பூஜா கண்ணாடிமுன் அமர்ந்திருந்தாள். நாளை மாலை அவளைப் பெண் பார்க்க வருகிறார்கள். உறவினர் கொண்டுவந்து கொடுத்த போட்டோவில், அவளைப் பார்க்க வரும் மாப்பிள்ளை ஸ்மார்ட்டாக சிரித்துக் கொண்டிருந்தார். அவளுக்குப் பிடித்திருந்தது. பூஜாவின் அப்பா இரண்டு ஜோசியர்களிடம் ஜாதகப் பொருத்தம் பார்த்து நன்றாக இருப்பதாகச் சொன்னார். மாப்பிள்ளை நல்ல உத்தியோகத்தில் கை நிறைய சம்பாதிப்பதாகவும், வேலை நிமித்தம் அடிக்கடி வெளிநாடு போய்வர வாய்ப்பிருப்பதாகவும் அப்பா சொன்னதைக் கேட்டு அம்மாவுக்கு ரொம்ப சந்தோஷம். “இந்த வரன் பூஜாவுக்கு வாய்க்கணும், அவருக்கு பூஜாவைப் பிடிக்கணும். அவங்க என்ன சீர் செனத்தி கேட்டாலும் செஞ்சுடலாம். நமக்கு இருப்பது ஒரே பொண்ணு தானே” என்றாள் அம்மா. “நம்ம பொண்ணுக்கு என்ன குறை? ராஜாத்தியாட்டம் இருக்கா!” என்று பெருமையோடு பூஜாவைப் பார்த்தார் அப்பா. அவள் வெட்கப்பட்டுக்கொண்டே அவள் அறைக்குச் சென்றாள்.
டிகிரி படிப்பு முடிச்சிட்டு தான் கல்யாணம் என்று அப்பாவிடம் கண்டிப்பாக சொல்லி இருந்தாள் பூஜா. அவளைக் கேட்டு பல வரன்கள் வந்தாலும்,, பூஜாவின் சொல்படி அவரும் சரி என்று அவள் விருப்பப்படியே பி.காம் படிக்க வைத்தார். 72% மார்க் வாங்கி முதல் வகுப்பில் பி. காம் தேறியதும், அவளைப் பெண் கேட்டு வந்த முதல் வரன் இது தான். முதல் வரனே மனதிற்குப் பிடித்தாற்ப்போல் அமைந்தது அவர்களுக்கு மகிழ்ச்சி.
பூஜா கண்ணாடியில் தன்னைப் பார்த்தாள். அழகான முகத்தைப் பார்த்துத் தானே சிரித்துக் கொண்டாள். மீண்டும் முகத்தைக் கூர்ந்து பார்த்தபோது இடது கன்னக் கதுப்பின் மேல் ஒரு சின்னப் பரு எட்டிப் பார்த்தது. அதை தடவிப் பார்த்தாள். ப்யூட்டி பார்லருக்கு போக எண்ணி இருந்தது நினைவிற்கு வந்தது. அம்மாவிடம் சொல்லிவிட்டு மெயின் ரோடிலிருக்கும் பார்லருக்குச் சென்று பேஸியல் செய்ய வேண்டுமென்று சொன்னாள்.
அங்கிருந்த பியுடிஷியன் பணிப்பெண் முதலில் பூஜாவின் புருவங்களை ட்ரிம் செய்தாள். பிறகு, முகத்தில் க்ரீம் போட்டு சுத்தமாகத் துடைத்து விட்டு, பேஸ் ஸ்க்ரப் போட்டு முகத்தையும், கழுத்துப் பகுதியையும் நன்றாகத் தேய்த்து விட்டாள். சற்று நேரம் கழித்து, முகத்துக்கு நீராவி காட்டி விட்டு அழுந்தத் துடைத்து எடுத்தாள். பிறகு பூஜாவின் கண்களில் வெள்ளரித் துண்டுகளை வைத்து மூடி விட்டு, கன்னங்களிலும், மூக்கின் ஓரத்திலும் இருந்த ப்ளாக் ஹெட்ஸை, ரிமூவர் வைத்து வழித்து எடுக்க ஆரம்பித்தாள். இடது கன்னத்தில் பரு இருந்த இடத்தில் அந்த பணிப்பெண் சிறிய கொக்கி வைத்த அந்த ஸ்டீலாலான ரிமூவரை வைக்கும் சமயத்தில், பூஜா கண்ணிலிருந்த வெள்ளரித் துண்டை எடுத்து விட்டு, ‘அங்கே பரு இருக்கு, பார்த்து…’ என்று சொல்வதற்குள், முகம் அசைந்ததால், ப்ளாக் ஹெட் ரிமூவர் அந்தப் பருவின் மேல் ஆழமாகப் பதிந்து சற்று சதையுடன் வழித்தெடுத்து விட்டது. அந்த இடத்திலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அந்தப் பணிப்பெண், ‘சாரி’ என்று சொல்லி விட்டு பஞ்சை வைத்து அழுத்தி ரத்தம் வருவதை நிறுத்த முற்பட்டாள். பூஜா வலியால் துடித்தாள். கண்ணீர் பொங்கியது. பார்லரிலிருந்த அனைவரும் அவளை சூழ்ந்து கொண்டனர். அங்கு வந்திருந்த ஒரு கஸ்டமர் பெண்மணி, ‘ உடனே டாக்டரிடம் போய் ஒரு ஏடிஎஸ் இன்ஜெக்ஷன் போட்டுக்கோங்க, இல்லேன்னா செப்டிக் ஆயிடும்’ என்று பயமுறுத்தினார். எல்லோரும் அந்த பணிப்பெண்ணைத் திட்டினார்கள். அவள் பயந்தபடி, ‘நான் கவனாமாத்தான் பண்ணிட்டிருந்தேன், மேடம் அசைச்சிட்டாங்க, அதனாலே தான் பட்டுடுச்சி, சாரி’ என்று சொல்லி அழ ஆரம்பித்தாள். பூஜாவின் முகத்தை ஐஸ் கட்டி வைத்து துடைத்து விட்டு, அவளை அருகிலிருந்த க்ளினிக்குக்குக் கூட்டிப்போய் ஏடிஎஸ் இன்ஜக்ஷன் போட்டார்கள். டாக்டர் காயத்தின் மேல் தடவ மருந்தும், வலி குறைய மாத்திரையும் எழுதிக் கொடுத்தார். பியுடீ பார்லருக்காக எடுத்து வந்திருந்த பணத்தை டாக்டருக்கும் மருந்துக்கடைச் செலவுக்கும் கொடுத்து விட்டு ஆட்டோ பிடித்து வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.
நேரே சமையலறைக்குச் சென்று அம்மாவைக் கட்டிப் பிடித்து நடந்ததைச் சொல்லி அழுதாள். அம்மா அவளை சமாதானப் படுத்திவிட்டு காயத்திலிருந்த பஞ்சை சற்றே விலக்கிப் பார்த்த போது, ரணமாகியிருந்த இடத்தைச் சுற்றி வீங்கி இருந்தது. “ஐயோ! நாளைக்குப் பெண் பார்க்க வரும் நேரத்தில், இப்படி முகத்தில் காயம் பட்டுடுச்சே” என்று அரற்றினாள். ‘பிளாஸ்திரி போட்டா ஆறிடுமா?’ என்றாள். ‘இல்லம்மா, டாக்டர் காயத்தை மூடக் கூடாது, திறந்திருந்தா சீக்கிரம் ஆறிடும்னு சொன்னார்’ என்றாள் பூஜா. இருவரும் கவலையோடு இருந்த நேரத்தில், அப்பா வந்தார். செய்தியறிந்து பூஜாவைப் பார்த்து “என் பொண்ணு ராஜாத்தியாட்டம் இருப்பான்னு கொஞ்ச நேரம் முன்னாடி தானே சொல்லிட்டு வெளியில் போனேன். என் கண்ணே பட்டுடுச்சே செல்லம், நீ ஒன்னும் கவலைப் படாதே. நாளைக்கு காயமெல்லாம் ஆறிடும். எல்லாம் நல்லபடியா நடக்கும். நீ போய் ரெஸ்ட் எடு, அம்மா நாளைக்கு உண்டான வேலையைப் பார்க்கட்டும்’ என்று அவர்களை சமாதானப் படுத்தினார்.
பூஜா அந்த காயத்தை அடிக்கடித் தொட்டுப் பார்த்தபடியே படுத்திருந்தாள். இரவு சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு, மாத்திரையும் போட்டுக் கொண்டு, நாளைக்கு இந்தக் காயம் சரியாகி விடவேண்டும் என்று வேண்டியபடியே உறங்கிப் போனாள்.
காலையில் எழுந்ததும் முதல் வேலையாக பூஜா கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள். இடது கன்னம் வீங்கி, காயத்தின் நடுவில் சிவந்து, அதைச் சுற்றிக் கறுத்து, முகமே விகாரமாகத் தெரிந்தது. ஓவென்று அழ ஆரம்பித்தாள். அம்மாவும் அப்பாவும் அவள் அறைக்கு வந்து, அவள் முகத்தைப் பார்த்துத் திகைத்து நின்றனர். அம்மா பூஜாவை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டாள். அப்பா கோபத்தில், ‘அந்த பியுட்டி பார்லர் ஆளுங்களை உண்டு இல்லைன்னு ஆக்கறேன். அவங்க மேல கம்ப்ளைன்ட் பண்றேன்’ என்று கத்தினார். பூஜா, ‘அதெல்லாம் வேண்டாம்ப்பா. நான் அசைச்சதாலே தான் தப்பா கீறிடுச்சி. அந்த பொண்ணு என்ன பண்ணுவா, பாவம். பெண் பார்க்க இன்னிக்கி வரவேண்டாம்னு அவங்களுக்கு சொல்லிடுங்கப்பா’ என்றாள். ‘இல்லம்மா, அந்த பையன் பெங்களுரிலிருந்து இதற்காகவே வரார். இந்நேரம் சென்னைக்கு வந்திருப்பார். ஈவ்னிங் அவர் பேரெண்ட்ஸ் கூட நம்ம வீட்டிற்கு வருவார். இந்த சமயத்தில் போன்பண்ணி வரவேண்டாம்னு சொன்னா நல்லா இருக்காதும்மா. உன்னை பத்தி, நம்மள பத்தி தப்பா நெனச்சிப்பாங்க. உன் முகம் கொஞ்சம் வீங்கி இருக்கு, அவ்வளவு தான். அவங்களுக்கு இது எப்படி நடந்துச்சின்னு சொல்லிடலாம். நீ ஒன்னும் கவலைப் படாதே’ என்றார்.
“வேண்டாம்ப்பா, அதெல்லாம் அவங்ககிட்டே சொல்ல வேண்டாம். என்ன நடக்குதோ நடக்கட்டும்’ என்று சொல்லி விட்டு அறைக்குச் சென்று கட்டிலில் விழுந்து அழுதாள். கண்களுக்கும் மனதிற்கும் பிடித்திருந்த வரன் கை நழுவிப் போவதாக நினைத்தாள். துக்கம் பீறிட்டு எழுந்தது. தலையணையை நனைத்தாள்.
மாலை பூஜாவின் அம்மா வந்து அவளை எழுப்பி அலங்காரம் செய்துகொள்ளச் சொன்னாள். அவள் எழுந்து முகத்தைக் கண்ணாடியில் பார்த்தாள். இடது கன்னத்தில் காயம் புடைத்து எழுந்திருந்தது. அழுததில் கண்கள் சிவந்திருந்தன. ‘எனக்கு வேண்டாம்மா, நான் வரலை. என் முகத்தைப் பார்க்க எனக்கே சகிக்கலே. அவருக்குப் பிடிக்காது, கண்டிப்பாக என்னை வேண்டாம்னு சொல்லிட்டு போவாங்க. எனக்கு அந்த அவமானம் வேண்டாம்மா’ என்றாள். ‘அதெல்லாம் ஒன்னும் இல்லே. நீ முகத்தை அலம்பிண்டு பவுடர் போட்டுட்டு ஒரு கர்சிப் வைத்து அந்த காயத்தை மறைச்சிகிட்டு வெறுமனே உட்கார். எதுவும் பேச வேண்டாம். நாங்க சமாளிக்கிறோம்’ என்று சொல்லிவிட்டு ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கச் சென்றாள் பூஜாவின் அம்மா.
சொன்ன நேரத்திற்குச் சரியாக கணேஷும் அவன் பெற்றோரும் பூஜாவின் வீட்டிற்கு வந்தனர். பூஜாவின் அப்பா அவர்களை வரவேற்று ஹாலில் சோபாவில் உட்கார வைத்தார். குசல விசாரிப்புகள் முடிந்ததும், ‘பெண்ணை வரச் சொல்லுங்கள்’ என்றார் கணேஷின் அம்மா. பூஜாவைக் கைப்பிடித்து அழைத்து வந்து, பக்கத்திலிருந்த இன்னொரு சோபாவில், வந்தவர்கள் பூஜாவைப் பார்க்கும்போது அவளுடைய வலது பக்க முகம் தெரியும்படி அவளை அமர்த்தினாள் அவள் அம்மா. பூஜா உள்ளிருந்து வரும்போதே கவனித்தாள், போட்டோவில் பார்த்ததை விட இன்னும் அழகாகத் தெரிந்தான் கணேஷ். அவனை ஏறிட்டுப் பார்க்கத் துணிவின்றி, தலை குனிந்தபடி அவர்களை நமஸ்கரித்து விட்டு சோபாவில் அமர்ந்து, கர்சீப்பால் தன் இடது கன்னத்தை மூடிக்கொண்டாள்.
கணேஷும் அவன் பெற்றோரும் ஆவலுடன் பேச்சு கொடுத்தபோது, அவர்கள் முகத்தைப் பார்க்காமல் ஆமாம், இல்லை என்று ஒற்றைச் சொல்லில் பதிலளித்தாள் பூஜா. “பொண்ணு சிரிச்சி பேசவேயில்லையே, மௌனமா இருக்கே, உடம்பு சுகமில்லையா?” என்று கணேஷின் அம்மா கேட்டதற்கு, ‘பூஜாவிற்குப் பல்வலி’ என்று சொல்லி சமாளித்தாள் அவள் அம்மா. மேலும் அவர்கள் அவளிடம் பேச முயன்ற போது பூஜாவினால் அங்கு உட்கார்ந்திருக்க முடியவில்லை. இருக்கையில் நெளிந்தாள். அவள் கண்களில் நீர் கோர்த்தது. இன்னும் சற்று நேரம் அங்கிருந்தால் வாய் விட்டு அழுதுவிடுவாள் போல் தோன்றியதால், இருக்கையிலிருந்து எழுந்து கண்களைத் துடைத்தபடியே தன் அறைக்குச் சென்று விட்டாள்.
பூஜாவின் அம்மா கொடுத்த காபியை முழுதும் அருந்தாமல், கப்பை டேபிள் மேல் வைத்துவிட்டு கணேஷ் எழுந்தான். அவன் பெற்றோரும் எழுந்து ‘நாங்கள் போய் போன் பண்றோம்’ என்று சொல்லிவிட்டு கிளம்பிப் போனார்கள்.
போகும் வழியிலேயே, ‘அந்த பொண்ணுக்கு இந்த கல்யாணத்தில் இஷ்டம் இல்லை போல் தெரிகிறது. அவங்க அம்மா அப்பாவின் வற்புறுத்தலின் பேரில் வேண்டாவெறுப்பா அந்த பொண்ணு உட்கார்ந்திருந்த மாதிரி தோணுது. அழுதுகிட்டே வேறே இருந்தாள். இந்த இடம் வேண்டாம்மா’ என்றான் கணேஷ். ‘இல்லடா, ஜாதகம் நல்லா பொருந்தி இருந்துச்சு. விசாரித்ததுலே அந்த குடும்பத்தைப் பற்றி நல்ல விதமா தான் சொன்னாங்க. உடம்பு சரியில்லையோ என்னமோ, அவளுக்கு பல்வலின்னு அவங்க அம்மா கூட சொன்னாங்களே?’ என்றாள் கணேஷின் அம்மா. ‘போட்டோவில் பார்த்தப்ப அந்த பொண்ணு அழகா இருந்தா. நல்லா படிச்சிருக்கா. எனக்குப் பிடிச்சிருந்ததாலே பெண் பார்க்க வந்தேன். அவளுக்கு என்னைப் பிடிக்கலியோ அல்லது அவள் வேறே யாரையாவது விரும்பறாளோ, தெரியலே. அந்த இடம் வேண்டாம்மா’. என்றான் கணேஷ்.
“இந்த தை மாசமாவது உனக்குக் கல்யாணம் பண்ணிப் பார்க்கனும்னு நெனக்கறேன். நீ எங்களை விட்டு தூரத்தில் தனியே எவ்வளவு காலம் வெளியிலே சாப்டுட்டு இருப்பே. கணேஷ், இந்த இடம் வேண்டாம்னா, வேறே பொண்ணு பார்க்கலாம்ப்பா’ என்றாள் அவன் அம்மா. ‘இப்போ நான் வேறே யாரையும் பார்க்கறதா இல்லே. அடுத்த மாசம் ஆன் சைட் ப்ராஜெக்ட்டுக்கு நெதர்லேன்ட் போகணும். ஆறு மாசங்கள் கழித்து திரும்பி வந்த பிறகு பார்க்கலாம்’ என்றான் கணேஷ். ‘அவனை வற்புறுத்தாதே. ஆறு மாசம் கழிச்சி பார்க்கலாம்னு அவனே சொல்றானே. அதுக்குள்ளே வேறே நல்ல இடங்களை விசாரிச்சு வெக்கலாம். நீ அமைதியா இரு’ என்று பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தார் கணேஷின் அப்பா.
ஆறு மாதங்கள் கழித்து நெதர்லாந்திலிருந்து திரும்பிய கணேஷின் கையில் மூன்று பெண்களின் புகைப்படங்களைக் கொடுத்து அவர்களின் பின்னணி விவரங்களை சொன்னார் அப்பா. அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டு, “போன முறை பார்த்த பெண்ணுக்குக் கல்யாணம் ஆயிடுச்சாம்மா?” என்று கேட்டான். “தெரியலடா, இன்னுமா அந்த பொண்ணை ஞாபகம் வச்சிருக்கே?” என்று கேட்டாள் கணேஷின் அம்மா .
“நோ, நோ, சும்மா கேட்டேன். அவளுக்குக் கல்யாணம் ஆகி இருக்கும்” என்று சொல்லிக்கொண்டே கையில் இருந்த புகைப்படங்களைப் பார்த்தான். பூஜாவின் முகம் தான் அவன் மனதில் நின்றது. அவள் ஏன் அன்று அழுதாள் என்று எண்ணிக்கொண்டே, “உங்களுக்கு எந்த இடம் பிடிச்சிருக்கோ அந்த பொண்ணையே பார்க்கலாம்மா” என்று சொல்லிவிட்டு அடையாறிலிருக்கும் ஆக்சிஸ் பாங்க்கில் பிரான்ச் மானேஜராக வேலை செய்யும் நண்பனைப் பார்க்கச் சென்றான். நண்பனிடம் பேசிவிட்டு அவன் கேபினிலிருந்து வெளியில் வரும் போது அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த பூஜாவைப் பார்த்தான். அவள் அவனைப் பார்க்கவில்லை. ஓரமாக நின்று அவளை மீண்டும் உற்றுப் பார்த்தான். கொள்ளை அழகு! திரும்பி நண்பனின் கேபினுக்குப் போய் பூஜாவைப் பற்றி விசாரித்தான்.
“பூஜா வேலைக்கு வந்து மூன்று மாதங்கள் தான் ஆகிறது. ஷி இஸ் எ ஸ்மார்ட் கேர்ல். எல்லா வேலையும் பெர்பெக்ட்டா பண்ணுவா. எல்லார் கிட்டேயும் நல்லா பழகுவா. பேங்க்குக்கு வர கஸ்டமர்ஸ் கிட்டே பொறுமையா பேசுவா“ என்றார் கணேஷின் நண்பன். “அவள் வேலை செய்யிற விதத்தைக் கேட்கலை, ப்ரோ, அவள் காரெக்டர் எப்படி?” என்றான் கணேஷ்.
“எனக்கு தெரிந்த வரைக்கும் ‘ஷீ இஸ் எ டீசன்ட் கேர்ள். இன்னும் கல்யாணம் ஆகலை. யாரும் பாய் ப்ரெண்ட் இருக்கற மாதிரி தெரியல. செல்போன் வச்சிட்டு அவள் யார் கிட்டயும் வழிஞ்சி பேசி இது வரை நான் பார்க்கல. அவள் செல்போன் ஆப் பண்ணி இருந்தா, அவங்க அம்மா தான் லஞ்ச் டைமுக்கு ஆபீஸ் லேன்ட்லைனுக்கு போன் பண்ணி அவகிட்ட பேசுவாங்க” “ஆமா, இதெல்லாம் ஏன் கேக்கற? என்ன நடக்குது கணேஷ்?” என்று சிரித்துக் கொண்டே கேட்டார். “ரொம்ப தாங்க்ஸ் ப்ரோ, நீ சொல்றது சரியா இருந்தா சீக்கிரம் உனக்கு நல்ல செய்தி சொல்றேன். இப்ப பூஜாவைக் கூப்பிட்டு எனக்கு இன்ட்ரோ பண்ணி விடேன், ப்ளீஸ்” என்றான் கணேஷ்.
அவனை ஆச்சர்யமாகப் பார்த்துக் கொண்டே “ஓகே” என்று சொல்லி இன்டர்காமில் “பூஜா, கேன் யூ கம் இன் பார் எ மினிட்” என்று அழைத்தார். பூஜா மேனேஜர் கேபினுக்குள் நுழைந்து “குட்மார்னிங் சார்” என்று சொல்லிவிட்டு, அவர் அருகில் அமர்ந்திருந்த கணேஷைப் பார்த்தாள். அடையாளம் கண்டுகொண்ட ஆச்சர்யத்தில் ஒரு கணம் வாய் திறந்து ‘ஹலோ’ என்று சொல்ல வந்ததை அடக்கிக் கொண்டு, அவனைப் பார்ப்பதைத் தவிர்த்து, சோகமாகத் தலையைக் குனிந்து மேனேஜரின் முன் நின்றாள்.
“பூஜா, மீட் மிஸ்டர் கணேஷ், மை க்ளாஸ்மேட். பெங்களூரில் பெரிய ஐடி கம்பெனியில் ப்ராஜெக்ட் லீட் ஆக இருக்கிறான்” என்றார். கணேஷ் தன் இருக்கையிலிருந்து எழுந்து பூஜாவின் அருகில் வந்து மெதுவாக ‘ஹாய், கேன் ஐ டாக் டு யு பார் எ பியு மினிட்ஸ்?” என்றான். அவள் நிமிர்ந்து அவன் கண்களைப் பார்த்தாள். பிறகு மேனேஜரைப் பார்த்தாள். “கோ அஹெட் பூஜா, கோ ஹாவ் சம் காபி அண்ட் கம் பேக். கணேஷ் இஸ் எ நைஸ் மேன்” என்றார் மேனேஜர்.
பக்கத்திலிருந்த காபி ஷாப் சென்று 2 கேபுசினோ ஆர்டர் செய்துவிட்டு “உங்களைப் பார்க்க வந்தப்ப, சோகமா உட்கார்ந்து அழுதிட்டிருந்தீங்களே, என்னைப் பிடிக்கலையா? நான் காரணத்தைத் தெரிஞ்சிக்கலாமா? நான் ஆறு மாசம் ஆன் சைட் வேலையாய் போயிட்டு இப்ப தான் வந்தேன். ஐயாம் ஸ்டில் அன்மேர்ரிட். விருப்பமில்லைன்னா சொல்லுங்க, நான் உங்களை வற்புறுத்தல, எழுந்து போய்டலாம். அன்னிக்கு ஏன் அழுதீங்க?” என்று கேட்டான் கணேஷ்.
அவனுடைய மென்மையான குரலும் அதில் தொனித்த நேர்மையும் அவளைப் பற்றி அறியும் ஆர்வமும் பூஜாவின் மனதைத் தொட்டது. அவள் கண்களின் ஓரத்தில் எட்டிப் பார்த்த கண்ணீரைத் துடைத்து விட்டு, நடந்தது அனைத்தையும் சொல்லி அவள் ஏமாற்றம் அடைந்ததை விவரித்தாள். ‘நீங்க போனதுக்கப்பறம் அப்பா வேறு வரன்களைப் பார்த்தார். இப்போதைக்கு எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்லிட்டு பேங்க் எக்ஸாம் எழுதி பாஸ் பண்ணி வேலைக்கு சேர்ந்திட்டேன். உங்க போட்டோ இன்னும் என்கிட்டே தான் இருக்கு. அடிக்கடி அதைப் பார்த்து, ‘வேறு அழகான பணக்காரப் பெண்ணாப் பார்த்து கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களா? என்று உங்களைக் கோவிச்சிப்பேன்” என்று வெட்கத்துடன் சொன்னாள்.
“முகத்தில் காயம் பட்டிருக்குன்னு சொல்லி இருக்கலாமே. அந்த முகத்தைப் பார்த்து பயந்து ஓடிப்போய் இருப்பேன்னு நெனச்சிட்டீங்களா?” என்று சொல்லி கணேஷ் வாய் விட்டு சிரித்தான். பிறகு அவன் பாக்கெட்டிலிருந்து பர்சை எடுத்துப் பிரித்து பூஜாவின் போட்டோவைக் காட்டி, “இந்த முகத்தில் சின்ன பரு இருந்தாலும் அழகாகத்தான் இருக்கும்” என்றான். “சரி, சாயந்திரம் நீங்க எத்தனை மணிக்கு வீட்டுக்குத் திரும்பி வருவீங்க? என்று கேட்டான். “வேலையிலிருந்து வீட்டுக்கு வர மாலை 6.3௦ ஆயிடும்” என்றாள்.
“ஸீ யு இன் தி ஈவ்னிங். இன்னிக்கி மறுபடியும் உங்களைப் பெண் கேட்டு வர்றோம். என்னை பிடிக்கலைன்னு சொல்லிடாதீங்க. வீட்டுக்கு போன் பண்ணி எதுவும் சொல்லாதீங்க, லெட் இட் பி எ சர்ப்ரைஸ்” என்று சொல்லி விட்டு பூஜாவை மீண்டும் பாங்க்கில் விட்டு விட்டு கணேஷ் வீட்டுக்கு விரைந்தான்.
“கணேஷ், இன்னிக்கு சாயந்திரம் பெசன்ட் நகர் பொண்ணைப் பார்க்க வர்றதா சொல்லிடட்டுமா?” என்றாள் கணேஷின் அம்மா. “வேண்டாம்மா, நாம் இன்னொரு வீட்டுக்குப் போகலாம், நான் பிக்ஸ் பண்ணிட்டேன்” என்றான் கணேஷ். ”யாருடா அது “ என்று ஆர்வத்துடன் கேட்டாள். “ஈவ்னிங் வரைக்கும் பொறுமையா இரேம்மா” என்றான் கணேஷ். அவனுடைய சந்தோஷமான முகத்தைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தாள்.
அம்மா அப்பாவுடன் கணேஷ் காரை பூஜாவின் வீட்டின் முன் நிறுத்திய போது, “என்னடா கணேஷ், இந்தப் பொண்ணு அழுதுட்டு இருந்தது, வேண்டாம்னு சொன்னியே, நான் அவங்களுக்கு எதுவுமே பதில் சொல்லாம, அப்படியே இருந்திட்டேனே, இப்ப அவங்க வீட்டுக்குள்ள போனா, அவங்க என்ன பேசுவாங்களோ?” என்றாள் அம்மா.
“பூஜாவைப் பார்த்து பேசிட்டேன்மா, அவங்க கிட்ட நான் பேசறேன், நீங்க வாங்க” என்று அவர்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றான். பூஜாவின் பெற்றோர் அவர்களைப் பார்த்து ஆச்சர்யத்துடன் தயங்கியபடியே வரவேற்று உட்கார வைத்தனர். “வணக்கம். நான் இன்னைக்கு பூஜாவை எதேச்சையா பாங்க்ல பார்த்தேன்” என்று தொடங்கி நடந்த விவரங்களை அனைவருக்கும் தெரிவித்து விட்டு, “அந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சியை இப்ப நடக்கறதா வெச்சிக்கலாமா? இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க பொண்ணு வந்திடுவாங்க, அதுக்குள்ள கொஞ்சம் காபி சாப்பிடலாமா? என்றான் கணேஷ்.
பூஜாவின் அம்மா சந்தோஷமாக சமையலறைக்குப் போய் காபி போட்டுக் கொண்டு வந்து கொடுத்தாள். பூஜாவின் அப்பா சகஜமாக கணேஷின் பெற்றோருடன் பேசிக்கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் பூஜா வந்தாள். கணேஷின் பெற்றோருக்கு வணக்கம் சொல்லிவிட்டு வெட்கத்துடன் அவள் அறைக்கு ஓடிச் சென்றாள். அவளைப் பின் தொடர்ந்த அம்மா, அவளை முகம் கழுவி வேறு நல்ல புடவை உடுத்திக் கொண்டு வரச் சொன்னாள். வந்ததும், கணேஷின் அம்மா தான் கொண்டு வந்திருந்த மல்லிப்பூவை பூஜாவின் தலையில் வைத்து, குங்குமம் இட்டு அவளை அணைத்து வாழ்த்தினாள். பூஜா கணேஷைப் பார்த்துச் சிரித்தாள். பெரியவர்கள் கல்யாணத்தைப் பற்றிப் பேசினார்கள்.
கணேஷின் அப்பா, “சீக்கிரம் ஒரு நல்ல நாளில் சிம்ப்பிளா கோயிலில் கல்யாணத்தை வெச்சிக்கலாம். ரிசப்ஷனை கிராண்டா பண்ணலாம்” என்று சொல்ல அனைவரும் ஒப்புக் கொண்டனர். கல்யாணமும் ரிசப்ஷனும் சிறப்பாக நடைபெற்றது. கணேஷும் பூஜாவும் பாங்க் மேனேஜருக்கு ஸ்பெஷல் தாங்க்ஸ் சொன்னார்கள்.
முதலிரவு. பூஜா அலங்கரிக்கப்பட்ட அறைக்குள் வந்தாள். காத்திருந்த கணேஷ், அவள் அருகில் வந்து, அவள் கரம் பிடித்து அழைத்துப் போய் கட்டிலில் அமரச் செய்தான். கைகளில் பூஜாவின் முகத்தைத் தாங்கியபடி அவள் கண்களைப் பார்த்தான். மகிழ்ச்சியும் ஆவலும் நாணமும் பொங்கி வழிந்தன. கணேஷ் மெதுவாக அவள் இடதுக் கன்னத்தின் மீதிருந்த பருவை வருடியபடி “இதோ முகத்தில் பரு” என்று அவள் காதில் கிசுகிசுத்தான். அவள் சரிந்து அவன் தோளில் சாய்ந்தாள். அவள் கண்களின் ஓரத்தில் இருந்து சந்தோஷக் கண்ணீர் வழிந்து கணேஷின் மார்பில் விழுந்து ஈரமாக்கியது.