கடற்கரை மணலில் அமர்ந்திருந்தான் அவன். தன் எதிர்காலம் கேள்விக்குறியாவதை நினைத்து வெம்பிக்கொண்டிருந்தான், பார்த்திபன். வருங்காலம் அவனின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கலாம். ஏன் அவனை ஒரு அரக்கன் என்று கூட அழைக்கலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் அவன் கவலைப்படப்போவதில்லை. மறதி ஒன்றே மக்களின் மிகப்பெரிய பலவீனம். மறந்துவிடுவார்கள். இதையும்.
இங்கொன்றும் அங்கொன்றுமாய் விழுந்துகொண்டிருந்த துளிகளில் ஒன்று, அவன் வாய் மறைக்கும் அடர் மீசையைத் தாண்டி உதட்டில் விழுந்தது. நிமிர்ந்து வானம் பார்த்தான். வானத்தை கருமேகமது மூடியதால் கடுங்கோபம் கொண்டு வசைபாடியிருக்கும். வசைச்சொல் கேளமுடியாத கருமேகமது அழ ஆரம்பித்திருக்கும். அரசவைப் புலவர்கள் பலர் இதுபோன்றதொரு தருணத்தில் தான் பாடல்கள் எழுதுவார்களோ? வியந்தான்.
தான் காத்திருக்கும் அந்தத் தருணத்தை வீணாக்க விரும்பாமல் தன் சுற்றுப்புறத்தை ரசிக்க எண்ணினான். காப்பாற்ற ஆளில்லாது செஞ்-சூரியன் கடலில் மூழ்கி சில மணி நேரமாகிறது. பகலில் நீலக்கடலாகவும் இரவில் கருங்கடலாகவும் உருமாறும் அந்தப் பச்சோந்தியை ஏறிட்டான். பல நாட்களாக வெயிலின் சூடு தாங்காமல் சுற்றித் திரிந்த காற்று, மழையதின் குளிரிலே நின்று நனைந்துகொண்டிருந்தது. காற்றோடு காற்றாய் தானும் நனைந்து கொண்டான். கனத்த மனதை அமைதிப்படுத்த அவனுக்கு மழைத்துளியும் தேவைப்பட்டது. ஆர்பரிக்கும் கடல் பலரை அமைதிப்படுத்தும் சூட்சுமம் அறிய எண்ணினான்.
சற்று தொலைவில் கருங்கடலின் தலையதைத் தொட்டுச் சென்ற அந்த வெண்புகை ஒரு அமானுஷ்ய அலையை உருவாக்கியது. காந்திமதியை நினைத்துக்கொண்டான். அவள் வருவதை காவலர்கள் அறிவிக்கும் முன்னமே அவளின் காற்சிலம்பங்கள் அறிவித்துவிடும். மாணிக்கம் கோர்த்த அந்தச் சிலம்புக்குள் இசைக்கலைஞர்கள் சிலர் ஒளிந்திருப்பர்களோ? அவன் சிந்தனையை இடியொன்று வெடித்துக் கலைத்தது. ஓராயிரம் சூரியனின் ஒளியதை ஓர் நொடி தந்த அந்த மின்னல், தன் பிம்பத்தை கடலில் கண்டு ரசித்திருக்குமோ? நிலமதில் இறங்க வெறுத்து கடலில் இறங்கும் அந்த இடி, கடல் நீரை சூடாக்குமோ? இல்லையில்லை, மழைத் துளியைப் போல் இந்தக் கடல் அந்த இடியையும் குடித்து ஏப்பம் விட்டுவிடும்.
காத்திருந்த செய்தியை காவலன் பறைத்தான். இடைவாளினை ஒதுக்கியபடி எழுந்த அவன், ஆயிரம்கால் மண்டபம் நோக்கி நடக்க ஆரம்பித்தான். தன்னுடன் வந்த காவலாளியை பாதிவழியில் அரண்மனை செல்ல உத்தரவிட்டான். மண்டபத்தை அடைந்து, அங்கே காவலுக்கிருந்த பணிப்பெண்களையும் மற்றவர்களையும் வெளியே அனுப்பிவைத்தான். தனக்காக காத்துக்கொண்டிருந்த மைத்ரேயி தன் முகம் மறைத்து முக்காடிட்டிருந்தாள். அவளருகில் சென்று நின்றான். “இது தான் சமயம் பார்த்திபா. உன் இரை, உனக்காய் காத்திருக்கிறது”.
“எங்கிருக்கிறான்?”
“அரண்மனைக்கு பின்பகுதியிலுள்ள கடற்கரையை ஒத்துள்ள பயிற்சிப்பள்ளியில்”
“ம்ம்ம்ம்ம்” மனதை ஒருமுறை கனமாக்கிக்கொண்டான். வந்த வழியே மீண்டும் நடக்க ஆரம்பித்தான். மழை வலுத்திருந்தது. லேசான புயலும் சேர்ந்துகொண்டது. தன் மனதை பிரதிபலிக்கும் இயற்கையை ரசிக்கும் வேளையில் அவன் இல்லை. இளந்திரியன் இறக்கவேண்டும். இடைவாளை பிடித்துக்கொண்டே பயிற்சிப்பள்ளி நோக்கி நடக்க ஆரம்பித்தான்.
‘டங் டங்’ என்ற கனத்த இரும்புகளின் மோதல் ஒலிகளுக்கூடே இளந்திரியன் சிரித்துக்கொண்டிருந்தான். “இன்றென்னிடம் நீ தோற்கத்தான் போகிறாய்” கவனத்தை சிதறவிடாமல் தன் எதிரியை கேலி செய்துகொண்டிருந்தான். கனத்த தென்னை ஓலைகளால் வேயப்பட்ட கூரை, அடித்த அந்த பலத்த காற்றிற்கும் மழைக்கும் சவால் விட்டுக்கொண்டிருந்தது. செம்மண் தரையில் வேர் போல ஊன்றி நின்றுகொண்டிருந்த இளமூங்கில்கள் கனத்த கூரையை எளிதாய்த் தாங்கின. காற்றில் தெறித்த ஒருசில துளிகளால் ஈரமாயிருந்த செம்மண், இளந்திரியன் மற்றும் சிலரின் கால்தடத்தை பொக்கிஷமாய் பாதுகாத்துக்கொண்டிருந்தது.
பயிற்சிப்பள்ளியை அடைந்த பார்த்திபன், அங்கே இளவரசனின் காவலுக்கு நின்றுகொண்டிருந்த வீர்கள் அனைவரையும் கொன்று வீழ்த்தினான். மன்னரின் தம்பியிடமிருந்து அந்தத் தாக்குதலை எதிர்பார்பதர்க்கு முன்னாலே அவர்கள் சுவர்க்கம் எய்தியிருந்தனர். பள்ளியின் மரக்கதவை திறந்த பார்த்திபன், தலைமை பயிற்சியாளரின் குழப்பம் மிக்க முகம் தெளியும் முன்னரே அவர் தலையை எடுத்தான். இதற்குள் சத்தம் கேட்டு பயிற்சியை நிறுத்தியிருந்த இளந்திரியன் மற்றும் அவன் வயது பாலகர்கள் இருவர் பார்த்திபனை குழப்பத்துடன் பார்த்தனர்.
“என்னாயிற்று சிற்றப்பா, ஏன் சங்கமித்ரரைக் கொன்றுவிட்டீர்கள்? அவர் என்ன தவறு செய்தார்?”
“உனக்கு வாள்வித்தை கற்றுத் தந்ததைவிட வேன்றோன்றும் செய்துவிடவில்லை.”
“பிறகேன் அவரைக் கொன்றீர்கள்?”
“நான் உன்னைக் கொல்லப்போவதை வேறு யாரும் தடுக்கக்கூடாது. அதற்காகவே” அதிர்ச்சியும் குழப்பமும் இளந்திரியனை ஒன்றைத் தாக்கின. அவனருகில் இருந்த பாலகர்களுக்கும் அதே குழப்பம்.
“என் மகன் இளமாறன் மன்னனாகவேண்டுமெனில், நீ கல்லறைக்குச் செல்வதே ஒரே வழி” கனைத்த பார்த்திபன், இளந்திரியன் அருகிலிருந்த பாலகர் இருவரின் தலையையும் தன் குருதிவடியும் கூர்வாளால் உடலிலிருந்து பிரித்தெடுதான். இளந்திரியன் அந்த பாலகர்கள் போல் இல்லை. தன் கழுத்தை நோக்கி வந்த கூர்வாளை லாவகமாக தன் வாளால் தடுத்து நிறுத்தினான். பார்த்திபன் வாளிலிருந்த குருதி சில தெறித்து இளந்திரியன் முகத்தில் விழுந்தது.
“சற்று பொறுங்கள் சிற்றப்பா” தொடர்ந்த பார்த்திபனின் வாட்சுழற்சியை தடுத்தவாறே பேசினான். “இளமாறன் என் ஆசைத் தம்பி. அவனுக்குன்டான மரியாதைகள் அவனை எப்போதும் சென்று சேரும்” சட்டென்று பார்த்திபனின் சுழற்சிக்கு தன் தலை தப்புமாறு குனிந்தான். அடுத்த கணமே நிமிர்ந்து, சற்று எக்கி தன் வயிற்றை குறிவைத்த வாளில் இருந்து விலகினான். வலக்கையைத் தாக்கவரும் வாளை செங்குத்தாய் பிடித்த தன் வாளால் நிறுத்தினான். அக்கணமே பார்த்திபனின் இடதுகால் அவனின் வயிற்றை எட்டி உதைத்தது.
கீழே விழுந்த பின்னும் பார்த்திபனின் வாளிற்கு பதில் தந்தான் இளந்திரியன். சங்கமித்ரன் நன்றாகத் தான் கற்றுத் தந்திருக்கிறார், எண்ணினான் பார்த்திபன். இதற்குள் தான் பேசுவது வீண்வேலை என்பதைப் புரிந்த இளந்திரியன், சண்டையில் கவனத்தை செலுத்தினான். வாட்போரில் வீரரான தன் சிற்றப்பாவைத் தோற்கடிப்பது எளிதல்ல என்பதை அவன் உணராமல் இல்லை. இந்த சண்டையின் நோக்கம் தான் உயிர் பிழைப்பதேயன்றி பார்த்திபனைத் தோற்க்கடிப்பதல்ல என்னும் முடிவிற்கு வந்த இளந்திரியன், தன் உத்திகளையும் சக்திகளையும் தாக்குதலுக்கு பயன்படுத்தாமல் தடுப்பதிலேயே செலவழித்தான்.
லாவகமாக தன் வீச்சுகளை தடுக்கும் இளந்திரியனை மேலும் கோபம் கொண்டவனாய் தாக்க ஆரம்பித்தான் பார்த்திபன். அவர்களின் சண்டை பயிற்சிப்பள்ளியைத் தாண்டி கடற்கரைக்கு வந்திருந்தது. சற்று கனமாய்ப் பெய்துகொண்டிருந்த மழையில் நனைந்தவாறே சண்டையிட்டனர். தன் பயிற்சி வாள் பார்த்திபனின் இந்த வெறித் தாக்குதலுக்கு வெகுநேரம் தாங்காது என்பதை இளந்திரியன் உணர்ந்தபோது கடற்கரைக்கு யாரோ ஓடிவருவது தெரிந்தது. வந்தது வெண்பா. இளந்திரியனின் காதலி. முதலில் இளந்திரியன் தன் சிற்றப்பாவோடு பயிற்சியில் ஈடுபடுகிறான் என்று நினைத்த வெண்பா, சற்றுநேரத்தில் நிலைமையின் விபரீதத்தை உணரத் தொடங்கினாள்.
வெண்பாவின் வரவை தன் புலன்கள் அறிவித்தாலும் இளந்திரியனும் பார்த்திபனும் தொடர்ந்து சண்டையில் கவனம் செலுத்தினர். பார்த்திபன் மெல்ல மெல்ல தன் வேகம் குறைவைதை உணர்ந்தான். வெகுநேரம் மழையில் நனைந்தது தன் பங்கிற்கு அவனை வலுவிழக்க வைத்தது. மின்னல் வேகத்தில் அவனின் அந்த அரசியலில் தேர்ந்த மூளை ஒரு குரூர எண்ணத்தை அவனுள் விதைத்தது. அதன்படியே இளந்திரியனின் வலதுகையை நோக்கி வாளை சுழற்றியவாறே தன் இடதுகையால் அவன் முகத்தில் குத்தினான். நிலைகுலைந்து கீழே விழுந்த இளந்திரியன் சுதாரிப்பதற்குள் வெண்பாவை நோக்கி ஓடினான் பார்த்திபன்.
பார்த்திபனின் முகமும் வாளும் வெண்பாவிற்கு அவன் தன்னை நெருங்கும் நோக்கம் உணர்த்தியது. திரும்பி ஓட ஆரம்பித்தாள். கடற்கரை மணல் அவளின் இயல்பான வேகத்தை குறைக்க, கோட்டையருகே இருந்த பனைமரம் நோக்கி அவள் வைத்த மூன்றாவது எட்டில் தன் முதுகில் குளிர் உலோகம் இறங்குவதும், அது ஏற்படுத்திய வலியும் கூடவே இளந்திரியனின் “வெண்பா” என்கிற அலறலும் வந்தது. கண்கள் சொருக, ஈனமாய் அவளின் முனகல் ஒன்று, உடலிலிருந்த உயிரையும் சேர்த்து எடுத்து வெளிவந்தது. வெண்பாவின் உடலில் இன்னுமிருந்த வாளின் முனைப்பகுதி ரத்தமும், மழை நீரும், கடற்கரை மணலும் சேர்ந்தவாறு மூச்சு வாங்கும் பார்த்திபனின் காலடியைப் பார்த்து நின்றது. குருதி, தன் திரவநிலையை கடற்கரை மணலில் தொலைத்துக்கொண்டிருந்தாலும், தன்னால் முடிந்தவரை மணலின் நிறம் மாற்றிக்கொண்டிருந்தது. ஓடி வந்த இளந்திரியன், நிராயுதபாணியான பார்த்திபனின் தலையைக் குறிவைத்து வீசிய வாளை லாவகமாகப் பிடித்த பார்த்திபன், தன் இடுப்பிலிருந்த குறுவாளை இளந்திரியனின் இதயத்தில் செலுத்தினான்.
“இளமாறனுக்காக” பார்த்திபன் சொல்லி முடித்தான். வலுக்கத்தொடங்கியிருந்த மழையினூடே வீரர்கள் ஓடி வருவதைப் பார்த்த பார்த்திபன், அவர்களைத் தாக்கும் எண்ணத்தைக் கைவிட்டான். தன் மகனின் வருங்காலம் தன்னைப்போல ஒரு அரசனின் நிழலில் இருக்காது என்ற எண்ணமே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. ஓடி வந்த வீரர்கள் சரிந்து கிடக்கும் இளந்திரியன் மற்றும் வெண்பாவின் உடலைக்கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
“தளபதியாரே, இங்கு என்ன நடந்தது? இளவரசனை யார் கொன்றது?”
ஒரு நொடி இருவரின் உயிரற்ற உடலைப் பார்த்த பார்த்திபன், “வெண்பா இளந்திரியனைக் கொன்றுவிட்டாள். ஒரு வேகத்தில் யார் அவளை ஏவியது என்று கேட்காமல் நானே அவளையும் கொன்றுவிட்டேன்.”
“ஐயோ, இந்நாளின் துயரங்கள் முடிவுக்கே வராதா? தளபதியாரே, அரண்மனையில் மன்னரையும் இளமாறனையும் யாரோ கொன்றுவிட்டார்கள். அச்செய்தியை உங்களிடமும் இளவரசனிடமும் கொணரவந்த இடத்தில் இப்படியொரு துயரா?” கதற ஆரம்பித்தான் அந்தக் காவலர்களுள் ஒருவன்.
“என்ன? என் மகன் இளமாறனுக்கு என்ன ஆயிற்று? மன்னரைக்கொன்றது யார்?” சற்று நேரம் முன் கடலில் இறங்கிய அந்த இடி, அவன் தலையில் இறங்கியது போல் இருந்தது. ‘இளமாறா’ ‘இளமாறா’ என நெஞ்சம் கதற ஆரம்பித்தது.
“தெரியவில்லை தளபதியாரே. தங்கள் சகோதரி மைத்ரேயியைக் காணவில்லை. தாங்கள் உடனே அரண்மனை சென்று அமைச்சருக்கு உதவுங்கள். இளவரசனின் உடலை நாங்கள் அரண்மனை எடுத்து வருகிறோம்.”
இதயம் படபடக்க அரண்மனை நோக்கிச் செல்லத் திரும்பியவன், அடுத்த எட்டு வைக்கும்முன்னே ஈட்டி ஒன்று அவன் முதுகு வழி நெஞ்சம் துளைத்து வெளிவந்தது. வலியானது அவன் மூளைக்குச் சென்றதும், அவனின் பல வருட போர் அனுபவங்கள் ஒன்றுசேர்ந்து, அவன் கையை இடைவாளுக்கு கொண்டு செல்ல மூளைக்கு உத்தரவிட, அது வெண்பாவின் முதுகில் இருப்பதை தாமதமாகவே உணர்ந்தான். இதற்குள் இன்னுமிரு ஈட்டிகள் அவனின் அகண்ட மார்பைத் துளைத்து வெளிவந்தன. கடைசியாய் இழுத்த மூச்சை வெளிவிட சிரமப்பட்டவாறே மெல்லத் திரும்பினான்.
“மைத்ரேயி மற்றும் அரங்கநாதனின் பரிசு” என்றான் அந்தக் காவலாளி.
மகன்கள் இளமாறன் மற்றும் இளந்திரியன் முகங்கள் அவன் முன்னே வந்து சென்றது. கடைசியாய் மைத்ரேயியைப் பார்த்துவிட்டுச் சென்றபோது அவள் உதிர்த்த அந்த விஷமப்புன்னகையையும், ஆயிரங்கால் மண்டபத் திரையின் பின்னேயிருந்த அவள் மகன் அரங்கநாதனையும் காணாத அந்த விழிகள் திறந்தவாறே மண்ணில் சரிந்தான், பார்த்திபன். மழையானது, திறந்திருந்த அவன் வாய்நிரப்பி வழிந்துகொண்டிருந்தது.