யாராலும் முடியும் தம்பி!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 22,011 
 
 

“நிலா’ பத்திரிகையின், சேலம் பதிப்பு அலுவலக வளாகத்திற்குள் பிரவேசித்தது, எடிட்டர் சங்கரலிங்கத்தின், கறுப்பு நிற பிஎம்டபிள்யூ கார்.
ஒட்டுனர் கதவைத் திறந்து கொண்டு சங்கரலிங்கம் இறங்க, நானும் இறங்கினேன். வயர்லெஸ் செட்டையும், இரு கைபேசிகளையும் எடுத்துக் கொண்டு நடந்தார். அலுவலக உதவியாளன், அவரது சூட்கேசை எடுத்துச் சென்றான். நான், ஒரு பத்தடி தூரம் விட்டு, அலுவலகத்தை நோட்டமிட்டபடியே நடந்தேன்.
எடிட்டரின் குளிர்பதன மூட்டப்பட்ட அறையில், அவரது இளைய சகோதரர்கள் இருவர், ஏற்கனவே வந்து அமர்ந்திருந்தனர்; வணங்கினேன்.
“”என்ன எழுத்தாளரே… சவுக்கியமா?”
“”இறைவனின் நாட்டத்தாலும், உங்க அன்பாலும், ஆதரவாலும் சவுக்கியம்.”
“”பேத்தி என்ன பண்றா?”
யாராலும் முடியும் தம்பி!“”நல்லா நடக்கிறா… அத்தா, அம்மா, அல்லா, தாத்தா, நாணி சொல்றா…
“தாத்தா’ ங்கிற வார்த்தையை கேட்டு, காது, தித்திக்குது சார்!”
நான் சொன்னதை மூன்று சகோதரர்களும் ரசித்தனர். சங்கரலிங்கத்தின் கண்கள், சுவர் கடிகாரத்தை உற்று நோக்கின.
“”என்ன பிரதர்ஸ்… குடுத்திடலாமா?”
“”ஓ!”
எழுந்தார். அறையை விட்டு வெளியேறினோம். பெண் உதவியாளர், ஒரு பெரிய ட்ரேயில், மூன்று பொக்கேயும், மூன்று சாவித் கொத்தையும் சுமந்து வந்தாள்.
கார் பார்க்கிங்கில், வழக்கமான கார்கள் தவிர, மூன்று புதிய அலங்கரிக்கப்பட்ட கார்கள் நின்றிருந்தன. கணக்காளரும், காசாளரும் ஓடி வந்தனர். அவர்கள் கைபேசியில் அழைக்க, கார்களை பரிசாய் பெற இருந்த விளம்பரப் பிரிவு மேலாளர்கள் மூவர் வந்தனர்.
தொடர்ந்து, அ<லுவலக ஊழியர்கள் அனைவரும் வந்தனர். சங்கரலிங்கம் பேசினார்…””சேலம் பதிப்பு ஆரம்பிச்சு, பத்து வருஷமாச்சு. சிறப்பாக பணிபுரிந்து, பத்திரிகையின் விளம்பர வருவாயை பெருக்கிய இம்மூவருக்கும், கார் பரிசளிக்கப்படுகிறது…”
முதலாமவருக்கு பொக்கேயும், சாவியும் கொடுத்தார். கைதட்டல் மிகைத்தது. மற்ற இருவருக்கும், எடிட்டரின் சகோதரர்கள் வழங்கினர். மீணடும் கைதட்டல்.
“பபே’ விருந்து ஆரம்பித்த போது, நானும், எடிட்டரும், சாப்பிடாமல் வெளியே கிளம்பினோம். கார்க் ஓப்பனரில், ரெட் ஒயின் பாட்டில் திறந்து கொடுத்தார்; சூப்பினேன்.
“”எங்கடா போகலாம்?”
“”ஏற்காடு போகலாம்…”
பத்திரிகையின் விருந்தினர் மாளிகையில், ஆயத்தமாக நின்று கொண்டிருந்த இன்கம்டாக்சில் பணிபுரியும் குணா, காரில் ஏறிக் கொண்டார்; கார் சீறிப் பாய்ந்தது.
வழியில், ஒரு கடையின் முன் நின்றது. ஐந்நூறு ரூபாயை எடிட்டரிடமிருந்து வாங்கி, பிஸ்கட் பாக்கெட்டுகள் வாங்கி, சிறு சிறு துண்டுகளாக்கி, பத்திரப்படுத்தினார் குணா.
“இவ்வளவு பிஸ்கட்டையும் ஒரு ஆளு திங்க முடியுமா?’ யோசித்தேன்; ஆனால், குணாவிடம் எதுவும் கேட்காமல் மவுனித்தேன். நாக்கில் ஒயின் சுவை, கொடுக்காப்புளி போல் துவர்த்தது.
சமவெளி விட்டு மலையேற ஆரம்பித்தது கார். ஒவ்வொரு கொண்டை ஊசி வளைவிலும், கார், தடுப்புச் சுவரை ஒட்டி நிற்க, குணா ஓடிப் போய், பிஸ்கட் துண்டுகளை போட்டு வந்தார்; கூட்டம் கூட்டமாய் குரங்குகள் வந்து, பிஸ்கட் தின்றன.
“”வாவ்! நல்ல ஐடியா!” வியந்தேன்.
பிஸ்கட் இருப்பு தீர்ந்ததும் ஆசுவாசமானார் குணா. பேச்சு, இலக்கியம் பக்கம் திரும்பியது. லாவகமாக கார் செலுத்தியபடியே, நாங்கள் பேசுவதை காதுற்றார் சங்கரலிங்கம்.
“”புத்தாண்டு தீர்மானமா, இந்த வருடம், குறைந்தபட்சம், 30 ஆயிரம் பக்கங்கள் படிக்க தீர்மானிச்சிருக்கேன். மகாபாரதம், பகவத்கீதை போன்றவற்றை மறுவாசிப்பு செய்கிறேன். சக முஸ்லிம் எழுத்தாளர்களின் படைப்புகளை தேடிப் பிடித்து வாசிக்கிறேன். <உலக சினிமா, “டிவிடி’களை தேடிப்பிடித்து பார்க்கிறேன். மொத்தத்தில், அடுத்த பத்தாண்டுக்கு என்னை ஆக்டிவாக வைத்திருக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறேன். ஐ பீல் யங் அண்ட் எனர்ஜெடிக் பாஸ்…”
“”அரைநூற்றாண்டு தனிமை என்ற பெயரில் நீ எழுதப்போகும் தொடருக்கு, ஏகப்பட்ட குறிப்புகள் கொடுத்தேனே… எழுதிட்டியா?” குணா.
“”இல்ல… ஆன் ப்ராஸஸ்!”
எங்களது காருக்கு பின், ஒரு பைக் வந்து கொண்டிருந்தது. அதில், இரு இளைஞர்கள் அமர்ந்திருந்தனர்.
“”போன வாரம் வந்த செல்லம் ஜெரினா, வி.உஷா கதைகள் எப்படி இருந்துச்சு நவாப்?”
“”செல்லம் ஜெரினா கதை, “மோர் ட்ராமாட்டிக்!” வி.உஷா மாதிரியே அவங்க கதையும் மென்மையா, பேன்டஸியா இருந்துச்சு. வி.உஷாவின் கதை நாயகிகள் அமரர் லட்சுமியின் கதை நாயகிகளுக்கு ஒப்பானவர்கள்…”
சங்கரலிங்கம் கண்களை குறுக்கி, ஒரு முறை முறைத்தார் என்னை.
எங்கள், காரின் பின்னால் அந்த பைக் சடுகுடு ஆடியது. இடம் போனது; வலது போனது. வழிவிடும் சமிக்ஞை செய்தும், காரை தாண்டிச் செல்லாமல், பைக் அடம் பிடித்தது.
“”செல்லம் ஜெரினா அம்பது வயதில் எழுத ஆரம்பித்திருக்கும் அறிமுக எழுத்தாளர். வி.உஷா, 25 வருடங்களுக்கு மேலாய் எழுதி வரும் அனுபவ எழுத்தாளர். இரண்டு பேரையும் ஒப்பிடுதல் சரியாக இருக்காது!” குணா.
முறுவலித்தார் சங்கரலிங்கம்
“”இப்படியோ அப்படியோ… அபிப்ராயம் சொல்லாம, மோனாலிஸா புன்னகை வெடிப்பதில், பாஸ் சமர்த்தர்!”
இப்போது எங்களது காருக்குப் பின், இன்னும் இரு புதிய பைக்குகள் வந்து கொண்டிருந்தன. அவற்றில் தலா இருவர் அமர்ந்திருந்நதனர். வி.வி.ஐ.பி.,க்கு பைலட் மற்றும் கான்வாய் வாகனங்கள் செல்வது போல, மூன்று பைக்குகளும் எங்களது வாகனத்தை ஒட்டி நகர்ந்தன.
“”பசங்க யாராக இருக்கும் நவாப்?”
திரும்பி, 100 நொடிகள் அந்த ஆறு இளைஞர்களை வெறித்தேன்… “”அவர்கள் கண்களில் எதனையும் அறிந்து கொள்ள முயற்சிக்கும் ஆர்வம் தெரிகிறது. கிராமியச் சாயல் இழையோடுகிறது. இளங்கலை பட்டப்படிப்பு இறுதியாண்டு படிக்கக் கூடும். ஏற்காட்டுக்கு, பைக்கிலேயே வர உத்தேசித்திருக்கின்றனர். சேலத்தை சுற்றி, 20-30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும், ஒரு கிராமத்தை சேர்ந்தவர்கள்!”
“”ஓய் ஷெர்லாக் ஹோம்ஸே… போதும் உன் பிரிடிக்ஷன் அண்ட் டிடக்ஷன்!” குணா.
ஒரு வளைவில் காரை நிறுத்தினார் சங்கரலிங்கம். இறங்கினோம்; மூவாயிரம் அடி ஆழத்தில், மினியேச்சர் சேலம் தெரிந்தது. எங்களுக்கு பத்தடி தூரத்தில், பைக் இளைஞர்கள் நின்றனர். அவர்கள் தங்களுக்குள் கிசுகிசுவென பேசிக் கொண்டனர்.
குணா கை உயர்த்தி அவர்களை அழைத்தார்… “”இங்க வாங்கய்யா…”
வந்தனர். மூன்று பைக்குகளையும், ஸ்டாண்டிட்டு நிறுத்தினர். அறுவரின் கண்களும் காரின் மீதே இருந்தன.
“”ஒரு மணிநேரமா, எங்க காரையே பாலோ பண்ணிட்டு வர்றீங்களே… நீங்கல்லாம் யாருப்பா… உங்க பேர் என்ன? என்ன பண்றீங்க?”
சேலத்திலிருந்து 25 கீ.மீ., தூரத்தில் அமைந்திருக்கும், ஒரு பொறியியல் கல்லூரி பெயரைக் கூறி, “”அங்க, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பைனல் இயர் படிக்கறோம். “ஓசி’ பைக்ல, ஏற்காடு சுத்தி பாக்க வந்தோம். <உங்க கார், ரொம்ப அழகா, ஆடம்பரமா இருக்கு; காரோட அழகை, பாத்து பருகிகிட்டே வந்தோம்…”
“”லேடீசோட அழகை பாத்து ரசிக்குற வயசுல, காரின் அழகை பாத்து பருகுனீங்களா? அச்சச்சோ…!”
“”ஆமா சார்… நீங்க எல்லாம் யார்?”
“”இவர், சங்கரலிங்கம்; “நிலா’ பத்திரிக்கை எடிட்டர். பத்திரிகை <உலகின் ஜாம்பவான். இவர், எழுத்தாளர் நவாப். நான், இன்கம்டாக்ஸ் அதிகாரி குணா. உங்க பேர் எல்லாம் சொல்லுங்க…”
அறிமுகம் செய்து கொண்டனர்.
“நமக்கெல்லாம் இந்த பெரிய மனிதர் கைகொடுப்பாரா…’ என்ற தாழ்வு மனப்பான்மையுடன், கை நீட்டினர். சங்கரலிங்கம், கைகுலுக்கி, அவர்களின் தோள்களை தட்டிக் கொடுத்தார்.
அறுவரும் யானையைத் தடவுவது போல் காரைத் தடவினர்.””இந்த காரு பேரு என்ன சார்?”
“”பி.எம்.டபிள்யூ செடான் கார். ஜெர்மன் தயாரிப்பு. விலை, 75 லட்சத்திற்கு மேல். இது, ஐந்தாவது தலைமுறை கார். கணிணி கேமராக்கள், ஜிபிஆர்எஸ் கருவி இணைக்கப்பட்டது. ஸ்டார்ட் செய்த, 5.3 நொடியில், 100 கிமீ வேகம் பாயும். எட்டு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் கொண்டது. காரின் உடல் பகுதிக்கு, 12 வருடம், பாகங்களுக்கு, 5 வருடம், “வாரன்டி’ உண்டு. இரவில், 300 மீட்டர் தூரத்தில் நகரும் பொருளைக் கண்டுபிடிக்கும், “இன்ப்ராரெட் நைட் விஷன்’ உண்டு. ஜெனான் ஹெட்லைட்ஸ். இன்டகிரல் ஆக்டிவ் ஸ்டியரிங். குளிர்பதன வசதி. வழக்கமான கார்களை விட, உள்ளே, 14 செ.மீ., விசாலம். காருக்குள், பார் கூட வைத்துக் கொள்ளலாம்.”
“”ஓ! கறுப்பு நிறம் ஏன் சார் தேர்ந்தெடுத்தீங்க?”
“”என்கிட்ட மொதல்ல சிவப்பு நிற கார்கள் தான் இருந்துச்சு. வயதும், அனுபவமும் நிறங்களின் தாய் கறுப்பு என உணர்த்தின…”
“”எங்களுக்கு ஒரு ஆசை…”
“”என்ன?”
“”காரோடு நின்னு நாங்க ஒரு போட்டோ எடுத்துக்கணும்…”
“”கேமரா வச்சிருக்கீங்களா?”
“”டிஜிட்டல் கேமரா இருக்கு!”
“”சரி…”
காரின் முன் எங்களை நிறுத்தி, எங்களுடன் இணைந்து நின்றனர். நான் அவர்களது கேமராவை வாங்கி, புகைப்படம் எடுத்தேன். இரண்டு மூன்று கோணங்களில் எடுத்தேன். எடுத்ததை அவர்களுக்கு காட்டினேன்; குதூகலித்தனர். குணா சில, பல புகைப்படங்களை எடுத்தார்.
“”தப்பா எடுத்துக்காதிங்க சார்… ஒரு சிறுபிள்ளைத்தனமான கேள்வி; படிச்சு வேலைக்கு போன பின்னாடி, எங்களாலும் இந்த மாதிரி காரை விலைக்கு வாங்க முடியுமா?”
சிரித்தார் சங்கரலிங்கம். “”ஒய் நாட்?’ தொடர்ந்து எம்.ஈ படிங்க; வழக்கமான பொறியாளர்களில் ஒருவராக இருக்காமல், தனித்துவம் காட்டி <உழையுங்க. ஒரு காரில்ல, நாலு கார் வாங்கலாம்!”
“”நிஜம்மாவா சார்…?”
“”எனது எழுதுகோலின் மீது சத்தியம் தம்பீஸ்!” சங்கரலிங்கம்.
குறுக்கிட்டேன். “”நான் ஒண்ணு சொல்ல விரும்புகிறேன் பாஸ்…!”
“”சொல்லு நவாப்!”
“”கார் வைத்திருப்பது மட்டும் வெற்றியின் அடையாளமல்ல; அது, வெறும் பொருளாதார மேன்மையே. கள்ளச் சாராயம் காய்ச்சுபவனும், கேடுகெட்ட அரசியல்வாதிகள் சிலரும் கூட, இதை விட விலை உயர்ந்த கார்களை வைத்திருக்கின்றனர். அவர்களுக்கு, கார் வெற்றியின் அடையாளமல்ல. ஆனால், நான்கு தலைமுறைகளாய், தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும் தம் பத்திரிகையின் மூலம் செய்து வரும் சேவையின் அடையாளம் தான், சங்கரலிங்கத்தின் இந்த கார். தினம், 14 மணிநேரம் உழைத்து, உள்ளூர், <<உலக செய்திகளை மக்களுக்கு கொண்டு போய் சேர்க்கும், தேனீக்கான அங்கீகாரம் தான் இக்கார். இதழியல் தேவதைக்கு மகுடம் சூட்டும் சங்கரலிங்கம் குடும்பத்தாருக்கு, இந்த கார் மட்டுமல்ல; அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொரு பொருளுமே வெற்றியின் பரிசு தான். ஆகவே மக்களே… காரின் மீது ஆசைப்படுங்கள்; நேர்மையான தொடர் தனித்துவ உழைப்பின் மூலம்!”
“”தட்ஸ் தி பாய்ன்ட்!”
“”ஒன் மோர் பாயின்ட்… இரவல் பைக்கில், ஓட்டுனர் உரிமம் இல்லாமல் மலைப் பாதைகளில் வராதீர்கள் செல்லங்களே…” குணா.
“”பெஸ்ட் ஆப் லக்!” டாட்டா காண்பித்தபடி கிளம்பினோம்.
“”கல்லூரியில் அறுவர் குழு டிஜிட்டல் புகைப்படத்தை சக மாணவர்களிடம் காட்டி, “”தாடிவச்சிருக்கிறவரு சத்தியசீலன் சித்தப்பா. டைரக்டர் மனோபாலா மாதிரி இருக்கிறவரு சந்துரு பெரியப்பா. குள்ளமா குண்டா நிக்கிறது நம்ம ஜாகிர் மாமா. புதுக்கார் வாங்கின சித்தப்பா, கார் சாவியை எங்ககிட்ட குடுத்து, இஷ்டம் போல ஓட்டிப் பாருங்கன்னுட்டார். அப்புறமென்ன… ஆளுக்கு அரைமணி நேரம் ஓட்டி, ஏற்காட்டை ஒரு கலக்கு கலக்கிட்டோம்ல… பிகர்கள் எல்லாம் திறந்த வாய் மூடல!” கதை அளந்தனர்.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *