மரிஷ்காவின் பூதங்கள்

0
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 15, 2012
பார்வையிட்டோர்: 7,557 
 
 

காதருகே யாரோ சிரித்தார்கள். திடுக்கிட்டுக் கண் விழித்தேன்.

சிரிப்பு என்றால் கலகல, முத்துதிர என்கிற உவமைக்கெல்லாம் ஒவ்வாத சிரிப்பு. மழலைச் சிரிப்பில்லை. பொக்கைச் சிரிப்பில்லை. சினிமாப் பாட்டில் சந்திரபாபு சிரிப்பது போலுமில்லை. இளம் வயதில் நான் வளர்ந்த வீட்டெதிரே மாரியம்மன் கோயிலில் பூசாரி பேயோட்டும் போதுக் கேட்கும் எக்காளம் கூட இல்லை. வினோதமான, உறைய வைக்கிற, ஏறக்குறைய அல்ட்ராசானிக் கிண்டல் சிரிப்பு. மீண்டும் துல்லியமாகக் கேட்டது. பஹ்ஹ்ஹ்ஹ்.

மேசைவிளக்கைத் தேடித் தடவினேன். கை பட்டிருக்க வேண்டும். அலாரம் போல் சிரிப்பு நின்று, ‘ஏய்’ என்று அதட்டும் குரல் கேட்க, அதிர்ந்தெழுந்து மின்விளக்கைப் போட்டேன். ஒலியின் திக்கில் கவனித்தேன். பேனா தரையில் உருண்டோடியிருந்தது. தூங்குமுன் படித்துக் கொண்டிருந்த கிப்லிங் புத்தகத்தில் குறிப்பெழுதிவிட்டு, பேனாவைச் சைனாவில் வாங்கிய கரப்பான் உருவப் பதினாறாம் நூற்றாண்டுப் பேனாக்கூட்டில் சேர்த்தது நினைவுக்கு வந்தது. கூட்டைக் காணோம். வியந்து விழித்தபோது புலப்பட்டது.

கிப்லிங் புத்தகத்தின் அட்டையில் அசைந்துகொண்டிருந்தது பெரிய சைஸ் கரப்பான் போல் ஒரு பூச்சி. கால் கட்டைவிரல் அளவில், நக அழுக்குக் கலரில் இருந்த அந்தக் கொழுத்தக் கரப்பான், இரண்டு வினாடிகளுக்கொரு முறை அரைகுறையாய் வளர்ந்த தன் சிறகுகளைத் தூக்கியிறக்கி முன்னும் பின்னும் நகர்ந்து, புத்தகத்தின் அட்டை மேல் கபடி விளையாடிக்கொண்டிருந்தது.

நான் வளர்ந்த குரோம்பேட்டை வீட்டில் இரவு முழுதும் ‘றர்ர்ர்’ என்று படபடத்த கரப்பான் பூச்சிகளுக்கு பயந்து, பேயடித்து ரத்தம் கக்கினாலும் பரவாயில்லையென்று வெளியே சென்று ப்லேஸ்டிக் பொம்மைகள் தூக்கில் தொங்கிய வேப்பமரத்தடியில் அவசரமாக ஒன்றுக்குப் போய் வந்தது நினைவுக்கு வந்தது. முப்பது வருடங்களுக்குப் பிறகு கரப்பானை இப்போது தான் பார்க்கிறேன். அதுவும் இத்தனை சுத்தமான என் கிகர் ஹமிதினா வீட்டில். எங்கிருந்து வந்திருக்கும் கரப்பான் என்று புரியாமல் தவித்தேன். தைரியம் வந்து, வெறும் கரப்பான்பூச்சி தானே என்று ஒரு பேப்பர் சுருளால் அதை அடிக்கக் குனிந்தேன். சட்டென்று கையை நீட்டி என் கையிலிருந்த பேப்பர் சுருளைத் தட்டிவிட்டுச் சிரித்தது. என்னால் நம்ப முடியவில்லை. ஆடிப் போய் விட்டேன். இது ஏதாவது கெட்ட கனவா?

“இல்லை, நிஜம்” என்றது. எனக்குப் பேச்சு வரவில்லை. மூச்சு நின்று விடும் போல் இருந்தது. “பயப்படாதே” என்றது. ‘இல்லை’ என்று தலையாட்டினேன். “யார் நீ?” என்று கேட்க நினைத்தேன், வார்த்தை வரவில்லை. “நான் நாற்பத்திரண்டு” என்றது.

என் மனதில் தோன்றிய கேள்விகளுக்குப் பதில் சொல்கிறதே? மறுபடியும் பேப்பர் சுருளைக் கையிலெடுத்தேன். “வேண்டாம், என்னை உன்னால் கொல்ல முடியாது. கண்டிப்பாகப் பேப்பர் சுருளை வைத்துக் கொல்ல முடியாது” என்றது.

“ஏன்?” என்றேன்.

“ஏனா? ஏனென்றால், நான் ஒரு பூதம். பூதத்தைப் பேப்பர் சுருளால் அடித்துக் கொன்றதாக எங்கேயாவது கேள்விப்பட்டிருக்கிறாயா?” என்று சொல்லிச் சிரித்தது. பஹ்ஹ்ஹ்ஹ்.

“உன் பெயர் நாற்பத்திரண்டா? விசித்திரமாக இருக்கிறதே?”

“இங்கே பார்” என்று புரண்டு படுத்து முதுகு போலிருந்த இடத்தைக் காட்டியது. எனக்குப் பரிச்சயமானக் கையெழுத்தில் 4 2 என்ற எண்கள். திரும்பி என் திசையில் பார்த்து, “அதான் நாற்பத்திரண்டு. என்னைப் போல் நாற்பத்தியொரு பூதங்கள் இருக்கிறார்கள். பலர் இந்த வீட்டிலேயே இருக்கிறார்கள்” என்றது. பிறகு குரலில் அசல் சிவாஜி ஏற்றி, “கடமை முடிக்கும் காலம் வந்ததால் நாங்கள் உயிர்த்தெழுந்து விட்டோம். புறப்படு தலைவா!” என்று செம்மொழி சொன்னது.

என் தூக்கம் வெள்ளையடித்தச் சுவரானது. ஒரு கப் டீ குடித்தால் நன்றாக இருக்கும் போல் தோன்றியது. பூச்சியைப் பார்த்தேன். “எனக்கும் சேர்த்து ஒரு கப் எடுத்து வா” என்றது.

“டீ குடிப்பியா என்ன?”

“பழக்கமில்லை. ஆனால் நீ போடும் டீ சுவையாக இருக்கும் என்று மரிஷ்கா சொல்லிக் கேட்டிருக்கிறேன்”

இது கனவில்லை என்று நிச்சயமாகப் புரிந்தது. மரிஷ்காவை இதற்கு எப்படித் தெரியும்? கேள்வியை யோசித்திருக்கக் கூடாது. “டீ போட்டுக் கொண்டு வா, விவரமாகச் சொல்கிறேன்” என்றது.

இருபத்து நாலு வயதில் பெர்க்லியில் தொல்பொருள் ஆராய்ச்சியல் மேற்படிப்புக்காக இந்தியாவிலிருந்து வந்தவன், இரண்டு வருடம் படித்துவிட்டு என் கல்லூரிப் பேராசிரியர் யோகஷ் மெனாஹம் தனியாக நடத்திய தொல்பொருள் வணிக நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தேன். தொல்பொருள் ஆராய்ச்சி ஆர்வம் ஒரு காரணம். யோகஷின் ஒரே பெண் மரிஷ்காவின் தோல்பொருள் ஆராய்ச்சியில் இருந்த ஆர்வம் மற்ற காரணங்களின் மொத்தம். மரிஷ்காவின் கண்கள்! மரிஷ்காவின் மார்பு! மரிஷ்காவின் இடை!

படிப்பு முடிந்து இரண்டு மாதத்தில் திருமணம் செய்து கொண்டோம். நான் சைவப் பார்ப்பான். மாமிசம் சுத்தமாகக் கூடாது, பார்த்தாலே வாந்தி வந்து விடும். அவளோ கோஷர் பெண். அவளுக்கு மாமிசம் சுத்தமாக இருக்க வேண்டும். இருவருக்கும் எப்படி பொருந்தும் என்று நிறைய பேர் நினைத்தார்கள். கல்லூரி நண்பர்கள் பந்தயம் கட்டினார்கள். அவர்கள் பந்தயம் கட்டியக் காரணம் வேறே. முஸ்லிம்கள் போலவே யூதர்களும் இளம்பிராய ஆண்களுக்கு அந்த இடத்தில் மேல்சதையைச் சதக் பண்ணிவிடுவார்கள். கூடலில் வசதியாக இருக்கும் என்று ஒரு நிரூபிக்கப்படாத நம்பிக்கை. பாஹ்மிட்ஸ்வா முடிந்த நாள்முதல் அத்தனை பணக்கார இஸ்ரேலியப் பையன்களும் முந்திரிப்பழ மரிஷ்காவுக்காக உயிரையும் விடத் தயாராக இருக்கும் போது… இந்தியப் பையன்.. பம்மலிலிருந்து ஒரு பாப்பாரச் சோப்ளாங்கி – பிரமிக்க வைக்கும் பம்ப்லிமாஸ் இஸ்ரேல் பொண்ணு.. இது எங்கே நிலைக்கும் என்று எங்கள் திருமண தினத்தன்று எங்களிடமே பந்தயம் கட்டினார்கள். சாப்பாடு, மதப் பொருத்தம் இல்லையென்றாலும், சுன்னத் சமாசாரம் வரும் போது இந்தியப் பையன், இந்தியப் பையன் தான். இந்த வித்தையைப் பற்றிப் புத்தகம் எழுதினவர்களாச்சே, சும்மாவா? மரிஷ்காவும் நானும் – அதை எப்படிச் சொல்வார்கள்? நாளொரு மேனி, பொழுதொரு வண்ணம், ரைட் – எங்கள் காதலை வளர்த்தோம். எங்களைப் போல நெருக்கமானத் தம்பதிகள் எங்களுக்கு முன்னும் இல்லை, இனி வரப்போவதுமில்லை. என் கல்லூரி நண்பர்களெல்லாம் இரண்டாவது மூன்றாவது திருமணத்தைத் தொட்டுக் கொண்டிருக்கும் போது, நானும் மரிஷ்காவும் நகமும் சதையும் போல, அன்று கண்ட அன்பில் ஒன்று கண்ட அன்றில் என்று, இருக்கிறோம்.

இருந்தோம் என்று சொல்ல வேண்டும். இப்பொழுது யோசிக்கையில், நடந்த நிகழ்ச்சிகளின் விபரீதம் காலில் கருகமுள் குத்தியது போல் புலப்படுகிறது.

யோகஷின் தொல்பொருள் வணிக நிறுவனச் சார்பில் இருவரும் உலகமெல்லாம் சுற்றினோம். கிறுஸ்து காலத்து நீர்க்கோப்பை, அலெக்சேந்தர் காலத்து போர்க்கவசம், பாபிலோனிய மதுக்குடுவை, ஹம்முராபி நாணயம், மொகஞ்சதாரோ குளியலறைப் பெட்டி, சுமாத்ராவில் மகத மன்னர் விட்டுச் சென்ற பொற்சிலை, ராஜராஜ சோழன் காலத்து சுவடி, நேபாள ராஜாக்களின் தங்கக் கஞ்சாப் பெட்டி, புத்த பிட்சுக்களின் வெள்ளிப்பிடித் தேக்குத்தடி, சைனாவிலிருந்து சியன் சிற்பம் என்றுத் தேடிக் கண்டுபிடித்து வாங்கி விற்று பணம் சேர்த்தோம். நிறையச் சேர்த்தோம். ஒவ்வொரு இடத்திற்கும் ஒன்றாகப் போவோம். வாரத்தில் நான்கு நாட்கள் ஒன்றாக வேலை செய்வோம். ஐந்தாவது நாள் மட்டும் தனியாக எங்களுக்குப் பிடித்ததைச் செய்வோம். வார இறுதியில் கூடும் இனிமைக்கு, ஐந்தாம் நாளின் பிரிவு காரணமாகிறது என்பது மரிஷ்காவின் கருத்து. விட்டால் போதும் என்று ஐந்தாம் நாள் முழுதும் தூங்குவேன். ஆனால் மரிஷ்கா எங்கேயாது கிளம்பி விடுவாள். வைதீஸ்வரன் கோவில் ஜோதிடச் சுவடி, சாலர்ஜங்க் கடைத்தெரு, கராச்சியில் விக்டோரியா சதுக்கம், பேங்காக்கில் வோடவுஸ் கிடங்கு, பெய்ஜிங்கில் ஹங்சௌ அங்காடி என்று எங்கேயாவது வெள்ளிக்கிழமை தோறும் கிளம்பி விடுவாள். வருவதற்கு மாலை நேரம் ஆகும். நான் எழுந்திருக்கச் சரியாக இருக்கும். பிறகு சனி ஞாயிறு இரண்டு நாளும் மிகத் தேவையானாலொழியப் படுக்கையிலிருந்து நாங்கள் எழுந்திருப்பதில்லை. உலகமெல்லாம் சுற்றினாலும், மாதமொரு முறை சேன்ப்ரேன்சிஸ்கோ வந்து யோகஷைச் சந்தித்து தொழில் முன்னேற்றம் பற்றிப் பேசுவோம். எங்கள் கூட்டம் முடிந்ததும், அப்பாவும் பெண்ணும் நாலைந்து மணி நேரம் என்னவோ பேசிக் கொண்டிருப்பார்கள். ‘தேடிக்கொண்டிருக்கிறோம், புரியும் நேரம் வரவில்லை, காலம் வரும்பொழுது தயாராக இருக்க வேண்டும்’ என்று இருவரும் ஏதாவது சொல்வது சிலசமயம் காதில் விழும். நான் எதையும் பொருட்படுத்தாமல் தூங்கி விடுவேன். ஆடையில்லாத மரிஷ்காவை அழுந்த அணைப்பது சுகம். அதை விட்டால், தனிமையில் ஆழ்ந்த உறக்கம் சுகம். உலகப்பயணம், உல்லாசம், அவ்வபோது எளிய போதைப்பொருள், வாரத்தில் இருபத்தெட்டு மணி நேரம் கலவி… வாழ்க்கை இனித்தது. மரிஷ்காவின் கலவி முறைகள் விசித்திரமாகவும் பல சமயம் விபரீதமாகவும் சில சமயம் வன்முறையாகவும் தோன்றும். எதையோ மனதில் நிறுத்திப் புணருவது போல் தோன்றும். மரிஷ்காவை நான் மிக நேசித்ததால் எதையும் பொருட்படுத்தவில்லை.

ஒரு முறை கேன்பெராவில் ஆதிவாசிகள் உபயோகித்த ஊதலை விலை பேசிக் கொண்டிருந்த போது, மரிஷ்காவைப் புதிதாய்ப் பார்த்தக் கடைக்காரர், எங்களை அவசரமாகத் தனியறைக்கு அழைத்துச் சென்று ஒரு பழைய மரப்பெட்டியைத் திறந்து காட்டினார். உள்ளே சின்னஞ்சிறிய முழு எலும்புக் கூடுகளினால் கட்டிய மாலை. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய எலும்புக்கூடுகள் என்றார். ஒவ்வொரு எலும்புக்கூட்டிலும் தலை முதல் கால் வரைத் தெளிவாக அடையாளம் தெரிந்தது, என்றாலும் எலும்புக்கூடுகள் ஒரு சென்டிமீடருக்கு மேல் உயரமில்லை. ஆச்சரியமாக இருந்தது. “என்ன மிருகம்??” என்று கேட்ட என்னைக் கோபமாகப் பார்த்து, “மிருகமில்லை, குட்டிச்சாத்தான் தேவதைகள்” என்றார். விற்க மறுத்துவிட்டதால், கிளம்பினோம். மறு நாள் வழக்கம் போல் நான் தூங்கி விட்டேன். மாலையில் எழுந்த போது, எதிரே மரிஷ்கா. அவள் கழுத்தில் முதல் நாள் பார்த்த எலும்புக்கூட்டு மாலை.

அவளைப் பாராட்டினேன். என்னைக் கீழே தள்ளி என் மேல் ஏறி உட்கார்ந்தாள். சரி, இன்ப விவகாரம் என்று நான் தயாராகையில், குனிந்து என் தலையில் கை வைத்துச் சில நொடிகள் அமைதியாக இருந்தாள். பிறகு எழுந்து, “நாம் உடனே ஊருக்குப் போயாக வேண்டும்” என்றாள். நான் ஏனென்று கேட்குமுன், “நாளைக்கு என் அப்பா இறக்கப் போகிறார். உயிர் பிரிவதற்குள் நாம் அங்கே இருக்க வேண்டும்” என்றாள். முதல் விபரீதம்.

2

அவள் சொன்னது எனக்குப் புரியவில்லை என்றாலும் மரிஷ்காவின் விவேகம் பற்றி எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லாததால், “உன் அப்பா இறக்கப் போகிறாரா? மழை வரப்போகிற மாதிரி சாதாரணமா சொல்றியே?” என்றேன். அவள் முகத்தின் தீவிரத்தைக் கவனித்து விட்டு, “எப்படித் தெரியும்?” என்றேன்.

கழுத்திலிருந்த எலும்புக் கூட்டு மாலையைத் தொட்டுக் காட்டினாள். “எம்டிம்” என்றாள். நான் பேந்த விழித்தேன். “Metaphysical Telepathic Interference Monitor” என்றாள். நான் இன்னும் பெரிய கேள்வியுடன் அவளைப் பார்த்தேன். ‘என் தலையில் ஏன் கை வைத்தாய் மெடபிசிகல் மங்கையே?’

“உனக்கு இப்பப் புரியாது புலவரே. நான் சொல்றதை மட்டும் நம்பு, சரியா?” என்று என் முதுகில் தன் மார்பையழுத்திக் கட்டிப்பிடித்து என் மனதைத் திசை திருப்பினாள். ஒரு சிறுபிள்ளைக்கு விளக்குவதுபோல், “என் அப்பாவின் மனம் என் மனதுடன் பேசிய போது சொன்ன செய்தி. இது நாற்பத்திரண்டு குட்டி தேவதைகளின் எலும்புக்கூட்டு மாலை” என்றாள், தன் மாலையை என் காது மடலில் உரசவிட்டு. குறுகுறுக்கக் காரணம் அவள் மாலையா அல்லது தொடர்ந்து என் காதில் சேதி சொன்ன அவள் உதடுகளா என்று தவித்தேன். “இந்த மாலை, ஒரு மனதுடன் இன்னொரு மனம் ஒரே அலைவரிசையில் பேசுவதற்கு வழி செய்கிறது. அப்படி மன உரையாடல் நடக்கும் பொழுது கவனித்து, மாலையின் தேவதைகள் எல்லா செய்திகளையும் துண்டுத் துண்டாய்ப் பிடித்து வைத்துக் கொள்கின்றன. உன் உயிருக்கு ஒரு கேடலிஸ்ட் சக்தி இருக்கிறது. உன் உயிரின் கேடலிஸ்ட் சக்தியைப் பயன்படுத்தி இந்த எலும்புக்கூட்டு மாலை செய்திகளை ஒன்று சேர்த்து, நமக்குப் புரியும் மொழியில் அறிவிக்கிறது” என்றாள்.

எனக்குக் கொஞ்சம் பயமாக இருந்தது. அவ்வப்போது போதைப் பொருள் உபயோகிப்போம் என்றாலும் நம்பகமான கஞ்சா தான். அதற்கு மேல் தீவிரமாக ஒன்றும் கிடையாது. ஒருவேளை ஏதாவது எக்ஸ்டசி, எல்எஸ்டி என்று எனக்குத் தெரியாமல் உபயோகிக்கிறாளா?

“இல்லைடா.. சொன்னா நம்பு. நீதான் எனக்கு எல்லாவற்றையும் விடப் பெரிய போதை” என்று என் தலைமுடியைக் கோதி மண்டைச் சதையை நகங்களால் மெல்லக் கீறினாள். விழுந்தேன். தலைமுடி நகக்கீறலின் போதை கஞ்சாவில் கூட கிடைக்காது. “சரிடி மோகினி” என்று கிறங்கினேன். மரிஷ்கா சொன்னது விசித்திரமாகத் தோன்றினாலும், நம்பினேன். சொல்லப்போனால் என் தொல்பொருள் தேடல் அனுபவத்தில், நான் பார்க்காத விசித்திரமே இல்லை. மரிஷ்கா மட்டுமில்லை பிறரும், நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு விசித்திரமாகவும் விபரீதமாகவும் நடந்து கொண்டிருக்கிறார்கள். சியன் மாகாணத்தில் ஒருமுறை ஒரு வயதான ஆசாமி, “நான் புத்தன், என்னைப் பார்” என்று மேலங்கியைத் திறந்து காட்டினார். தோலையும் காணோம் எலும்பையும் காணோம். ட்ரேன்ஸ்பேரன்டாக சில பேர் வீட்டில் போடும் காபி போல், ஒரு காவிக்கூட்டின் வழியே அந்தப்பக்கம் இருந்த சுவரெல்லாம் தெரிந்தது. இன்னொரு முறை, திருவிடைமருதூர் கோவிலில் சுவர்சித்திரம் பார்த்துக் கொண்டிருந்த பொழுது எங்களுடன் பேசிக்கொண்டிருந்த ஒரு கிழவர் மரிஷ்காவிடம் ஒரு மஞ்சள்பொடிப் பொட்டலத்தைக் கொடுத்துவிட்டு சர்வ சாதாரணமாகக் கரைந்து சித்திரத்தில் கலந்தார். “மாசி மாதச் செவ்வாய்க்கிழமை காலைகளில் மட்டும் நடக்கிறதாகச் சொல்கிறார்கள், உங்கள் கண்ணுக்குத் தெரிந்ததா?” என்று எங்களை அதிர்ச்சியுடனும் அதிசயத்துடனும் பார்த்தார் கோவில் குருக்கள். மரிஷ்காவின் அண்மையில் நிறைய விசித்திரங்கள் பார்த்திருக்கிறேன், எம்டிம் அப்படி ஒன்றும் புதிதாகப் படவில்லை.

அவசரமாக சேன்ப்ரேன்சிஸ்கோ வந்தோம். வீட்டுக்குள் வந்ததும் யோகஷ் என்னைத் தனியாக அழைத்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு அரை மணி போல் அமைதியாக இருந்தார். பிறகு, “வா, வா. நீ வந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி” என்றார், கல்யாண விருந்தை வரவேற்பது போல. யோகஷின் வீடு, கூடுதலாக இருட்டியிருந்ததைக் கவனித்தேன். ஜன்னல் வாசல் இடுக்கு, பாத்ரூம் ஓட்டை என்று வீட்டின் ஒரு இடம் விடாமல் ப்லேடோ களிம்பினால் அடைத்துக் கொண்டிருந்தாள் மரிஷ்கா. யோகஷ் தன் படுக்கையறையின் நான்கு மூலைகளிலும் மெழுகு விளக்குகளை ஏற்றி வைத்தார். என்னையும் மரிஷ்காவையும் அருகே வரச்சொல்லி இறுக அணைத்தார். பிறகு நான் சற்று எதிர்பாராத விதத்தில் தன் உடைகளைக் களைந்து, “அம்மணமாக வந்தேன், அப்படியே போவேன்” என்று சித்தர் போல் சொன்னார். என்னை மறுபடி அணைத்துவிட்டு, படுக்கையில் விழுந்தார். எனக்குச் சங்கடமாக இருந்தது. படுக்கையருகே சென்று மரிஷ்கா அவரையே கவனித்துக் கொண்டிருந்தாள். அப்பாவின் அம்மணம் அவளை உறுத்தவே இல்லை. அவள் கழுத்தில் எலும்புக்கூட்டு மாலை இருந்தது. என் வலது கையை இழுத்துப் பிணைத்துக் கொண்டாள். “இன்னும் ஒரு நிமிடத்தில் அப்பாவின் உயிர் பிரியும்” என்று என் காதில் கிசுகிசுத்து, என் இடது கையை யோகஷின் கைகளோடு சேர்த்தாள். சொன்னபடியே ஒரு நிமிடத்தில் யோகஷ் இறந்து போனார். அவர் இறந்ததை என்னால் உணர முடிந்தது. மெய்சிலிர்த்த அனுபவம்.

யோகஷ் இறந்ததும் மரிஷ்கா செய்தது மிகவும் வினோதமாகப் பட்டது. பொதுவாக இறந்தவர் வீட்டில் அழுவார்கள், துக்கம் கொண்டாடுவார்கள். ஆனால், மரிஷ்கா என்னை அடுத்திருந்தப் படுக்கையறைக்கு அழைத்துச் சென்று, “இப்போதே நாம் கூட வேண்டும்” என்றாள். நான் தயங்கினேன். “மறுக்காதே, மறுக்காதே” என்று கெஞ்சத் தொடங்கினாள். அவசரப்படுத்தினாள். மறு நாள் பொழுது விடியும் வரை என்னை வெளியே விடவில்லை. சோர்ந்து போய் நான் தூங்கிவிட்டேன்.

எழுந்த போது பெரும் தனிமையை உணர்ந்தேன். இருண்ட வீட்டில் தேடிப்பிடித்து விளக்குகளைப் போட்டேன். யோகஷின் உடலையும் காணோம். அடுத்த இரண்டு நாட்களுக்கு மரிஷ்காவையும் காணோம். திரும்பி வந்ததும், “என்னை மன்னித்து விடு. எங்கள் மதச்சடங்குகளில் உன் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. அதனால் நானே எல்லா ஏற்பாடுகளும் செய்து விட்டு, என் உறவினர்களுக்கு விடை சொல்லி விட்டு வந்தேன். உன்னிடம் சொல்லாமல் போனதால், என் மேல் கோபமா?” என்றாள்.

மரிஷ்கா மேல் எனக்குக் கோபமே வந்ததில்லை. “இல்லை” என்றேன். “ஆனால், ஒன்று கேட்க வேண்டும். இறந்த வீட்டில் கூடுவது உனக்கு விசித்திரமாகப் படவில்லையா? அதுவும் இரவு முழுதும்? போதாக்குறைக்கு இறந்தவர் உன் அப்பா எனும் பொழுது?!”

சிரித்தாள். “இதில் என்ன விசித்திரம்? என் பிரியக் காதலனே, நான் சொல்வதையெல்லாம் இப்போதைக்கு அப்படியே நம்பு. நீ, நான், என் அப்பா மூவருமே சக்தி சாதனங்கள். மகத்தான எதிர்கால விளைவைக் கொண்டு வர நாம் பிறவிக்கணக்கில் தயார்படுத்தப் பட்டிருக்கிறோம். அவ்வளவு தான். இறந்தக் கணத்தில் என் அப்பாவின் ஆவி மற்ற ஆவிகளுடன் கலந்து உன்னுள் ஊடுறுவி, ஒரு கலப்படச் சக்திப் பிறவி அம்சத்தை உன்னுள் விட்டுச் சென்றிருக்கிறது. என் அப்பாவின் ஆவி இந்த உலகத்தை விட்டுப் போகுமுன் நாம் கூடி அதன் ஆசியையும் அந்த அம்சத்தையும் கைப்பற்றியாக வேண்டும். பிறக்கப் போகும் நம் பிள்ளைக்குத் தர வேண்டும். அதனால் தான் கூடுவதற்கு அவசரப்படுத்தினேன். ஏய்..நீ பெரிய ஆள்… அன்றிரவு நான் கருவுற்றேன் தெரியுமோ?” என்று என் கையை எடுத்துத் தன் கீழ்வயிற்றில் வைத்தாள். “நமக்கு உலகை ஆளும் மகன் பிறக்கப் போகிறான். இது என் அப்பாவின் பிறவி ரகசியம். நம் பிறவி ரகசியம். மறந்து விடாதே. அதற்காகத்தான் என் அப்பா நம்மை இங்கே வரச் சொன்னார்”.

எனக்குத் தலை சுற்றியது. “எனக்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை, மரிஷ்கா, நீ சந்தோஷமாக இருந்தால் சரிதான்” என்றேன். உண்மையும் அதுதான். மரிஷ்காவின் மகிழ்ச்சி, என் மகிழ்ச்சி.

அடுத்தப் பதினெட்டு மாதங்களில் எங்களுக்கு ஒரு மகன் பிறந்தான். குழந்தைத் தானாக வெளிவரும் வரையில் பொறுத்திருப்பேன் என்று அடம் பிடித்து வீட்டிலேயே இருந்தாள் மரிஷ்கா. அவர்கள் குடும்ப ரேபை மட்டும் அடிக்கடி ரகசியமாக வந்து பார்ப்பார். என் மகன் பிறந்த அன்றைக்கு அவர் தன் கழுத்தைக் கீறித் தற்கொலை செய்துகொண்டது விசித்திரமாகத் தோன்றினாலும், கிறுக்கன் என்று தணிந்தேன். நிறைய மதவாதிக் கிறுக்கர்களைப் பார்த்திருக்கிறேன் என் வாழ்நாளில்.

மகன் பிறந்ததும் மரிஷ்கா என்னுடன் பயணம் வருவதை நிறுத்தி விட்டாள். மரிஷ்காவைப் பிரிந்திருக்க முடியாமல், நானும் பயணங்களை வெகுவாகக் குறைத்தேன். மகனை எந்தப் பள்ளிக் கூடத்துக்கும் அனுப்ப விரும்பவில்லை மரிஷ்கா. வீட்டிலேயே பாடம் சொல்லிக் கொடுத்தாள். அவன் எங்களுடனேயே இருந்தான். இதுவும் ஒரு வகையில் நன்றாக இருந்தது என்றாலும் மரிஷ்காவின் போக்கு எனக்கு அவ்வப்போது மிதமான எரிச்சலை உண்டாக்கத் தொடங்கியது. வழக்கம் போல் என்னை அன்பிலும் அணைப்பிலும் அடக்கி விடுவாள். “நமக்குப் பிறந்திருப்பது சாதாரண மனிதக்குழந்தை என்று நினைத்து விடாதே. அவன் உயிருக்கு ஆபத்து வராமல் பத்து வருடங்கள் பாதுகாப்பது நம் பொறுப்பு” என்பாள்.

மகனுக்கு பதிமூன்று வயதிருக்கும் போது இரண்டாவது விபரீதம் நடந்தது.

மகன் பாஹ்மிட்ஸ்வாவை இஸ்ரேலில் நடத்த விரும்பி, பெத்லஹெம் போயிருந்தோம். ஜெருசலத்தில் விக்கியழும் சுவரைப் பார்க்கப் போனோம். மரிஷ்கா வரவில்லை. என்ன அழைத்தும் மறுத்து பெத்லஹெத்தில் தங்கி விட்டாள். முதன் முறையாகப் பிள்ளையைப் பிரிந்துத் தனியாக இருந்தாள். நானும் என் மகனும் போயிருந்தோம். ஏதோ நினைவில் இருக்கும் போது, திடீரென்று மகனைக் காணோம். எங்கே தேடியும் கிடைக்கவில்லை. வெளளிக்கிழமையானதால் கூட்டமோ கூட்டம். பெத்லஹெம்-ஜெரூசலத்தின் பத்து கிலோமீடர் தொலைவைச் சுற்றிச் சுற்றித் தேடியும் ஒரு தடயமும் கிடைக்கவில்லை. எனக்கு மனமும் உடம்பும் பதைத்தது. பதிமூன்று வயதுப்பையன் விவரம் தெரிந்தவன் எங்கே போயிருப்பான்? போலீசுக்குப் போகக் கூடத் தோன்றவில்லை. அங்கே இங்கே அலைபாய்ந்து விட்டு, மரிஷ்கா உடைந்து போய்விடுவாளே, எப்படிச் சொல்வது என்று திரும்பி வந்து பதைத்துப் போய் நடந்ததைச் சொன்னேன்.

“நாம் ஜெரூசலம் வந்த காரியம் முடிந்து விட்டது” என்றாள் அமைதியாக.

“என்ன மரிஷ்கா? மகனைத் தொலைத்து விட்டு நிற்கிறோம், என்னவோ சாப்பிட்டு முடித்தது போல பேசுகிறாயே?” முதல் முறையாகக் கத்தினேன்.

என்னைத் தீர்க்கமாகப் பார்த்து, “நம் மகன் இன்னும் பத்து வருடங்களுக்குக் கிடைக்க மாட்டான். அவனுக்கு ஒன்றும் ஆகவில்லை. உலகத்தை ஆளுவதற்கு அவன் தயாராக வேண்டாமா? அதான் நம்மிடமிருந்து பிரிக்கப் பட்டிருக்கிறான்” என்றாள்.

காவல் துறைக்கு புகார் தரவோ, செய்திப் பத்திரிகைகளில் விளம்பரம் கொடுக்கவோ, தனியார் துப்பறிவாளர்களை அணுகவோ மறுத்து விட்டாள். என் மகனைத் தேடும் முயற்சியில் இறங்கக் கூடாது என்று என்னிடமே கண்டிப்பாக இருந்தாள். மறுத்தால் மகனை நிரந்தரமாக இழந்துவிடுவோம் என்று நம்பினாள். கேட்டால், ஆவி சொன்னது, telepathic message, பூத சமாசாரம் என்று புரியாத விவரம் சொன்னாள். ஊருக்குத் திரும்பினோம். மனம் மெள்ள மகனை மறந்து விட்டது. மரிஷ்காவும் நானும் முன்பை விட நெருக்கமாகி விட்டோம்.

ஏழெட்டு வருடங்களாகியிருக்கும், ஒரு நாள் “நான் பிறந்த மண்ணில் நமக்கு ஒரு வீடு வேண்டும்” என்றாள். அடுத்த நாளே இஸ்ரேல் சென்றோம். வடக்கு டெல்-அவிவ் நகரத்தில் கடலோரமாக இந்த கிகர் ஹமிதினா வீட்டை வாங்கினோம். “இங்கேயே இருப்போமே?” என்றாள்.அடுத்த மாதமே டெல்-அவிவுக்குக் குடி வந்து விட்டோம்.

இஸ்ரேல் குடிவந்து சில வாரங்கள் இருக்கும். இரவில் என் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள் மரிஷ்கா. என் கைகளை எடுத்து மார் மேல் வைத்துக் கொண்டாள். “நான் உன்னிடம் சில உண்மைகள் சொல்ல வேண்டும். இத்தனை காலமாக மறைத்திருந்திருந்தேன் என்று நினைக்காதே, சரியான தருணத்துக்காகக் காத்திருந்தேன்” என்றாள். மூன்றாவது விபரீதம்.

3

விளையாட்டாக, “மரிஷ்கா, நீ மறைத்த உண்மைகள் எல்லாம் எனக்கு இப்போதே தெரிந்தாகணும். எங்கே, சட்டையைக் கழற்று பார்க்கலாம்?” என்றேன்.

“போடா, விளையாட நேரமில்லை. நான் ஏன் உன்னைக் கல்யாணம் செய்து கொண்டேன் தெரியுமா?” என்றாள்.

அவள் தோள்களை மெள்ளப் பிடித்து விட்டேன். “உன்னுடைய தலைவிதி என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்? நீ என்னைக் காதலிக்கவும் கைப்பிடிக்கவும் வேறு எந்தக் காரணமும் எனக்குத் தோன்றவில்லை மரிஷ்கா” என்றேன்.

சிரித்தாள். “காலத்தால் அழியாதக் காதல்தான் காரணம்” என்றாள். கைகளால் என் கழுத்தைச் சுற்றித் தன் முகத்தருகே இழுத்துக் கொண்டாள். மரிஷ்காவின் கண்களில் கரும்பச்சை நிறத்தில் இதற்கு முன் பார்த்திராத ஒரு ஒளி! “இந்தப் பிறவியில் தோன்றிய காதல் அல்ல. எத்தனையோ பிறவிகளாய் நாம் காதலர்கள். வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு உறவுகளில் நாம் கலந்தும் பிரிந்தும் இருக்கிறோம். ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் சக்தி மாற்றத்திற்கான வாய்ப்பைப் பெறும் முயற்சியில் இதுவரைத் தோற்று வந்தோம். இந்த முறை வெற்றி பெறுவோம்” என்றாள்.

“இரவு என்ன சாப்பிட்டாய்? கோஷர் தானா, பார்த்தாயா?” என்றேன். பொறுமையிழந்தேன். “மரிஷ்கா. என்னை உனக்குத் தெரியும். இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லை. உன் நம்பிக்கைக்கு நான் தடை சொல்லவில்லை. ஆனால், எதற்கு இதெல்லாம் இப்பொழுது சொல்கிறாய்?”

“எதற்கா? நாம் பிரியும் நேரம் வந்து விட்டது.. அதற்கு முன் உன்னிடம் இன்னும் சில உண்மைகளைச் சொல்ல வேண்டும். குறுக்கே பேசாமல் கேள்” என்றாள்.

திடுக்கிட்டு எழுந்து உட்கார்ந்தேன். “மரிஷ்கா!” என்று அவளை மடியிலிருந்து எழுப்பி உட்காரவைத்தேன். அவள் கண்களிலிருந்து பிசுக்கு போல் ஒரு திரவம் வரத்தொடங்கியது. ரத்தமா? அதிர்ந்தேன். தொடப்போன என் கைகளைத் தட்டி, அவள் மறுபடியும் என் மடியில் சரிந்தாள். “முட்டாள்! என்னை எழுப்பாதே. குறுக்கிடாமல் கேள்” என்றாள். அவள் குரலில் தொனித்தப் புது அதிகாரத்தில் கொஞ்சம் பயந்தேன். ஒரு கண அமைதிக்குப் பிறகு என் மடியில் பழைய மரிஷ்காவாகப் பேசினாள்.

“நாம் உலகமெல்லாம் சுற்றிய போது, வாரத்தில் ஐந்தாம் நாள் நான் தனிமையை நாடக் காரணம் இருந்தது. ஒவ்வொரு முறையும் வியாழன் இரவு உனக்கு மயக்க மருந்து கொடுத்து வந்தேன். அதனால்தான் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீ தூங்கி வழிந்தாய். நான் தனியாகச் சென்று யோகஷ் சொன்னபடி நமக்குத் தேவையான நாற்பத்திரண்டு சக்திகளை உலகமெல்லாம் தேடிப் பிடித்தேன்” என்றாள். தன் அப்பாவைப் படர்க்கையில் பெயர் சொல்லிப் பேசியதை இப்போது தான் கேட்டேன். தொடர்ந்தாள். “இந்தச் சக்திகள் நம் படை வீரர்கள். சக்தி மாற்றத்தின் போது, இவையெல்லாம் நாம் உலகை ஆளத் தேவையான அடிப்படைக் கருவிகள். நீ தளபதி. நீ தான் இந்த வீரர்களைச் சேர்த்து ஒருங்கிணைந்த படையாக்கி நம் மகனுக்கு உதவ வேண்டும். அவன் நம்மை ஒன்று சேர்ப்பான்”. அவள் துடிக்கத் தொடங்கினாள். “செய்வாயா?” என்று கெஞ்சினாள்.

அவள் துடிப்பை நிறுத்த வழி தேடாமல், தோன்றாமல், “செய்வேன் மரிஷ்கா. அந்தச் சக்திகளை எப்படி ஒன்று சேர்ப்பது?” என்றேன்.

“நேரம் வரும்பொழுது அழைப்பு வரும். உதவியும் வரும். அப்பொழுது இதோ இந்த மாலையை அணிந்து கொள். அதுவரை இந்த மாலையைக் காப்பாற்றி வா. மறந்துவிடாதே, நம் மகனின் மீட்பும், உலக சக்தி மாற்றமும் உன் செயலில் தான் இருக்கிறது. உன் ரத்தம். அவனைக் காப்பாற்று. உன்னையே நம்பி இருக்கிறேன். நான் சொன்னதை மறந்து விடாதே. என்னை ஏமாற்றி விடாதே” என்றாள். தன் எலும்புக்கூட்டு மாலையைக் கழற்றிக் கொடுத்தாள்.

“நம் மகன் காணாமல் போய்விட்டானே?”

“எப்படிக் காணாமல் போனானோ, அப்படியே திரும்பி வருவான். தயாராக இரு. உன்னையே நம்பியிருக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என்று சொல்லிவிட்டு, புத்தகத்தை மூடி வைப்பது போல் இறந்து போனாள். என் மடியில் படுத்தபடி என்னைத் தொட்டுக் கொண்டிருந்ததனாலோ அல்லது எனக்கு இருப்பதாகச் சொல்லப்படும் கண் காணாத சக்தியினாலோ என்னவோ, அவள் உயிர் பிரிந்ததை என்னால் மிகத்தெளிவாக – ஓட்டைப் பொட்டலத்திலிருந்து சர்க்கரை கொட்டி வெளியேறி விழுவது போல் – உணர முடிந்தது. அதைவிட விபரீதமாக அவள் உடல், ‘மரிஷ்கா!’ என்று நான் அலறிக்கொண்டிருந்த போதே மறையத் தொடங்கியது. சில நிமிடங்களில் அவள் உடல் என் கண் முன்னால் முழுவதுமாகக் கரைந்து மறைந்தது.

ஒரு வருடம் போல் அதிர்ச்சியில் இருந்தேன். அத்தனை விசித்திரங்களின் பின்னணியிலும் மரிஷ்காவை நான் மிக நேசித்தேன். அவள் பிரிவு என்னை வாட்டியது. மெள்ளப் பழைய நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்தேன். இப்பொழுது இந்தக் கரப்பான் தோன்றி மரிஷ்கா என்கிறது!

ஆவி பறக்க இரண்டு கப் டீயும் சில பிஸ்காப் இனிப்பு வறுவல்களும் ஒரு தட்டில் எடுத்துக்கொண்டு வந்தேன். தட்டை நடுவறை மேசைமேல் வைத்துவிட்டு வசதியாக உட்கார்ந்தேன். என்னைத் தொடர்ந்து வந்த கரப்பான் தட்டருகே அமர்ந்தது. நான் என் டீயை எடுத்தபடி, “பூச்சி..பாத்து டீ குடி… கப்புல குப்புற விழுந்தால் அப்புறம் நான் சூப் சாப்பிட வேண்டியிருக்கும்” என்றேன்.

“ஹாஹா!” என்ற கரப்பான், ஒரே மூச்சில் சூடான டீயைக் உறிஞ்சிக் குடித்ததைப் பார்த்து பிஸ்காபைத் தவற விட்டேன். “டீ அருமை. இதான் முதல் அனுபவம்” என்ற கரப்பான், ஒரு வறுவலைக் கொரித்து மெல்லத் தொடங்கியது.

“நாப்பத்திரண்டு…” என்றேன். “எங்க ஊர் போலீஸ் ஏட்டைக் கூப்பிடுவது போல் ஒரு பெயர். ஏன் என்னைத் தொந்தரவு செய்கிறாய்? மரிஷ்காவை உனக்கு எப்படித் தெரியும்? மரிஷ்கா இறந்து போய் இரண்டு வருடமாகிறதே?”

சிரித்தது. “மரிஷ்கா இறந்து போனாளா? அவ உடலை எரிச்சியா புதைச்சியா?” என்றது. பூச்சிக்கு மரிஷ்காவை நிச்சயம் தெரியும் என்றுப் புரிந்தேன். பதில் சொல்லாமல் இருந்த என்னிடம், “கேள், மரிஷ்காவுக்கோ யோகஷுக்கோ எனக்கோ ஏன் உனக்கோ கூட தற்காலிக அழிவு உண்டே தவிர, நிரந்தர முடிவு கிடையாது. நீ பயந்துவிடக் கூடும் என்றுதான் யோகஷ் உடல் கரைவதைப் பார்க்கவிடாமல் உன்னைச் சாமர்த்தியமாகத் தடுத்து விட்டாள் மரிஷ்கா” என்றது.

“யார் நீ? யார் மரிஷ்கா? யார் யோகஷ்?” என்றேன். தடுமாறினேன்.

“எல்லாம் இப்ப கேளு” என்றது. “நான் சொல்வதைப் பயப்படாமல் கேள். மரிஷ்காவின் கைப்பொம்மை போல நடந்தாயே தவிர ஒரு முறையாவது ஏன் என்ன யார் என்று யோசித்திருக்கிறாயா? நீ மனதில் நினைப்பதை நான் புரிந்து கொள்வது போல் மரிஷ்காவும் புரிந்து கொண்டாள், நினைவிருக்கிறதா? நீ அவளையே கவனித்ததால் இந்த விசித்திரங்களையெல்லாம் கவனிக்கவில்லை. நீ நான் மரிஷ்கா யோகஷ் எல்லாருமே ஒரு விதத்தில் தேவர்கள். தேவதைகள். சாத்தான்கள். மந்திரவாதிகள்… எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்” என்றது.

“இப்ப நீ என் முன்னால் வந்தது ஏன்?”

“மரிஷ்கா இறக்கும் பொழுது சொன்னாளே, எங்கே அந்த மாலை? அதை அணிந்து கொள். உன் மகன் திரும்பும் நேரம் வந்துவிட்டது. அவனைக் காப்பாற்ற வேண்டும்” என்றது. பிறகு அவசரமாக ஏதோ சொன்னது.

“கடைசியா என்ன சொன்னே?”

பூச்சி பெருமூச்சு விட்டது போலிருந்தது. “அதிர்ஷ்டம் இருந்தா உன்னையும் காப்பாத்திக்கலாம், என்னையும் காப்பாத்திக்கலாம்” என்றது. புரியாமல் விழித்த என்னை, “அது ஒரு கதை. வேண்டாத வேலை. பொல்லாத ஆசை. எனக்கேன் பொல்லாப்பு? போய் மாலையை எடுத்து வா” என்றது.

“நீ விவரமெல்லாம் சொன்னால் தான். இல்லையென்றால் இந்த ஆட்டத்திற்கு நான் வரவில்லை” என்றேன்.

“யுகம் யுகமா உன்னைத் துரத்தி, ஆசைகாட்டி, நம்பிக் கடைசியில் இழப்பதும் அழிவதுமே வேலையாகப் போனது எனக்கு. எப்படியோ இருக்க வேண்டிய நீ, இப்படி மரிஷ்காவுக்கு அடிமையா ஆயிட்டியே” என்ற பூச்சியின் குரலில் இரக்கமும் நடுக்கமும் ஒலித்தது. “இதோ பார், அந்த மாலையைப் போட்டுகிட்டா நான் இதெல்லாம் சொல்லமுடியாது. ஆபத்து. அதனால் இப்பொழுதே சொல்கிறேன், நடப்பது நடக்கட்டும்” என்றபடி என் தோளருகே பறந்து வந்து உட்கார்ந்தது. “மரிஷ்காவை நம்பாதே. ஒவ்வொரு பிறவியிலும் உன்னைப் பயன்படுத்தி, ஏமாற்றி, அழித்து.. அடுத்த சக்தி மாற்றம் வரை ஒதுக்கித் தள்ளிவிடுகிறார்கள் மரிஷ்காவும் அவள் எதிரியும்”

“நிறைய டீயும் பிஸ்காபும் இருக்கு” என்று சாய்ந்து உட்கார்ந்தேன்.

“மரிஷ்காவும் அவள் எதிரியும் எத்தனையோ பிறவிகளாக இந்த உலகத்தை இயக்கி வருகிறார்கள். இயக்கங்கள் அத்தனைக்கும் அவர்கள் தான் காரணம். அவர்களின் சக்தியைத் துதிபாடி நாமெல்லாருமே அவர்களின் அடிமைகளாக இயங்கித் துணை புரிகிறோம். எங்களுக்கும் உனக்கும் நிரந்தரமாக விடுதலை கிடைக்க வேண்டுமென்றால் அது உன்னால் தான் முடியும்”

“என்ன செய்யலாமென்கிறாய்?” என்றேன் கிண்டலாக.

“சுலபம். மரிஷ்காவையும் அவள் எதிரியையும் அழிக்க வேண்டும். ஒவ்வொரு சக்தி மாற்றத்தின் போதும் இதைச் சொல்கிறேன், நடக்காமல் போய்விடுகிறதே?” என்றது.

“பூச்சி, உன்னை அழிக்க வேண்டும் என்று தோன்றுகிறது” என்றேன்.

“நான் எப்படியும் அழியத்தான் போகிறேன். அதற்கு முன்னால், நீ யார் என்பதைப் புரிந்து கொள். உன் மகன் யார் என்பதைத் தெரிந்துகொள்” என்றது. “உன் படுக்கையறைக்குள் பூட்டி வைத்திருக்கிறாயே, மரிஷ்காவின் எலும்புகூட்டு மாலை, அதை எடு முதலில். ஒருவேளை இந்த முறை என் கனவு பலிக்கலாம். சீக்கிரம்” என்று அவசரப்படுத்தியது.

மாலையை எடுத்து வந்தேன். “அணியாதே, பொறு, பொறு..” என்றது. வேகமாக மாலையைப் புரட்டி ஒரு எலும்புக்கூட்டைக் காட்டியது. “யார் தெரியுதா?” என்றது.

கவனித்தேன். அசப்பில் பூச்சியைப் போலவே இருந்தது. “ஆமாம், நானே தான். என்னை ஒரு பூதமாக கட்டி வைத்திருக்கிறாள் மரிஷ்கா” என்றபடி மாலையை மறுபடிப் புரட்டி இன்னொரு கூட்டைக் காட்டி, “இது உன் மகன்” என்றது. பார்த்தேன். “அப்படி இல்லையே?” என்றேன். “நீ மீண்டும் உன் மகனைப் பார்க்கும் பொழுது புரியும். இது யார்?” என்று இன்னொரு கூட்டைக் காட்டியது. யோகஷ்! மறுபடியும் மாலையை வேகமாகப் புரட்டி ஒரு கூட்டை என் முன் பணிவோடு வைத்தது. எழுந்து உட்கார்ந்தேன். என்னைப் போலவே இருக்கிறதே என்று திடுக்கிட்டேன்.

“நீயே தான். நீயும் ஒரு குட்டிச்சாத்தான். புரிகிறதா? மரிஷ்காவின் கைப்பொம்மை” என்றது. பிறகு என்னைப் பார்த்து, “இப்படியே இருக்கப்போகிறாயா? அல்லது உனக்கும் எங்களுக்கும் விடுதலை கிடைக்க வழி செய்வாயா?” என்றது.

4

அமைதியாக இருந்தேன். “நான் சொல்வதில் நம்பிக்கையில்லையா? நீ மற்றவர் போலில்லை” என்றது பூச்சி.

“பேசும் கரப்பானைக் கண்ணெதிரே பார்த்தபிறகு நம்பாமல் இருப்பேனா? நம்பிக்கை இருக்கிறது, ஆனால் அவசியமில்லை. நேரமுமில்லை. இதெல்லாம் முன்பிறவிகளில் நடந்திருக்கலாம், எக்கேடோ கெடட்டும். இப்போது நான் எடுத்திருப்பது இருபத்தொன்றாம் நூற்றாண்டுப் பிறவி. பூதம், சக்தி, எம்டிம் எல்லாம் எனக்கு ஒத்துவராது. இந்தப் பிறவிக்கேற்றபடி இருந்து விட்டுப் போகிறேன். நீ தாராளமாக இங்கே இருக்கலாம் – எனக்குப் பேச்சுத் துணையாக. இல்லையென்றால் பூச்சிக் கட்டுப்பாட்டு மையத்தைக் கூப்பிட்டு இந்த வீட்டைச் சுத்தம் செய்யச் சொல்லப்போகிறேன்” என்றபடி எழுந்தேன்.

“நான் சொல்வதைக் கேள். உன் மகனைக் காப்பாற்றுவோம். அதற்குப் பிறகு உனக்கு என்ன தோன்றுகிறதோ அப்படியே செய். உன் மகனைச் சந்திக்க விருப்பமா? அல்லது அதிலும் இந்த நூற்றாண்டு நுட்பம் ஏதாவது இருக்கிறதா?”

என் மகன்! பத்து வருடங்கள் போலாகிறது. உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அப்படி ஒன்றும் பாசமோ அன்போ இன உணர்வோ ஏற்படவில்லை. நெஞ்சிலும் வயிற்றிலும் சுருளும் என்பார்களே, ஒன்றுமே தோன்றவில்லை. மரிஷ்காவின் பிரிவு என்னைப் பாதித்ததே தவிர, மகனின் பிரிவு மறந்தேவிட்டது. “என் வாழ்க்கையில் மகனுக்கு இப்போது இடமில்லை. தொலைந்தவன் தொலைந்தவனாகவே இருக்கட்டும்” என்றேன்.

“நில். விவரம் புரியாமல் பேசுகிறாய். ஒவ்வொரு பிறவியிலும் உன்னோடு இதே தொழிலாகி விட்டது. உன்னை வற்புறுத்தி மனம் மாற்றுவதற்குள் என் சிறகு கழன்றுவிடுகிறது. மாலையை அணிந்து கொள். மகனின் நிலை புரியும். அதற்குப் பிறகு உன் விருப்பம்” என்றது மறுபடி.

எம்டிம் மாலையை அணிந்துகொள்ள முதலில் இருந்த விருப்பம் ஏனோ தணிந்து விட்டது. “ஆமாம், நீ தான் பூதம் என்கிறாயே? உனக்கு இருக்கும் சக்தியைப் பயன்படுத்தி என் மகனைக் காப்பாற்ற வேண்டியது தானே?” என்றேன் கிண்டலாக.

“இவ்வளவு படித்திருக்கிறேன், புது நூற்றாண்டுக்காரன் என்றெல்லாம் பேசுகிறாயே, பூதம் குட்டிச்சாத்தான் பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது போலிருக்கிறதே?” என்று என்னைப் பார்த்தது. “எங்களுக்குப் பெரும் சக்திகள் கிடையாது. மற்ற குட்டிச்சாத்தான்களுடன் சேர்ந்து பெரிதாக ஏதாவது செய்வோமே தவிர, தனிப்பட்ட முறையில் நாங்கள் சின்னச் சின்ன மாயங்கள் செய்வோம், அவ்வளவு தான். உதாரணமாக, உனக்கு பக்லவா தேவையா சொல், காற்றிலிருந்து வரவழைக்கிறேன்” என்றது.

சிரித்தேன். “அவ்வளவுதானா? உலக சக்தி மாற்றம் என்றெல்லாம் கிளப்பிவிட்டாயே? இந்த சக்தியை வைத்துக்கொண்டு குழாயில் தண்ணீர் கூட வரவழைக்க முடியாது போலிருக்கிறதே? என்ன பெரிய சக்தி?”

“நாங்கள் குட்டி தேவதைகள். எங்களை ஆட்டி வைக்கும் இரண்டு சக்திகளும் உண்மையான சக்திகள். நாங்கள் செய்யும் மாயங்களில் பல சமயம் குரூரமும் விபரீதமும் அடங்கியிருக்கும் – எங்களை ஆட்டி வைப்பவர்கள் சொற்படி அவை மொத்தமாகையில் பெரும் விபரீதங்களாக முடிகின்றன. அமெரிக்க-இரேக் போர் எப்படி வந்தது என்று நினைக்கிறாய்? பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகப் புரளி கிளப்பி விட்டது யாரென்று நினைக்கிறாய்?” என்று நிறுத்தி என்னைப் பார்த்தது. “கிளம்பு, மகனைச் சந்தித்த பிறகு சாதிக்க வேண்டியவை நிறைய இருக்கின்றன. இரண்டு சக்திகளையும் அழித்து நீ முடியேற்று எங்களை விடுவிப்பாய் என்று இன்னும் நம்புகிறேன்”

“ரைட். எனக்கு நொபெல் பரிசு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்”

“கிண்டல் போதும். சீக்கிரம். மாலையை அணிந்து கொள்” என்ற பூதத்தின் குரலில் அவசரம் தொனித்தது.

“இதோ பார், பக்லவா பூதமே. எனக்கு இதில் விருப்பமில்லை. இன்னொன்று. உங்களுக்கும் எனக்கும் அழிவே கிடையாது என்று நீதான் சொன்னாய். இப்போது எல்லாரையும் அழித்துச் சாதனை செய்யலாம் வா என்கிறாய். ஆளை விடு”

“மரிஷ்காவுக்கு நீ கொடுத்த வாக்கு என்னாகும் என்று நினைத்துப் பார்த்தாயா?”

“மரிஷ்காவே போனபின், கொடுத்த வாக்கு என்ன ஆனால் எனக்கென்ன?” என்றேன். சொல்லி முடிக்கவில்லை, என் கன்னத்தில் யாரோ அறைந்தது போல் வலித்தது. சின்ன ரத்தக்கீற்று கையை நனைத்தது. அவசரமாக குளியலறைக் கண்ணாடியில் பார்த்தேன். என் கன்னத்தில் ஒரு சிறு கீரல், கண்ணெதிரே வளர்ந்து கொண்டிருந்தது. “ஏய்! நீயா அறைந்தாய்?” என்றேன்.

“நான் தான்” என்ற குரல் வந்த திசையைப் பார்த்தவன், திடுக்கிட்டேன். என் வீட்டின் பல்வேறு அறைகளிலிருந்து சிறு பூச்சிகள் பறந்தும் ஊர்ந்தும் நடுவறைக்குள் வந்து கொண்டிருந்தன. பல்வேறு நாடுகளில் வாங்கிய பூச்சி வடிவ மைக்கூடுகள், பேனாக்கள், சாவிப்பிடி, சமையல் கரண்டி என்று ஒவ்வொன்றும் உயிர் பெற்று வந்ததைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொன்றன் முதுகிலும் எண்கள். எனக்குத் தெரியாமல் பூதங்களையும் குட்டிச்சாத்தான்களையுமா சேகரித்தாள் மரிஷ்கா?! புதுப் பூச்சிகள் மெள்ளக் கரப்பானைச் சூழ்ந்து கொள்ளத் தொடங்கின. கரப்பானைக் கிடுக்கிப் பிடித்தபடி ஒரு நட்டுவாக்களி என்னைப் பார்த்துப் பேசியது. “நான் தான் அறைந்தேன். நீயோ உன் மகனோ அந்த மரிஷ்கா மூதேவியோ யாருமே எங்களுக்குத் தேவையில்லை. போன பிறவியிலேயே சொன்னேன், உன்னைக் கொன்று இந்தக் கதையை இப்போதே முடிப்போம் என்று, இவன் தான் கேட்கவில்லை” என்று கரப்பானை ஒரு உலுக்கு உலுக்கியது. என்னைப் பார்த்து, “இப்போது மறுபடியும் உன்னால் பிறவிச்சிறை. இந்த முறை ஏமாற மாட்டோம்” என்றது. பிறகு, கரப்பானை நெரிப்பது போல் பிடித்தது. மற்ற பூச்சிகளிடம், “ஏய்! இவனையும் அந்தப்பயலையும் சேத்து சாப்பிடுங்க. அந்த மாலையையும் உடைச்சு எறிங்க. நமக்கு விடுதலை” என்றது.

நாலைந்து பூச்சிகள் என்னை நோக்கிப் பறந்து வர, நான் ஒரு துண்டை வீசி அவற்றை அடிக்க முனைந்தேன். “மாலை.. மாலையை அணிந்துகொள்” என்று முனகியது கரப்பான். நட்டுவாக்களி எம்டிம் மாலையை ஒரு காலால் சுழற்றிக் கடாசியது. நான் அதைப் பிடிக்க ஓடும் பொழுது பறந்து வந்த குளவி ஒன்று என் தலைமுடிக்குள் புகுந்து பரவத்தொடங்கியது. பூரான் போல் தரையில் ஊர்ந்து வந்த இரண்டு தலைப் பூச்சி என் மேலேறத் தொடங்கியது. காலை உதறி கையிலிருந்தத் துண்டால் பூரானை மூடிவிட்டு ஓடினேன். இன்னும் சில பூச்சிகள் என்னை நோக்கி வந்தன. தும்பி போலிருந்த ஒரு பூச்சித் திரும்பத் திரும்ப என் கண்களைத் தேடி வந்தது. வேகமாகச் சுவருக்குச் சுவர் தாவிய பல்லி ஒன்று எப்படியோ என் கழுத்துக்குள் விழுந்து, லேசாகக் கடிக்கத் தொடங்கியது. நான் வலியில் அலறினேன். நட்டுவாக்களி என்னெதிரில் கரப்பான் பூச்சியைச் சாப்பிடத் தொடங்கியது. அதன் வாயுள் புகாமல் கரப்பான் தவித்து முரண்டு பண்ணியது. திடீரென்று என் தலை எரிவது போல் உணர்ந்தேன். தலைமுடி சொறிந்து உள்ளே புகுந்தப் பூச்சியைத் தேடலாமென்றால், தலையில் கை வைத்ததும் பெயின்ட் கொட்டியது போல் பிசுக்கான ஈரம்! என்னவென்று பார்க்கக்கூட தைரியம் வராமல், ஒரே தாவலில் எம்டிம் மாலையை எடுத்து அணிந்தேன். மாலையை அணிந்த சில நொடிகளில் என்னைச் சுற்றி ஒரே ஆரவாரம். பிள்ளைகளின் அழுகையும் மிருகங்களின் அலறலும் புல்லாங்குழலிசையும் சம்மட்டி அடியும் கலந்து ஒலிப்பது போல் இடைவிடாத ஓசை. சுதாரிப்பதற்குள் எனக்கு மூச்சு வாங்கியது. எதிரிலிருந்த சாய்வு நாற்காலியில் விழுந்தேன்.

என்னுடைய மெர்சடீஸ் முன்னிருக்கையில் என்னருகில் கரப்பானும், பின்னிருக்கையில் முப்பத்தாறு குட்டிச்சாத்தான்களும் வரிசையாக விரலைச் சப்பியபடி உட்கார்ந்திருக்க, பழைய ரமத்-அவிவை நோக்கிப் போய்க் கொண்டிருந்தோம். கரப்பானைப் பார்த்துப் புன்னகைத்தேன். “சைவச் சாப்பாடு போல பின்னிருக்கையில் எல்லாம் அமைதியாக உட்கார்ந்திருக்கிறதே?” என்றேன். “இப்படியாகும் என்று முன்பே சொல்லியிருக்கலாமே, நாற்பத்திரண்டு?”

“என்னையே நம்பவில்லை நீ. முப்பத்தாறு பூதங்கள் உன்னைத் தின்ன வருமென்றால் நம்பவா போகிறாய்? நல்லவேளை, மாலையை அணிந்தாய். என்னைக் காப்பாற்றினாய். நன்றி மறக்க மாட்டேன்” என்றது கரப்பான்.

“இன்னும் முழு நம்பிக்கை வரவில்லை. எம்டிம் அணிந்ததும் நாராசமாக ஒலி கேட்டதே?” என்றேன்.

“உன்னுடைய மன அலைவரிசைக்கு ஏற்பச் சீர்பட்டது மாலை. எங்கள் சக்திகளெல்லாம் இப்பொழுது உன் கட்டுப்பாட்டில். மாலை உன் கழுத்தில் இருக்கும் வரை உன்னால் அடுத்தவர் மனத்துடன் ஒத்த அலைவரிசையில் உரையாட முடியும். தகவல் தெரிவிக்க முடியும். உன் மகன் உனக்குத் தரப்போகும் தகவலை இதை வைத்தே அறிந்துகொள்ள முடியும். அடுத்தவர் எண்ணங்களை உன்னால் கேட்க முடியும்; இனி உன் எண்ணங்களை அடுத்தவர் கேட்க முடியாது” என்றது.

எனக்கு இன்னும் பிரமிப்பாக இருந்தது. “ஏய், எதற்காக என்னைத் திட்டினாய் இப்போது?” என்றேன்.

“என் எண்ணத்தை உன்னால் படிக்க முடிகிறதா என்று பார்க்கத்தான்” என்றது நாற்பத்திரண்டு.

கடற்கரையோரமாக வந்தோம். எதிரே அகழ்வாராய்ச்சி மையத்தில் அங்கங்கே தோண்டியிருந்தார்கள். எட்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய நாகரீகத்தின் சின்னங்களைத் தோண்டியெடுத்து ஒழுங்கு படுத்திக்கொண்டிருந்தார்கள். “புராதன ரமத் பிரதேசம் வந்துவிட்டது. யார்கென் பூங்காவில் என்ன செய்யப் போகிறோம்?” என்று வண்டியை ஒரு மறைவிடத்தில் நிறுத்திக் கேட்டேன்.

கரப்பான் தொண்டையைக் கனைத்துப் பேசத் தொடங்கியது, “முப்பத்தாறு சாத்தான்களும் நாலு திசையிலும் காவல் இருப்போம். நான் கூட்டத் தலைவன். சூரியன் முழுவதும் மறைந்ததும் தொல்பொருள் ஆராய்ச்சிக் குழிகளைக் கவனிப்போம். ஒரே ஒரு குழியிலிருந்து மட்டும் பச்சை நிற ஒளி வரும். அதைக் கண்ட உடனே உன்னிடம் விவரம் சொல்வோம். அந்தக் குழியில் உன் மகன் இருப்பான். நீ மட்டும் தனியாகப் போய் அங்கிருந்து அவனை எடுத்துக்கொண்டு, எத்தனை வேகமாக வர முடியுமோ இங்கே வந்துவிடு” என்றது. பிறகு முப்பத்தாறு பூதங்களையும் நான்கு பிரிவுகளாக்கி அனுப்பத் தொடங்கியது.

திமிரடங்கிய நட்டுவாக்களியைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது. “ஏய், நட்டு.. உன்னை இங்கிருந்து தூக்கி எறிந்தால் கடலில் விழுவாய் தெரியுமா?” என்றேன்.

“உன் தயவு, தலைவரே” என்றது நட்டுவாக்களி பணிவாக. ‘தலைவரே, தலைவரே’ என்று தவளையொலி போல் மற்ற பூதங்களும் ஆமோதித்தன. பிறகு ஒவ்வொரு பிரிவாக இடம்பெயர்ந்தன.

அவர்கள் சென்றதும் கரப்பானிடம், “என் மகனைத் தூக்கிக் கொண்டு வரவேண்டும் என்றாயே?” என்று கேட்டேன்.

“அனேகமாகத் தூக்கிக் கொண்டு வர வேண்டியிருக்கும். காரணம், இப்போது உன் மகனைப் பலி கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவன் ஆன்மா கரையும் முன்னால் நீ அவனைக் காப்பாற்றப் போவதால் உயிரோடிருந்தாலும், சக்தியில்லாதிருப்பான். நீதான் தூக்க வேண்டியிருக்கும். எங்களால் அங்கே நுழைய முடியாது. நீ வெளியே வந்ததுமே, பூதங்கள் நான்கு பக்கமும் உன்னைச் சூழ்ந்துகொண்டு பாதுகாப்பு கொடுக்கும்” என்றது.

அதிர்ந்தேன். “பலி கொடுக்கிறார்களா? நாம் போகுமுன் ஏதாவது ஆகிவிட்டால்?”

“நம்மால் ஒன்றும் செய்ய இயலாது. எங்கே இருக்கிறான் என்பது கூடத் தெரியாது. இன்றைக்கு மட்டும் சூரியன் மறைந்ததும் தெரியும் சில நிமிட ஒளியை வைத்து அடையாளம் கண்டாக வேண்டும்”

“உள்ளே என்ன இருக்கும்?”

“தெரியாது”

“பயமாக இருக்கிறது”

“பயந்து ஒன்றும் ஆகப்போவதில்லை”

“ஒரு ஆறுதலுக்குக் கூட உன்னுடன் பேச முடியாது போலிருக்கிறதே? சரி, அவனை எடுத்துக்கொண்டு வேகமாக வரச்சொன்னாயே? ஏன்?”

“அவன் குற்றுயிராய் இருக்கும் பொழுதே, இங்கிருந்து உடனே நாம் ஜெரூசலம் போயாக வேண்டும்”

“ஜெரூசலத்தில் எங்கே?”

“ஆன்மாக்களின் கிணறு”

“கப்பத்-அஸ்-சக்ர?” என்றேன். “அங்கே எதற்கு?”

“மரிஷ்காவும் யோகஷும் காத்திருப்பார்கள்”

“அவர்கள் சாகவில்லையா?”

“முதலிலிருந்து ஆரம்பிக்கணுமா? சரிதான், அதற்கு நேரமில்லை”

எனக்கு எரிச்சல் வந்தது. “அவர்கள் ஏன் இந்த வேலையைச் செய்யக்கூடாது?”

“யோகஷால் ஒன்றும் முடியாது. நட்டுவாக்களி போலத்தான். மரிஷ்காவுக்குச் சக்தி போதாது. மகனைச் சேர்த்தால்தான் புராதனச் சக்தி கிடைக்கும்”

“ஏய் கரப்பான். மகனே குற்றுயிராயிருக்கும் பொழுது அவனால் மரிஷ்காவுக்கு எப்படி சக்தி கிடைக்கும்?”

“உன் மகனை மரிஷ்கா தின்றதும் அவளுக்குச் சக்தி கிடைத்து விடும்” என்றது அமைதியாக.

எனக்குத் தூக்கிவாரிப் போட்டது! கரப்பான் சொன்னது என்னைத் தாக்கித் தெளியுமுன்னர், நட்டுவாக்களியிடமிருந்து செய்தி வந்தது. “வடக்கு மூலைக் குழிகளில் நடுக்குழி” என்றது. “ஓடு, ஓடு. நேரமில்லை. உன் கேள்விகளைப் பிறகு கேட்டுக் கொள்ளலாம். போ, உன் மகனைக் காப்பாற்றி எடுத்துவா. மாலையைக் கழற்றாதே” என்று என்னை விரட்டியது கரப்பான்.

நட்டுவாக்களி சொன்ன திக்கில் பார்த்தேன். குழியின் மேலாக ஒரு பச்சை ஒளி வட்டம். மரிஷ்காவின் கண்களில் சாகுமுன் தென்பட்டது போலவே பச்சை ஒளி. என் மகன் சாகப்போகிறான்! திடீரென்று வேகம் வந்து ஓடினேன்.

5

தொலைவிலிருந்து பார்த்த போது ஒளிவட்டத்தின் கீழே தெரிந்த குழி, அருகில் வந்ததும் சமதளமாக இருந்தது. அண்மையில் குழிகள் இருந்தாலும் ஒளிவட்டம் தெரிந்த இடம் மட்டும், கூடுதல் கான்க்ரீட் இட்டு மெழுகியது போல் கடினமாக இருந்தது. புரியாமல் விழித்தேன். ஒருவேளை குதிக்கும் பொழுது பள்ளம் தோன்றுமோ என்று எண்ணித் தரையில் மெள்ள ஒரு காலால் அங்கங்கே தத்தினேன். சிறு வயதில் என் சகோதரிகள் தரையில் சதுரக்கட்டங்கள் வரைந்து ரைட்டா கொய்ட்டா என்று ஆடிய அசட்டுப்பெயர் ஆட்டம் நினைவுக்கு வந்தது. ‘ஒருவேளை தவறாக ஒளியடித்ததோ, பக்கத்துக் குழியில் குதித்துப் பார்க்கலாமா?’ என்று நினைத்த போது, “சீக்கிரம், அதுதான் சரியான பள்ளம். மூளையைப் பயன்படுத்து. நீ குதிக்க வேண்டிய குழி இன்னொரு பரிமாணத்தில், இணை அண்டத்தில் இருக்கிறது” என்ற கரப்பானின் குரல் மனதுள் கேட்டது. ஓ! எம்டிம்! சட்டென்று மாலை நினைவுக்கு வந்தது. தலை நிமிர்ந்த போது என்னைச் சுற்றி நான்கு புறங்களிலும் இருந்த குட்டிச்சாத்தான்களைப் பார்த்தேன். பாழும் குசாக்கள்! கரப்பான் வாய் திறக்காமல் சிறகடித்தது. சீக்கிரம்! குட்டிச்சாத்தான்கள் என்னை வைத்துக் காமெடி செய்கிறார்கள் என்று தோன்றினாலும், பள்ளத்தில் விழுவது போல் அழுந்தக் குதித்தேன்.

அப்படியொன்றும் ஆழமாகத் தோன்றவில்லை. கண்களைத் திருத்திச் சுற்றிலும் பார்த்தேன். ஒன்றும் தெரியவில்லை. பயந்தேன். கண்மூடித்தனமாகக் குதித்துவிட்டேனே, எப்படி வெளியே திரும்புவது என்று கரப்பான் சொல்லவில்லையே?! ஒரு வேளை குட்டிச்சாத்தான்கள் திடீரென்று மண்ணைப் போட்டு நம்மை மூடிவிட்டால்? பயத்துடன் மேலே பார்த்தேன். எரட்ஸ் மியுசீயத்தின் சுழலொளி விழுந்து விழுந்து போனதில் தலைக்கு மேலே வானம், காற்றில் படபடக்கும் கிழிந்த வேட்டியின் ஓட்டை போல் விட்டு விட்டுத் தெரிந்தது. குழியில் தான் குதித்திருக்கிறேன், சந்தேகமில்லை. கான்க்ரீட் தரையில் குதித்தும் மேலே தெரிந்த ஓட்டை ஆச்சரியப்படுத்தியது; திகிலும் வந்தது. முதல் முறையாக பேரலெல் யூனிவர்ஸ் பரிமாணத்துக்குள் போகிறேன். பொன்னாடை போர்த்தி மாலை போட்டு வரவேற்பார்களா என்று நினைத்து ஒரு நொடி கூட இருக்காது, என் மேல் ஒரு அசாதாரண உருவம் விழுந்து இருந்த மாலையையும் பறிக்கப் பார்த்தது. என் கழுத்திலிருந்த எம்டிமை இழுத்த உருவத்தை எட்டி உதைத்துத் தள்ளினேன். கீழே விழுந்த உருவம், புடலங்காய் போல் நெளிந்தது. பாம்பு! வந்த ஆத்திரத்தில் அதன் மேல் குதித்தேன். விலகிய பாம்பு சரேலென்று எழுந்துச் சாதாரணமாக நின்றது. “ஏய்” என்றேன். மேற்கொண்டு என்ன சொல்வதென்று தெரியாமல், சினிமா எம்ஜிஆர் போல், “என்னை உன் தலைவனிடம் கொண்டு செல்” என்றேன்.

“தலைவி” என்ற பாம்பைச் சரியாகக் கவனித்தேன். பாம்பு போல் இருந்தாலும் செங்குத்தாக நின்று வளைந்தது. உடலெல்லாம் மீன் போல் செதிள்கள். பச்சைத் திரவம் போல் ஏதோ பளபளத்து ஒழுகியது. அதற்குள் இன்னும் சில பாம்புகள் அங்கே வந்து சேர்ந்து, “என்ன?” என்றன ஒருங்கே. எல்லாம் பச்சைப் பளபள. “அற்ப மானிடப் பதர். தலைவன் எங்கே என்கிறான்” என்று என் மேல் காறித் துப்பியது, முதலில் விழுந்த பாம்பு. “கா!” என்று செதிள் குலுங்கச் சிரித்தன அத்தனை பாம்புகளும். “முட்டாள், அண்டத்தையே ஆட்டிப்படைப்பது எங்கள் தலைவி தான். எங்கெங்கு காணினும் சக்தியடா” என்று தேவையில்லாமல் கவிதை சொல்லி, “மாலையைக் கொடு” என்று என் மேல் சீறின.

நான் ஒதுங்கி, “கா!” என்றேன். “முடியாது. என் மகனைப் பார்க்க வந்தேன். இங்கிருந்தால் எடுத்துப் போகிறேன். வழி விடுங்கள்”.

“மகன், மகன், மகன்” என்று மற்ற பாம்புகள் அலறத் தொடங்கின. விசித்திரங்களுக்கு அளவே இல்லையே என்று நான் நினைத்த பொழுது, “முதலில் உன் மகனைப் பார்” என்று சிரித்தது பாம்பு. “மாலையைக் கொடு, உன் மகனைக் கொடுக்கிறோம்” என்றது. நான் எதிர்பாராத நேரத்தில் என் மேல் விழுந்த பாம்புகள், நான் சுதாரிக்கு முன்னர் என்னை வேகமாக இழுத்துச் சென்றன. வேறெதுவும் தோன்றாமல் எம்டிமைப் பிடித்தபடி சென்றேன்.

பத்து வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக என் மகனைப் பார்த்தேன். என் மகனே தான். சாயல் கொஞ்சம் தெரிந்தது. காணாமல் போன அன்றைக்கு இருந்த பதிமூன்று வயதுப் பையன் போலவே இருந்தான். வளரவே இல்லை! மற்றபடி விபரீதமாக மாறியிருந்தான்.

செவ்வகக் கல்படுக்கை ஒன்றின் மேல் நிர்வாணமாகக் கிடந்தான். படுக்கை அருகில் தொப்பை போட்ட ஒரு தடிப் பாம்பு நின்று கொண்டிருந்தது. சுற்றிலும் தீச்சட்டிகளும், புழு பூச்சிகளும், இறைச்சி போல் ரத்தம் கசிந்து கிடந்த பொருள்களும் குமட்டின. மிக மெலிந்திருந்தான். சதை வற்றி எலும்புகள் தெரிந்தன. கண்கள் செருகத் தொடங்கியிருந்தன. வாயோரம் பச்சைத் திரவம் கசிந்தது. “உன் மகனைப் பார். உன் எதிரிலேயே அவனைத் தின்னப் போகிறோம். அதற்காகத்தானே இத்தனை நாள் அவனைத் தினம் எங்கள் ரத்தம் ஒரு சொட்டுக் கொடுத்து ஊட்டமாக வளர்த்தோம்? உன் கண்ணெதிரில் அவனைச் சாப்பிடும் பொழுது, உன் சக்தி கரைவதைப் பார்க்க வேண்டும். எத்தனை யுகங்களாகக் காத்திருக்கிறோம் தலைவியும் நாங்களும்!” என்றது தடிப்பாம்பு.

அந்தக் கணத்தில் எனக்கு ஆத்திரம் வந்தது. மகனோ பாம்போ பேயோ பரிமாணமோ எதுவும் தோன்றவில்லை. ஒரு உயிரை, சிறுவனை, இப்படி வாட்டியெடுக்கிறார்களே என்ற ஆத்திரத்தில் “ஏய், தொப்பை! விடு அவனை!” என்று கத்தினேன்.

“விடுவதற்குத் தானே கடத்தி வந்தோம்?” என்று என் ரத்தம் உறையச் சிரித்தது தடிப் பாம்பு. “பத்து வருடமாக எங்கெல்லாம் விட்டிருக்கிறோம் பார்க்கிறாயா?” என்றபடி என் மகனைத் திருப்பியது. மகனின் பின்புறமெங்கும் வலுக்கட்டாய நுழைவுகளின் வடுக்கள். அதிர்ந்தேன். “கா!” என்று சிரித்தது பாம்பு மறுபடியும். “இவனை எங்க தலைவிக்கு பலி கொடுக்க, எங்களைப் போல மாத்த வேணாமா? போன பிறவியில சீக்கிரமே முடிஞ்சிருச்சு. இந்தப் பிறவியில கொஞ்சம் நாளாயிடுச்சு. இந்தா, நல்லாப் பாத்துக்க உன் மகனை” என்றபடி என் கண்ணெதிரிலியே அவனுள் மறுபடி நுழைந்து விலகியது. “கா, கா, கா” என்று சிரித்தது. நான் சுதாரிக்குமுன்னர் இன்னொரு முறை நுழைந்து விலகியது. தொடர்ந்து இன்னொரு முறை. மகன் துடித்தது தெரிந்தது.

எனக்கு ஆவேசம் வந்து கையில் கிடைத்த தீச்சட்டிகளை எடுத்து பாம்புகளின் மேல் எறிந்தேன். படுக்கையிலிருந்து தவறி விழுந்த பாம்பின் மேல் பாய்ந்து மிதித்தேன். சறுக்கி எழுந்தது பாம்பு. பிறகு, “பார்த்தாயா, உன் மகனை” என்றது. “மாலையைக் கொடு. நீ தப்ப முடியாது. உன்னையும் கட்டிப் போட்டு எங்கள் வழிக்குக் கொண்டு வருவோம். உன் மகனையே நழைந்து நுழைந்து அலுத்து விட்டது. உனக்குள் நுழைய வேண்டும், வா” என்று என்னிடம் சீறியது.

நான் பொருட்படுத்தாமல், எம்டிமைத் தொட்டுக்காட்டி நடுவிரலை நீட்டிப் பல்வெட்டினேன். படுத்திருந்த மகனை எழுப்பினேன். செருகிக்கிடந்தக் கண்களைத் திறந்து என்னைப் பார்க்க முனைந்தான். என்னவோ சொல்ல வந்தது புரிந்தது. என்ன சொல்கிறான்? நான் என்ன கேட்டும் அவனால் பதில் பேசக்கூடச் சக்தியில்லாமல் தவித்தான். ஏதேனும் சொல்லத் துணிந்த போது வாய் வழியே புகை போல் வர, மிகவும் வலியால் துடித்தான். “வேண்டாம், பேச வேண்டாம்” என்றேன். எப்படி இவனுடன் தொடர்பு கொள்வது?

என் மேல் பாய்ந்து கொண்டிருந்தப் பாம்புகளைத் தட்டி வீசினேன். ஒரு கையால் அவனை எழுப்பியபடி இன்னொரு கையால் அருகிலிருந்த தீச்சட்டிகளைப் பாம்புகள் மேல் வீசினேன். பலிக்கவில்லை. “முட்டாள்! இது இணையண்டம். இதெல்லாம் ஒன்றும் செய்யாது எங்களை” என்று சீறின. “மாலையைக் கொடு. உன் மகனை எடுத்துப் போ” என்றன ஒரே குரலில்.

தவித்தேன். என்ன செய்ய? என்ன செய்ய? என்னென்னவோ சொன்னாளே? என் உயிருக்குக் கேடலிஸ்ட் சக்தி உண்டென்றாளே? எம்டிம் வைத்து அலைவரிசை ஒத்துப் போகச் சொன்னாளே? மனதளவில் பேச முயல்கிறானா? மனதுக்கு என்ன ப்ரீக்வன்சி? எம்டிமை அசைத்தேன். கரப்பானிடமிருந்தோ மற்ற குசாக்களிடமிருந்தோ செய்தி எதுவும் இல்லையே? சே, இதென்ன எம்டிம் தேவைப்படும் பொழுது வேலை செய்யவில்லையே? மேட் இன் சைனாவா? எதேச்சையாக எம்டிமைத் தொட்டு மூச்சிழுத்த போது மகன் குரல் கேட்டது, “என்னைக் காப்பாற்று”. வித்தை புரிந்ததும் சுலபமானது. மூச்சு விடும்பொழுது, “பயப்படாதே” என்று மனதுள் சொன்னேன். மறுபடி மூச்சிழுத்து அடக்கினேன். அவன் நினைத்தது தெளிவாகக் கேட்டது. “பத்து வருடமாக இங்கே என்னைப் படுக்க வைத்து சித்திரவதை செய்து வருகிறார்கள். இன்னும் சில மணி நேரங்களில் நான் முழுவதுமாக அவர்கள் போல் மாறிவிடுவேன். என்னால் மரிஷ்காவுக்குப் பயன் இருக்காது. என்னைக் காப்பாற்று. என்னால் எழக் கூட முடியாது”. இவனும் மரிஷ்காவைப் படர்க்கையில் பேசுகிறானே?

நாங்கள் பேசிக்கொண்டது தெரிந்தது போல் தடிப்பாம்பு அலறியது. எங்கிருந்தோ நூற்றுக்கணக்கான பாம்புகள் வந்தன. “கட்டிப் போடுங்க அப்பனையும். அவனையும் தயார் செய்வோம்” என்றது. பாம்புகள் நெருங்கவும் மகன், “சீக்கிரம். உன் ரத்தம், என்னைக் காப்பாற்று, சீக்கிரம்” என்றான்.

என்ன செய்ய வேண்டும்? மரிஷ்கா. மரிஷ்கா! ஹெல்ப்! என்ன சொன்னாள்? உன்னையே நம்பியிருக்கிறேன். உன் ரத்தம். நீதான் காப்பாற்ற வேண்டும். என் ரத்தம், சரிதான். ஆளாளுக்கு என் ரத்தம் என்றார்களே தவிர, உருப்படியாக ஒன்றையும் சொல்லாமலே போனதை நினைத்ததும் எரிச்சலாக வந்தது. என் கண்ணெதிரே என் ரத்தம் குற்றுயிராய்க் கிடக்கிறதே? என்ன செய்ய? சட்டென்று புரிந்தது. மரிஷ்காவுக்கு மனதார நன்றி சொன்னேன். சுற்றுமுற்றும் பார்த்தேன். ஒன்றையும் காணோம். முதலில் தயங்கினாலும் வேறு வழி தோன்றாமல், படுக்கையின் விளிம்பில் என் இடது முழங்கையை பலம் கொண்ட மட்டும் ஓங்கி அடித்தேன். இரண்டாவது அடியில் கை உடைந்து ரத்தம் தெறிக்கத் தொடங்கியது. என் ரத்தம் தெறித்த மறு கணமே பாம்புகள் விலகி ஓடின. நான் வெறியுடன் “கா!” என்றேன். மகனை என் இடது தோளில் சார்த்திக் கொண்டு, வலது கையால் என் உடைந்த இடது கையை ரத்தம் சொட்ட வீசியபடியே தாவித் தாவி, குதித்த இடத்துக்கு வந்து நின்றேன். பாம்புகள் ரத்தம் படாதபடிச் சற்றுத் தள்ளி நின்றாலும் துரத்தி வந்தன. தலை உயர்த்திப் பார்த்த பொழுது மேலே குழியின் வாய் தெரிந்தது. கண் இமைக்கும் பொழுதில் மேலே வந்தேன்.

தரையில் குப்புற விழுந்தேன் மகனுடன். ஏழெட்டுக் குசாக்கள் என்னைச் சூழ்ந்து கொண்டன. குளவி, என் கையை நக்கி நக்கிச் சரிசெய்தது. நம்பவே முடியவில்லை. “என் மகனைச் சரி செய்ய முடியாதா?” என்றேன். “முடியாது. மரிஷ்காவால் மட்டுமே முடியும்” என்றது குளவி. என்னை நேராகப் பார்த்தது. நான் தலையாட்டிப் புன்னகைத்தேன். நன்றி சொன்னேன்.

மற்ற பூதங்கள் புடை சூழ நட்டுவாக்களி வந்தது. “நல்ல விருந்துக்கு நன்றி தலைவா” என்றது நட்டு. “உன்னைத் துரத்தி வந்த அத்தனை பாம்புகளையும் நானும் இவர்களும் சாப்பிட்டு விட்டோம். நல்ல பசி” என்று பச்சைப்புகை வெளிவர ஏப்பம் விட்டது. “நன்றி தலைவா, நன்றி தலைவா” என்று மற்ற பூதங்களும் பச்சைப்புகை விட்டன.

கரப்பான் என்னைப் பாராட்டியது. “ஏய், நான் தவித்த போது எனக்கு உதவி செய்திருக்கலாமே?” என்றேன்.

“பரிமாணங்களுக்கிடையே பேசுவதைக் கேட்க உன்னால் முடியாது. அதனால் தான் நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை. பயப்படாதே. இனிமேல் அந்தத் தொந்தரவு இருக்காது. மரிஷ்காவைச் சந்திக்கலாம், கிளம்பு” என்றது.

என்னையும் மகனையும் நான்கு புறமும் குசாக்கள் சூழ்ந்துகொள்ள, அவசரமாக என் வண்டிக்கு விரைந்தோம். மகனை முன்னிருக்கையில் சாய்ந்து உட்கார வைத்தேன். அருகிலேயே கரப்பானும் உட்கார்ந்தது. வண்டியைக் கிளப்பியதும், சொல்லி வைத்தது போல் இடி மழை தொடங்கியது. அகழாய்வுப் பிரதேசமானதால் வண்டியைக் கவனமாகச் செலுத்தினேன். ரமத்-கேன் பக்கமாகத் திரும்பியதும், “இது ஜெரூசலம் வழியல்ல” என்றது கரப்பான்.

“தேவையில்லை. என் மகனை மருத்துவமனையில் சேர்க்கப் போகிறேன். எனக்கு மரிஷ்கா தேவையில்லை. போதும் இந்த விளையாட்டு”

“இப்போது தான் விளையாடுகிறாய். மகனை மருத்துவரால் பிழைக்க வைக்க முடியாது. நடப்பவையெல்லாம் இந்த உலகத்து இயல்புக்கு எதிரென்று தெரிந்தும் ஏன் குதர்க்கம் பேசுகிறாய்? வண்டியைத் திருப்பு” என்றது கரப்பான். “திருப்பு தலைவரே!” என்றன பின்னிருக்கைப் பூதங்கள். “மருத்துவமனை வேண்டாம். மரிஷ்காவிடம் போ!” என்றான் மகன். “சீக்கிரம், சீக்கிரம், நேரத்தை விரயம் செய்யாதே” என்றது கரப்பான். “திருப்பு தலைவரே” என்ற பூதங்களின் பின்பாட்டுத் தொடர்ந்தது.

என் எரிச்சல் உச்சத்தைத் தொட்டது. “ஷடப்! யூ இன்விடியஸ் நேஸ்டி லிடில் மைன்ட் ஃபக்கர்ஸ்!” என்று கத்தினேன். “நீ!” என்றேன், மகனிடம். “இன்னொரு முறை மரிஷ்காவைப் படர்க்கையில் பேசினால் நானே உன்னைக் கொன்று விடுவேன். அம்மாவென்ற மரியாதை இருக்கட்டும்” என்றேன். கரப்பானையும் குசாக்களையும் எரித்து விடுவது போல் பார்த்தேன். “உங்களால் என்ன முடியுமோ செய்து கொள்ளுங்கள். இவனை மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்போகிறேன். இதால் தானே இத்தனைச் சச்சரவும்? சனியன், இதை ஒழிக்கிறேன்” என்று எம்டிமைக் கழற்றித் தெருவில் வீசினேன்.

அதற்குமுன் இல்லாத, அல்லது நான் கவனிக்காத, சாலைத்தடுப்பில் இடித்து வண்டி பல்டியடித்து அடுத்திருந்தப் பெரிய பள்ளத்தில் தலைகீழாக விழுந்தது.

கண் திறந்தபோது எதிரே மரிஷ்கா புன்னகைத்து, “என்ன ஹீரோ, எப்படி இருக்கே?” என்றாள்.

6

மரிஷ்காவின் முகத்தைப் பார்த்ததும் எனக்குள் ஏற்பட்டத் தமிழ்க்கவிதை படித்த மகிழ்ச்சி, தமிழ்ச்சினிமா பார்த்த ஏமாற்றத்தில் முடிந்தது. முகம் மட்டும் தான் இருந்தது. மரிஷ்காவின் உடலைக் காணோம். “என்ன மரிஷ்கா இது? நான் அடிக்கடித் தொட்டுத் தடவி மகிழ்ந்த மென்மையான இரண்டையும் காணோமே? எங்கே உன் கைகள்?” என்றேன்.

“விளையாட்டு போதும்” என்றாள். “நமக்கு நிறைய வேலை இருக்கிறது” என்றபடி நகர்ந்தாள். என் மரிஷ்காவா இவள்?!

மரிஷ்காவின் முகம் மட்டும் அறையைச் சுற்றி வந்தது விபரீதமாகத் தோன்றியது. சுற்றிலும் பார்த்தேன். குகை. அரை இருட்டு. மேலே குமிழ் போல் வாசல். மேலிருந்து வந்த ஒளியில், கவிழ்த்து வைத்த காபி டமள்ர் போல் இருந்தது குகை. மதத்தலைவர்கள் எல்லாம் சொர்க்கத்துக்கு நேர்வழிப் பயணம் சென்றதாகச் சொல்லப்படும் ஆன்மாக்களின் கிணறைப் போலவே இருந்தது. மற்றபடி உள்ளறை மாறுபட்டிருந்தது. தரையில் ஒரு உருவம் செதுக்கப்பட்டிருந்தது. முகம் எனக்கு விளங்குவது போல் பட்டது, சரியாகத் தெரியவில்லை. உடலில் அங்கங்கே குழிகள். நான்கு நான்காக வரிசைப்படுத்தி தோளிலிருந்து கால் வரை குழிகள். அவசரக் கணக்கில் நாற்பது தேறியது. கண்ணிரண்டும் குழிகள். சேர்த்து நாற்பத்திரண்டு. குழிக்கணக்கின் மகத்துவம் புரிவது போல் தோன்றியது.

எங்கே குசாக்கள்? துழாவிய பொழுது, செதுக்கப்பட்டிருந்த உருவத்தைச் சுற்றி இருந்த மூன்று வட்டங்கள் புலப்பட்டன. ஒவ்வொரு வட்டத்திலும் இறைச்சித் துண்டுகள் போல் நிறைய இரைந்து கிடந்தன. அவை உயிருடன் இருப்பது போல் நெளிந்தது அருவருப்பாக இருந்தது. மூன்றாவது வட்டத்திற்கு வெளியே, உருவத்தின் காலருகே, பேந்தப் பேந்த விழித்துக் கொண்டிருந்தன குசாக்கள். குளவி, கரப்பான், தும்பி, பூரான், நட்டு எல்லாமே தெரிந்தது. உருவத்தின் தலையருகே யோகஷைப் பார்த்து அதிர்ந்தேன். மெலிந்து காணப்பட்டாலும் முகம் உடல் எல்லாம் இருந்தது. ஆனால் அரையடி உயரம் கூட இல்லை! ஏறக்குறைய குட்டிச்சாத்தான் போலவே இருந்தார். கரப்பான் சுழற்றிக் காட்டிய எம்டிம் மாலை நினைவுக்கு வந்து. “யோகஷ்! நீங்களா?” என்றேன். எழுந்து என்னருகே வந்தார். காற்றில் பறந்து உயர்ந்து, என் கைகளைப் பிடித்துக் கொண்டு, “நீ இங்கே வந்ததில் பெரு மகிழ்ச்சி” என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் போகும் பொழுது கவனித்தேன். பின் மண்டையிலிருந்து கீழ்வரை சதையைக் காணோம். இணையண்டத்தில் பார்த்தப் பாம்புச் செதிள்கள். சரிதான்! எங்கிருக்கிறேன்?

“சரியான இடத்தில் தான்” என்றாள் மரிஷ்கா. “சக்திக்கான போராட்டம் இன்றிரவு தொடங்குகிறது. சக்தியைக் கைப்பற்ற நீயும் உன் மகனும் உதவி செய்யப் போகிறீர்கள். அதற்குப் பிறகு நமக்கு மகிழ்ச்சியும் இனபமும் தான்” என்றாள். என் மகனா? எங்கே? “எங்கே நம் மகன்?” என்றேன்.

கேள்வியை எதிர்பார்த்தது போல் மரிஷ்கா என்னை வெட்டிப் பார்த்தாள். யோகஷ் இரண்டு கைகளையும் வீச, காற்றடித்துத் தூசி விலகியது போல் உருவத்தின் தலைப்பகுதியில் படுத்திருந்த மகனின் உருவம் தெரிந்தது. இன்னும் சோனியாகத் தெரிந்தான். “மரிஷ்கா, அவன் நம் மகன். அவனுக்கு உடனே மருத்துவ உதவி தேவை” என்றேன்.

“நீ, நான், மகன் எல்லாரும் அசாதாரணப் பிறவிகள். அவனுக்குத் தேவை மருத்துவம் அல்ல. தியாக வாய்ப்பு. நான் மகத்தான சக்தியைப் பெறச் சிலத் தியாகங்களைச் செய்யப் போகிறான் மகன்” என்றாள் மரிஷ்கா. “அண்டத்தைக் கட்டும் சக்தியில் உனக்கு விருப்பம் இல்லையா? நாம் உழைத்தது இதற்காகத் தானே?”

“எனக்குச் சாதாரணமே போதும் மரிஷ்கா. இந்தச் சக்திகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாய்? காதலை விடவா பெரிய சக்தி? நம் ஒவ்வொரு மூச்சிலும் மகிழ்ச்சி நிம்மதி உற்சாகத்தைக் கலக்கும் காதலை விடப் பெரிய சக்தி எதுவுமே இல்லை. நம் காதல் சக்தியினால் தானே உலகமே இயங்கியது? வா, என்னுடன். பழைய காதலுக்கே போகலாம். மகனுடன் வாழலாம் வா, மரிஷ்கா” என்றேன். “எங்கே, என் கண்களைப் பார்த்துச் சொல்? உனக்குக் காதலில் விருப்பம் இல்லையென்று?”

மரிஷ்காவின் முகம் ஒரு கணம் தயங்கியதைக் கவனித்தேன். அதற்குள் நட்டுவாக்களி அலறியது. “தொடங்கிவிட்டான் புராணத்தை. ஒவ்வொரு முறையும் இதே கதை. காதல், கவிதை என்று எதையாவது சொல்லி குட்டையைக் குழப்பி விடுவதே இவனுக்குத் தொழிலாகி விட்டது. அப்போதே சொன்னேன் மரிஷ்கா, இவனைச் சாப்பிட்டு விடலாமென்று. கரப்பான் தான் குறுக்கே வந்து விட்டான். சீக்கிரம் இவர்களைத் தின்று முடி. சக்திப் போராட்டம் தொடங்கப் போகிறது. நாங்களெல்லாம் உன் அடிமைகள். தலைவி தலைவி” என்றது. மற்ற குசாக்கள் வழக்கம் போல் தொடர்ந்து “தலைவி, தலைவி” என்றன.

நட்டுவாக்களியின் துரோகம் அரசியல்வாதிகளை நினைவுபடுத்தியது. கொஞ்சம் சிந்தித்த போது ஒவ்வொரு குட்டிச்சாத்தானும் ஒருவகை உலக நடத்தையை நினைவுபடுத்தியது. இவர்கள் உலகத்தைக் கட்டுப்படுத்துவதாகச் சொன்னார்களே?

“இப்போது புரிகிறதா சக்தியின் மகத்துவம்? பூமியில் சாதாரணச் சக்தியோடு வாழக் குட்டிச்சாத்தான் போதுமே? நாமெதற்கு?” என்றாள் மரிஷ்கா. கரப்பான் முன்பு சொன்னது நினைவுக்கு வந்தது. சிந்தனையை உடனே அடக்கிக் கொண்டேன். மரிஷ்கா என்னை ஒரு கணம் வெறித்து விட்டு, யோகஷிடம், “தயாரா?” என்றாள். யோகஷ் தலையசைத்து என் மகனருகே சென்றார். மகனின் கால்களைக் குச்சி போல் உடைத்தெடுத்து உருவத்தைச் சுற்றியிருந்த வெளிவட்டத்தில் வைத்தார். இறைச்சித் துண்டுகள், உடைந்த என் மகனின் கால் துண்டுகளை நோக்கி அசைந்தன. பிறகு யோகஷ் மகனின் கைகளை உடைத்து இரண்டாவது வட்டத்தில் வைத்தார். தொடர்ந்து, உடலை நான்காக உடைத்து முதல் வட்டத்தில் வைத்தார். கடைசியாக, தலையை உருவத்தின் வயிற்றில் வைத்தார். நான் அலறித் துடித்தேன். “மரிஷ்கா, மரிஷ்கா, நில். வேண்டாம். இவன் நம் மகன். நம் காதலின் அடையாளம்”. மரிஷ்கா நகரும் இறைச்சித் துண்டுகளையே கவனித்துக் கொண்டிருந்தாள்.

“பெரிய தவறு செய்கிறாய். அவனைச் சாப்பிட்டால், முந்தைய முயற்சிகளைப் போலவே இந்த சக்திப் போராட்டத்தில் தோற்றுப் போவாய். அவனை நீ சாப்பிட்டால் என்னால் உனக்கு உதவ முடியாது போகும்” என்றேன்.

மரிஷ்கா என்னைப் பார்த்தாள். “என்ன சொல்கிறாய்?”.

“முதலில் மகனின் பாகங்களை ஒன்று சேர், சொல்கிறேன்” என்றேன். “இணையண்டத்தில் பாம்பு அவசரப்பட்டுச் சொன்னதைக் கேட்டேன். மகனை என்னெதிரில் தின்றால் என் சக்தி அழிந்து விடும் என்றது. என் சக்தி அழிந்து விட்டால் உன் போராட்டத்தில் உனக்கு என்னால் உதவ முடியாது. என்னை நீ நம்பியிருப்பது எனக்குத் தெரியும். என் உயிரின் கேடலிஸ்ட் சக்தி என்னவென்றும் எனக்குப் புரிந்து விட்டது” என்றேன். என் கைககளைக் குணப்படுத்திய குளவி என்னை நேராகப் பார்த்துத் தன் மனதுள் நினைத்தது நினைவுக்கு வந்தாலும், அடக்கினேன். “எத்தனையோ பிறவிகளாக என் அரசாங்கம் நடைபெற்று வந்தது. என் உயிரில் என் அரசாங்கத்தின் அத்தனை பிரஜைகளும் கலந்திருக்கிறார்கள் – அதனால் தான் உயிர் விடும் பொழுது என்னைத் தொட்டு உயிர் விடுகிறார்கள். முந்தைய போர்களில் என் எதிரிலேயே நீ என் மகனைத் தின்றதால் என் சக்தி அழிந்தது. என் சக்தியின் அம்சம் என் மகன். அவனைத் தின்பது என்னை அழிப்பது போல் என்பது உனக்கு புரியவில்லையா? காமன் சென்ஸ். யோகஷும் நட்டுவும் கூட்டு; உனக்குத் தவறான யோசனை கொடுத்திருக்கிறார்கள்” என்றேன். என் பேச்சு எனக்கே வியப்பூட்டியது. இது வேறு உலகம். முதலில் இங்கிருந்து தப்ப வேண்டும்.

“நேரம் வீணாகிறது. சக்தி வந்துவிடும்” என்ற யோகஷ், மகனின் கால்துண்டை அசைகின்ற இறைச்சியில் சுற்றி, நடுவிலிருந்த உருவத்தின் மார்பில் ஓங்கிக் குத்தினார். பஞ்சில் ஊசி ஏறுவது போல் கால்துண்டு உடலில் குத்தி நின்றது. இறைச்சி ஊர்ந்து கால்துண்டிலிருந்து உடலுக்குள் புகுந்தது. வேகமாக நகர்ந்து இரண்டாவது வட்டத்திலிருந்த மகனின் கைத்துண்டை எடுத்து இறைச்சியில் சுற்றி உடலுக்குள் ஓங்கிக் குத்த, மறுபடி பஞ்சில் ஊசி. உடல் இப்போது தெளிவடையத் தொடங்கியது. இது என்ன சித்திரவதை? நான் யோகஷைத் தடுத்தேன். “நிறுத்துங்கள்”. அவர் இயந்திரத்தனமாய் மூன்றாவது வட்டத்திலிருந்து ஒரு உடல் துண்டை எடுத்து இறைச்சியைச் சுற்றி உடலில் குத்தினார். ஒவ்வொரு குத்திலும் உருவம் உயிர்பெறுவது போல் தோன்றியது.

“அவனை நம்பாதே. நேரத்தை வீணாக்காதே” என்ற நட்டுவாக்களி என்னை நோக்கி வேகமாக வந்தது. யோகஷைத் தடுக்கும் அவசரத்தில் இருந்த என் கால்களைக் கவ்வியது. எட்டி உதைத்தேன். நட்டுவாக்களி உயரே பறந்து கரப்பான் முன் விழுந்தது. சற்றும் எதிர்பாராத ஒன்றைச் செய்தேன். ஒரு வேகத்தில் யோகஷை எடுத்து விழுங்கி விட்டேன். என் செயலைப் பார்த்ததும், கரப்பான் உடனே நட்டுவாக்களியை எடுத்து விழுங்கியது. “கா!” என்றேன் வெறியுடன் பாம்புகளைப் போல். சிறிது தணிந்து, “மரிஷ்கா, நான் சொல்வதைக் கேள், இங்கிருந்து போய்விடுவோம். உன் மேல் எனக்கு வெறுப்பில்லை. வா, நடந்ததை மறந்திருப்போம்” என்றேன்.

“இனி முடியாது. போராட்டம் தொடங்கிவிட்டது” என்றாள். மரிஷ்கா என்னை வியந்து பார்த்தாள்.

“என்னப் போராட்டம்? யாருடன்? என்னுடனா?” என்று சீறினேன். மரிஷ்கா தரையிலிருந்த உருவத்தின் முகத்தைக் காட்டினாள். முகம் இப்போது தெளிவாகியிருந்தது. கண்களுக்கானக் குழிகளிலிருந்து பச்சை ஒளி புகை, போல வரத்தொடங்கியது.

தரையிலிருந்த உருவம், என் அம்மா. என்னைப் பெற்று வளர்த்த அசல் அம்மா.

நான் மரிஷ்காவை அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தேன். குகையின் மேலிருந்து ஒரு மின்னல் வெட்டியது. இறங்கி வந்தவர் என் அம்மா. பார்ப்பதற்கு சிந்தாளம்மன் போலிருந்தார். இணையண்டத்தில் பார்த்தது போலவே பல பாம்புகள் அம்மாவைத் தொடர்ந்து வந்தன. குகையின் வாசல் சொர்க்கத்துக்குப் போகிறதென்று நினைத்தேன், பம்மலுக்கா போகிறது? “அம்மா, நீங்களா?!” என்றேன்.

என்னைக் கவனிக்காமல், தரையிலிருந்த உருவத்தில் குத்தியிருந்த உடல் துண்டுகளை எடுத்தெறிந்தார். “கா!” என்று சிலிர்த்தார். அதற்குள் அணிகள் உருவாயின. மரிஷ்காவின் பின்னால் குசாக்களும் அம்மாவைச் சுற்றிப் பாம்புகளும் தயாராக நின்றன. “கா!” என்றார் அம்மா மறுபடி.

“அம்மா, நிறுத்துங்கள்” என்றேன். “என்னைத் தெரியவில்லையா அம்மா? இது என்ன விபரீதம்? இது என்ன போர்? நான் உங்கள் மகன். இவள் உங்கள் மருமகள். இவன் உங்கள் பேரன். உங்கள் ரத்தம்”.

என்னப் பார்த்து விகாரமாகக் கண்களை உருட்டினார் அம்மா. “மகன், மகள் எல்லாமே நான் தான். புரியாத முட்டாளாக இருக்காதே. எங்கே உயிர்?” என்று தேடினார். தரையிலிருந்த உருவத்தின் வயிற்றிலிருந்த் என் மகனின் தலையை எடுத்தார். வலது கையில் வைத்துக்கொண்டு இடது கையால் அடித்தார். தேங்காய் உடைப்பது போல் என் மகனின் தலை உடைந்தது. மண்டையோட்டை எடுத்து, “கபாலம்” என்றார். அருகிலிருந்த பாம்பிடம் கொடுத்து, “மையை எடுத்துக் கொடு, சீக்கிரம்” என்றார்.

நான் பாய்ந்து தட்டி விட்டேன். கபாலம் மரிஷ்காவின் அருகில் விழுந்தது. பிடிக்கப் போன பாம்பை மரிஷ்காவுக்குக் காவலாகக் குறுக்கே புகுந்த கரப்பானும் இரண்டு தலைப்பூரானும் ஆளுக்குப் பாதியாக விழுங்கின. நான் கபாலத்தை எடுக்க விரைந்தேன். அம்மாவின் சேனையும் மரிஷ்காவின் குசாக்களும் அடித்துக் கொண்டன. மரிஷ்காவும் என் அம்மாவும் ஆளுக்காள் சீறினார்கள். மரிஷ்காவின் கண்களிலிருந்து தீப்பொறி பறந்தது.

அம்மா சீறினார். “கா!”. அவர் நாக்கு இருந்த இடத்தில் இரண்டு பாம்புகள் இருந்தன. “க்ருஷ்ணா, சப்தம் கேட்குதே” என்று எனக்கு அமைதியாகத் தாலாட்டுப் பாடிய குரல், இப்போது “கா!” என்கிறதே? என்னை உச்சி மோந்த உதடுகளுக்குள் இன்றைக்குச் செதிள் வைத்தப் பாம்பு புரள்கிறதே? சாதாரணப் பிறவிகளாக அன்புடன் பழகிய அம்மாவும் மனைவியும் இப்போது பேய்களாக அடித்துக் கொள்கிறார்களே? நான் நினைத்துக் கொண்டிருக்கும் பொழுதே அம்மாவின் வாய்க்குள்ளிருந்து வந்த பாம்புகள் மரிஷ்காவின் தலையை உருட்டித் தள்ளின. மரிஷ்கா திணறினாள்.

துடித்தேன். மரிஷ்காவுக்கு என் உதவி தேவை. என்ன செய்வது? மறுபடி கை கால் உடைத்து ரத்தம் சிந்த வேண்டுமா? “வேண்டாம் அம்மா. போராட்டத்தை நிறுத்துங்கள். நிரந்தரமாக நிறுத்துங்கள். உங்களுக்கு என்ன வேண்டும்?” என்றேன்.

“இந்தப் போராட்டம் எத்தனையோ யுகங்களாக நடக்கிறது. இதை நிறுத்த ஒரே வழி தான் இருக்கிறது. உனக்கே தெரியும்” என்றார் அம்மா.

அவர் சொன்னது எனக்குப் புரிந்தது.

7

மரிஷ்காவும் அம்மாவும் அடித்துக் கொள்வதைப் பார்த்த பொழுது நான் இதுவரை நடுங்காத அளவுக்கு நடுங்கினேன். கரப்பானும் இருதலைப்பூரானும் மரிஷ்காவுக்குப் பாதுகாப்பாக அவளைச் சுற்றின. யோகஷை அவசரமாக விழுங்கியதற்காக நொந்தேன். மரிஷ்காவின் மற்ற பாகங்களைக் கொண்டு வரும் முயற்சியிலும் அம்மாவை அழிக்கும் முயற்சியிலும் எங்கள் மகனைத் துண்டு போட்டு தரையிலிருந்த உருவத்தில் குத்திக்கொண்டிருந்தது புரிந்தது. இன்னொரு விசித்திரமும் புரிந்தது. யோகஷை விழுங்கிய கணத்திலிருந்து நான் நினைப்பதை மரிஷ்காவால் அறிய முடியவில்லை. ‘மகன், மகள் எல்லாமே நான் தான்’ என்ற அம்மா சொன்னதை நினைத்த போது இந்த விபரீதம் எல்லையில்லாதது போல் பட்டது. ‘எப்படியோ இருந்திருக்க வேண்டியவன்’ என்று கரப்பான் முதன் முதலில் சொன்னது நினைவுக்கு வந்தது. எல்லாமே அம்மாவா? அல்லது எல்லாமே நானா? இந்தப் போரை நிறுத்தும் வழி புரிந்தது. அம்மா அழிய வேண்டும். அல்லது நான் அழிய வேண்டும். மரிஷ்காவை நினைத்த போது வலித்தது.

கபாலத்தை எடுத்துக் கொண்டு தரையில் செதுக்கப்பட்டிருந்த அம்மாவின் உருவத்துக்கு விரைந்தேன். “அவனைப் பிடித்து என்னிடம் கொண்டு வாருங்கள்” என்ற அம்மாவின் ஆணை கேட்டு, பாம்புகள் என்னைத் துரத்தின. கரப்பான், “சீக்கிரம், வட்டத்துக்குள் போ” என்று கத்தியது. கபாலத்தைப் பிடித்தபடி நான் வெளிவட்டத்தில் கால் வைத்தவுடன் என் தலை விரியத் தொடங்கியது. பூமியதிர்ந்து வெடிப்பது போல் என் தலையில் விரிசல்கள் பரவின. என் கண்களை யாரோ தோண்டியெடுப்பது போல் உணர்ந்தேன். சில நொடிகளில் என் கண்கள் இருந்த இடத்தில் வெறும் குழிகள் மட்டுமே இருந்தன. குளவி பறந்து என் கண் குழிக்குள் உட்கார்ந்தது. நான் கபாலத்தை உருவத்தின் வயிற்றில் வைத்தேன். மரிஷ்கா “வேண்டாம், வேண்டாம், செய்யாதே” என்று அலறினாள். “இந்தப் போரை நிறுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. மன்னித்து விடு மரிஷ்கா, என் சக்தியை மீண்டும் பெறப்போகிறேன்” என்றேன். கபாலம் சிதறிப் பொடியாகத் தொடங்கியது. மேலிருந்த மை உருகி உருவத்தின் வயிற்றில் பரவியது. மை பரவிய இடம் ஒரு இருட்டுக் குழியாகத் தொடங்கியது. ஒடிந்து கொண்டிருந்த சில கபாலத் துண்டுகளை மையுடன் வழித்தெடுத்து உருட்டி அம்மாவை நோக்கி எறிந்தேன். அம்மா அதை விழுங்கியதும் ஒரு கணம் எல்லாமே நின்றது.

அம்மாவைப் பார்த்தேன். அம்மாவால் அசைய முடியவில்லை. அந்த அமைதியை நான் வியந்து கொண்டிருந்த போது யோகஷ் என் வாயிலிருந்து வெளி வந்தார். “சீக்கிரம், மரிஷ்காவை எடுத்துக் கொண்டு தப்பியுங்கள்” என்றார் மரியாதையுடன். மரிஷ்காவைக் காணவில்லை. இணையண்டத்தில் உடைந்த என் கைகளை நக்கிச் சீர் செய்த போது என்னை நேராகப் பார்த்துக் குளவி மனதுள் சொன்னது நினைவுக்கு வந்தது. உருவத்தின் காலடியிலிருந்த எம்டிமின் எஞ்சியிருந்த பூத உருவச் சிலைகளைப் பார்த்தேன். மரிஷ்கா போலிருந்த உருவம் சக்தியில்லாமல் அசைந்து கொண்டிருந்தது. மரிஷ்கா குட்டிச் சாத்தானாகிக் கொண்டிருக்கிறாள்! மற்ற குசாக்கள் என்னை நோக்கி வந்தன. “தலைவா” என்றன. “சீக்கிரம், உன் அம்மாவின் மைக்கட்டு விலகுமுன் எங்களுக்கு விடுதலை கொடு” என்றது கரப்பான். ஒவ்வொரு பூதத்தையும் உருவத்திலிருந்த குழிகளில் இறக்கி கபாலப்பொடியினால் மூடத் தொடங்கினேன். “என்னையும்” என்றது கரப்பான். குளவியைக் கையிலெடுத்து நன்றி சொன்னேன். குழியிலிறக்கி மூடினேன்.

அம்மாவைக் கட்டியிருந்த கபால மை விலகத் தொடங்கியது தெரிந்தது. “கா!” என்று அலறினார். யோகஷ் அங்கேயும் இங்கேயும் பறந்து கபாலப்பொடியை அம்மா மேல் தூவிக்கொண்டிருந்தார். “சீக்கிரம், தப்பித்தோடுங்கள்” என்றார். அம்மா கை நீட்டி யோகஷைப் பூச்சி பிடிப்பது போல் பிடித்தார். தன் நெற்றியலடித்து யோகஷை உடைத்து என் மேல் எறிந்தார். என்னை நோக்கி ஆவேசமாக வந்தார். அம்மாவின் மேல் பாய்ந்தேன். அவர் கைகளைப் பிடித்துச் சுழற்றி தரை மேலிருந்த உருவத்தை நோக்கி எறிந்தேன். அம்மா விலகிப் போய் இன்னும் உக்கிரமாக என் மேல் பாய்ந்தார். நான் எதிர்த்து அவரைக் கீழே தள்ளி அவர் கழுத்தை நெறிக்கத் தொடங்கினேன். என் மேல் நெருப்பைத் துப்பி, என் வயிற்றில் எட்டி உதைத்தார். நான் உருண்டு விழுந்த போது, கரப்பான் என்னை வட்டத்துக்குள் அவசரமாகத் தள்ளியது. உடைந்த யோகஷ் துண்டுகளை எடுத்து என் கண் குழிகளில் வைத்தது. “வட்டத்தை விட்டு வெளியே வராதே” என்றது. மற்ற குசாக்களை மூடிய குழிகள் மறையத் தொடங்கின. அம்மா ஆத்திரத்துடன் அலறினார். “உன்னை ஒழித்தேன் இத்துடன்” என்று என் மேல் பாய்ந்தார்.

அதற்குள் கரப்பான் என் கண்களில் வைத்த யோகஷின் துண்டுகள் என்னுள் கரையத் தொடங்கின. அமைதியானது போல் உணர்ந்தேன். “நிறுத்துங்கள். எனக்கு இந்தச் சக்தி தேவையில்லை. நீங்களே வைத்துக் கொள்ளுங்கள். என் ஆட்களை விடுதலை செய்து விட்டேன். எனக்கு மரிஷ்கா வேண்டும். எங்கள் வாழ்க்கை வேண்டும். நான் வருகிறேன்” என்று கரப்பானையும் மரிஷ்காவையும் எடுத்துக் கொண்டு மை கரைந்த வயிற்றின் இருட்டுக் குழிக்குள் குதித்தேன்.

இஸ்ரேலின் ஹைபா-கார்மல் பூங்காவில் ஒதுங்கியிருந்த விடுதிக்கு வந்தவர்கள், அழகானக் கடற்கரையை அனுபவிக்காமல் அறைக்குள்ளேயே இருந்தார்கள். “நேத்து வந்ததுலந்து கொஞ்சிட்டிருக்கமே, கொஞ்சம் வெளியே போவோமே?” என்றாள் அவள்.

“சரி, நீ எழுந்து உடை மாத்திக்க” என்றான் அவன்.

“ம்ஹூம்..நீ மாத்திக்க, பிறகு நான்” என்று கொஞ்சினாள்.

“நீ முதல்” என்று அவளை நெருங்கி முரண்டான் அவன்.

“சரி, இன்னும் ஒரே ஒரு முறை. அதுக்குப் பிறகு வெளியே போவோம்” என்றபடி அவனை ஒட்டினாள். அவன் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பற்களால் கடித்த போது அவன் மார்பில் பட்டது. “இன்னும் நெருங்கி வா” என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.

“முந்தா நாள் மாலைலந்து அறைக்குள்ளயே கொஞ்சிக்கிட்டிருக்கோமே, கொஞ்ச நேரம் வெளியே தான் போவோமே?” என்றான் அவன்.

“சரி, நீ எழுந்து உடை மாத்திக்க” என்றாள் அவள்.

“நீ மாத்திக்க, பிறகு நான்” என்றான் அவன்.

“நீ தான் முதல்” என்றாள்.

“சரி.. இதான் இன்னைக்குக் கடைசி முறை, பிறகு ஒண்ணாவே உடை மாத்திக்குவோம், சரியா?” என்றபடி அவளைத் தன்னோடு இழுத்து, அவள் கண்களை மூடி முத்தமிட்டான். “மரிஷ்கா!” என்றான்.

“மரிஷ்கானு கூப்பிடாதேனு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? என் பெயரைச் சொல்லாம, யார் இந்த மரிஷ்கா? அதுவும் இத்தனை நெருக்கத்துல இருக்குறப்ப இன்னொரு பொண்ணு பெயரை எப்படி நீ சொல்லலாம்?” என்று சிணுங்கினாள்.

“தெரியலியே.. இந்தப் பெயர் ஏன் தோணுதுனு தெரியலியே?” என்றான்.

“ஆமா, இது வேறே குறுக்கே குறுக்கே வருது..” என்றபடி அவன் கழுத்தில் அசைந்த தங்கச் சங்கிலியின் கரப்பான் பென்டென்டை ஒதுக்கினாள். “இது என்ன பூச்சிப் பதக்கம்? கழட்டவே மாட்டுறப்பா நீ.. விசித்திரமான ஆளு..” என்றாள்.

“ஒரு நினைவாகத்தான்” என்றான். சங்கிலியின் பதக்கம் மின்னியது.

– 2010/12/04

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *