கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: November 16, 2016
பார்வையிட்டோர்: 13,501 
 
 

‘சாப்பிட்டாயா..’

‘ம்ம்..’

‘இன்னைக்கு ஏன் இந்த கோபம்..’ என்னும் கேள்விக்கு விக்கி விக்கி அழத்தொடங்கினாள்.

‘உன் பலகீனமே அழுகைதான் சௌந்தர்யா.. நிறுத்திவிட்டு பதில் சொல்லு, கோபம் ஏன் வந்தது..’

‘அவங்க எல்லோருக்கும் நான் ஒரு ஜடப்பொருள் ஆயிட்டேன். இவ்வளவு நாளும் நான் செய்ததெல்லாம் மறந்துப்போச்சு. முன்னாடியெல்லாம் இந்த மனுஷன் பிள்ளைங்களைப் பத்தி, அவங்க அம்மா அப்பாவைப் பத்தி, அவரு தம்பி, தங்கச்சியை பத்தியெல்லாம் கவலைப்பட்டிருப்பாரா? நான்தானே எல்லாமே இழுத்துப்போட்டு செய்தேன். அம்பத்தஞ்சு வயசுக்கு மேலதான் நான் சரியில்லாம தெரியிறேனா. மகி எப்படி பேசினா, பார்த்தேல்ல..அம்மான்னு கூட அவளுக்கு மரியாதையை இல்ல. இவரும் அவகூட சேர்ந்துகிட்டு அதேதானே செய்றார்..’

இதற்கு மேல் பேசமுடியாமல் அழத்தொடங்கினாள்.

‘நீ ஏன் பேசாம இருக்கே. அவங்க அப்படி பேசும்போது, எதிர்த்து நில்லு. அடுத்த தடவை உன்னை அவங்க காயப்படுத்தும் போது, நான் சொல்ற மாதிரி செய். அப்போதான் உன்னை அவங்க மதிப்பாங்க. சரி, இப்போ அழுகையை நிறுத்து சௌந்தர்யா. அந்த கிழவி சத்தம் கேட்குது. போய் பாரு..’

‘ஆமா, நீ அடுப்படிக்குள்ளேயே இருந்துகிட்டு பேசு. என் கஷ்டம் எனக்குதானே தெரியும்’ என்றவாறே கண்களைத் துடைத்துக் கொண்டு, மாமியாரின் ரூம் நோக்கி நடந்தாள்.

அது காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தது சமையல் மேடையில்.

நாத்தானரின் பெண்ணை இன்று பார்க்க வராங்க. வடை, கேசரி, சேவை எல்லாம் முடிந்தது. இன்னும் அவங்க எல்லாம் வந்தபிறகு, பால் சூடு பண்ணிக்கலாம் என்று கணக்கு பண்ணிவிட்டு, ஹாலை எட்டிப் பார்த்தாள் சௌந்தர்யா. ராகவன் யாரிடமோ போனில் கத்திக் கொண்டிருந்தார். ஏதோ ஆபீஸ் விஷயம் என்று புரிந்தது.

நாத்தனார் அவள் பெண்ணைக் கூட்டிகிட்டு வருவதற்கு முன் நாம டிரஸ் மாத்திருவோம் என்று நினைத்துக் கொண்டே நகர்ந்தாள். சேலை கட்டிக்கிட்டு இருக்கும் போதே, இவரின் குரல், சுசீலா, ராகவியின் குரல்கள் எல்லாம் காதில் விழுந்தன. ‘வந்துட்டாங்க போல’ என்று யோசிப்பதற்குள், அவர் இவளைக் கூப்பிடும் சத்தமும், அவர் தம்பியின் பைக் நிறுத்தும் சத்தமும் கேட்டது.

ஹாலுக்கு வந்ததும், ‘தத்தி மாதிரி ஒரு நிதானம். வயசுதான் ஆகுது, மாறவேயில்ல. இன்னும் முட்டாளாவே இருக்கா. இவளை வச்சுகிட்டு குடித்தனம் நடத்த என் ஒருத்தனைத் தவிர யாராலேயும் முடியாது..’ என்று நமட்டு சிரிப்புடன் இவர் அவர்களிடம் சொல்வது கேட்டது.

இதுக்கு முன்பும் இவர் இப்படிதான் சொல்லிக்கிட்டு இருந்தாரா என்று யோசித்துப் பார்த்தாள். இல்லையே, அப்போ இப்போது மட்டும் ஏன் இப்படி ஆகிட்டார். அவருக்கு வயசாகிவிட்டதனாலா என்ற நினைப்பு வந்தபோதே, கொஞ்சமா சிரிப்பும் எட்டிப் பார்த்தது. அதை கவனித்த சுசீலா சும்மாயில்லாமல், ‘அண்ணே, நீ சொன்னது சரிதான்..’ என்று கமெண்ட் அடித்தாள். எல்லோரும் சிரித்து வைத்தார்கள்.

‘நல்லவேளை எனக்கு உன்னை மாதிரி அமையலை’ என்று ராமனும் அவன் பங்குக்கு பொண்டாட்டியின் தோளை தட்டி சொல்ல, அவளும் வெகுவாய் சிரித்துக் கொண்டாள். கொஞ்சமாய் கோபம் எட்டிப் பார்த்தது சௌந்தர்யாவுக்குள். இருந்தும் மந்தமாய் சிரித்து வைத்தாள்.

அடுக்களைக்குள் புகுந்தாள். அடுப்பு மேடையில் அது உட்கார்ந்திருந்தது.

‘என்ன சுரணையே இல்லாமல் கேட்டுட்டு வந்துட்டியா’ என்று கேட்டதும், அழுகை வந்தது. யாரோ வரும் சத்தம் கேட்டு கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

நாத்தனார் உள்ளே வந்து, எல்லா பாத்திரங்களையும் திறந்துப்பார்த்து, ‘என்ன மைனி, இப்போவும் வடையும் கேசரியுமா. வேற ஏதாவது புதுசா செய்திருக்கலாமே. எங்க வீடு மட்டும் உங்க வீடு மாதிரி பெருசா இருந்திருந்தா, அங்கேயே வரசொல்லியிருப்போம். நானே வேற ஏதாவது நல்லா செய்திருப்பேன்.’ என்று புலம்பினாள். இவளும் உம் கொட்டி வைத்தாள்.

மகிக்கு முதலில் வந்து பார்த்த மாப்பிள்ளையே அமைந்துவிட்டது. ஆனால் ராகவிக்கு இதோடு நாலு வரன் வந்து பார்த்தாச்சு. ராகவி கொஞ்சம் குட்டையாக அவங்க பாட்டியை போலவே உருவம். பெண் பிடிக்கவில்லை என்று நேரடியாகவே காரணம் சொல்லி தட்டிப் போயிற்று வரன் எல்லாம்.

ராகவிக்கு வந்திருக்கும் இந்த வரன், தஞ்சாவூரில் பெரிய பண்ணைக்காரர்களாம். அமைந்துவிட்டால் சுசீலாவின் தொல்லை குறையுமே என்று வேண்டிக் கொண்டாள். மாப்பிள்ளையும் குட்டையாக இருக்கவே சௌந்தர்யா நினைத்தாற்போலவே வரன் தகைந்து, கல்யாண வேலை தொடங்கியது.

முழுவதுமாய் சௌந்தர்யா வேலைக்காரியாக மாறிவிட்டாள் ராகவிக்கு கல்யாணம் நிச்சயம் ஆன நாளிலிருந்து. இதே போலதான், தன் இரு பிள்ளைகளின் திருமணத்தின் போதும் நிகழ்ந்தது. செந்தில் கல்யாணத்தின் போது, தானே அத்தனை வேலையையும் இழுத்துப்போட்டு செய்து உடம்பு முடியாமல் ஒரு மாதம் படுத்தது நினைவுக்கு வந்தது. இரண்டு நாள் கஞ்சி வைத்துக் கொடுத்துவிட்டு, வீட்டுல வேலை குமிஞ்சுகிடக்குது என்று சொல்லி ஒதுங்கிக் கொண்டவர்கள்தானே இந்த வீட்டு பெண்கள் என்ற கோபம் எப்போதும் உள்ளுக்குள் ஓடும் சௌந்தர்யாவுக்குள். பட்டுபட்டென்று ஏன் அவங்களை மாதிரி நமக்கு பேசத் தெரியலை என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள் தனக்குள்.

ராமனும் சுசீலாவும் இவள் திருமணம் முடிந்து இந்த வீட்டுக்கு வரும்போது, பள்ளி இறுதியில் இருந்தார்கள். அவர்களுக்கும் சேர்த்து இவள்தான் எல்லாம் செய்திருக்கிறாள். சுசீலாவின் இரண்டு அபார்ஷன் பொழுதுகளிலும், அவளின் இரு பிள்ளைகளின் பிரசவத்திற்கும் இவள்தான். ராமனின் மனைவி சுகன்யா வேலைக்கு செல்வதால், அவர்களின் குழந்தைகளும் இங்கேதான். ஆனாலும் நன்றியோ மரியாதையோ யாருக்கும் இல்லை.

பக்கத்து வீட்டில் இருந்தவர்களும் பெண்ணுக்கு பிரசவம் பார்க்க, பிள்ளை வளர்க்க என்று யுஸ் கிளம்பி போய்விட்டார்கள். போகும் பொது சொல்லிட்டு போனாங்க, வீட்டிலேயே அடைஞ்சு கிடக்காதீங்க. உலகம் ரொம்ப பெருசு. உங்க வீட்டுக்காரரை கூட்டிகிட்டு வெளியூருக்கு டூர் போயிட்டு வாங்கன்னு. மாமியாரை விட்டுட்டு எங்கே போவது. நாலு தெரு தள்ளிதான் இவர் தம்பி வீடு. அவ ஆபிஸ் போவதால் பார்க்க சௌகரியமில்லைன்னு மறுத்துருவாங்க.

இப்படியெல்லாம் யோசிக்கவே காலம் கடந்துவிட்டதாய் தோணும். இருந்தும் இந்த ஒன்றிரண்டு வருடங்களாகவே இவர்களின் பாரம் தன் மேல் அதிகமாய் சுமத்தபடுவதாய் உணர்ந்தாள். தனக்கு தானே பேசிக்கொள்ளும் அழும் சந்தர்ப்பங்கள் அதிகப்படுவதை உணர்ந்தாள். பைத்தியமே பிடித்துவிடும் என்று இருந்த ஒரு கணத்தில்தான் அது இவளுடன் வந்து ஒட்டிக் கொண்டது. அவள் தனித்து இருக்கும் போது மட்டும் சரியாய் ஆஜராகிவிடும். அடுக்களையில் அவளின் புலம்பலைக் கேட்க, ஆறுதல் சொல்ல, மனசு விட்டு பேச ஒரு துணையாய் வந்து சேர்ந்தது.

இடையில் ஒரு முறை செந்தில் பெங்களூரில் இருந்து குடும்பத்துடன் வந்து சேர்ந்தான். தன் அம்மாவின் கஷ்டத்தை துளியும் உணராமல், பொண்டாட்டி பிள்ளைகளுடன் டிவி பார்த்துக் கொண்டிருந்தான். அவன் தனித்திருந்த சந்தர்ப்பத்தில், அவனிடம் தன்னை எல்லோரும் வேலை வாங்குவதையும் மதிக்காமலே நடத்துவதையும் சொல்லி அழுதாள் சௌந்தர்யா. தாட்சண்யமே இல்லாமல், சிரித்துக் கொண்டே, ‘நீ அப்படி வச்சிருக்கேம்மா எல்லோரையும். நீதான் அவங்க அவங்களை அந்த அந்த இடத்திலே வைக்கணும். இத்தனை வருஷம் செய்து காமிச்சுட்டே. இனியெல்லாம் ஒன்னும் செய்ய முடியாது..’ன்னு சொல்லிட்டு நகர்ந்துட்டான். அழுகை கண்களை முற்றுகையிட்டது.

அன்று மகாசிவராத்திரி. மறுநாள் அமாவாசை. மாமனாருக்கு காரியம் செய்யவேண்டும். அதை செய்திட்டியா, இதை செய்திட்டியா என்று முடியாமல் படுத்திருந்தாலும் அதட்டும் மாமியாரின் குரல். வேலைக்காரியும் வராமல், அந்த பெரிய வீட்டை நிர்வகிக்க சற்று தடுமாறித்தான் போனாள். இதற்கிடையில் அவர் கூப்பிடும் குரல் கேட்டது.

ஹாலுக்கு போனபோது, குடும்பமே கூடியிருந்தது. இவர் அங்கே ருத்ரமூர்த்தியாய் நின்றிருந்தார்.

‘காலையில தஞ்சாவூரில் இருந்து போன் வந்துச்சா? ‘ என்று கேட்டார்.

‘ஆமா, அந்த அம்மாதான் பேசினாங்க. பொன் உருக்க தேதி ஒன்னு சொன்னாங்க. சரிங்க, கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லி வச்சிட்டேன். வேற வேலையும் இருந்ததுல மறந்துட்டேன் உங்க கிட்டே சொல்ல..’ என்றாள்.

‘இவ்வளவு நேரமா என்கிட்டே சொல்லல, சுசீலா கிட்டே சொல்லல, யார்கிட்டேயும் சொல்லல நீ. அவங்க இப்போ போன் பண்ணி சுசீலா கிட்டே கேட்டபிறகுதான் எங்களுக்கே தெரியுது. இவ்வளவு நேரம் சொல்லாம என்ன பெரிய வேலை உனக்கு. உண்மையிலேயே மூளை இருக்கா…….’ என்று தொடங்கி, அவரின் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகளும் அடை மொழிகளும் அதிகமாய் வந்து விழுந்தன.

அழுது கொண்டே அடுப்படிக்குள் நுழைந்தவளை, எதிர்கொண்டது அது.

‘எதுக்கு அழுறே..’

‘சின்ன பிள்ளைங்க முன்னாடியெல்லாம் எவ்வளவு கேவலமா பேசுறாரு. அப்படியே ஒரு கம்பை எடுத்து அடிக்கலாமான்னு இருந்தது, கழுத்தை நெரிக்கலாமான்னு இருந்தது ..’ என்றாள்.

‘ஏன் செய்யல..இதே மாதிரி உன்னை எத்தனை தடவை மரியாதையில்லாம இவங்க நடத்துவாங்க. நீ என்ன வேலைக்காரியா இவங்களுக்குன்னு கேளு..நான் உன்கூட இருக்கேன். உன்னை இனி நான் காப்பாத்துறேன். தைரியமா போ..இந்த பெரிய பாத்திரத்தை எடுத்துட்டு போ…போய் அவங்க முகத்துலே வீசு..புத்தி வரும் அதுகளுக்கு…’ என்றது.

கோபமும் படபடப்புமாய் பாத்திரத்துடன் வந்தாள் ஹாலுக்கு. இந்த முறை அதுவும் அவளுடன் ஹாலுக்கு வந்தது.

‘போடு கீழே..’ என்று அதிகாரமாய் சொன்னது. டொமென்று நடுவில் போட்டாள் பாத்திரத்தை. எல்லோரும் திரும்பி பார்த்தார்கள் அவளை.

‘அந்த போனை எடுத்து கீழே போடு..உன் கோபம் அவங்களுக்கு புரியட்டும்…’ என்று அதன் கட்டளைக்கு பணிந்து, சௌந்தர்யா ஒவ்வொன்றாய் கீழே தள்ளி உடைத்தாள். சத்தம் போட்டு கத்தினாள்.

‘நான் என்ன உங்களுக்கு வேலைக்காரியா, எனக்குன்னு மனசே இல்லையா…’

‘சரியா சொன்னே…இன்னும் சொல்லு..உன்னை பத்தி என்ன தெரியும்னு உன் கணவர்கிட்டே கேளு ’ அவளின் எதிரில் நின்று சொல்லியது.

‘இவ்வளவு வருஷத்தில என்னைக்காவது என்கிட்டே அமைதியா பேசியிருக்கீங்களா. அவளுக்கு இதை செய்தியா, இவனுக்கு இதை செய்தியான்னு பார்த்து பார்த்து கேட்டீங்களே, எனக்கு என்ன வேணும்னு என்னைக்காவது கேட்டுருக்கீங்களா. என்னங்க தெரியும் என்னைப் பத்தி உங்களுக்கு..’ என்று அடுக்கிக்கொண்டே போனாள்.

‘இனி யாராவது என்கிட்டே வச்சுகிட்டீங்க இருக்கு. அப்படிதானே …’ என்று இடையிடையே அதையும் பார்த்துக் கேட்டுக் கொண்டாள்.

‘ஆமாம்..’ என்றது அது.

எல்லோரும் அவள் யாரிடம் கேட்டு பேசுகிறாள் என்பது புரியாமல், ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். பயந்து ஓரடி பின்வாங்கினார்கள். இப்படி அவள் நடந்து ராகவன் பார்த்ததேயில்லை. ரொம்ப கஷ்டப்படுத்திட்டோமோ என்று ஒரு கணம் யோசிக்க தொடங்கினார்.

‘யார் சொல்லி கேட்டு செய்றா இவ, பேயா என்ன’ என்றார் மாமியார்.

‘பைத்தியம் மாதிரி இருக்கே’ என்றாள் சுசீலா.

‘இது ஏதோ மூளை கோளாறு’ என்றான் ராமன்.

‘இது ஒரு வகை மன அழுத்தம், டிப்ரஷன்’ என்றாள் ராகவி.

‘நம்மை விட்டால் யாரும் கிடையாதே அவளுக்கு. கண்ணுக்கு தெரியாமல் யார் அது..’ என்கிற எண்ண அசைப்பில் இடிந்துப்போய் அமர்ந்தார் ராகவன்.

அவளின் சத்தத்திற்கும் பயமில்லாமல் செய்யும் செயல்களுக்கும் பயந்து எல்லோரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றார்கள். ராகவன் மட்டும் பயமில்லாமல் அவள் கை பற்றி ஆசுவாசப்படுத்தத் தொடங்கினார். இவளுக்கு கண்ணீர் முட்டிக்கொண்டது கண்களில். நேரெதிரே நின்றுக்கொண்டு அது கட்டளையிட்டது,’கையை உதறு’ என்று. உதறினாள் அவரின் கையை. அதன் பேச்சைத் தவிர வேறு எதையும் கேட்பதில்லை என முடிவு செய்தாள்.

அந்த நிமிடத்திலிருந்து, சுதந்திரமாய் அவளுக்கும் விசித்திரமாய் மற்றவர்களுக்குமாய் மாறிப்போனாள் சௌந்தர்யா.

Print Friendly, PDF & Email

4 thoughts on “பிறழ்வு

    1. அது என்பது மனச்சாட்சி அல்ல. ஹலோசினேஷன் (hallucination) என்று சொல்வோமே, பிரமையான குரல். உண்மையில் இது மனபிறழ்வு நோய். அடுக்களை மட்டுமே அறிந்திருக்கும் பெண்களுக்கு ஏற்படுவது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *