பூத்தலும்… துளிர்த்தலும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: June 18, 2020
பார்வையிட்டோர்: 21,160 
 

தனிமை பீடித்திருந்த இந்த இரவில் எங்கள் தெருவில் பாட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. வீட்டு வாசலிலிருந்து எட்டிப் பார்த்தேன். நாலைந்து வீடு தள்ளியிருக்கின்ற தெருமுனை வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த குட்டி யானை வாகனத்திலிருந்து ‘தணியாத தாகம்’ படத்தில் இடம்பெற்ற ‘பூவே நீ யார் சொல்லி யாருக்காக மலர்கின்றாய்..’ பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது. அநேகமாக அது வானவில் பண்பலை ஒலிபரப்பாக இருக்க வேண்டும். அதில் தான் இரவு பத்தரைக்குப் பிறகு ‘இரவின் மடியில்’ என்ற நிகழ்ச்சியில், இந்த மாதிரியான பாடல்களை ஒலிபரப்புவார்கள். பழைய இலங்கை ஒலிபரப்பு கூட்டு ஸ்தாபன நிகழ்ச்சியாளர் மயில்வாகனன் சந்திரசேகரின் குரலை ஒத்த ஒருவர் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார்.

இந்த வீட்டுக்கு வந்த இந்தச் சில வருடங்களில் இப்படி சத்தமாக எங்கள் தெருவில் எந்த வீட்டிலும் பாட்டுச் சத்தம் கேட்டதேயில்லை. தீபாவளி சமயத்தில் மட்டும் வேட்டுச் சத்தம் விண்ணதிர கேட்கும். தெருமுனை வீட்டுக்காரர் கல்யாண வீட்டு அலங்காரத் தொழில் செய்பவர். பொருட்களை ஏற்றிச் செல்ல குட்டி யானை வந்திருக்க வேண்டும். விரிய திறந்த கேட் வாசலுக்குள்ளிருந்து இருவர் சாமான்களை எடுத்துக் கொடுக்க, அதை வாங்கி வைக்கிறவன் அந்தப் பாட்டோடு கூடவே சத்தமாக பாடிக் கொண்டே வண்டியில் ஏற்றிக் கொண்டிருக்கிறான். ‘பூப்போல் சிரிக்கிறாள் இளம்சிட்டு..’ என்கிற வரியை அவன் பாடுவதை வீட்டுவாசலிலிருந்து பார்க்கையில் எனக்கு அவனது முகம் டெல்லிகணேஷின் முகமாக தெரிந்தது. கதவைச் சாத்திவிட்டு வீட்டுக்குள் வந்த என்னையும் அப்பாடல் தொற்றிக் கொண்டது.

அம்மா இருந்திருந்தால் அவனது பெருங்குரலை ரசித்திருப்தோடு, இந்தப் பாடலைப் பற்றிய விவரங்களை அடுக்கியிருப்பாள். இப்பாடலுக்கு இசையமைத்தவர் ‘ஒருதலை ராகம்’ படத்திற்கு இணை இசையமைத்த ஏ.ஏ.ராஜ் என்றும், இப்பாடலில் டெல்லிகணேஷுடன் இணைந்து நடித்த நாயகியின் பெயர் சொர்ணா என்றும், மலேசியா வாசுதேவனுக்கு எப்போதுமே மகரந்தக் குரல் என்றும் கூட சொல்லியிருப்பாள். இப்படி எத்தனை முறை அவள் சொல்லிச் சொல்லிக் கேட்டிருப்போம். அம்மாவின் களஞ்சியம் எப்போதும் நிரம்பி வழிகிற ஒன்றாக இருக்கிறது. இந்தப் பாடலின் ஆரம்பத்தில் ஒலிக்கின்ற ஜானகியின் ஹம்மிங் அம்மாவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதை அடிக்கடி முணுமுணுத்துக் கொண்டே இருப்பாள்.

அம்மா இப்போது வீட்டில் இல்லை. பதினைந்து நாட்களுக்கு முன், இதயத்தாக்கு ஏற்பட்டு, பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தொடர் மருத்துவ பரிசோதனைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிப்பட்டிருக்கிறாள். காலையிலேயே வலி ஏற்பட்டிருக்கிறது. யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் தாங்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். நாற்காலியில் உட்கார்ந்த நிலையிலேயே சற்றே மயக்கமான நிலையில் அவள் சாய்ந்த போதே எங்களுக்கு தெரியவந்தது.

அம்மாவை ஆஸ்பத்திரியில் அனுமதித்த நாளின் பிற்பகல் மழையில், நாங்கள் குடியிருந்த வீட்டின் முன்பிருந்த இயல்வாகை வேரோடு சாய்ந்துவிட்டது. பக்கத்தில் வளர்ந்த மஞ்சட் கொன்றைக் கன்றும் முற்றிலும் ஒடிந்துபோயிற்று. அந்த வீட்டிற்குக் குடிவருகையில் அந்த மரம் பட்டுப் போகிற நிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் அதைத் தினந்தோறும் நாங்கள் வருடிக் கொடுத்துக் கொண்டு இருந்தோம். தனக்கு கிடைத்த வரம் போல அம்மா தான் அதற்கு நீர் வார்த்துக் கொண்டேயிருந்தாள். அந்த வருடத்திய கோடையில் அது மறுபடி துளிர்த்து பூக்கவும் செய்தது. துயர்மிகுந்த அந்தத் தினத்தில் அம்மரம் வேரோடு சாய்ந்துகிடப்பதைப் பார்த்ததில் எங்கள் இருவருக்கும் சொல்லமுடியாத மனத்துயரம்.

அம்மா ஒரு தனித்த சுபாவமுள்ள மனுஷி. தன்னுடைய முப்பத்தொன்பதாவது வயதில் கணவனை இழந்தவளை உறவுகள் மறுதிருமணம் செய்யச் சொல்லி வற்புறுத்த, பிள்ளைகளின் நலன்கருதி மறுத்துவிட்டாள். எத்திசை திரும்பி நடக்கப் போகிறேன் எனத் திக்கற்று நின்றவளுக்கு எல்லாம் போதுமென்று தோன்றியிருக்க வேண்டும். அப்பாவின் மரணம் அவளது மனதுக்குள் கனமான இருட்டின் நிழலாக படிந்திருக்க, உறவுகளிடமிருந்து அவள் முற்றிலுமாக தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாள். அவளது வாழ்வானது, புங்கை மரம் உதிர்க்கும் சருகுகள் காற்றில் தரையோடு தரையாக நகர்கின்ற தனிமையின் சாலையாகவே நீண்டு கிடந்தது. நெடுங்காலம் ஊரில் தனித்து வசித்தவளை மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகே எங்களோடு அழைத்து வந்தோம்.

அன்றொரு நாள், அலுவலகத்திலிருந்து தாமதமாக வீடு திரும்பியபோது, பள்ளிக்கூடத்தில் நடந்த சம்பவமொன்றை மகள் என்னிடம் சொல்ல நான் அதைக் கவனிக்கவில்லை. இதைக் கண்டுகொண்ட அம்மா. ‘வீட்டுக்கு வந்தால் மற்றதை மறந்துவிட்டு பிள்ளைகள் சொல்வதை கொஞ்சம் கேட்க வேண்டும்..’என்றாள். ஒன்றும் பேசாமல் குளித்து விட்டு திரும்புகையில் அவளிடம் ‘அப்பா அப்படிச் செய்தாரா..?’ என்றேன். ‘அவர் அப்படி செய்யாததால் தான் உன்னை செய்யச் சொல்கிறேன்’ என்றாள். ‘ஏன் அம்மாகிட்ட இப்படி பேசறீங்க..?’ என்றாள் இவள். இதற்கே இப்படி என்றால், கல்லூரி பருவத்தில் அம்மாவோடு நான் செய்த தர்க்கங்களை இவள் பார்த்திருந்தால் என்னை திருமணமே செய்திருக்க மாட்டாள். அம்மாவின் தீராத கவலையாக நானிருந்தேன் அப்போது.

இதே போன்று ஒருமுறை ‘உங்களையெல்லாம் பார்த்தால் எனக்கு மிகவும் இரக்கமாக இருக்கிறது. நீங்களெல்லாம் வாழ்க்கையை வாழ நிறைய போராடுகிறீர்கள். நானெல்லாம் அடைந்த சந்தோசத்தை அடைய உனக்கு நெடுங்காலம் பிடிக்கும்..’ என்றாள். இதையும் நான் ஒத்துக்கொள்ளவில்லை அல்லது ஒத்துக்கொள்ளாத மாதிரி இருந்தேன். அம்மா சொல்வதை எல்லாம் அப்படியே ஒப்புக்கொள்பவள் கெளரி தான். அம்மாவைப் பொறுத்தவரையில் சதா உரையாடிக்கொண்டே இருப்பாள். கெளரியும், அம்மாவும் உரையாடுவது பெரும்பாலும் இறந்த காலத்தை பற்றித் தான் இருக்கும். அந்த வகையான பேச்சுக்கள் சில சமயங்களில் சுவாரஸ்யமாகவும், பல வேளைகளில் கவலையளிப்பதாகவும் இருக்கும். பகிர்தலே வாழ்வு என அம்மா அடிக்கடி சொல்வாள். அது எனக்குப் பிடித்திருந்தது..

காலை உணவை எடுத்துக் கொண்டு ஆஸ்பத்திரிக்குக் கிளம்புகையில், இவள் தான் ஞாபகப்படுத்தினாள். இன்று திருக்கார்த்திகை என்றும், டாக்டரிடம் பேசி அம்மாவை சாயங்காலம் டிஸ்சார்ஜ் செய்து எப்படியும் வீட்டிற்கு கூட்டிவந்துவிட வேண்டுமென்றும் சொன்னாள்.

இளம்பிராயக் காலத்திலிருந்தே பெரும்பாலும் நாங்கள் பண்டிகைகளை விரும்பிக் கொண்டாடியதில்லை. ஆனால் இந்த கார்த்திகை தீபத்திருநாள் மீது மட்டும் கொஞ்சம் கூடுதல் பிடிப்புண்டு. எல்லாம் அம்மா விட்ட வழி. தீபாவளிக்கு வாங்கிய வெடிகள் சிலவற்றை கார்த்திகைக்கு போட வேண்டுமென மிச்சம் வைத்திருந்த நாட்கள் உண்டு. இருக்காஞ்சட்டியில் தடிமனான திரி இட்டு, அது மெத்தென நனைகிற வரையில் எண்ணெய் விட்டு, கார்த்திகை தினத்தன்று அந்த தீபத்தை அம்மா ஏற்றும் போது, ஓர் பிரகாசம் மனதில் விரிய ஆரம்பிக்கும். இப்போது தானே இந்த நூல் திரி, பஞ்சு திரியெல்லாம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டில் அப்பாவின் பழைய வெளுத்த வேட்டி தான் திரி. வேட்டியின் முனையை கிழித்து உள்ளங்கைகளில் வைத்து அம்மா உருட்டும் போது சீனிகாரவாசனை மூக்கை நெரூடும். கூடவே வெளுத்து தந்த நயினாரின் வெற்றிலை கறை படிந்த அகண்ட பற்கள் நினைவிலாடும். அது அந்தக் காலம்.

ஆஸ்பத்திரி செல்கிற வழியில் புதிய மண் விளக்கொன்றை வாங்க தோன்றிற்று. ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறி இறங்குகிற போது வலப்பக்கத்தில் நின்றுகொண்டிருந்த அந்த தள்ளுவண்டி கண்ணில்பட்டது. இன்றைய கார்த்திகைக்கு முளைத்திருந்த மண்விளக்குகாரர் அவர். தள்ளுவண்டியில் பல்வேறு வகையான மண்விளக்குகள் கடைவிரிக்கப்பட்டிருந்தாலும், என்னுடைய பார்வை எதை எதையோ ஞாபகப்படுத்திய அந்த துளசிமாட வடிவத்திலான விளக்கில் நிலை குத்தி நின்றது. என் எண்ணத்தை அறிந்தவராக அந்த விளக்கை குறிப்பிட்டுக் காட்டி எதைஎதையோ தள்ளுவண்டிகாரர் சொல்ல, அது எதுவும் என் காதில் ஏறாமல், மாறாக அவரது தடிமனான அந்தக் குரலை மீறி என்னுடைய பால்யகால கார்த்திகை தினத்தொன்றின் ஞாபகச் சுடரொன்று அசைந்தாட, அந்த இரண்டு மண்விளக்குகளை வாங்கிக் கொண்டேன்.

ஆஸ்பத்திரி அறைக்குள் நுழைந்த போது, அம்மா தூங்கிக் கொண்டிருந்தாள். உட்கொண்ட மருந்துகளின் வீரியத்தால் அவளது முகம் சற்று வெளிறியிருந்தது. டாக்டரின் அறைக்குச் சென்று அவரிடம் பேசினேன். அம்மாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாகவும், சாயங்காலம் டிஸ்சார்ஜ் ஆகிக் கொள்ளலாம் என்றும் அவர் சொன்னார். அறைக்கு மீண்டும் திரும்பிய போது, அம்மா எழுந்து விட்டிருந்தாள். ஜன்னலருகில் நின்று கொண்டு எதிர்புற நெடுஞ்சுவரில் பதிக்கப்பட்டிருந்த தண்ணீர் குழாய் இடுக்கொன்றில் துளிர்த்திருந்த ஆலிலையொன்றை பார்த்துக் கொண்டிருந்தாள். ஏதோ யோசித்தவளாக என் வசம் திரும்பி என்னிடம் அதை சைகையால் குறிப்பிட்டுக் காண்பித்து, ‘நேற்றைய மழைக்குப் பூத்தது..’ என்றாள். ஒன்றை ரசிக்கையில், அதை இவனும் ரசிப்பான் என என்னை நினைத்துக் கொண்ட அவளது மனம் விசாலமானது. சிலருக்குத் தானே இப்படி வாய்க்கிறது, துளிர்த்ததை பூத்தது என்றும், பூத்ததை துளிர்த்தது என்றும் சொல்வதற்கு.

வீடு திரும்புகையில் தெருவீதிகளில் வைக்கப்பட்டிருந்த விளக்குகளைப் பார்த்துவிட்டு ‘இன்னைக்கு கார்த்திகையாடா..’ என்றாள். தலையசைத்தேன். ஆஸ்பத்திரியில இருந்ததால நாளும் தெரியலை. கிழமையும் தெரியலை எனச் சொல்லி சிரித்தாள். என்னிடத்தில் எப்போதுமே இல்லாத அந்தச் சிரிப்பு அம்மாவிடத்தில் இருந்தது கூட, அவளை அதீதமாக பிடித்துப் போனதற்கு காரணமாக இருக்கலாம். நம்மிடம் இல்லாத ஒன்றை, இருக்க வேண்டியவை என நினைக்கின்ற ஒன்றை இன்னொருவரிடத்தில் காண்கின்ற போது, அது வேறொரு விதமான மகிழ்ச்சியை அல்லவா தருகிறது.

வீட்டிற்கு வந்தவுடன் அம்மா ஏற்றுவதற்கென நான் வாங்கி வந்த துளசிமாட மண்விளக்குகள் தயார்படுத்தப்பட்டு கூடத்தில் வைக்கப்பட்டன. தீக்குச்சியைக் கொளுத்துகையில் தன்னிலை மறந்த பதட்டம் அவளைத் தொற்றிக் கொள்ள, அச்செயலிலிருந்து தன்னிச்சையாக தன்னை விடுவித்துக் கொண்டு விளக்கேற்றினாள். சில நிமிடங்களில் திரியில் தேங்கியிருந்த எண்ணெய் துளியொன்று செஞ்சுடர் வழியாக தரையில் வடிந்து, கூடத்தினுள் மெல்லப் பிரகாசம் விரிய ஆரம்பிக்க, அம்மா இப்போது முன்னிலும் அழகாயிருந்தாள்.

– 20-10-2019 ‘காமதேனு’ இதழில் வெளியான கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *