பொய்க்காத நம்பிக்கை

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: January 4, 2015
பார்வையிட்டோர்: 12,207 
 

எப்படியும் வந்து விடுவாள் என்ற தன் நம்பிக்கை பொய்த்து விடுமோ என்ற அகிலனின் பதற்றத்தை ஓடிக் கொண்டிருந்த கடிகார முள்ளின் டிக், டிக் சப்தம் அதிகமாக்கிக் கொண்டிருந்தது. மனமும் திக், திக் என்று தன் சுருதியைக் கூட்ட திறந்து கிடக்கும் வாசற்கதவை வெறித்த படியே பார்த்துக் கொண்டிருந்தவன் மனதில் அப்படிச் சொல்லியிருக்கக்கூடாது என்ற எண்ணம் மீண்டும், மீண்டும் அலையாய் வந்து போனது. லதா வந்தால் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு கட்டித்தழுவி அழ வேண்டும் போலிருந்தது.

அகிலனின் காதல் மனைவி லதா. ஆனால் ஏற்பாடு செய்யப்பட்ட திருமணம் அவர்களுடையது. தான் குடியிருக்கும் புளோக்கில் இருந்து சற்றுத் தள்ளி புதிதாக கட்டப்பட்டிருந்த புளோக்கிற்கு குடிவந்திருந்த லதாவின் தந்தையை அலுவல் நிமித்தம் சந்திக்கச் சென்றிருந்த போது தான் லதாவை அகிலன் முதல் முறையாகப் பார்த்தான். தேநீர் கலக்கிக் கொண்டு வந்து தந்தவளை அவளின் தந்தை அறிமுகம் செய்து வைத்தார். அவன் பணிபுரியும் அலுவலகத்திற்கு அருகில் இருக்கும் நிறுவனத்தில் ஊழியராய் இருப்பதாய் சொன்னவளிடம் ஒரு சிறு புன்னகையை மட்டும் பதிலாய் கொடுத்தான்.

ஒருநாள் தன்னுடைய இரு சக்கர வாகனம் தன்னோடு வர சம்மதிக்காததால் பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்வதற்காக புளோக்கிற்கு அருகில் இருக்கும் பேருந்து நிறுத்தத்திற்கு வந்த போது லதாவும் பேருந்திற்காக அங்கு காத்திருந்தாள். இருவரும் பரஸ்பர காலை வணக்கத்தைச் சொல்லிக் கொண்டனர். இந்த நிறுத்தத்தில் இருந்து தான் பேருந்து எடுப்பீர்களா? இதுவரை நான் உங்களை இங்கு பார்த்ததில்லையே? என்றவளிடம், இல்லை. வழக்கமாக என் இரு சக்கர வாகனத்தில் தான் அலுவலகத்திற்குச் செல்வேன். இன்று ஏனோ அது மக்கர் செய்து விட்டது என்று சொன்னான். அவர்களைத் தவிர பேருந்து நிறுத்தத்தில் இன்னும் சிலரும் இருந்தனர். காலை வகுப்புகளுக்கு செல்லும் பள்ளிக் குழந்தைகள் அதிகமாக இருந்தனர். சிலரின் கழுத்தில் அடையாள அட்டை போல பேருந்துக் கட்டண அட்டை தொங்கிக் கொண்டிருந்தது.

தொடர்ந்து அவளுடன் பேசுவதற்கு ஏதுமில்லாதவனாய் அங்கிருந்த பள்ளிக் குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்த அகிலனை இருசக்கர வாகனத்தில் தினமும் போய் வருவது சிரமமாக இல்லையா? என்ற லதாவின் கேள்வி திருப்பியது. அப்படி அவள் கேட்டதற்கும் காரணம் இருந்தது. அவர்கள் தங்கியிருந்தது சிங்கப்பூரின் ஒரு கோடியில் இருக்கும் உட்லண்ஸ் வட்டாரத்தில். வேலை செய்யும் அலுவலகம் இருப்பதோ நகரின் இன்னொரு கோடியில் இருக்கும் சிராங்கூன் பகுதியில்!

போகிற வழியில் இருக்கும் என் சில கிளைண்டுகளை சந்தித்துப் பேச, புதிய கிளைண்டுகளைச் சந்திக்க இரு சக்கர வாகனம் தான் தனக்கு வசதி என அகிலன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் செல்வதற்கான பேருந்து வந்து நின்றது. காலைநேரம் என்பதால் பேருந்தில் நிறைய கூட்டமிருந்தது. உட்காருவதற்கு இருக்கைகள் கீழ் தளத்தில் இல்லாததால் பேருந்தின் மேல் தளத்திற்குச் சென்றனர். அங்கு நிரப்பப்படாத சில இருக்கைகள் இருந்தன. ஒரு இருக்கையில் அமர்ந்த லதா ஜன்னலோரம் நகர்ந்து கொண்டு பக்கத்து இருக்கையில் அகிலன் அமர இடம் கொடுத்தாள். உட்கார இங்கு இருக்கைகள் இருக்கும் போது பலரும் கீழ் தளத்தில் நின்று கொண்டு பயணித்துக் கொண்டு வருகிறார்களே ஏன்? என நினைத்துக் கொண்டவன் அந்தக் கேள்வியை லதாவிடம் கேட்டான்.

அவளோ, ”இது என்னங்க கேள்வி? காசு கட்டி வருகிறவன் உட்கார்ந்து வந்தா என்ன? நின்னுக்கிட்டு வந்தா என்ன?” என்றாள் சிரித்துக் கொண்டே.

தன் பதிலால் சட்டென அகிலனின் முகம் மாறுவதைக் கண்ட லதா சும்மா சொன்னேன் எனச் சொல்லிவிட்டு அவர்கள் பக்கத்தில் இருக்கும் நிறுத்தத்தில் இறங்குபவர்களாக இருப்பார்கள். அதனால் கூட அப்படி நின்று கொண்டு வருவார்கள் என்றாள். இப்படி ஒரு அபத்தமான கேள்வியைக் கேட்காமலே இருந்திருக்கலாம் என அகிலன் தனக்குத் தானே மனதிற்குள் சொல்லிக் கொண்டான். தனக்குப் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு சீனப்பெரியவரை பார்த்ததும் அவனுக்கு நினைவுகள் பின்னோக்கி ஓட ஆரம்பித்தது

அகிலனின் தந்தை சொந்தமாகத் தொழில் நிறுவனம் நடத்தியவர். ஓரளவு வசதியான குடும்பம். சொந்தமாக அவர்களுக்கென தரைவீடு இருந்தது. ஒற்றைப் பிள்ளை என்பதால் அவனைச் செல்லமாக வளர்த்தனர். கேட்டவைகளுக்கும் மேலாகவே அவனுக்குப் பிடித்த விசயங்கள் கிடைத்தது. வீட்டில் இரண்டு கார்கள் இருந்ததால் பள்ளிக்கூடத்திற்கு காரில் தான் போய் வருவான். அதன்பின் இலண்டன் கல்லூரியில் ஓராண்டு படிப்பிற்கு இடம் கிடைக்க அகிலன் அங்கு சென்றிருந்த சமயத்தில் தான் குடும்பத்தில் புயல் வீச ஆரம்பித்தது. அவனின் தந்தையோடு பங்குதாரர்களாக இருந்த இருவர் கூட்டாகச் சேர்ந்து பெரிய அளவில் நிதி மோசடிகளைச் செய்ததோடு மட்டுமில்லாமல் அதில் அவனின் தந்தையைத் திட்டமிட்டுச் சிக்க வைத்திருந்தனர். விசயம் அவருக்குத் தெரிய வந்த சமயத்தில் நிலைமை கை மீறிப் போயிருந்தது. அவரின் நிறுவனத்திற்காக உதிரிபாகங்களை சப்ளை செய்தவர்கள், பங்காளித்துவ கூட்டாளிகள் என எல்லோரும் ஒரே நேரத்தில் நெருக்க தன்னுடைய சொத்துக்கள், வீடு எல்லாவற்றையும் விற்று அவரவருக்குரிய பாக்கித் தொகைகளையும், முதலீட்டுத் தொகைகளையும் அடைத்தார். இழந்தவைகளை மீண்டும் சம்பாதித்து விடலாம் என்ற நம்பிக்கை அவருக்குள் இருந்த போதும் அது சாத்தியமாகும் சூழல் இல்லாமல் போனது. எல்லோருக்கும் பைசல் செய்தது போக எஞ்சியிருந்த தொகையில் உட்லண்ஸில் ஒரு புளோக் வீட்டை வாங்கிக் குடி வந்தார்.

இலண்டனில் இருந்த அகிலனுக்கு இந்த விசயங்கள் சொல்லாமல் மறைக்கப்பட்டது. தன் ஆசை மகனின் படிப்புக்குத் தடை வந்து விடக்கூடாது என நினைத்த அவனின் பெற்றோர் மாதா மாதாம் பணம் அனுப்பி வைத்து விடுவதால் அவனுக்கும் எந்த சந்தேகமும் வரவில்லை. அவன் அடிக்கடி பேசும் உறவினர்களிடமும், நெருங்கிய நண்பர்களிடமும் அவனிடம் இந்த விசயங்களைச் சொல்லக் கூடாது என அவனின் தந்தை கூறி வைத்திருந்தார்.

நம்பவைத்து ஏமாற்றி என் புருசனை முடக்கிப் போட்டு நோயாளி மாதிரி ஆக்கிட்டாங்களே. அவர்களைத் தண்டிக்கமாட்டாயா? என அகிலனின் அம்மா அவ்வப்போது தெய்வங்களிடம் முறையிட்டு சபித்துக் கொண்டாலும் கணவனின் முன் நம்பிக்கையுடன் இருப்பதைப் போல் காட்டிக் கொண்டாள். தானும் புலம்பிக் கொண்டிருந்தால் அவர் இன்னும் நிலை குழைந்து விடுவார் என்று நினைத்தாள்

ஏனோ அன்றிரவு, தான் ஏமாற்றப்பட்டதைப் பற்றி அதிகமாக புலம்பிய படி இருந்தவரிடம், ”ஏங்க இந்த வசதிகளோடவா நாம வாழ்க்கையை ஆரம்பிச்சோம். எல்லாம் நீங்க சம்பாதிச்சது தானே. இப்பவும் என்ன ஆயிடுச்சு? அகிலன் இலண்டனிலிருந்து வரவும் மீண்டும் ஒரு கம்பெனி ஆரம்பிச்சு சம்பாதிச்சிடலாங்க. நாம பார்க்காத பணமா? நீங்க செய்யாத உதவியா? நமக்குன்னு சிலர் உதவுவாங்க. எல்லாம் அவன் வரும் வரைக்கும் தான். இன்னும் ஏழு மாசத்துல படிப்பை முடிச்சிட்டு வந்துடுவான். அதுக்கப்புறம் எல்லாம் நல்லதே நடக்கும். மனசை போட்டு குழப்பிக்காமல் படுத்துத் தூங்குங்க” என சமாதானம் சொல்லி விட்டு அவரின் கால்களை மெல்ல அமுக்கி விட்டபடி உட்கார்ந்திருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள்.

விடிந்ததும் பஜாருக்கு போய் காய்கறிகள் வாங்கி விட்டு திரும்பியவள் இன்னும் கணவன் எழுந்திருக்காமல் படுத்திருப்பதைப் பார்த்ததும் உடம்பிற்கு ஏதும் சரியில்லையோ என நினைத்து அருகில் வந்து தொட்டுப் பார்த்தாள். உடம்பு சில்லென்று இருந்தது. பலமுறை அழைத்தும் எழும்பாதவரை மெல்லப் புரட்டினாள், நீர் கோர்த்த கண்களுடன் ஒரு பார்வை பார்த்தவர் எந்தச் சலனமுமின்றி மீண்டும் கண்களை மூடிக் கொண்டார்.

என்னாச்சுங்க? என்ன செய்யுது? என பலமுறை கேட்டும் எதுவும் பதில் சொல்லாமல் இருந்தவரைக் கண்டு விபரீதமாய் உணர்ந்தவள் வேகமாக ஓடி டைரியைப் புரட்டினாள். அவர்களின் குடும்ப நண்பரும், டாக்டருமான ராமதுரையை அழைத்து பதறியபடியே விபரம் சொன்னாள். நெஞ்சை லேசாக அமுக்கி விடுங்கள். கை, கால்களை அழுந்த தேய்த்து விடுங்கள் என சில விசயங்களை செய்யச் சொன்னவர் அடுத்த பத்து நிமிடத்தில் அங்கு வந்து விட்டார். பதறியபடியே அவரின் பின்னாள் அவள் நிற்க மூடியிருந்த கண்களை லேசாக விரல்களால் இழுத்துப் பார்த்தவரின் முகம் சற்றே மாறியது கண்டு அவளின் பதற்றம் இன்னும் அதிகமானது. நாடி பிடித்துப் பார்த்தவர் நம்மை விட்டு போயிட்டாரும்மா? என கலங்கிய படியே சொன்னார். பெருங்குரலெடுத்து அழுதவளை சமாதனம் செய்த ராமதுரை மற்ற உறவுகளுக்குத் தகவல் சொல்லி விட்டு அகிலனுக்கும் அலைபேசியில் தகவல் சொன்னார்.

கல்லூரியில் தகவல் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டு அன்றிரவே சிங்கப்பூருக்கு வந்திறங்கினான். விமானநிலையத்திற்கு அழைக்க வந்திருந்த நண்பர்கள் பட்டும், படாமலும் நிகழ்ந்தவைகளைச் சொல்லிக் கொண்டு வந்தார்கள். நண்பர்கள் வந்திருந்ததால் தன் வீட்டுக் கார் வராததைப் பற்றி அவன் யோசிக்க வில்லை. ஆனால், டாக்சி வழக்கத்திற்கு மாறான பாதையில் போனதைக் கண்டதும் நண்பர்களிடம் என்னாச்சு? ஏன் இங்கே போறோம்? என திருப்பி, திருப்பி கேட்டான். நண்பர்களோ முதலில் வீட்டுக்கு போய் பேசிக்கலாம் என சொல்லி ஆறுதல் படுத்திக் கொண்டே வந்தனர். புளோக்கின் கீழ் கண்ணாடிப் பெட்டியில் படுக்க வைக்கப்படிருந்த அப்பாவையும், அவரருகில் கண்ணீரோடு அமர்ந்திருந்த அம்மாவையும் பார்த்ததுமே கையிலிருந்த பெட்டியை அப்படியே போட்டு விட்டு கத்தியபடியே ஓடி வந்து தன் அம்மாவைக் கட்டிக் கொண்டு அழுதவனை உறவினர்கள் ஆறுதல் படுத்தினர்.

அப்பா இல்லாத வாழ்க்கையை நினைத்துப் பார்க்கவே பயமாக இருந்த மனநிலையில் அருகிலிருந்த தூணில் சரிந்த படி நின்றான். நான்கு மாதங்களுக்குள் தன் மொத்த குடும்பமும் சிதைந்து போய் விட்டதா? புளோக் வீட்டிற்கு ஏன் வந்தார்கள்? என்ற கேள்வியும் அலையாய் வந்து மோதிக் கொண்டிருக்க அப்பாவிற்கான இறுதிக் காரியங்களை முடித்தான். இரண்டொரு நாட்களில் உறவினர்கள் அவரவர் வேலைகளைக் காரணம் காட்டி சென்று விட ஓரளவு நடந்தவைகளை அகிலனால் புரிந்து கொள்ள முடிந்திருந்தது. ஒரு வாரம் ஆகியிருந்த நிலையில் நடந்தவைகளைக் கண்ணீர் மல்க அம்மா சொன்னதைக் கேட்டதும் அதிர்ந்து போனான். அப்பாவின் இருபதாண்டுகால நண்பர்கள், குடும்பத்தில் ஒருவராக பார்க்கப்பட்டவர்கள் இப்படி கழுத்தறுத்து விட்டார்கள் என அவன் அம்மா சொன்ன போது மனிதன் தன் கோரமுகத்தை எப்படியெல்லாம் வெளிப்படுத்துவான் என்பதை அவன் உணர்ந்தான்.

இந்த நிலையில் அம்மாவை தனியே விட்டு விட்டு படிக்கச் செல்வது சரி எனப் படாததால் சிங்கப்பூரிலேயே இருக்க முடிவு செய்தான். தன் முடிவைச் சொன்ன போது அம்மாவும், நண்பர்களும் தடை சொல்லவில்லை. பகுதி நேரப் பணி செய்து கொண்டே சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றதும் சில இடங்களில் பணி செய்து அனுபவம் பெற்ற பின் இப்போது பணி செய்யும் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தான். கடைநிலை ஊழியராய் தொடங்கி கொஞ்சம், கொஞ்சமாக முன் நகர்ந்து கொண்டிருந்தான்.

யாரோ வேகமாக தன் தோளை உழுக்கியது போல் இருக்க தன் கடந்தகால நினைவுகளிலிருந்து திரும்பியவனிடம், ”என்னாச்சு? பயங்கர யோசனையா இருக்கிற மாதிரி இருக்கு? பெரிய கனவோ?” என முன் விழுந்த தன் கூந்தலை பின் தள்ளிய படியே லதா கேட்டாள்.

”ஒன்னுமில்லை” என சமாளித்தவன் பேச்சை மாற்றுவதற்காக அடுத்த நிறுத்தத்ததில் நாம் இறங்க வேண்டும். வாங்க கீழ் தளத்திற்கு போவோம் என சொல்லியபடி இருக்கையிலிருந்து எழுந்தான். லதாவும் அவனைப் பின் தொடர்ந்தாள்.

தங்களுக்குரிய நிறுத்தத்தில் இறங்கியதும் ”பை”, பை” என சொல்லிக் கையசைத்த படி இருவரும் அவரவர் அலுவலகம் நோக்கிப் போயினர். அதன்பின் அகிலனும், லதாவும் பேருந்தில் சந்தித்துக் கொள்ளாத போதும் அவ்வப்போது அலைபேசியில் பேசிக் கொண்டனர். மதிய உணவிற்காக இருவரும் கடைத் தொகுதிக்கு வரும் சமயங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டனர். பேசிக் கொண்டனர். வார இறுதிநாட்களில் எங்காவது கலாச்சார விழாக்கள் நடைபெற்றால் சேர்ந்து செல்லும் அளவுக்கு அவர்களின் நட்பு வளர்ந்திருந்தது. ஐந்து மாதங்கள் ஆகியிருந்த நிலையில் லதாவுடனான தன் நட்பு வேறு ஒரு நிலைக்கு தாவி வருவதை அகிலன் உணர்ந்தான். எப்படி அவளிடம் இதைச் சொல்வது? என்ற தயக்கமும், இதனால் தன்னுடனான நட்பை முறித்துக் கொள்வாளோ? என்ற பயமும் அவனுக்குள் இருந்தது.

ஒரு வார இறுதிநாளில் பறவைகள் பூங்காவிற்கு அவளுடன் சென்றிருந்த போது கொஞ்சம் தைரியத்தோடு ”நான் உன்னை விரும்புகிறேன் லதா” என மிடறு விழுங்கிய படி ஒருவாறு சொல்லி முடித்தான். ஆனால் அவன் பயந்தது போல் ஒன்றும் நடக்கவில்லை. அவனுடைய விருப்பத்தை அவள் எதார்த்தமாக எதிர் கொண்டாள். அவளின் பதிலற்ற மெளனம் அவளுக்கும் அதில் விருப்பம் என்பதாகவே அகிலனுக்கு பட்டது. அவர்களின் வழக்கமான சந்திப்புகள் தொடர்ந்தன. ஆனால் இப்போது இருவரும் காதலர்களாக மாறி இருந்தனர். சக நண்பர்களுக்கும் அது தெரியும் படியாகவே அவர்கள் பழகி வந்தனர். ஓராண்டுக்கு பின் இருவீட்டார் சம்மதத்தோடு அவர்களின் திருமணம் நடைபெற்றது.

கல்யாணமான மறு வருடமே லதா கருவுற்றாள். ஒருநாள் இரவில் கடுமையான வயிற்று வலி எனப் படுத்தவளுக்கு ஏற்பட்ட திடீர் இரத்தப்போக்கில் கருவும் கலைந்து வெளியேறியது. அதன்பின் மருத்துவரின் ஆலோசனைப்படி கவனமாய் இருந்தும் கரு உருக்கொள்வதும் பின் சில நாட்களிலே தங்காமல் கலைவதுமாக இருந்தது. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத கதையாய் போக மருத்துவரோ இன்னும் சாத்தியமிருக்கிறது என நம்பிக்கை கொடுத்துக் கொண்டிருந்தார். அடிக்கடி ஏற்படும் இரத்தப்போக்கினால் லதாவின் உடலும் நசிவடையத் தொடங்கியதால் அம்மாவின் ஆலோசனைப் படி லதா வேலைக்குப் போவதை நிறுத்திக் கொண்டாள். அடுத்த இரண்டு வருடத்தில் புற்றுநோயின் தீவிரத்தால் அம்மா இறந்து போக வீட்டு வேலைகளோடு தண்ணி, கரண்ட், டெலிபோன் பில் கட்டுவது தொடங்கி எல்லா புற வேலைகளையும் லதாவே பார்த்துக் கொண்டாள்.

அவர்களுடைய பத்து வருட இல்லறத்தில் குழந்தை இல்லை என்ற ஒரு குறையைத் தவிர வேறு குறை இல்லை. குழந்தைக்கான ஏக்கம் தனக்குள் இருந்த போதும் அதை எந்த நிலையிலும் வெளிக்காட்டி விடக்கூடாது என்பதில் அகிலன் காட்டிய உறுதியைக் கண்டு பலசமயங்களில் லதா அதிசயித்திருக்கிறாள். குழந்தை தனக்குள் தங்காது போவது பற்றி அவள் வருத்தமாய் சொல்லும் போதெல்லாம் அந்த விசயத்தைத் தொடராதவாறு அவளின் பேச்சை வேறு விசயங்களுக்குள் திருப்பி விடுவான். சில வருடங்களுக்கு முன் ஒருநாள் அதிக விரக்தியில் இருந்த லதா என்னை டைவர்ஸ் செய்துட்டு வேறு யாரையாவது கட்டிக்கிட்டு குழந்தை பெத்துக்கங்க. நானே டைவர்சில் கையெழுத்து போட்டுத் தருகிறேன் என சொல்லப்போக முதல் முறையாக அவளை கை நீட்டி அறைந்தான். அதுதான் அவளை அவன் முதலும், கடைசியுமாய் கைநீட்டி அடித்தது. ஆனால் அவ்வப்போது பல விசயங்களில் இருவருக்கும் எல்லா குடும்பங்களிலும் நிகழ்வதைப் போல் வாய்ச்சண்டைகள் வரும்.

கோபப்பட்டு அவன் திட்டும் சமயத்தில் கோபித்துக் கொண்டு ஒரு கேரி பேக்கில் தன் துணிமணிகளை அள்ளி அமுக்கிக் கொண்டு தன் அம்மா வீட்டிற்குப் போய்விடுவாள். போனவள் அடுத்த வேளை சப்பாட்டிற்கு திரும்பி வந்து விடுவாள். இது வழக்கமான விசயம் என்பதால் லதா வீட்டிலும் சரி, அகிலனும் சரி அதைப் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. அம்மா வீட்டிற்கு போய்விடுவேன் என்ற மனைவியின் பயமுறுத்தல்கள் லதாவைப் பொறுத்தவரை அகிலனிடம் பலிக்கவில்லை!

இன்னும் சில தினங்களில் அவர்களுடைய திருமண நாள் வர இருந்த நிலையில் புதிய மாடல் நெக்லஸ் உனக்கு வாங்கித் தரப்போகிறேன். உனக்கு வேண்டிய டிசைனை நீயே தேர்ந்தெடுத்து வை எனச் சொல்லி புதிய நகை மாடல்கள் அடங்கிய கேட்லாக் ஒன்றை அவளின் கையில் அகிலன் திணித்தான். நகை வாங்கித்தர விரும்பியதற்கு திருமணநாளோடு அவன் அலுவலகத்தில் நாளை வெளியிடப்பட இருக்கும் புதிய பதவி உயர்வு பட்டியலில் அவன் பெயர் இருந்ததும் ஒரு காரணமாக இருந்தது. சர்ப்பிரைஸ் ஆக இருக்கட்டும் என நினைத்து அந்த விசயத்தை லதாவிடம் அவன் சொல்லவில்லை.

மறுநாள் அலுவலகம் வந்தவனுக்கு பதிவி உயர்வு பட்டியலில் இருந்து தன் பெயர் நீக்கப்பட்டிருப்பதும், தான் மிகவும் எதிர்பார்த்திருந்த அந்தப்பதவி பொதுமேலாளரின் உறவினருக்குத் தரப்பட்டிருக்கும் செய்தியும் சொல்லப்பட்டது. தனக்கு முழுத்தகுதி, போதிய அனுபவம் இருந்தும் இரண்டு முறை தவறிப் போன வாய்ப்பு இம்முறையும் திட்டமிட்டு பறிக்கப்பட்டது அவனுக்குப் பெரிய மனக்குமுறலை உண்டாக்கியது. கடந்த மாதம் போனஸ் அறிவிக்கப்பட்ட போது தனக்கு இரண்டுமாத போன்ஸ் குறைக்கப்பட்டதற்கு இந்த பதவி உயர்வைத் தான் பொதுமேலாளர் காரணமாகச் சொல்லி இருந்தார். அதனால் அவரைச் சந்தித்து முறையிட்டவனிடம், “உனக்கென்ன பிள்ளையா, குட்டியா? போய் வேலையைப் பாருயா. அடுத்த வருச புரமோசன் லிஸ்ட்ல நிச்சயம் உன் பெயரை நானே பரிந்துரை செய்கிறேன்” என அவர் நக்கலாய் சொல்ல கலங்கிய கண்களோடு அவருடை அறையை விட்டு வெளியேறினான். தன் சுய மரியாதையின் மேல் வீசப்பட்ட அந்தப் பேச்சால் அவனிடம் ஆரம்பத்தில் இருந்த கோபம் இப்போது ஒரு ரணமாய், மனதில் வலியாய் நிறைய ஆரம்பித்தது. அன்று முழுவதும் வேலையில் மனம் ஒட்டவில்லை. நேரத்தைக் கடத்தியவன் வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீட்டிற்குத் திரும்பினான்.

பதவி உயர்வு கிடைக்காத கோபம், அதை வெளிக்காட்ட வழியில்லாத படி தன் இல்லாமையின் இயலாமை மீது விழுந்த வார்த்தைகள் எல்லாம் ஒருசேர இருந்த நிலையில் ஆதங்கத்துடன் வீட்டிற்குள் நுழைந்தவனின் முகத்தில் இருந்த மாற்றத்தை லதா கவனிக்கத் தவறவில்லை. இன்று அலைச்சல் கூடுதலாக இருந்திருக்கும் என நினைத்தாள். உடை மாற்றிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவனிடம் காப்பிக் கோப்பையை நீட்டியவள் “ஏங்க நகை மாடல் செலக்ட் பண்ணிட்டேன். நல்லா இருக்கான்னு நீங்களும் ஒருதரம் பார்த்திடுங்களேன்” எனச் சொல்லியபடி கேட்லாக்கை விரித்து நீட்டினாள்.

அதைக் கையில் கூட வாங்காமல் “ஆமாம். இது இப்ப ரெம்ப முக்கியம் பாரு. கல்யாணமாகி இத்தனை வருசத்துல ஒரு புள்ள குட்டிக்கு வழியில்ல. இருக்கிறதை அனுபவிக்கிறதுகே ஒன்னையும் காணோம். இதுல நகை தான் முக்கியமாக்கும். பேசாம போய்த் தொலைடி” என்று சீறினான். அவனின் இந்த பேச்சை அவள் சிறிதும் எதிர்பார்க்கவில்லை. என்னவாயிற்று இவனுக்கு? என அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை. ”பேசாம போய்த் தொலைடி” என்ற வார்த்தைகள் மட்டும் மீண்டும், மீண்டும் அவளின் காதிற்குள் எதிரொலிப்பது போல் இருக்க தன்னையுமறியாமல் தாரை, தாரையாய் வழிந்த கண்னீரைத் துடைத்த படி போட்டிருந்த ஆடையைக் கூட மாற்றிக் கொள்ளாமல் செருப்பை அணிந்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறினாள்.

சுய பிரங்கையற்று சோபாவில் அப்படியே கிடந்தவனை அவனுடைய அலைபேசியின் சப்தம் பிரங்கையுறச் செய்தது. எழுந்துவந்து அலைபேசியை எடுத்துப் பார்த்தான். மறுமுனையில் லதாவின் அம்மா இருந்தார்.

”சொல்லுங்க அத்தை” என்றான்.

என்னாச்சு இவளுக்கு? துணியெல்லாம் எடுத்துட்டு வராமல் சும்மா வந்திருக்கா? எப்பவும் சாப்பிட்ட உடனையே அங்கே வந்து விடுவா. இன்னைக்கு என்னன்னா சாப்பாடு வேணான்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளேயே உட்காந்திருக்கா. உங்களுக்குள் வேற எதுவும் பிரச்சனையா தம்பி? என்றாள்.

நிமிர்ந்து மணியைப் பார்த்தான். நள்ளிரவு பன்னிரெண்டு பத்தாகி இருந்தது. லதா வீட்டை விட்டுப் போய் ஐந்து மணிநேரத்திற்கும் மேலாகி விட்டதை அப்பொழுது தான் அகிலன் உணர்ந்தான்.

என்ன தம்பி பேச்சையே காணோம்? என மறுமுனையில் கொஞ்சம் பதட்டமாய் கேட்பது தெரிந்ததும், ”வழக்கம் போல தான். வேறு ஒன்றுமில்லை” எனச் சொல்லி சமாளித்து விட்டு அலைபேசியை வைத்தான்.

நடந்தவைகள் மெல்ல அவன் மனதில் மீண்டும் காட்சிகளாய் நகர ஆரம்பித்தது. அலுவலகத்தில் நிகழ்ந்தவைகள் முற்றாக விலகி அவன் மனம் முழுக்க லதா பற்றிய நினைப்பே இருந்தது. ”சே………என்ன ஒரு மடத்தனமான காரியம் செய்து விட்டேன். என்ன வார்த்தைகளைப் பேசிவிட்டேன். நான் பேசியதற்கும், அலுவலகத்தில் பொதுமேலாளர் பேசியதற்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது? என் இயலாமையை சுட்டிக்காட்டியதற்காக வருத்தமும், வேதனையும் பட்ட நான் அதே தவறைச் செய்து அவளுக்கு வருத்தத்தையும், வேதனையையும் தந்து விட்டேனே. ஆறுதல்களால் மீட்க முடியாத வார்த்தை ரணத்தை அவளுக்குள் விசம் தோய்த்த அம்பாக செருகி விட்டேனே. என்னிடமிருந்து இப்படியான வார்த்தைகளா? என்று அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும். அவளின் இயலாமையை, உடல்நிலைக் குறைபாட்டை நானே கொச்சைப் படுத்தி விட்டேனே” என அவன் மனம் அவனிடம் பேச, பேச அவனுக்கே அவன் மேல் கோபம் வந்தது. கண்ணீர் கண்களிலிருந்து தானாகவே வடிய ஆரம்பித்தது.

பத்து ஆண்டுகளாக தன் சுகங்களைக் கூட பெரிதாக நினைக்காமல் என்னை ஒரு குழந்தையைப் போல கவனித்துக் கொண்டவளை கேவலம் ஒரு நகைக்காக இப்படி குதறிவிட்ட காயத்தை அவள் வாழ்நாளிலிருந்து எப்படி மறக்க வைப்பேன்? என நினைக்க, நினைக்க அவனுக்கு அங்கு இருக்க இருப்புக் கொள்ள் வில்லை. அவள் வீட்டிற்குப் போகலாம் என்றால் நடு இரவு தாண்டிய அகால நேரத்தில் அவள் வீட்டுக் கதவை தட்டினால் மாமனாரும், மாமியாரும் ஏதாவது நினைக்கக் கூடும் என்று நினைத்தான். இத்தனை வருடத்தில் அவள் கோபித்துக் கொண்டு போகும் போதெல்லாம் இவன் போய் அழைத்ததே இல்லை என்பதும் அவன் அப்படி நினைத்தற்கு காரணமாக இருந்தது. தவிர, லதாவின் அம்மா பேசியதில் இருந்து நடந்தவைகளை அவள் இன்னும் வீட்டில் சொல்ல வில்லை என்பதும் அங்கு தான் போகப் போய் நடந்தவைகளை அவர்கள் வீட்டில் சொல்லும் படியாகிவிடுமோ? என்ற நினைப்பும் தடையாக இருந்தது.

எப்போதும் இல்லாத தவிப்பாய் லதாவைப் பார்க்க வேண்டும் என்று மட்டும் மனம் அலைபாய்வதைப் போல் இருக்க வாசலுக்கும், வரவேற்பறைக்குமாக வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தவன் வாசலை வந்து அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டே இருந்தான். ஒரு கட்டத்தில் அப்படி வந்து பார்ப்பது அவதியாக இருக்கவே முழு வாசல் கதவையும் திறந்து வைத்து விட்டு வீட்டிற்குள்ளேயே அலைந்து கொண்டிருந்தான். அலைபேசியை அடிக்கொரு தடவை பார்த்துக் கொண்டான்.

வழக்கம் போலவே திரும்பவும் வந்து விடுவாள் என்ற நம்பிக்கை இருந்தாலும் இன்று நடந்தவைகள் அனைத்துமே வழக்கத்துக்கு மாறாக இருந்தது அவனுக்குள் பயத்தையும், பதற்றத்தையும் உருவாக்கிய படியே இருந்தது. அலைபேசியோடு சோபாவில் வந்து அமர்ந்தவன் அதில் தான் சேமித்து வைத்திருந்த லதாவின் புகைப்படங்களைத் திறந்து பார்த்தான். அவனின் கன்னத்தில் அழுத்தமாய் இரண்டு உதடுகளையும் குவித்து தன் பிறந்தநாளில் அவள் கொடுத்த முத்தப் புகைப்படத்தை அப்படியே பார்த்துக் கொண்டிருந்தவனின் மனதில் இத்தனை அன்புள்ளவளை இப்படி இரணப்படுத்தி விட்டோமே என்ற குற்ற உணர்வு மின்னலாய் கீறிச் சென்றது.

உறக்கம் தூரத்து வானமாய் போய்விட இமைகள் இணைசேர மறுத்த நிலையில் அப்படியே சோபாவில் சரிந்து கிடந்தான். வெளியில் வானம் தன் துயிலை முடிப்பதற்கான தயாரிப்பில் இருந்தது. வாசலில் ஒரு நிழலும் கூடவே ஏதோ உராயும் சப்தமும் கேட்டது. அடிக்கொருதரம் பார்த்துச் சலித்ததில் எழுந்து போய் பார்க்க மனம் வரவில்லை. சட்டென மறைந்த நிழலின் நிஜமாய் லதா நின்றாள். காலணியை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டு சோபாவிற்கு அருகில் வந்தாள். காலில் விழுந்து கட்டிப்பிடித்து அழ வேண்டும் என அப்போது நினைத்த எண்ணம் இப்போது வரவில்லை. கன்ணீர் இன்னும் அதிகமாய் ஊற்றெடுக்க அவளை பார்த்தபடி சரிந்த நிலையிலேயே சோபாவில் கிடந்தான்.

எதுவும் பேசாமல் டீபாய் மேல் இருந்த நேற்று தான் கொடுத்த காப்பி கோப்பையை எடுத்துக் கொண்டு சமையலறையை நோக்கிப் போனாள். அருந்தப்படாமல் ஆடையோடு இருந்த அந்தக் காப்பி கோப்பையை கழுவி விட்டு புதியதாய் காப்பி கலந்து எடுத்து வந்தாள். சரிந்து கிடந்த அகிலனின் அருகில் அமர்ந்து அவனின் தலையைத் தன் மடியில் தூக்கி வைத்துக் கொண்டு முடியைக் கோதி விட்டபடி குமாரிடம் நேற்று இரவு பேசினேன் என்றாள்.

குமார் அகிலனின் பாலிய கால சிநேகிதன். அவன் குடும்பத்தில் ஒருவனாக மதிக்கப்படுபவன். இருவரும் ஒரே அலுவலகத்தில் வெவ்வேறு பிரிவில் பணி செய்தனர். அவனிடம் லதா பேசியிருக்கிறாள் என்றால் நிச்சயம் அலுவலகத்தில் நடந்தவைகளை, அதன்பின் பொதுமேலாளர் பேசிய விதம் குறித்து தான் வெளிக்காட்டிய மனக்குமுறலை அவன் சொல்லியிருப்பான் என அகிலன் நினைத்தான். மடியில் படுத்தவாறு அவளின் முகத்தை பார்த்து மன்னிச்சிரு என அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாக அவனின் உதட்டோரத்தில் தன் இதழ்களைப் பதித்தவள், அவனின் உள்ளங்கையை தன் கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடி இன்று விடுப்பு எடுத்து விட்டு கொஞ்சம் தூங்குங்கள் என்றாள். விடாமல் அவனின் உள்ளங்கையை தன் உள்ளங்கைக்குள் வைத்து மென்மையாய் அழுத்தியபடியே இருந்தாள். அது தன்னுடைய வலியை, துயரத்தை அவள் தனக்குள் வாங்கிக் கொள்வதை போல் இருப்பதாய் உணர்ந்த அகிலன் தன் முகத்தை அவளின் மடியில் புதைத்த படி பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தான். இப்போதைய மனநிலையில் அது அவனுக்கு அவசியம் என்பதை அவளும் உணர்ந்திருந்ததால் அவனை அழ விட்ட படியே தன்னுடைய நேசிப்பை, புரிதலை, அன்பை, காதலை அவனின் தலையை தன் விரல்களால் வருடிக்கொடுத்து அவனுக்குள் செலுத்திக் கொண்டிருந்தாள்.

– தமிழ்முரசு நாளிதழ் (சிங்கப்பூர்)

Print Friendly, PDF & Email

ஆதர்ச மனைவி(?)

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

அச்சமில்லை

கதையாசிரியர்:
கதைப்பதிவு: March 25, 2023

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *