“அப்பா உன் பாட்டு டி.வி-யில போடுறான், அம்மா உன்னைக் கூப்பிடுறா…” என்று நித்யா வந்து கூப்பிட்டாள். அவள் சொல்வதற்கு முன்பாகவே அந்தப் பாடலைக் கேட்கத் துவங்கியிருந்தேன். ‘மௌனமே பார்வையால் ஒரு பாட்டுப் பாட வேண்டும், நாணமே ஜாடையால் ஒரு வார்த்தை பேச வேண்டும்’ என்று பி.பி.ஸ்ரீனிவாஸ் குரலில் ஒரு இளைஞன் பாடிக்கொண்டு இருந்தான்.
ஸ்ரீனிவாஸோடு பொருந்தவில்லை என்றபோதும், அந்த இளைஞன் பாடலை அனுபவித்துப் பாடுகிறான் என்பது புரிந்தது. ஒவ்வொரு முறை அந்தப் பாடலைக் கேட்கும்போதும் மனம் கனத்துவிடுகிறது. பல நேரங்களில் என்னை மீறி நான் அழுதுவிடுவதும் உண்டு.
‘சினிமா பாட்டைக் கேட்டு யாராவது அழுவாங்களா, ஏன் இப்படி இருக்கீங்க?’ என்று என் மனைவி லீலாகூடச் சொல்வாள். ஆனால், அவளுக்குத் தெரியுமா, இந்தப் பாடலின் பின்னே அழியாத கண்ணீர்க் கறை படிந்திருக்கிறது என்பது. தனது பள்ளி வயதில் இருந்து அந்தப் பாடலை நாள் எல்லாம் தன் உதட்டில் முணுமுணுத்துக்கொண்டே இருந்த வசந்தி சித்தி, தலை மொட்டை அடிக்கப்பட்டு அழுக்கடைந்துபோன பச்சை நிற அங்கி போன்ற உடையோடு மருத்துவமனையின் தனியறை ஒன்றில் இந்தப் பாடலைக் கேட்டபடியேதான் இறந்துபோனாள் என்று. அவள் வாழ்நாளின் சகல துயரங்களிலும் இருந்து அவளை மீட்டுக் காப்பாற்றியதும் இந்த ஒரு பாடல்தான் என்று.
சித்தி அந்தப் பாடலைத் தன்னுடையதாகஆக்கிக்கொண்டுவிட்டாள். அவள் மட்டும் இல்லை, மனத் துயரம்கொண்ட ஒவ்வொருவரும் ஏதோவொரு சினிமா பாடலைத் தன்னுடைய பாடலாக்கிக்கொண்டுவிடுகிறார்கள். அந்தப் பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். பாடலின் கூடவே பாடி சந்தோஷம் அடைகிறார்கள். பாடலோடு சேர்ந்து அழுகிறார்கள். பின்பு, அந்தப் பாடல் அவர்களின் நிரந்தரத் துணையாகிவிடுகிறது.
அப்படி வசந்தி சித்தி தனது வாழ்வின் பற்றுக்கோடாக பி.பி.ஸ்ரீனிவாஸைப் பிடித்துக்கொண்டு இருந்தாள். தாத்தா வீட்டிலேயே சித்திதான் அதிகம் படிக்காதவள். அவள் டுடோரியலில் படித்துத்தான் எஸ்.எஸ்.எல்.சி. பாஸ் செய்தாள். வீட்டில் ராணி சித்தி, பிரேமா சித்தி இருவரும் வாய் ஓயாமல் பேசக் கூடியவர்கள். ஆனால், வசந்தி சித்தி யாரோடும் அதிகம் பேசியதே கிடையாது. அதனால்தானோ என்னவோ சினிமா பாட்டைத் துணைக்கு வைத்துக்கொண்டாள்.
சித்திக்கு இருந்த ஒரே திறமை எந்தப் பாடலையும் ஒரு முறை கேட்டால், மறுமுறை அப்படியே பாடிவிடுவது. அதைத் திறமை என்று யாரும் ஏற்றுக்கொண்டது இல்லை. வெட்டிவேலை என்றே தாத்தா சொல்வார். மற்றவர்களைப் போல டெய்லரிங், டைப்பிங், ஒயர் கூடை போடுவது போன்றவற்றைக் கற்றுக்கொள்ள வசந்தி சித்தி மறுத்துவிட்டாள்.
‘படிக்காத கூகை… சினிமா பாட்டைக் கேட்டு வீணாப்போகப்போற பாரு’ என்று அவளை தாத்தா அடிக்கடி திட்டுவார்.
அப்படியும் தாத்தாவுக்குத் தெரியாமல் பாட்டுப் புத்தகங்களை வாங்கி வந்து, தலையணைக்குள் ஒளித்துவைத்துப் பாடுவாள். ஒரு முறை தாத்தா அவளது பாட்டுப் புத்தகங்களைக் கண்டுபிடித்து அடுப்பில் போட்டு எரித்ததோடு, அவளது இடது கையில் சூடும் போட்டார். சூடு போட்டதற்கு அழுததைவிட, தனது பாட்டுப் புத்தகங்கள் எரிந்துபோனதற்குத்தான் சித்தி அதிகம் அழுதாள்.
தாத்தாவின் கட்டாயத்துக்காக பாளையம்பட்டியில் டீச்சர் டிரெய்னிங் படித்தாள். ஆச்சிதான் அலைந்து திரிந்து ஆட்களைப் பிடித்து அவளுக்கு வேலைக்கு ஏற்பாடு செய்தாள். சாகேஹள்ளி என்ற சிறிய ஊரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியையாக அவளுக்கு வேலை கிடைத்தது. ஆச்சிதான் அவளை அழைத்துக்கொண்டு போய் விட்டுவந்தாள்.
சாகேஹள்ளி மிகவும் சிறிய கிராமம். இருநூறு வீடுகளுக்குள் இருந்தன. அந்த ஊருக்கு நேரடியாகப் பேருந்து கிடையாது. ராயக்கோட்டை போகிற வழியில் உள்ள குறுக்குச் சாலையில் இறங்கி நடந்து தான் போக வேண்டும். சிறிய ஓட்டு வீட்டுக்குள் தன்னை ஒடுக்கிக்கொண்டு சித்தி தனியே வாழ்ந்துகொண்டு இருந்தாள். பகலிலும் அந்த வீடு இருண்டே இருந்தது. வேலைக்குப் போன பிறகு, அவள் எல்லா உறவுகளில் இருந்தும் தன்னைத் துண்டித்துக்கொண்டாள்.
ஒரு முறை அங்கே விடுமுறைக்குப் போயிருந்தபோது, கட்டுவிரியன் பாம்புகளைப் பார்த்திருக்கிறேன். சித்தி எப்படி இந்த ஊரில் வசிக்கிறாள் என்று ஆச்சர்யமாக இருந்தது.
“ஏன் சித்தி இங்கே வந்து இப்படிக் கஷ்டப்படுறே?” என்று கேட்டேன்.
“இங்கே பேச்சுத் துணைக்குக்கூட ஆள் கிடையாது. அதனால, நிறைய நேரம் பாட்டு கேட்கலாம். ரேடியோ இருக்கு. என் சம்பளத்துல புதுசா கேசட் பிளேயர் வாங்கி இருக்கேன். கேசட்ல எனக்கு விருப்பமான பாட்டா பதிஞ்சி வெச்சிருக்கேன். தாத்தா கத்துவாரேனு பயமே இல்லாமப் பாட்டு கேட்குறதுக்கு இந்த ஊருதாண்டா லாயக்கு” என்றாள்.
அவளது பதின்வயதில் ஒரேயரு முறை பொருட்காட்சிக்கு பி.பி.ஸ்ரீனிவாஸ் கச்சேரியில் பாடுவதற்கு வரப்போகிறார் என்று கேள்விப்பட்டு, அதற்குப் போயாக வேண்டும் என்று முரண்டுபிடித்து இருக்கிறாள். வயதுக்கு வந்த பெண் தனியாக இரவில் பாட்டுக் கச்சேரி கேட்கப் போகக் கூடாது என்று தாத்தா தடுத்துவிட்டதோடு, மீறிப் போனால் அவளை வீட்டுக்குள் சேர்க்க மாட்டேன் என்று உறுதியாகக் கூறியிருந்தார். ஆனால், சித்தி அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. கச்சேரி கேட்பதற்காக 20 ரூபாய் டிக்கெட் வாங்கப் பணம் தரவில்லை என்று, தான் போட்டிருந்த கொலுசை விற்று டிக்கெட் வாங்கிக்கொண்டு போய் இருக்கிறாள்.
2,000 பேருக்கும் மேலான கூட்டம். வரிசை வரிசையாக நாற்காலிகள், அலங்கார டியூப்லைட்டுகள், மிகப் பெரிய மேடை, வாத்தியக் கலைஞர்கள், 20 ரூபாய் டிக்கெட் எல்லாம் கடைசியில் இருந்தது. அங்கும் பெரிய கூட்டம். தள்ளுமுள்ளு. அதற்குள் முண்டி புகுந்து ஒரு கம்பத்தின் அருகே நின்றபடியே குதிகாலை உயர்த்தி நின்று, எப்படியாவது மேடையில் ஒரு நிமிடம் பி.பி.எஸ்ஸைப் பார்த்துவிட்டால் போதும் என்று எக்கி எக்கி முயன்றுகொண்டு இருந்தாள்.
அன்று பி.பி.ஸ்ரீனிவாஸ் கச்சேரிக்குவரவே இல்லை. வேறு பல முன்னணிப் பாடகர்கள் வந்திருந்தார்கள். ஆனால், பி.பி.எஸ். வந்து விடக்கூடும் என்று சித்தி கடைசிப் பாடல் முடியும் வரை நம்பிக்கையோடு காத்திருந் தாள். அவர் வரவில்லை என்பதை அவளால் தாங்கிக்கொள்ளவே முடிய வில்லை. பொருட்காட்சியில் இருந்து வீடு திரும்பும் வழி எல்லாம் புலம்பிக்கொண்டே வந்தாள். இருட்டைப் பற்றியோ, தனியாக வருவதைப் பற்றியோகூட அவளுக்குள் பயம் இல்லை. பி.பி.எஸ். வரவில்லையே என்பது தான் ஒரே ஆதங்கம்.
”யாரைக் கேட்டுக்கொண்டு தனியாக் கச்சேரி கேட்கப் போனே… தறுதலை அப்படியே எங்கயாவது ஊர் மேயப் போயிடு… வாசல்ல நிக்காதே” என்று தாத்தா வாசல் கதவைத் திறக்காமல் கத்தினார்.
அவள் தாங்க முடியாத மன வேதனையோடு சொன்னாள், ”நான் இப்பவே கிணத்துல விழுந்து செத்துப்போயிர்றேன்… அப்போ உங்களுக்கு என்னால எந்தத் தொந்தரவும் இருக்காது” என்று சிட்ஃபண்ட்ஸ் ஆபீஸை ஒட்டிய கிணற்றை நோக்கி விடுவிடுவென நடந்துபோனாள். அன்றிருந்த மனநிலையில் அவளை விட்டிருந்தால், செத்துப்போயிருக்கக் கூடும். ஆனால், உறக்கத்தில் இருந்த ஆச்சி பயந்து எழுந்துபோய், அவளைச் சமாதானப்படுத்தி வீட்டுக்கு அழைத்து வந்து சொன்னாள், ”ராத்திரி சாப்பிடாமலே போயிட்டே… எவ்வளவு நேரம்டி வெறும் வயித்தோட இருப்பே. ஒரு வாய் சாதம் சாப்பிட்டுத் தூங்கு.”
சித்திக்குச் சாப்பிடப் பிடிக்கவில்லை. அவளுக்கு மனம் கசந்துபோயிருந்தது. சாப்பிட மறுத்துவிட்டு, வெறும் தரையில் படுத்துக்கொண்டாள்.
“அதான் ரேடியோவுல ஒரு நாளைக்கு நூறு தடவை பாட்டுப் போடுறான்ல. அப்புறம் கச்சேரிக்கு வேற ஏண்டி போற. பொம்பளைப் பிள்ளை துணை இல்லாம ஒத்தையில வந்தா என்ன ஆகுறது?” என்று கேட்டாள் ஆச்சி.
“அதான் உசிரோட முழுசா வந்து தொலைச்சிட்டேன்ல… இன்னும் ஏம்மா படுத்துறே?” என்று சித்தி கத்தினாள்.
ஆச்சிக்கு அவளைப் புரிந்துகொள்ள முடியவில்லை. பதின்வயதில் பொம்பளைப் பிள்ளைகள் எதற்குக் கோபப்படுகிறார்கள் என்று உலகில் யாருமே புரிந்துகொள்ள முடியாது. அந்தக் கோபம் ஒரு வடிகால். ஆச்சி அவளின் முதுகில் கை வைத்துத் தடவிக்கொடுத்தாள்.
சித்திக்கு அந்தத் தொடுகை அழுகையைப் பீறிடச் செய்தது. அவள் தன் அம்மாவின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு விசும்பி அழுதாள். அவளாக அழுது முடிக்கட்டும் என்று ஆச்சி அமைதியாக இருந்தாள். நீண்ட கேவலுக்குப் பிறகு அவள் தன் அம்மாவின் பக்கம் திரும்பிச் சொன்னாள், “கொலுசை வித்துட்டேன். அதுக்கு வேற அப்பா நாளைக்குக் கத்துவாரு பாரு.”
“தொலைஞ்சிபோச்சினு சொல்லுடி. உங்கப்பா பொருட்காட்சிக்குப் போயி தேடவா போறார்?”என்றபடியே ஆச்சி புரண்டுபடுத்துக்கொண்டாள்.
சின்னஞ்சிறு பொய்கள் இல்லாவிட்டால் வாழ்க்கையின் கொதிப்பைத் தாங்கிக்கொள்ள முடியாது போலும். ஆச்சி வீட்டில் இருந்துதான் நானும் பொய்யின் பயன்பாடுகளைக் கற்றுக்கொண்டு இருந் தேன்.
சித்தி மறுநாள் காலை வழக்கத்துக்கு மாறாக வாசலில் மிகப் பெரிய தாமரைக் கோலம் ஒன்றைப் போட்டிருந்தாள். அவளுக்கு மனது சந்தோஷமாக இருந்தால்தான், அப்படியான வண்ணக் கோலத்தைப் போடுவாள். அவள் வரைந்த கோலத்தை அவளாகவே ரசித்தபடியே வீட்டுக்குள் போய் ரேடியோவைப் போட்டாள்.
டிபன் சாப்பிடும் நேரம் ‘கொடி மலர் என்ற படத்தில் இருந்து ஒரு பாடல்’ என்ற அறிவிப்பு வந்தவுடன் பி.பி.எஸ்ஸை முந்திக் கொண்டு அவள் ”மௌனமே பார்வையால் ஒரு பாட்டு பாட வேண்டும்” என்றுபாடத் துவங்கியிருந்தாள்.
“அடி செருப்பால மூதேவி” என்ற குரல் தாத்தாவிடம் இருந்து எழுந்தது.
வீட்டில் பெண்கள் சினிமா பாட்டு பாடுவது தாத்தாவுக்குப் பிடிக்காது. அதிலும் இப்படி ரேடியோவோடு கூடவே பாடினால் அவருக்குக் கோபம் பொங்கி வழியும். அதற்காகவே சித்திக்கு ஒரு முறை காலில் சூடு வைத்திருக்கிறார். அந்தக் காயத்தின் வடுவை அடிக்கடி அவள் தடவிக்கொண்டே இருப்பாள். நானும்கூட அதைத் தொட்டுப் பார்த்திருக்கிறேன்.
“ரேடியோ கூடவே பாடுனா என்னடா தப்பு? பாட்டைக் கேட்டா, கூடவே பாடத் தோணுதுடா சுப்பு. பாடிக்கிட்டே இருந்தா, பி.பி.எஸ். பக்கத்தில் இருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கும்டா. அந்த மனுஷன் என்னமாப் பாடுறார்… பாதரசம் ஓடுற மாதிரி குரல்ல ஒரு வசீகரம், ஒரு மினுமினுப்பு இருக்குடா. ஒவ்வொரு குரலுக்கும் ஒரு வாசனை இருக்கு. நல்ல பாடகர்கள் பாடும்போது அந்த வாசனையை நாம உணர முடியும். பி.பி.எஸ். பாட்டைக் கேட்டா, எனக்குப் பால் பொங்குற வாசம் வருதுடா. அவர் பாட்டைக் கேட்டுக்கிட்டே செத்துப்போயிட்டா நல்லா இருக்கும்ல” என்றவள், ‘ஒடிவதுபோல் இடை இருக்கும்… இருக்கட்டுமே ஹோய்’ என்ற பாடலை முணுமுணுக்கத் துவங்கினாள். அன்றுதான் எனக்கு ஓர் உண்மை புரிந்தது. நம் எல்லோரின் உதட்டிலும் பாடல்கள் ஒட்டிக்கொண்டு இருக்கின்றன. சில பாடல்களை நாம் வெளிப்படுத்துகிறோம்… சிலவற்றை நாம் விழுங்கிவிடுகிறோம்.
சித்தி விரும்பியபடியேதான் அவள் வாழ்க்கை முடிந்துபோனது. எந்தப் பாடலைத் தன் வாழ்நாள் முழுவதும் நேசித்தாளோ, அதைக் கேட்டுக்கொண்டபடியேதான் இறந்தும்போனாள். அன்று நான் அவளோடு மருத்துவமனையில் உடனிருந்தேன்.
ஏனோ அவள் இறப்பதற்கு ஒரு வாரத்தின் முன்பு என்னைக் காண வேண்டும் என்று வரச் சொல்லி இருந்தாள். அப்போது பெங்களூரில் வங்கிப் பணியில் இருந்தேன். சிவப்பிரகாசம் மாமா போன் செய்து சொன்னார், “வசந்தி உன்னைப் பாக்க ணும்னு சொல்றாடா. நீதானே அவ பெட்? உடனே போயிப் பாத்துரு. 10 நாள் கூடத் தாங்காதுனு டாக்டர் சொல்லிட்டாரு. மன திருப்திக்காக ஹாஸ்பிடல்ல வெச்சிப் பார்த்துட்டு இருக்கோம்.”
போனை வைத்தவுடன் எனது கை நடுங்கத் துவங்கியது. தொண்டையில் கனமேறி குரல் அடைத்துக்கொண்டதுபோல் ஆனது. இப்படி ஆகும் என்று சென்ற முறை நேரில் பார்த்தபோதே உணர்ந்திருந்தேன். அதை மாமாவின் குரல் உறுதிப்படுத்தியது மனதில் கலக் கத்தை ஏற்படுத்தியது.
இரண்டு வருஷத்துக்கு முன்பாக சிறுநீரகக் கோளாறு எனச் சிகிச்சைக்குப் போன சித்தி, தவறான மருத்துவ சிகிச்சை காரணமாக முடி கொட்டிப்போய், ஆள் மெலிந்து ஒடுங்கி, 37 கிலோ எடையில் ஒரு சிறுமியைப் போல உருமாறி இருந்தாள். மாற்றுச் சிறுநீரகம் பொருத்தப்பட்டு பெங்களூரிலும் கோவையிலும் அவளுக்கு மாறிமாறி சிகிச்சை அளிக்கப்பட்டது. வலியும் வேதனையுமாகக் கழிந்த நாட்களில் அவள் தன் அறையில் கூடவே அந்த டேப்ரிக்கார்டரை வைத்திருந்தாள். தனக் காகப் பதிவுசெய்துவைத்திருந்த கேசட்டு களையும் கூடவே வைத்திருந்தாள். தலை மாட்டிலே டேப்ரிக்கார்டரை வைத்துக் கொண்டு மெல்லிய சப்தத்தில் ஒலிக்கும் பாடலைக் கேட்டுக்கொண்டே இருப்பாள். சில நாட்கள் வலி அதிகமாகி உறக்கம் வராமல் போகையில், அவள் இரவெல்லாம் பாட்டு கேட்டுக்கொண்டு இருந்தாள் என்று மாமா சொன்னார்.
சித்தி மருத்துவமனையில் இருந்தபோது அவளைப் பார்க்கச் செல்கையில் பி.பி.எஸ். பாடல்கள் அடங்கிய சி.டி-யும் புதிதாக ஒரு சி.டி. பிளேயரும் வாங்கிப் போயிருந்தேன். சித்தி அப்போது ஊதா நிற அங்கி ஒன்றை அணிந்து இருந்தாள். ஆறாம் வகுப்புக்குப் போகும் ஒரு சிறுமியின் உடல்வாகுபோலத்தான் அவளின் தோற்றம் இருந்தது. அவளது கண்கள் பிதுங்கித் துருத்திக்கொண்டு இருந்தன. உலர்ந்த உதடு, ஒடுங்கிப்போன மார்புகள், கால்கள் குச்சியாக இருந்தன. படுக்கையில் அயர்ந்துகிடந்தாள்.
அருகில் போய் உட்கார்ந்து, “சித்தி நான் சுப்பு வந்திருக்கேன்” என்று சொல்லியபோது, அவள் கைகளை ஊன்றி உட்கார முயன் றாள். ஆனால், எழுந்துகொள்ள முடிய வில்லை. நான் அவளைத் தலையணையில் சாய்வாக உட்காரவைத்தேன். முகத்தில் லேசான புன்னகை வந்தது. அவள் என் கைகளைப் பிடித்தபடியே கேட்டாள்… “பிள்ளைக நல்லா இருக்கா சுப்பு?”
சுப்ரமணி என்ற என் பெயரை சுப்பு என அழைக்கும் ஒரே ஆள் சித்தி மட்டும்தான். அன்று அவள் அப்படிக் கூப்பிடுகையில் உடல் சிலிர்த்துப்போய்விட்டது.
“நல்லாயிருக்காங்க சித்தி…” என்றபடி அவளையே பார்த்துக்கொண்டு இருந்தேன்.
“காலைல ரேடியோவுல ‘வீரத் திருமகன்’ படத்துல வர்ற ‘ரோஜா மலரே ராஜகுமாரி’ போட்டான். நீயும் நானும்தானே அதை முத்து டாக்கீஸ்ல பாத்துட்டு வந்தோம். ஞாபகம் இருக்கா?”
அது நினைவில் இல்லை. ஆனால், அந்த வயதில் சித்தி எவ்வளவு அழகாக இருந்தாள். நெற்றியில் கீற்றளவு சந்தனம், சிறிய திருநீறு, கழுத்தில் ஒரு பாசிமாலை, கையில் இரண்டே வளையல்கள், வெளியூர் போகும்போது மட்டும் போட்டுக்கொள்ளும் செருப்பு. அந்த நாட்களில் சித்தியின் முகம் மிகுந்த பொலிவுடன் இருந்தது. ஒரு சிறு சுருக்கம்கூட இல்லாமல் தாவணி அணிந்து இருப்பாள். கால் விரல் நகங்களைக்கூடக் கச்சிதமாக வெட்டி சுத்தமாக வைத்திருப் பாள். அவளுக்கு மஞ்சள் ரோஜா பிடிக்கும் என்பதற்காக பூங்கா வரை நடந்துபோய் பூ வாங்கி வைத்துக்கொள்வாள். இப்படி மனதில் ஏதோ நினைவுகள்.
சித்தியால் தலையணையில் சாய்ந்துகூட உட்கார முடியவில்லை. ”நான் படுத்துக்கிடுறேண்டா சுப்பு. முதுகு வலிக்குது” என்று படுத்துக்கொண்டாள். அவளை அப்படியே ஒரு குழந்தையைப் போல அள்ளி மடியில் வைத்துக்கொள்ள வேண்டும்போல் இருந் தது. அவள் குரல் உடைந்துபோனவளாகச் சொன்னாள், ”நான் யாருக்குமே ஒரு கெடுதல் செய்யலைடா சுப்பு. கல்யாணம் கூடப் பண்ணிக்கிடாம சின்னப் பிள்ளை களுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக்கிட்டு தனியாத்தானே வாழ்ந்துட்டு இருந்தேன். எனக்கு ஏண்டா இப்படி ஒரு நோய் வந்துச்சி? உடம்பை உருக்குதுடா… எங்க அப்பா பேச்சைக் கேட்காம சினிமா பாட்டாக் கேட்டேனே… அதுக்கு ஆண்ட வன் குடுத்த தண்டனை இதுவாடா?”
என்னால் பதில் பேச முடியவில்லை. அவள் கைகளை இறுகப் பற்றியபடியே சொன்னேன், ”உனக்கு ஒண்ணும் ஆகாது சித்தி.”
“என் உடம்பைப் பத்தி எனக்குத் தெரி யும்டா. சின்னப் பிள்ளையா இருந்தப்போ நாம குடியிருந்த வீடு, விளையாடின இடம், கூட ஃப்ரெண்டா இருந்த கனக லட்சுமி, அப்போ படம் வரைஞ்சு தருவாரே டேனியல் மாமா… எல்லாரையும் பாக்கணும்னு மனசு அடிச்சிக்கிட்டே இருக்குடா. ஆனா, இனிமே போயி பாக்க முடியாதுனு நல்லாத் தெரியுது. இந்த நெனைப்பு வந்துட்டாலே, கதை அவ்வளவுதான்னு படிச்சிருக்கேன். எனக்காக நீ போயி இவங்களை எல்லாம் பாத்து, நான் கேட்டேன்னு சொல்வியாடா?” என்றாள்.
“ஏன் சித்தி இப்படிப் பேசுறே… உனக்கு உடம்பு சரியானதும் என் கார்ல நாம ஊருக்குப் போயிட்டு வருவோம்” என்றேன்.
சித்தி பதில் பேசவில்லை. நினைவில் ஆழ்ந்துபோய் இருந்தாள்.
அதன் பிறகு என்னோடு ஒரு வார்த்தை பேசவில்லை. அப்படியே கண்களை மூடிப் படுத்துக்கொண்டுவிட்டாள். இரண்டு நாட்களுக்குப் பிறகு நான் ஊருக்குப் போகையில் சொன்னாள், ”
‘நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை’ பாட்டை நேத்து கனவுல கேட்டேன். விடிஞ்சி ரேடியோவைப் போட்டா, அதுதான் மொதப் பாட்டு. நான் நினைச்சதையே போட்டது, சந்தோ ஷமா இருக்குடா. சினிமா பாட்டு மட்டும் இல்லேன்னா, நான் எப்பவோ செத்துப் போயிருப்பேண்டா சுப்பு.”
சித்தி ஒன்றரை வருஷம் மாறி மாறி மருத்துவமனையில் இருந்த காரணத்தால், அவளைப் பார்க்க வந்துபோகிற உறவினர்கள் குறைந்துபோனார்கள். ஒரு சமயத்தில் அவளோடு மருத்துவமனையில் துணைக்கு இருப்பதற்குக்கூட யாருமே இல்லாமல் அவள் மட்டுமே தனியே மருத்துவமனையில் இருந்தாள்.
ஆனால், தன்னை மற்றவர்கள் கவனித்துக்கொள்ளவில்லையே என்ற ஆதங்கம் அவளிடம் இருந்ததே இல்லை. தன்னால் மற்றவர்களுக்கு அதிகம் உதவி செய்ய முடியாமல் வாழ்க்கை முடிந்துவிடப்போகிறதே என்றுதான் ஆதங்கம்.
அந்த ஆதங்கம் உறுதியாகும்படியாகவே அவளது இறுதி நாட்கள் அமைந்து இருந்தன. கடைசியாக சித்தியைப் பார்க்க வேண்டும் என்பதற்காக, ஒரு வாரம் விடுமுறை எடுத்துக்கொண்டு குடும்பத்துடன் கிளம்பினேன். வழியில் காரில் வைத்து தருண்கூடக் கேட்டான்.
“சினிமா பாட்டு பாடுமே… அந்த சித்தியாப்பா சாகப்போறா?”
“அப்படி எல்லாம் பேசக் கூடாது தருண்.”
“அம்மாதான் சொன்னா, நீயும் சினிமா பாட்டு பாடுவியாப்பா?”
“நான் பாட மாட்டேன், கேட்பேன்.”
“சித்திதான் உன்னையும் பாட்டுக் கேட்கப் பழக்கிவிட்டாளா?”
அதுதான் உண்மை. அதைச் சொல்வதற் காகத் தலையாட்டும்போது என்னை அறியாமல் கண்ணீர் கசிந்துபோனது. அதை தருண் கவனித்திருக்கக்கூடும். அவன் என் மனைவியின் சேலையை இழுத்தபடியே சொன்னான், ”அப்பா அழறார்.”
லீலா அதைக் கவனித்தபோதும் கேட்டுக்கொள்ளவில்லை. நித்யா மட்டும் புரியாமல் என்னைப் பார்த்தபடி இருந்தாள். சித்திக் குப் பிடித்த பாடலாகவே பெங்களூரில் இருந்து சேலம் மருத்துவமனை வரும் வரை கேட்டுக்கொண்டே வந்தேன்.
மருத்துவமனையில் இருந்த சித்தியால் கால்களை அசைக்கக்கூட முடியவில்லை. மூத்திரம் போவதற்குக்கூட அவளைப் படுக்கையில் ஒரு ஆள் தூக்கிக்கொண்டு போக வேண்டி இருந்தது. அவளது குரல் கூட மாறி இருந்தது. எங்கோ கிணற்றுக்குள் இருந்து பேசுவதுபோலப் பேசினாள். லீலாவையும், தருணையும், நித்யாவையும் பார்த்ததும் சித்தி சிரிக்க முயற்சி செய்தாள். அவளால் முடியாமல் போகவே கண் கலங்கியது. பிள்ளைகளைத் தன் அருகில் வரச்சொல்லி ஜாடை செய்தாள். ஆனால், நித்யா, தருண் இருவருமே அருகில் போகப் பயந்து நின்றார்கள்.
“ஆச்சி கையைப் பிடிச்சிக்கோ” என்று நான் சொன்னதும் நித்யா, வசந்தி சித்தியை நோக்கிக் கையை நீட்டினாள்.
சித்தி நடுங்கியபடியே நித்யாவின் கையைப் பற்றியபடி என்னிடம் சொன்னாள், “அந்த பேப்பருக்கு அடியில் ஒரு சாக்லேட் வெச்சிருக்கேன். எடுத்துக் குடு.”
பழைய நியூஸ் பேப்பர் அடியில் ஒரு ஐம்பது பைசா சாக்லேட் இருந்தது. அதை எடுத்து நித்யாவிடம் நீட்டினேன். நித்யா அதை வாங்க மறுத்து, “தருண் நீ வாங்கிக்கோ” என்றாள். தருண் தனக்கும் வேண்டாம் என்றான். “வாங்கிக்கோ நித்யா” என்றேன்.
“இந்த ரூம்ல ஒரே ஸ்மெல்லா இருக்கு. எனக்கு வேண்டாம்” என்று அவள் வராந்தாவை நோக்கி ஓடத் துவங்கினாள். சித்தியின் முகம் வாடிப்போயிருந்தது. நான் அந்த சாக்லேட்டைப் பையில் போட்டுக்கொண்டபடியே வசந்தி சித்தியின் அருகில் உட்கார்ந்துகொண்டேன்.
“இதோட சரி சுப்பு… இனிமே ரொம்பத் தொந்தரவு குடுக்க மாட்டேன். கடைசியா ஒரு தடவை பாக்கணும்னு தோணிச்சி. நீ ஒருத்தன்தாண்டா என் வளர்ப்பு. உங்க அம்மாவைவிட நான்தான் உன்னைப் பாத்துப் பாத்து வளத்தேன். இப்பகூட நீ டவுசர் போட்டுக்கிட்டு இருக்கிற சின்னப் பையனாத்தான் எனக்குத் தெரியுற. ஒரு ஆளோட உருவம் கண்ணுக்குள்ளே பதிஞ்சுபோச்சுன்னா, அதை மறக்கவே முடியாது. எனக்கு நீ எப்பவும் ஸ்கூலுக்குப் போற சுப்புதான். அப்படித்தான் நினைப்புல இருக்கு.”
என்ன பேசுவது என்று தெரியாமல் சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே இருந்தேன். மனம் ததும்பிக்கொண்டு இருந் தது. எச்சிலை விழுங்குவதுகூட வேதனை யாக இருந்தது.
சித்தி சொன்னாள், ”இப்போ எல்லாம் ரேடியோ, டேப்ரிக்கார்டர் எதுவுமே இல்லாமல் மனசுல இருந்தே பாட்டு கேட்க முடியுதுடா. கண்ணை மூடிக்கிட்டா மனசு தானே நினைக்கிற பாட்டை ஓடவிடுது. அதைத்தான் கேட்டுக்கிட்டே இருக்கேன். பகலும் ராத்திரியும் பாட்டு… பாட்டு… பாட்டுனு கேட்டுக்கிட்டே இருக்கேன். அது ஒண்ணுதான் எனக்கு மருந்து, சாப்பாடு எல்லாமே. கேட்கக் கேட்க மனசு லேசாகிருது. என் நெனைப்பா இந்தப் பாட்டுகளைத்தாண்டா விட்டுட்டுப் போறேன். அதைக் கேட்கிறப்போ என்னை நினைச்சிக்கிடுவே இல்ல?”
என்னால் அதற்கு மேல் அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சித்தியும் அழுதாள். பிறகு, இருவரும் மௌனமா இருந்தோம். சித்தி கண்களை மூடிக்கொண்டாள். அவளுக்குள் பாட்டு கேட்கத் துவங்கியிருக்க வேண்டும். நான் ஜன்னலுக்குப் பக்கமாக நாற்காலியைப் போட்டு உட்கார்ந்துகொண்டேன்.
ஆறு நாட்கள் பகலிரவாக அவளோடு மருத்துவமனையில் இருந்தேன். அவளை நானே தூக்கிக்கொண்டு போய் கழிப்பறையில் விட்டேன். ஒரு புறாக் குஞ்சைக் கையில் பிடித்திருப்பதுபோலவே இருந்தது. முதுகு வளைந்து, இடுப்பு ஒடுங்கி, முட்டிகள் துருத்திக்கொண்டு அய்யோவென்று இருந்தது. சித்தியின் உதடுகள் எப்போதாவது அசையும். அவள் கூடவே பாடிக்கொண்டு இருக்கிறாள் என்று எனக்குத் தோன்றும். அந்த உதட்டு அசைவை வைத்து என்ன பாடலைப் பாடு கிறாள் என்று கண்டுபிடிக்க முயற்சி செய்வேன். சில வேளைகளில் என்னால் அவள் மனதில் ஒலிக்கும் பாடலைக் கண்டுபிடிக்க முடிந்தது.
ஒரு நள்ளிரவில் அவள் பாதி தூக்கத்தில் எழுந்து சொன்னாள், ”கண்ணை மூடுனா, ஒரே குழப்பமா இருக்குடா. பாட்டு கேட்க மாட்டேங்குது. வண்ணத்துப்பூச்சி பறக்கிற மாதிரி சடசடனு ஏதோ உருவம் மங்கலா வருது. டேப்ரிக்கார்டர்ல பாட்டைப் போடு. நான் எழுந்து அவளது டேப்ரிக்கார்டரைத் தலைக்கு அருகில் வைத்தபடியே ”என்ன பாட்டு?” என்று கேட்டேன்.
சித்தி தெளிவற்ற குரலில் சொன்னாள்
“நிலவே என்னிடம் நெருங்காதே…”
அந்தப் பாடல் அறையில் ஒலிக்கத் துவங்கியபோது அவள் உடல் வேதனையோடு புரண்டு படுத்துக்கொண்டது. அன்றிரவு துவங்கி மறு நாள் சாயங்காலம் வரை பாடல்கள் ஒலித்துக் கொண்டே இருந்தன. இரவு பெய்த மழை யால் மின்சாரம் இல்லாமல் போனது. சித்தி அன்றிரவு உறக்கத்தில் ஆழ்ந்துவிட்டு இருந்தாள். விடிகாலை 5 மணி இருக்கக் கூடும். அவள் எழுந்து, அருகில் இருந்த டம்ளரை எக்கி எடுக்க முயன்று தள்ளி விட்டாள்.
நான் கண் விழித்து, “என்ன வேணும் சித்தி?” என்றேன்.
“பாட்டை ஆஃப் பண்ணிட்டியா?” என்று கேட்டாள்.
“கரன்ட் இல்லே… அதான்…” என்றேன்.
“நாம ரெண்டு பேரும் ஒண்ணா மெட்ராஸுக்குப் போயி பி.பி.எஸ்ஸை பாக்கிறது மாதிரி ஒரு கனா வந்துச்சி. எனக்கு இப்போ எல்லாம் கனவு வர்றதே இல்லை. ஆனா, நேத்து இந்தக் கனா வந்துச்சி. அவர் பாட்டைக் கேட்கிறப்போ, மனசுல தோண்ற உருவத்துக்கும் நேர்ல பாக்குற துக்கும் வேற மாதிரி இல்ல இருக்கும். அவரைப் பார்க்கவே வேணாம்னுதான் தோணுது!”
“அதெல்லாமில்லை சித்தி. நான் அவரை டிரைவ் இன் உட்லண்ட்ஸில் பாத்துப் பேசியிருக்கேன். ஒரு தடவை உனக்குகூட ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்து குடுத்தேனே?” என்றேன்.
“ஞாபகமிருக்கு சுப்பு… வீட்ல அதை என் சூட்கேஸ்ல வெச்சிருக்கேன். இந்த உலகத்துலயே மனுசனோட குரலுதான் பெரிய ஆச்சர்யம். அது என்னவெல்லாம் மாயம் பண்ணுது. சிலரோட முகம் மறந்துபோய், குரல் மட்டும்தான் ஞாபகத்தில் இருக்கு. குரலுக்கு வாசனை இருக்கு. நிறம் இருக்கு. வெளிச்சம் இருக்கு. ருசியும் இருக்குடா. நான் அதுலயே கிறங்கிப்போயிக் கிடக்கேன். இந்த உலகத்தில் நான் ஆசை தீர அனுபவிச்சது பாட்டு மட்டும்தாண்டா. ஆனாலும், போதும்னு விட முடியலை. அதுக்காக இன்னும் அம்பது வருஷம் வாழணும்னு ஆசையா இருக்குடா” என்று விம்மத் துவங்கினாள்.
அன்றிரவுதான் கடைசி முறையாக சித்தி மௌனமே பார்வையால் பாடலைக் கேட்டாள். பின்பு, இரவு மூன்றரை மணிக்கு இறந்துபோனாள். அவளது காலத்துக்குப் பின்பு அந்த டேப்ரிக்கார் டரையும் பதிவுசெய்துள்ள பாடல்களையும் நான் எடுத்துக்கொண்டு வந்தேன். அதில் பாட்டு கேட்பதே இல்லை.
சித்தியின் நினைவாக ஷோகேஸில் பாது காப்பாக வைத்திருக்கிறேன். ஓடாத அந்த ஒலிநாடாவோடு அவளது நினைவுகளும் சுருண்டுகொண்டு இருக்கின்றன.
அதிலிருந்து எப்போதெல்லாம் டி.வி-யில் இந்தப் பாடல் ஒலிபரப்பாகிறதோ, அப்போதெல்லாம் பிள்ளைகள் தவறாமல் நினைவுபடுத்துகிறார்கள்.
“அப்பா உன் பாட்டு டி.வி-யில ஓடுது…”
அது என் பாட்டு இல்லை மகளே… உலகில் துயரம் தீராத ஒவ்வொரு பெண்ணும் தன் மனதுக்குள் காலமெல்லாம் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல் அது. நீயும் ஒருநாள் இதுபோல ஒரு பாடலை உனதாக் கிக்கொள்வாய். அன்றைக்கு என்னைப் போலவே நீயும் பாடல் கேட்டபடியே அழுவாய்.
எளிய மனிதர்களின் வாழ்க்கையில் ஏற்படும் சந்தோஷமோ, துயரமோ எதுவா யினும் அதைப் பகிர்ந்துகொள்வதற்கும் ஆற்றுப்படுத்துவதற்கும் இந்தப் பாடல் களைத் தவிர வேறு என்ன இருக் கின்றன?
‘முன்னம் இருக்கும் இந்தச் சின்ன உதட்டில் பல மொழிகள் பாடம் பெற வர வேண்டும்’ என டி.வி-யில் இளைஞன் உருகிப் பாடிக்கொண்டு இருந்தான்.
அதைக் கேட்டபோது தோன்றியது…
இந்த நிமிஷம் ஏதாவது ஒரு ஊரில், யாராவது ஒருவர் நிச்சயம் பி.பி.எஸ். பாடலைக் கூடவே பாடிக்கொண்டு இருப்பார், வசந்தி சித்தியைப் போல!
– மே 2012
நல்ல உயிரோட்டமான சிறுகதை. நான் 5 வருடங்களுக்குப் பிறகும் நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு மனதில் ஊன்றிய கதை!. எழுத்தின் வலிமையை உரக்க பேசிய கதை!. நன்றிகள் பல ஸ்.ராமகிருஷ்னன் அவர்களுக்கு.
இந்தக் கதையை ஆனந்த விகடனில் படித்தபின்பு, மௌனமே பார்வையால் பாடல் எனதாகிப்போனது போன்ற ஒரு உணர்வு. அந்தப் பாடலை எங்கு எப்போது கேட்டாலும் இந்த வசந்தி சித்தியும் அவரைப் போலவே பாட்டு புஸ்தகங்களை வாங்கிக் குவித்து, பாடல்களே கதியாக இருந்த என் சித்தியும் நினைவில் வரத்தவறுவதில்லை. உயிருள்ள கதை எஸ்.ரா சார்.
Superb. Very touching story. For few minutes Thiru Ramakrishnan make us live the life of Chitthi. Very powerful writing.