தொழில்நுட்பக் கோளாறு காரணமாக எனது அப்பாவின் பழைய ஈஸி சேர் இரண்டாக உடைந்தபோது, நான் தரையில் மல்லாக்க விழுந்துகிடந்தேன். என் முதுகெலும்பின் நடுவில் நாய் கடிப்பது போன்ற வலி. நிமிஷா பதறி ஓடி வந்தாள். “ஐயோ மாமா! ஈஸி சேரைத் திருப்பிப் போட்டுக்கிட்டு ஏன் தலைகீழா நிக்கிறீங்க?” என்று ஏழு வயதுச் சிறுமி அப்பாவியாகக் கேட்டதும்தான், நான் எத்தனை அலங்கோலமாக, விபரீதமாக விழுந்திருக்கிறேன் என்பது புரிந்தது.
பிரசவத்துக்குப் பிறகு வாக்கிங் போகிற ஒட்டகச் சிவிங்கிபோல எழுந்து நின்றவனிடம், நிமிஷா அந்த அதிர்ச்சிகரமான சங்கதியைச் சொன்னாள், “மாமா, ஜெயந்தி அக்கா வாந்தி எடுக்கறா!”
ஈஸி சேரில் இருந்து நான் விழுந்தது உண்மை. ஆனால், புருஷனைப் பார்த்து பெண்டாட்டி வாந்தி எடுக்கிற அளவுக்குப் பயங்கரமாக விழவில்லை. நான் ஆத்திரத்தோடு ஜெயந்தியைப் பார்க்கப்போனேன். கத்தி காட்டிய திருடனுக்கு முன்னால் நிற்கிற முழுச் சம்பளக்காரனைப்போல வியர்த்து விகாரமாக இருந்தாள். என்னைப் பார்த்ததுமே துவண்டு தரையில் படுத்துக்கொண்டாள்.
பிங்க் நிறத்தில் லிப்ஸ்டிக் போட்டுக்கொண்டு, என் முதுகெலும்புக்கு வைத்தியம் பார்த்த அதே பெண் டாக்டர்தான், என் மனைவியைப் பரிசோதித்துவிட்டு நான் தந்தை ஆகப்போகிறேன் என்பதையும் உறுதி செய்தாள். எனக்குக் குழந்தைகள் என்றால் கோடி சந்தோஷம்.
கிரிக்கெட் பந்தைவிடவும் பெரிதாக இருந்த லட்டை ஒரே வாயில் போட்டுக்கொண்ட லட்சுமணன்தான் முதலில் என் சந்தோஷ லாரியைப் பஞ்சர் ஆக்கினான். “ம்! அப்பா ஆகப்போற! ஆமா, எத்தனை ஏக்கர் நிலம் வெச்சிருக்கே? எந்தெந்த பேங்க்ல பணம் வெச்சிருக்கே? எஜுகேஷன் மினிஸ்டரைத் தெரியுமா?” என்று சம்பந்தம் இல்லாமல் அவன் கேட்டதும், நான் பதறிப்போனேன். குழந்தை பிறக்கப்போகிற சந்தோஷத்தைக் கொண்டாடுவதற்காக, குட்டை டவுசர் போட்டவனிடம் எல்லாம் லட்டு கொடுத்தது தப்பு.
இனி, உன் வாட்ச் சரியாக ஓடாது, மீன் தொட்டி உடையும், சுவரில் உன் படம் பேய்போல வரையப்பட்டு இருக்கும், பக்கத்து வீட்டுக்காரனின் ஜன்னல் கண்ணாடி உடைத்ததற்காக நீ போலீஸ் ஸ்டேஷன் போவாய், பள்ளிக்கூடத்து டீச்சர்கள் உன்னிடம் மரியாதைக் குறைவாகப் பேசுவார்கள், எத்தனை சம்பாதித்தாலும் ஏழையாக இருப்பதுபோல உணர்வாய் என்றெல்லாம் சொல்லி, என் எதிர்காலம் குறித்து மிரட்ட ஆரம்பித்தார்கள். வெங்காயத்தை நறுக்கியவனும், குழந்தையைப் பெற்றவனும் கண்ணீர் சிந்தியே ஆக வேண்டும் என்பதுதான் அவர்கள் இறுதியாகச் சொன்ன தத்துவம்.
ஓட்டத் தெரியாதவன், ‘சைக்கிளில் பெட்ரோல் இல்லை!’ என்று சொன்ன கதையாகத்தான் இருக்கிறது இவர்கள் கதை. குழந்தை வளர்க்கத் தெரியாத அசடுகளாக இருந்துகொண்டு, குழந்தையே பயங்கரம் என்றால், அதை இந்த ரேடியோ மெக்கானிக் ஒப்புக்கொள்ள மாட்டான். கரப்பான்பூச்சி முட்டைவைத்த காலி டப்பாவையே ரேடியோவாக்கி சில்க் ஸ்மிதாபோலப் பாடவைத்த என் போன்றவன் குழந்தை வளர்த்தால் அது தப்பாகப் போய்விடுமா?
குட்டி ஸ்வெட்டர், பொம்மைகள், பற்பசை, குழந்தை சைக்கிள் என்று பிறக்கப்போகிற பிள்ளைக்காக நிறைய வாங்கிக் குவித்தேன். குழந்தையை எப்படிக் குளிப்பாட்டுவது, எப்படி உடுத்துவது, எப்படிப் பாடம் நடத்துவது, என்ன நீதிக் கதை சொல்லி எப்படி அறிவோடு வளர்ப்பது என்பதை எல்லாம் கற்றுக்கொள்வதில் ஆர்வமாக இருந்தேன். உலகத்தில் யாருமே வளர்க்காதபடி சிறப்பாகக் குழந்தையை வளர்க்க வேண்டும் என்பதே என் லட்சியம். ஆர்வமும் ஆர்ப்பாட்டமுமாக நான் குழந்தை வருகைக்காகக் காத்திருந்தேன். ஆனால், குளிப்பதற்காக ஆர்வமாக இருப்பவனிடம் குளத்தில் முதலை இருக் கிறது என்று யாராவது சொல்லி விட்டுப்போனால், குளிக்கப் போகிறவன் மனசு என்ன கதியாகும்?
வாத்து, கோழி வளர்ப்பது எப்படி என்கிற புத்தகங்களைப்போலவே குழந்தை வளர்ப்பது எப்படி என்கிற புத்தகமும் சந்தையில் கிடைக்கிறது. வீராச்சாமி வீட்டில் ஒரே ஒரு குழந்தையும், நூற்றுக்கணக்கான குழந்தை வளர்ப்புப் புத்தகங்களும் இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், வீராச்சாமியால் தன் குழந்தையை ஒழுக்கமாக வளர்க்க முடியவில்லை.
நிமிஷாவை ஏழு வயதுக் குழந்தை என்றால் வீராச்சாமி ஒப்புக்கொள்ள மாட்டான். செய்வது எல்லாம் ரவுடித்தனம். பேசுவதெல்லாம் பொய். அவளைச் சுற்றி நடப்பது எல்லாம் கலவரமும் பயங்கரமும். வீராச்சாமி ஓர் அப்பாவி. அமைதியும் ஒழுக்கமுமாக வாழ நினைப்பவன். ஆனால், அவன் குணத்துக்கு நேர் எதிராக நிற்பவள் நிமிஷா. வயதுக்கு மிஞ்சிய அறிவும், ஓயாமல் பேசுகிற வாயும், எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அதை மறைப்பதற்கான தந்திரமும் தெரிந்த நிமிஷாவைக் கட்டி மேய்ப்பதற்கான தகுதி வீராச்சாமிக்கு இல்லவே இல்லை.
நிமிஷாவைத் திருத்துவதற்கு எத்தனையோ வித்தை செய்து பார்த்தான் வீராச்சாமி. மண்டிபோடவைப்பது, காதைத் திருகுவது, தலையில் கொட்டுவது, கண்ணீர்விட்டு அழுவது, கோயிலில் மண் சோறு தின்பது என்று என்ன தந்திரம் செய்தும் நிமிஷா திருந்தவில்லை. தனக்குப் பிறந்த பிள்ளை என்பது, ஆர்வக்கோளாறில் செய்த குற்றத்துக்கான அதிகபட்ச தண்டனை என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தான் வீராச்சாமி. வீராச்சாமியைப் பார்த்து எனக்குச் சிரிப்புதான் வந்தது.
பருத்திக் கொட்டையைத் தின்னத் தெரிந்தவனுக்குத்தான் பசு மாட்டையும் நன்றாக வளர்க்கத் தெரியும் என்பதுதான் என் சித்தாந்தம். பிள்ளைகளோடு பிள்ளையாக வளர்கிற எனக்குக் குழந்தைகளின் மன உலகம் தெரியும். நிமிஷாவை ரிப்பேர் செய்வதற்கு என்னால் ஆகும் என்று நான் நம்பினேன். விளையாட்டும், பொம்மைக் கதையும், சின்னப் பொய்யும், பாராட்டும், பரிசுப் பொருட்களும் இருந்தால் எப்படிப்பட்ட அடாவடியான குழந்தையையும் அற்புதமாக மாற்றிவிடலாம் என்று உறுதியாக இருந்த எனக்கு, நிமிஷா பரிசோதனை எலி ஆனாள்.
அதன்பிறகு நிமிஷாவோடு நான் விளையாடிய விளையாட்டுக்கள் எல்லாமே நீதி, நேர்மை, தருமம், புண்ணியம், உத்தமபுத்திரி, உலகத்தின் ஒளிவிளக்கு, அரம் செய்ய இரும்பு, அறுப்பது ரம்பம் என்கிறரீதியில் உலகத்துக்கே வால்நட்சத்திரமாக இருந்து உபதேசம் செய்கிற நீதி விளையாட்டுக்களாகவே இருந்தன. நான் சொல்கிற கதைகளில், வருகிற எல்லோருமே பரிசுத்தமானவர்களாகவும், பாவிகளைச் சபிப்பவர்களாகவும், பொய் சொன்னவர்கள் வாயில் புண் வரவைப்பவர்களாகவுமே இருந்தார்கள். கெட்டவர்களுக்கு எல்லாம் கோரைப் பல் இருந்தது. நல்லவர்கள் தலையில் ஒளி வட்டம் சுற்றியது.
திருடினால் மூக்கின் மீது கொப்புளம் வரும், பொய் சொன்னால் வாயில் இருக்கிற பல் உதிர்ந்துபோகும், பெற்றவர்கள் பேச்சைக் கேட்காவிட்டால் கரன்ட் கம்பம் தலைமீது விழும், குறும்பு செய்தால் உச்சந்தலையில் இடி விழுந்து தலைமுடி கொட்டிப்போகும் என்று ஆதாரமே இல்லாத என் கதைகளை ஆர்வமாகக் கேட்டாள் நிமிஷா!
குழந்தைகள் என்பவர்கள் எந்தப் பக்கம் திருப்பினாலும் அந்தப் பக்கம் திரும்புகிற ஸ்குரூ போன்றவர்கள் என்ற என் நம்பிக்கை வீண்போகவில்லை. நிமிஷா நுரை பொங்கத் துவைக்கப்பட்ட பட்டுச் சட்டைபோல மாறிவிடுவாள் என்ற நம்பிக்கை வந்தது.
பிரசவத்துக்காக மனைவியை மாமியார் ஊருக்குக் கொண்டுபோய் விட்டுவிட்டு, மூன்று நாட்களுக்குப் பிறகு திரும்பிய எனக்கு மூளைக்கோளாறு உண்டாவதற்கான எல்லா சாத்தியங்களும் காத்திருந்தன. எப்போதும் துறுதுறுவென்று இருக்கிற நிமிஷா, மூன்று நாட்களாகச் சாப்பிடாமல் அடம் பிடிக்கிறாளாம். ஐயையோ! நிமிஷா ஏன் சாப்பிடவில்லை என்று தேவையே இல்லாமல் பதறிக்கொண்டு ஓடினேன்.
வாசலில் சோகமே உருவாக இருந்தான் வீராச்சாமி. “என்ன ஆச்சி வீரா? எதுனா திட்டினீங்களா… அடிச்சீங்களா… நிமிஷா ஏன் சாப்பிடலே?” என்று கேட்டபோது, அவன் முகத்தில் விரோதம் இருந்தது. நான் கேட்ட கேள்வியின் குற்றம் எனக்குப் புரியவில்லை. அடங்காத பிள்ளைகளின் வாயில் சிகரெட் சூடு போட்ட அப்பன்களை எனக்குத் தெரியும். அதனால் கேட்டேன். அவன் முறைக்கிறான். நான் நிமிஷாவைப் பார்த்தேன். பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.
“ஏன் நிமிஷா சாப்பிடலே?”
“மாமா, நீங்க சொன்ன மாதிரியே என் வாயில புண் வந்துடுச்சி. பல்லு எல்லாம் விழுந்துபோயிடுச்சி. டாக்டர்கிட்ட காட்டினா அவரு லைட் அடிச்சிப் பாத்துட்டு, வாயில புண்ணே இல்லைன்னு பொய் சொல்றாரு. கண்ணாடி போட்ட டாக்டருக்குக் கண்ணே தெரியல!”
நான் அதிர்ச்சியோடு நிமிஷாவின் வாயைத் திறக்கச் சொல்லிப் பார்த்தேன். பால் பற்கள் பத்திரமாக இருந்தன. வாயில் புண் இல்லை. நான் நிமிஷாவைப் பார்த்தேன். அவள் பொய் சொல்கிறாள். அல்லது மிரட்சிக் கனவு காண்கிறாள். வாயில் புண் இல்லை என்றால், அவள் என்னையும் குருட்டு மெக்கானிக் என்று சொல்வாள். எனக்குத் தெரியாத குழந்தை விளையாட்டா?
“ஏய் நிமிஷா… உண்மையைச் சொல்லு? உன் வாயில ஏன் புண்ணு வந்துச்சி! பொய் சொன்னியா… பொம்மை திருடினியா… அப்பாவுக்குத் தெரியாம தப்பு ஏதும் பண்ணியா? நான்தான் சொன்னேனே! பொய் சொன்னா புண்ணு வரும்னு. பாத்தியா வந்துடுச்சி.”
எனக்குள் இருந்த தரும தேவன் விவரங்கெட்டத்தனமாக நேரங்கெட்ட நேரத்தில் தருமத்தை உபதேசிக்க ஆரம்பித்தான். வாசற்படியில் நின்றிருந்த வீராச்சாமி வகைதொகை இல்லாமல் கத்த ஆரம்பித்தான், “ஏய், அறிவில்லாதவனே! முட்டைக்கோஸை குப்பைத்தொட்டியில போட்டா, வாயில புண்ணு வருமாடா? மண்ணுல விளையாடலேன்னு பொய் சொன்னா, மண்டையில இடி விழுமாடா? பொம்மைத் துப்பாக்கியைத் தொலைச்சுட்டு வந்தா, மூணுகண்ணன் மூக்கைக் கடிப்பானாடா? பச்சப்புள்ளகிட்ட விவரம் இல்லாமப் பேசி ஏன்டா சாவடிக்கிறே?”
நான் அதிர்ச்சியோடு வீராச்சாமியைப் பார்த்தேன். வாயில் இருக்கிற புண்ணுக்கும் முட்டைக்கோசுக்கும் என்ன சம்பந்தம்? யார் துப்பாக்கியைத் தொலைத்தது? எவரை மூணுகண்ணன் கடித்தான்? குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லை என்றால், பெற்றவர்களுக்கு மனக்கோளாறு வந்துவிடுமா? வீராச்சாமி பேசுவதில் ஓரிரு வாக்கியங்களாவது புரிந்தது. அவன் மனைவி பேச ஆரம்பித்ததும் நான் இன்னும் குழம்பினேன்.
“ஐயோ செல்லம்… காக்கா தூக்கிட்டுப் போன துப்பாக்கி லஞ்ச் பேக்லதான் இருக்கு. அப்புறம் எப்படிப் பல்லு விழும்? மண்ணுல விளையாடறதுதான் மாரியம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். பல் விழாத பிள்ளைங்க பொய் சொன்னா, சாமி பால் சோறு ஊட்டும். பேட்டராயன் சாமி வந்தா, நீ வீட்டுல இல்ல, ஸ்கூலுக்குப் போயிட்டேன்னு சொல்லிடறேன்! சாமி கண்ணைக் குத்த வந்தா, நான் கால்ல விழுந்து, குத்தாதேன்னு கும்பிட்டுக்கிறேன். உனக்குப் புண்ணு சரியாயிடும். தைரியமா இரு கண்ணு!”
இங்கே என்ன நடக்கிறது..? இந்த வீட்டில் துப்பாக்கியால்தான் பல் விழவைப்பார்களா? லஞ்ச் பேக்கில் துப்பாக்கி இருந்தால் பல் விழாதா? உருட்டிவிடப்பட்ட தாமிர அண்டாவுக்குள் உட்கார்ந்திருப்பது போன்ற கிறுகிறுப்பு வந்துவிட்டது எனக்கு.
குறைவான கோபத்தோடு இருந்த நிமிஷாவின் அம்மாதான் நடந்த கதையைச் சொன்னாள்: அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமையாம். மூட்டைப்பூச்சி நாற்றமடிக்கிற முட்டைக்கோஸைக் குப்பையில் கொட்டிவிட்டு, சாப்பிட்ட
தாக ஒரு பொய் சொன்னாளாம் நிமிஷா. தீபாவளி துப்பாக்கியைப் பென்சில் டப்பாவுக்கு இரவலாகத் தந்துவிட்டு, அது தொலைந்துபோனதாகச் சாதித்தாளாம். மண்ணில் விளையாடிவிட்டு இல்லை என்றாளாம். நிமிஷா வழக்கமாகச் சொல்கிற பொய்களும், செல்லக் குற்றங்களும்தான் இதெல்லாம். ஆனால், அன்றைக்கு மழை பெய்துவிட்டதாம். இடி இடித்ததாம். கரன்ட் போய்விட்டதாம். இடிச் சத்தம் கேட்டு இருளில் ஓடி வந்த நிமிஷா தடுக்கி தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டாளாம். மின்னல் வெளிச்சம். இடிச் சத்தம். தண்ணீரில் விழுந்த அதிர்ச்சி. அவளுக்கு வாயில்தான் சிறிது காயம். பல் விழவில்லை. ஆனால், பொய் சொன்னதால் வாயில் இருக்கிற பல் எல்லாம் விழுந்து புண்ணாகிவிட்டது என்று கதறுகிறாளாம். காய்ச்சல் வந்துவிட்டதாம். சாமி வந்து கண்ணைக் குத்தும் என்று தூங்காமல் இருக்கிறாளாம்.
இந்த இடத்தில்தான் வீராச்சாமி என்னை படுபயங்கரமாக முறைத்துப் பார்த்தான். இந்த இடத்தில்தான் நான் சொன்ன நீதிக் கதையின் உக்கிரமே இருந்தது. பொய் சொன்ன நிமிஷாவைப் பேட்டராயன் சாமிதான் வந்து கீழே தள்ளியது என்று குழந்தை சாதிக்கிறது என்றால், என் நீதிக் கதையின் வலிமைபற்றி நானே சொல்லக் கூடாது. ஆனால், நீதிக் கதைகளைப் பாராட்டுகிற ஆர்வத்தில் வீராச்சாமி இல்லை. அவன் கத்தினான், “டேய்! பச்சைப் பிள்ளை பொய் சொன்னா வீடு பத்திக்கிட்டு எரியுமாடா? தப்பு செய்யாத புள்ளை உலகத்தில் இருக்கா? இந்தப் புள்ளைகிட்ட போயி அது இதுன்னு சொல்லி காய்ச்சல்ல படுக்கவெச்சிட்டியேடா!”
துவண்டுகிடந்த நிமிஷாவின் வறண்ட உதடு என்னை வேதனைப்படுத்தியது. சிறுபிள்ளைக்குச் சொன்ன பெரிய நீதிக் கதையின் அபத்தம் எனக்குப் புரிந்தது. வீராச்சாமி சொல்வதுதான் உண்மை. குழந்தைகள் சொல்கிற பொய்யில், குழந்தைகளின் செல்லத் திருட்டில், குழந்தைகள் செய்கிற குற்றங்களில் அழகுதான் இருக்கும். ஆபத்துஎன்பது இருக்காது. பெரியவர்களுக்குச் சொல்வதுபோலவே பிள்ளைகளுக்கும் குற்றங்களுக்கான நீதிக் கதைகளைச் சொன்னது என் தவறுதான். நான் நிமிஷாவின் பக்கத்தில் உட்கார்ந்து என் குற்றத்திற்கான பரிகாரத்தைத் தேடினேன்.
நான் சொன்ன எல்லாக் கதைகளும் உதவாக்கரை என்றும், கதை பொய் என்றும் நிமிஷாவிடம் நான் சொன்னேன். பொய்யான கதை சொன்ன என் வாயில் புண்ணே வரவில்லை பார், என்று நான் வாய் திறந்து காட்டி அவளுக்கு நிரூபித்தேன். அதன் பிறகுதான் கொஞ்சமாக ரசம் சோறும், வேகவைத்த முட்டையும் சாப்பிட்டாள் நிமிஷா.
பேராசையும், துரோகமும், வஞ்சகமும் இருக்கிற இந்த உலகத்தில் பிள்ளைகளை உத்தமர்களாக வளர்த்தால் என்ன ஆகும்? சமயோசிதமும், தந்திரமும், சின்ன கபடமும்கொண்ட பிள்ளைகளாய் இருந்தால் அதில் என்ன குற்றம்? குழந்தைகளுக்கான என் ரிப்பேர் தொழில்நுட்பத்தை நான் மாற்றிக்கொண்டேன். அதன்பிறகு என் கதைகளில் வருகிறவர்கள் எல்லோரும் வசீகரமான பொய் பேசுகிறவர்களாகவும், உலகத்தின் நல்லதற்காகத் திருடுகிறவர்களாகவும், கெட்டவர்களை அழிக்க வீட்டு ஜன்னல்களை உடைப்பவர்களாகவும், புத்தி சொல்வதற்காக உடைகளைக் கிழிப்பவர்களுமாக இருந்தார்கள். ஆபத்து இல்லாத அதே சமயத்தில் அடாவடியான தேவதைகள் என் கதையில் வந்தார்கள். இப்போது நிமிஷாவுக்கு மட்டுமல்ல… ஏராளமான பிள்ளைகளுக்கு நான் கதை சொல்லிக்கொண்டு இருந்தேன். அற்பனின் ஆனந்தம் அரை நாள்கூட நீடிக்காது. மரத்தில் எறிந்த கல் என் மண்டையிலேயே வந்து விழப்போகிறது என்று அப்போது எனக்குத் தெரியவில்லை.
வாக்கிங் செல்கிற பழக்கம் எனக்குச் சின்ன வயதில் இருந்தே கிடையாது. என்ன கெட்ட காலமோ, அன்றைக்கு நான் உடல் இளைக்க வேண்டும் என்ற உருப்படாத ஆசையினால் வாக்கிங் சென்றேன். எதிரில் அடையாளம் தெரியாத ஒருத்தன் வந்தான். வந்த வேகத்திலேயே என்னுடைய சட்டைக் காலரைக் கொத்தாகப் பிடித்துக்கொண்டான். அடுத்தவன் என் சட்டையைப் பிடிப்பதற்கு வசதியாக நான் எதற்கு என் சொந்தச் செலவில் சட்டைக்கு காலர் வைக்க வேண்டும்? ”ஏய், யார் நீ? சட்டையை விடு!” என்றேன்.
‘தருமராஜ் யாருன்னு தெரியுமாடா? அது நான்தான்டா! பிள்ளையார் கோயில் பக்கத்தில் இருக்கிறவன். ஆமா, என் பொண்ணுங்க சினேகா, ஜோதிகாகிட்ட பொய் பேசினா, ஆகாயத்தில் இருந்து ஐஸ்க்ரீம் கொட்டும்னு கதை விட்டவன் நீதானே!” அவன் நிதானமாகக் கேட்டான். எனக்கு விபரீதத்தின் ஆரம்பம் புரிந்தது.
”100 ரூபாயை ரெண்டு மணி நேரத்துல எட்டு வயசுப் பொண்ணு செலவு பண்ணுது. அதுவும், பக்கத்து வீட்டுக்காரன் பணம். காசு எடுத்ததும் இல்லாம பொய் மேல பொய் பேசுதுங்க. பணத்தை நாங்க எடுக்கல, பணம் எங்களோடது, பணம் அப்பாவோடது, பணம் சிக்கிச்சி, பணம் காக்கா தூக்கிட்டு வந்து போட்டுச்சின்னு விதவிதமாப் பொய் பேசுதுங்க. எல்லாம் உன்னாலதான்டா!”
என்னால்தான் என்று எனக்குத் தெரிந்தது. ஆவென்று வாய் பிளந்து சினேகாவும், ஜோதிகாவும் கதை கேட்டபோதே நான் சந்தேகப்பட்டேன். அழகான பொய் சொல்லச் சொன்னேன். அடுத்த வீட்டுக்காரன் பணத்தை நான் எங்கே திருடச் சொன்னேன்?
“பாருங்க தருமராஜ்… நான் அரை பிளேடுவெச்சு பிசினஸ் பண்றவங்களுக்குத் தொழில் சொல்லித்தர்றவன் கிடையாது. புள்ளைங்களோடு விளையாடும்போது கொஞ்சம் நீதிக் கதை சொல்லுவேன். குழந்தைங்க பொய் பேசினா உலகம் அழிஞ்சிபோயிடாது. குழந்தைங்க பேசறது நல்ல பொய்யி. அதுல ஒரு அழகு இருக்கும். அதை ரசிக்கக் கத்துக்கங்க?”
“பொய் அழகாடா… மொதவே ஊருக்குள்ள அநியாயம், அக்கிரமம் அதிகமாயிடுச்சி. ஏமாத்தறான், குடி கெடுக்கிறான். எதைப் பண்ணாலும் தப்பில்லேன்னு தறிகெட்டு அலையிறான். நீ சொல்லற நல்ல பொய்யி பேசினா நான் ரசிக்கணுமா? நான் ரசிச்சா நாட்டுல தேனாறும் பாலாறும் ஓடுமா? பெட்ரோல், டீசல் விலை குறைஞ்சிடுமா? வறுமை தீர்ந்திடுமா? யுத்தம் நின்னுடுமா? வெடிகுண்டு செய்ய மாட்டாங்களா?” தருமராஜ் என் மூச்சே நின்றுபோகும்படி பேசினான்.
“நாட்டு வறுமைக்கும், குண்டு வெக்கறதுக்கும், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கும் புள்ளைங்க பேசற பொய்தான் காரணம்னு சொல்றீங்களா தருமராஜ்?”
“ஆமான்டா! உன் உபதேசத்தைக் கேட்டு ரத்தம் எல்லாம் பொய்யா ஊறி வளர்ற பிள்ளை பெரிசான பிறகு எந்தப் பாதகத்தைச் செய்யவும் அஞ்சாது. அப்ப குண்டு செய்யும், புரளி கிளப்பும், யுத்தம் வர ஏற்பாடு செய்யும். இதுதான்டா நடக்கும். ஊரான் பிள்ளைய உபதேசம் பண்ணிக் கெடுத்தா, தன் பிள்ளை தானே கெடும்னு சொல்லுவாங்கடா! உனக்கும் ஒரு பிள்ளை பிறக்கும்தானே! அப்ப பாக்கறேன்டா நீ எப்படி வளக்கறேன்னு!” சொல்லிவிட்டு, அவன் தலையில் அடித்துக்கொண்டு போனான்.
இப்போதுதான் இந்தக் குழந்தைகளின் உலகம் எனக்கு வேதாள உலகம்போலத் தோன்ற ஆரம்பித்தது. ஒரு குழந்தை பொய் பேச வேண்டாம் என்றால், காய்ச்சலில் படுத்துக்கொள்கிறது. இன்னொரு குழந்தை பொய் பேசு என்றால், காசு திருடுகிறது. முன்னால் போனால் கடிக்கும், பின்னால் போனால் உதைக்கும் என்கிற தெனாலிராமன் குதிரைபோல் பிள்ளைகள் இருந்தால் நான் எப்படி என் பிள்ளையை வளர்ப்பேன். நான் விதைத்த துன்பம் அதோடு முடியவில்லை. குழந்தை பெற்ற எல்லோருமே வழியில் பார்த்து என்னைத் திட்ட ஆரம்பித்தார்கள். உன்னால்தான் என் பிள்ளைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கின்றன. உன்னால்தான் என் பிள்ளை பரீட்சையில் சைபர் மார்க் வாங்கியிருக்கிறாள். உன்னால்தான் என் பிள்ளை ஜன்னல் கண்ணாடியை உடைத்தது என்று என் மீது வீசப்பட்ட குற்றம் அதிகமாகிக்கொண்டே இருந்தது. நல்லது என்று நான் எதையெல்லாம் போதித்தேனோ அதையெல்லாம் விபரீதமாக்கிவிட்டார்கள் இந்தப் பிள்ளைகள்.
உத்தமன், சத்தியன், ஊர் போற்றுகிற அறிவாளியாக பிள்ளை இருக்க வேண்டும் என்ற ஆசையில்தான் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகளை வளர்க்கிறார்கள். ஆனால், உலகத்தில் இன்றைக்கு எத்தனைக் குற்றவாளிகள்… எத்தனை திருடர்கள்… எத்தனை குடி கெடுப்பவர்கள். இவர்கள் எல்லாம் எப்படி வந்தார்கள்? பெற்றவர்கள் நினைப்பதுபோலப் பிள்ளைகள் வளரவே வளராது என்று முழுசாக நான் தெரிந்துகொண்டபோதுதான், “உங்களுக்கு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. ஆரோக்கியமாக இருக்கிறது!” என்று சொன்னாள் ஒரு குண்டு நர்ஸ்.
“குழந்தை ஆரோக்கியம்தான். இனி நான் ஆரோக்கியமாக இருப்பேனா?” என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன். ஜன்னலுக்குப் பக்கத்தில் மறைவாக நின்றிருந்த என் மாமியார் அதிர்ச்சியோடு திரும்பிப் பார்த்தார். என் விபரீதப் பேச்சைக் கண்ணீர்க் காவியமாக மாற்றி ஊரெல்லாம் பரப்பப் போகிற என் மாமியாரை நினைத்து நானும் அதிர்ந்தேன்.
மூக்குப் பொடி போட்டவன் எல்லாம் தும்மியே ஆக வேண்டும், குழந்தை பெற்றுக்கொண்டவன் எல்லாம் சந்தோஷப்பட்டே ஆக வேண்டும் என்கிற சமூக விதிக்கு நானும் கட்டுப்பட்டவன்தான். என்றாலும், குழந்தை பிறந்திருக்கிறது என்றதும் என்னால் சந்தோஷப்பட முடியவில்லை. பிறந்த குழந்தை எதுவும் தந்தையின் சொல் பேச்சைக் கேட்காது, கண்டபடி வளர்ந்து கலவரத்தை உண்டாக்கும் என்றால், பிள்ளை பெற்றவன் எதற்காக கூலிக்குச் சந்தோஷப்பட வேண்டும். குழந்தை பிறந்த பிறகு சித்தப்பிரமை பிடித்தவன்போல இருந்த என் மாற்றத்திற்கான காரணம் என் மனைவிக்குப் பிடிபடவில்லை.
“மாமா, தோட்டத்துல ஒரு நாய் மூணு குட்டி போட்டிருக்கு! வாங்க காட்டறேன்!” என்று நிமிஷா அதிசயமாக ஒருநாள் கூப்பிட்டாள். குழந்தை வளர்ப்பது குறித்த பீதியில் இருந்த எனக்கு உலகத்தில் எதுவுமே அதிசயம் இல்லை என்று தோன்றியது. குட்டி போட்ட நாய், தன் குட்டிகளுக்கு நீதிக் கதை சொல்லித்தான் வளர்க்குமா? நான் ஜடம்போல நிமிஷாவோடு போனேன்.
“மாமா! உயரமா நிக்காதீங்க. இப்படி உசரமா இருந்தா குட்டி பயந்துக்கும். ஃப்ரெண்ட்ஸ் ஆகாது. அது மாதிரியே குள்ளமா உட்காந்துக்கங்க. இப்படி!” புழுதி மண்ணில் மண்டியிட்டு உட்கார்ந்தபடி நாய்க் குட்டி பார்த்த நிமிஷா எனக்கு உத்தரவிட்டாள். என் மூளைக்குள் சுளீரென்று ஒரு அறிவு வெட்டியது. நிமிஷா நாய்க் குட்டிகளை எப்படிப் பார்ப்பது என்ற சூட்சுமத்தைச் சொல்லவில்லை. குழந்தைகளை எப்படி வளர்ப்பது என்கிற சூட்சுமத்தைத்தான் சொல்லியிருக்கிறாள்.
பிள்ளைகளின் உலகத்தில் பிள்ளைகளுக்கான நீதிதான் செல்லும். பிள்ளைகளை வளர்க்கக் கூடாது, வளர்வதை வேடிக்கைதான் பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன்.
முக்கால் டவுசர் முழுசாக அழுக்கு ஆனாலும் பரவாயில்லை என்று நானும், நிமிஷா பக்கத்தில் புழுதி மண்ணில் மண்டியிட்டு உட்கார்ந்து நாய்க் குட்டிகளைப் பார்க்க ஆரம்பித்தேன். மூக்குக்கு வெரு அருகில் நாய்க் குட்டிகளைப் பார்ப்பது எத்தனை அற்புதமானது என்று நான் ஆச்சர்யப்பட்டபோது, “கீழ விழுந்திட்டீங்களா?” என்று அதிர்ச்சியோடு கேட்டபடி வந்தாள் நிமிஷாவின் அம்மா.
நாய்க் குட்டிகளையும், அதற்குப் பக்கத்தில் ஆடுபோல மண்டியிட்டு நின்றிருந்த என்னையும் கேவலமாகப் பார்த்தாள். “குழந்தை பொறந்த பின்னாடியும் நீங்க திருந்தறதா இல்லே! இன்னும் மோசமான லூஸாத்தான் ஆகறீங்க!” என்று அலுத்துக்கொண்டு போனாள்.
அறிவும், ஞானமும் பெற்ற ஞானிகளைக் கிறுக்கர்கள் என்று சொல்வது உலகத்தில் இது ஒன்றும் புதியதில்லையே என்று குதர்க்கமாக யோசிக்கத் தெரிந்த எனக்கு, குட்டி போட்ட நாய் கோபத்தோடு பின்னால் நின்றாலும் நிற்கும் என்று யோசிக்கத் தெரியவில்லை. அதன் பிறகு ரேடியோ மெக்கானிக்குக்கு குழந்தை பிறந்ததைப்பற்றி யாரும் அதிசயமாகப் பேசவில்லை. ரேடியோ மெக்கானிக்கை ஒரு தெரு நாய் எங்கே கடித்தது என்றுதான் ஆர்வமாகப் பேசிக்கொண்டு இருந்தார்கள்!
– மார்ச் 2010
🙂