கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 8,918 
 
 

அவர் அந்த வார்த்தையைச் சொன்னபோது வீட்டில் ஒருத்தரும் நம்பவில்லை. அவருடைய ஒரே பிள்ளையும், இரண்டு பெண்களும் சிரித்தனர். மனைவி சங்கரி மட்டும் அவர் பக்கம்.

“நீங்களாப்பா சொல்றீங்க இதை?.”

“எஸ்! நான் தான் சொல்றேன். திருநள்ளாறுக்குப் போயிட்டு வரணும், அங்கே சனீஸ்வர பகவானுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிட்டு வரணும்.”

“எதுக்கு?.”

“சின்னவ ஜாதகத்தில தோஷமிருக்காம். அதனாலதான் திருமணம் கூடிவரல. திருநள்ளாறில் சனீஸ்வர பகவானுக்கு ஒரு அபிஷேகம் பண்ணிட்டால், கல்யாணத்தடை நீங்கிடுமாம். இது பரிகாரம்டா.”

“இதை நீங்க நம்பறீங்க?.”— பிள்ளையின் குரலில் எகத்தாளம் வழிகிறது.

“என்னுடைய நம்பிக்கை என்பது பெரிய விஷயமில்லப்பா. அதனால ஒரு நல்லது நடக்குதுன்னா எதுவும் தப்பில்லை. நாம் எல்லோரும் ஒண்ணா சேர்ந்து போய் வருவோம். ஒண்ணா சேர்ந்து எத்தனை வருசமாச்சி?. அக்கா கல்யாணத்துக்கப்புறம் படிப்பு, வேலைன்னு மூலைக்கொருத்தராய் போயிட்டீங்க.”— அவர் முகம் துக்கம் காட்டிற்று.

“காருக்குச் சொல்லிட்டேன். அப்படியே பூம்புகார், பிச்சாவரம்னு ஒரு ஜாலி டிரிப். சரிதானே?.”

அவர்களுக்கு இன்னமும் நம்பிக்கை வரவில்லை. அம்மாவின் முகத்தில் உண்மையைத் தேடினார்கள். அவள் புருஷனிடம் “ஏங்க! போறப்போ சாப்பிட என்ன செய்ய?. எலுமிச்சை சாதம் கிளறிவிடவா?, தயிர் சாதம்?, இல்லே கோவில் இட்லி பண்ணிடவா?.”— ஜாடைமாடையாகப் பேசி புரிய வைப்பதில்தான் பெண்கள் கில்லாடிகளாயிற்றே.

“எதையாவது செய்யேன். என்னைக் கேட்டுத்தான் ஒவ்வொண்ணையும் செய்யறாப்பல. உனக்கு சுமாரா வரக் கூடியது தயிர்சாதம் தானே?, அதைவிட்டா உன் கைபாகம் சூப்பர்னா அது பழைய சோத்துக்கு..”—- சொல்லிவிட்டு இடிஇடியென சிரித்தார். அப்படியும் அங்கே நிலவிய இறுக்கமான சூழல் கலையவில்லை. அதற்குக் காரணமான கடைசி பெண் டாக்டர் ஸ்ரீமதி கிட்டே வந்து நின்றாள். ஒரு டாக்டருக்கே உரிய கம்பீரத்துடன் அவரை கண்ணுக்குக் கண் நேராய் பார்த்தாள்.

“தன்னம்பிக்கை சுத்தமா போயிடுச்சாப்பா?. எப்பத்தில இருந்து இந்த கோழைத்தனம்?.”

“இது தன்னம்பிக்கை விஷயமில்லேம்மா.”

“பின்னே?, உங்களை எங்களுக்குத் தெரியாது?. சின்ன வயசில இருந்தே நாத்திக சிந்தனைகளை எங்களுக்கு ஊட்டி விட்ட்தே நீங்கதானப்பா?.—— அவர் மவுனமாகப் பார்த்துக் கொண்டேயிருந்தார்.

“இன்னைக்கு திடீர்னு அந்தர் பல்டி அடிச்சா?. உங்களுக்கு வயசாயிடுச்சி, வில் பவர் போயிடுச்சின்னு அர்த்தம். சாரிப்பா இந்த முட்டாள்தனமான நம்பிக்கைகளுக்கெல்லாம் துணை வர நாங்கள் தயாரில்லை.”—-அழுத்தம் திருத்தமாக முடித்து விட்டாள். பிள்ளை ரமேஷ் தன் தரப்பை ஆரம்பித்தான். அவன் சாஃப்ட்வேர் என்ஜினியர்.

“அஹிம்ஸை, மனிதநேயம், உண்மை, இவைகள்தாம் கடவுள். இந்த வரிகள் சின்ன வயசில இருந்தே எங்க மனசில பதிஞ்சி போயிருக்குப்பா. நீங்க ஊட்டிவிட்டதுதான். ஜாதக தோஷம்னு ஒண்ணு இருந்து அதனாலதான் ஸ்ரீமதி கல்யாணம் நடக்கலேன்னு நீங்க நம்பறீங்கன்றதுதான் ஆச்சரியமா இருக்கு. யோசிச்சிப் பாருங்க, எத்தனை வரங்களை அவளுக்குப் பொருத்தமில்லை வேண்டாம்னு விட்டிருக்கோம்?. நடக்கும்பா. நம்பிக்கை வையுங்க, உங்க மேல.”

அவர் திரும்பி பெரியவளைப் பார்த்தார். அவள் எதுவும் பேசாமல் தன் குழந்தையை இழுத்துக் கொண்டு சமையலறைப் பக்கம் சென்றாள். அவள் ஆசிரியை, அப்புறமாக நிக்க வெச்சி பாய்ண்ட் பாய்ண்ட்டாக விளாசுவாளோ என்னவோ?. சிலர் தினசரி காலையும் மாலையும் விழுந்து விழுந்து சாமியைக் கும்பிடுவார்கள். அலங்காரமாக பதிகங்களையும், பாசுரங்களையும் பக்தி சிரத்தையுடன் பாடித் திரிவார்கள். ஒரு நாள் தன் வேண்டுதல் பலிக்கவில்லை என்று, தன் மகன் அல்லது மகள் வாழ்க்கை சீர்படவில்லையென்று, அவ்வளவு வேண்டியும் தன் நெருங்கிய உறவு மனிதர் இறந்து விட்டாரே என்று வெகுண்டு சாமி படங்களையும், விக்கிரங்களையும், தூக்கி எறிந்துவிட்டு இன்ஸ்டண்ட் நாத்திகவாதிகளாகி விடுவார்கள். அப்படிப் பட்டவர்கள் இவரிடம் மாட்டினால் வறுத்தெடுத்து விடுவார்.

“உன் ஒருத்தன் தேவைகளைக் கவனிக்கத்தான் அவர் இந்த அவதாரம் எடுத்திருக்கிறார் என்றால், அவர் நிஜமாகவே கடவுள்தானாய்யா?. உன் முயற்சியை விட்டுவிட்டு எல்லாவற்றையும் இல்லாத அந்தக் கடவுள் உனக்குத் தரணும் இல்லே?.”

இவருடைய நாத்திக உணர்வு மேலோட்டானமானது அல்ல. கம்யூனிஸ சித்தாந்தங்கள், பொருள் முதல் வாத,கருத்து முதல்வாத தர்க்கங்கள், பெரியாரின் சிந்தனைகள்…, இப்படி பலவற்றையும் படித்து, மனதில் நிறுத்தி, திரும்பத் திரும்ப அசை போட்டு, தெளிந்து வந்த சிந்தனைகள் அவை. அதே சமயம் மனைவியின் சுதந்திரத்துக்கு குறுக்கே நிற்கமாட்டார். அந்த நாத்திக வீட்டில் அவளுக்கென்று ஒரு பூஜையறை உண்டு. பண்டிகைக் காலங்களில் படையலும் உண்டு. ஒரு வித்தியாசம், சுடும் பலகாரங்களில் ஒரு ஏழெட்டை மனைவி திருப்திக்காக தனியே எடுத்து சாமி படையலுக்கு வைத்து விட்டு, மீதியை சுடும்போதே சுடச்சுட படைப்பதற்கு முன்பாகவே பிள்ளைகளுடன் சாப்பிடுவது அவர் வழக்கம். பிள்ளைகளுடன் பேசும்போது நிறைய சொல்லுவார். டைனிங் டேபிளில் சாப்பிடும் போதுதான் எல்லா டிஸ்கஷனும் நடக்கும். அபிஷேகம் என்ற பெயரால் குடம் குடமாக பசும்பாலை ஊற்றி வீணாக்கும் அநியாயங்களை, பலி என்ற பெயரில் நூற்றுக் கணக்கில் ஆடு மாடுகளை வெட்டிச் சாய்க்கும் கொடுமைகளை, மத துவேஷங்களினால் நாடே பிளவுபட்டு ஆடு மாடுகளுக்குப் பதில் மனிதர்களே தங்களுக்குள் ஒருத்தரையொருத்தர் வெட்டிச் சாய்த்து மாண்டுபோகும் அவலங்களை சொல்லிச் சொல்லி….,இப்படித்தான் நாத்திக சிந்தனை மெது மெதுவாய் பிள்ளைகள் மனசை ஆக்கிரமித்தன.

மதியம் சாப்பிட்டு விட்டு எல்லொரும் ஹாலில் உட்கார்ந்திருந்தார்கள். அம்மா அடுக்களையில் பிஸியாக இருந்தாள். இந்த டூருக்காக தின்பண்டங்கள் தயாராகின்றன. நேயர் விருப்பம் போல் ஒவ்வொருத்தருக்கும் என்ன பிடிக்கும் என்று பார்த்துப் பார்த்து செய்துக் கொண்டிருக்கிறாள். பையன் பூரணம் வைத்த கொழுக்கட்டையை போன முறை வந்த போதேகேட்டான். முந்தாநாளே எள்ளும்,வேர்க்கடலையும் வறுக்கிற வாசனை வந்தது. அதிரசம், கைமுறுக்கு, தட்டை, இனிப்பு சீடை…, அவர் மனைவியை நொந்துக் கொண்டிருந்தார்.

“ஏம்மா! எதுக்கு கஷ்டப் படுத்திக்கிற?. நீ செய்ற அத்தனை பலகாரங்களும் பாக்கெட் பண்ணி கடைகளிலே விக்கிது. வாங்கிடலாம், விட்ரு. ஏற்கனவே உன்னை பி.பி.யும் ஷுகரும் வறுத்தெடுக்குது.” “கொஞ்சம் சும்மா இருங்கோ. யாருக்குச் செய்றேன்?. நம்ம பிள்ளைகள்லாம் ஒண்ணாய் சேர்ந்து எவ்வளவு நாளாச்சி?.”—அவள் அவருடைய வாயை அடைத்து விட்டாள்.

மதிய உணவுக்குப்புறம் முதலில் அவர்தான் பிள்ளைகளிடம் ஆரம்பித்தார்.

“மூணு பேரும் கேட்டுக்குங்க. நாத்திக சிந்தனையை நான் தான் உங்க்களுக்கெல்லாம் ஊட்டி விட்டேன், இல்லேங்கல. இப்பவும் நான் தான் திருநள்ளாறு போகணும்னு சொல்றேன். விட்ருங்க. உங்க வாய் வீச்சைக் காட்டி என்னை விமர்சித்துக் கொண்டிருக்காதீங்க. நாளைக்குப் போறது உல்லாசப் பயணமாக இருக்கட்டும். தனிமை எங்கரெண்டு பேருக்கும் வெறுத்துப் போச்சிப்பா. இவ்வளவு பெரிய வீட்டில் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டு, வெறுமையாய் வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். எனக்குப் பரவாயில்லை, உங்கம்மா நொந்துப் போயிடுவா. நீங்கள்லாம் வந்திருக்கிறது யானை பலம் அவளுக்கு. சமையற்கட்டில என்னமா வேலை செய்றா பாருங்க. திருநள்ளாறில் நீங்க விருப்பப்பட்டா கொவிலுக்குள்ள வாங்க, இல்லேன்னா காரிலேயே இருங்க. நாங்க மட்டும் பொய் வந்திட்றோம்.”—பெரியவள் சுமதி கொபத்துடன் அவரை முறைத்தாள்.

“எப்பவும் உங்க இஷ்டப்படித்தான் எல்லாம் நடக்கணும். அவ்வளவு ஈகோ. எந்தக் கருத்தும் எங்களுக்கு இருக்கக் கூடாது பாருங்க.”

“ஏம்மா அப்படிச் சொல்ற?.”—பிள்ளை குறுக்கே வந்தான்.

“அப்பா! நாங்க யாரும் வரல. வந்தால் இல்லாத அந்தக் கடவுளை ஏத்துக்கிட்டதா அர்த்தம். நெவர். எங்க கொள்கையில் எப்பவும் நாங்க ஸ்ட்ராங். இதுக்குத்தான் வரச் சொல்றீங்கன்னு தெரிஞ்சிருந்தால் வந்திருக்கவே மாட்டோம். சாரி! அம்மாவும் நீங்களும் போறதுன்னா அது உங்க இஷ்டம்.” —-அவர் அடிபட்ட மாதிரி சுருங்கிப் போனார். மனைவி ஒடி வந்தாள்.

“டேய்!…டேய்!… யாருகிட்ட பேசற.?”

“தெரியும்மா! மக்கள்கிட்ட பக்தி அதிகமாயிட்டதென்றால் என்ன அர்த்தம்?. அவங்க கிட்ட தப்புகள் மலிஞ்சிக் கிடக்குன்னு அர்த்தம். உள் உறுத்தலின் வெளிப்பாடுதான் பக்தி. அப்படீன்னு எங்களுக்கு சொல்லிக் குடுத்தவர், இப்ப என்ன தப்பு பண்ணிட்டு பரிகாரம் பண்ண கோயிலுக்குப் போறாராம்?.”

“சாமி குபிட்றது ஒரு மாதிரி எஸ்கேப்பிஸம்னு சொல்வீங்க இல்ல?.”—இது சின்னவளின் நக்கல் பேச்சு.

பெற்றவர்களிடத்தில் இவ்வளவு சவடால் ஏன்?. ஒருவேளை இதுதான் ஜெனரேஷன் கேப் என்பதா?. சே! நாத்திகத்தை கரை கண்ட மாதிரி என்னமா பேசுதுங்க?. ஆத்திகமோ, நாத்திகமோ எதிலும் வெறி கூடாதுன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்?. ஆத்திக வெறியால்தானே இன்றைக்கு உலகம் பூராவும் குண்டு வெடிக்கிறது?. அவருக்கு சுர்ரென்று கோபம் ஏறியது.

“நாளைக்கு நாமெல்லாம் போறமா இல்லையா?.” “நாங்க வரலேன்னு சொல்லி ரொம்ப நேரமாச்சி. கடவுள் பேரால் நடக்கும் எதுக்கும் நாங்க வர முடியாது. சும்மா எங்களை கட்டாயப் படுத்தாதீங்க. இந்த விஷயத்தில் எதுக்காகவும், யாருக்காகவும் எங்களை காம்ப்ரமைஸ் பண்ணிக்க நாங்க தயாரில்லை.”——சின்னவள் பேசுவதைக் கேட்டு அம்மா அசந்து நிற்கிறாள். அவருக்குக் கோபத்தில் மேல் மூச்சு வாங்குகிறது. நிறைய படிச்சிட்டால் பெற்றவங்க பேச்சை கேட்கக் கூடாதா?.

“ஹும்! கடவுள் இல்லேன்றதுக்கு நீங்க மூணு பேர்தான் அத்தாரிட்டி இல்லே?. கடவுளைப் பத்தி உங்களுக்கு என்னடா தெரியும்?. முரட்டடியா பேசத்தெரியும், வேறென்ன?. இதோ பாருங்க கடவுள் உண்டு என்பதற்கோ, இல்லை என்பதற்கோ யார்கிட்டேயும் சாலிட் ப்ரூஃப் கிடையாது. அதனாலதான் காலங்காலமாய் நடந்து வர்ற இதன் தர்க்கங்கள் இன்னும் ஓயவில்லை. பரஸ்பரம் இரண்டுமே வெறும் நம்பிக்கைகள் மட்டுமே. புரிஞ்சிக்குங்க. இரண்டையும் என்றைக்குமே நிரூபிக்க முடியாது.”

“ஆமாம்பா இல்லை என்றது எங்க நம்பிக்கை.” “இல்லடா வெறி. பெத்தவங்க மனசை புரிஞ்சிக்காத வறட்டுத்தனமான வெறி. த்தூ! என்ன புள்ளைங்க நீங்க?. எக்கேடும் கெட்டுப்போங்க. உருப்படமாட்டீங்க. இத்தனை வெறிகூடாது, இந்த ஆணவம் இதுவே ஆளை அழிச்சிடும்டா. ரொம்ப படிச்சிட்டோம்னு கர்வமா?, இல்லே கை நிறைய சம்பாரிக்கிறோம்னு திமிரா?.”—-அவருடைய கட்டுப்பாடுகள் உடைந்துப் போக, மனம் போனபடி கண்டமேனிக்கு திட்ட ஆரம்பித்தார். மனைவி ஓடி வந்து அவர் வாயைப் பொத்தினாள். திரும்பி பிள்ளைகளிடம் ஓடினாள். பிள்ளைகள் ஒருபடி மேலே போய் துணிமணிகளை சூட்கேஸுக்குள் அடைத்துக் கொண்டிருந்தார்கள். பையன் அம்மாவிடம்

“அம்மா! தப்பா நினைக்காதே, உம்மேல எங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை. நாங்க கிளம்பறோம். உடம்பை பார்த்துக்கோ.” —- அவள் அவர்களிடம் கெஞ்சியபடி சொன்ன வார்த்தைகள் அவர்கள் காதுகளில் ஏறவில்லை. சமாதானம் பேச வந்த அப்பாவை முறைத்தார்கள்.

கொஞ்ச நேரத்தில் மூன்று பேரும் கிளம்பி, பொத்தாம் பொதுவில் டாடா சொல்லிவிட்டு வெளியேற, அந்த ஜீவன்கள் துக்கத்தில் உறைந்து நின்றதுகள். ஒரு வாரமாய் கண்டிருந்த அத்தனை கனவுகளும் ஒரு நிமிஷத்தில் சிதைந்து போயிற்று. மீண்டும் வெறிச்சோடும் தனிமை. அவள் உடைந்துப் பொய் அழ ஆரம்பித்தாள். மறுநாள் விடிய நேரம் எழுந்து குளித்து விட்டு கிளம்பத் தயாரானார்கள். ஐந்து மணிக்கெல்லாம் கார் வந்துவிட்டது. சமையலறையில் செஞ்சி வெச்ச புளிக்காச்சல், இஞ்சி சேர்த்து காரசாரமாய் செஞ்சிருந்த தக்காளித் தொக்கு, நொறுக்குத் தீனி ஐட்டங்கள், கொழுக்கட்டை, காஞ்சிபுரம் இட்லி, தட்டை, இனிப்பு சீடை, அதிரசம், எல்லாம் கடை பரப்பிக் கிடக்கின்றன. அவள் பெருங்குரல் எடுத்து அழுதாள். அவர் ஆசுவாசப் படுத்தினார்.

“எவ்வளவு செஞ்ச்சிருக்கேன்?. ஒண்ணு கூட எங்கொழந்தைங்க தொடலியே. உங்களுக்கு இம்மாம் முன்கோவம் ஆவாது. வயசானவங்களுக்கே இவ்வளவு இருந்தா, தோளுக்குமேல வளர்ந்த புள்ளைங்க, அவங்களுக்கு எவ்வளவு இருக்கும்?. எங்கொழந்தைங்க ஒண்ணை தின்னு பார்க்கலியே..”——அவள் ஓவென்று அழுதாள். ஓ! கடைசியில் நியும் என்னைத்தான் குத்தம் சொல்லுவியா?. அவருக்குக் கண்விளிம்பில் நீர் முத்துகள். உம் என்றால் கொட்டிவிடும்.

“நான் வரலீங்க. நாம ரெண்டுபேர் போயி என்ன செய்யப் போறோம்?.” “சங்கரீ! ஒண்னைப் புரிஞ்சிக்கோ. நாம நமக்காகப் போவல. வரமுடியாதுன்னு தீர்த்து சொல்லிட்டுப் போனாளே உன் சின்னப் பொண்ணு. அவளுக்காகத்தான் போறோம்.” ——அப்புறம் கொஞ்சநேர வாதப் பிரதிவாதங்களுக்கப்புறம் கார் கிளம்பியது. அவள் வழியெங்கும் புலம்பிக் கொண்டே வந்தாள்.

“என்னிக்குத்தான் உங்க முன்கோவத்தை விடப் போறீங்களோ. நம்ம கொழந்தைகளை நாமே அடிச்சித் துரத்தினாப்பல துரத்திட்டு, புதுசா கல்யாணம் ஆனாப்பல உல்லாசப் பயணம் கேக்குது இந்த வயசில நமக்கு.”

“சங்கரீ! பழி சொல்லாதடீ. பிள்ளைங்க மாதிரியா வளர்த்தேன்?. நெஞ்சைத் தொட்டு சொல்லுடீ. சிநேகிதங்க மாதிரி இல்லே வெச்சிருந்தேன். அதுக்கு நேத்தே எனக்கு பலன் கிடைச்சிப் போச்சிடீயம்மா.”—– அவர் கண்களை துடைத்துக் கொண்டார். இந்த முறை அவள் அவரை ஆற்றுப் படுத்தினாள். இவர்களின் இந்த சோக புலம்பல்களை காரின் டிரைவர் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறான் என்பது இடையிடையே அவர்களுக்கு ரெண்டொரு வார்த்தைசமாதானம் சொல்வதும், அவர்களின் கவனத்தை திசை திருப்ப அரசியல் போக்கு பற்றி பேசிக் கொண்டிருப்பதுமாக இருந்தான்.

“ஒரு விஷயம் இன்னும் எனக்கு புரியலீங்க. ஆச்சரியமா இருக்கு.”

“என்னதும்மா?.”

“நான் வாழ வந்து இந்த முப்பத்தியஞ்சி வருசத்தில உங்க வாயில வராத சனீஸ்வரன், தோஷம், திருநள்ளாறு, பரிகாரம், இதெல்லாம் இப்ப எப்படி வந்துச்சி?. மாறிட்டீங்களா?. இனிமே எங்கூட செர்ந்து சாமி கும்புடுவீங்களா?. என்னால நம்பவே முடியல.” —–அவர் மவுனமாக அவளை ஊடுருவி பார்த்தார்.

“சங்கரீ! கடவுள் உண்டு இல்லை என்ற இந்த முடிவில்லா தர்க்கங்களை விட நம்ம பொண்ணு வாழ்க்கைதான் பெருசு எனக்கு. கடவுள் இல்லைன்னு நான் யாருக்கு நிரூபிக்கணும்?. சொல்லு. நாலு வருஷமா மாப்பிள்ளை தேட்றோம், சரியா அமையல. அதன் வலி நமக்குத்தான தெரியும்?. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலை நமக்கு. நான் சாமியை ஒத்துக்கறதால என் பொண்ணுக்கு கல்யாணம் நடந்துடும்னா ஒத்துக்கிட்டு போறேன். என் துக்கமெல்லாம் நம் பிள்ளைகள் பற்றித்தான். எங்கே தப்பு பண்ணோம்?. சரியாகத்தானே வளர்த்தோம்?. அறிவையும், பாசத்தையும் தானே ஊட்டினோம்?. அஹிம்சை, மனிதநேயம், உண்மை இவைகள்தான் கடவுள் என்று சொல்லிக் கொடுத்தேனே. வயசான பெத்தவங்களுடைய சந்தோஷத்துக்காக கடவுள் என்ன பிசாசைக் கூட சகிச்சிக்கணும்னு நினைச்சிருந்தால் அதுதான் பாசம். நீ நேத்து முழுக்க அடுப்படியில் வெந்து மாய்ஞ்சி..மாய்ஞ்சி அவங்களுக்காக பலகாரம் செய்றதை பார்த்திருந்தும், அந்த அன்பை ஒதுக்கிட்டுப் போனாங்களே. இதுதாண்டீயம்மா புள்ளைங்க மனசு. நாம ரெண்டு பேரும் யாருமில்லாத அனாதைங்களோன்னுதான் இப்ப எனக்குப் படுது. எனக்கு வர்ற பென்ஷன்தாண்டீ நம்ம புள்ளை. அதான் இப்ப பெத்த புள்ள மாதிரி நமக்கு சோறு போடுது. இன்னமும் போடப் போவுது. அது பென்ஷன் இல்லடீ பென்-சன்.”

டிரைவர் தன்னுடைய வழக்கப்படி சிதம்பரம், திருவெண்குடி, திருக்கடையூர்…என்று வழியிலுள்ள திருத்தலங்களை எல்லாம் காட்டிக் கொண்டே வந்தார். அந்த நாத்திக மனிதர் மட்டுமல்ல, ஆத்திக அம்மையாரும் சுவாரஸ்யமில்லாமல் கடனே என்று பார்த்துக் கொண்டே வந்தார்கள். வைத்தீஸ்வரன் கோவிலுக்குப் போனபோது அந்தம்மா இறங்கவேயில்லை. இவர் மட்டும்தான் ஒரு தந்தையின் கடமையாய் போய் சனீஸ்வர பகவானுக்கு அர்ச்சனை பண்ணிட்டு திரும்பினார்.

கார் கிளம்பியது. கிளம்பி சாலையின் ஒரு திருப்பத்தில் திரும்பி திருப்பத்தில் ஏதோ ஒரு விலாஸில் சாப்பிட நிறுத்திய போது அவருடைய செல் போன் சிணுங்கியது. லைனில் பெரியவள் சுமதியின் மாமனார் ஹலோ! என்றார். “சொல்லுங்க சம்பந்தி! என்ன? ஏதாவது முக்கிய விஷயமா?. நாங்க இப்ப திருநள்ளாறு வைத்தீஸ்வரன் கோயில்ல இருக்கோம்.”

“அட அதுதான் விஷயமா?. நேத்து உங்க பிள்ளைங்க உங்க வீட்டுக்கு வந்தாங்களே என்ன நடந்திச்சி?.”

“ஏன்?”

“நேத்து ராத்திரி மூணு பேருந்தான் இங்க வந்தாங்க. எதுவும் பேசல. ஒருத்தர் முகமும் சரியில்லை. வந்தவங்க நேரா மாடிக்குப் போயிட்டாங்க. என்னன்னு பார்க்கலாம்னு போனா, உங்க பொண்ணுங்க ரெண்டும் அப்படி அழுவுதுங்க. உங்க பையன் ரமேஷ் சமாதானப் படுத்திக்கிட்டு இருக்கான். அவனும் கூட கண் கலங்கறான். என்னப்பான்னு கேட்டா யாரும் வாயைத் திறக்கல. என் மருமவ கூட வாயைத் திறக்கல சம்பந்தி. காலையில ஏழு மணிக்கெல்லாம் காரை எடுத்துக்கிட்டு மூணு பேரும் கிளம்பிட்டாங்க. கூடவே என் பையனும் வர்றான். எங்கேன்னு கேட்டால் திருநள்ளாறாம்.

அப்புறம் அவர் சொன்ன எதுவும் இவர் காதில் விழவில்லை. “நம்ம புள்ளைங்க…நம்ம புள்ளைங்க…” —உணர்ச்சியில் அவரால் பேசமுடியவில்லை.

“என்னங்க…என்னங்க?.”—–அவர் அழுவதற்கான காரணம் புரியாமல் மனைவி பதற, அவரால் பேச முடியவில்லை. வர்றாங்க என்று சைகை காட்டினார். அதிலேயே அவளுக்கு விஷயம் புரிந்து விட, முந்தானையால் முகத்தைப் பொத்திக் கொள்கிறாள்.

நன்றி—`கிழக்கு வாசல் உதயம்’—மே2011

நான் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு என்ற ஊரைச் சேர்ந்தவன். ஓய்வு பெற்ற அரசு ஊழியர். எழுபத்தைந்துக்கு மேற்பட்ட சிறுகதைகளையும், இரண்டு அறிவியல் நாவல்களையும் செய்யாறு தி.தா நாராயணன் என்ற பெயரில் எழுதியுள்ளேன்,எழுதிகொண்டுமிருக்கிறேன். சிறுகதைகள் என் கதைகள் குமுதம், தினமணி கதிர், தினமலர், இலக்கியப்பீடம், கலைமகள்,கணையாழி, செம்மலர் ,தாமரை, கிழக்கு வாசல் உதயம், தாராமதி, போன்ற இதழ்களிலும், அவைகள் நடத்திய சிறுகதைப் போட்டிகளிலும், திண்ணை டாட்காம் போன்ற இணையதள இதழ்களிலும், இலக்கிய…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

* Copy This Password *

* Type Or Paste Password Here *