கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: October 28, 2013
பார்வையிட்டோர்: 9,483 
 
 

மணி செண்ட்ரலில் ரயில் இறங்கி ஆட்டோ பிடித்து அபிராமபுரத்திலுள்ள கேசவனின் வீட்டுக்கு போய் இறங்கினபோது லேசாய் ஆச்சரியப்பட்டான். கேசவனின் வீடு காலி செய்யப்படுகிற முகாந்திரமாய் வீடு நிறைய மூட்டை முடிச்சுகள். அட்டைப் பெட்டிகள். அடுக்கத் தயாராயிருந்த சாமான்கள். குறுக்கும் நெடுக்குமாய் ஒழுங்கில்லாமல் சோஃபா, கவிழ்ந்த சேர்கள், நியூஸ் பேப்பர் குப்பைகள். கயிறுகள். பேக்கிங் டேப் சுருள்கள்.

மணி பொருட்குவியல்களுக்கு ஓரமாய் ட்ராவல் பேகை வைத்துவிட்டு வியப்புடன் புரியாமல் கேசவனைப் பார்த்தான். “வீடு காலி பண்றீங்களா?” என்றான்.

“ஆமாண்டா..”

“எந்த ஏரியா?”

“இங்க இல்லடா. ஊருக்கே போறோம்..”

“சென்னையை விட்டுட்டா?”

கேசவன் புன்னகையுடன் ஆமாம் என்றான். “இன்னும் ரெண்டு நாள்ல..”

மணி நம்பிக்கையில்லாமல் வீட்டின் கோலத்தை கண்களால் அளவெடுத்துவிட்டு “என்னடா சொல்ற?” என்றான்.

அவனுடைய குழப்பத்தை இடை மறித்து “நீ முதல்ல ரிஃப்ரெஷ் பண்ணு. அப்றம் விவரமா சொல்றேன்” என்றான் கேசவன்.

டவல், டூத் ப்ரஷ், உள்ளாடைகளுடன் யோசனைகளையும் சுமந்துகொண்டு மணி பாத்ரூமுக்கு நகர்ந்தான். இன்னும் பொட்டலம் கட்டப்படாமலிருந்த பக்கெட்டின் குளிர் நீரால் ரயில் பிரயாணத்தின் கசகசப்பை தணிக்கும்போது கேசவன் சொன்னது மண்டைக்குள் மீண்டும் ஊடுறுவித் தாக்கியது.

என்ன பிரச்சனை? ஏன் திடீரென்று சென்னையை விட்டுச் சொந்த ஊருக்குத் திரும்பவேண்டும்? கேசவன் சென்னையில் இருக்கிறான் என்றுதானே நானே தைரியமாய்க் கிளம்பி வந்திருக்கிறேன். ரொம்பவும் பழகின நண்பன் என்று அவனொருவன்தான் இங்கே இருக்கிறான். ஏன் இந்த அபத்த முடிவு? நல்ல வேலையில்தானே இருந்தான்? இல்லை சும்மா விளையாடுவதற்காகச் சொல்கிறானா?

கேசவன் ஒன்பது வருடங்களுக்கு முன்பே ஊரில் பார்த்துக் கொண்டிருந்த சின்ன உப்புமாக் கம்பெனி வேலையை உதறிவிட்டு இள மாலை நேரத்தில் சேலத்திலிருந்து கோவை எக்ஸ்ப்ரஸ் பிடித்து சென்னைக்கு ரயிலேறினவன். முன்பின் வந்து பழக்கமில்லாத நகரம். வேறு மாதிரி மனிதர்கள். வேறுவிதமான பேட்டைகள். பேச்சு வழக்கங்கள். எப்போதும் உச்சியில் நின்றெரிகிற வெயில். ட்ராஃபிக் நெரிசல். வேர்வைக் கசகசப்பு. அரை பக்கெட் தண்ணீரில் குளியல். ஆட்டோ அவஸ்தைகள். பஜார்கள். பேஜார்கள். இதெல்லாம் தாண்டின மனோதிடத்துடன் சென்னையில் எளிதாக ஒட்டிக் கொண்டும் விட்டான்.

வந்ததும் முதலில் அதிகம் பிரபலமில்லாத கம்பெனியில் அசிஸ்டெண்ட் மானேஜராகச் சேர்ந்தான். அப்புறம் மணிக்கும் அவனுக்கும் தூரம் அதிகமாகி இருவரும் தொடர்பு எல்லைக்கு வெளியே போய்விட்டார்கள். எப்போதாவது திடீரென்று நினைத்தாற்போல் தொலைபேசிக் கொள்வார்கள். இடையில் கேசவன் வேறு கம்பெனிக்கு மாறினதும் அங்கே அவனுக்கு காரெல்லாம் கொடுத்திருப்பதையும் ஒரு தடவை சொன்னான். ஊருக்கு வந்து சொந்தத்திலேயே ராதிகாவை பெண் பார்த்து திருமணம் செய்துகொண்டான். சென்னை வந்து பிள்ளைப் பேறு. காலம் கரைந்தும் கடந்தும் போனது. இந்நேரம் அவன் தொழில்முறையில் வளர்ந்து பெரிய ஆளாகி சென்னையில் செட்டிலாயிருப்பான் என்று பார்த்தால் இங்கே அவன் ஊரைப்பார்க்க பெட்டி கட்டிக்கொண்டிருக்கிறான்.

மணி குளியல் முடித்து உடைமாற்றி ஹாலுக்கு வந்தான். ஹாலிலிருந்து தெரிந்த பெட்ரூமில் இன்னும் தூக்கம் கலையாமல் அவன் இரண்டரை வயதுக் குழந்தை எந்த உலகக் கவலைகளுமில்லாமல் பொம்மை மாதிரி கவிழ்ந்து உறங்குவதைப் பார்த்தான்.

கேசவனும் இன்னொரு பாத்ரூம் உபயத்தில் காலைக் கடன்கள் முடித்துத் திரும்பியிருந்தான். இருவரையும் சாப்பிட வரச்சொல்லி அவன் சரிபாதி ராதிகா கூப்பிட்டாள். டைனிங் டேபிளை லாஃப்டிலிருந்து பொருள்களை எடுப்பதற்காக உள்ளறையில் போட்டிருந்ததால் கொஞ்சம் அகன்ற சமையலறைத் தரையில் சாப்பிட உட்கார்ந்தார்கள். ராதிகா பறிமாறின இட்லியை மிளகாய்ப் பொடியுடன் சூடாக உள்ளே தள்ளும்போது கேசவன் விஷயத்தைச் சொல்ல ஆரம்பித்திருந்தான்.

“சென்னை வேண்டாம்னு முடிவு பண்ணிட்டோம். ஆஃபிஸ்ல ரெசிக்னேஷன் எழுதிக் குடுத்துட்டேன். ரொம்ப நாளாவே பிரச்சனைடா. இந்த ஊர் எனக்கு லாயக்குப்படலை. சரியா எதுவும் ஒர்க் அவுட் ஆகலை. ஒரு விதத்துல ரிட்டர்னிங் வித் எம்ட்டி ஹாண்ட்ஸ்னு வெச்சுக்கயேன். திரும்பவும் நம்ம ஊருக்கே..! பேக் டு ஸ்கொயர் ஒன்.”

“அப்படி என்னடா பிராப்ளம்?”

“இருக்குடா.. நிறைய இருக்கு..”

கேசவன் மெதுவாகச் சொல்ல ஆரம்பித்தான். சென்னையில் தனக்கு ஏற்பட்டதெல்லாம் தொடர் தோல்விகள்தான் என்றும், இந்தப் பெருநகரம் அவனுக்கு ஏமாற்றத்தைத் தவிர வேறெதையும் அளிக்கவில்லையென்றும், இங்கே எத்தனை வேலை செய்து எவ்வளவு சம்பாதித்தாலும் வரவுக்கும் செலவுக்கும் சரியாக இருப்பதாகவும், கொஞ்சமாய் கடன்கூட ஆகிவிட்டதாகவும் சொன்னான்.

அவன் சொல்லச் சொல்ல மணி இட்லி தொண்டைக்குள் இறங்காமல் கலவையான உணர்ச்சிகளோடு கேசவனை ஏறிட்டான். சென்னையில் வாழ்ந்து சலித்த அலுப்பு ரேகைகளை அவன் முகத்தில் தேடிப்பார்த்தான். ஒன்பது வருடங்களுக்கு முன் பார்த்ததைவிட தலை மயிர் லேசாக நெற்றியில் பின்வாங்கி குறைந்திருந்ததைத் தவிர அதிகம் மாறாமல் இளமையாக களையாகத்தான் இருந்தான். எந்தவொரு பிரச்சனையின் சுவடையும் அவன் கண்களிலிருந்து படிக்க முடியவில்லை. அவன் கொஞ்சம் அழுத்தக்காரன்தான்.

“நீயும் சென்னைக்கே வந்துருன்னு என்கிட்ட கூட சொல்லிட்டிருந்தியேடா மச்சி.!”

“சொன்னேன். ஆனா..”

கேசவன் தயக்கமான குரலில் தனது சிற்றுரையை சிற்றுண்டியுடன் ஆற்ற ஆரம்பித்தான். அதன் சாராம்சம் என்னவென்றால், சென்னையின் கம்பெனி முதலாளிகளுக்கு எப்போதும் காசுதான் குறி. உழைப்புக்குத் தகுந்த மரியாதையும் ஊதியமும் கிடையாது. சரியான ஆட்களை சரியான இடத்தில் வைத்திருப்பதில்லை. சொந்த ஊரில் கஞ்சியோ கூழோ குடித்து ஏதாவது ஒரு வேலை பார்த்து குடும்பத்துடன் நிம்மதியாய் இருப்பதைவிட சாலச் சிறந்த காரியும் இப்பூவுலகில் கிடையவே கிடையாது. இத்யாதி.

“கெட்டும் பட்டணம் சேர்-ன்னு காலகாலமா சொல்றாங்க.. ஒருத்தன் பட்டணம் வந்து கெட்டுப் போனேன்னு சொல்றத முதன் முதலா கேக்கறேன்..”

“அதெல்லாம் சும்மாடா.. சென்னை பொழைக்க லாயக்கில்லாத ஊரு..” கேசவனின் குரல் இப்போது திடமாய் அறுதியிட்டு ஒலித்தது.

“ஒன்பது வருஷமா எதுவும் தேறலைங்கறியா?”

“தேறிச்சு.. ஆனா தேறின வேகத்துல கரைஞ்சும் போச்சு.. ஓடின ஓட்டத்துக்குப் பலனா ஒரு ஓட்டைச் சட்டிகூட கிடைக்கல. முட்டி தேஞ்சதுதான் மிச்சம்”

ரொம்ப மிகைப்படுத்துகிறானோ என்று தோன்றியது மணிக்கு.

மேற்கொண்டு எதுவும் கேட்பதற்குள் கேசவனின் செல்ஃபோன் கந்த சஷ்டி கவசம் பாட அதை எடுத்து.. ‘ஆமாங்க.. நாளன்னிக்கு காலைல பதினொரு மணி.. ஓபன் கண்டெய்னரா.. க்ளோஸ்டு இல்லையா? என்ன சார் எய்ட் தவுசண்ட்டுங்கறீங்க.. ஆறு ரூபாய்க்கெல்லாம் வர ரெடியா இருக்காங்களே… ஆமாங்க.. பேக்கிங்.. லோடிங்… அன்லோடிங்.. ரீ செட்லிங்.. சேலம் செவ்வாய்ப்பேட்ட.. ஆமா.. ஃபைனலா சொல்லுங்க.. அட்வான்ஸ் எதுனா குடுக்கணுமா…” என்று அங்கேயும் இங்கேயுமாக சாமான்களுக்கு நடுவே நகர்ந்து நகர்ந்து கொஞ்சநேரம் பேசிக் கொண்டிருந்தான்.

கிளம்புவதென்று முடிவே பண்ணிவிட்டானா?

ராதிகா மணியின் தட்டில் குறைந்து போயிருந்த சட்டினியின் அளவை கொஞ்சமாய் அதிகப்படுத்திவிட்டு “ஆமாங்க மணி. வந்ததிலிருந்தே எனக்கும் இந்த ஊரு சுத்தமா புடிக்கல. ஒரே குப்பை. தூசி.. கொசு.. ஊராங்க இது? காசு இருக்கறவங்களுக்குத்தான் இது சொர்க்கம். நம்பள மாதிரி மிடில் க்ளாஸ் ஜனங்களுக்கு சரிவராது. இங்க வந்ததுக்கப்புறம் சொந்தக்காரங்க மூஞ்சியெல்லாம் கூட மறந்து போயிருச்சுங்க. நானும் ரொம்ப நாளா இவர்ட்ட சொல்லிக்கிட்டிருக்கேன். இப்பதான் கொஞ்சம் அசைஞ்சு கொடுத்திருக்காரு. திடீர்னு சரி போதும் கிளம்பலாம்னுட்டாரு..” என்றாள் உற்சாகமாய்.

கேசவனும், ராதிகாவும் மாறி மாறிப் பேசினது மணியை மெதுவாய் ஏமாற்றத்தின் உச்சிக்குச் கொண்டு சென்று கொண்டிருந்தன. அவனால் இன்னும் நம்ப முடியவில்லை.

மணிக்கும்கூட இவ்வளவு பெரிய காஸ்மோபாலிட்டன் சிட்டிக்கு வந்து நாலு காசு சம்பாதித்து சொந்த வீடு, கார், பேங்க் பேலன்ஸ் என்று செட்டிலாகிவிட வேண்டுமென்று அப்போதே துடிப்பாக இருந்தாலும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் சதி பண்ணிவிட்டது. இப்போதுதான் ஒரு வாய்ப்புக் கிடைத்து எதிர்காலத்திற்கான ஒரு சில அறை குறை ஐந்தம்சத் திட்டங்களுடன் அவன் கிளம்பி வந்திருந்தான். இங்கே என்னடாவென்றால்..

“ராதிகா.. தப்பா நினைச்சுக்கலைன்னா நான் ஒண்ணு சொல்றேன். கேசவனோட அப்ரோச்ல ஏதோ தப்பு இருக்கும்ன்னு நான் சந்தேகப்படறேன். சென்னைலயே எதுவும் கிழிக்க முடியலேன்னா வேற எங்கயும் எதுவும் கிழிக்க முடியாதுன்னுதான் எனக்கு ஸ்ட்ராங்கா படுது. பிழைக்க எவ்வளவோ சாத்தியங்கள் இருக்கிற ஊர்ங்க இது. இவனுக்கு மட்டும் எப்படி ஃபெயிலியர் ஆச்சு? அதுவும் கேசவன் திறமையான ஆசாமி வேற..”

ராதிகா பதில் சொல்வதற்குள் கேசவன் இடை புகுந்து “அப்படியெல்லாம் இல்ல மணி! அப்ரோச் எல்லாம் நல்ல அப்ரோச்தான். நானும் சென்னைக்கு வந்து ரெண்டு மூணு கம்பெனி மாறிட்டேன். என்னை மாதிரி சின்சியரான ஆள் கிடையாது. ஆனா வளர விடறாங்களா? எல்லா இடத்திலேயும் ஒரே மாதிரி ஆளுங்க. போட்டி. பொறாமை. போட்டுக் குடுக்கறது.. பெரிய தலைகளுக்கு கூஜா தூக்கி உள்ளுக்குள்ளேயே அரசியல். சம்பள விஷயத்தில எப்பவுமே தப்பான கமிட்மெண்ட்-தான் குடுப்பாங்க. கடைசில நம்ம பொழப்புதான் நாய்ப்பொழப்பு. இதெல்லாம் தாண்டி நிக்கனும்னா ரொம்ப மன வலிமையோட இருக்கணும்டா. முடியலேன்னா கண்டுக்காம போயிரணும். இல்லேன்னா நாமளும் கூஜா தூக்கணும். ச்சே என்னடா வாழ்க்கை இதுன்னு அப்பப்போ தோணிட்டே இருந்தது. ராதிகாவுக்கும் இந்த ஊர் புடிக்கலை. ரோஹித்தும் இன்னும் ஸ்கூல் போக ஆரம்பிக்கலை. ஸோ… முடிவெடுத்துட்டேன். கொஞ்ச நாள் நாம விருப்பப்படறமாதிரி வாழ்ந்துட்டுப் போலாமே..” என்று கண் சிமிட்டினான்.

மிகுந்த நம்பிக்கையுடன் சென்னை வந்த இறங்கின மணிக்கு அவர்களின் பேச்சும், புரண்டு கிடக்கிற வீட்டின் கோலமும் அயர்ச்சியைத் தந்தாலும், அவன் தளரவில்லை. இட்லிக்கப்புறம் வந்த சூடான காப்பியை உள்ளே தள்ளிக் கை கழுவிவிட்டு வீட்டை மறுபடி நிதானமாய் நோட்டமிட்டான்.

ஒரு ஹால், இரண்டு படுக்கை அறைகள், டைனிங் ஏரியா, சமையலறை, துணி காய்கிற பால்கனியிலிருந்து பக்கத்து அபார்ட்மெண்ட் ப்ளாக்குகள் தெரிந்தன. அபிராமபுரத்தில் நல்ல லொக்கேஷனில் நல்ல வீடு. சோஃபா, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், எல்.சி.டி டிவி, குளிர் சாதனம், வரவேற்பரை ஊஞ்சல் என்று வீடு கொள்ளாத பொருட்கள். வசதியாகத்தான் இருந்திருக்கிறான். வரும் போது வெறுங்கையுடன்தான் வந்தான். ஆனால் திரும்பிப் போகும்போது அப்படிப் போவதாகச் சொன்னால் யாருமே ஒத்துக்கொள்ளத் தயங்குவார்கள்.

எதையும் இன்னொரு தடவை முயற்சித்துப் பார்க்காமல் பின் வாங்குவதில் அர்த்தமில்லை என்று கூறினான் மணி. கேசவன் மனது வைத்திருந்தால் நிச்சயம் இந்த நிலைமையை மாற்றியிருக்கலாம் என்றான். “அவசரப்பட்டு முடிவெடுத்த மாதிரி தெரியுது கேசவா.. வாழவைக்கும்னு நம்பினதுனாலதான் நான்கூட சென்னைக்கு வரலாம்னு முடிவெடுத்திருக்கேன். அது மட்டுமில்ல..”

குப்புறக் கிடந்த பாலிவினைல் சேர் ஒன்றை நிமிர்த்திப் போட்டு உட்கார்ந்தபின் சொன்னான்.

“நான் இங்க வந்தது ஏதாவது ஒரு இடத்துல வேலைக்கு சேர்ரதுக்கு இல்ல. ஒரு ஃப்ரெண்டுகூட சேர்ந்து ஒரு பிஸினெஸ் ஆரம்பிக்கலாம்னு ஐடியா. நீ கூட விருப்பப்பட்டா ஒரு பார்ட்னரா சேந்துக்கலாம் கேசவா. இப்பக் கூட ஒண்ணும் கெட்டுப் போகலை.. சாமான் எல்லாத்தையும் அந்தந்த இடத்துல மறுபடி எடுத்துவெச்சுட்டாப் போச்சு..” என்று சிரித்தான்.

கேசவ் தீவிரமான யோசனையுடன் மூன்று நாள் தாடியைச் சொறிந்தான். ராதிகாவைப் பார்த்தான். மணியைப் பார்த்தான். பின் மோட்டுவளை ஃபேனையும் அவன் யோசனைப்பார்வையின் எல்லைக்குள் கொண்டுவந்தான்.

“நிறைய இழந்துட்டேன் மணி. மறுபடியும் இந்த ஊர்ல பூஜ்ஜியத்திலிருந்து ஆரம்பிப்பது கஷ்டம்.”

எல்லாப் பெரிய கணக்குகளும் பூஜ்ஜியத்திலிருந்துதான் ஆரம்பிக்கின்றன என்றும். ஆனால் பூஜ்ஜியத்திற்கு உள்ளேயே நின்றுகொண்டிருக்காமல் பூஜ்ஜியத்திற்கு வெளியே ஓடிக்கொண்டிருப்பதுதான் முக்கியம் என்றான் மணி கொஞ்சம் தத்துவார்த்தமாய்.

“இல்லடா. முடிவு பண்ணியாச்சு. ஆஃபிஸூல இன்னியோட கடைசி.. ரிஸைன் லெட்டர் குடுத்துட்டேன். ஹவுஸ் ஓனர்கிட்ட காலி பண்றேன்னு சொன்ன மறுநிமிஷம் இந்த வீட்டை வேறொருத்தருக்குப் பேசி வாடகை செக்யூர் பண்ணிக்கிட்டார். கண்டெய்னருக்குச் சொல்லியாச்சு. ட்ரெய்ன் டிக்கெட் புக் பண்ணியாச்சு. இனி ஒண்ணும் பண்ணமுடியாது… கதம் கதம்.”

அதன் பிறகு கொஞ்ச நேரத்திற்கு இருவரும் மௌனமாய் இன்னும் கழற்றப்படாமல் உயிரோடிருந்த டி.வி.யில் கருங்குரங்குகள் ஏரியில் வாளை மீன் பிடிக்க முயற்சிப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குரங்கைப் பிடிக்க முதலை முயற்சித்துக் கொண்டிருந்தது. சர்வைவல்!!

மணிக்கு எல்டாம்ஸ் ரோட்டில் யாரையோ பார்க்கவேண்டிய வேலையிருந்தது. கேசவன் ஆஃபிஸ் போகிற வழியில் அவனை அங்கே விட்டுவிடுவதாகச் சொன்னான்.

ராதிகாவிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள். காரில் போகும்போது. “இந்த காரும், பின் சீட்ல இருக்கற லாப்டாப்பும் இன்னையோட கடைசி. ஆஃபிஸ்ல ஒப்படைக்கணும்.”

“நெஜமாவே போறியாடா?” என்றான் மணி வருத்தம் தோய்ந்த வலுவிழந்த குரலில்.

ரொம்ப நேரம் அமைதியாயிருந்த கேசவ் “உன்கிட்ட சொல்றதுக்கு என்ன மணி… ” என்று இழுத்தான்.. லேசாய் எச்சில் விழுங்கிக் கொண்டு.. “போன வருஷம் வரைக்கும் எல்லாமே நல்லாதான் போயிட்டிருந்துச்சு மணி!. வீடு வாழ்க்கை எல்லாமே! ஆனா லைஃப்ல திடீர்ன்னு ஒரு பொண்ணு. ஆஃபிஸ்ல அறிமுகமானா மச்சி. மொதல்ல ஃப்ரெண்ட்ஷிப்பாதான் ஆரம்பிச்சுது. அப்றம் என்னமோ ஒரு படு பயங்கர அட்ராக்ஷன். போகப் போக வேற மாதிரி கொஞ்சம் நெருக்கமா ஆய்டுச்சு… அந்தப் பொண்ணு பயங்கர பொஸஸிவ்… யாருக்கும் தெரியாம ரகசியமா போய்ட்டிருந்தது. இப்ப மோப்பம் புடிச்சுட்டாங்க. கொஞ்சம் பிரச்சனையாயிருச்சு. அது எப்போ வேணும்னாலும் படபடன்னு வெடிக்கிற நிலைமை.” என்றான்.

மணியின் முகத்தில் லேசான அதிர்ச்சியை ஓரக்கண்ணால் கவனித்துக் கொண்டே தயங்கித் தொடர்ந்தான்.

“விஷயம் ராதிகா காதுக்கு எந்த நிமிஷம் வேணும்னாலும் வந்துரும். வந்துருச்சுன்னா அப்றம் நான் காலி. என் பொழப்பு நாறிப் போய்டும். பத்ரகாளியாகி ருத்ரதாண்டவம் ஆடிடுவா.. எல்லாத்தையும் விட்டுட்டு உடனே ஊருக்குத் திரும்பிப் போறதுதான் பிரச்சனை தீர்ரதுக்கு ஒரே வழி இப்போதைக்கு. அதையும் உடனே செய்யணும். அதுக்குக் காரணமா வேலை சரியில்லை. ஆஃபிஸ் சரியில்லை. ஊர் பிடிக்கலைன்னு எல்லார்கிட்டேயும் பில்டப் பண்ணி வெச்சிருக்கேன். வீட்ல நீ கேட்டப்போ கூட ராதிகா முன்னால நான் அப்படித்தான் சொல்ல முடிஞ்சுது….

பெரிதாய் ஒரு பெருமூச்சு விட இடைவெளி எடுத்துக்கொண்டு, “மத்தபடி பொழைக்கறதுக்கு சென்னை அம்சமான ஊருடா. நீ தைரியமா வந்து உன் பிஸினஸை ஆரம்பி. நல்லா வருவே” என்றான்.

– தமிழோவியம் தீபாவளி மலர் – 2010

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *