கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 14, 2012
பார்வையிட்டோர்: 13,087 
 
 

என்னால் நம்ப முடியல. பாட்டி சொல்றது நெசந்தானா? அப்பாவா அப்புடி சொன்னாரு? அப்படி அழுதாரு? எம் மனசுக்குள்ள அப்ப்டியெல்லாமிருக்காதுன்னு தோணிக்கிட்டேயிருந்துச்சு.

”நெசமாவா சொல்றே?” – பாட்டிகிட்ட திரும்ப கேட்டேன்..

”அட! ஆமா! பின்ன பொய்யா சொல்றேன்?”

“நம்ப முடியலயே?”

”நெசந்தான். நீ வேணுமுன்னா ஒங்கம்மாகிட்ட போய்க்கேளு”
அதுக்கு மேல் எனக்கு இருப்பு கொள்ளலை. அம்மா சாயங்காலம் வரட்டும். கேட்டுற வேண்டியதுதான். ஆனா அதுவர எப்படி பொறுக்க? யோசிச்சுக்கிட்டே குடிசைக்கு வெளிய வந்துட்டேன். ரோட்டுல சர் சர்ருன்னு பஸ், காருன்னு போய்க்கிட்டேயிருந்துச்சு. பக்கத்து வீட்டு பிரேமா அக்கா நின்னுக்கிட்டிருந்துச்சு அதுகிட்ட கேட்டா என்ன?
பிரேமா அக்கா பக்கத்து வீட்டில் நான் பொறக்குறதுக்கு முன்னாடிருந்தே இருக்காங்க. நான் பொறந்தப்போ அக்காவுக்கு பத்து வயசுன்னு அடிக்கடி அக்கா சொல்லும். ஒருவேளை அதுக்குத் தெரிஞ்சிருக்குமோ? மெதுவா அக்கா கிட்ட போனேன்.

”யக்கா! யக்கோவ்!”

”என்னடி பொண்ணே!”

“மணி என்ன?”

“கொஞ்ச முன்னால லட்சுமி – சரஸ்வதி போச்சு. பின்னாலேயே மாரியப்பாவும் போச்சு. அதனால ரெண்டேகால் இருக்கும் மீனுக்குட்டி”

அக்காவுக்கு எந்த பஸ் ரோட்டில் எத்தனை மணிக்குப் போகும்ங்கிற வெவரமெல்லாம் சரியா தெரியும். பஸ் போறதை வச்சு நேரம் சரியா சொல்லும். தஞ்சாவூர்லேர்ந்து பட்டுக்கோட்டை ரூட்டுல போற அத்தனை பஸ்ஸும் அத்துப்படி. குடிசைக்குள்ள இருந்துக்கிட்டே பஸ் ஹாரன் சத்த்த்த வச்சே ஒரு நாளு அக்கா குருவி பஸ் சர்வீஸ்காரன் போறான்னு கரெக்டா சொன்னுச்சு. அப்படி ஆளு அக்கா.

”எனக்கொரு சந்தேகம். ஓங்கிட்டத்தான் கேக்கணும்.”

“கேளு மீனுக்குட்டி”

“நான் பொறந்தப்போ நீ இந்த வீட்டுல தானே இருந்தே?”

“ஆமா. இந்த வீட்டுக்கு குடிவந்தாச்சு. ஆனா நா நீ பொறந்தன்னிக்கு ஊருக்குப் போயிருந்தேன். ரெண்டு நாளு கழிச்சுத்தான் வந்து பாத்தேன் ஒன்னை. சும்மா கருகருன்னு இருந்தே..! ஒங்க சித்தி, மாமா, மாமி, எல்லாரும் ஒன்னப்பாக்க வந்திருந்தாங்க. எல்லாருமே பொண்ணு கருப்பா பொறந்திருக்கு. ஆனா களையா இருக்குன்னு பேசிக்கிட்டாங்க.. அப்பவே நீ என்னப் பாத்தோன்ன சிரிச்சே. ம்.. அப்பவே ஆரம்பிச்சிருச்சு போ நம்ம பளக்கம்”

நான் அக்காவையே பார்த்துக்கிட்டிருந்தேன்.

“என்ன எப்பவும் பளக்கம்னு சொல்லப்புடாது.. உனக்கு தமிள் சரியா பேச வரலேன்னு திருத்துவ.. இன்னைக்கு கம்முன்னு நிக்கிற?”

”மூடு இல்லக்கா”

”ஏம்மீனு? என்ன விசயம்?”

அக்கா பக்கத்தில் வந்தது. என் தலையைக் கோதிவிட்டது.

“என்ன சொல்லு?. ஏன் ஒரு மாதிரியா இருக்கே?”

எனக்கு அக்கா தலையை கோதிவிட்டது பிடிச்சிருந்த்து. அக்காவின் விரல்லேர்ந்து ஏதோ ஒண்ணு உடம்புக்குள்ள இறங்குற மாதிரி இருந்துச்சு. கண்ணில் தண்ணி வந்தது. அக்கா பார்த்துடுச்சு.

”ஏய்! என்னாச்சு .ஏன் அழுவுறே”

பிரேமா அக்கா பதறிடுச்சு. அதுக்குமேல எனக்குத் தாங்கலை. அழுகை வெடிச்சு மாலை மாலையாய் கண்ணுதண்ணி கொட்டுச்சு.

“நான் பொறந்தப்போ அப்பா என்னைப்பாத்து.. என்னப்பாத்து….பொண்ணு பொறந்துடுச்சேன்னும், நான் கருப்பா இருக்கேன்னும் அழுதாராமேக்கா? நெசமாவா?” – அழுதுக்கிட்டே நான் கேட்டது அக்காவுக்கு சரியா புரிஞ்சுதோ புரியலையோன்னு சந்தேகமா இருந்துச்சு.

ஆனா புரிஞ்சிடுச்சு போல. “சீ.. லூஸூ.. இதுக்கா அழுவுற?” ன்னுச்சு. நான் அழுதுக்கிட்டேயிருந்தேன்.

“அதெல்லாமொண்ணுமில்ல..அப்புடியெல்லாம் அவரு அழுவல…! ஒனக்கு யாரு சொன்னா?”

“பாட்டி..!”

“கெழவி கட்டையில போக.. இப்படியா சின்னபுள்ள கிட்ட சொல்றது!” பாட்டி இருந்த பக்கம் பார்த்து அக்கா கத்துச்சு.

”அதெல்லாம் ஒண்ணுமில்ல மீனுக்குட்டி! நீ அழுவாத.. அப்படியெல்லாம் அப்பா சொல்லலை. அழுவலை. கெழவி ஏதாவது சொல்லிருக்கும். அதையெல்லாம் பெரிசா எடுத்துக்கிட்டு…சீ.. சீ. அழுவாத மீனு!” – அக்கா என்னை சமாதானப்படுத்துச்சு. ஆனா எனக்கு அழுகை நிக்காம கொட்டிச்சு.

“பொய் சொல்லாதேக்கா! நீதான் ஊருக்குப் போயிருந்தீல்ல.. நான் பொறந்தப்போ… ஒனக்கெப்படி தெரியும்..? போ..!” – நான் அழுதுக்கிட்டே இருந்தேன். அக்கா கைய பிசைஞ்சுது. என்ன செய்யுறதுன்னு அதுக்குப் புரியலை. “உங்கம்மா வரட்டும் மீனுக்குட்டி. கேட்டுருவோம். “ என்றது.

“நானும் அது வரட்டும்னுதான் பாக்குறேன்.”

அக்கா என் கண்ணைத் தொடச்சு விட்டுச்சு..கொஞ்சம் அழுகை நின்னுச்சு எனக்கு.

அப்பா எப்டி அந்த மாதிரி சொல்லலாம்? இந்த கேள்வியே மண்டைக்குள்ள சுத்திக்கிட்டு இருந்துச்சு. அப்பா இதுவர என்கிட்ட கோவப்பட்டதேயில்ல. அத்தனை பாசம் எம்மேல. ரொம்ப பெருமை என்னப்பத்தி..

கிளாஸ்ல நாந்தான் முதல் ரேங்க். கார்டு கொண்டு வந்து குடுக்கையில அப்பா மூஞ்சில அத்தன சந்தோசம் தெரியும்.

“பாருடி! எம்புள்ள மொத ரேங்க் எடுத்திருக்கு” ன்னு அம்மாகிட்ட சொல்வார். “என் சாமர்த்தியம் என் பொண்ணுக்கும் அப்புடியே.. நான் தான் படிக்கலை. ஒன்ன படிக்கவச்சு பெரிய டாக்டராக்கணும். இதே மாரி நல்லா படிக்கணும் மீனுக்குட்டி.. என் ராசாத்தி…என்ன வேணும் ஒனக்கு.. சொல்லு.. அப்பா நாளைக்கி வாங்கிட்டு வாரேன். சொல்லு சொல்லு” ம்பார்.

பேனா, பென்சில், நோட்டு இப்புடி அப்பா வாங்கிக்கொடுக்க ஏதுவா ஏதாச்சும் கேப்பேன். அடுத்த நாளு வாங்கிட்டு வருவாரு. இது ஒவ்வொரு பரீட்சைக்கும் நடக்கும்.

இதில்லாம, ஸ்கூல்ல நடக்குற பாட்டுப்போட்டி, கட்டுரைப்போட்டி, பேச்சுப்போட்டின்னு எல்லாத்துலயும் பரிசு வாங்கும்போதெல்லாம் அப்பாவுக்கு பெருமை தாங்காது. ஒரு தடவை தஞசாவூர் மாவட்ட லெவல்ல நடந்த ஒரு கட்டுரைப்போட்டியில கப் ஒண்ணு பரிசா வாங்கிட்டு வந்தப்ப அப்பாவோட சந்தோசமான மொகம் அந்த கப்போட பளபளப்புல இன்னும் பளீர்னு தெரிஞ்சது அப்படியே எனக்கு ஞாபகம் இருக்கு.

அக்கம் பக்கத்துல இருக்குற ஒவ்வொரு குடிசைக்கும் போயி கப்பை காமிச்சிட்டு வந்தார். அடுத்த நாள் காலையில வேலைக்கு போகையில அந்தக் கப்பை எடுத்துக்கிட்டு போனார். அம்மா அதைப் பாத்துட்டு பதறிச்சி..”எங்கே கொண்டு போறீங்க?” ன்னு சத்தம் போட அப்பா நின்னு மொறைச்சார்

“சும்மா கிட.! எங்க மீனுக்குட்டி கப் வாங்கிருக்குன்னு மொதலாளி கிட்ட காமிக்கறதுக்குத்தான். அவருக்கும்தான் ஒரு புள்ள இருக்கான். ஒண்ணுத்துக்கும் ஒதவாத பயல். படிப்பே ஏறாது. தெனம் அவன் படிக்கலன்னு திட்டு வாங்குறத பாக்குறேன்ல.. நம்ம புள்ள குடிசையில கெடந்தாலும் எத்தனை தெறமை.! பெருமையா கொண்டு போயி காமிச்சுட்டு வரப்போறேன்.” – சொல்லிட்டு அப்பா போயிட்டார்.

ராத்திரி அப்பா திரும்பி வரும்போது சீட்டியடிச்சுக்கிட்டே வந்தார்.
அம்மா “என்ன சீட்டியெல்லாம் பலமா இருக்கு?” ன்னு அப்பாகிட்ட கேட்டுச்சு.

“மொதலாளி கிட்ட போய் நான் கப்ப காமிச்சேன். அவரு என்கிட்ட மூஞ்சிய காமிச்சார்” ன்னு சொல்லிட்டு சிரிச்சாரு அப்பா. எனக்கு அப்பா அப்புடிப் பேசினதப் பாக்க சிரிப்பு வந்துச்சு

வந்து என்னை அப்படியே அலாக்கா தூக்கி ஒரு சுத்து சுத்தி கீழ விட்டார். “அந்தாளு மூஞ்சியில ஈயாடல. மனசுக்குள்ள நம்மகிட்ட வேலை பாக்குற நாயி… புள்ள கப்பு வாங்குனதை பெருமையா காமிக்குதுன்னு நெனச்சிருப்பாரு. எனக்கா தெரியாது இவரப் பத்தி.. அதுவரைக்கும் நல்லா பேசிக்கிட்டிருந்தவரு அதுக்குப்பின்னாடி நான் கெளம்புற வரையும் சிடுசிடுன்னு மூஞ்சியக் காமிச்சாரு. நான் மனசுக்குள்ள போடா இவனேன்னு நெனச்சுக்கிட்டேன்.. என்ன இருந்தாலும் இன்னைக்கு வீட்டுக்குப் போனோன அந்தப் பயலுக்கு டோஸ் வுளுந்திருக்கும். பாவம்! அவனும் சின்ன புள்ள.” ன்னு அப்பா உச்சுக்கொட்டி பரிதாப்பட்டார்.

அன்னைக்கு ராத்திரி நெலா வெளிச்சத்துல சோறு திங்கையில அப்பா எனக்கு கதை சொன்னாரு. மூக்கறுத்தான் கதை. எனக்குப் பிடிச்ச கதை. நெறைய தடவை அப்பாவ அந்தக் கதைய சொல்லச்சொல்லி கேப்பேன். அப்பா கத சொலற அழகே தனிதான். கண்ண விரிச்சு வச்சுக்கிட்டு கையையும் காலையும் ஆட்டி அவரு கத சொல்றதப் பாக்க நல்லாருக்கும். அம்மா மட்டும் ”எப்பப்பாரு மூக்கறுத்தான் கதை தானாக்கும்”னு நொடிச்சிக்கிட்டு போவும்.

”ஒனக்கா சொல்றேன் நான். மீனுக்குட்டிக்குத்தான் சொல்றேன். எத்தினி தடவ சொன்னாலும் மீனுக்குட்டி கேக்கும். இல்ல மீனுக்குட்டி?”

“ஆமாம். நீ சொல்லுப்பா” ன்னு சொன்னவொடனே வுட்ட எடத்திலேர்ந்து கரெக்டா ஆரம்பிச்சார் “அப்புறம் மூக்கறுத்தான் என்ன பண்ணாந்தெரியுமா? நமக்கு மட்டும் மூக்கில்லயே இந்த் ஊருல. மத்தவனுக்கெல்லாம் மூக்கு இருக்கே.. இவனுங்க நம்மள மட்டும் எப்பப்பரு இதச் சொல்லியே எடக்கு பண்ணிக்கிட்டுத் திரியுறானுங்களே.. இவனுங்களை ஏதாச்சும் பண்ணனும்னு மனசுக்குள்ள நெனச்சுக்கிட்டான். என்ன மீனுக்குட்டி.. ம் கொட்ட மாட்டேங்குற? நா எப்படி கத சொல்றதாம்?”

“கொட்டுறேன்…கொட்டுறேன். ம்..ம்.. சொல்லு சொல்லு,”
அப்பா இன்னும் வேகமா கையையும் காலையும் ஆட்டி ஆட்டி கதை சொன்னார்.

“எனக்கு மட்டும் வானத்துல பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்கன்னு மூக்கறுத்தான் மத்தவங்க கிட்ட சொன்னானாம். ஊர்க்காரனெல்லாம் அதெப்படி ஒனக்கு மட்டும் தெரியுறாங்கன்னு கேட்டாங்களாம். அதுக்கு அவன் என்னை மாதிரியே மூக்கறுத்துக்கிட்டு பாத்தாத்தான் தெரியும்னு சொன்னானாம். உடனே இந்த முட்டாப்பசங்க எல்லாரும் ஆளுக்கொரு கத்தியை எடுத்துக்கிட்டு ரெடியாய்ட்டாங்களாம். முதல்ல ஒருத்தன் மூக்கறுத்த உடனே இன்னொருத்தன் பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்களான்னு கேட்டானாம். அவனுக்கு நெசமாவே தெரியல. ஆனா இந்தப் பயலுக நம்மள மதிக்க மாட்டானுங்களேன்னு நெனச்சு தெரியுதுன்னானாம். அவ்வளவுதான் ஒவ்வொருத்தனும் மூக்க அறுத்துக்கிட்டு வானத்தப் பார்த்தானாம். ஆனா யாருக்கும் எதுவுமே தெரியலியாம்.”

”ம்.. அப்பறம்ப்பா”

”ஆமாம். ஒனக்கும் இந்தக் கதை தெரியாத மாதிரியே தான் ஒவ்வொரு தடவையும் புதுசா அப்புறம் போடுவே. என்ன புள்ளயோ என்ன அப்பனோ” ன்னு மொறச்சுது அம்மா.
”சும்மாரு நீ.. அப்புறம் மீனுக்குட்டி….என்ன ஆச்சுன்னா…. ஊரே மூக்கறுந்து போச்சு. சொல்லிவச்ச மாதிரி எல்லா பயலும் வானத்துல பார்வதியும் பரமசிவனும் தெரியுறாங்கன்னு சொன்னானுங்களாம். மூக்கறுத்தானுக்கு இப்பத்தான் சந்தோசம். அப்பாடா…! ஊருல ஒரு பய இனிமே நம்மள மூக்கறுத்தான்னு கூப்புட முடியாதுன்னு நெனச்சி இடி கணக்கா சிரிச்சானாம. எப்புடி இருக்கு அப்பா சொன்ன கத…”

”நல்லாருக்குப்பா…நாளைக்கு வேற கத சொல்லு. இப்பவே யோசிச்சு வைப்பா” – சொல்லி முடிக்கிறதுக்குள்ள தூக்கம் வந்து தூங்கிட்டேன் நான்.

அப்படியெல்லாம் கதை சொன்ன அப்பா.. கூலி வாங்குன ஒடனே எனக்கு முட்டாயி, பன்னு, ரொட்டி எல்லாம் வாங்கிட்டு வர்ற அப்பா அதெப்படி நான் பொறந்தப்போ அழுதிருப்பார். எனக்கு மனசு ஆறலை. ஏன் அழுதாரு? எதுக்கு அழுதாரு. அம்மா வரட்டும். கேக்கணும்.

அம்மா ஆறு மணிக்கு வந்தது. அம்மா கிட்ட போய் நின்னு கேட்டேன். அம்மா என்னை ஏற இறங்க பாத்துச்சு.

“போடீ.. ஒனக்கு வேற வேல இல்ல..”

“எனக்குத் தெரிஞ்சாகணும்..சொல்லு.. அப்பா அழுதாரா..”
“தே… சும்மா போ…அதெல்லாம் அழுவல…என்னத்துக்கு அழுவணும்? அதெல்லாம் அழுவல. ஒனக்கு யார் சொன்னா? ..கெழவியா? அது சும்மா இருக்காதா வாய வச்சுக்கிட்டு…”
பாட்டிகிட்ட போய கத்திச்சு அம்மா. பாட்டி பதிலுக்கு ஏதோ சொன்னுச்சு. ஆனா காதுல விழலை. பாட்டி கிட்ட போனேன். அம்மா பாட்டியை மொறைச்சுக்கிட்டே திட்டிக்கிட்டு இருந்துச்சு. நான் போனோன நிப்பாட்டிட்டு வேகமா குடிசைக்கு வெளில போச்சு. நான் பாட்டி கிட்ட போய்க் கேட்டேன்.

“அப்பா ஏன் அழுதாருன்னு ஒனக்குத் தெரியுமா?”

“ஆங்….பொட்டப்புள்ளய பெத்துட்டா வாழ்க்க பூரா கஷ்டந்தான். அத வளத்து ஆளாக்கி சடங்கானா காரியம் செஞ்சு, அப்புறம் ஒருத்தன் கையில புடிச்சு கொடுக்குற வரை கஷ்டம் தான். ஒங்கப்பன் என்ன கலெக்டர் உத்தியோகமா பார்க்குறான்? ஒன்னய கஷ்டப்படாம கட்டிக்கொடுக்க. இப்பவே சேக்க ஆரம்பிச்சத்தான் உண்டு. இது புரியாம அவன் ஒங்கூட செல்லங்கொஞ்சிக்கிட்டுத் திரியுறான்.. ம்ஹும்…ஆம்பளப்புள்ள வேணும்னு நெனச்சான் ஒங்கப்பன். அதாச்சும் கடைசி காலத்துல க்ஞ்சி ஊத்தும். நீ கட்டிக்கிட்டு ஓடிருவ நாயி… அதுக்குத்தான் அழுதான் ஒங்கப்பன். வேணும்னா அவன் வந்தோன்ன கேளு. போ..” ன்னுச்சு பாட்டி

எனக்கு கோவம் வந்துச்சு

“ஏன் எங்கப்பாவுக்கு நான் கஞ்சி ஊத்த மாட்டேனா?.. நீ என்ன பாட்டி பேசுற?” ன்னேன் ரோஷமா..

”பொட்டச்சி பேசுறா பாரு. பாப்பமே ஒங்கப்பனுக்கு க்ஞ்சி ஊத்துறத..” – சிரித்தது பாட்டி.

பத்திக்கிட்டு வந்துச்சு எனக்கு. “நீ எப்படிப் பார்ப்பே. கெழவி.. ஒன்ன பொதச்ச எடத்துல புல்லு மொளச்சுருக்கும் அப்போ. பேசாம போ.. எங்கப்பாவைப் பாத்துக்க எனக்குத் தெரியும்”- நான் திட்டி வுட்டுட்டு வெளியே வந்துட்டேன்.

கெழவி சும்மானாச்சுக்கும் சொல்லாது. ஆனா கெழவி சொல்றதை நம்பவும் முடியல. நம்பாம இருக்கவும் முடியல. பாப்போம். அப்பா கிட்டயே கேட்டுற வேண்டியதுதான். இன்னைக்கு அப்பாவுக்கு கூலி வர்ற நாளுங்கறது நெனப்புல வந்து போச்சு. செல சமயம் பரோட்டா வாங்கிட்டு வருவார் அப்பா. பாப்போம் இன்னைக்கு. என்ன வாங்கிட்டு வந்தாலும் எதையும் தொடக்கூடாது. வந்தோன்ன கேக்கணும். எனக்கு இது சாவுற வரைக்கும் மறக்காது போலருக்கே. அய்யோ..! ஏன் இப்படி ஆவுது எனக்கு.. அப்பா ! சீக்கிரம் வாயேன்..

நேரம் தான் போச்சு. அப்பா வரலை. நான் குடிசைக்குள்ள போகாம வெளில ஒக்காந்துருந்தேன். கூடப்படிக்கிற பாலு சைக்கிள்ள போனான். என்னைப் பாத்த்தும் படக்குன்னு நின்னான்.

“என்ன மீனு? படிக்கலயா? வெளில ஒக்காந்துருக்கே!”

“படிக்கணும்…ஆமாம்.. படிச்சு என்ன பண்ணப்போறேன்..யாரையாது கட்டிக்கிட்டு எங்கேயோ போகப்போறேன்.. எங்கப்பாவையா கடைசி காலத்துல காப்பாத்தப் போறேன்? எல்லாம் படிக்கிறேன். நீ போ அந்தண்டை..” – அவனிடம் எரிஞ்சு விழுந்தேன்.

அவன் விநோதமாய் பாத்துக்கிட்டே சைக்கிளை மிதிச்சான்.

சே! நான் ஏன் பாலுகிட்ட அப்புடி சொன்னேன்.. எவனைக் கட்டிக்கிட்டாத்தான் என்ன?. கட்டிக்கிடாட்டாத்தான் என்ன..? அப்பாவுக்கு நாந்தான் க்ஞ்சி ஊத்துவேன். இந்தக் கெழவி கண்டபடி பேசி.. என்னை கெடுத்துடுச்சு. படிச்சு பெரியாளாகணும். அப்பா சொன்ன மாதிரி டாக்டராகணும்..
பாட புஸ்தகத்தை எடுத்து வச்சுட்டு ஒக்காந்தேன். ரெண்டு பாரா படிக்கிறதுக்குள்ள திரும்ப அப்பா அழுவது மனசுக்குள்ள ரத்னா டாக்கீஸ்ல படம் பார்க்குறது கணக்கா ஓடுது. படிக்க முடியல..எவ்ளோ கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவாரு அப்பா. ஆனால் நான் பொறந்தப்ப ஏன் என்னப் புடிக்கல அவருக்கு..? ஏன் அழுதாரு? நெனக்க நெனக்க கண்ணுதண்ணி வந்துக்கிட்டேயிருந்துச்சு.

அம்மா சாப்பிடக் கூப்பிட்டுச்சு.. வேணாம்னுட்டேன். “ஏன் மீனுக்குட்டி” ன்னுச்சு பாசமா. அதுக்கு கண்ணு க்லங்கியிருந்துச்சு..

“தோ பாரு மீனு! அப்பா அளுவலை அன்னிக்கு ஒன் மேல சத்தியமா அளுவல.. நீ இப்போ சாப்பிடு வா!”

அம்மா என் மேல் சத்தியம் செய்யுதே. நெசமா இருக்குமோ? அப்பா அழுவலையோ அன்னிக்கு? இந்தக் கெழவி பொய் சொல்லிருக்குமோ? மனசு கொஞ்சம் ஆறுதலா இருந்துச்சு. ஆனாலும் அப்பா வாயால சொன்னாத்தான். அப்புறந்தான் சாப்புடணும். தீர்மானமா அம்மாகிட்ட சொல்லிட்டேன். அம்மா தலையில் கைவச்சு ஒக்காந்துது.

வெளியே சத்தம் கேட்ட்து. அப்பா தான் வர்றார்.

“மீனு.. மீனுக்குட்டி.. செல்லத்துக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு… கொத்து பரோட்டா..ஒனக்குப் புடிக்கும்ல…உடியா உடியா” – அப்பா பாசமா பக்கத்துல வந்தார்.

”வாசலுக்கு வா மீனுக்குட்டி.. அப்பா கத சொல்லுவனாம். நீ சாப்பிடுவியாம். ஓடியா” அப்பா சட்டையை கழட்டி வச்சுட்டு பனியனையும் கழட்டி வச்சுட்டு….லுங்கியோட வெளில வாசல்ல போய் ஒக்காந்தார். நான் பின்னாடியே போனேன். கேட்டுரலாமான்னு யோசிச்சுக்கிட்டே போனேன். பயமா இருந்தது. அப்பா என்ன பதில் சொல்லுவாரு? கெழவி சொன்ன மாதிரி சொல்லுவாரோ? இல்லை அம்மா சொன்ன மாதிரி அழுவலைன்னு சொல்வாரா? ம்….யோசிச்சுக்கிட்டே போய் அவர் முன்னாடி நின்னேன். அவரு கண்ணையே நல்லா உத்துப்பாத்துக் கேட்டேன்.

“நான் பொறந்தப்போ அழுதியாப்பா?”

அப்பா என்னையே பாத்தார். “யார் சொன்னா ஒனக்கு?”

“யாரோ..நீ பதில் சொல்லுப்பா!” பெரிய மனுஷி மாதிரி நான் அதட்டினேன். நான் அதட்டுன மாதிரி பேசினாலும் என் குரல் பதட்டமா இருந்துச்சு. கை நடுங்குச்சு.

அம்மா வந்து பக்கத்தில் நின்னுச்சு..”இந்தக் கெழவிதான் சும்மா இல்லாம புள்ள கிட்ட கண்டதையும் சொல்லி வச்சு மதியானத்துலேர்ந்து மாலை மாலையா அழுவுது புள்ள. பிரேமா சொல்லி, நாஞ்சொல்லி நம்பல..” – குறுக்க மறிச்சு “நீ பேசாதேம்மா.. நான் அப்பா கிட்ட பேசிக்கிறேன்” ன்னேன்.

அப்பா கிட்ட திரும்பி…கேட்டேன்.. “நான் பொறந்தப்ப அழுதியாப்பா?”

அப்பாவோட பதிலை காதால மட்டும் கேட்டாப்போதும்னு தோணுச்சு. கண்ணை இறுக்கி மூடிக்கிட்டேன். அப்பாகிட்டேர்ந்து பதிலே இல்ல. கண்ணத் தொறந்து திருப்பியும். “அழுதியா” ன்னு கேட்டுட்டு கண்ண மறுபடியும் இறுக்கி மூடிக்கிட்டேன்.

அப்பாவோட குரல் எனக்குக் கேட்டுச்சு..

“ஆமாம் மீனுக்குட்டி” ன்னார்.

என் கண்ணு தன்னால தொறந்துச்சு. கண்ணு அங்கெ இங்கே போகலை. மூடலை. அப்படியே அப்பாவப் பாத்துக்கிட்டே அழுதேன். வேகமா கத்தி அழுதேன். அழுதுக்கிட்டே கேட்டேன்
“பொட்டப்புள்ளயா பொறந்துட்டேனேன்னு அழுதியாப்பா? கருப்பா இருந்தேன்னு அழுதியாப்பா?”

ஒடனே அப்பா யோசிக்காம சிரிச்சுக்கிட்டே சொன்னார்

“ஆமாம். அளுதேன்.. பொறந்தது மீனுக்குட்டின்னு அப்போ எனக்கு தெரியாதே ராசாத்தி.. தெரிஞ்சிருந்தா அளுதிருக்க மாட்டேன்.”

சட்டுன்னு என் அழுகை நின்னுடுச்சு. ஓடிப்போய் அப்பாவ கட்டிப்பிடிச்சு முத்தமா கொடுத்தேன். கொஞ்சம் தள்ளி நின்னுக்கிட்டிருந்த அம்மாவும் கெழவியும் கண்ணத் தொடச்சுக்கிட்டதையும் ஓரக்கண்ணால பாத்தேன்.

Print Friendly, PDF & Email

1 thought on “மீனுக்குட்டி

  1. அழகான கதைகள் கவின்மலர்,

    இப்படிக்கு உங்கள் ரசிகை 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *