கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: அறிவியல்  
கதைப்பதிவு: January 2, 2022
பார்வையிட்டோர்: 65,745 
 
 

ஒட்டுமொத்தமனித குலத்தின் பொது எதிரி எது என்ற கேள்விக்கு உங்கள் பதில் என்னவாகஇருக்கும்? உங்கள் நூற்றாண்டில் இதற்கு நூற்றுக்கும் மேற்பட்ட பதில்கள்கிடைத்திருக்கும்.

தீவிரவாதம், போர், மதக்கலவரம், கேன்சர், கொரோனா, புவி வெப்பமயமாதல், பசி, பஞ்சம், இயற்கைச் சீற்றம் என்று உங்கள் லிஸ்ட் நீள்கிறது. மனித குலத்தின் பொது எதிரி தேர்வுப் பட்டியலில் எங்கள் நூற்றாண்டில் நாங்கள் எல்லோரும் முதலிடம் பெறும் என்று நம்பியிருந்தது பிளிசன்ட் (Bliss-end) என்ற மீளா நித்திரைக்குக் கொண்டு செல்லும் அதிபயங்கர போதை வஸ்து.

‘நொடிகளாகும் யுகம்… சாகும்போதும் சுகம்…’ முதல் வரியை மீண்டும் படியுங்கள். ஆச்சரியமாக இது நொடிகள் யுகமாகும் என்றும் யுகம் நொடிகள் ஆகும் என்றும் இரண்டு விதத்திலும் பொருள் தரும்படி இருக்கும். பிளிசன்ட் போதை மருந்து பற்றிய இந்தப் பிரபலமான இரண்டு வரி தமிழ்க் கவிதையை எழுதிய கவிதாவிலாசன் இளைஞர்களை போதை மாத்திரை வழி செல்லத் தூண்டிய வழக்கில் பல காலம் தேடப்பட்டு, பிறகு நிரந்தரமாகக் காணாமல் போனார். சிலர் அவர் அந்த மருந்தை உட்கொண்டு சாகும் முன் எழுதிய கடைசிக் கவிதை இது என்றும் சொல்கிறார்கள். அரசின் கடுமையான சட்டதிட்டங்கள் மற்றும் மரணதண்டனை காரணமாக இதன் உற்பத்தி தடைசெய்யப்பட்டு, இது இப்போது ஓடி ஒளிந்து இருண்ட இணையவெளியில் செயல்படுகிறது என்கிறார்கள். ‘உங்கள் மேலான கவனத்திற்கு மற்றும் பாதுகாப்பு கருதி ஒரு எச்சரிக்கை…’ மேற்சொன்ன கவிதையைப் பகிர்வதோ அதுகுறித்துப் பேசுவதோ எங்கள் நூற்றாண்டில் கடுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால் ஆச்சரியமாக நாங்கள் வடிவமைத்த தேர்வுப் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றது கொசு. பல நூற்றாண்டுகளாக ஒழிக்கப்படாத ஒரு எதிரியாகக் கொசு இப்போதும் இருக்கிறது. நினைத்துப்பார்க்க முடியாத அளவு பலமடங்கு பெருகிய கொசு இனத்தால் உண்டாகும் பல்வேறு வியாதிகளை நாங்கள் முற்றிலும் ஒழித்து விட்டாலும், தாங்கமுடியாத கொசுக்கடி, கொசுவின் ரீங்காரம் போன்ற தொந்தரவுகளை மனிதகுலம் சகித்துக்கொள்ள வேண்டியதாக ஆகிவிட்டது. முழுமையாகக் கொசுக் கடியிலிருந்து தப்பிக்க வழியில்லை என்றாகிவிட்டதே நிதர்சனம்.

நான் ரித்திகேஸ்வரன். இந்த 25-ம் நூற்றாண்டின், கொசு இனத்தை ஒழிக்கப் பாடுபடும் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகளில் முதன்மையான ஒரு தமிழ் பேசும் மரபணு விஞ்ஞானி. கொசுக்களை ஒழிக்க மனிதகுலம் எடுத்துக்கொண்ட முயற்சிகளின் தரவுகள் அனைத்தும் 15-ம் நூற்றாண்டிலிருந்து என்னிடம் உள்ளன. ஆரம்பத்தில் எண்ணெய்ப் பூச்சு, புகை இடுதல், ரசாயனம் தடவிய கொசு விரட்டி அட்டைகள், உடலில் தடவும் ரசாயனப் பூச்சு மற்றும் சிறு கொசு ஒழிப்பான் உபகரணங்கள். இருபத்திரண்டாம் நூற்றாண்டில் உருவான ஒரு உபகரணம் மிகவும் பிரபலமானது மட்டுமல்லாமல் என்னை மிகவும் கவர்ந்த வடிவமைப்பு கொண்டது.

பொதுவாக முட்டையிடத் தேவையான புரதம் வேண்டி நம்மைக் கடித்து ரத்தம் உறிஞ்சுவது பெண் கொசுக்களே… இந்தக் குறிப்பிட்ட கொசு ஒழிப்பான், பாலூட்டிகளின் இயல்பான ஈரப்பதம், கார்பன் டை ஆக்சைடு வெளித் தள்ளும் மூச்சுக் காற்று, வெப்பம் அனைத்தையும் போலியாகப் பிரதிபலித்துக் கொசுக்களை ஈர்த்துக் கொன்று விடும்.

கடைசியாக இருபத்து நான்காம் நூற்றாண்டு ஆரம்பத்தில் உருவான கொசு அழிப்பான்தான் இன்றுவரை உபயோகத்தில் இருக்கும் ஒரு பிரபலமான, வெற்றிகரமான சாதனம். கண்ணுக்குத் தெரியாத நுண்ணிய லேசர் கற்றைகளை அறை முழுவதும் வெளியிட்டு குறிப்பிட்ட அளவு எடை மற்றும் பரிமாணத்துக்கும் குறைவான பூச்சிகள், கொசுக்களைக் கண்டறிந்து சுட்டு வீழ்த்திவிடும்.

சூரியன் வெளியிடும் புற ஊதாக் கதிர்களின் வீச்சு அதிகமாகி பூமியைப் பாதுகாக்கும் ஓசோன் திரை மிகவும் மோசமான பாதிப்பை அடைந்ததால் செயற்கை ஓசோன் திரைகளை உலகம் முழுவதும் வானில் ஆங்காங்கே அமைத்தது ஒன்றிணைந்த உலக அரசு. ஓசோன் திரைகள் வானில் தோன்றும் இரவுகளில் அதன் முழுமையான பயன் பெற வேண்டி குறைவான ஆடைகளுடன் திறந்த வெளிகளில் உறங்குவது மக்களின் வழக்கமானது. ஆனால் இது கொசுக்களுக்கு நல்ல வேட்டை என்றாகிவிட்டது. கொசுக்களால் பரவி வந்த மலேரியா, டெங்கு, ஜிக்கா, சிக்குன்குன்யா மற்றும் 24-ம் நூற்றாண்டில் தோன்றிய கொடிய அரேமிடா… இவற்றை எல்லாம்கூட ஒழித்தாகிவிட்டது. ஆனால், இந்தக் கொசுக்கடி மற்றும் அவற்றின் காதுகளைத் துளைக்கும் பாட்டு… இதைத் தாங்க முடியாத மக்களின் கோப வெளிப்பாடுதான் கொசுக்களுக்குக் கிடைத்த இந்தப் பொது எதிரிப் பட்டம். ஆச்சரியமாக கொசு இனம் காலங்களைக் கடந்து தங்கள் எதிர்ப்புத் திறன் மற்றும் இயைந்து வாழும் இயல்பு மூலம் இன்று வரை அபரிமிதமான பரிணாம வளர்ச்சியைப் பெற்று நம்மைத் திணறடிக்கிறது.

நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டிருந்த என்னுடைய ஆராய்ச்சியில் ஒரு நாள் திடீரென்று ஒரு திருப்பம் ஏற்பட்டது. பழைய நூற்றாண்டு இலக்கியங்களில் விருப்பம் கொண்ட நான் ஒரு நாள் படித்த ஒரு கதையில், ஜெர்மனியில் ஒரு நகரில் எலித்தொல்லை அதிகமாகி விடவே, அதை ஒழிக்கிறேன் என்று ஒரு குழலூதும் நாடோடி சொல்கிறான். சொன்னதுபோலவே குழல் ஊதிக்கொண்டே அத்தனை எலிகளையும் வரவைத்து ஒன்றிணைத்துக் கொண்டுபோய் மலை முகட்டிலிருந்து கீழே தள்ளிவிடுகிறான். பைடு பைப்பர் ஆஃப் ஹாமலின் எனும் இந்தக் கதை என் ஆராய்ச்சியை வேறு ஒரு பாதையில் மாற்றியது. அதன் விளைவாக கொசுக்கள் இனப்பெருக்க நேரத்தில் வெளியிடும் துல்லியமான ரீங்காரம் மற்றும் இறக்கைகளின் படபடப்பு போன்ற நுண்ணிய பல விஷயங்களை ஆராய்ந்து அவற்றை இணைத்து ஒலிக்கற்றையாக உருமாற்றும் திட்டத்தில் எனக்குக் கிட்டத்தட்ட வெற்றியும் கிடைத்தது. இந்த ஒன்றிணைந்த ஒலிக்கற்றைகளை ஒரு உபகரணம் மூலமாக வெளியிட்டு மில்லியன் கணக்கில் கொசுக்களை ஒரே இடத்திற்கு ஈர்த்துக் கொல்ல முடியும் என்பதே இந்த ஆராய்ச்சியின் மையக் கருத்து.

ஆராய்ச்சிகள் நடப்பது மிகவும் ரகசியமாக என் வீட்டில் உள்ள சோதனைச்சாலையில். இங்கு என்னைத் தவிர, என்னுடைய உதவியாளனாக ஒரு ஜப்பானிய கணினி விற்பன்னன் அகிரா தகசாகி மட்டுமே. அவனை நியமிக்க முக்கிய காரணங்கள்: அவனுக்கு விஞ்ஞானம் பிடிபடாது, ஜப்பானிய மொழியைத் தவிர வேறு மொழி எதுவும் தெரியாது, கணினி வடிவமைப்பில் திறமைசாலி, நேரம் பார்க்காத உழைப்பாளி. எந்த விதத்திலும் என்னுடைய சோதனைகளில் குறுக்கிட மாட்டான். என் சோதனைச்சாலையில் வெளியாகும் ஆராய்ச்சி மாதிரி முடிவுகளைப் பழங்கால முறையில் தட்டச்சு செய்து கணினியில் ஏற்றுவதற்காக எந்த ஒரு கட்டமைப்புக்குள்ளும் வராத தனித்தியங்கும் ஒரு கணினி அவனால் வடிவமைக்கப்பட்டது. அதை இயக்கும் 28 இலக்க கடவுச்சொல் இருப்பது என் மண்டைக்குள் மட்டுமே. மேலும், எந்தவித மின்னணுத் தொடர்புகளும் தொலைபேசி சாதனங்களும் இல்லாத ஒரு கட்டமைப்பை என் சோதனைச்சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் அவன் உருவாக்கியிருந்தான். பாதுகாப்பு மற்றும் ரகசியம் கருதி, கண்காணிப்புக் கேமராக்கள்கூட அமைக்கப்பட வில்லை. சுற்றிலும் எலக்ட்ரானிக் அல்லாத வெறும் உலோகங்களால் ஆன பாதுகாப்பு வளையம் மட்டுமே. காரணம், நான் மேற்கொண்ட இந்தச் சோதனைகள் குறித்த விவரங்கள் நானே வெளியிடும் முன் வெளியுலகுக்குக் கசியுமானால் கடும் விளைவுகள் நேரிடலாம்.

இன்று மாலை நான் மேற்கொண்ட சோதனை ஓட்டங்களில் ஒன்றின் ஒலிக்கற்றைகளின் வீச்சு, என் அதிகபட்ச இலக்கான ஐந்நூறு மைல்களைத் தாண்டி இருந்தது. இதயம் படபடக்க உதவியாளன் அகிராவை இன்றும் நாளையும் அவசர விடுப்பு எடுக்கச் சொல்லி அவனது தங்கும் விடுதிக்குத் திரும்புமாறு கட்டளையிட்டேன். அவன் சென்றதும் உடனடியாக அந்தச் சோதனை ஓட்டத்தின் தரவுகளைக் கணினியைத் திறந்து நடுங்கும் கைகளால் பதிவு செய்தேன். இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்சென்று உலகளாவிய விஞ்ஞானிகள் குழுவில் சமர்ப்பிப்பது குறித்து மனதிற்குள் ஒரு சிறிய திட்ட வரைவு ஒன்று உருவாக்கினேன். என் கண் முன்னே ‘உலகம் போற்றும் மாந்தர்’ விருது பெறும் காட்சி விர்ச்சுவல் திரைபோலக் கற்பனையில் விரிந்தது.

நீண்ட காலம் கழித்து முதன்முறையாக சோதனைச்சாலையில் ஓரத்திலிருந்த அலமாரி ஒன்றைத் திறந்து அதிலிருந்து அல்டிமேட்டா 38 எனும் பழைமையான விலையுயர்ந்த ஸ்காட்ச் விஸ்கியை வெளியே எடுத்தேன்.

இரவு உணவை முடித்தபோது கிட்டத்தட்ட 11 மணி என்று நினைக்கிறேன். வாயிலின் வெளியே உள்ள வரவேற்பறையில் ஏதோ அரவம் கேட்டது. அகிரா வெளியே சென்றதும் கண்டிப்பாக வெளியே உள்ள பாதுகாப்புக் கதவுகளை மூடியிருப்பான். கண்டிப்பாக ஒரு சிறு பூச்சிகூட உள்ளே வரமுடியாது. என்ன சத்தம் இது என்று வெளியே வந்த எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. சுமார் அறுபது வயது மதிக்கத்தக்க ஒரு நபர், நரைத்த தலையும் தாடியுமாக ஒரு வினோதமான கருநீலநிற உடை அணிந்துகொண்டு வரவேற்பறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்திருந்தார்.

“யார் நீங்கள், எப்படி உள்ளே நுழைந்தீர்கள்?”

வந்திருந்த அந்த நபர் எந்தவிதப் பதற்றமும் இல்லாமல் மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலிலிருந்து ஒரு மிடறு தண்ணீரைக் குடித்துவிட்டு, தமிழில் பேசினார். “அகிரா தகசாகி வெளியே போகும்போது பதற்றத்தில் வெளிப்புற வாயில்களின் மூடும் விசைகளை முடுக்க மறந்துவிட்டான் போலும்.”

அதிர்ச்சியிலிருந்து மீளாத நான் “அகிரா… உங்களுக்கு எப்படி அவனைத் தெரியும்?” என்று வினவினேன்.

“அதை விடுங்கள். உடனே உங்கள் ஆராய்ச்சித் தரவுகளை முற்றிலுமாக அழித்துவிடுங்கள்” என்றார் அந்த அந்நியர்.

“என்ன உளறுகிறீர்கள், என்ன ஆராய்ச்சி, உங்களுக்கு என்ன தெரியும்? எப்படித் தெரியும் அது குறித்து?”

“கொசுக்களை முற்றிலும் அழிக்கக் கூடிய உங்கள் ஆராய்ச்சி முடிவுகள் பற்றி அனைத்தும் எனக்குத் தெரியும்.”

ஆராய்ச்சி மாதிரிகளின் மொத்த எண்ணிக்கை மற்றும் கடைசியாக என்னுடைய சோதனை முடிவில் வந்த உபகரண அலைவரிசையின் வீச்சு அளவு குறித்த விவரங்களைப் படபடவென்று துல்லியமாகக் கூறினார் அந்நியர்.

“உங்களுக்கு இந்த விவரங்கள் எல்லாம் எப்படித் தெரியும்?” ஆச்சரியத்துடனும் அதிர்ச்சியுடனும் கேட்டேன்.

“அது இப்போது தேவையில்லாத ஒரு விஷயம். நான் வேண்டிக் கொள்வதெல்லாம், இந்த ஆராய்ச்சி முடிவுகளை இப்போதே உடனடியாக அழித்துவிடுங்கள் என்பதே.”

“மன்னிக்கவும். நீங்கள் சொல்வது புரியவில்லை.”

“நான் மன்னிப்பது இருக்கட்டும். இந்த ஆராய்ச்சி முடிவை நீங்கள் வெளியிட்டால் ஒட்டுமொத்த மனிதகுலம் முன்பு நீங்கள் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாலும் கிடைக்காது என்பதே நிதர்சனம். நான் சொல்லப்போவதைப் பொறுமையாகவும் கொஞ்சம் நம்பிக்கையுடனும் கேட்டால் உங்களுக்கு எல்லாம் விளங்கும்.”

“பொறுமையாக வேண்டுமானாலும் கேட்கிறேன். ஆனால் அதை நான் நம்புவேன் என்பது நிச்சயம் நடக்காது. உண்மையில் நீங்கள் யார்? கொசுக்களுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறீர்கள்? நீங்கள் என்ன, முன்பிறவியில் கொசுவாக இருந்தீர்களா? கொசு மனித குல பொது எதிரியாகத் தெரிவு செய்யப்பட்ட விஷயம் உங்களுக்குத் தெரியாதா?” என்று கோபமாகக் கேட்டேன்.

“கொசுக்களினால் உண்டாகும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு ஏற்கெனவே இருக்கிறது அல்லவா? பிறகு கொசுக்கடி மற்றும் அதன் ரீங்காரம் போன்ற சின்ன சிரமங்கள்… இவற்றுக்கும் வித விதமான உபகரணங்கள் உண்டே!

மேலும், என்னுடைய முற்பிறவிகள் குறித்து இப்போது பேச நேரமில்லை. இந்த ஆராய்ச்சியின் காரணமாக இந்த நூற்றாண்டில் நீங்கள் கொசுக்களை முற்றிலும் அழித்துவிடலாம். ஆனால் அதன் எதிர்விளைவு என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? எதிர்காலத்தில் மனித குலத்தை நிரந்தரமாக அழிக்கப்போகிறது உங்கள் ஆராய்ச்சி.”

“கொசுக்களை அழித்தால் மனிதகுலம் மறைந்துவிடுமா… இது என்ன புதுக் கதை?” என்றேன் கிண்டலாக.

“கதையல்ல. நடக்கப்போகும் உண்மை நிகழ்வுகளைச் சுருக்கமாகச் சொல்கிறேன், கேளுங்கள். இன்றைக்கு சுமார் 400 வருடங்கள் கழித்து நடைபெறும் ஒரு போரில் ஒரு நாடு தவறுதலாக எய்த ஒரு ஏவுகணையின் விளைவாக ஒட்டுமொத்த மனித குலம் பூண்டோடு அழியப் போகிறது. அது அணு ஆயுதம் அல்ல. அதைவிடப் பல மடங்கு சக்தி வாய்ந்தது. உங்களுக்கு இப்போது சொன்னால் விளங்காத ஒரு புதிய தொழில்நுட்பம். இதனால் விலங்குகள், தாவரங்கள், மற்ற ஜீவராசிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே ஒரு அதிசயம். அதிர்ஷ்டவசமாக தொழில்நுட்பம் முன்னேறி விண்வெளியில் மிகப்பெரிய சாதனை நடந்துகொண்டிருந்த கால கட்டம் அது. செவ்வாய்க் கிரகத்தில் முன்னரே குடியேறிய நம் அறிவார்ந்த சமூகம் அங்கு ஏற்பட்ட தட்பவெப்பநிலை நெருக்கடியால் மீண்டும் பூமிக்குத் திரும்ப வருகிறார்கள். இங்கு மனிதகுலம் ஒட்டுமொத்தமாக அழிந்ததை அறிந்து மனம் உடைந்துபோய் உலகை மீண்டும் புனரமைக்க முயற்சி செய்கிறார்கள். காலம் கழிந்து அவர்களுக்கு ஒன்று புரிகிறது. ஏவுகணை வீச்சில் காற்றில் ஏற்பட்ட ஒரு வேதிநிலை மாற்றம் காரணமாக செவ்வாய்க் கிரகத்தில் இருந்து பூமியில் மீண்டும் குடியேறிய மனிதர்களின் உடலில் இனப்பெருக்கத்திறன் முற்றிலும் தடையானது என்று. இப்போதைக்கு காற்றில் உண்டான வேதிவினையைச் சரிசெய்ய பல ஆண்டுகள் ஆகலாம். ஆனால் அதுவரை புதிய மனிதம் தழைக்கப்போவதில்லை. இப்போது மீதம் உள்ள மனித இனமும் அழிந்துவிட வேண்டியதுதான். இதற்கு ஒரே வழி, ஏவுகணைத் தாக்குதலுக்கு முன் இருந்த குறிப்பிட்ட குரோமோசோம் கொண்ட மனித ரத்தம் தேவை. இந்தக் காலகட்டத்தில் ஒரு இளம் இந்திய மரபணு விஞ்ஞானிக்குத் திடீரென்று ஏற்பட்ட ஒரு யோசனையின் பலனாக அவன் ஒரு சிறிய குழுவுடன் லட்சக்கணக்கான ராணுவ வீரர்கள் முன்பு வசித்துவந்த சைபீரிய வனப்பகுதிக்குச் செல்கிறான். உலக அழிவுக்கு முன் கொசுக்கள் அதிகமாகத் தேங்கி இருந்த அந்தப் பகுதிகளில் பல நாள்கள் வசித்து, கடும் சிரமத்திற்குப் பின் உறைபனியில் சிக்கி உறைந்திருந்த பெண் கொசுக்களை மீட்டெடுத்து, அவற்றின் உடலில் இருந்த மனித ரத்தத்திலிருந்து இனப்பெருக்க ஜீன்களை வெற்றிகரமாகப் பிரித்தெடுக்கிறான்.”

இந்த இடத்தில் கதையைக் கொஞ்சம் நிறுத்தி, என் கண்களை ஆழமாக ஊடுருவிப் பார்த்தார் அவர்.

எனக்கு அவர் சொன்னது ஏதோ பழங்கால ஹாலிவுட் படங்களில் வரும் கதைபோல் இருந்தது. ஏதோ ஒரு கதையில் கொசுக்களின் ரத்தத்திலிருந்து ஜீனைப் பிரித்தெடுத்து டைனோசர்களை உருவாக்குவார் ஒரு விஞ்ஞானி. கிட்டத்தட்ட அதே கதை. ஆனால் அவர் சொன்ன கதையில் இருந்த லாஜிக் என்னையே ஆச்சரியப்படுத்தியது என்பதுதான் உண்மை.

“இதனால் நீங்கள் சொல்ல வருவது, இப்போது கொசுக்களை ஒழித்துவிட்டால் எதிர்கால விஞ்ஞானிக்குப் புதிய மனிதனை உருவாக்கத் தேவையான ஜீன் கிடைக்காது என்கிறீர்கள், அது தானே?”

“அதுவே!”

“நீங்கள் சொல்வது கேட்க நல்ல கதையாக இருந்தாலும் நான் ஏன் அதை நம்ப வேண்டும். நீங்கள் என்ன முற்றும் உணர்ந்த ஞானியா? முக்காலம் அறிந்த தீர்க்கதரிசியா? இல்லை, ஏதேனும் ஜோதிடரா?”

அவர் தலையை மேலும் கீழுமாக அசைத்து அவரது கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்த துணிப்பட்டையைத் தளர்த்தினார். இப்போதுதான் அவர் கழுத்திலிருந்து சட்டைக்கு நீளமாகத் தொங்கும் அந்தப் பழுப்புநிறத் துணிப்பட்டையைக் கவனித்தேன். இருபத்துமூன்றாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் வழக்கொழிந்துபோன டை என்று அழைக்கப்படும் ஆண்களின் ஆடை அணிகலன் அது. அதை முழுவதுமாக அவிழ்த்துத் தன் இடது கையில் சுருட்டி வைத்துக்கொண்டு மீண்டும் பேசத் தொடங்கினார்.

“நான் யாராக இருக்கக் கூடும் என்று நீங்கள் பின்னர் ஒருநாள் அறிவீர்கள். தற்சமயம் நான் சொல்வதை நீங்கள் கண்டிப்பாக நம்பித்தான் ஆக வேண்டும். வேறு வழியில்லை. உங்களிடம் தெரிவுசெய்ய இரண்டு விஷயங்கள் உண்டு. ஒன்று, கொசுக்களை முற்றிலும் ஒழித்து ‘உலகம் போற்றும் மாந்தர்’ பரிசு பெறுவது. அல்லது, அதைக் கைவிட்டு, நான் சொன்னதுபோல் அழிந்த மனித குலம் மீண்டும் உருவாக ஒரு காரணமாக இருப்பது. தேர்வு உங்களிடமே.”

பதிலேதும் கூறாமல் குழப்பமாக நின்று கொண்டிருந்த என்னைப் பார்த்துச் சிரித்துவிட்டு அந்த அந்நியர் சொன்னார்.

“இன்னொரு முக்கியமான விஷயம். மனித குலம் தழைக்க வேண்டி உறைபனிக் கொசுவில் இருந்து மனித இனப்பெருக்க ஜீனைப் பிரித்தெடுக்கும் எதிர்கால விஞ்ஞானியின் பெயர் ரத்னசாகரன்.”

“தமிழரா?”

“ஆமாம். அதுமட்டுமல்ல, அவர் உங்கள் வழித்தோன்றல். ரத்த பந்தம். சரியாகச் சொல்வதானால், உங்களது மகா மகா கொள்ளுப் பேரன்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பும்போது மீண்டும் திரும்பிப் பார்த்து,

“உலகம் அழியப்போகும் வருடம் 2937. அதைக் கொஞ்சம் நினைவுகொள்ளுங்கள்” என்றார்.

“அதனால் என்ன?”

“அப்புறம் என் வயது 158” என்று சொல்லிவிட்டு, சிரித்தபடியே வெளியேறினார்.

வாயில்களை மூடும் விசையைத் தட்டிவிட்டு உள்ளே நாற்காலியில் மீண்டும் அமர, குளிரூட்டப்பட்ட அறையிலும் என் முகத்தில் வியர்வை அரும்புவதை உணர்ந்தேன். உடனே கணினிக்குச் சென்று என்னுடைய தரவுகள் பத்திரமாக உள்ளதா என்று பார்க்கத் தோன்றியது.

கணினியைத் தொடக்கத் தேவையான கடவுச்சொல்லான இருபத்தெட்டு இலக்க எண்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்ந்து பதிவிடத் தொடங்கினேன்.

2… 9… 3… 7… இந்த எண்களை எங்கேயோ கேட்டதுபோல்… ஆங்… இதுவல்லவா அந்த அந்நியர் சொன்ன உலகம் அழியப்போகும் வருடம். இதையா தொடக்க எண்களாக என் கடவுச்சொல்லில் வைத்திருக்கிறேன். மீதமுள்ள எண்களைப் பதிவிட்டுக்கொண்டிருந்தபோது எனக்கு இன்னொரு அதிர்ச்சி கடைசியில் காத்திருந்தது. கடவுச்சொல்லின் கடைசி மூன்று இலக்கங்கள் 1… 5… 8… இதைத்தானேஅந்த நபர் தனது வயது என்று சொல்லிவிட்டுப் போனார். இப்போது என் இதயம் வேகமாகத் துடிப்பதை என்னால் உணர முடிந்தது.

ஒருவேளை அந்த நபர் உண்மையிலேயே ஒரு தீர்க்கதரிசியா? அவர் கூறுவது ஒருவேளை உண்மையாக இருந்தால் நான் மனித குலத்தைக் கெடுக்க வந்த ஒரு கோடாரிக்காம்பாக அல்லவா இருப்பேன். என்னை காலம் மன்னிக்குமா? கொசுக்களை ஒழிப்பதைவிட மனிதகுலத்தைப் பூண்டோடு ஒழிப்பதில் அல்லவா என்னுடைய பங்கு பெரிதாக இருந்துவிடும். என் வழி தோன்றிய ரத்னசாகரன் முயற்சி தோல்வியில் அல்லவா முடியும்?

இதற்குமேல் யோசிக்க எதுவும் இல்லை. கணினியில் அவசரம் என்று குறியிட்ட பகுதிக்குச் சென்றேன். அங்கு ‘அனைத்தையும் அழித்துவிடு’ என்ற கட்டளையின் மேல் கர்சரை வைத்துத் தேர்வினேன். ‘அனைத்தையும் அழித்துவிடவா?’ கணினி கேட்டது. ‘ஆம்’ என்று தட்டச்சு செய்தேன். கட்டளைக்கேற்ப கணினி அனைத்துத் தரவுகளையும் அழித்ததோடு மட்டுமல்லாமல், அதன் நினைவுப் பகுதிகள் மற்றும் சேமிப்புப் பகுதிகளிலுள்ள சிப்களை முற்றிலுமாக எரித்து விட, அதனால் உண்டான ஒரு புகை நெடியை உணர முடிந்தது.

சோதனைச்சாலைக்குச் சென்று அங்கிருந்த அல்டிமா இன்னும் இரண்டு லார்ஜ் ஒரே மடக்கில் குடித்துவிட்டு உறங்கப் போனேன். எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியாது. வாயில்மணியின் ரீங்காரம் கேட்டு எழுந்து கடிகாரத்தைப் பார்த்தால் மணி ஏழரை. வாசலில் அகிரா நின்றுகொண்டிருந்தான். அகிரா ஜப்பானிய மொழியில் “கொமேன், ஹைஉதே யோய் திஷ்கா” என்றான்.

நான் என் காதுகளில் மைக்ரோ ஹேர்பீஸ் செருகி விட “ஐயா, மன்னிக்கவும். நான் உள்ளே வரலாமா” என்று தமிழில் மொழிபெயர்த்துச் சொன்னது.

“அகிரா, இந்த நேரத்தில் இங்கு என்ன செய்கிறாய்… உன்னை இன்று வரவேண்டாம் என்று அல்லவா சொல்லியிருந்தேன்” என்று வினவினேன். கதவைத் திறந்து விட உள்ளே நுழைந்து மீண்டும் “மன்னிக்கவும்” என்றான்.

“சரி, என்ன விஷயம் சொல்!”

“நேற்று இங்கு நான் அமர்ந்திருந்தபோது என்னிடமிருந்த ஒரு பழங்காலத்து ‘டை’ என்று சொல்லப்படும் அணிகலன் ஒன்றை மேஜையின் மீது விட்டுச் சென்றுவிட்டேன். அதை எடுத்துச் செல்ல வந்தேன்.”

“என்ன?”

“இதோ இங்கிருக்கிறது” என்று நாற்காலியின் மீது இருந்த அந்தப் பழுப்புநிற டையை அகிரா சுட்டிக்காட்டினான். ஒன்றும் பேச முடியாமல் நான் அதிர்ச்சியில் உறைந்தேன்.

“என்ன சொல்கிறாய், இது உன்னுடையதா?”

“ஆமாம். உங்களுக்குத்தான் தெரியுமே, எனக்குப் பழங்காலத்துப் பொருள்களைச் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்கு என்று. அப்படி கிடைக்கப்பெற்றதுதான் இது. இருபதாம் நூற்றாண்டின் ஒரு அரிய ஆடை அணிகலன் இது” என்று சொல்லிக்கொண்டே அதை எடுத்துக்கொண்டு “நன்றி, வேறு ஒன்றும் இல்லையே” என்று கேட்டுவிட்டுக் கிளம்பினான்.

என்ன நடக்கிறது? நேற்று இரவு நடந்ததெல்லாம் உண்மை இல்லையா? இந்த டை அகிரா கொண்டு வந்தது என்றால் நேற்று இதை அணிந்து வந்த நபர் உண்மையிலேயே இங்கு வரவில்லையா? இதெல்லாம் ஒருவேளை வெறும் பிரமையா அல்லது அல்டிமா ஸ்காட்ச் விளைவாக வந்த கனவா? இவ்வளவு துல்லியமாக பிரமையோ கனவோ இருக்க முடியுமா?

கணினியின் அருகில் சென்று பார்த்தபோது திரையில் ‘அனைத்தும் அழிக்கப்பட்டது’ என்ற வார்த்தைகள் ஒளிர்ந்து மின்னிக்கொண்டிருந்தன. எது உண்மை? ஒன்றும் புரியவில்லை. நேற்றிரவு வந்தது யார்? அந்த அமானுஷ்யமான மனிதர் எதிர்காலத்திலிருந்து வந்தவரா, அல்லது இறந்த காலத்திலிருந்தா? ஒருவேளை கடவுளோ! கண்காணிப்புக் கேமராக்கள் ஒன்றும் இல்லாத நிலையில் என்னால் எதையும் உறுதிபடச் சொல்ல முடியவில்லை. நேற்று அந்த அந்நியர் இங்கே இருந்ததை என்னால் நிரூபிக்க முடியுமா?

ஒரு மனிதர் ஒரு இடத்தில் இருக்கும்போது அவரிடமிருந்து வெளியேறும் மூச்சுக்காற்று, பேசிய வார்த்தைகளின் ஒலி அலைகள், தெறிக்கும் நுண்ணிய எச்சில் திவலைகளின் ஈரப்பதம், உடலிலிருந்து வெளியேறும் கோடிக்கணக்கான இறந்த செல்களின் தூசி அறையெங்கும் வியாபித்திருக்கும். இவற்றையெல்லாம் வைத்து குறிப்பிட்ட ஒருவர் ஒரு இடத்தில் இருந்திருக்க முடியும் என்று நிரூபிக்க முடியாதா? என்னுடைய இந்த எண்ண ஓட்டம் என்னைக் கூடிய விரைவில் அடுத்த ஆராய்ச்சிக்கு உந்தியது. அதன் விளைவாக நான் கண்டுபிடித்த ஒரு உபகரணம் தான் ‘அலிபியேட்டர்.’ இதன்மூலமாக தடய அறிவியல், அரசு மற்றும் காவல்துறையினர் வசம் தேங்கியிருந்த பலவித வழக்குகளின் மர்ம முடிச்சுகளை எளிதாக அவிழ்க்க முடிந்ததால் எனக்கு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் ‘உலகம் போற்றும் மாந்தர் விருது’ கிடைத்துவிட்டது என்பது வேறு ஒரு கதை.

– 03.11.2021

Print Friendly, PDF & Email

1 thought on “பொது எதிரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *