கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: December 10, 2012
பார்வையிட்டோர்: 11,903 
 
 

அந்தப் பிரமாண்டமான ஷாப்பிங் காம்ப்ளெக்ஸில் என் சிறிய குடும்பம் நுழைந்தது. நான், என் மனைவி துர்கா, எட்டு வயது மகன் ஆகாஷ். எங்கள் ஊரின் மையப் பகுதியில் இந்த ஆள் விழுங்கிக் கட்டடம், பல மாதங்களாகவே கட்டப்பட்டுக்கொண்டு இருந்தது. இதோ திறப்பு விழா… நாளை திறக்கப்போகிறார்கள்… என்று பேச்சுகளும் அவ்வப்போது கிளம்பி மறைய, இதோ 10 நாட்களுக்கு முன்னால் ஒரு பிரமுகர், (அவருடைய கரங்கள் சாதாரண கரங்கள் அல்ல!) பொற்கரங்களால் திறந்துவைத்தார்.

”ஷாப்பிங் மால் எல்லாம் சென்னை, கோவை மாதிரி நகரங்களுக்குச் சரி. நம்ம ஊர் மாதிரி நகரம் கேட்டகிரியிலும் வராத, கிராமத்து லிஸ்ட்லயும் வராத ரெண்டும்கெட்டான் ஊர்களுக்கு எப்படிச் சரியா வரும்? மக்கள்கிட்ட பொட்டன்ஷியல் வேண்டாமாப்பா?’ என்று, முன்பு அலுவலக நண்பர்களிடம் எல்லாம் நான் விவாதித்துக்கொண்டே இருப்பேன்.

‘ஹோட்டலுக்குப் போய்ப் பாரு. குடும்பத்தோட கூட்டம் எப்படா டேபிள் காலி ஆகும்னு காத்துகிட்டு இருக்கு. நகைக் கடைங்க எதுவும் நஷ்டத்தில் மூடப்பட்டது மாதிரி தெரியவே இல்லை. தள்ளுபடியோ, தள்ளாதபடியோ ஜவுளிக் கடையிலயும் எப்போதும் பெரும் கூட்டம் முண்டியடிக் குது. அந்தக் கூட்டம் இங்கேயும் வரும்ப்பா.’

அந்தக் கூட்டம், மாலின் உரிமையாளரின் நம்பிக்கையைப் பொய்யாக்கவில்லை என்றே தோன்றியது. உள்ளே நுழைந்தவர் களும் வெளியே வந்தவர்களும் ஜென்ம சாபல்யம் பெற்றவர்களாகவே மாறி இருந்தார்கள். இருக்காதா பின்னே… வீதி முழுக்க விளம்பரம். செய்தித்தாளிலும் விளம்பரம். டி.வி-யில்கூட அழகான பெண்கள் ஆடிப் பாடி ‘கடைக்கு வாங்கடா’ என்றார்கள். போகவில்லை என்றால் கேவலம் என்று அடிக்கடி துர்கா நினைவுபடுத்திக்கொண்டே இருந்தாள். மேலும் எங்கள் பக்கத்து வீட்டுப் பெண்கள் கூட மேன்மக்கள் ஆகிவிட்டார்கள்.

டூ வீலரை பார்க் செய்துவிட்டு உள்ளே நுழைந்ததும், ஏ.சி. காற்று முகத்தில் இனிப்பாக அறைந்தது. உயரம் குறைவான ஒரு பஃபூன் அங்கு வருகிற குழந்தைகளின் கையில் பலூன்களைக் கொடுத்துக்கொண்டு இருந்தான். எங்கும் வியாபாரப் பொறிகள். இரவைப் பகலாக்கும் வெளிச்சம் தூள் கிளப்பியது. தானியங்கிப் படிக்கட்டுகள், வந்தவர்களை அள்ளிக்கொண்டு மேலே போனது. அண்ணாந்துப் பார்த்தும் பிரமிப்பை வெளிக்காட்டவில்லை. இந்த இடத்தில் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு, போன வாரம் நான் லண்டனில் ஷாப்பிங் செய்தபோது எடுத்த படம் என்று சொன் னால் எல்லோருமே நம்பத்தான் வேண்டும்.

10 அடி நீள அகலத்தில் ஒரு வியாபார நிறுவனம் பஜாரில் இருந்தால் அதன் பெயர், கடை. ஒரு பஜாரே கடைக்குள் இருந்தால் அதன் பெயர், மால்.

நான் உள்ளே வரும்போது, ‘ஜஸ்ட் விண்டோ ஷாப்பிங்தான் பண்ணப்போறோம். கண்டதையும் வாங்கிக் காசைக் கரியாக்கக் கூடாது’ என்று எச்சரித்துவிட்டுத்தான் பிள்ளையையும் மனைவியையும் அழைத்து வந்திருந்தேன். அதை மீண்டும் நினைவுபடுத்தும் முன், துர்கா வளையல், கம்மல், பொட்டு என்று ஃபேன்ஸி ரகங்களுடன் திரும்பினாள்.

‘இன்னும் ரெண்டு பார்த்துவெச்சிருக்கேன்.’

அப்புறம் அழகு சாதனப் பிரிவு. விதவிதமான ஷாம்புகள், பொடுகு நீக்கிகள், சருமத் தின் நிறத்தை மாற்றவல்ல பூச்சுகள், சோப்பு கள். அவை அனைத்துமே பிரபலமான சினிமா நட்சத்திரங்களால் சிபாரிசு செய்யப்பட்டவை. அந்த நட்சத்திரங்கள் அவற்றை எல்லாம் உபயோகிப்பார்களோ என்னவோ, சத்தியமாகத் தெரியாது. ஆனால், என் மனைவி நட்சத்திரமாக விரும்பினாள்.

நான் சில கணக்குகளைப் போட்டுப் பார்த்து, ‘மீதி மாசத்தையும் ஓட்டணும்’ என்றேன். அவளோ, அதை அலட்சியப்படுத்தி காய்கறிப் பிரிவினுள் நுழைந்தாள். என் பையன் ட்ராலியோடு அங்கும் இங்கும் போய்க்கொண்டு இருந்தான்.

அழகழகாக அடுக்கப்பட்ட காய்கறிகள், பழ வகைகள் அருகில் கழுத்தில் பேட்ஜ் மாலையுடன் நங்கைகள்.

அங்கே அடுக்கப்பட்டு இருக்கின்ற உணவுப் பொருள்களைப் பார்க்கிற மனிதனுக்கு, சிரமப்பட்டு வேட்டையாடி உணவைச் சேகரித்த கற்காலப் பொழுதுகள் ஞாபகம் வந்துவிடும் என்றே நினைக்கிறேன். அனைவரும் பாய்ந்துப் பாய்ந்து வேட்டையாடினார்கள். அடுத்தவர்கள் வேட்டையாடுவதைப் பார்த்து, சுறுசுறுப்படைந்து வேட்டையாடினார்கள். என் மனைவியும் போதிய இரையுடன் திரும்பினாள்.

நான் நம் ஊரில் உள்ள அநேகப் பேர் போலவே யாராவது ஆங்கிலத்தில் பேசினால், ‘யெஸ்’ என்பேன் கம்பீரமாக. அந்த ‘யெஸ்’ஸின் வெளிப்பாடு எனக்கு ஆங்கிலம் நன்றாகத் தெரியும் என்று அடுத்தவரை நம்பவைக்கப் போதுமானதாக இருக்கும். அப்புறம் ஆங்கிலம், ஆங்கிலத் தமிழ், தூய தமிழ் என்று என் உரையாடல் இனிதே நிறைவு பெறும். என் மனைவி அந்த முதல் இரு நிமிடங்களை நம்பி, எனக்கு இங்கிலீஷ் தெரியும் என்று நம்பிக்கொண்டு இருக்கிறாள். நான் ஏன் அதை வீணாக்குவானேன்?

எச்சரிக்கையுடன் ‘இந்தக் கர்ணக் கிழங்கு எவ்வளவு?’ என்றேன்.

பொம்மக்ரெனட், பேபி கார்ன், பேபி பொட்டட்டோ என்று கம்ப்யூட்டர், விலையைப் பதிவு செய்யத் தொடங்கியது.

‘வெளியே வாங்கிறதைவிட பரவாயில் லேன்னு தோணுது. இனிமே இங்கேயே வந்துரலாம்ங்க’ முணுமுணுத்தாள் துர்கா. சந்தையின் நெருக்கடி இங்கே கிடையாது. மேலும் பொருள் களை நாமே எடுத்துவைக்க முடிகிறது.

‘ஒன் ஹன்ட்ரெட் அண்ட் செவன்டி எய்ட் ரூப்பீஸ்.’ மீதி இரண்டு ரூபாய் இல்லை என்று ஆங்கிலத்தில் கொஞ்சியபோது, அந்த இளம் காய்கறிக்காரியைக் கஷ்டப்படுத்த முடியுமா என்ன? ‘ஓ.கே. நோ ப்ராப்ளம்.’

என் சின்ன வயதில் என் வீட்டுக்கு பாப்பம்மாள் என்றொரு கிழவி, கூடையில் காய்கறி சுமந்து வரும். என் அம்மா பேரம் என்ற பெயரில் அந்தக் கிழவியை மன உளைச்சலுக்கு ஆளாக்குவாள். அவளுக்கும் என் அம்மாவுக்குமான உலகில், 5 பைசா, 10 பைசா எல்லாம் பெரும் முக்கியத்துவம் பெற்றவை. அவை அடுத்த நாள் வெகு நினைவாக நேர் செய்யப்பட்டுவிடும். ஏனென்றால் பாப்பம் மாள், ‘உங்க சின்னப் பையனுக்கு வெள்ளரிக்கா பிடிக்குமேனு கொண்டு வந்தேன்’ என்று அன்பையும் சுமந்து வருபவள். அவளுடைய ஆத்மா இந்த இரண்டு ரூபாயை எண்ணி திடுக்கிட்டு இருக்கக்கூடும்.

ஊறுகாய் ஒரு பாட்டில் வாங்கினால், இன்னொரு பாட்டில் இலவசம் என்றது ஓர் அறிவிப்பு. இந்த ஆஃபரை விட முடியுமா என்ன? உடனே பயனடைந்து மகிழ்ந்தோம்.

தானியங்கிப் படிக்கட்டுகள் ஓயாமல் இயங்கிக்கொண்டே இருந்தன. சில கிழவர்களும் கிழவிகளும் பிரமிப்பூட்டும் விதத்தில் ஏறிச் செல்ல, துர்கா சிறிது தடுமாறி என் கையைப் பிடித்துக்கொண்டாள்.

முதல் தளத்துக்குச் சென்றோம். அங்கும் கூட்டம். எல்லோருமே தாங்கள் ஷாப்பிங் செய்யவே படைக்கப்பட்டது போலவே செயலாற்றிக்கொண்டு இருந்தார்கள். எனக்கு என்ன ஆச்சர்யம் என்றால், இந்தக் கூட்டம் இந்த ஊரில் இவ்வளவு நாளாக என்ன செய்துகொண்டு இருந்தது? திடீர் என இத்தனை நாகரிகமாக ஒரு கூட்டம் எங்கே இருந்து வந்து சேர்ந்தது?

இதோ, இந்த ஆன்ட்டி தன் பின்னழகை வெளிப்படுத்த ஜீன்ஸை நம்பியிருக்க, அது அவளைக் கைவிடவில்லை. இதோ, இந்தப் பெண்ணை அவளுடைய பெற்றோர் இன்னும் சிறு குழந்தை என்றே கருதி, இந்த ஆடையை அனுமதித்து இருக்கிறார்கள்.

அப்புறம் இறுக்கமான ஆடைகளில் ஒரு யுவதிக் கூட்டம் செல்ல, நானும் அவர்களின் பின்னால் செல்ல விரும்பினேன். ஆனால், என்ன செய்வது? ‘நானும் சேர்ந்து போகவும் ஒரு சிறகு இல்லையே, ஒரு உறவும் இல்லையே…’

இப்போது ஆடைகள் பிரிவு. தினுசு தினுசான ஆடைகள். ஆடவர், மகளிர், மழலையருக்கான ஆடைகள். இரண்டு வாங்கினால், ஒன்று இலவசம். நான்கு வாங்கினால், மூன்று இலவசம். ஆடைகளும் அந்த நொடி நாகரிகத்திலும் டிசைன்களிலும் இருந்தன. அங்கே ஷாப்பிங்கில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த கூட்டத்தின் ஆடை எழிலைப் பார்த்து வெட்கினேன். நான் இன்னும் கொஞ்சம் நல்ல ஆடைகள் அணிந்து இருக்கலாம். ‘நீங்க அடுத்த தடவை ஒரு த்ரீ ஃபோர்த் வாங்குங்க. லுங்கி, வேஷ்டி உடுத்திக்கிட்டு சகிக்கலை…’ என்றாள் துர்கா.

சரிதான். கிராமத்தில் இருந்து என் தங்கையும் அம்மாவும் வரும்போது, அவர்களை வியப்பில் ஆழ்த்த என் புதுக்கோலம் உதவும். என் மாமனார்தான், ‘மாப்ள நல்லாத்தான இருந்தான். திடீர்னு இவனுக்கு என்ன ஆச்சு?’ என்று குழம்புவார். நான் திடீர் என்று என்னுடைய நிதி நிலைமை சீர்கெடத் தொடங்கிவிட்டதை நினைவுபடுத்தியதும் துர்கா, ஆகாஷ§க்கு ஒரு பெல்ட்டோடு நிறுத்திக்கொண்டாள். அப்புறம் வியந்தேன். தனது டெபிட் கார்டை ஒருவன் இந்தத் தேய் தேய்க்கிறானே, எப்படிச் சாத்தியம்?

அடுத்து, காலணி ஆதிக்கம். அதாங்க பாதரட்சைப் பிரிவு. அது என் மனைவியை அன்புடன் வரவேற்றது. கொள்ளை மலிவு என்று அறிவித்த விளம்பரத்தை என் மனைவி நம்பினாள். கடந்த முறை ஒரு பிளாட்ஃபாரக் கடையில் என் மனைவி பேரம் பேசியதற்கு ஈடுகொடுக்க முடியாத கடைக்காரன், ‘சும்மானாலும் எடுத்துட்டுப் போம்மா. ஒரு செருப்பைப் பிச்சை போட்டதா நினைச்சுக்கறேன்’ என்றான். இப்போதுகூட அந்தக் கடை இருக்கும் பாதையில் நான் போவது இல்லை.

‘இதெல்லாம் வாங்கப்போறேன்னு நீ சொல்லவே இல்லியே’ என்றேன், என் மனைவியைப் பார்த்து.

‘இருக்கட்டுங்க. டெய்லி வாக்கிங் போறப்ப போட்டுக்கறேனே. ரொம்ப நாளாத் தேடிட்டு இருந்த டிசைன் இது’ என்றாள் துர்கா கெஞ்சலாக.

அடுத்து அவளைப் பெரிதும் ஈர்த்த கப் அண்ட் சாஸர்களையும் வாங்கிக்கொண்டாள். தேவை இல்லைதான். ஆனால், வீட்டுக்குத் திடீர் என விருந்தினர்கள் வந்துவிட்டால்? அவர்கள் ஏற்கெனவே வீட்டில் உள்ள கோப்பைகளில் பானத்தை அருந்த மறுத்துவிட்டால்? எப்படியோ, வாங்கப்பட்ட பொருளுக்கு ஒரு தேவையை

ஏற்படுத்தித்தானே தீர வேண்டும்?

ஏதோ ஒரு ஞானி கடைக்குச் சென்றாராம். ‘நீங்கள்தான் ஒன்றும் வாங்குவது இல்லையே, பிறகு ஏன் கடைக்குச் சென்று நேரத்தை வீணாக்குகிறீர்கள்?’ என்று அவருடைய நண்பர்கள் கேட்க, அதற்கு ஞானி, ‘எனக்குத் தேவையற்ற பொருள்கள் என்னவெல்லாம் இங்கே இருக்கின்றன என்று தெரிந்து கொள்ளத்தான் சென்றேன்’ என்றாராம். அவர் பல ஷாப்பிங் மால்களில் புகுந்துதான் இந்த ஞானத்தைப் பெற்றிருக்க வேண்டும். காந்தியடிகள்கூட, ‘தேவைகளைப் பெருக்கு வது அல்ல நாகரிகம்; தேவையைச் சுருக்கு வதே நாகரிகம்’ என்று சொன்னது அப்போது நினைவில் நீந்தியது. நான் ஒரு மினி ஞானி; மினி நாகரிகன். எனவே, இந்தப் புத்தகப் பிரிவுக்குள் போகப்போவது இல்லை. போகப்…

அட, வாழ்வின் இளைப்பாறல்கள்- அர்த்தங்கள்- கொண்டாட்டங்கள்- உயிர்த் தல்கள்- ஹோமோசேப்பியன்களில் ஒரு பிரிவினரும், இதற்கு அழகான பெண்கள் என்றே சொல்லி இருக்கலாம். கொஞ்சம் அருகில் சென்று பார்க்கலாமே!

சென்ற இடத்தில் நான் ஓர் ஆங்கில நாவலுக்கு அதிபதியானேன். கிஷோர் குமார் பாடல்கள் அடங்கிய சி.டி. ஒன்றின் ஓனராகி இருந்தாள் துர்கா. நான் தமிழ்ப் புத்தகங்களைத்தான் வாங்க விரும்பினேன். இது தமிழ்நாடு என்பதால், இங்கே பெரிய அளவில் தமிழ்ப் புத்தகங்கள் இல்லை. மேலும் ஆங்கிலப் புத்தகங்கள் கையில் இருப்பதே அவ்வளவு அழகுதானே. எனவே, நான் ஆங்கிலப் புத்தகம் வாங்க வேண்டியது ஆயிற்று. துர்காவைப் பார்த்து, ”முதல்ல நீ இதுவரை வாங்கின சி.டி-க்களைக் கேள்” என்றேன். அவள் ”நீங்கள் மட்டும் என்னவாம். வாங்கினதிலேர்ந்து இன்னும் பிரிச்சே பார்க்காத புத்தகங்களோட எண்ணிக்கையைச் சொல்லட்டுமா?” என்றாள். உடனே சமரசம் ஏற்பட்டது.

அங்கு இருந்து நகரும்போது இவற்றை ஏன் வாங்கினோம் என்ற ஞானோதயம் பீறிட்டது. திரும்பிப் பார்த்தேன். பொருள்கள் அடுக்கப்பட்டு இருக்கும் முறை, அறையின் சூழல், அடுத்தவர்கள் வாங்கிச் செல்லும்போது நாம் ஏதோ ஒன்றை இழக்கிறோமோ என்ற உணர்வு. இவை சராசரிகளின் மனதில் உள்ள நுகர்வோரைப் பாடாய்ப்படுத்துபவை வாங்கும் முன்பும், வாங்கிய பின்பும். ஏனென்றால், இங்கு நான் வாங்கியவை அவசியத்தின் அடிப்படையில் அல்ல. ஆசையின் உந்துதலில்.

இப்போது என் முன்னே கட்டில்கள், டைனிங் டேபிள்கள், சோபாக்கள், திரைச் சீலைகள், விரிப்புகள். வாழ்க்கையில் நாம் எவ்வளவு தூரம் பின்தங்கி இருக்கிறோம் என்ற எண்ணத்தை அவை ஏற்படுத்திவிட்டு அமைதியாக இருந்தன.

‘நீங்க இன்னும் போக வேண்டிய தூரம் எவ்வளவு இருக்குதுனு புரிஞ்சுகிட்டீங்களா? என்றாள் துர்கா.

மீண்டும் தானியங்கிப் படிகள். கீழ் இறங்கும்போது பலசரக்குப் பொருள்கள், கிச்சன்வேர் எனப் பல பிரிவுகள் இருந்தன. அரிசி வாங்கலாமா? முன்பு அண்ணாச்சி கடையில்தான் வாங்குவேன். தெரு முனையில் இருந்த கடை. பணம் குறைந்துவிட்டால்கூட, ‘அதுக்கென்ன, மெள்ளக் கொடுங்க. எங்கப் போயிறப்போவுது’ என்பார். இப்போது அவர் என்ன ஆனார் என்றே தெரியவில்லை. அப்படி ஒரு சூழ்நிலை இங்கு ஏற்பட்டால், யாரிடம் போய் நிற்பது என்றும் தெரியவில்லை.

பாக்கெட்டின் வறட்சியைப் புரிந்து கொள்ளாமல் துர்கா மேலும் சில பக்கெட்டு, கரண்டி என்று பீறாய்ந்தாள். புத்திசாலி. இந்த நவீன வளாகத்தில் இதுவரை யாரும் பிச்சை எடுத்தது இல்லை என்றதைச் சட்டென்று புரிந்துகொண்டாள்.

இப்படியாக ஷாப்பிங் முடிந்து வெளியே வர ஆயத்தமானோம். எங்கள் கைகளில் அழகான காகிதப் பைகள் தொங்கின. பெருமையாகத்தான் இருந்தது. இந்த அலங்கார விளக்குகள், சில்லென்ற காற்று, நாகரிக உடையில் சேவை செய்யும்ஆண்கள் /பெண்கள், அவர்களின் நுனி நாக்கு ஆங்கிலம், பெருமைப்படத்தக்க சக வாடிக்கை யாளர்கள், குவிந்துகிடக்கும் லேட்டஸ்ட் பொருள்கள்…

எங்களுக்கு எங்கள் அந்தஸ்து கூடிவிட்டதாகத் தோன்றியது. இந்தப் புது அனுபவத்தில் எங்கள் வாழ்க்கை, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டதைப் போன்ற உணர்வு ஏற்பட்டது. இது தற்காலிக, மாயை நிலை என்று தெரிந்தபோதும், இதை நாங்கள் நம்பவே விரும்பினோம். இனி, துர்கா அவளுடைய அலட்டல் தோழி அகிலாண்டேஸ்வரியிடம் ‘நாங்களும்…’ என்று தொடங்கக்கூடும். நான்கூட என் அலுவலக நண்பரிடம் பெருமை அடிக்காமல் பெருமையுடன் ‘நேத்துகூடப் போனேன்யா. அப்படி ஒண்ணும் விசேஷமா இல்லியே’ என்று சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

டூ வீலர் சாலையில் செல்லும்போது ஜொலித்த அந்தக் கட்டடத்தைத் திரும்பிப் பார்த்த துர்கா, ‘சீக்கிரம் ஒரு கார் வாங்கணுங்க’ என்றாள்.

ஆகாஷ§க்கும்கூடப் பெருமைதான். அவனுடைய பிறந்த நாளுக்கு இந்த மாலில்தான் கிஃப்ட் வாங்கவேண்டும் என்று சொல்லிக்கொண்டே வந்தான். அப்புறம் தூங்கச் செல்லும்போது அவன் என்னிடம் அந்தக் கேள்வியைக் கேட்டான்.

”முன்னாடி அங்கே என்ன இருந்துச்சுப்பா?”

”எங்கே?”

”அந்த ஷாப்பிங் மால் இருந்த இடத்தில். இந்த காம்ப்ளெக்ஸ் வர்றதுக்கு முன்னாடி அங்க என்ன இருந்துச்சு?”

ஒன்றும் நினைவில் இல்லை. அந்தக் கட்டடம் கட்ட பெரிய இயந்திரங்கள் மண்ணை அள்ளிப்போட்டதில் இருந்து, தகரங்கள் மறைத்து கட்டடம் பெருசாக எழும்பியதில் இருந்து, வெளியே சாரம் கட்டி ஆட்கள் தொங்கியவாறு சிமென்ட் பூசியது வரை எல்லாமே நினைவில் இருக்கிறது. ஆனால், அதற்கு முன்னால் இருந்த எதை விழுங்கிவிட்டு, இந்தக் கட்டடம் இப்படி நிற்கிறது என்பது சட்டென்று அந்த நொடியில் நினைவுக்கு வரவே இல்லை. ஊரின் மையப் பகுதியில் இருக்கும் இடம். கண்டிப்பாக ஏதோ ஒன்றோ, இரண்டோ அங்கே நிச்சயம் இருந்திருக்க வேண்டும். ரொம்ப நேரம் யோசித்தும் ஒன்றும் நினைவுக்கு வரவே இல்லை. ஆனால், அந்த நேரத்தில் பாப்பம்மாளின் முகமும் அண்ணாச்சியின் முகமும் ஏன் நினைவுக்கு வர வேண்டும் என்றுதான் தெரியவில்லை.

– டிசம்பர் 2011

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *