கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம் சிறந்த சிறுகதைகள் 100 (எஸ்.ரா.)  
கதைப்பதிவு: October 14, 2022
பார்வையிட்டோர்: 12,554 
 
 

பாகம் ஒன்று | பாகம் இரண்டு

இன்று தன் ஜென்மதினத்தைப் பெரும் விழாவாகக் கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்தப் புதிய நகரம் உண்மையில் வரலாறென்றும் கதையென்றும் ஆக இரண்டு முகங்களைக் கொண்டது. நாயக்கர் பெருமாள் கடலையொத்த விஸ்தீரணம் கொண்ட மிகப் பெரும் ஏரியை இங்கே கட்டுவித்து அதன் கரையில் பொழில்களையும் கோட்டை கொத்தளங்களையும் நிறுவி இதற்கான மக்களைக் குடியமர்த்திக் கோலோச்சியதிலிருந்து இப்புதிய நகரத்தின் வரலாறு உண்டு பண்ணப்பட்டிருக்கிறது. இதன் கதையோ இன்று அரண்மனைகளும் நந்தவனங்களும் கம்பீரமாக உயர்ந்து நின்றிருக்கும் இடங்களில் முன்பு இருந்து இப்போது மறைந்துபோன மாபெரும் விருட்சங்களோடும் விலங்குகளோடும் சேர்த்து நகரத்திற்கு வெளியே துரத்தப் பட்டுவிட்டது. இந்நகரத்தின் வரலாற்றுக்கு முன்பிருந்த அந்த அடவியும் அதற்கு முன்பு இங்கே எழுப்பப்பட்டிருந்த சுயநலமிக்க வேறொரு சமஸ்தானத்தின் சுவர்களையும் பிரேதங்களையும் கவ்வி விழுங்கி அவற்றின் மேல் பரவி வியாபித்திருந்த ஒன்றுதான் என்பது வரலாற்றை எழுதுபவர்களுக்குத் தெரியாது. மறைந்துபோன அந்தப் பழைய நகரத்தின் எச்சங்களாக இங்கே துயர நினைவுகளோடு வாழ்ந்துகொண்டிருக்கும் சாவற்ற கதைசொல்லிகளுக்குத் தெரியும். விருட்சங்களால் விழுங்கப்பட்ட அந்தப் பழைய நகரமுங்கூட கதைகளுக்கும் முன்பு அங்கே வளர்ந்து செழித்திருந்த வேறொரு கானகத்தை அழித்தே நிர்மாணிக்கப்பட்டதாக இருந்தது. காலம் இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தைத் தட்டையான பாதையில் நகர்த்துவதில் ஆர்வம் கொண்டதில்லை. அது நிகழ்வுகளைச் சுழற்றிவிட்டு வேடிக்கை பார்க்கிறது. கீழ்மேலாக . பிறகு மேல்கீழாக. மேலும் தோன்றியவற்றை அமிழ்த்தியும் மறைந்தவற்றைத் தெரியக்காட்டியும். இயற்கைக்கும் மனிதனுக்குமான துவந்தம் கதைகளின் உலகில் ஓய்வதே இல்லை. சொல்லப்போனால் இந்த ஓயாத துவந்தம்தான் கதைகளே. எந்த ஒன்று பிறிதொன்றை வீழ்த்தும் போதும் வீழ்த்தியதன் ஆகிருதி வரலாறாக எழுதப் படும் போது வீழ்த்தப்பட்டதன் மிச்சம் வரலாற்றினடியில் கதையாக மறைந்து நின்று முற்றான அழிவிலிருந்து தன்னைத் தப்புவித்துக்கொண்டு விடுகிறது. வரலாற்றுக்கும் கதைகளுக்குமான தொடர்ந்த போர்தானல்லவோ ஸ்தம்பித்துப்போய் நின்றுவிடாமல் கிழமைகளையும் பருவங்களையும் சுழலச் செய்துகொண்டிருக்கிறது. வரலாற்றினுள் கதை வரலாறாயும் கதையினுள் வரலாறு கதையாயும் தனித்துவம் அழிந்தவையாய் சதா உருண்டு கொண்டே இருக்கின்றன. இங்கே முன்பு செழித்திருந்த காடு விழுங்கிச் செரித்த பழைய நகரம் அழிவுற்றதைப் பற்றின கதைகள் பல புதிய நகரத்தை விட்டுத் தொலைவில் மௌனமாகக் காத்திருக்கும் மரங்களுக்குள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொண்டு வாழும் பூர்வ குடிகளிடையே வழங்கி வந்தன. வீண்பழிக்கு ஆளாகி அனாதையாக்கப்பட்ட அரண்மனைச் சேடிப் பெண்ணொருத்தியின் சாபம்தான் அந்நகரத்தை விழுங்கிய பெரும் வனத்தின் வேர்கள் என்றது ஒரு கதை. சுபிட்சத்தை அள்ளி வழங்கும் பெண் மகவு கையிலிருக்க ஆண் குழந்தைக்கு ஏங்கிக் கிடந்த ஒரு ராஜனின் மதியின்மைதான் அக்காட்டின் கிளைகள் என்றது ஒரு கதை ராஜனின் மகள் ஆடை நெகிழ உறங்குவதைப் பார்த்த இருபது வேடர்களின் மரண ஓலம்தான் அதன் விழுதுகள் என்றது மற்றொரு கதை. துர்சகுனங்களை ராஜ்ஜியத்திற்குள் கொண்டு வந்தவன் என்று பிற்காலத்தில் ஏசப்பட்ட என் முதிமுப்பாட்டனார்தான் ஆழ்ந்து அகண்ட அக்கானகத்தின் மூச்சும் இருளும் என்றது ஒரு கதை . சிதறிக் கிடந்த கதைகளை ஒன்று சேர்த்து அழிந்து போன பழைய நகரத்தைத் தங்கள் ஞாபகங்களில் மீண்டும் அதன் பூர்வகுடிகள் கட்டிக்கொள்கிறார்கள்.

பழைய நகரம் ராஜ குடும்பத்தின் இருபத்து மூன்று தலைமுறைகளால் பரிபாளிக்கப்பட்டு வந்தது. என் முதிர்முப்பாட்டனாரின் காலத்தில் அதன் இருபத்து மூன்றாவது தலைமுறை நடந்து கொண்டிருந்தது. இந்தத் தலைமுறைக்கு மற்ற இருபத்திரண்டு தலைமுறைகளிலும் இல்லாத ஒரு விசேஷம் வாய்த்திருந்தது. அதை அதிர்ஷ்டமென்று கணிப்பதா அல்லது துரதிர்ஷ்டமென்று கணிப்பதா என்பது பற்றிப் பிற்காலத்திலும் அரண்மனையின் சோதிட சாஸ்திர வல்லுனர்கள் யாராலும் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . அந்த ராஜதானி என் முதிர்முப்பாட்டனார் காலத்துத் தலைமுறைக்கு முன்பு வரை அந்த ஆண் வாரிசுகளாலேதான் ஆளப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த ஆண் வாரிசுகள் யாவருமே தத்தமக்கென்று பிரத்யேகமாக வாய்த்திருந்த சில தனிப்பட்ட திறமைகளாலேயும் சக்தியாலேயும் தங்கள் வம்சத்தை செழிக்கச் செய்து கொண்டிருந்தனர். ஒரு தலைமுறையிடம் காணப்படும் குறிப்பிட்ட ஏதாவதொரு விசேஷத்தன்மை இன்னொரு தலைமுறையிடம் காணப்படுவது அரிதாகத்தான் இருந்தது. ஆனால் அதை ஈடுகட்டும் விதத்தில் பின்னதற்கென்று ஏதாவது ஒரு தனித்தன்மையும் கடவுளின் ஆசிர்வாதமாகக் கிடைத்து விட்டது. உதாரணமாக ராஜ வம்சத்தின் பன்னிரெண்டாம் தலைமுறையில் காட்டு விலங்குகள் எதுவும் நாட்டுக்குள் மனிதர்கள் யாரையும் பயமுறுத்தாமலும் மனிதர்களால் பயமுறுத்தப்படாமலும் மிக மிக சகஜமாக நடமாடும் சுதந்திரம் பெற்றிருந்தன. அதேபோல் நாட்டுக்குள்ளிருந்தும் மக்களும் கால்நடைகளும் பயமின்றி எந்த வேளையிலும் காட்டுக்குள் சென்று வரவும் காலம் கனிந்திருந்ததென்று சொல்லுவார்கள். முயலும் புலியும் ஒரே சுனையில் அருகருகே நீரருந்துமென்பது பன்னிரெண்டாம் தலைமுறை ராஜ வம்சத்து நாட்களில் ஒரு வழக்குச் சொல். போர்க்காலங்களில் அரசுப் படைகளின் முன் ஒரு மாபெரும் அரண் போலப் பயிற்றுவிக்கப்படாத மூர்க்க விலங்குகள் நின்று முழங்கிக்கொண்டிருந்ததையும் அவை தன் நாட்டின் வீரர்களைக் காத்து நின்றதையும் அவர்களுக்காக எதிரி முன் சென்று போரிட்டு அவர்களின் வாளுக்கு இரையாகி மடிந்ததையும் சொல்லும் மெய்சிலிர்க்கும் கட்டங்கள் எங்கள் வம்சாவளிக் கதைகளில் நிறைய உண்டு (அவற்றில் புலிகளுக்குச் சிறப்பான இடமும் இருந்ததுண்டு). மாறாக அதையடுத்த பதின்மூன்றாவது ஆட்சிக்காலத்திலோ வீதிகளில் காட்டு மிருகங்களின் நடமாட்டம் சாத்தியப்படாத ஒன்றாக ஆகிவிட்டிருந்ததென்கிறார்கள். பதின்மூன்றாம் தலைமுறையின் போர்க்களம் காட்டு மிருகங்களுக்குப் பதிலாகக் காட்டு மிருகங்களையொத்த மூர்க்கமும் வலிமையும் நிறைந்த மனிதப் படைகளாலேயே நிரப்பப்பட்டு வந்தது. இன்னும் விசேஷமாக பதின்மூன்றாம் தலைமுறைக் காலத்தில் வனவேட்டை மிகப் பிரசித்தமான விளையாட்டாகவும் ஆகிவிட்டது. பழைய சம்ஸ்தானத்தின் கொடிமேல் பறந்துகொண்டிருக்கும் பெருமை படைத்த கரும்பட்டைகள் கலக்காத தங்கநிறப் புலிகள் அருகிப்போக ஆரம்பித்த காலம் பதின்மூன்றாம் தலைமுறை நடைபெற்றுக் கொண்டிருந்தபோதுதானென்று என் பழைய பாட்டனார்கள் சொல்லி அறியச் செய்தனரென்று என் பாட்டனார் சொல்லுவார். ராஜ குடும்பங்கள் தலைமுறை தலைமுறையாக வசித்து வந்த நகரத்தின் மையப் பகுதியிலிருந்த அரண்மனைகூட இந்தப் பதின்மூன்றாம் தலைமுறை ராஜனால் அதே இடத்தில் கம்பீரமாக வளர்ந்து ஓங்கியிருந்த முதிர்ந்த கடம்ப விருட்சமொன்றை அழித்து அதன் உச்சிக் கிளையில் பிறந்ததிலிருந்து வசித்துக் கொண்டிருந்த புலியை விரட்டிவிட்டு அந்த இடத்தின் மேல் கட்டப்பட்டதுதான் என்பார்கள். வனவேட்டையின் போது போர்க்கள வியூகத்தையும் போர்க்களத்தில் வன வேட்டையின் தந்திரத்தையும் பயன்படுத்தி வெல்லத் தெரிந்த மதியூகிகள் நிறைந்த காலமாக அது இருந்தது. இப்படி ஒரு தலைமுறையில் நாட்டில் நிலவிய காலநிலைகளையும் கூட இன்னொரு தலைமுறையின் ஆட்சியின்போது காண முடிவதில்லை என்று பொதுவாக நம்பப்பட்டு வந்தது (ஆனால் இருபத்து மூன்றாம் தலைமுறையில் மூன்றடுக்கு அரண்மனையில் மேல் மாடியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பான படுக்கையறையில் மிகச் சுவாதீனமாக பல தலைமுறைக் காலம் நடமாடி வந்த கிழட்டுப் புலி அந்த நம்பிக்கையை அசைத்துவிட்டுப் போனது.

இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜனின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்த என் முதிர்முப்பாட்டனாரின் குலத் தொழில் நாவிதம். பழைய நகரத்தில் நாவிதர்களைப் பெரும் பொருளும் செல்வாக்கும் வந்தடையக் காரணமாய் இருந்தவர் அவர். அவர் காலத்திற்குப் பிறகு நாவிதம் கடைநிலைத் தொழிலாக மதிக்கப்பட்டு இழிவடையவும் அவரே காரணமானார். பழைய நகரத்தின் இருபத்து மூன்றாம் தலைமுறை வரை நாவிதம் என்பது சதையை வெட்டிவிடாமல் முடியை மட்டும் கவனமாக மழித்தெடுக்கத் தெரிந்த ஒரு ஜதை நடுங்காத கைகளுக்கு மேல் சிறப்பான தகுதிகள் எதுவும் தேவைப்படாத ஒரு தொழில் என்றே மக்கள் நம்பிக் கொண்டிருந்தனர். பழைய நகரத்தில் நாவிதம் கடைநிலைத் தொழிலாக மதிக்கப்படவில்லை . ஆனாலும் முடிமழிப்பதைப் பிற தொழில்களைப் போலவே வெறும் பிழைப்புக்குரிய உபாயமாக மட்டுமே கருதிச் செய்து வந்தவர்களுக்கு அப்போது பிரமாதமான இடம் எதுவும் ராஜ்ஜியத்தில் கிடைத்துவிடவுமில்லை. அந்நகரத்தையே தன் பூர்விகமாகக் கொண்டிருந்த என் முதிர்முப்பாட்டனார் பிற மனிதர்களின் தூக்கத்தினுள் ஊடுருவி அவர்களுடைய கனவுகளைப் பார்க்கும் கலையைப் பயிலும் பொருட்டு தனது பதின்பருவம் துவங்கும் முன்பே நாட்டைவிட்டு வெளியேறி மேற்குப் பக்கம் மலைகளுக்கு அப்பாலிருக்கும் மாந்திரீகக் கலைகளுகுப் பேர்போன மலையாள தேசமெங்கும் சுற்றித் திரிந்துவிட்டுத் தன் காளைப்பருவத்தில் ஊரு திரும்பி முடி மழிப்பது என்பது வெறுமே மண்டையைச் சுரண்டு வழிப்பது மட்டுமல்ல என்று நாற்சந்தியில் நின்று உரக்கச் சொல்லி மக்களின் கவனத்தையும் ராஜனின் தனிப்பட்ட அபிமானத்தையும் ஈர்த்த நாள் முதலாகத்தான் நாவிதம் என்பது வைத்தியம் மாந்திரீகம் வர்மம் சம்போகம் முதலிய அதியற்புதமான பிற சாஸ்திரங்களோடு பிரிக்க முடியாத தொடர்பு கொண்டது எனும் உண்மையை உலகம் புரிந்து கொண்டது. மனித உடலின் சில குறிப்பிட்ட பகுதிகளில் அவரவர்கலுடைய உடலமைப்புக்குத் தக்க ரோமக் கற்றைகளைக் குறைத்தும் முழுவதும் மழித்தும் அவ்விடங்களில் வேர்வைக் கண்களைத் திறந்து விடுவதன் மூலமும் வேர்வைச் சுரப்பைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் தனிநபர்களுடைய மனோபாவங்களிலும் நடவடிக்கைகளிலும் கணிசமான மாற்றங்களைச் சாதிக்க முடியுமென்பதைத் தேர்ந்த நாவிதன் அறிவான் என்று என் முதிர்முப்பாட்டனார் பிரகடனப்படுத்தினார். மேலும் நாவிதனுக்குள் அங்க சாஸ்திரத்தையும் மனித உடலின் சீதோஷ்ணத்தையும் பற்றின ஞானம் இயல்பாகவே படிந்து கிடக்கிறது. ரோமம் என்பது உடலுக்கு வெளியே ஓடும் நரம்பு என்பதை அறிவு அறிந்துகொள்ளும் முன்பே சவரம் புரியும் கைகள் அறிந்துகொண்டிருக்கின்றன என்றும் சிரைத்துக் கொள்பவரின் உடல் தவிர்க்க வேண்டிய விஷமயிர்க் கற்றைகளை உடலோடு ஒட்டி வளர வேண்டிய நன்மயிர்ப் படுகையினுள்ளிருந்து தேடிப் பிடித்துக் களையும் நாவிதனின் பிரயத்தனமானது உபநிஷத்துகளிலிருந்து உலகசாரத்தைத் தேடும் பண்டிதனுக்கு எந்த விதத்திலும் குறைந்ததல்ல என்றும் என் முதிர் முப்பாட்டனார் மக்களை அறியச் செய்ததிலிருந்து முடியை மழித்துக்கொள்வதும் அதன் பொருட்டு நாவிதர்களின் வீட்டு வாசல்களில் நெடுநேரமாகத் தவங்கிடப்பதும் பழைய நகரத்தில் பிறரிடம் பெருமையோடு பகிர்ந்துகொள்ளும் விஷயங்களில் ஒன்றாகிப்போனது. காங்கை நோயால் அவதிப்பட்டுக்கொண்டிருந்தவர்கள் தங்களின் கழுத்தும் முதுகும் காற்றின் திசையில் நன்றாகத் திறந்திருக்கும்படி தலைமுடியைச் சிகையாகக் குறுக்கிக்கொண்டு சென்றார்கள். குளிர்க் காய்ச்சலாம் நடுங்கிக்கொண்டிருந்த நோயாளிகள் அதைக் கூந்தலாக நீட்டி மேனியை மூடிக்கொண்டார்கள். ஞானத்தைக் கவர்ந்து செல்லும் மாலை வேளைகளின் அரக்கர்களிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள விரும்பிய கல்விமான்கள் தலைநரம்புகளனைத்தையும் ரோம இழைகளால் பின்புறமாகக் கட்டி இழுத்து நுனியில் பதினாறு பிரிக்குடுமியாக முடிச்சிட்டுத் தரும்படி நாவிதர்களை வேண்டி நின்றார்கள். சம்போக சுகம் அனுபவிக்க முடியாமல் அல்லலுற்ற ஆண்கள் தலைமுடியைத் தளர்த்தி ஈரம் சொட்டிக்கொண்டே இருக்கும் சடையாக அதை மாற்றிக்கொண்டு திருப்தியுடன் திரும்பினார்கள். இல்லற சந்நியாசிகளாக இருக்கப் பிரியப்பட்டவர்களுக்கோவெனில் இதற்கு நேர்மாறாக நுனியில் பட்டுத்துணியால் மறைத்துக் கட்டப்பட்டிருக்குமாறு நாவிதர்கள் பின்னல்களை உருவாக்கி அனுப்பி வைத்தார்கள். இல்லறத்தைத் துறந்து காட்டை நோக்கிச் சென்ற துறவிகள் கூடத் தங்களை மழித்துக்கொள்ள மறுத்து முகமெங்கும் ரோமக் கற்றைகளைக் காடாக வளரும்படி விட்டு வைத்ததன் மூலம் தங்களையுமறியாமலேயே வதனாலங்கார சூசிகையின் எட்டாம் அங்கத்தை ஏற்றுக்கொண்டவர்களானார்கள். கன்னங்களிலும் மேலுதட்டின் மேலும் முகவாயிலும் கவனமாகச் செதுக்கப்பட்ட மயிர்ப்படுகைகள் பழைய நகரத்தின் ஆண்கள் அத்தனை பேரையும் அழகானவர்களாயும் ஆரோக்கியமானவர்களாயும் ஆக்கி வைத்திருந்ததால் சுயம்வரங்கள் பெருங்குழப்பத்தில் முடிந்தன. வாயிலிருந்து துர்மணம் வீசும் ஆண்களையோ நீரொழுகும் மூக்கை உடைய ஆண்களையோ அவச்சொற்களை அள்ளி வீசும் ஆண் குரல்களையோ அங்கே பிற தேசத்தவர்கள் எவராலும் பார்க்க முடியவில்லை என்று எங்களின் வம்சாவளிக் கதைகள் சொல்கின்றன. மட்டுமல்ல. பெண்கள் நாவிதர்களை நாடும் வழக்கமோ அல்லது பெண் நாவிதர்களோ புழக்கத்தில் இல்லாத பழைய நகரத்தில் வெளியே தெரியும் அங்கங்களால் புருஷர்களின் லட்சணமும் மறைத்து வைக்கப்படும் அங்கங்களால் ஸ்திரீகளின் சௌந்தர்யமும் பிறர் கண்படத் துலங்கும் எனும் சாமுத்ரிகா லட்சண விதிக்கேற்ப ஆண்களின் முகத்தில் வளரும் ரோமக் கற்றைகளுக்கு இணையான சக்தியையும் வனப்பையும் கூடுதலாக நோய் தீர்க்கும் மகத்துவத்தையும் பெண்களின் புஜங்களினடியிலும் பத்மத்திலும், அரும்பும் ரோம இழைகள் கொண்டிருப்பதால் அவர்கள் அதை அலட்சியப் படுத்தலாகாது என்னும் என் முதிர்முப்பாட்டனாரின் போதனை இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜதானியின் பெண்மக்களின் அறிவில் பிரகாசித்துக் கொண்டிருந்தது. புருஷனின் கண்களுக்கும் பரபுருஷர்களின் ஊகத்துக்கும் மட்டுமே வசப்படும் பெண்களின் பவித்திரமான மறைவிடங்களைச் செதுக்கி அலங்கரித்துப் பராமரிக்கும் பொறுப்பு பெண்ணுக்கு மட்டுமல்லாமல் ஆணுக்கும் உண்டு என்று என் முதிர்முப்பாட்டனார் அறிவித்தபோது அது ஆண்களிடையே பகிரங்கமான பெரும் எதிர்ப்பையும் பெண்களிடமிருந்து ரகசியமான ஆசிர்வாதத்தையும் பெற்றுக்கொண்டது. இவ்விதமான பிரச்சாரங்களை நிறுத்திக்கொள்ளச் சொல்லி அவரை அரசவை நிர்பந்தித்தபோது உபாத்தியாயர்களும் புரோகிதர்களுங்கூட ரகசியமான பல தருணங்களில் தத்தமது இல்லத்தரசிகளின் நாவிதர்களாகச் செயல்படுவதுண்டு என்கிற உண்மையை என் முதிர்முப்பாட்டனார் தைரியமாகப் பொது அரங்கில் எடுத்துச் சொல்லி கல்விக்கூடங்கள் மற்றும் கோவில்களின் பகையையும் சம்பாதித்துக்கொண்டார். (பின்னாளில் இவ்வரங்குகளின் பாத்தியக்காரர்கள்தான் என் முதிர்முப்பாட்டனாரின் புகழை அபவாதம் எனும் கொடிய நெருப்பு கவ்வி விழுங்கத் துவங்கிய காலத்தில் அது அணைந்து விடாமல் அவரை முழுக்க எரித்துப் பொசுக்கி விடும் வண்ணம் நெய் வார்த்து உதவினார்கள்). மறுபுறம் இந்தவிதமான அலங்காரச் சூகங்களையெல்லாம் பறைப் பெண்களும் அறியும்படி பகிரங்கமாக என் முதிர்முப்பாட்டனார் சொல்லிக்கொண்டிருப்பதைக் கண்டும் அதன் விளைவாகத் தங்கள் கணவன்மாரின் அலைபாயும் மனங்களை நினைத்தும் உயர்குடிப் பெண்கள் வேறு திகிலுற்றுப் போயிருந்தார்கள். அவர்கள் தங்கள் நாபியிலிருந்து பத்மம் வரை படர்ந்து பொலிந்திருக்கும் அடர்ந்த ரோமப் படுகையை அஞ்சனக்கோட்டைப் போல மெல்லிதானதாகத் திருத்தி வரைந்து கொள்ளட்டும் என்று கூறி அவர்கள் இழந்து போயிருந்த நிம்மதியை அவர்களுக்கே திரும்ப அளித்தார் என் முதிர்முப்பாட்டனார். மேலும் மனம் விரும்பாத ஆணுக்குப் பலவந்தமாக மணமுடித்து வைக்கப்பட்ட பெண்கள் யோனி முடியை இழைக்கப்பட்ட மரத்தினின்று சிதறும் கீற்றுகளைப் போல்ச் சுருள் வடிவினதாக செதுக்கிக்கொள்ளட்டும். விரும்பும் ஆணையே துணைவனாகப் பெற விரும்பும் யுவதிகள் நிதம்பத்தின் மேற்குழலை மீன் வடிவத்தில் வரைந்து கொள்ளட்டும். குழந்தைப் பேறு அடையாதிருக்கும் மங்கையர் புஜத்தினடியிலும் தொடைகளின் நடுவிலும் மழைக்குப் பின் புதிதாக வளர்ந்திருக்கும் புற்படுகையைப் போல மிருதுவாகவும் எப்போதும் ஈரமாகவும் இருக்கும்படி மயிர்க்கற்றையை மிகச் சிறிதாகக் கத்தரித்துக்கொள்ளட்டும் பரபுருஷனைக் கூட விரும்பும் பெண்கள் கழுத்திற்குக் கீழ் எங்குமே ரோமமில்லாதபடி தன் உடலைக் கூழாங்கல்லைப் போல மருவற்றதாக மழித்துக்கொள்ளட்டும். ஒரு சிறுமியின் தலைமுடி அப்பருவத்தின் இயல்பாகிய மணல் தன்மையிலிருந்து வெள்ளிக் கம்பிகளின் தன்மைக்கு மாறுவதைத் தொட்டுணர்ந்து அவள் ருதுவெய்தப் போகும் பருவம் நெருங்கி விட்டதைச் சொல்லும் நாவிதனை அறிந்த தாய்மார்கள் தங்கள் பெண்மக்கள் விரும்பத்தகாத சூழலில் ருதுரத்தம் வெளிப்பட்டு அவமானப்படப் போவதைத் தவிர்த்துக்கொள்ளட்டும்.

இயற்கைக்கும் அதன் தந்திரங்களுக்கும் பால் பேதமில்லை என்று என் முதிர்முப்பாட்டனார் சொல்லி வந்த அந்தக் காலகட்டத்தில் பழைய நகரமெங்கிலும் பெண்கள் தங்கள் கணவர்களையும் காதலர்களையும் தங்களுடைய பிரத்யேக நாவிதர்களாக்கி நாடு பூராவிலும் பரவச் செய்திருந்தார்கள். அகத்தினழகைப் புகழ்ந்து மழிப்பதையும் வளர்ப்பதையும் பழித்துப் பேசிய சில பழைய சாஸ்திரங்கள் நாவிதர்களுக்கு எதிரானவை என்று என் முதிர்முப்பாட்டனார் அறிவித்ததன் பேரில் அவை யாராலும் படிக்கப் படக்கூடாதென்று இருபத்து மூன்றாம் தலைமுறை அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டன. அவ்விதமான ஓலைச் சுவடிகள் சில இடங்களில் பெண்களால் உலை நீருக்காகத் தீவைத்துக் கொளுத்தப்பட்டன என்றும் சொல்வதுண்டு. இப்படி என் முதிர்முப்பாட்டனாரின் வரவால் நாவிதர்கள் பல புதிய சலுகைகளையும் பெருமைகளையும் முக்கியத்துவத்தையும் நிறைய செல்வத்தையும் ஈட்டிக்கொண்டிருந்தபோது என் முதிர்முப்பாட்டனார் மயிர்க் கண்களின் வழியே சுரக்கும் வியர்வை நீரைக் கட்டுப்படுத்துவதன் மூலம் அந்நீரின் மணத்தால் எழுப்பப்படும் கனவுகளை மாற்றியமைக்க முடியுமா என்பது குறித்த முடிவற்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். ஏற்கனவே பிறர் உறக்கத்துக்குள் ஊடுருவும் கலையைக் கற்றுக்கொள்ள அவர் தன் காளைப்பருவம் முழுவதையும் செலவழித்திருந்தாரென்று கூறுவார்கள். அப்பருவம் பூராவிலும் அவர் ஒரு கேரள நம்பூதிரியின் வாத்ஸல்யத்தைப் பெற்ற சீடராக இருந்தார். பிறப்பால் நாவிதரான என் முதிர்முப்பாட்டனார் தன் குலத்திற்கு மறுக்கப்பட்டிருந்த சாஸ்திரங்களைக் கற்றுக்கொடுக்கவென்று வர்ணபேதங்களைத் துறந்த ஒரு ஆசானைத் தேடித் தன் குரல் உடைந்த காலந்தொட்டுச் சில வருடங்கள் வரை அவமானங்களுக்கும் தவறுகளுக்கும் பயங்களுக்குமிடையே அலைந்து திரிந்து கடைசியில் அபேத ஞானத்தைப் புரிந்து கொள்ளாத மனிதப் பிறவிகளால் பைத்தியக்காரனென்று கேலி செய்யப்பட்டு நகரத்தை விட்டு வெளியேறி மரங்களுக்குள் தன்னை மறைத்தபடி வாழ்ந்து கொண்டிருந்த நம்பூதிரி ஒருவரைக் கண்டுபிடித்து அவரிடம் ஏற்கனவே சீடர்களாயிருந்த இரண்டு பிராமண யுவன்களோடு சேர்ந்து மூன்றாவது சீடரானார். இந்த இருவரில் முதலாமவர் ஒளியையும் மணத்தையும் கொண்டு பார்க்க முடியாத வஸ்துக்களின் நிறையையும் எடையையும் கணித்துச் சொல்லும் ஆற்றல் வாய்ந்தவர். இரண்டாமவர் நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு பொருளின் வேகத்தையும் திசையையும் கொண்டு அது முன்பு என்னவாக இருந்ததென்பதையும் பின்பு என்னவாக மாறுவதற்காக அப்படி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பதையும் அவதானித்து விட வல்லவர். எனினும் கூட பிற மனிதர்களின் கனவுகளைப் பார்க்கும் கலை காட்டை விட்டு வெளியேற முடியாமல் நான்கு பேர்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக தன் அதிசயங்களை அறியக் காட்டிக்கொண்டிருக்குமாறு விதிக்கப்பட்டு விட்ட அவலத்தை எண்ணிக் கலங்கிக்கொண்டிருந்த என் முதிர்முப்பாட்டனார் ஞானி எனப் புகழும் அந்த நம்பூதிரி கடைசியில் உயர்குலத்தில் பிறந்த தன் பெண்ணைப் பிறப்பால் நாவிதரான என் முதிர்முப்பாட்டனாருக்கே திருமணம் செய்து கொடுத்து விட்டுத் துயரச் சகதிக்குள் தன்னை உயிரோடு புதைத்துக்கொண்டு மாண்டு போக முடிவு செய்த தருணத்தில் பிறர் கனவுகளைப் பார்க்கும் கலையை அறிந்தவராக உலகிலேயே என் முதிர்முப்பாட்டனார் ஒருவர் மட்டுமே எஞ்சியிருந்தார். அதோடு கூட கனவுகளோடு நெருங்கிய சம்பந்தமுள்ளவையென்று கூறப்பட்ட வர்மக் கலையையும் வடமொழியையும் அவர் கசடறக் கற்றுத் தேர்ந்தார். மற்ற இருவரில் ஒருவர் தன் மற்ற இரு சகாக்களோடும் அதுவரையில் கற்ற வித்தையைப் பக்குவம் அடையும் முன்பே பரீட்சை செய்து பார்க்க எண்ணி குருவிற்குத் தெரியாமல் காட்டை விட்டு வெளியேறி நகரத்திற்குச் சென்று விளையாட்டாக ஒரு நோயாளியின் கனவிற்குள் பிரவேசிக்க முனைந்தபோது நோய்க்கூறுகளை உண்டாக்கும் கெட்ட கனவுகளின் துர்நாற்றத்திலும் சுழலிழுப்பினுள்ளும் சிக்கி அதன் உக்கிரத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் புத்தி பேதலித்துப் போய் அறையைவிட்டு வெளியே வந்ததும் அந்த அறை இருந்த நான்கடுக்கு மாளிகையின் நான்காவது அடுக்கிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொண்டுவிட்டார். இன்னொரு சீடரும் அதேபோன்ற பக்குவமற்ற பலவீனமான மனோ திடத்தால் அதே விதமான பாதிப்புக்கு உள்ளாகி நிலைகுலைந்து சாமியாராக புண்ணிய பூமியாம் காசிக்கு ஓடிப் போய்விட்டார். அங்கே கனவுகள் அண்ட முடியாத காசியின் அடர்ந்த வனப் பகுதிகளுக்குள் என்றுமே வெளிவர முடியாதபடி அவர் தன்னை சிறைப்படுத்திக் கொண்டுவிட்டதாக அவரைப் பற்றின செய்திகள் காற்றில் உலவின. ஆனால் என் முதிர்முப்பாட்டனாரோ வருடங்களுக்குப் பிறகு தன் சகாவை வேறொர் அசம்பாவிதமான இடத்தில் தன் மதியின்மையால் வலியப் போய்ச் சந்தித்து அதன் மூலமாகத் தன் வீழ்ச்சியையும் தேடிக்கொண்டார்.

எப்படியிருந்தாலும் அப்போது அதாவது என் முதிர்முப்பாட்டனாரின் காலத்தில் பிறர் உறக்கத்தினுள் புகுந்து அவர்களின் கனவுகளைக் காணும் கலையில் தேர்ச்சி பெற்ற ஒரே பண்டிதர் அவரே என்பதாகவே உலகம் அறிந்திருந்தது. அதனால் காளைப்பருவத்தின் நடுப்பகுதியில் அவர் பிறந்த மண்ணாகிய பழைய நகரத்திற்குத் தன் மனைவியுடன் திரும்ப வந்து சேர்ந்த போது அப்படி வருவதற்கு முன்பே மறைந்திருந்தாலும் விளக்கின் இருப்பு அதன் பிரகாசத்தால் அறியப்படுவதைப் போல அவருடைய கீர்த்தி சொந்த தேசத்தவரால் ஏற்கனவே உணரப்பட்டுவிட்டது. அவருடைய ஆசானைப் போலவே அவரையும் பைத்தியக்காரனென்று பாதி நகரம் மறைவாகப் பேசிக்கொண்டிருந்தபோதிலும் மேலும் அவருடைய பிரச்சாரங்களும் செயல்களும் இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜனுக்கும் கூட சமஸ்தானத்தின் தலைவனென்கிற முறையில் தர்மசங்கடத்தைக் கொடுத்திருந்த போதிலும் பால் பேதத்தையும் திணைபேதத்தையும் பணபேதத்தையும் வர்ணபேதத்தையும் ஞான பேதத்தையும் மொழி பேதத்தையும் துறந்துவிட்ட அவருடைய ஒளி அரசவையில் பிற கல்விமான்களுக்கிணையாக அவரை அமர்த்திப் பெருமைப்படுத்தும்படி அவனை நிர்பந்தித்திருந்தது. மட்டுமல்லாமல் அரண்மனை வளாகத்திற்குள்ளேயே என் முதிர்முப்பாட்டனாருக்கென்று ஒரு தனிக் குடியிருப்பும் ஒதுக்கப்பட்டிருந்தது. அரண்மனைக்கு வெளியே சென்று சவரம் செய்து பொருளீட்ட வேண்டிய நிலையில் ராஜன் அவரை விட்டு வைக்கவில்லை. அவருக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த சிறு அரண்மனை போன்ற அந்த இல்லத்தில் அவர் தன் மலையாள தேசத்து மனைவியுடனும் அவள் மூலமாக உண்டான வாரிசுகளுடனும் பின்னாளில் குருவின் சாபத்தால் பழிக்கு ஆளாகி அங்கிருந்து விரட்டியடிக்கப்படும் நாள் வரை சௌக்கியமாகத் தங்கியிருந்தார். அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாவித நிமித்தம் மட்டுமே தன் அறையை விட்டு வெளியே வருவதல்லாமல் பிற சமயங்களில் வீட்டினுள் தன் அறையில் அமர்ந்து தான் கற்ற சாஸ்திரங்களையெல்லாம் திரும்ப திரும்பப் படித்தும் பயிற்சி செய்தும் புதிய வழிமுறைகளை ஆராய்ச்சி செய்துகொண்டே இருந்தார். அரசவையில் அவருக்கென்று இடப்பட்டிருந்த ஆசனம் பெரும்பாலான சமயங்களில் அவரால் நிரப்பப்படாமலே இருந்ததென்பார்கள். பொதுவாக இம்மாதிரி அபூர்வமான மனிதர்களே எப்போதும்

ஒரு தனியறைக்குள் தங்களையும் புதைத்துக்கொண்டுவிடுவது எங்கும் நடக்கக் கூடியதுதானே. அவர்கள் அடிக்கடி தங்களையும் தங்கள் கல்வியையும் வெளிக்காட்டிக்கொண்டு அவற்றைச் சாதாரணக் காட்சியாக்கிவிட விரும்புவதில்லை. அவர்களைப் போலவே என் முதிர்முப்பாட்டனாரும் பல ஆச்சர்யமான வித்தைகளில் தேர்ந்தவரென்ற மதிப்பை நிரம்பப் பெற்றிருந்தாரேயொழிய அவற்றைப் பிறர் முன் தேவையற்ற சந்தர்ப்பங்களில் கேளிக்கைக் கூத்தாக நிகழ்த்திக் காட்டிப் புகழ் சம்பாதிக்க முனைந்ததேயில்லை. அவருக்குள் கனன்று கொண்டிருத அவருடைய வித்தைகளின் மங்காத தழல் அவர் முகத்தில் எதிரொளித்த ஜாஜ் வல்யமே அவருக்குப் போதுமான கீர்த்தியைப் பெற்றுத் தர வல்லதாய் இருந்தது. எதையும் எங்கேயும் நிகழ்த்திக் காட்டி நிரூபிக்க முயலாமல் அறைக்குள்ளேயே தன்னைப் பூட்டிக்கொண்டு காலங்கழிக்கும் ஒரு நாவிதனுக்கு அரசவையில் எப்படி இடம் இருக்க முடியுமென பிற ஞானவான்கள் கேள்வி எழுப்பியபோது ராஜன் சொன்னான். ஒரு சிறந்த வாள் வீரனுக்கு சமாதானம் கசப்பான காலமாயிருக்க முடியாது. ஒரு நல்ல மருத்துவனுக்கு ஆரோக்கியமான மக்கள் எதிரிகளாயிருக்க முடியாது. எந்தச் சிறந்த கல்விமானும் தன் வித்தையைப் பிரயோகித்துக் குணப்படுத்தும் அளவுக்கு துக்ககரமான ஸ்திதியில் சகமனிதன் வீழ்ந்துவிடக் கூடாதென்றே விரும்புவான். அதே சமயத்தில் அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையை எப்போதும் எதிர்பார்த்துத் தன் வித்தை துருப்பிடித்து விடாதபடி அதைத் தீட்டிக் கொண்டேயுமிருப்பான். அப்பையா (அதுதான் என் முதிர் முப்பாட்டனாரின் பெயர்) இந்த அரசவையில் எப்போதும் இருந்துகொண்டேயிருக்க வேண்டுமென்பதல்ல என் ஆசை மாறாக அவர் தேவைப்படும் அபூர்வமான தருணமொன்றில் அவர் நமக்குக் கிடைக்காத அரிய பொருளாக இந்நகரத்திலிருந்து தொலைந்து போய்விடக் கூடாது. அவர் நம் அரசவையில் இருப்பதால் பெருமை அவருக்கல்ல நமக்குத்தான் என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். உண்மையில் வித்தைகளை அவர் வெளிக்காட்ட முடியாத வண்ணம் ஆரோக்கியமான ராஜ்ஜியமொன்றை நான் பரிபாலித்துக்கொண்டிருக்கிறேனென்பதுதான் அவரோடு கூட என்னையும் பெருமை கொள்ளச் செய்து கொண்டிருக்கிறது.

தூங்கும் பிற மனிதர்களுடைய கனவுகளைக் காணும் தன்னுடைய அபூர்வமான வித்தையை என் முதிர் முப்பாட்டனார் தன் வாழ்நாளில் நான்கே நான்கு சந்தர்ப்பங்களில் தான் பிரயோகித்தார். அந்த நான்கு சந்தர்ப்பங்களுமே அவர் வாழ்க்கையில் நான்கு திருப்புமுனைகளுக்குக் காரணமாய் அமைந்துவிட்டன என்று எங்கள் வம்சாவளிக் கதை கூறுகிறது. முதல் தடவை தன்னுடன் அந்தக் கலையைக் கற்றுக்கொண்டிருந்த மற்ற இரு சீடர்களுடன் சேர்ந்து போதிய பக்குவம் பெறுவதற்கு முன்பே வித்தையை ஒரு நோயாளியிடம் பரீட்சை செய்து பார்க்க முயன்ற அந்த துர்பாக்கியமான சம்பவம். நல்லவேளையாக என் முதிர்முப்பாட்டனார் நோயாளியிடம் தன் பிரயோகத்தைத் துவக்கிய போது காலம் பின்னிரவு சரிந்துகொண்டிருக்கும் நேரமாகக் கடந்துவிட்டதால் தூங்கிக்கொண்டிருந்த நோயாளியின் கனவுகள் தங்கள் உக்கிரத்தை இழந்து அவன் உறக்கத்தோடு உறக்கமாக அமிழ்ந்து வடிந்துகொண்டிருந்தன. மற்ற இருவரையும் போலவே தன் இளமைத் திமிராலும் கல்விச் செருக்காலும் மிகப் பெரும் ஆபத்தைச் சந்திக்கவிருந்த என் முதிர்முப்பாட்டனார் அன்று தெய்வாதீனமாக அதிலிருந்து தப்பினார். விஷயம் தெரிய வந்தபோது நம்பூதிரி அவர் மேல் தனிப்பட்ட வாத்ஸலம் கொண்டிருந்ததால் மற்ற இருவரையும் எண்ணி அளவு கடந்த துயரத்திலும் என் முதிர்முப்பாட்டனார் தப்பித்ததை எண்ணி மட்டற்ற மகிழ்ச்சியிலும் அலைக்கழிக்கப்பட்டுவிட்டார். பிறர் அனுமதியின்றி அவர்களுடைய தூக்கத்துக்குள் நுழைந்து கனவுகளைப் பார்ப்பது கன்னக்கோல் வைத்துத் திருடுவதற்குச் சமமான குற்றம் என்று அவர் என் முதிர்முப்பாட்டனாரை எச்சரித்தார். என் முதிர்முப்பாட்டனாரின் மீதிருந்த அளவு கடந்த அன்பால் அவரை அம்முறை மன்னித்துத் தன் சீடராக தொடந்து நீடிக்கும் வாய்ப்பையும் அளித்தாரென்று கூறுவர். ஆனால் பல வருடங்கள் கழித்து வேகத்தின் சுழல் வெளியாகிய காளைப் பருவம் முடிந்து விவேகத்தின் நந்தவனமாகிய நடுப்பிராயத்திற்குள் பிரவேசித்த காலத்தில் மதியைக் கெடுத்த ஆசையால் உந்தப்பட்டு குருவின் எச்சரிக்கையை மறந்து தன் வித்தையை என் முதிர்முப்பாட்டனார் அவர் மனைவியும் குருவின் மகளுமான என் முதிர்முப்பாட்டியின் தூக்கத்தினுள் அவரறியாமல் பிரயோகித்துப் பார்த்த போது குருவின் எச்சரிக்கை சாபமாக மாறி அவரிடமிருந்து கலையை அவர் முற்றாக மறந்து போகும்படி பறித்துக் கொண்டுவிட்டது. அந்த நான்காவது பிரயோகமே என் முதிர்முப்பாட்டனார் தன் இளமை முழுவதும் கற்றுத் தேர்ந்த அபூர்வமான வித்தையின் கடைசி பிரயோகமாகவும் அமைய விதிக்கப்பட்டுவிட்டது. தன்னைத் தீராத பழிக்கும் அவமானத்திற்கும் ஆளாக்கவிருக்கும் நான்காவது பிரயோகத்தை நோக்கி தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் விதி தன்னை உந்திவிடப்போகிறது என்பதை மூன்றாவது பிரயோகத்தின் போதே என் முதிர்முப்பாட்டனார் அறிந்து கொண்டு விட்டதோடல்லாமல் அதைப் பலபேர் அறிய பகிரங்கமாகச் சொல்லியும் வைத்தார். வேடிக்கை என்னவென்றால் பல வருடங்களுக்கு முன்பே அழிவுகளுக்கு வித்திட்டு விட்ட என் முதிர்முப்பாட்டனாரின் அந்த துரதிர்ஷ்டம் பிடித்த மூன்றாவது பிரயோகம் அவர் அதைப் பிரயோகித்த காலத்தில் அழிவின் சமிக்ஞை சற்றுமின்றி அவருக்கு உள்ளூரில் மட்டுமல்லாது கடல் கடந்த நாடுகளிலும் பெரும் புகழை ஈட்டிக் கொடுப்பதாகத்தான் வந்தமைந்தது. காரணம் அந்தச் சந்தர்ப்பத்தில் என் முதிர் முப்பாட்டனார் கற்றுக்கொண்டிருந்த வித்தையின் மகத்துவம் மட்டுமல்லாது அவருடைய புத்தி சாதுர்யமும் ஊகிக்கும் திறமையும் கூட பளிரென வெளிப்பட்டன. கடல் கடந்த நாடுகளிலிருந்தும் அவருக்கு சீடர்களாகும் விருப்பத்துடன் ஆயிரக்கணக்கானவர்கள் அவர் காலடியில் வந்து விழும்படியாக அந்தச் சம்பவம் அமைந்துவிட்டது. ஆனால் என் முதிர்முப்பாட்டனார் அவர்கள் யாரையும் தன் சீடர்களாக வரித்துக்கொள்ள முன்வரவில்லை. அந்தக் கலையில் தான் இன்னும் பூரணத்துவம் பெறவில்லை என்று அவர் நினைத்ததே அதற்குக் காரணம். பிறருடைய கனவுகளை வெறும் பார்வையாளனாக எட்டி நின்று பார்த்துக் கொண்டிருக்கும் அளவோடு அவர் அப்போது திருப்தி அடையாதவராக இருந்தார். அவர்களின் தூக்கத்துள் மட்டுமல்லாமல் கனவுகளுக்குள்ளும் ஊடுருவி அந்த உலகின் வினோதங்களைத் தன் விருப்பத்துக்கேற்ப கட்டுப்படுத்தும் அளவுக்குத் தன் வித்தையில் முன்னேற அவர் விரும்பினார். அந்த எல்லையை அவருடைய ஆசானான கேரள நம்பூதிரியும் தொட்டிருக்கவில்லை. எனவே அதை அடைந்த பிறகே அந்தக் கலையைப் பிறருக்கு உபதேசிக்கும் தகுதி தனக்குக் கைகூடுமென்று அவர் மனதில் வரிந்துகொண்டிருந்தார். அதனால்தான் அவர் ராஜனுக்கும் முக்கியஸ்தர்களுக்கும் மழிக்கச் செல்லும் நேரங்களைத் தவிர பிற சமயங்களில் தன் வாரிசுகளைத் தன் மனைவியின் பொறுப்பில் விட்டுவிட்டு அறைக்கு வெளியே எல்லா வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டு அறையினுள்ளேயே எந்நேரமும் தன்னை அடைத்துக்கொண்டவராகவும் அதைப் பற்றி மேலும் மேலும் ஆராய்ச்சிகள் செய்துகொண்டே இருப்பவராகவும் இருந்தார். மூன்றாவது பிரயோகத்திற்குப் பிறகு அவருடைய புற இருப்பில் மாற்றம் ஏற்பட்டதேயொழிய வித்தை மேல் அவருக்கிருந்த அவளற்ற வேட்கையை அபரிமிதமான செல்வமும் புகழும் குறைக்கவோ மாற்றவோ முடியவே இல்லை. ஜெகப் பிரசித்தமான இந்த மூன்றாவது பிரயோகத்தை சாத்தியமாக்கியதென்ற பெருமையை ராஜன் மகளின் வினோதமான நோய் பெற்றுக் கொண்டது. அந்த நோயோ இருபத்து மூன்றாம் தலைமுறை ராஜனின் மனக்குறையிலிருந்து துவங்கியது.

பழைய நகரத்தில் அரச பாரம்பரியத்தின் அனைத்து தலைமுறைகளும் அதுவரை அதன் ஆண்வாரிசுகளால் தழைத்து வந்தன என்று முன்பு சொன்னேனல்லவா. என் முதிர்முப்பாட்டனாருக்கு அரண்மனையில் இடங்கொடுத்த இருபத்து மூன்றாவது தலைமுறையில் முதன் முதலாக சமஸ்தானத்தைக் கட்டியாளவென்று ஒரு பெண் வாரிசு வந்து பிறந்தது. பிற்காலத்தில் கொஞ்சக் காலம் ராஜ குடும்பத்தின் பெயரை அதன் அத்தனை ஆண் வாரிசுகளைக் காட்டிலும் அதிகத் திறமையோடும் பரிவோடும் கட்டிக் காத்தவளென்ற பெருமை அந்தப் பெண் வாரிசுக்குக் கிடைத்ததென்பது பொய்யில்லை. எனினும் பெண் வாரிசின் மூலமாக அரச குடும்பத்தின் கோத்திரக் கண்ணி அறுந்துவிடுமென்று ராஜன்தான் துவக்கத்தில் மிகவும் பயந்து போயிருந்தான். பின்னால் அது உண்மையாகிவிட்டதென்றும் வைத்துக் கொள்ளுங்கள். ராஜதானியில் வருடங்களுக்குப் பிறகு தோன்றிய குழப்பமும் அபசகுனங்களும் பஞ்சமும் அதன் எல்லைக்குள் கலிகாலத்தின் அடைசலும் பெண் வாரிசு மூலமாக வளைசலடைந்த கோத்திரம் சரியான சடங்குகள் மூலம் நேர் செய்யப்படாததால் விளைந்தவை என்று பிற்காலத்தில் கணித்தவர்கள் உண்டு. அது நம் கதைக்கும் கவனத்துக்கும் வெளியிலிருப்பவை. ஆனால் அந்த பயத்தாலேயே ராஜன் தனக்கு ஒரே ஒரு ஆண்வாரிசு வேண்டி தன் இளமைக் காலத்தின் வீரியம் குறைந்ததாகச் சலிப்புறும் மட்டும் புத்திர காமேஷ்டி யாகங்கள் செய்து வந்தான். அவனுடைய சோகம் அந்த நாட்களில் படிப்படியாக படுக்கையறையிலிருந்து வெளியே கசிந்து அரண்மனைத் தாழ்வாரங்களை எட்டிக் கடந்து வாசற்படிகளில் வழிந்து இறங்கி நாடு முழுவதும் நிரம்பி மூச்சுவிட முடியாதபடி ததும்பிக் கிடந்தது. மக்களும் மன்னனுக்காக இரங்கி அவருக்கு ஒரு ஆண் வாரிசு கிடைக்க வேண்டி தனித்தனியே அவ்வித யாகங்களைச் செய்ய முற்பட்டதில் என் முதிர்முப்பாட்டனார் அங்கே வாழ்ந்த காலத்தில் பழைய நகரம் முழுக்க யாகங்களால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆண் மகவுகளால் நிரம்பி வழிந்ததென்று என் கொள்ளுப் பாட்டனார் மூலமாக எங்களுக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சம்ஸ்தானத்தின் இருபத்து மூன்றாம் தலைமுறைக்கு ஒரு பெண் வாரிசு மட்டுமே எங்களுக்குச் சொல்லப்படிருக்கிறது. ஆனால் சமஸ்தானத்தின் இருபத்து மூன்றாம் தலைமுறைக்க்கு ஒரு பெண் வாரிசு மட்டுமே கடவுளால் அனுக்கிரகிக்கப்படிருந்ததால் ராஜனும் மக்களும் செய்த யாகங்களால் ராஜ பரம்பரைக்கு மட்டும் பலன் எதுவும் கிட்டவில்லை. இதை முன்பே எதிர்பார்த்துதானோ என்னவோ ராஜனும் ஒருபக்கம் யாகங்களிலும் தான தர்மங்களிலும் காலத்தையும் பொருளையும் விரயம் செய்துகொண்டிருந்தபோதிலும் இன்னொரு பக்கம் தன் பெண்ணை இருபத்தியிரண்டு ஆண்களுக்குச் சமமான வலிமையும் குணவிசேஷமும் கல்வியறிவும் கொண்டவளாக வளர்ப்பதற்கு எல்லா ஏற்பாடுகளையும் செய்தும் வந்தான். இந்த நம்பிக்கையின்மையே அவனுடைய யாக முயற்சிகளின் வியர்த்தத்துக்கு ஒரு காரணம் என்றும் சொல்லுபவர்கள் இருந்தார்கள். ராஜனின் மனக்குறையை ஈடு செய்யும் வண்ணம் ஓரோர் சமயம் அப்படிக் குறைப்பட்டுக் கொண்டதே மதியீனம் என்று அவர் உவகையோடு சலித்துக் கொள்ளும் வகையில் அந்தப் பெண் ராஜன் பயிற்றுவிக்கச் செய்த சாஸ்திரங்கள் அனைத்தையும் பிரமாதமாகக் கற்றுத் தேர்ந்தாள். அந்தக் காலத்தில் அவளைப் போல ஆட்சிக் கலையையும் போர் சாஸ்திரங்களையும் கற்றுத் தேர்ந்த மானுடப் பிறவிகள் உலகத்திலேயே வேறெங்கும் இருக்கவில்லையென்பார்கள். அந்தப் பெண் என் முதிர்முப்பாட்டனாரிடத்தில் வர்மக் கலையைக் கற்றுக் கொள்ள ஏற்பாடாகியிருந்தது. வர்மக்கலை துருத்திய ஸ்தனங்களும் அடங்கிய குறியும் கொண்ட பெண் பிறப்புக்கு ஏற்ற கலையல்ல என்றும் அதன் நுணுக்கங்கள் பிற போர் சாஸ்திரங்களைப் போலல்லாது பெண் படைப்புக்கு நேரெதிரான அடங்கிய மார்பும் துருத்திய குறியும் கொண்ட ஆண் உடலின் அசைவுகளுக்கும் பிரயோகத்துக்குமென்றே பொருத்தி வரும்படி அமையப்பெற்றவையென்றும் கூறி என் முதிர்முப்பாட்டனார் அதை அந்தப் பெண்ணுக்குக் கற்றுத்தர முதலில் மறுத்துவிட்டார். ஆனாலும் ராஜனின் வற்புறுத்தலும் அந்தப் பெண்ணின் அடங்காத ஆர்வமும் அவற்றை அவமானப்படுத்தலாகாதென்னும் கசிவை அவருள் கீறி விட்டுவிட்டது. வேறொரு காரணமும் அதற்கு இருந்தது. ருதுவெய்திய பிறகு முதன்முதலாக ராஜன் மகள் தன்முன் சிஷ்யையாகும் ஆர்வத்து என் முதிர்முப்பாட்டனார் குறிப்பிடும் அந்த நோய் ராஜன் மகள் தன் திருமண வயதை எட்டிய போது ஒரு விபரீதமான ஆசையாக அவளிடமிருந்து வெளிப்பட்டது. ஏற்கனெவே ஆண் வாரிசு ஏக்கத்தால் நொந்து போயிருந்த சமஸ்தானாதிபதி அவளுடைய ஆசையைக் கேட்டு இடியுண்ட நாகம் போலாகிவிட்டான். அவனை உடல் நோய் பற்றிக் கொண்டது முதன் முதலாக அப்போதுதான். அந்தச் சமயங்களில் ராஜனின் மனைவிதான் மிகுந்த தைரியத்தோடும் சமயோசிதத்தோடும் செயல்பட்டு ராஜ்ஜிய பரிபாலனத்தையும் குடும்பப் பிரச்னைகளையும் சமாளித்து வந்தாள். உண்மையில் பெண்ணின் திருமணப் பேச்சை முதலில் துவக்கிவைத்தவள் ராஜனின் மனைவிதான். பதினான்காம் வயது நடந்து கொண்டிருந்தபோது ஆட்சிக் கலையிலும் போர்க்கலையிலும் உலக நடப்புகளிலும் ராஜனின் பெண் கற்றுக்கொள்ளக் கூடிய பாடமென்று இனி எதுவும் இல்லையென்றாகிவிட்டபடியால் அவளுக்குத் திருமணம் செய்து வைத்துவிடுவதென்று அந்த அம்மையார் விரும்பினார். ராஜன் கூட தன் பெண்ணின் திருமண விஷயமாக முதலில் யாதொரு முடிவையும் எடுக்கும் விருப்பம் இல்லாமலிருந்தான். இருபத்திரண்டு ஆண்களுக்கு இணையான தைரியமும் சாதூர்யமும் அருளப்பெற்ற அவனுடைய பெண்ணும் தன் திருமணத்தில் ஆர்வமில்லாதவளாகவே தன்னைக் காட்டிக் கொண்டிருந்தாள். அந்த நிலையில் ராஜனின் மனைவியே இருவரிடமும் பேசி ஒரு பெண் திருமணம் ஆகாமல் தன் பதினைந்தாம் பிராயத்தைத் தாண்டுவது குலநாசத்தை விளைவிக்கும் என்பதையும் எடுத்துக் கூறி இருவரையும் சம்மதிக்க வைத்தாள். தன் பெண்ணின் கணவனால் ராஜ குடும்பத்தின் கோத்திரம் துண்டிக்கப்படக் கூடுமென்று அந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே பயந்துகொண்டிருந்த ராஜனும் அதைவிடப் பெரிய பாவம் ஒரு பெண்ணுக்கு மோட்சத்துக்கு ஒப்பான கன்னி கழியும் சடங்கைத் தடுத்து நிறுத்துவதென்று அறிந்து தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டான். ராஜனின் பெண்ணும் தன் திருமண ஏற்பாட்டுக்குத் தடையேதும் கூறவில்லை . ஆனால் தனக்கு வாய்க்கப் போகிற கணவன் குரூபியாகவும் ரோகியாகவும் இருக்க வேண்டுமென்று அவள் நிபந்தனை விதித்தாள். மதி நுட்பத்திலும் மனோதிடத்திலும் இருபத்திரண்டு ஆண்களுக்கு இணையான ஆற்றல் வாய்க்கப் பெற்றப் பெண் ஏன் இப்படிப் பேசுகிறாள் என்பது யாருக்குமே புரியவில்லை . இதுதான் ராஜன் மகளை பீடித்த வினோதமான நோய். அவளோ பிரமாதமான அழகி. அவளுடைய பச்சையொளி உமிழும் கண்களின் ஜொலிப்பு வர்மக்கலையின் அடிப்படையைத் தகர்த்துவிட்டதென்று என் முதிர்முப்பாட்டனார் புகழ்ந்து பேசுகிறார். ராஜ்ய பரிபாலனம் மீதான நேரடிப் பயிற்சிக்காக அவள் தன் தந்தையுடன் நாட்டின் பல பகுதிகளுக்குப் பயணம் போவதுண்டு. அந்தக் காலங்களில் அவள் உடலின் வாசனையும் தண்மையும் காற்றில் கலந்துவிட்டால் அந்தக் காற்று நாட்டின் எந்தப் பகுதிகளில் பட்டுப் பரவுகின்றதோ அந்தப் பகுதிகள் மழை இல்லாமலேயே முப்போக விளைச்சலுக்கு மூன்று வருடங்கள் தாக்குப்பிடிக்க வல்லவையாக மாறின என்பார்கள். அந்தப் பெண்ணின் திருவுருவத்தை வரைய முடியாதென்று அரண்மனைக்கு வருகை தந்த உலகின் தலை சிறந்த சைத்ரீகனும் கைவிரித்து விட்டபடியால் அவளுடைய உருவப்படம் எதையும் அரண்மனைச் சுவர்களில் மாட்டி வைக்க முடியவில்லை. பின்னாளில் நிலைமை சகஜமாகி யாவும் சுபமாக முடிந்த பிறகு அவளுக்குத் தகுந்த வரனைத் தேடி பல தேசங்களுக்குப் புறப்பட்டுப் போன தூதுவர்கள் தங்கள் கையில் அவளின் பார்வையொளியையும் குரலையும் சிமிழ்களில் அடைத்து எடுத்துச் சென்றதாகவும் சொல்லுவார்கள். அந்தப் பெண்ணின் அழகைச் சொல்லும் எந்த வசனமும் மிகைப்படுத்தப்பட்டது அல்ல. ராஜனின் பெண்ணுக்கு இணைதேடி பதினாறு திசைகளுக்கு அனுப்பப்பட்டவர்கள் அவ்வாறு அனுப்பப்படும் முன் அரண்மனையின் தலைசிறந்த கவிஞர்களிடமும் உபன்யாசகர்களிடமும் அவள் அழகை எடுத்து சொல்லப் பயிற்சி பெற்றுக்கொண்டார்கள். வர்ணனைகளிலும் கட்டுக்கதைகளிலும் கலந்து காலத்தை ஊடுருவி வளர்ந்து பிரகாசித்துக் கொண்டேயிருக்கிறது அவள் அழகு . அப்படிப்பட்ட அழகுள்ள ராஜனின் மகள் தனக்கு வாய்க்கவிருக்கும் கணவன் ரோகியாகவும் குரூபியாகவும் இருக்க வேண்டுமென்று ஏன் விரும்புகிறாள் என்று ராஜனின் மனைவி சகல சாஸ்திர பண்டிதர்களுடன் கூடி விவாதித்தாள். ராஜனோ வளைசலுற்ற கோத்திரமாகவாவது வளரும் வாய்ப்புப் பெற்றிருந்த பழைய நகரத்தின் ராஜ்ஜிய பரிபாலனம் வாரிசேயின்றி துண்டிக்கப்படப்போகிறது என்று தன் நோய்ப் படுக்கையில் புரண்டு சதாசர்வகாலமும் புலம்பிக் கொண்டேயிருந்தான். துவக்கத்தில் தன் பெண்ணின் வினோதமான ஆசையை ராஜனின் மனைவி சட்டை செய்யவில்லை. யவ்வனத்தில் புத்தம் புதிய ரத்தம் பிறரிடம் அதிர்வையும் கவனக்குவிப்பையும் ஏற்படுத்தும் செயல்களைச் செய்ய விழைவது சகஜம் என்று அவள் அதை ஒதுக்கிவிட்டாள். நான்காவது தடவையாக திருமணப் பேச்சை எடுத்த போதும் அந்தப் பெண் தன் நிபந்தனையை மாற்றமின்றி முன்வைக்க முனைந்ததால் அவள் நடவடிக்கைகளைக் கண்காணிக்க ஆட்களை நியமித்து வைத்தாள். அரண்மனையின் உச்சி அடுக்கிலிருந்த தன் படுக்கையறைக்குள் துயிலப் போகும் நேரம் வரை ராஜன் மகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டாள். படுக்கையறையின் பக்கத்து அறையில் அவளுக்குத் துணையாகப் படுத்துக்கொள்ளும் தோழியும் கூட அந்நிய ஆடவர் யாரையும் நிசியின் எந்தச் சாமத்திலும் பார்க்கவில்லையென்று சத்தியம் செய்தாள். எனவே திருமணத்தை ஒத்திப்போடும் ரகசியம் எதுவும் தன் பெண்ணின் ஆபத்தான பருவத்தைப் பாதிக்கவில்லையென்று ராஜனின் மனைவி தன்னைத் தேற்றிக்கொண்டாள். ஆனால் அது உறுதிப்பட்டதும் அவளுக்கும் ராஜனின் நோய் தன்னைத் தொற்றிக்கொள்ளலாமென்ற பயம் வந்துவிட்டது. பதினோறாவது தடவையாக திருமணப் பேச்சை எடுத்தப் போதும் நம் பேரழகி சற்றும் இரக்கமின்றி தன் நிபந்தனையை முன்வைக்க முற்பட்ட போது நோய்ப் படுக்கையில் முனகிக்கொண்டிருந்த ராஜன் வெளியே ஓடி வந்து அவளுடைய கழுத்தை நெரித்துக் கொன்றுவிட எத்தனித்தான். தான் குற்றம் செய்யாதவளென்றும் குரூபியும் ரோகியுமான எந்த ஆணைத் தன் பெற்றோர்கள் கை காட்டினாலும் அவனைத் தன் கணவனென்று வரித்துக்கொள்ளத் தயாராக தான் இருப்பதாகவும் அழகான ஆண்களைக் கண்டால் ஏனோ காரணமற்ற ஒரு குமட்டல் தன் வயிற்றிலிருந்து கட்டுப்படுத்த முடியாதபடி பீறிட்டு எழுகிறதென்றும் அதன் காரணம் தனக்கே தெரியவில்லை என்றும் அந்தப் பெண் சொல்லி அழுதாள். தான் கதியற்றப் பெண்ணாகி விட்டதாகக் கூறி கண்ணீர் விட்டாள். ராஜ பரம்பரையின் இருபத்து மூன்று தலைமுறைகளில் அப்படிக் கண்ணீர் விட்டு அழுதவர் யாரும் இல்லை. விஷயம் அவளுக்கு மிகப் பிரியமான ஒரே ஆண்மகனான என் முதிர்முப்பாட்டனாரின் காதை எட்டுவதற்கு முன் ராஜனின் மனைவி தன்னாலான எல்லா உபாயங்களையும் செய்து பார்த்துவிட்டிருந்தாள். அந்தப் பெண் பிறந்த நட்சத்திரமும் புஷ்பவதியான நட்சத்திரமும் மறுபடி புரட்டி பார்த்துக் கணிக்கப்பட்டன. அற்புதமான அவள் ஜாதகத்தில் தோஷமென்று ஒரு வழிப்போக்கன் சொல்லிவிட்டாலும் உடனே எப்போதும் எரிந்துகொண்டிருந்த புத்திரகாமேஷ்டி யாக நெருப்போடு தோஷ நிவர்த்திக்கான யாக நெருப்பும் மூட்டப்பட்டு கொழுந்து விட்டெரியத் துவங்கியது. புறவயமாக அவள் உடலில் நோயின் எந்த அடையாளத்தையும் காண முடியாமலும் நிதம்பத்தின் ரோமச் சுழிகளினுள் வெண்ணிறமாய் அது உறைந்திருந்ததை ஊகித்தறியும் திறனற்றவர்களாயுமிருந்த பல தேசங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட வைத்தியர்கள் யாவரும் கைவிரித்த பிறகு கடைசியாக அனைவரும் என் முதிர்முப்பாட்டனாரின் உதவியை நாடி வருவதற்குள் ராஜன் மனைவி பயந்தபடியே பெண்ணின் பதினைந்தாம் பிராயம் முடிந்துவிட்டது.

மகளின் பிரச்னை பற்றி பேசியழைப்பதற்குத் தலைமை மந்திரியை அனுப்பினால் அதை மரியாதைக் குறைவாக அவர் எடுத்துக் கொண்டுவிடக் கூடுமென்று அந்த தினத்தில் ராஜனின் மனைவியே நேரில் என் முதிர்முப்பாட்டனாரின் குடியிருப்புக்கு வந்திருந்தார். அவர் இல்லத்தின் தனியறைக் கதவு அவரை வெளியை அழைத்துத் தட்டப்பட்டதும் ராஜன் மகளின் பதினாறாம் பிராயத்தைத் துவக்கியதுமான அந்த நாள் அவருடைய அழிவைத் துவக்கிவைத்த முதல் நாளுமாகுமென்று வருடங்களுக்குப் பிறகு பிரசித்தி பெற்ற இந்தக் கதையை எழுதப் புகுந்த பலரால் அந்த நிகழ்ச்சி கணிக்கப்பட்டதற்கேற்ப பின்னாளில் வேறு பல காரணங்களால் திசை மாறிப் போய்விட்டாலுங்கூட துவக்கத்தில் என் முதிர்முப்பாட்டனாருடைய புகழ் கடல் கடந்தும் பரவி நிலை பெறக் காரணமாயிருந்த அழைப்பாக அது அமைந்துவிட்டது என்பது உண்மைதான். தன் வாழ்நாளில் அதற்கு முன்பும் பின்பும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் அரண்மனை வளாகத்தைத் தவிர வேறெங்கும் முகதரிசனத்தைக் காட்டியருளாத ராஜனின் மனைவி தன் வீட்டில் எழுந்தருளியது தனக்கும் தன் குடும்பத்திற்கும் ராஜகுடும்பம் செய்த மரியாதைகளிலேயே மிகப் பெரிய மரியாதை என்று தெரிவித்த என் முதிர்முப்பாட்டனார் ராஜனின் ஆணைக்காகவோ ராஜன் மனைவியின் பணிவிற்காகவோ தனக்குக் கிட்டவிருக்கும் புகழுக்காகவோ இல்லாவிடினும் கூட ராஜனின் பெண் தன் பிரியத்துக்குரிய ஒரே சிஷ்யையென்று கூறி ராஜன் மனைவி அழைத்ததும் உடனே புறப்பட்டு வர உவகையோடு ஒத்துக்கொண்டார். அப்படிப் புறப்பட்டுச் சென்ற அவர் ராஜன் மகளின் படுக்கையறையிலிருந்து அவளின் துர்கனவுக்குக் காரணமான புலியை விரட்டியடித்த கடைசி நாளையும் சேர்த்து மொத்தம் அறுபத்தெட்டு நாட்கள் அவளுக்கு வைத்தியம் செய்தார் என்று சொல்லப்படுகிறது. வருடங்களுக்கு முன் அந்தப் பெண் அறிமுகப்படுத்தப்பட்ட கணத்திலேயே அவளைத் துன்புறுத்தப் போகும் நோயைக் கண்டுகொண்டுவிட்டிருந்தாரானாலுங்கூட எவ்வளவு காத்திரமான நோயாயிருந்தாலும் அது அமிர்தத்தை உடனே ருசிக்கத் தகுதியற்றது எனும் வைத்திய சாஸ்திர விதிப்படி என் முதிர்முப்பாட்டனார் சம்பிரதாயமான முதல் வழியிலிருந்தே தன் வைத்தியத்தைத் துவக்கினார். அவருடைய பிரயோகத்தால் அதுவே பலனளித்துவிடுமென்றும் அனைவரும் எதிர்பார்த்தார்கள். முதல்வழி என்பது ஒரு நோயாளியின் உடலினுள் தங்கி நோய்க்கிருமிகளை உற்பத்தி செய்யும் துர்மணத்தின் மூன்று வகைகளில் மிகச் சாதாரணமான முதல் வகையை அணுகும் வைத்திய முறையாகும். இதைத் தூயவைத்தியப் பிரயோகம் என்பார்கள். இந்த முதல் வகையில் நோயாளியின் நாக்கானது உடல் உறுப்புகளின் வழியாக ஊடுருவி உள்ளே ஆக்கிரமித்திருக்கும் துர்மணத்தால் கட்டுப்படுத்தப் படுகிறது. மழையில் நனைவதால் குளிர் சுரம் கண்டு பிதற்றும் நோயாளிகள் இந்த வகையில் அடங்குவர். இது ஒரு சாதாரண உதாரணம். இவ்வகையிலேயே அடையாளம் காண முடியாத நோய்க் கிருமிகள் நோயாளியின் குரலுக்குள் புகுந்து செய்யும் மாயங்கள் பல்லாயிரக்கணக்கானவை உண்டு. இவற்றுக்கான வைத்தியத்தில் அபூர்வ மூலிகைகளின் பிரயோகமும் சில சமயம் நோயாளிக்கு பதிலாக மூலிகைகளைச் சவைத்துச் சாப்பிடும் வைத்தியரின் மூச்சுக்காற்றை நோய்வாய்ப்பட்டவர் சுவாசித்தலும் முக்கியப் பங்காற்றுகின்றன. ராஜனின் பெண்ணுக்கு இவ்வகை வைத்தியம்தான் முதலில் கொடுக்கப்பட்டது. ஆண்களுக்கே உரிய வர்மக் கலையை வலுக்காட்டாயமாக விரும்பிக் கற்றுக்கொண்ட காலத்தில் அதன் அடவுகளோடு ஒத்துப் போகாத பெண்ணுடலின் மென்நரம்பு ஏதேனும் பிறழ்ந்து நினைப்பதற்கு நேர்மாறான வார்த்தைகளை அவளுக்குள்ளிருந்து கிளப்பிவிடுகிறதோ என்கிற சந்தேகத்தில் அதை முயன்று பார்த்தார் என் முதிர்முப்பாட்டனார். இவ்வகை வைத்தியம் முப்பத்து மூன்று நாட்கள் தொடர்ந்து நடந்தது. ராஜன் பெண்ணின் வினோத வார்த்தைகள் முதல் வகை துர்மணத்தால் விளைந்தவையல்ல என்று முடிவான பிறகு இரண்டாவது வகையான ஞாபகத்திலிருந்து குரலைத் தாக்கும் கிருமிகள் அவளைப் பீடித்திருக்கக் கூடுமென்ற கணிப்பின் பேரில் மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு அதற்கான வைத்தியம் துவங்கியது.

ரத்த சம்பந்தமுள்ள மூதாதையரின் துர்மரணத்துக்கு ஒரு வாசனை உண்டென்பது மாந்திரீக சாஸ்திரத்தின் அடிப்படை பூர்ணத்துவம் பெறாத சாவின் வாசனை சில தலைமுறைகளேனும் காத்திருந்து பிறகு அழகிலும் அறிவிலும் பூர்ணத்துவம் பெற்ற தன் சந்ததியொன்றால் நுகரப்படும் போது அமைதியுறுமென்பார்கள். ரோகியாகவும் குரூபியாகவும் பிறந்து இறந்து போன ராஜன் ஒருவன் ராஜ குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையில் பதின்மூன்று வருடங்கள் வாழ்ந்திருந்தான். அந்த ராஜனின் மரணத்தின் மணம் நமது பேரழகியின் ஞாபகத்துக்குள் புகுந்து ஊடுருவியக்கக் கூடுமென்கிற ஊகத்தில் இரண்டாவது வைத்தியமுறை மேற்கொள்ளப்பட்டது.

இவ்வகை நோய்களை உண்டாக்கும் கிருமிகள்தான் ஞாபகத்தின் நோய்க்கிருமிகள் என்று அழைக்கப்படுகின்றன. இவை நோயாளியின் அறிவை ஒரு கெட்டியான நீர் வளையம் போலச் சுற்றிச் சூழ்ந்து கொள்கின்றன. இம்மாதிரி ஞாபகத்தின் வளையத்துக்குள் சிக்கிக் கொண்ட நோயாளியின் குரல் மூலமாக உடனடியாகவும் பிறகு புறத் தோற்றத்தினூடு கொஞ்சம் கொஞ்சமாகவும் அந்தக் கிருமிகள் தன்னுடைய பழைய திட வடிவை அடைந்து விடுகின்றன. அதாவது ஞாபகமாய் உட்புகுந்த கிருமிகள் மீண்டும் கடந்த காலத்தை நோயாளியின் கண்முன்னே நிகழ்த்தத் துவங்கிவிடுகின்றன. நிகழ்காலத்தைப் பார்வையிலிருந்து மறைத்து விடுகின்றன. ஞாபகத்தின் நோய்க் கிருமிகள் உட்புகும் வழிகளையும் அவற்றின் போக்குகளையும் அவற்றோடு மயிர்க்கண்களுக்கு உள்ள தொடர்பையும் அறிந்தவரும் தேர்ந்த நாவிதருமான என் முதிர்முப்பாட்டனார் ராஜன் மகளின் கூந்தலின் நுனிப் பகுதியையும் காது மடல்களின் மறைவில் சுருண்டு கொண்டிருக்கும் மயிர்க்கற்றைகளையும் இடது புறங்கையின் மேல் அரும்பியிருந்த ரோமத்தூவிகளையும் கத்தரித்து எடுத்துவிட்டார். சில உக்கிரமான ரகசிய மந்திர உச்சாடனங்கள் மூலமாகவும் அபூர்வச் செடி வகைகளை எரிப்பதாலுண்டாகும் நெடியின் மூலமாகவும் நோயாளியின் அறிவைச் சுற்றி வளைத்துக்கொண்டிருக்கும் ஞாபக வளையத்தைக் கரைக்க வேண்டியிருக்கிறது. சில கடினமான வைத்திய முறைகளின் பிரயோகமும் தேவைப்படலாம். ஆனால் ராஜன் பெண்ணுக்கு ஏற்பட்டிருந்தது அவ்வகை நோயல்ல என்பது துவக்கத்திலிருந்தே என் முதிர்முப்பாட்டனாருக்குத் தெரிய வந்திருந்ததால் கடினமான வழிகளை அவர் முயற்சிக்கவில்லை. சந்தேக நிவர்த்திக்காக சில பரீட்சார்த்த முறைகளைக் கையாண்டு பார்த்து ஞாபகத்தின் நோய்க்கிருமிகள் இருக்கும் தடயம் எதுவும் இல்லை எய்ன்பதைத் தெரிந்துகொண்டபின் அவர் அந்தப் பெண்ணின் கனவுகளை பார்த்தறிவதைத் தவிர வேறு வழியில்லை என்னும் முடிவுக்கு வந்தார். இரண்டாம் வகைவைத்தியத்தில் மேலும் இருபத்திரண்டு நாட்கள் கடந்து போயிருந்தன. முதல் இரண்டு வகைப் பரிசோதனைகளால் மிகவும் களைத்துப் போயிருந்த பெண் மீண்டும் தன் இயல்பான கனவுகளைக் காணத் துவங்கும் திடம் பெறுவதற்கு ஒரு வார காலமாகும் என்றும் அந்த ஏழு நாட்களுக்குள் தன்னையும் ஆயத்தப்படுத்திக்கொள்ள அவகாசம் தேவைப்படுகிறதென்றும் கூறி ஐம்பத்தெட்டு நாட்களுக்குப் பிறகு என் முதிர்முப்பாட்டனார் தன் தனியறைக்குத் திரும்பி வந்தார். அந்த ஒரு வார காலமும் அவர் பித்துப் பிடித்தவர் போல நடந்து கொண்டார் என்று அவர் மனைவி தன் வாரிசுகள் மூலமாக எங்களுக்குச் சொல்கிறார். அந்த ஒரு வாரகாலமும் அவர் பித்துப்பிடித்தவர் போலவேதான் நடந்துகொண்டார். அரண்மனையிலிருந்து திரும்பி வந்த அன்று தன் தனியறைக்குள் நுழைந்தவர் மறுபடி எட்டாம் நாள் அரண்மனைக்குக் கிளம்பிச் செல்லும் வரை தன் அறையை விட்டு வெளியே வரவேயில்லை. சாப்பிடவோ நித்ய கடன்களை நிறைவேற்றிக் கொள்ளவோ முனையவும் இல்லை. நான் அறையினுள் நுழைவதை அவர் தடுக்கவில்லை . ஆனால் ஒரு வாரகாலத்தில் ஒரே ஒரு கேள்வியைத் தவிர வேறெதையும் அவர் என்னிடம் கேட்கவில்லை. அவர் தான் கற்ற ஏடுகளை மீண்டும் முதலிலிருந்து படிக்கத் துவங்கியிருந்தார். அவை பரண்களிலிருந்து சிறு தூரலாய் எந்நேரமும் அவர்மேல் உதிர்ந்த வண்ணமே இருந்தன. அவரோ மழையிலும் பனியிலும் சதா நனைந்து வாடுபவர் போல அதன் பொழிவில் நடுங்கிக் கொண்டேயிருந்தார். யார் யாருடைய கனவுகளை எந்தச் சூழ்நிலையிலும் பார்க்கக் கூடாது என்கிற பாடப்பகுதியின் பக்கங்களை அவர் விடாமல் திரும்பத் திரும்பப் புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் நடவடிக்கைகள் எனக்கு ஒரே சமயத்தில் அரண்மனை விதூஷகனையும் அரச குருவையும் நினைவுக்குக் கொண்டு வந்தன. அவர் தன் அறைக்குள்ளேயே அந்த ஏழு நாட்களுக்குள் குறுக்கும் நெடுக்குமாக மூவாயிரம் யோசனை தூரம் நடந்திருப்பார். ஏழாயிரம் தடவைகளாவது குறிப்பிட்ட அந்தப் பாடப் பகுதியைப் படித்திருப்பார். எனினும் யவ்வனப் பருவத்திலிருக்கும் ஒரு கன்னிப் பெண்ணின் கனவுகளைப் பார்க்கலாமா கூடாதா என்பது பற்றி அவரால் தெளிவான ஒரு முடிவுக்கு வர முடியவில்லை . கடைசியில் தன் கல்வியின் பெருமையிலும் தன் மேதமையின் ஆழத்திலுமே நம்பிக்கையற்றுப் போனவராக அவர் அந்தக் கேள்வியை படிப்பறிவற்ற என்னிடம் கேட்கும் அளவுக்கு பரிதாபத்துக்குரியவராக ஆகிவிட்டார். அதனால் தன் பாண்டித்யத்தின் தூய்மை கெட்டு விடுமென்று அவர் மிகவும் பயந்துபோயிருந்தார். சம்போகத்துக்கு ஒப்பான ரகசியத் தன்மையும் வேகமும் வாசனையுமுடைய ஒரு யவ்வனப் பெண்ணின் கனவுகளை அவள் சம்மதமிருந்தாலும் வைத்தியத்தின் பொருட்டேயென்றாலும் பார்ப்பது சாஸ்திர நியதிக்குட்பட்டதுதானா என்று கேட்டு அவர் ஒரு குழந்தையைப் போல் என் முன் கதறியழுதபோது பத்து இளம் பெண்களுக்கு முன் நிர்வாணமாக நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டதைப் போல அவருடைய ஆஜானுபாகுவான உடல் இரண்டடி உயரமாகக் குறுகிப் போயிருந்ததைப் பார்த்தேன். ஆனால் அந்தக் கேள்விக்கு என்னாலும் பதில் சொல்ல முடியவில்லை. கடைசி வரை அந்தக் குழப்பத்துடனேயேதான் அவர் அரண்மனைக்குப் புறப்பட்டு சென்றார். அந்த வித்தையைக் கற்றுக்கொண்டதே குற்றமென்று முதன் முதலாக அன்று அவர் தன்னையே சபித்துக்கொண்டதையும் நான் கேட்டேன். தெய்வத்தைத் தொழுது சமாதானப் படுத்திக் கொள்வதைத் தவிர வேறெந்த வழியும் எங்களுக்குத் தெரியவில்லை.

ஆனால் தெய்வாதீனமாக அனைத்தும் நல்லபடியாகவே நடந்து முடிந்தது. மூன்று நாட்கள் கழித்து கரை கடந்த புகழைப் பெற்றுத் தந்த வெற்றியுடனும் அதற்கு மேலாகத் தன் பாண்டித்யத்தின் தூய்மை களங்கப்பட்டுவிடவில்லையென்ற நிம்மதியுடனும் என் முதிர்முப்பாட்டனார் தன் தனியறைக்குத் திரும்பி வந்தாரென்பதுடன் இந்தக் கதை முடிவடைகிறது. சொல்லவொணாத மனக் கிலேசத்துடன் முதல் நாள் இரவு அதுவரை ஆண் வாடையே பட்டிராத ராஜன் மகளின் படுக்கையறைக்குள் அவள் கனவுகளைக் கண்டறியும் நிமித்தமாக உள்ளே நுழைந்த என் முதிர்முப்பாட்டனார் மறுநாள் காலை அறைக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது தெளிவும் அமைதியும் தீர்க்கமும் அவர் முகத்தில் குடி கொண்டிருந்தன என்று அவரைப் பார்த்தவர்கள் வியந்தார்கள். இரண்டாம் நாள் இரவு ராஜனின் பெண்ணுக்குத் துணையாக எப்போதும் படுக்கையறையுடன் இணைக்கப்பட்டிருக்கும் சிறிய அறையொன்றில் படுத்துக்கொள்ளும் அவள் தோழிக்குப் பதிலாக தான் படுத்துக்கொள்ள விரும்புவதாகக் கூறினார் என பலருக்கு இது சந்தேகத்தையும் ராஜ குடும்பம் அவமானப்படுத்தப்படுவதான உணர்வையும் கொடுத்ததாம். ஆனால் அவருடைய விநோதமான போக்குகளையும் ஞான முதிர்ச்சியையும் மனப் பக்குவத்தையும் நன்கறிந்த ராஜனின் மனைவி அதற்கும் உடனே ஒப்புதல் அளித்துவிட்டாள். எனவே இரண்டாம் நாளிரவு ராஜனின் பெண் அவளுடைய படுக்கையறையிலும் என் முதிர்முப்பாட்டனார் அதோடு இணைந்த கதவுகளற்ற அடுத்த அறையில் திரைச்சீலை மறைப்பின் பின்னேயும் படுத்துக்கொள்ளக் கழிந்தது. மறுநாள் காலை படுக்கையறையிலிருந்து ராஜனின் பெண் விழித்தெழும் முன்பே எழுந்து வெளியே வந்துவிட்ட என் முதிர்முப்பாட்டனார் வைத்தியம் முடிந்துவிட்டதென்று அறிவித்தார். அவருடைய அற்புதத்தை நேரில் பார்த்து அறிவதற்கென்று கடல் கடந்தும் வந்திருந்த ஆர்வலர்கள் அவர் முகத்தை முன்னெப்போதும் பார்த்துப் பழகியிராததால் பேருவகையோடு வெடித்துச் சிதறிய அவர் சிரிப்பின் மின்னல் தாக்கி கண்களை இழந்து நாடு திரும்பினார்கள். மூன்றாம் நாள் காலையில் அப்படி வெளியே வந்த என் முதிர்முப்பாட்டனார் ராஜன் மனைவியிடம் புலி வேட்டைக்கான பாதி ஆயத்தங்களோடு ஒரு இருபது பேர் மூன்றாம் நாள் இரவு தன்னோடு ராஜன் பெண்ணின் படுக்கையறையில் தங்க அனுமதித்து விட்டால் மருந்தும் தயாராகி விடுமென்றும் கூறினார். திருமணமாகாத பெண்ணின் படுக்கையறையினுள் அந்நிய ஆண்கள் நுழைவது கோத்திரம் பிறழ்வதை விடப் பெரிய பாவமென்று ராஜன் புலம்பினான். பின்னாளில் என் முதிர்முப்பாட்டனாரை அடியோடு வெறுக்கத் தலைப்பட்ட ராஜன் மனைவியோ அந்த நேரத்தில் தன் பெண்ணின் நோய் தீர எதுவும் செய்வதற்கு ஆயத்தமாக இருந்தாள். மேலும் பாவ நிவர்த்தியென்று ராஜனை திருப்தி செய்வதற்காக பெண்ணின் தகப்பனும் அன்று இரவு பெண்ணின் படுக்கையறையில் தங்கிக்கொள்ளலாமென்றும் முடிவு செய்யப்பட்டது. ஆக ராஜன் மகளின் நோய் கூட இருபத்திரண்டு ஆண்களுக்குச் சமமான வல்லமை உடையதாய் இருந்ததென்று பாரம்பர்யக் கதைகள் அவளைப் பற்றி வேடிக்கையாய் குறிப்பிடுவதுண்டு. வைத்தியம் முடிவடைந்து என் முதிர்முப்பாட்டனார் தன் குடியிருப்புக்குக் கிளம்ப அனுமதி கோரி ராஜன் முன் நின்ற போது இரண்டு நாட்கள் அறைக்குள் நடந்தது என்ன என்பதை அனைவருக்கும் தெரியச் சொல்லுமாறு ராஜன் மனைவி அவரை வேண்டிக்கொண்டாள். அது தன் கடமையென்பதை ஒத்துக்கொண்ட என் முதிர்முப்பாட்டனார் ஆனால் வைத்தியம் பூரண பலனளித்திருக்கிறதா என்பதைப் பார்க்கும் முன் அதன் வழிமுறைகளை விவரிப்பது வித்தையின் தர்மமாகாது என்பதால் அவர்களைச் சில தினங்கள் பொறுத்திருக்கும்படி வேண்டிக்கொண்டு தன் இருப்பிடம் வந்து சேர்ந்தார். படுக்கையறைக்குள்ளிருந்து வெளிப்பட்ட புலியைப் பார்த்து நீயா என்று கேட்டு மயங்கி விழுந்த ராஜனின் பெண் அதிர்ச்சியிலிருந்தும் தன் கனவுகளிலிருந்தும் விடுபட்டு மீண்டும் தன் பழைய பொலிவை எட்டி விட்டாளென்பதை எழுபத்தியிரண்டாம் நாள் பத்தொன்பதாவது தடவையாக அவளுடைய திருமணத்தைப் பற்றி அவள் தாய் பேசிய போது அழகிய ஆண்களைப் பற்றி அப்படி வெளிப்படையாகப் பேசும் நேரங்களில் தன்னை வெட்கமும் சந்தோஷமும் பிடித்தாட்டுவதாக அவள் கூறியதாக ராஜன் மனைவி மூலமாகத் தெரிந்து கொண்ட பிறகே தன் வித்தையும் யூகமும் தக்க பலனை அளித்துவிட்டன என்று திருப்தியடைந்த என் முதிர்முப்பாட்டனார் நடந்த நிகழ்ச்சிகளை அரண்மனையும் நாடும் அறியச் சொல்வதற்கு ஒத்துக்கொண்டு மீண்டும் அரண்மனைக்கு மரியாதைகளுடன் அழைத்து வரப்பட்டு உரிய ஆசனத்தில் அமர்த்தப்பட்டார். அதற்கு முன்பாகவே என் முதிர்முப்பாட்டனாரின் வைத்தியம் முடிவுற்ற மூன்றாம் நாளிரவில் ராஜன் தன் மனைவியிடமும் இன்னும் சில நாட்களில் கொலைவாளுக்கு இரையாகி மாளவிருக்கிற இருபது வேடர்குல ஆண்கள் தங்கள் மனைவிகளிடமும் உறவினர்களிடமும் அண்டை அயலார்களிடமும் அந்த இரவின் வியத்தகு அனுபவத்தைக் கூறி அதற்கு முந்தைய இரண்டு நாட்களின் நிகழ்ச்சிகளைக் கேட்டறியும் ஆர்வத்தைப் பேரவாவாக வளர்த்துவிட்டிருந்தார்கள். அவர்கள் தங்கள் கற்பனைக்கும் கதை சொல்லும் திறமைக்கும் கேட்பவர்களின் ஆர்வத்துக்கும் ஏற்பக் கூட்டியும் குறைத்தும் வர்ணனைகளால் அலங்கரித்தும் தங்கள் அனுபவங்களைச் சொல்லியபோது ஒரே அனுபவம் தனித்தனிக் கதைகளாக உருவம் பெற்று அந்த நாளிலிருந்தே இருபது இரவுகளில் இருபது சாமான்யர்களின் சாகஸங்களென்ற வாய்மொழிக் கூட்டுக் கதைப்பாடலாக நாட்டு மக்களிடையே புழங்கிப் பரவத் துவங்கியது. ஒவ்வொரு கதையிலும் அதைச் சொன்னவனின் ரகசிய ஆசைகளுக்கேற்ப அந்த இரவின் ஒவ்வொரு அம்சம் பிரதானமாக வெளித் துலங்கியது. ஒரு கதையில் ராஜன் மகள் அதன் கதாநாயகியாக இருந்தாளென்றால் இன்னொரு கதையில் அவளைப் பற்றின பிரஸ்தாபமே இல்லாதிருந்தது. அதற்குப் பதிலாக கொம்பிசைக் கருவியொன்றின் துளையை மாந்தளிரென நினைத்து அதிலேயே துயின்று இசையாய் மாறிப் பறந்துபோன பொன்வண்டு ஒன்று கதையின் பிரதானமான பாத்திரமாய் மாறியது. இன்னொரு கதையில் அதை கொம்பிசை கடும் புலியொன்றைக் காற்று வெளியில் வரைந்து அதற்கு உயிர் தந்தது. புதிதாகத் திருமணம் செய்து கொண்ட வேடனொருவன் முழவிசையின் உச்சபட்ச அதிர்வினூடே கிளர்ந்த தன் புதுமனைவியின் ஸ்பரிசவுணர்வு பீறிடச் செய்த சுக்கிலத்தின் கதையை அவளுடன் தனியே பேசிப் பகிர்ந்து கொண்டான். ராஜனின் அரண்மனை ஒரு வேடன் கதையில் பெருங்காடாக மாறியது. அதில் அவன் துரத்திய விலங்கு பூவுலகிலெங்கும் காணக் கிடைக்காத பொன்னிறப் புள்ளிகளைத் தன் உடலிலும் கேட்கக் கிடைக்காத துயரத்தைத் தன் குரலிலும் கொண்டிருந்தது. அவன் அதை அம்பெறிந்து கொல்வதற்குப் பதிலாக பூர்வ ஜென்மத்தில் அது தானாகவும் தான் அதுவாகவும் இருந்த கதையை உரக்கக் கூறித் தன் இடுப்பில் கனன்று கொண்டிருந்த காயத்தைக் காட்டிக் கொன்றான். இறந்தபின் அந்த வினோத விலங்கு ராஜனாய் மாறியது. வனம் மீண்டும் அரண்மனையாகவும் நிஜ ராஜன் தானாகவும் மாற அவன் தன் வீடு வந்து சேர்ந்தான். நிறைந்த மக்கட் செல்வத்தைப் பெற்றிருந்த முதிய வேடனொருவனின் கதையில் இளவரசியின் படுக்கையறையை நிறைத்து வழிந்த இசையாய் அவனுடைய பெண்மக்கள் மாறிப் பறந்துகொண்டிருந்தார்கள். அவர்களுக்கான இணையிசையைத் தேடிச் செல்ல அவர்களுடைய சகோதரர்கள் படுக்கையறை விதானத்தைத் தங்கள் தகப்பனின் தலைமையில் முழவினால் பறித்தெறிந்தார்கள். பெண்மக்களுக்கான யுவன்கள் அவர்களைத் தேடி வெகு விரைவிலேயே வர இருக்கிறார்கள். சில கதைகளில் நெளியும் பாம்புகளை சடையாக அள்ளிப் போட்டுக்கொண்ட கடவுள் ஒருவர் அந்த இரவை பிரபஞ்சத்தின் கால வெளியிலிருந்து தனியே பிரித்து மீண்டும் உலகின் முதல் நானாகப் படைக்கிறார். அவர் என் முதிர்முப்பாட்டனாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் அந்தக் கடவுள் வயோதிகமற்றவராக இருந்தார். வேறு சில கதைகளில் மழைக் காலத்தின் மென்சோகத்தை கடுங்கோடையிலும் உருவாக்கும் மந்திரக்காரனாக ராஜனும் காற்றுருவமான தேவதையாக ராஜனின் மகளும் தோன்றி அலைகிறார்கள். பின்னாளில் இந்தக் கதைகள் யாராலும் பாடப்படக் கூடாதென்று அரசாணையால் ராஜனின் விருப்பத்திற்கெதிராகத்தான்) தடை செய்யப்பட்ட போது அதை மீறிப் பாடுபவர்களின் மேல் கொலை வாளுக்கு இரையாகி மாண்ட இருபது வேடர்குல ஆண்களின் ஆவிகள் கவிந்து அரண்மனைவாசிகளின் கண்களுக்குத் தட்டுப்படா வண்ணம் அவர்களின் உருவங்களை மாயமாய் மறைத்துவிடத் துவங்கியதால் நகரத்தின் மேல் வீசும் காற்றில் எப்போதும் கலந்து ஒலித்துக்கொண்டேயிருந்த பாடுவோர் புலப்படாத அந்த மாயப் பாடல் வரிகளை எப்படி அழிப்பதென்று தெரியாமல் கடைசியில் அவற்றைக் குழப்பி அலைக்கழிக்கும் தந்திரத்துடன் அரண்மனைக் கவிஞர்களைக் கொண்டு அதே வாய்மொழிக் கதைகளின் இருபது வீரர்களையும் அரச வம்சத்தின் இருபது தலைமுறை மன்னர்களாகவும் அவர்கள் பங்கேற்ற அந்த ஒற்றை இரவை நெடிய கால இடைவெளிகளால் பிரிக்கப்பட்ட இருபது தலைமுறைகளின் தனித்தனி இரவுகளாகவும் தனித்தனி ராஜன்களின் சாகஸங்களாகவும் மாற்றி சமஸ்தானத்தின் அதிகாரபூர்வமான பாடற்ச் சுவடியாக்கி கோவில்களிலும் பொது மண்டபங்களிலும் உரக்கப் படிப்பதற்கு ராஜன் மனைவி ஏற்பாடு செய்தாள். இரண்டு விதமாகச் சொல்லப்படும் இப்படிப்பட்ட ஒற்றைக் கதைகளுக்கு எனவே பழைய நகரத்தில் பஞ்சமே இல்லாதிருந்தது. இது ஒரு புறமிருக்க, என் முதிர்முப்பாட்டாரின் ஏற்பாட்டின்படி இருபது வேடர்களுடன் அந்த இரவின் நிகழ்வுகளில் பங்கு கொண்ட ராஜன் தன் மனைவிக்குச் சொல்லியதாகச் சொல்லும் கதை இப்படியாக இருக்கிறது:

முன்பு எத்தனையோ தடவைகள் நான் உனக்குச் சொல்லியிருப்பதனால் ராணீ புலி வேட்டையைப் பற்றி உனக்கும் நன்றாகத் தெரிந்திருக்கும். புலி வேட்டையில் இரண்டு பகுதிகள் உண்டு. கண்களுக்குப் புலப்படாமல் புதருக்குள் பதுங்கியிருக்கும் புலியை மறைவிலிருந்து வெளியே கொண்டு வருவது வேட்டையின் முதல் பகுதி. மறைவிலிருந்து பாய்ந்து வெளிப்படும் மிருகத்தைத் துரத்தியும் அதோடு மோதியும் ஆயுதங்களால் வேட்டையாடுவது இரண்டாம் பகுதி. இரண்டாம் பகுதியைவிட முதல் பகுதி முக்கியமானதும் புலன்களின் கூர்மையை அதிகம் வேண்டுவதுமான ஒன்றாக இருக்கும். தன்னுருவத்தை மறைத்துக் கொண்டிருக்கும் புலியை கண்முன் புலப்படுத்துவது என்பது அத்தனை சுலபமல்ல. அதற்குப் பார்வை நுட்பத்தை விடவும் நுகர்வு நுட்பம் அதிகமாகத் தேவைப்படுகிறது. புலியின் உடலிலிருந்து எழும் பிரத்யேக வாசனையலைகள் காற்றில் கலந்து வருவதை வைத்தே அது எவ்வளவு தூரத்தில் எந்த திசைக்கு முகம் காட்டிப் புதர்களினுள் படுத்துக் கிடக்கிறது என்பதைச் சொல்லும் அசாத்தியத் திறமை மிக்கவர்கள் முதல் பகுதியில் பங்கேற்கிறார்கள். புலியை வெளிப்படுத்த கொம்பு முரசு முழவு ஜண்டை போன்ற வாத்தியங்களை ஒரு குறிப்பிட்ட தூரத்திலிருந்து அந்த இடத்தைச் சுற்றி வளைத்து நின்றபடி இசைத்து கானகத்தையே அவர்கள் அதிரச் செய்வார்கள். ஆனால் புலி உடலளவில் கம்பீரமும் வலுவும் கொண்ட மிருகமானாலும் மிகவும் மென்மையான இதயம் கொண்ட பிராணி. கூட்டு முழக்கத்தில் ஒரு மாத்திரையளவு கனம் கூடினாலும் அதிர்ச்சியில் அது தன் மறைவிடத்தில் உட்கார்ந்திருக்கும் நிலையிலேயே இதயம் வெடித்து இறந்து போய் விடக்கூடும். பிறகு புலிவேட்டையென்கிற வீர விளையாட்டுக்கும் அர்த்தமில்லாமல் போய் விடுமாதலால் புலியை உந்தி விடுவதற்கென்றே இட்டுக் கட்டப்பட்ட சில பிரத்யேக பாடல்களையும் முழக்கங்களையும் இசைப்பதில் தனிப்பயிற்சி பெற்றவர்கள் சிலர் வேட்டைக் குழுவில் சிறப்பிடம் பெறுவார்கள். வேட்டைக்கான சிறப்பு அழைப்புகளைத் தவிர்த்து மற்ற நேரங்களில் நகரத்தவர்களோடு ஒட்டாமல் நாட்டின் எல்லையோரமாக இன்னும் அழிக்கப்படாமல் வளர்ந்து செழித்திருக்கும் வனாந்திரத்தில் அபூர்வமான மிருகங்களின் தோலைக் கொண்டு கட்டப்பட்ட கூடாரங்களுக்குள் தங்களை மறைத்தபடி வாழ்ந்து வரும் வேட்டுவ ஜாதியினருக்குச் சொந்தமானவை நட்சத்திரவாஸிகளின் கலவி என்னும் பொதுப் பெயரால் அழைக்கப்படுகிற இந்தப் பாடல் தொகுதிகள். இந்த வேட்டுவ ஜாதி ஆண்களில் இருபது பேர்களைத்தான் நம் அரண்மனை நாவிதரும் மகா ஞானியுமான அப்பையா அன்று இரவு நம் பெண்ணின் படுக்கையறை வாசலில் பின்னிரவில் மூன்றாம் ஜாமம் துவங்கும் வரை நிறுத்தி வைத்திருந்தார். அவர்களோடு சேர்ந்து நானும் வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தேன். ராஜன் என்கிற மரியாதையை அப்பையா எனக்குக் கொடுக்கவில்லை என்கிற ஆதங்கம் அப்போது என் மனதை முள்ளாகக் குத்திக் கிழித்துக்கொண்டிருந்ததென்பது உண்மைதான். அதை நான் வெட்கத்தோடு ஒத்துக்கொள்கிறேன். அப்பையா மாத்திரம் இளவரசி படுக்கையறைக்குள் நுழைந்தபோது அவளுடனேயே தானும் உள்ளே நுழைந்து கொண்டுவிட்டார். நுழைந்து கொண்டுவிட்டார் என்று சொல்வதை விட நுழைந்து தன்னை மறைத்துக்கொண்டு விட்டாரென்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். சேடிப்பெண் வழக்கமாகப் படுத்துக்கொள்ளக் கூடிய இளவரசியின் படுக்கையறையை ஒட்டினாற் போலிருக்கும் இணைப்பறையின் படுக்கையில் தான் படுத்திருப்பது போலத் தோற்றம் தரும்படி தலையணைகளை வைத்து ஒரு உருவத்தை உண்டு பண்ணிவிட்டு மீண்டும் வெளியே வந்து அவர் இளவரசியின் படுக்கையருகே அமர்ந்து கொண்டதாக அனைத்தும் முடிந்த பிறகு என்னிடம் கூறினார். பின்னிரவின் மூன்றாம் ஜாமம் துவங்கும் போது அதற்கான மணி நகரின் மையத்தில் அடிபடும் சத்தம் கேட்டவுடன் கூட்டிசையை ஒலித்தபடி உட்புறம் தாளிடப்படாத படுக்கையறைக் கதவை திறந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்து ஒலிப்பதை நிறுத்தி விடாமல் இணைப்பறை வாசலை ஒட்டி இடது புற ஓரமாக நின்று கொள்ள வேண்டுமென்பது அப்பையாவின் கட்டளை. இரவின் அமைதியோடும் ஒரு மிருகத்தின் இதயத்துடிப்போடும் ஒரே சமயத்தில் இயைந்து போகும்படியாக கூட்டிசை வெளிப்பட்டுக் கொண்டிருக்க வேண்டுமென்றும் அவர் வற்புறுத்திச் சொல்லியிருந்தார். அறைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் அந்த நேரத்தில் அடங்கிய குரலில் நட்சத்திரவாஸிகளின் கலவி என்கிற பாடலின் வரிகளைப் பாடிப் பழகியும் வாத்தியங்களின் சுதியைத் தீட்டியும் மிகத் தீவிரமாக பயிற்சி செய்துகொண்டே இருந்தார்கள். அப்பையாவின் திட்டம் எவ்வளவு யோசித்துப் பார்த்தாலும் என் ஊகத்திற்கு அப்பாற்பட்டதாக இருந்ததால் யோசிப்பதை விட்டு விட்டு வேடர்களின் பாடல் பயிற்சியின் மீது என் கவனத்தைப் பதித்தபடி நான் பொழுதைக் கழித்துக் கொண்டிருந்தேன். முன்பு பல தடவைகள் புலி வேட்டைக்காக அவர்களுடன் நான் வனப் பகுதிகளுக்கு சென்றிருக்கிறேன். வெறும் ஊளை ஒலிகளையும் புரியாத வார்த்தைக் கண்ணிகளைக் கொண்ட பாடல் வரிகளையும் எழுப்புவதல்லாமல் அவர்கள் இதை இத்தனை சிரமமெடுத்துக் கொண்டு பயிற்சி செய்வார்களென்பது எனக்குத் தெரியவே தெரியாது. புலி இருக்குமிடத்தைச் சுற்றி அரைவட்டமாக தொலைவில் சூழ்ந்து கொண்டு அவர்கள் ஒலியெழுப்பும் போது என் கவனமெல்லாம் மறைவிடத்திலிருந்து புலி பாயவிருக்கும் திசையின் மீதும் தருணத்தின் மீதும் பதிந்து கிடக்கும். வெட்ட வெளியில் காரியார்த்தமாக வெளிப்பட்டு பிறகு காற்றோடு கலந்து போகும் ஒரு முரட்டு ஒலித் தொகுப்பு என்கிற எண்ணத்தால் நான் ஒருபோதும் அந்த இசைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துக் கவனித்துக் கேட்டதில்லை. அது எவ்வளவு மகத்தான தவறு என்பதை நான் உணர்ந்து கொள்ளும் சந்தர்ப்பமும் அந்த இரவில் எனக்குக் கிட்டியது. யஜுர் வேதத்தின் வேட்டைக்கான உச்சாடனங்கள் ராணீ அவர்களுடைய ஊளைகளிலும் சீழ்க்கைகளிலும் கொம்புக் கருவிகளினுள்ளும் ஏற்கனவே ஒளிந்து கொண்டிருந்தது. சிறுநெருப்பில் வாட்டப்பட்டு விரைப்பேறிக் கொண்டிருந்த அந்தக் கருவிகளுக்குள்ளிருந்து அவ்வப்போது ஒத்திகையாக அதிர்ந்து கொண்டிருந்தது நம் பெண் தன் அரங்கேற்றத்தின் போது வாசித்த யாழிசையைப் போல மனதைத் துயரத்தில் தோய்க்கும் சங்கீதமில்லை. மாறாக அரவின் விஷத்தைப் போல அதைத் தன் செவியால் தீண்டியவனுடைய புலன்களின் நிறத்தை கணப் பொழுதில் மாற்றுவது. இடியை ஊட்டி விட்டதைப் போலக் கேட்பனுக்குள்ளிருக்கும் ராஜஸத்தைப் பிழிந்தெடுப்பதாக இருக்கும் அந்த வினோதமான சங்கீதம். அந்த இசைக்குச் செவிமடுக்கும் கம்பீரம் மிருகங்களுக்கும் அசுரர்களுக்கும்தான் வாய்க்கக் கூடுமென்று யாரேனும் சொன்னால் அதை உண்மையென்று நீ நம்பலாம்.

நானொரு அசுரனில்லை என்பதைத் தெளிவாகச் சொல்வதைப் போல பின்னிரவின் மூன்றாம் ஜாமம் துவங்குவதை அறிவிக்கும் மணியோசை நகரின் மத்திய மணிக் கூண்டிலிருந்து இருதயம் பிளந்து போகும் வண்ணம் உரத்து எழுப்பப் பட்ட கணத்தில் அப்பையா சொன்னபடி தீட்டப்பட்ட பாடல்களையும் இசைக் கருவிகளையும் முழக்கியவாறே படுக்கையறையின் கதவுகளைத் திறந்து கொண்டு இருபது வேடர்களும் உள்ளே நுழைந்தார்கள். அவர்கள் பின்னே நானும் இருபத்தியோராவது ஆளாக அறைக்குள் நுழைந்தேன். திறக்கப்பட்ட அறை வாசலின் வழியாக நாங்கள் நுழைவதற்கு முன்பே உள்ளே பாய்ந்து பாய்ந்த வேகத்திலேயே அறையின் விதானத்தைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எட்டித் தொட்டுவிட்டுப் புறப்பட்ட இடத்திற்கே திரும்ப வந்து விட்ட நட்சத்திரவாஸிகளின் கலவி எனும் பாடலின் முதல் ஸ்வரத் துணுக்கு அந்தக் கணத்தில் இசைக் கருவிகளிலிருந்து புறப்பட்டுக் கொண்டிருந்த அடுத்த துணுக்கை அந்தரத்தில் மோதியதால் இசைத் தொடர் சிதறி வெற்றுக் கூச்சலாக உதிர்ந்துவிழப் போகிறதென்று நான் நினைத்ததற்கு மாறாக அந்தரத்தில் மோதிய ஸ்வரங்களின் புணர்ச்சியிலிருந்து அறையினுள் ஜனித்து வானவில்லின் பிரகாசத்தையும் வர்ண ஜாலங்களையும் ஒத்த ஜொலிப்புடன் இங்குமங்குமாக உருண்டு திரிந்த மிக அற்புதமான புத்தம் புதிய ஒலிக் கோளங்களின் ஒருமித்த பிரகாசம் அறையின் ஒவ்வொரு அணுவிலும் பட்டுப் பல்லாயிரக்கணக்கான தீப்பொறிகளாக சிதறியடித்தது. தரையிலிருந்து தொடர்ந்து புறப்பட்டு வந்து கொண்டிருந்த இசைத் துணுக்குகள் விதானத்தில் மோதி தொடர்ந்து திரும்பி வந்துகொண்டிருந்த அதற்கு முந்தைய துணுக்குகளின் எதிரொலியுடன் இயைந்து இவ்வாறாக அறை முழுவதையும் தாங்க முடியாத லயச் சூட்டால் இளக்கியதால் இளகி விரிவடையத் துவங்கிய பொருள்களுடனுள் ஒரு சிறு நகக் கீறலில் கூட வெடித்து விடும்படி சுவர்கள் மிக மெல்லிய தகடாக மாறிக்கொண்டிருக்க காற்றடைத்த தோல்பையைப் போல அறையும் நாலா பக்கங்களிலும் உப்பிப் பெரிதாகிக்கொண்டே போனது. அலங்கார சாதனங்களும் முகம் பார்க்கும் பளிங்காடியும் குடிநீர்க் கோப்பைகளும் இலவம் பஞ்சடைத்த மெத்தை விரிப்புகளும் முட்டை விளக்குகளும் இனிய கனவுகளை அருளும் கடவுளர் திருவுருவங்களும் இளவரசியின் பயிற்சிக்கென்று பதிக்கப்பட்டிருந்த யாழும் வீணையும் அந்த பிரம்மாண்டமான இசையை உட்கொண்டு விம்மிப் புடைத்துக்கொண்டிருந்தன. அவை யாவும் உள்ளீடற்ற வெற்றுப் போர்வைகளாக மாறிவிட்டிருந்ததை நான் என் கண்களால் கண்டு அதிசயப்பட்டேன். வெப்பத்தால் இளகி எடையை இழந்த அத்தனை பொருட்களும் அங்கே அந்தர வெளியில் உருண்டு அலைந்து கொண்டிருந்த இசைக் குமிழிகளோடு சேர்ந்து மெதுவாகப் பறந்து செல்லத் துடித்தன. நான் ஓடிப் போய் இளவரசின் படுக்கையருகே சென்று கட்டிலின் கால்களை என் வலது காலால் சுற்றி வளைத்தபடி நின்றுகொண்டேன். அவ்வளவுதான் என்னால் செய்ய முடிந்தது. கனவிலும் நினைத்துப் பார்த்திராத அந்த மகோன்னதமான கூட்டிசை விளைவித்த ஆனந்தமும் சன்னதமும் அளவு கடந்த பீதியும் என்னை என்னிலிருந்தே பிரித்துக் கொஞ்சம் கொஞ்சமாக மீள முடியாத தொலைவுக்குள் உந்திக் கொண்டு சென்றன. ஒளியாகவும் வாசனையாகவும் ஒலியாகவும் என்னுள் இறங்கிக் கொண்டேயிருந்த இசை என்னை நீந்தத் தெரியாமல் தண்ணீரில் விழுந்தவனைப் போல புரட்டி எடுத்துக் கொண்டிருந்தது. அந்த நிலை மேலும் கொஞ்ச நேரம் நீடித்திருந்திருக்குமேயானால் ராணி இந்தக் கதையை இங்கே உனக்குச் சொல்ல இப்போது நான் இருந்திருக்க மாட்டேன். விரிசல் காணத் துவங்கியிருந்த அறையின் விதானம் வழியே நெருப்பின் நாக்கைப் போல லாவகத்துடனும் விருப்பத்துடனும் நான் இந்தப் பூதவுடலுடனே வான மேகிப் போயிருந்திருப்பேன். என் உடலை என் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை என்கிற வெட்கம் வேறு அப்போது என்னைப் பிடுங்கி எடுத்துக் கொண்டிருந்தது. ஏனென்றால் ஒலிப் பிரவாகத்தின் அந்தப் பாய்ச்சலில் ஒரு துரும்பு போல அங்கே அப்படி அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்தவன் அப்போது நான் மட்டும்தான். அறை முழுவதையும் தலைகீழாக மாற்றிப் போட்டிருந்த அந்த மாபெரும் பாடல் அதை இசைத்துக்கொண்டிருந்தவர்களையும் அப்பையாவையும் நம் பெண்ணையும் ஒரு சிறிதும் பாதிக்கவில்லை. வாசித்துக்கொண்டிருந்த இருபது பேரையும் கண்டு நான் ஆச்சரியப்படவில்லை. இணைப்பறை வாசலின் வெளிப்புறமாக இடது புறச் சுவற்றில் வரிசையாகவும் இசைக்க வசதியாகவும் சாய்ந்து முதுகைப் பதித்தபடி அவர்கள் தங்கள் கடமையை சரிவரச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களே அந்த அற்புதத்தின் சிருஷ்டிகர்த்தாக்கள். வண்ணமயமான இசைக் கோளங்களின் குதூகலமும் பெருக்கமும் சாவும் மறுபிறப்பும் அவர்களின் விரல் நுனியின் அசைவில் தான் நிலைகொண்டிருந்தது. ஆகவே அவர்கள் தாங்களே வண்ணப்பந்துகளாக மாறும் வண்ணம் இசையினுள் தங்களை இழந்து விட முடியாது. அப்பையாவைக் கண்டும் நான் ஆச்சர்யப் படவில்லை. அவர் நம் பெண் மலர்ந்திருந்த சப்பரமஞ்சத்தின் மறுபுற விளிம்பில் கையை ஊன்றியபடி இணைப்பறை வாசலை ஊடுருவிய பார்வையுடன் அசையாமல் நின்று கொண்டிருந்தார். அவரே அந்த மந்திர இசைப்பின் காரண கர்த்தா. அதை விஞ்சும் எண்ணற்ற வினோதங்களைப் பார்த்தவர். சாதிப்பவர். சுழன்று கொண்டிருந்த சூழலுக்குள் விழுந்து விடாமல் அவரால் தன்னை எப்போதும் பிரித்தே நிறுத்திக் கொண்டுவிட முடியுமென்பது எதிர்பார்க்கக்கூடிய ஒன்றுதான்.

நான் ஆச்சர்யப்பட்டது ராணீ நம் பெண்ணைக் கண்டுதான். அவள் தன் தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து படுக்கையின் மீதே சம்மணம் இட்டு அமர்ந்திருந்தாள். அவள் முகத்தில் திணறலின் ரேகைகளோ திடுக்கிடலின் சிதறலோ சிறிதும் காணப்படவில்லை . மாறாக அவள் தன் நயனங்களையும் நாசியையும் நன்கு உயர்த்தி விரித்து நட்சத்திரவாஸிகளின் கலவியொலியையும் அதன் மெல்லிய காட்டுப் பூ மணத்தையும் ஆழ்ந்து சுவாசித்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் மகிழ்ச்சியில் விகசித்துப் போயிருந்தது (அவள் மார்பு இசையின் லயத்தோடு இயைந்து விம்மித் தணிந்து கொண்டிருந்தது). நானோ பாதி இசையின் வினோதத்திலும் பாதி நம் பெண்ணின் இந்த நிலையிலுமாகச் சிக்கித் திணறிக் கொண்டிருந்தேன். அவள் அப்போது என்னையும் அப்பையாவையும் ஒரு பொருட்டாக மதித்து எழுந்து நின்று மரியாதை கொடுக்கவில்லை. எங்கள் பக்கம் முகத்தைத் திருப்பவும் இல்லை. சொல்லப்போனால் நாங்களும் வாத்தியக் குழுவும் அங்கே நின்று கொண்டிருந்த பிரக்ஞையே அவளுக்கு இல்லை. அறையை நிரப்பித் ததும்பிக் கொண்டிருந்த இசைத் துகள்களின் புணர்ச்சியோடும் வண்ணக் கோளங்களின் பிறப்போடும் அவற்றின் அலைவோடும் குதூகலத்தோடும் அவளுடைய விழிகள் மட்டும் நிலை கொள்ளாமல் மோதியும் பிறந்தும் அலைந்தும் துடித்துக் கொண்டிருந்தன. ஒரு சாதாரணமானுடப் பிறவியால் தாள முடியாத ஆனந்தப் பொழிவை வெகு சாதாரணமாக மென்று தின்று கொண்டிருந்த நம் பெண்ணின் அசாத்தியமான முகப்பொலிவைக் கண்டு பெரும் பீதி என்னைப் பீடித்துக் கொண்டு விட்டது. நகர்வலத்திற்கு அல்லாமல் வேட்டைக்கென்று நான் அவளை ஒரு போதும் கானகத்தின் பக்கம் அழைத்துச் சென்றதே கிடையாது. சிறுபெண் வனவிலங்குகளின் உக்கிரத்தையும் உடல் மணத்தையும் நேரில் பார்த்து அனுபவிக்கும் மனப்பக்குவம் அவளுக்கு இன்னும் கைகூடியிருக்காது என்பது என் எண்ணம். அற்புதமான அந்த இரவுக்குப் பிறகும் இப்போது இதை உனக்குச் சொல்லிக்கொண்டிருக்கும் இந்தக் கணம் வரைக்கும் இந்த எண்ணத்தை என்னால் மாற்றிக் கொள்ள முடியவில்லை. வேட்டையின் போது மட்டுமே இசைக்கப்படும் நட்சத்திரவாஸிகளின் கலவி முதலிய பாடல்களின் தொகுப்பை அவள் அதற்கு முன்பு கேட்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் அவளோ ஒவ்வொரு நாளும் தன் படுக்கையறையில் வேட்டை இசை நிகழ்ச்சி ஒன்றைத் தனக்கென நிகழ்ந்த ஏற்பாடு செய்துகொண்டு அதை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பவளைப் போன்ற இசைவுடனும் பழக்கச் சாயலுடனும் காணப்பட்டாள். இதன் மர்மத்தை அப்பையாவால் மட்டும் தான் விளக்க முடியும். அவள் உயிருடன்தான் இருக்கிறாளா என்கிற பெருத்த சந்தேகம் என்னுள் சாரைப்பாம்பு போல் வழுக்கிக் கொண்டிறங்கி வயிற்றில் சுருண்டு வாலையடித்தது. குழப்பமான இந்த உணர்வுகளிலிருந்து நான் விடுபட்டு நிதானித்துக்கொள்ளும் முன்பே அந்த அதிசய நாடகத்தின் அடுத்த காட்சியும் துவங்கிவிட்டது. இணைப்பறை வாசலில் தொங்கிக் கொண்டிருந்த திரைச் சீலையைப் பிளந்து கொண்டு வெளியே வந்தது ஒரு வரிப்புலி. அது படுக்கையறைச் சுவற்றின் ஓரமாகவே மெதுவாக நடந்து அங்கிருந்த பொருட்களை ஊடுறுவிக் கடந்து சென்று அறையின் சாளரத்தை அடைந்தது. சாளரத்தின் வழியாக அதன் வெளிப்புறமிக்க வேப்பமரத்தின் உச்சிக் கிளைக்குத் தாவி பிற கிளைகளின் வழியாக மரத்திலிருந்து கீழிறங்கி நிலவொளியில் மிதப்பதைப் போல் நந்தவனப் புற்களின் மேலாகப் பாரவி விரைந்து காணாமல் போனது. புலி எங்கள் கண்களில் தென்பட்ட முதல் வினாடியிலிருந்து துவங்கி அறுபது விநாடிகள் அவகாசத்திற்குள் இது நடந்து முடிந்துவிட்டது. அதோடு அந்த இரவின் வினோத நிகழ்ச்சிகளும் முடிவுக்கு வந்து விட்டன. பிறகு இசைப்பவர்கள் இசைப்பதை நிறுத்திக்கொள்ளும்படி அப்பையா கையை உயர்த்திச் சைகையால் அறிவித்தார். பெருகிக் கொண்டிருந்த சங்கீதம் நின்றுபோனதும் அறையினுள் பிரகாசித்துக் கொண்டிருந்த வண்ணக் கோளங்கள் உடைந்து கரைந்தன. அறையும் பிற பொருட்களும் தத்தம் இயல்பான உருவத்திற்கு மிக வேகமாகச் சுருங்கி மீண்டன. இமைக்கும் நேரத்துக்குள் நான் கண்ணெதிரே கண்டு கொண்டிருந்த அற்புதங்களனைத்தும் என்றும் அங்கே நடந்திருக்கவே இல்லை என்பதைப் போல அறையின் சாதாரணத்துவம் திரும்பியிருந்தது. புலி தாவிச் சென்ற சாளரத்தின் வழியாக அப்போது மிகச் சுகந்தமான காற்று அனைத்தும் சுபமாக முடிந்ததை அறிவிக்கும் விதத்தில் உள்ளே நுழைந்தது. நாங்கள் அனைவரும் மயங்கிப் படுக்கையில் துவண்டு விழுந்திருந்த நம் பெண்ணைச் சுற்றிச் சூழ்ந்து கொண்டோம். இணைப்பறை வாசலில் புலி வெளிப்பட்ட தருணமானது எனக்களித்த அதிர்ச்சியிலிருந்து நான் அப்போதும் இப்போதும் மீண்டும் வந்து விடவில்லை. உண்மையைச் சொல்லுவதானால் சற்றும் எதிர்பாராத நம்பற்கரிய அதுபோன்ற சூழலிலிருந்து புலி ஒன்று வெளிப்படப் போவதை அங்கே வாசித்துக் கொண்டிருந்த வேட்டைக்காரர்களே எதிர்பார்க்கவில்லை. அது எங்கள் கண் முன்னே தோன்றிய கணத்தில் அதிர்ச்சியால் இசையில் லயப்பிசகு ஏற்பட்டு விடும் அபாயத்தைத் தவிர்க்க அவர்கள் கடும் முயற்சி எடுத்துக்கொண்டிருந்தார்கள். இசையின் கண்ணிகள் இயல்பாகப் பிரிந்து தளர இருக்கும் தருணத்தில் அதன் ஒழுங்கு கலைவது வெளியே வந்து நிற்கும் புலியின் இதயத்துடிப்பை நிறுத்திவிடும் என்று அவர்கள் முன்னிலும் பிரமாதமாக வாசித்ததில் இசை அதன் உச்சக்கட்டத்தை அப்போது எட்டியிருந்தது. அப்பையாவைப் பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. அவர் முகத்தில் எதிர்பாராத எதையும் அங்கே காணும் சலனம் ஒரு சிறிதும் ஏற்பட்டிருக்கவில்லை . புலி அறை வாசலில் தென்பட்ட கணத்தில் அவர் தன் பார்வையை நம் பெண்ணின் மேல் பதிய வைத்திருப்பதைக் கண்டேன். ஒரு கடும் வனவிலங்கை முன்னெப்போதும் நேருக்குநேர் சந்தித்திராத நம் பெண் புலியைப் பார்த்ததும் வீரிட்டு ஆதரவாகப் பற்றுவதற்காக என் கைகளை அவள் தோள்களுக்கு நகர்த்தினேன். அப்பையா அதைத் தன் கண்ணசைப்பால் தடுத்து நிறுத்திவிட்டார். பிறகு நான் பதற்றமடையத் தேவையில்லை என்று சொல்வதைப் போன்ற பாவனையில் அவர் என்னைப்பார்த்துச் சிரிக்கவும் செய்தார்.

– தொடரும்…

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *