மாமனாரைப் பிடிக்கல…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: May 19, 2019
பார்வையிட்டோர்: 14,422 
 
 

அருண்! நிறைய இடம் பார்த்தாச்சு, நீயும் அதை இதை சொல்லி தட்டி கழிச்சிக்கிட்டே இருக்கே, நாங்களும் உனக்கு பெண் தேடி அலுத்திட்டோம். இன்றைக்கு பார்க்கப் போகிற இடத்திலாவது உனக்கு ஏற்றவளா அமையனும்னு நான் வேண்டாத தெய்வமில்லை. நான் சொல்கிறதை கேளு, கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் அதெல்லாம் பெரிசா எடுத்துக்காம பேசி முடிச்சுடவேண்டியதுதான்.

என்னங்க! இவ்வளவு நாழியா கத்திக்கிட்டு இருக்கேனே என்ன ஏதுன்னு ஏதாவது கேட்கிறிங்களா? நமக்கென்னான்னு இருக்க வேண்டியது, ஏதாவது நடத்திடுச்சுன்னா நான்தான் அப்பவே சொன்னேனே, நீ தான் கேட்கலைன்னு ஒரே வார்த்தையிலே முடிச்சிடவேண்டியது.

பையனுக்கு அப்பாவா அவனுக்கு கொஞ்சம் புத்திமதி சொல்லி சம்மதிக்க வைங்க, எனப் பேசிக்கொண்டே காபியைக் கொண்டு வந்து லொட் என வைத்தாள். கமலா .

டபராவிலிருந்த காபியும் ஆத்திரத்தில் சிறிது வெளியே குதித்தது.

நீயும் பெண்கிட்ட பேசிடு அருண், சம்பளம் இப்போதைக்கு கம்மிதான் ஆனா பின்னாளில் அதிகமாக வாய்ப்புள்ளது, வீட்டு மனை ஒன்று உள்ளது, அம்மா கொஞ்சம் கோவப்படுவாங்க ஆனா, ரொம்ப நல்லவங்க, எனப் பேசிடு, என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, உள்ளே இருந்து கமலா, அதானே என்னடா இன்னும் ஒன்றும் நடக்கலையேன்னு நினைச்சேன் ,இதோ ஏழரையை கூட்டற மாதிரி பேச ஆரம்பிச்சுட்டாரு,

போதும் சாமி, நீங்க ஒன்றும் வாயைத் திறக்க வேண்டாம் எல்லாம் நாங்கள் பேசிகிடுறோம், நீங்க சும்மா வந்து நில்லுங்க அது போதும். என்றாள்.

வாயை மூடிக்கொண்டார், தனியார் கம்பெனி ஒன்றில் வேலைப் பார்த்து ஓய்வுப்பெற்ற பரம சாதுவான கணேசன்.

வாங்க! வாங்க!! என வந்தவர்களை வரவேற்று அமர வைத்தார்,பெண்ணின் மாமா,

பலகாரங்கள் உடன் கருத்துகளும் பரிமாறப் பட , எளிமையான புடவையில் தலை நிறை பூவோடு,வந்து அவர்கள் முன் வணங்கி நின்றாள் அகிலா.

பார்த்தவுடன் கமலா சந்தோஷத்தில் அவளை அருகே கூப்பிட்டு கையைப் பிடித்துக் கொண்டு நல்லா இருக்கியாம்மா என்றாள் வாஞ்சையாக.

கணேசன் தன் பலகாரங்களுடன் பல தீர்க்கவே முடியாத அரசியல் பிரச்சினைகளைப் பற்றி அகிலாவின் உறவினர்களோடு பேசிக்கொண்டு இருந்தார்.

அருணும், கமலாவும் முறைத்த பின் அவரும் பேச்சைப் குறைத்து இவர்கள் பக்கம் தன் கவனத்தைத் திருப்பினார்.

அகிலா, அப்பா இல்லாத பொண்ணு, எனவும் மாமாவான நான்தான் எல்லாம் செய்யனும் அதனாலே என்ன சிறப்பா செய்யனுமோ அதை செய்து விடுகிறோம். என்று அகிலாவின் மாமா சொல்ல,

அருண், அகிலாகிட்டே ஏதோ பேசனுமாம், என கமலா சொல்ல, அகிலாவோ நான் அருணின் அப்பாகிட்டே தனியா பேசனும் எனக் கூப்பிட்டாள்.

எல்லோரும் ஒரு நிமிடம் நின்று நிதானித்து ஆச்சரியமாக பார்க்க, தயங்கியபடி எழுந்த கணேசனும் அகிலாவும் பின்னால் இருக்கும் அறைக்குச் சென்றனர்.

ஏம்மா, அருண்கிட்டே பேசுவேனு நினைச்சேன் நான். நீ என்கிட்டே என்ன பேசப்போகிறாய்? என்றார்.

அருண் எப்படி பட்டவர்? அத்தை எப்படி ? என விட மற்றவர்களை விட உங்களுக்குத்தான் நல்லா தெரியும் என்றாள்.அதுதான்.

அருண் கொஞ்சம் முன் கோவக்காரன், நான் சொல்கிறதையெல்லாம் அவன் மதித்து கேட்கவே மாட்டான். கமலா சொன்னா மறுக்காம கேட்பான், ஒரே பிள்ளை என்கிறதாலே அவன் மேலே அவளுக்கு பாசம் ஜாஸ்தி.

அவருடைய ஓய்வு வாழ்க்கை அவர் எதிலும் பட்டும் படாமலும் கழிப்பதை பெருமையாக கூறிக்கொண்டு வந்தவர், இறுதியாக அவன் வாழ்க்கையில் நீ வந்தால் நிச்சயமாக நல்லா இருக்கும் என தனது ஆசையை சொல்லிவிட்டுச் சென்றார்.

வந்தவர்கள் வழக்கம் போல் தகவல் அனுப்புகிறோம் என்று சொல்லி கிளம்பினார்.

ஏண்டி? யாராவது மாப்பிள்ளையோட அப்பாகிட்ட போய் தனியா பேசுனும்னு சொல்லுவாங்களா?

என்னது மாப்பிள்ளையா? அருண்மா அவன் பேரு. நீ முடிவே பண்ணிட்டியா என அம்மாவைக் கண்டித்தாள்.

அம்மா இந்த சம்பந்தம் சரியா வாராது. எனச் சொன்னாள்.

ஏண்டீ?அவங்க ரொம்ப பெரிசாவும் எதிர்பார்க்கலை, நம்ம மாதிரியே நடுத்தரக் குடும்பம். ஒரே பையன் நிறைவான வருமானம் அளவான குடும்பம். வேற என்ன எதிர்பார்க்கிறாய் நீ?

என்ன செல்ல அம்மா! நீ எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கனும்னு ஆசைப் படுகிறாய், நான் வாழ்க்கையை வாழ்க்கையாக வாழனும்னு ஆசைப்படுகிறேன்.

ரொம்ப படிச்சாலே இந்த கோளாறுதான்,புலம்பிவிட்டு உள்ளே அறைக்குச் சென்றாள்.

பின் தொடர்ந்த அகிலா, அம்மா, பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்குள் பிரவேசிக்கும் ஒரு பெண்ணை மற்றவர்கள் புரிந்து கொண்டு நேசிக்கும் காலம் வரை அந்தப் பெண்ணைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பு யாருடையது.?

தெரியலை நீயே சொல்லு.

மாமனாருடையது.

சாதுவான மாமா நல்லதுதான், நானோ அப்பாவை இழந்தவள். நாளை எனக்கு ஒரு பிரச்சினை என்றால் தீர்க்கக் கூடிய ஆற்றலும், எடுத்துச் சொல்லி மகனுக்கு புரியவைக்கின்ற நிலையில் அவர் இல்லை என்பது அவர் பேச்சிலே தெரிகிறது.

வீட்டிலே ஆண்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதிலே தெரிந்து விடும் குடும்பம் எந்தளவிற்கு பண்பானவர்களை கொண்டுள்ளது என்று.

ஒரு மனிதரின் அறிவும், ஆழ்ந்த அனுபவமும் அவரது முதுமைப் பருவத்தில்தான் அவரது குடும்பத்தினருக்கு பயன்பட வேண்டும். ஆனால் இவரோ எதிலும் பட்டுக் கொள்வதில்லை எனப் பெருமையாகச் சொல்கிறார்.

ஆகையால் தான் அம்மா சொல்கிறேன் இந்த சம்பந்தம் வேண்டாம் என்று.

அடி சமர்த்தே! என திருஷ்டி கழித்தாள் கமலா.

பா.அய்யாசாமி தந்தை பெயர்: கி.பாலசுப்ரமணியன். பிறந்த ஊர்: சீர்காழி. நான் 15/10/1969 ஆம் ஆண்டு சீர்காழி எனும் ஊரிலே பிறந்தவன் என்னுடைய இளங்கலை இயற்பியல் படிப்பினை பூம்புகார் பேரவைக் கல்லூரியிலே 1989 ஆம் ஆண்டு முடித்து , தற்போது முதுகலை தமிழ் படித்துக்கொண்டு இருக்கின்றேன். தில்லி, உத்தர் பிரதேஷ் ,சென்னை என பல இடங்களில் பணிபுரிந்து தற்போது மயிலாடுதுறையிலே வசித்துக் கொண்டு இருக்கின்றேன்.2015 ஆம் ஆண்டு முதல் என்னை ரோட்டரியில்…மேலும் படிக்க...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *