலை மாதிரிடா ஆம்பிளைங்க. வாயில எத்தினி நேரம் பொகியிலையை அடக்கி வெச்சுக்கிறது? துப்பிட்டு வேற பொகியிலையை அடக்கிக்க வேண்டிதுதானே? அதான் ஒன்னியத் துப்பிட்டு ஆட்டு யாவாரி கூட ஓடிப் போயிட்டா. தொலையுது கெரகம்…”

நாச்சான் பீடியைப் பற்றவைத்துப் புகை விட்டான். வேறு அணில் ஏதும் வலைப்பக்கம் வராததிலும், குப்பனின் பேச்சிலும் எரிச்சல் கண்டு, முகத்தில் திரும்பத் திரும்ப உட்கார வந்த ஈயைப் பட்டென்று இருகைகளையும் சேர்த்து ஆத்திரத்தோடு தட்டிக் கொன்றான்.

விடவில்லை குப்பன். “ஏம்லே அந்த ஊமச்சி மவ ஊர்லேந்து வந்துருக்காளாமே, அதைக் கட்டிக்கோயேன்…”

“பாக்கலாமுங்கோ அண்டே! அட, இதேர்றா கெரகம், இன்னிப் பாத்து ஒரு அணிப்புள்ளை கூடக் காணமே…” ஆத்திரத்தோடு கையிலிருந்த பையை ஒரு மூலையில் வீசிவிட்டு, வலையை விரு விரு என்று இழுத்து மடிக்க ஆரம்பித்தான் நாச்சான்.

அவன் பையைக் கீழே வீசியதில், உள்ளிருந்து வழிகண்டு வெளியே வந்த அணில், உலகை மீண்டும் கண்ட திகைப்பில் ஒருகணம் திக்கு முக்காடி, சட்டென்று கத்தாழைப் புதர் பக்கம் விழுந்தடித்துக் கொண்டு ஓடியது.

“தா… தா…” என்று பின்னாலேயே ஓடித் துரத்தி ஏமாற்றம் கண்ட பாப்பா, என்னுங்கோ கொளுந்தனாரே, கெடச்சதையும் கோட்டை வுட்டுப் போட்டீங்களே!..” என்று அவனிடம் சலித்தாள்.

“கெடக்கு கெரகம். வீட்டுக்குப் போங்கோ நங்கையாரே, பொழுது சாயக்குள்ள கீரி முசல் எல்லாம் நெறயப் புடிச்சுக் கொணாறேன்… பாருங்களேன்!”

இவள் இங்கே பேச்சில் லயிக்கவும், ஆடுகள் கத்தாழைப் புதர் இடுக்கில் புகுந்து சோளக்காட்டில் மேய, தோட்டக்காரக் கவுண்டரின் மகன் நடுவில் பரண் மீதிருந்து கவண்கல் எறிந்தான். குறி தவறியது. பாப்பாவின் கணவர் குப்பன் ஓடி ஆடுகளை சாலைப் பக்கம் விரட்டினார்.

தனியே எதிரில் நின்ற நாச்சானைப் பார்த்து சிரித்தாள் பாப்பா. `

`கீரிப்புள்ளை கறி எனக்கு ரொம்பப் புடிக்குமுங்கோ கொளுந்தனாரே. சாயங்காலம் அரிசி வாங்கிச் சோறு பொங்கி, கள்ளுத் தண்ணியும் வாங்கி வெச்சிருக்கேன்… ஏமாத்திப்புடாத நீங்க வரணுமுங்கோ. நாந்தான் வறுத்துத் தருவேன்… என்ன?” என்று சிணுங்கிக் கூறி, அவன்மீது தன் உடம்பு உரசி நடந்தாள்.

“ தா… தா… ட்ரி… ரியோய்…” என்று சப்தம் போட்டு, செம்மறி ஆடுகளை மலைச்சரிவில் ஓட்டி, மேலேறி அவள் செல்வதைச் செயலற்றுப் பார்த்தான்.

“போலாமாலே நாச்சான்?”

இவன் அவருக்குப் பதில் கூறாமல் மௌனமாக வலையைச் சுருட்டிப் பைக்குள் திணித்தான். அந்நேரம் வரை கீழே கிடத்தியிருந்த கட்டுத்தடியையும் எடுத்துக் கொண்டு கிளம்பினான். இவர்கள் வடக்கே பீலிக்காம்பட்டியைத் தாண்டி, ஆளரவமற்ற மலையடிவாரக் காட்டிற்கு நடந்தார்கள்.

சுற்றிலும் புதர்கள், காய்ந்த சருகுகள் மண்டிய அந்த இடத்தில் ஏராளமான மண் சிலைகள், குதிரைப் பொம்மைகள். குதிரை மேல் ஆரோகணித்துக் கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் வேட்டைக்கார சாமியின் கை உடைந்திருந்தபோதிலும், பார்க்க பயம் கொடுக்க இருந்தது. நாய் ஒன்று நாக்கைத் தொங்கப் போட்டு நின்றது. அதன் மேல், விழிகளை உருட்டியபடி ஒரு உயிருள்ள ஆந்தை. பகலில் ஆந்தையை இவன் கண்டது இல்லை. ஈட்டிகள், திரிசூலங்கள் நாலைந்து, காய்ந்து சருகான மாலைகளைக் கழுத்தில் சுற்றி நின்றன.

நின்று கன்னத்தில் போட்டுக்கொண்டு மேலே நடந்தார்கள். மலைப் பாறைகள், புதர்கள், முட்செடிகள்… மனிதர்கள் பகலிலேயே வர அஞ்சும் பிரதேசம். பறவைகள் பறக்கும்போது சிறகசைப்பு ஒலி. தரையில் நில வேளான் செடிகளும் கொடிகளும். கோவை, ஆவாரம், கள்ளிகள் சிறு சிறு புதர்களாக எழும்பி நின்றன.

செம்போத்து ஒன்று வெள்ளை வேல மரத்தில் உட்காரப் போய், பின் பாறை ஒன்றுக்குத் தாவி, “தூத்…தூத்…தூத்…” என்று குரல் கொடுத்து, அமைதியை சில விநாடிகளுக்கு விரட்டியது.

இவர்களின் காலடி ஓசையில் நிலவேளான் புதரில் அந்நேரம்வரை பதுங்கியிருந்த குழிமுயல் ஒன்று குபீரென்று வெளிப்பட்டுப் பாய்ந்தபோது நாச்சான், கண நேர சுதாரிப்பில் துள்ளி கட்டுத்தடியை வீசினான். இளங்காவி நிறத்தில் மின்னிய அம்முயலுக்கு அன்று நாச்சானின் கையில் சாவு என்கிற எழுத்து இல்லை போலும்.

வளைவாக இருந்த தடியின் முனையிலும் நடுவிலும் இரும்புக் கம்பியைச் சுற்றிப் பூண் போல் அறைந்திருந்தது. அதன் வீச்சில் எது அகப்பட்டாலும் சுருண்டு விழ வேண்டியதுதான். “இன்னிக்கு யார் மொகத்துல முளிச்சனோ, கெரகம்?…” என்று முனகியபடி குனிந்து கட்டுத்தடியை எடுத்தான் நாச்சான்.

“ஏனுலே நாச்சான், ஒம்மட சம்சாரத்துக்கும் ஒனக்கும் ஏதாவுது தகராலா?”

பளிச்சென்று திரும்பி, கைத்தடியால் ஓங்கி குப்பனின் மண்டையைப் பிளக்க வேண்டும் என்று நினைத்தவன், சற்று நிதானமானான். அவன் கண்களின் ஆவேசத்தைக் கண்டு பின்வாங்கியவராய், “சாமி… அதேதுடா அத்தினி உக்கிரம் உனக்கு?” என்று கேட்டார் குப்பன்.

அவனுக்கு மனநிலை சரியில்லை என்பதை உணர்ந்து பேச்சை மாற்றினார்.

“மாசி பங்குனியில் பொள்ளாச்சி பக்கதேர்ந்து வேட்டைக் காரரு கூட்டம் ஆயிரத்துக்குக் கொறையாத வருமே பாத்திருக் கியாடா நாச்சான்? கையிலே கட்டுத்தடி மட்டுந்தான் கொணாருவாங்க. காட்டுல ஒரு எடத்தைச் சுத்தி நூத்துக் கணக்கான ஆளுங்க நின்னு சத்தம் போடுவாங்க. பொதர்கள்லேந்து குபீர்னு மொசலுக பாயும். ஒரே சமயத்துல நூத்துக்கு மேல் கட்டுத்தடி மொசலுகளை நோக்கிப் போய் விளும். யாரு வேணா அடிக்கலாம். ஆனா, மொதல்ல யாரு பாஞ்சு அடிபட்ட மொசலை எடுத்து தலைக்கு மேல தூக்கிர்றாங்களோ, அவங்களுக்குத்தான் மொசலு.”

நாச்சான் கருமமே கண்ணாக, அடர்ந்த புதர்களில் கல் வீசிப் பார்த்தான். பல புதர்கள் காலியாக இருந்தன. ஒரு சில புதர்களிலிருந்து முயல்கள் வெளிப்பட்டு, தலைதெறிக்கும் வேகத்தில் பாய்ந்து ஓடின. நாச்சானின் கட்டுத்தடி சரியான குறியில் படாமல் தவறிக்கொண்டே இருந்தது, வழக்கத்துக்கு மாறான விசேஷ-வினோதமாகத்தான் தோன்றி ஏன், எதற்கு என்று அவனைக் குழப்பியது.

கொங்குக் காட்டுக்கு அப்பால், தூரத்தில் அவன் முந்தின தினம் தரையில் தறித்து வைத்திருந்த இரண்டு இடல்கள் கண்ணுக்குத் தெரிந்தன. சதுரமான மரச் சக்கையின் நடுவில் பெருக்கல் குறியாய் பொறி இருந்தது. அதில் செத்து நாற்றம் எடுத்த ஒடக்காய் (ஓணான்) கட்டித் தொங்க விடப்பட்டிருந்தது. அதைத் தின்ன வந்து பொறிக்க்குள் கீரிப்பிள்ளை சிக்கிவிடும்.

“ஏன்லே நாச்சான், அவடத்தே தெரியறது எடலுதானே? ஏதோ அதுல உளுந்திருக்கு போலத் தெரியலை?” என்று சந்தோஷத் தோடு அவன் முதுகைத் தட்டினார் குப்பன்.

“ஆமுங்கோ…” என்று மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுப் பாய்ந்து இடலின் பக்கம் ஓடினான்.

அந்தச் சந்தோஷம், துள்ளல் யாவும் திடீரென்று மறைந்தது. கையிலிருந்த கட்டுத்தடியை எங்கோ வீசினான். பேசாமல் ஒரு பாறையில் உட்கார்ந்து விட்டான்.

நிதானமாக அங்கு வந்த குப்பன், “இதேர்றா கெரகம்… விரியன்ல உளுந்திருக்கு!” என்றார். கீரிப்பிள்ளைக்கு வைத்த பொறியில், மலைப்பாம்பு போல் முழங்கைப் பருமனும் சுமார் நாலடி நீளமும் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு, ஒடக்காயைத் தேடிவந்து சிக்கி இறந்து போயிருந்ததையும், இன்னொரு இடல் வைத்தது வைத்தது மாதிரியே ஒடக்காய் ஊசலாட வெறிச்சென்று காட்சியளிப்பதையும் பார்த்து சலிப்பிலும் மலைத்தார்.

பாம்பின் வால் கூர்மையாக இன்றி மழுங்கியிருப்பதைப் பார்த்துவிட்டு, “பார்த்தியாலே, இந்த விரியனை! இது ரொம்ப மோசமான கெரகம். நெறய ஆடு மாடுகளை, ஜீவராசிகளைக் கடிச்சிருக்கு. வாலு கூர்மையா இருந்தா ஒர்த்தரையும் கடிக்காத பாம்புன்னு தெரிஞ்சுக்கிறலாம்” என்றார். இதிலெல்லாம் லயிப்பு அற்று, தலை குனிந்து அமர்ந்திருந்தான் நாச்சான்.

சிவப்புக் கோளமாய் ஆதவன் மேற்கில் தகதகத்து சரிந்து கொண்டிருந்தான். சிலு சிலுப்பாய் காற்று உடம்பில் இறங்க ஆரம்பித்தது.

இருட்டி விட்டால் தடம் தெரிந்து வீடு திரும்புவது கஷ்டம் என்ற உணர்வில் இருவரும் கிளம்பினார்கள். “நாச்சான், மனசை ஒளப்பிக்காதே! ஒவ்வொரு வச தோக்கறதுதான்; பிற்பாடு ஜெயிக்கறது தான்… இதுகேல்லாம் கலங்கறது தப்புலே!”

இவனின் மௌனத்தில் வாயடைத்து முதுகில் ஆறுதலாகக் கையணைத்து உடன் நடந்து வந்தார் குப்பன்.

வேட்டைக்கார சாமி கோயில் வந்ததும், “நா இப்பிடியே குறுக்குத் தடத்துல எம்மட வூட்டுக்குப் போயிடறேனுங்கோ…” என்று பிரியப் பார்த்தவனை, வலுக்கட்டாயமாய் தடுத்தார்.

“ஒன்னிய உட்டுட்டு இன்னிக்கு வூடு போனா பாப்பா என்னைத் திட்டுவா சாமி! அவளுக்குப் பதில் சொல்றது ஆரு?”

ஊருக்குள் இவர்கள் நுழைந்தபோது சிறுவர்கள் பலீஞ் சடுகுடு விளையாடிக் கொண்டிருந்தார்கள். தாண்டி மேலே போய் வீடடைந்தார்கள்.

குப்பனின் வீடு கூரை வேய்ந்த சிறு வீடுதான். வாசலில் அகலமான திண்ணை.

“வாங்கோ!…” என்று வரவேற்பு அளித்த பாப்பாவைப் பார்க்கக் கூசினான் இவன்.

“பாப்பா! கீரிக்கு வெச்ச எடல்ல விரியன் உளுந்து கெடக்கு. நாச்சான் கட்டுத் தடியை வீசி வீசிப் பாத்தான். மொசலுக தப்பிருச்சு. இன்னி மதியத்துக்குப் பொறவுதானே வேட்டைக்குக் கௌம்புனோம். அதான் ஒண்ணும் கெடைக்கலை. நாளைப் பொளுது விடியக்குள்ள காட்டுக்குப் போயிரணும்… தம்பி ரொம்பச் சோந்து போயிருக்கான், சோறு பொங்கியாச்சா?” திண்ணையில் உட்கார்ந்து இருட்டில் வெறித்து, பார்வையால் எதையோ தேடியவனை, கொளுந்தனாரே, அங்க என்ன பாக்கக் கெடக்கு? இன்னி இல்லாக்க நாளைக்கு. அதுல என்னா? வாங்க உள்ள… சாப்புடலாம்!

குப்பன் உள்ளே செல்ல, இவன் தொடர்ந்தான். சிமினி விளக்கு மங்கல் ஒளி கொடுத்தது. மண் சட்டி ஒன்றைக் கொண்டு வந்து முன்னால் வைத்தாள் பாப்பா. பனங்கள்ளின் வீச்சம். “தெளுவு… குடிச்சுக்கலே!” என்று குப்பன் உபசாரம் செய்ய, சட்டியில் இருந்த கள்ளில் பாதியை விளிம்பில் வைத்த வாயை எடுக்காமல் உறிஞ்சினான் நாச்சான். மீதியில் குப்பன் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்ததும், கொஞ்சம் மிச்சப்பட பாப்பா அந்தச் சட்டியைத் தூக்கி ஒரே மூச்சில் காலி செய்தாள்.

“இதுக்கு அரை லிட்டர் போட்டாலே போதை எச்சா ஏறிக்கும் என்று தன் கணவரைப் பற்றி நாச்சானிடம் கூறினாள் பாப்பா.”

வழக்காமாய் ராகிக் கூழ் அல்லது கம்பங் களிதான் சாப்பாடு. இன்று அணிலையும் கீரியையும் எதிர்பார்த்து அரிசி வாங்கிச் சமைத்திருந்தாள். கத்தரிக்காயும் கருவாடும் போட்டு புளிக் குழம்பு வைத்திருந்தாள்.

கள்ளுக்கும் காரக் குழம்புக்கும் கனஜோராக இருந்தது போலும். நாச்சான் சாதத்தைவிடக் குழம்பையே அதிகமாகத் தீர்த்தான்.

“தம்பி, நீ கவலைப்படாதல. அவ எங்கேருந்தாலும் இளுத்துக் கொணாராட்டி நா குப்பனில்லறா. மொசல் இல்லாட்டி ஆடு வெட்டுவோம்… நல்லாக் குடிரா…”

இவன் அவரைப் பார்த்தான்.

“என்னா குடிச்சிட்டு அண்ணன் ஒளர்றேன்னு நெனக்கிறியாலே? சத்தியம் பண்றேன், நா குடிக்கலை சாமி, குடிக்கவேயில்லை” என்று பாப்பாவின் தலையில் அடித்தார். “நீ விரியன் தானே கேட்டே-நாளைக்கு கண்ணி வெச்சு விரியனைப் புடிச்சுச் சமைச்சுப் போடறோம் பாரு, எடலு சனியன் வேணாம்அதுல மொசலு வுளாது, கீரிதான் உளும்..பாம்பு உளாது..”

பாப்பா இவனைப் பார்த்துச் சிரித்தாள். குப்பன் கைகூடக் கழுவாமல் படுத்துக்கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தார். இவன் திண்ணைப் பக்கம் மிதந்து போனான். வீட்டுக்குப் போகலாம் என்று படிகளில் கால் வைத்தவன் தட்டுத் தடுமாறிக் கீழே விழுந்தான். பாப்பா ஓடி வந்தாள். அவனைக் கைத்தாங்கலாகத் தூக்கி நிறுத்தினாள்.

“என்னுங்கோ கொளுந்தனாரே, கௌம்பிட்டீங்களாகும். இருட்டுல அம்மாந் தொலைவு எப்பிடி தடம் பாத்துப் போறது கெரகம்? இங்கியே படுத்துட்டுக் காலைல போவீங்கோ. ஒங்க அண்ணாருக்கு சூட்டு ஒடம்பு. மப்ஸ் எச்சா ஏறிடுச்சு. திடீருனு எந்தம்பி எங்கேன்னு கத்தினாலும் கத்தும். நீங்க இங்கேயே இருந்துக்கிருங்க…”

இவன் திண்ணையில் உடம்பைக் கிடத்தினான். கப்பிக் கனத்திருந்த இருள். கண்ணில் மின்னல் பூச்சிகள் ஊசலாடின. காலில் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரத்துப் போனதான உணர்வு.

தொப்பென்று பாயும் தலையணையும் திண்ணையில் விழுந்தன. அதை ஒழுங்காக விரித்துப் போட்ட பாப்பா, “பாய்ல படுத்துத் தூங்குங்கோ!” என்று சொல்லிவிட்டுக் கதவைச் சாத்திக் கொண்டு உள்ளே போனாள்.

குடல் கரித்தது. குமட்டல்… வாந்தியா? வேண்டாம்… இப்போ வராதே!.. அவனுக்க்கு எல்லாம் இருட்டெனத் தோன்றியது. பிறந்தது வளர்ந்தது, கல்யாணம் செய்து கொண்டது, அவள் இன்னொருத்தனிடமிருந்து வந்தது போலவே, வேறு ஒருவனோடு ஓடியது, அணில் பிடித்தது-அதை வீசியது, காட்டுக்குப் போனது, அன்று முழுவதும் தோல்வியாகப் பெற்றது… அவன் மிதந்தான். ஏதோ கிணற்றில் ஊசலாடியபடி கீழே சென்றான். படுபாதாளத்துக்கு… இன்னும் கீழே…கீழே… இருள் உலகில் யாரோ கெக்கலி கொட்டிச் சிரிக்கிறார்கள். கலகலவென்ற அந்தச் சிரிப்பு… அவன் தலையில் ஏன் இத்தனை பாரம்? – யார், யார் சிரித்தது?…

முயற்சி செய்து எழுந்து உட்கார்ந்தான். சிலீரென்று முகத்தில் அறையும் காற்று. சிறிது சிறிதாக நினைவு கூடியது. ஓ, நாம் காலையில் அணில் வேட்டைக்குப் போனோம். அங்கிருந்து… ஓ, இது எந்த இடம்?உடம்பு சாய்ந்து கொள்ள உத்தரவிட, மீண்டும் தலையணையைத் தேடி அதில் தலையைப் புதைத்துக் கொண்டான்.

இருளின் இறங்கல், குளிரின் சிலிர்ப்பு, யார் அப்படி பைத்தியம் போலச் சிரிப்பது? அவன் முதுகில் மெத்தென்ற ஸ்பரிசம். கண்களை மூடிக் கொண்டான்.

இதென்ன? குளிர் இப்போது எங்கே போயிற்று? அரைகுறை மயக்கத்தில் கைகளை நீட்டுகிறான். அதில் பஞ்சு மெத்தையாக, மிருதுவாக… என்ன இது? யார்?

படக்கென்று நினைவு சிக்கறுகிறது. குளிரிலும் வியர்க்கிற உடம்பில், பக்கத்தில் தன்னை அணைத்துக் கொண்டு படுத்திருக்கிற உருவம்

உடம்பு ஏன் நடுங்குகிறது? எழ முயன்றவனை விடாமல் தன்னோடு இறுக அணைத்துக்கொண்டு முத்தமிடுகிறாள் அவள். என்ன இது..? என்ன இது..?

தன் இனத்தில் இஷ்டப்பட்ட பெண்ணை மணப்பதும், அதே போல பிடிக்காதவளை விலக்குவதும் மறுபடியும் யாரையும் சேர்த்துக் கொண்டு வாழுவதும் வழக்கந்தான். ஆனாலும் இதைத் தன்னால் ஏற்க முடியாத விதமும், அதே நேரம், தன் விருப்பம் கைமீறிப் போன விபரீதமும் எல்லாம் அவனுக்கு அரைகுறை மயக்கமாகவே –

காட்டில் தன்னந்தனியாக நிற்கிற இடல், தன் மேல் சட்டத்தில் ஒடக்காய் ஒன்றை ஜீவனற்றுத் தொங்கவிட்டுக் கொண்டு காட்சியளித்தது. அந்த ஒடக்காய், கீரிப்பிள்ளையின் இரைஅதுவே யமன்; ஒருகணம் ஒடக்காய்க்குப் பதிலாக இவனே தொங்குவதான காட்சி வினோதமாகத் தெரிந்தது.

“இன்னிக்கு வேட்டையாடற ராசி எனக்கு இல்லே. நா முளிச்ச மொகம் அப்படி – எரையாகற ராசிதான்…” என்று முணுமுணுத்த அவன் இதழ்களில் வெறியோடு முத்தமிட்டாள் அவள்.

(கண்ணதாசன் மாத இதழ் – ஆகஸ்ட் 1973)

ஜே.வி.நாதன்,பொறுப்பாசிரியர்,‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழ்,சென்னை. ஜே.வி.நாதன் சிதம்பரத்தில் பிறந்தவர். கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக வேலூரில் வாசம். ‘ஆனந்த விகடன்’ நிறுவனத்தில் ஆசிரியர் இலாகா செயல் அலுவலராகவும், அப்போதைய விகடன் எம்.டி.யான திரு எஸ். பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நேர்முக உதவியாளராகவும் பணியாற்றியவர். விகடனுக்குப் பிறகு, ‘ஜன்னல்’ மாதமிருமுறை இதழில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தார். சக்தி விகடன் மாதமிருமுறை இதழில் பிற மாநிலங்களில் உள்ள புகழ் பெற்ற ஆலயங்களை நேரில் தரிசித்து, அவை…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *