பொங்கல் கொண்டாட வந்திருக்காக!!!

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 23, 2013
பார்வையிட்டோர்: 12,808 
 
 

சாம்பல் வண்ண புத்தம் புது மார்க் டூ அம்பாசடர் கார் கீழப் பாலத்தில் வருவது தெரிந்தது. அதன் மேலே சாமான்கள் வைக்கும் கேரியரில் சில ட்ரங்க் பெட்டிகள் வைத்து விழாமல் நன்கு கட்டப் பட்டிருந்தது. வலதுபக்கம் திரும்பியவுடன் சாலையில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு கார் ஊருக்குள் நுழைந்தது. மரத்தடியில் கோலிகுண்டு விளையாடிய சிறுவர்கள் ஆரவாரம் செய்த வண்ணம் அதனைத் தொடர்ந்து ஓடத் தொடங்கினர். அந்த சிறிய ஊருக்கு எப்பொழுதாவதுதான் நகரில் இருந்து வண்டிகள் வரும். வண்டி மரகதத்தின் மச்சு வீட்டின் முன் வந்து நின்றது. கார் சப்தம் கேட்டு சில வீடுகளின் உள்ளிருந்து ஆட்கள் வெளியே வந்து எட்டிப் பார்த்தனர்.

சாலையின் எதிர்புறத்தில் வந்து கொண்திருந்த தமிழாசிரியர் தங்கமணி ஐயா காரருகில் வந்ததும் தனது மிதிவண்டியில் இருந்து கீழிறங்கினார். அதற்குள் வீட்டின் உள்ளிருந்து இரும்பு கம்பிக் கதவுகள் போட்ட கதவைத் திறந்து கொண்டு மரகதம் வெளியில் வந்தார். வாயெல்லாம் பல்லாக “வா, செல்வி வா, வா பொங்கலுக்கு நீ வந்தா நல்லாருக்குமே, புள்ளைங்களையும் பாக்கலாமே அப்படின்னு காத்தாலேதான் நினைச்சேன், மகராசி நீயே வந்திட்டே. வருவேன்னு ஒரு கடுதாசி கூடப் போடலையே” என்றவாறு காரில் இருந்த மருமகள் செல்வியை வரவேற்று அவள் கையில் இருந்த ஒரு வயது பேத்தியை வாங்கிக் கொண்டார்.

இரண்டு வயது பெரிய பேத்தி இறங்கி ஓடி வந்து “பாட்டி, பாட்டி எனக்குக் கரும்பு கொடுங்க பாட்டி” என்று மரகதத்தின் காலைக் கட்டிக் கொண்டாள். வழியில் பொங்கலுக்காக விற்பனையில் இருந்த கரும்புகளைப் பற்றி அம்மாவையும், சித்தியையும், மாமாவையும் கேள்விகளால் குடைந்து கொண்டே வந்தவளை பாட்டி வீட்டில் கரும்பு இருக்கிறது என்று அமைதிப் படுத்த வேண்டியிருந்தது. இறங்கியவுடன் பாட்டியிடம் விண்ணப்பம் வைத்தாள். “என் ராசாத்திக்கு இல்லாத கரும்பா?” என்று பாட்டி ஆசையுடன் குழந்தையின் கன்னத்தை வழித்து நெட்டி முறித்தார்.

“வாங்க தம்பி, வாம்மா சுந்தரி” என்று அடுத்து இறங்கிய செல்வியின் அண்ணனையும் தங்கையையும் வரவேற்றார் மரகதம். தங்கமணி வாத்தியாரை நோக்கி, “வாத்தியாரய்யா, மருமகளும் பேத்திகளும் பொங்கல் கொண்டாட வந்திருக்காக,” என்று மகிழ்ச்சிப் பொங்கக் கூறினார். தங்கமணி ஐயா செல்வியிடம், “வாம்மா, சுகமா? சித்திரவேலு சுகமா? படிப்பு எப்படி இருக்காம்? கடுதாசி போட்டானா?” என்று அக்கறையாகக் கேட்டார். அவர் தனது கணவரின் பள்ளி ஆசிரியர் என்பதனால் செல்வியும் மாணவி போலவே, “ஆமாங்க ஐயா, நல்லப் படிக்கிறாராம்”, என்றாள்.

“சரிம்மா நான் அப்புறம் பார்க்கிறேன், கடைவீதி வரைக்கும் போக வேண்டிய வேலை இருக்கு,” என்றபடி தங்கமணி ஐயா மிதிவண்டியைக் கிளப்பிச் சென்றார். வழியில் மூன்றாவது வீட்டின் திண்ணையில் உட்கார்ந்து கண்ணிற்கு மேல் கையை வைத்து கண்ணைக் குறுக்கி மச்சு வீட்டு விருந்தினரைப் பார்த்துக் கொண்டிருந்த சாயுபுவின் பாட்டியிடம், “பெரியம்மா, சித்திரவேலு சம்சாரமும் குழந்தைகளும் பொங்கலுக்கு வந்திருக்காங்க” என்ற பாட்டி கேட்கும் முன்பே தகவல் சொல்லியபடி விரைந்தார்.

மதிய விருந்திற்குப் பிறகு செல்வியின் அண்ணனும் தங்கையும் கிளம்பினார்கள். செல்வியின் தங்கையை அவள் மாமனார் வீட்டில் பொங்கலுக்கு கொண்டு சென்று விட வேண்டும். அவளது கணவரும் மேல் படிப்பிற்காகப் போயிருந்தார். திருமணமான புதுமணத் தம்பதிகள் அவர்கள். அக்கா ஊரிலிருக்கும் வரை தானும் பிறந்த வீட்டில் இருக்க விரும்புவதாகச் சொன்னவுடன் தடையேதும் சொல்லவில்லை அவள் கணவர்.

கிளம்பும் முன் அண்ணன் செல்வியிடம், “இரண்டு வாரம் கழித்து வந்து அழைசுக்கறேன், செல்வி” என்றார்.

“வேண்டாம் அண்ணே, அவர் படிப்பு முடிச்சு வரும் வரை இங்கேயே அத்தை கூட இருக்கப் போறேன்,” என்று இறுகியமுகத்துடன் செல்வி சொன்னாள்.

“மாப்பிள்ள வந்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்? என்னட்ட, மச்சான் செல்வியும் குழந்தைகளும் இங்கேயே இருக்கட்டும். அவள் பிறந்து வளர்ந்த வீடு இது. அவளுக்கு இங்கே இருக்கிறது வசதியா இருக்கும். அங்க சின்ன ஊருல செல்விக்கு என் அம்மாவைத் தவிர யாரையும் தெரியாது. குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாது போனா அவசரத்துக்கு மருத்துவ வசதி இல்ல. இங்க ஏகப்பட்ட பேர் இருக்கீங்க, சுந்தரியும் வந்திருக்கு, கல கலப்பா இருக்கும்னு சொன்னாரே செல்வி,” என்று கலங்கிய கண்களுடன் சொன்னார் அண்ணன்.

செல்வி பதிலேதும் சொல்லாமல் அமைதியாக தோளில் தூங்கிய குழந்தையைத் திண்ணையில் படுக்க வைத்தாள். இதற்கு மேல் பேச ஒன்றும் இல்லை என்பது போல இருந்தது அவள் செய்கை.

ஆனால் சுந்தரி முகத்தில் சிடுசிடுப்பு ஏறியது. அவள் சிறிது முன்கோபக்காரி, பட்டென்று மனதில் உள்ளதைப் பொரிந்து தள்ளிவிடும் குணம். “சரி, இதையே எத்தன தடவ சொல்லுவ, பொழுது சாயறதுக்குள்ள நானும் ஊர்ப் போய் சேரனும். கிளம்பு சொல்றேன். வரேன் அக்கா, குழந்தைகளைப் பார்த்துக்க. அத்தையப் பார்த்துக்க. நேரம்கிடைக்கிறப்ப எனக்கும் லெட்டர் போடு. டிரைவர் வண்டிய எடுங்க, விட்டா அண்ணன் பேசிக்கிட்டே இருக்கும். போயிட்டு வரேனுங்க அத்தை,” பட படவென்று பொரிந்து, மரகததிற்கும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு, சிடுசிடுப்பு மாறாமல் வண்டியில் ஏறிவிட்டாள். அண்ணனும் கண்ணைத் துடைத்துக் கொண்டு மரகதத்தை வணங்கி விட்டுக் கிளம்பினார். மரகதம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.

மரகதம், கார் தெருக்கோடியில் கண்ணைவிட்டு மறைந்ததும் பெருமூச்சு விட்டபடி திண்ணையிலேயே தூங்கிவிட்ட குழந்தைகள் அருகில் உட்கார்ந்த செல்வியைப் பார்த்தார். அவள் முகம் சுரத்தின்றி வெளுத்திருந்தது. கும்பகோணத்தில் வேலை பார்த்த தன் மகன் மைத்துனன் வீட்டில் தனது மனைவியையும் குழந்தைகளையும் விட்டு விட்டு மேற்படிப்பிற்கு சென்னை சென்ற பொழுது மரகதத்திற்கு அந்த முடிவு சரியாகவே பட்டது.

திருமணம் முடிந்த கையோடு அவர்கள் தனிக்குடித்தனம்தான் செய்தார்கள். மரகதத்தை அவர்களுடன் இருக்கக் கூப்பிட்ட பொழுது அவரும் ஒருவாரம் இருந்து பார்த்துவிட்டு திரும்பி தனது ஊருக்கே வந்து விட்டார். காலம் காலமாக இருந்த ஊர் உறவுகள் இல்லாமல் வாழ்வது அவருக்குத் தோதாக இல்லை. செல்வியும் பிறந்து வளர்ந்த இடம் பெரிய செல்வச் செழிப்புள்ள இடம். நவீன வசதிகள் அற்ற இந்த சிறிய ஊரிலுள்ள வீடும் சரிப்படாதுதான். மகன் எடுத்த முடிவு சரியே எனத் தோன்றியதால் அவரும் செல்வியை மகன் திரும்பி வரும் வரை இந்த சிறிய ஊரில் வந்து தன்னுடன் இருக்கச் சொல்லி வற்புறுத்தவில்லை.

இப்பொழுது நடந்த உரையாடல்களைப் பார்த்த பொழுது செல்வி பொங்கலுக்கு ஊருக்கு வந்ததற்கு பின்னால் வேறு ஏதோ காரணம், அண்ணனுடன் மனவருத்தம் இருப்பது மனிதர்களைப் படிக்கும் அனுபவம் உள்ள மரகதத்திற்குத் தெளிவாகப் புரிந்தது. அவரும் எதிர்த் திண்ணையில் அமர்ந்து கொண்டு வெற்றிலை போட்ட வண்ணம், “செல்வி என்னம்மா நடந்தது?” என்று கேட்டார். செல்வியும் அவர் எப்பொழுது கேட்பார் என்று காத்திருந்தவள் போல விசும்பிய வண்ணம் சொல்லத் தொடங்கினாள்.

செல்வியும் அவளது அண்ணனும் தங்கையும் சிறு வயதிலேயே தங்கள் அன்னையைப் பறிகொடுத்துவிட்டு தாயில்லாப் பிள்ளைகளாக வளர்ந்தவர்கள். அவள் அப்பா குழந்தைகள் நலன் கருதி பெரும் செல்வந்தராக இருந்தும் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அனைவரையும் உயர் கல்வி படிக்க வைத்தார். அண்ணனுக்கு படிப்பு முடிந்ததும் உள்ளூரிலேயே உறவில் ஒரு பெண்ணை மணமுடித்து வைத்து தனது குடும்ப வியாபாரத்தையும் அவரிடம் ஒப்படைத்திருந்தார். அண்ணனுக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்தது. சகோதரிகளுக்கு படிப்பு முடியவில்லை, அதனால் திருமணத்திற்கு சிலகாலம் இருந்தது. ஆனால் அதற்காக அப்பாவின் உடல் நலம் காத்திருக்கவில்லை. விரைவில் இரத்த அழுத்தம், மாரடைப்பு என ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி அவர் வாழ்வு முடிந்தது. மகனிடம் மகள்களின் திருமணப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டார். மகனும் திருமணங்களை செவ்வனே நடத்தி விட்டார்.

செல்வியின் கணவன் தனது மேற்படிப்பைக் காரணம் காட்டி இரண்டு குழந்தைகளுடன் செல்வியை அவளது தாய் வீட்டில் விட்டுச் சென்றார். புதிதாக திருமணமாகிய சுந்தரியின் கணவருக்கு இன்னமும் படிப்பு முடிந்திருக்கவில்லை. அவரும் கல்லூரியில் இருந்ததால் அக்கா ஊரில் இருக்கும் வரை தானும் உடன் இருப்பதாகச் சொல்லி சுந்தரியும் தாய் வீட்டில் தங்கி விட்டாள். மாமனார் மறைந்து, நாத்தனார்களும் திருமணமாகிச் சென்றவுடன் நிம்மதியாக இருந்த அண்ணிக்கு ஒவ்வொருவராக மீண்டும் வந்து சேர்ந்தது எரிச்சலை ஏற்படுத்தியது.

மாமனாரின் நிர்வாகப் பொறுப்பில் குடும்பம் இருந்த பொழுது பதவிசாக இருந்த அண்ணியின் குணத்தின் மற்றொரு பரிமாணத்தைக் காண ஆரம்பித்தனர் சகோதரிகள். அவர்கள் வளர்ந்த வீட்டிலேயே அன்னியர்களாகிப் போன உணர்வு அவர்களுக்கு ஏற்பட்டது. அண்ணி ஏதாவது சுடு சொல் கூறி வம்பிற்கு இழுக்கும் பொழுது செல்வி பொருட்படுத்த மாட்டாள். அவளுக்குப் பொறுமை அதிகம். ஆனால் சுந்தரியின் குணமோ வந்த சண்டையை ஒரு கை பார்த்துவிடும் குணம். அவளும் பதிலுக்கு இடக்காகப் பதில் சொல்லுவாள். நாளுக்கு நாள் விவாதம் வளர்ந்தது. அண்ணன் என்றும் அண்ணிக்குதான் ஆதரவு கொடுப்பார், நியாயம் யார் பக்கத்தில் இருக்கிறது என்ற கவலை அவருக்கு இல்லை. இதனால் அண்ணியின் அட்டகாசம் அதிகமாக, அதிகமாக சகோதரிகள் தினசரி வாழ்க்கையில் நிம்மதியை இழந்தனர். நாளொரு சண்டையும் பொழுதொரு விவாதமும் சூடு பறக்க ஆரம்பித்தது.

அவர்கள் வீட்டின் கொட்டிலில் பசுக்கள் உண்டு. இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருநாள் அண்ணி தனது குழந்தைகளையும், குழந்தைகளுக்கு தேவைப்படும் என்று வீட்டில் அன்று கறந்த பால் அனைத்தையும் வண்டியில் வைத்து உள்ளூரில் இருக்கும் தனது அம்மா வீட்டிற்கு அனுப்பி விட்டார். தான் பிறந்து வளர்ந்த செல்வச் செழிப்பு நிறைந்த வீட்டில் தனது கைக்குழந்தைகளுக்குப் பால் இல்லாதததைக் கண்டு செல்வி துக்கம் தாளாது அழுதாள். இதைக் கண்ட சுந்தரிக்கு கோபம் அதிகமாகி அண்ணியுடன் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மனவருத்தம் அதிகரித்து குடும்ப நண்பர்களை அழைத்து முறையிட்டார்கள். அவர்களுக்கு அன்புக்கு உதாரணமாக இருந்த குடும்பத்தில் ஏற்பட்ட குடுமிபிடி சண்டை வேதனையைத் தந்தது. அண்ணியின் பதிலில் இது என் வீடு நான் வைப்பதே சட்டம் என்ற அகங்காரம் ஒலித்தது. இனி செல்வியின் குழந்தைகளுக்கு வெளியில் இருந்து பால் வரவழைப்பது என நடுவர்கள் ஏற்பாடு செய்ததால் தற்காலிகமாகப் பிரச்சனை ஓய்ந்தது.

அண்ணி அவர்களை வெளியற்ற உத்தேசித்து சின்ன புத்தியுடன் நடவடிக்கை எடுக்கிறார் என்பது அனைவருக்கும் புரிந்தது. வாயைத் திறந்து வெளியே போங்கள் என்று சொல்லாமல் தானே அவர்கள் இடத்தைக் காலி செய்ய வேண்டும் என்பது அவர் நோக்கம். செல்வி நாம் கிளம்பிவிடலாம் என்று சொன்ன பொழுது சுந்தரிக்கு கோபம் தாளவில்லை. “பேசாமல் இரு, இது யாருடைய வீடு? வெளியில் இருந்து வந்த யாரோ நம்மை நம் பிறந்த வீட்டில் இருந்து அனுப்புவதாவது, இருந்து நியாயம் கேட்கத் துப்பில்லை உனக்கு, இந்த அண்ணன் செய்வது சரியில்லை”, என்று கொதித்தாள்.

தொடர்ந்து வந்த வாரத்தில் சுந்தரி தனது அக்காவின் பெரிய குழந்தைக்கு கதை சொல்லிய வண்ணம் சோறு ஊட்டிய பொழுது ஒரு வாத்து கதை சொன்னாள். அப்பொழுது சிறு வயதில் தானும் தன் சகோதரியும் விளையாடிய ஆடும் மர வாத்து நினைவு வந்தது. பரணில் ஏறி அதனைத் தேடிப் பிடித்து, தூசி தட்டி, சோப்பு போட்டுக் கழுவி அக்கா மகளை அதில் ஆட வைத்து அழகு பார்த்தாள். அதன் பிறகு உணவு ஊட்டுவது ஆடும் மரவாத்தில்தான் என்றாகிப் போனது. இரண்டு நாள் கழித்து காலை உணவுக்கு கிண்ணத்தில் இட்லியையும் நெய்யையும் போட்டு பிசைந்து எடுத்துக்கொண்டு வரும் சித்தியைப் பார்த்ததும், குழந்தை மரவாத்தைத் தேடி ஓடினாள். வழக்கமாக முற்றத்தில் வாத்து இருக்கும் இடம் காலியாக இருந்தது. வேலைக்காரனைக் கூப்பிட்டு கேட்டபொழுது அது அண்ணனின் குழந்தைகளுடன் அண்ணியின் தாய் வீட்டிற்கு அனுப்பப் பட்டது தெரிந்தது. வாத்து இல்லாமல் குழந்தை உணவு சாப்பிட மாட்டேன் என அடம் பிடித்து அழுதாள். செல்வி கோபம் தாளாமல் குழந்தைக்கு இரண்டு அடி கொடுத்தும் பார்த்தாள், பலனில்லை. அடிவாங்கி தேம்பி தேம்பி அழும் அக்காவின் குழந்தையைக் கண்டு சுந்தரிக்கு கோபம் அதிகமானது.

“வேலை மெனெக்கெட்டு நான் கழுவி சுத்தம் செய்து குழந்தைக்குக் கொடுத்தால், எப்படி அண்ணி அந்த வாத்தை அவர்கள் அம்மா வீட்டிற்கு அனுப்பப் போயிற்று”, என்று பொருமினாள். “சும்மா இரு சுந்தரி, இப்போ அது அவங்க வீட்டு வாத்து இல்லையா?” என்று செல்வி சமாதானம் செய்வதற்காக சொன்ன வார்த்தைகள் எதிர் விளைவைக் கொடுத்தது. சுந்தரி அழும் குழந்தையின் கையைத் தர தரவென இழுத்துக் கொண்டு கொல்லைப் புறம் சென்றாள். அண்ணன் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார். “கூப்பிடு உன் மாமாவை” என்று குழந்தைக்கு கட்டளை இட்டாள். குழந்தை குளியலறைக் கதவைத் தட்டி, “மாமா, மாமா” என்றாள். மாமாவின் குரல், “என்னடா கண்ணு, தோ மாமா வந்திட்டேண்டா ராஜாத்தி” என்று கதவின் மறுபுறம் கேட்டது. அவசர அவசரமாக துவட்டிக் கொண்டு வந்த மாமா குழந்தையைத் தூக்கி “என்னம்மா வேணும் பாப்பாவுக்கு,” என்று செல்லம் கொஞ்சினார். அவள், “வாத்து, வாத்து வேணும் மாமா”, என்றாள் மழலையில்.

“சித்தி கூடப் போய் வாத்து விளையாடும்மா, மாமா கடைக்குப் போகணுமில்லையா? சாயங்காலம் நான் வந்து பாப்பாக் கூட விளையாடுவேனாம்” என்று சொல்லி சுந்தரி கையில் குழந்தையைக் கொடுத்து, “நீ கொஞ்சம் வாத்து ஆட்டி விளையாட்டுக் காட்டேன் சுந்தரி”, என்றார். இதற்காகவே காத்திருந்த சுந்தரி, “ஏது வாத்து? அண்ணி அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அதான் குழந்தை சாப்பிட மாட்டேன்னு சொல்லி அழுவுது”, என்றாள். அண்ணனுக்கும் எரிச்சல் வந்தது.

அண்ணியைக் கூப்பிட்டு, “ஏன் இப்படி செய்யிற, அதை என்ன உங்க அம்மா வீட்டுல இருந்து கொண்டு வந்தியா? ஏன் இப்படி விவகாரம் பண்ற?” என்று எரிந்து விழுந்தார். அண்ணிக்கு தனது கணவர் தனக்கு சாதகமாகப் பேசாததுடன், உன் அம்மா வீட்டு சொத்தா? என்று கேட்டது அவமானமாக இருந்தது. அழுது கொண்டே ஓடி படுக்கை அறைக் கதவை தாளிட்டுக் கொண்டு, “உங்களுக்கு நான் எதுக்கு, உங்க தங்கச்சிங்க கூடவே சந்தோஷமா இருங்க, எனக்குன்னு யார் இருக்கா? இன்னுமே உயிரோட இருக்கிறதுல என்ன அர்த்தம் இருக்கு?,” அழுது ஆர்ப்பாட்டம் செய்தார். ‘உயிரோடு இருக்றதுல’ என்ற வார்த்தையைக் கேட்டதும் அண்ணனுக்கு பகீரென்றது. மூடிய கதவை படபட வென்று தட்டி, “ஏய் கதவைத் திற, சொல்றதக் கேளு, கதவைத் திற”, என்று கூச்சலிட்டார்.

உள்ளிருந்து, “உங்களுக்கு யார் வேணுமின்னு மொதல்ல முடிவு பண்ணுங்க, நான் வேணுமா? உங்க தங்கச்சிங்க வேணுமா? அவங்க இருக்கிற வீட்டுல நான் இனிமே இருக்க மாட்டேன், என்ன சொல்றீங்க?” என்று அண்ணியின் குரல் கேட்டது

எதிர்பாராமல் வந்த இந்த நிபந்தனையினால் அங்கு அமைதி நிலவியது. அண்ணன் செய்வதறியாது கையைப் பிசைந்தார். அமைதியைக் கிழித்துக் கொண்டு செல்வியின் குரல் கேட்டது. “அண்ணே, போதும் இதுக்கு மேலே பிரச்சனை வேண்டாம். இது உன் வீடு, உன் வாழ்க்கைதான் முக்கியம். அண்ணி, வெளிய வாங்க, நாளைக்கு நான் எங்க வீட்டுக்காரர் ஊருக்குப் போறேன், சுந்தரி நீயும் கிளம்பு உன் மாமனார் வீட்டுக்கு,” என்று மேற்கொண்டு யாரையும் பேச விடாமல் சுந்தரியையும் இழுத்துக் கொண்டு அந்த இடத்தை விட்டு அகன்றாள்.

நடந்ததை தொண்டை அடைக்க அழுகையுடன் செல்வி சொல்லி முடித்ததும், மரகதம் எதிர் திண்ணையில் இருந்து எழுந்து அவளருகில் வந்து அமர்ந்து செல்வியின் முதுகை ஆதரவாகத் தடவிக் கொடுத்தார்.

“சொல்லுங்க அத்தை, எங்க அம்மாவும் அப்பாவும் உயிரோட இருந்திருந்தா எனக்கும் சுந்தரிக்கும் இந்த நிலை வந்திருக்குமா, நீங்களே சொல்லுங்க”, என்று சொல்லி மீண்டும் அழுதாள் செல்வி.

“மனசு வருத்தப் படாத செல்வி, விடும்மா, காதுதான் நம்மோட பொறந்தது, காது தோடுமா நம்மோட பொறந்தது? உங்க அண்ணி யாரோ வீட்டு பொண்ணுதானே, போவுது விடு”, என்றார் மரகதம்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *