தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 12, 2013
பார்வையிட்டோர்: 13,814 
 
 

அந்த பஸ், பார்க்கவே பரிதாபமாக நின்று கொண்டிருந்தது. பலர் முண்டியடித்து ஏற முற்பட, நான் என் கைக்குட்டையை, ஜன்னல் ஓரமுள்ள சீட்டில் போட்டு, அவர்களோடு முட்டி, மோதி, ஒரு வழியாக உள்ளே சென்று விட்டேன்.
பஸ், தன் பயணிகளை குலுக்கியவாறே, மெல்ல பஸ் நிலையத்தை விட்டு வெளியேறியது.
ஜன்னல் வழியே வேடிக்கை பார்த்துக் கொண்டே, என் சிந்தனை வலைக்குள் சென்றேன்.
“ஏண்டா மணி… காலேஜுக்குப் போய் ஒரு வருஷம் ஆகப் போகுது… இன்னும் மொபைல் போன் இல்லன்னு சொல்றியேடா!’
என் பள்ளி நண்பன் கணேஷ் கேட்க, “அது என்னடா… காலேஜ் போய் ஒரு வருஷத்துக்குள்ள மொபைல் போன் வாங்கிடணும்ன்னு எதுவும் கட்டாயமா!’ என, பதிலளித்தேன்.
பாசம்“இல்லடா… நீ வெளியூர்ல, அதுவும் 200 கி.மீ.,க்கு அப்பால் போய் படிக்கிற. மொபைல் போன் இருந்தா, அப்பாவோ, அம்மாவோ, ஏதாவது அவசரம்ன்னா பேசுவாங்களே… அதான் சொன்னேன்!’ என்றான்.
“காலேஜ்ல எப்படியும் மொபைல் போன் யூஸ் பண்ணக் கூடாது; ஹாஸ்டலில் தான் வச்சிருக்கணும். அதுவும் இல்லாம, எனக்கு மொபைல் போன் யூஸ் பண்றதில் எல்லாம் இன்ட்ரஸ்ட் இல்ல மச்சி…’ என, நான் அந்தப் பேச்சை முடிவுக்குக் கொண்டு வந்தேன்.
கணேஷிடம் அப்படிக் கூறினாலும், எனக்கும் மொபைல் போன் வாங்க வேண்டும் என ஆசை தான். இருந்தாலும், கணேஷ் கூறியது சரிதான். வீட்டிலிருந்து யாராவது அழைத்தால், என் வகுப்புத் தோழன் கார்த்தியின் மொபைல் போனுக்குத்தான் அழைப்பர். அவனும், சங்கடம் பார்க்காது, ஒவ்வொரு முறையும் என்னிடம் வந்து கொடுப்பான். ஆனால், இது, எத்தனை நாளைக்கு?
விடுமுறை நாட்களில் ஊருக்குக் கிளம்பும் போது, எல்லா சகாக்களிடமும் தவறாது கூறி விடுவேன். “டே மாம்ஸ்… எவனும் வீட்டுக்கு போன் பண்ணிடாதீங்க… அப்பா எடுத்து பேசிட்டார்ன்னா, தேவையில்லாம உங்களுக்கும் திட்டு விழும்; எனக்கும் திட்டு விழும்…’ அந்தளவிற்கு வீட்டில் கட்டுப்பாடு.
“”தம்பி டிக்கெட்டு…” என நடத்துனர் வந்து நிற்க, என் சிந்தனையை நிறுத்தி விட்டு, டிக்கெட் வாங்கிக் கொண்டேன்.
சரியான சில்லரை இருந்தும், ஐம்பது ரூபாய் நோட்டை நீட்ட, அவரும் முணுமுணுத்தபடி, டிக்கெட்டையும், சில்லரை பாக்கியையும் கொடுத்தார்.
எது எப்படியோ, இப்போ ஒரு மொபைல் போன் இருந்தா நல்லாயிருக்கும். ஆனால், பணம் தானே பிரச்னை.
நிச்சயமாக அப்பாவிடம் கேட்க முடியாது. அப்பாவின் கண்களை நேராக பார்த்து பேசும் அளவிற்கு கூட, எனக்கு தைரியம் வந்ததில்லை. அதுவுமின்றி, அப்பா தன் விருப்பத்திற்கான ஒரு மொபைல்
போனைத் தான் வாங்கித் தருவார். அது, நிச்சயம் எனக்கு பிடிக்காத மாடலாகத்தான் இருக்கும்.
வேறு யாரிடம் கேட்பது. அம்மாவிடம் நிச்சயம் நடக்காது.
அம்மாவிடம் கேட்பதும், அப்பாவிடம் கேட்பதும் ஒன்று தான். அம்மா, பாரதியின், “கண்ணம்மா’ அல்ல; பாரதியின், “செல்லம்மா!’ கணவனுக்குத் தெரியாமல் எதுவும் செய்யக் கூடாது.
அவரே தெய்வம் என, தன்னைத் தானே அடிமைப்படுத்திக் கொண்டவள்.
சேமித்து வைக்கும் பழக்கத்தால், இப்போதைக்கு ஆயிரம் ரூபாய் தான் இருக்கிறது.
“நான் கேட்ட மாடல் மொபைல் போன் ஆயிரம் ரூபாய்க்கு கிடைக்குமாடா…’ என்று, என் நண்பனிடம் கேட்டதற்கு, “நீ கேக்ற மாதிரி மொபைல் போன் வாங்கணும்ன்னா, குறைஞ்சது மூவாயிரம் ரூபாயாவது வேணும்டா மச்சான்…’ என்றான்.
“இரண்டாயிரம் ரூபாய் இருந்தா கொண்டு வாடா… நீ கேட்ட மாதிரி மொபைல். ஆனா, செகண்ட் ஹேண்ட்தான் வாங்கித் தருவேன்…” என்று, இன்னொரு நண்பன் கூறினான்.
“ஒரு தடவை தான் மொபைல் வாங்கணும். ஆனா, அது தரமானதா, பர்ஸ்ட் சேல் ஆக வாங்கணும்…’ என்பதுதான் என் விருப்பம்.
அப்போ பணத்துக்கு என்ன பண்றது. யார் கிட்டயாவது கேட்கலாமா?
ம்… சுசிலா பாட்டி தான் ஒரே வழி. அவங்ககிட்ட கேட்டா, நிச்சயமாத் தருவாங்க.
சுசிலா பாட்டியைப் பற்றி நான் கூறியே ஆக வேண்டும். அதற்கு முன், தாத்தா. ஊரிலேயே பெரிய செல்வந்தர். ஊரில் பல ஜாதியினர் இருந்தாலும், அனைவரையும் ஒற்றுமையாக்கி வைத்திருந்ததால், பக்கத்து ஊர்களிலும், தாத்தாவைப் பற்றி நல்ல விதமாக எல்லாருக்கும் தெரியும்.
ஆனால், ஆறு வருடங்களுக்கு முன், மாரடைப்பால் எங்களை விட்டு பிரிந்து விட்டார். தாத்தா அடிக்கடி கூறி நான் கேட்டது, “என் பொஞ்ஜாதி இல்லேன்னா, நான் ஒண்ணுமில்லாதவனாகத் தான் இருந்திருப்பேன்!’
ஆம்… தாத்தாவின் வெற்றியில், பாட்டிக்குத் தான் மகத்தான பங்குண்டு. பாட்டியை யாருக்குத்தான் பிடிக்காது. எப்போதும் சிரித்த முகமாய், எல்லாரிடமும் உரிமையெடுத்து பேசும் குணமாய், அனைவரையும் கவர்பவள்.
ஆனால், தாத்தாவின் மறைவிற்குப் பிறகு, கொஞ்சம் நடுங்கித்தான் போய் விட்டாள். அவளது ஏழு பிள்ளைகளில், யார் கூப்பிட்டும், தாத்தா வாழ்ந்த வீட்டை விட்டு வரவில்லை அவள்.
நான் பாட்டியைப் பார்த்தே ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. காரணமில்லாமல் இல்லை… ஒரு ஊர்ப் பிரச்னையில், தாத்தாவிற்கும், அப்பாவிற்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு விட, அம்மா குடும்பத்தில் எல்லாரும், அப்பாவுக்கு எதிரிகளாய் தான் தோன்றுகின்றனர். அம்மா மட்டும், அப்பாவுக்குத் தெரியாமல், ஊருக்குப் போய் வருவாள்.
வந்தவுடன், பாட்டி வாங்கித் தந்த எதையாவது கொடுத்து, “அப்பாவுக்குத் தெரியாம வச்சுக்கடா…’ என்பாள். ஆனால், மறுநாளே அப்பாவிடம் உண்மையெல்லாம் சொல்லி, சரண்டர் ஆகி விடுவாள். அம்மாவை நினைத்தால் சிரிப்பு தான் வரும்.
பஸ் நின்றது.
நடத்துனர் கூறிய ஊரின் பெயரைக் கேட்டதும், மனம் பதட்டத்துடன் தன் எண்ணங்களை நிறுத்திக் கொண்டது.
“”காரவயல்ல இறங்க வேண்டியவங்க இறங்கிருங்கய்யா…” என, அவர் சொல்லிய அடுத்த நொடி, முதல் ஆளாய் பஸ்சை விட்டு இறங்கினேன்.
“”ஊருக்குள்ள எப்படிங்க போறது?” என அங்கிருந்த பெரியவரை கேட்டேன்.
“”அந்த நேர் பாதையிலேயே போனா ஊரைத் தொட்டுடலாம். ஆமா… யார் வீட்டுக்கு வந்திருக்கிறவரு?” என, என்னை விசாரித்தார் அந்த பெரியவர்.
“”ராமசாமி அய்யா வீட்டுக்கு வந்திருக் கிறேன்.”
அடுத்த கேள்வியை அவர் ஆரம்பிப் பதற்குள், வேகமாக நடக்கத் தொடங்கினேன்.
பத்து நிமிடம் நடந்து, பாட்டியின் வீட்டை அடைந்தேன்.
பெரிய வீடு என்றாலும், அமைதி அதன் அழகைக் கோரமாக்கியது. தாத்தா இருந்த வரையில், எப்போதும் ஊரார் பலர் வருவதும், போவதுமாக இருக்கும். இந்த வீடு, எப்போதும் சொந்தங்கள் நிறைந்து இருக்கும். ஆனால், இப்போது, தனிமைப்
படுத்தப்பட்டது போல் நின்றது.
கதவு பூட்டியிருந்தது.
“பாட்டி எங்கே?’ மனதுக்குள் எழும்பிய வினா முடிவதற்குள், “”யாருப்பா நீயி?” என்று கேட்டார், மாடுகளோடு வந்த அந்த இள வயதுக்காரர்.
என்னைப் பற்றிக் கூற, அவரும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் எனக்கு மச்சான் முறையாம்.
“”பாட்டி எங்கே?”
“”பின் வாசல் வழியாப் போய் பாருப்பா… கிழவி எப்பவும் முன் வாசலைப் பூட்டித் தான் போட்டிருக்கும்,” என்றார்.
பின் வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்து, “பாட்டி… பாட்டி…’ என்று அழைத்தேன்.
அடுப்படியில் இருந்து சத்தம் வர, அந்தப் பக்கமாய் சென்றேன்.
அடுப்பு பற்ற வைப்பதில் மும்முரமாயிருந்த பாட்டி, “”யாரு?” எனக் கேட்டாள்.
“”பாட்டி… நான் மணி.”
“”வாய்யா மணி… நல்லா இருக்கியா… அம்மா வரலையா?” எனக் கேட்டவாறு, என்னைக் கட்டித் தழுவி, “”உள்ள வா…” என, வீட்டினுள் அழைத்துச் சென்றாள். விசாரிப்பு சம்பிரதாயங்கள் எல்லாம் முடிந்தாயிற்று.
“”எத்தனை நாளுயா இருப்ப?”
“”பாட்டி… நான் மதியமே கிளம்பணும். வேற ஊர்ல படிக்கிறேன்… போகும் போது, உன்னைப் பார்த்துட்டுப் போலாம்ன்னு வந்தேன்… அம்மாட்ட கூட சொல்லல…” என நான் கூற, “”ஏன்யா… இந்த கிழவிய பார்க்க இப்பத்தான் உனக்குத் தோணுச்சாக்கும்…” என்றவள், “”சரி… நீ போய் குளிச்சிட்டு வா… நான் கோழி அடிச்சு சமைக்கிறேன்.”
மதிய உணவு முடித்து, பாட்டியின் அருகில் போய் அமர்ந்தேன்.
“”பாட்டி… நான் ஒண்ணு கேட்கட்டுமா?”
“”கேளுய்யா…”
“”உனக்கு என்ன பாட்டி ஆச்சு… ஏன் பழைய மாதிரி இல்லாம, ரொம்ப மெலிஞ்சு போயிருக்கிற. எப்பவும் சிரித்த முகத்தோட இருக்கிற நீ, ஏதோ எனக்காக போலியா நடிக்கிற மாதிரி இருக்கு,” என்றேன்.
“”அட… வயசாகுதுல்ல, அதான்யா…” என்றாள்.
“”இல்ல… உனக்கு ஏதோ பிரச்னை. சொல்லு பாட்டி… என்னாச்சு?”
சில வாதப் பரிமாற்றத்திற்குப் பின், பாட்டி தன் மனக் குமுறலைக் கொட்ட ஆரம்பித்தாள்.
“”என்னத்தையா சொல்லச் சொல்ற… பல குடும்பங்களை அழிக்கிற சொத்துப் பிரச்னை தான், நம்ம குடும்பத்தையும் இப்படி ஆக்கிடுச்சு…
“”தாத்தா இறந்தவுடன், உங்க மாமனுங்க எல்லாரும், அவனுகளோட வந்து தங்க சொன்னாங்க. அது பாசத்தாலன்னு நினைச்சேன். ஆனா,” அழுதே விட்டாள் பாட்டி.
தொடர்ந்து பேசினாள்… “”அப்புறம் தான் தெரிஞ்சது, சொத்துக்காகத் தான் கூப்பிடுறாங்கன்னு. சரின்னு, எனக்குன்னு எதுவும் எடுத்துக்காம, நானும் சொத்தை யெல்லாம் பிரிச்சுக் கொடுத்துட்டேன். இந்த வீடும், அந்த வடக்கால உள்ள கொஞ்ச நிலமும், உங்க அம்மாளுக்கும், பெரியம்மாளுக்கும் பிரிச்சு கொடுத்துட்டேன். சொத்த பிரிச்ச அடுத்த நிமிஷம் கிளம்பின பிள்ளைங்க ஒருத்தனும், பிறகு வந்து எட்டிக் கூட பார்க்கல… ஏதோ உங்கம்மாவும், பெரியம்மாவும் தான் அப்பப்ப வந்து பார்த்து, ஒன்றிரண்டு நாள் தங்கிட்டுப் போவாங்க. எம் பொண்ணுங்க அரவணைப்பு இல்லேன்னா, நான் எப்பவோ செத்திருப்பேன்…
“”அவளுகதான், “எங்களுக்கு சொத்தெல் லாம் வேணாம்தா, நீ மட்டும் நல்லாயிருந்தா போதும்…’ன்னு சொல்லி என்னைக் காப்பாத்திட்டு வர்றாளுக.”
சமீபகாலமாய் அம்மா அதிகமாக செலவு செய்வதாகவும், வரவு – செலவு கணக்கில் பொய் சொல்வதாகவும் அப்பா கூறும் குற்றச்சாட்டிற்கான காரணம் புரிந்தது. எப்போதையும் விட, அம்மாவை இப்போது அதிகமாகவே பிடித்திருந்தது.
கிளம்பும் வேளையில்…””ஏன்யா… ஒரு நாளாவது தங்கிட்டுப் போகக் கூடாதாய்யா?”
“”நான் தான் வெளியூர்ல படிக்கிறேன்னு சொன்னேன்ல பாட்டி. அதனால தான் அவசரமாப் போக வேண்டியிருக்கு,” என்றான்.
மனதுக்குள் பேச ஆரம்பித்தேன்.
“நாம இங்க வந்ததே, மொபைல் போன் வாங்க பணம் கேட்கத் தானே… ஆனா, இப்ப பாட்டி இருக்கிற நிலைமையில… ச்சே… நான் எவ்வளவு பெரிய சுயநலவாதி. இந்த ஐந்து வருஷமா பாட்டியப் பார்க்க நினைக்காத நான், ஒரு போன் வாங்கறதுக்காக, பாட்டியத் தேடி வந்திருக்கேனே. சொத்த எழுதி வாங்கிட்டு, பாட்டியை விட்டுப் போன என் மாமனுங்களுக்கும், எனக்கும் என்ன வித்தி யாசம்?’
பாட்டிக்கு இனி நானும் உதவணும். என்ன செய்யலாம்? கையில் இருந்த ஆயிரம் ரூபாய் நினைவிற்கு வந்தது.
“”பாட்டி… இந்த ஆயிரம் ரூபாயை வச்சுக்கோ…” என்று கூறி, ஆயிரம் ரூபாயை அவள் கைகளில் திணித்தேன்.
“”ஐயோ… எனக்கெதுக்குப்பா இவ்வளவு பணம். அதெல்லாம் வேணாம்பா,” என்றாள்.
“”இங்க பாரு பாட்டி… நீ இப்ப இந்த பணத்தை வாங்கிக்கிட்டா, ஒவ்வொரு மாதமும் வருவேன். இல்லேன்னா, இனி எப்பவுமே என்னைப் பத்தி நினைக்காத…” என நான் சொல்ல, தர்மசங்கடத்துடன் பணத்தை வாங்கிக் கொண்டாள்.
“”உங்க தாத்தா மாதிரியே பிடிவாத குணம்டா உனக்கு. உங்கம்மாவுக்குத் தெரிஞ்சா, என்மேல தான்யா கோபப்படுவா…” என்றாள்.
“”பாட்டி… இது நான் சேமித்து வச்சிருந்த பணம். அம்மா ஒண்ணும் சொல்ல மாட்டாங்க…”
“அப்போ மொபைல்… எதுக்கு மொபைல்? பொண்ணுங்ககிட்ட கடலை போடறதுக்கும், பசங்களோட அரட்டை அடிப்பதற்கும் உதவப் போற அந்த மொபைல், அப்பாவுக்கு தெரிஞ்சா அவரைக் கோபப்பட வைக்கப் போற அந்த மொபைல் எதற்கு? அந்தப் பணம் பாட்டிக்காவது உதவட்டும். அது சரி… ஒவ்வொரு மாதமும் வர்றதா சொல்லியாச்சு… வரும்போதெல்லாம், ஏதோ நம்மால முடிஞ்சளவுக்கு, பாட்டிக்கு ஏதாவது பண்ணணும்…’ என, மனம் மொபைல் போன் கனவை மறக்கடித்து, பாட்டியின் பாசமே உயர்ந்தது என தீர்மானித்துக் கொண்டது.
பாட்டியிடம் விடைபெற்று கிளம்பினேன்.
அடுத்த மாதம் வரும்போது பணத்துக்கு என்ன பண்றது?
திடீரென இந்த கேள்வி மனதில் எழ, என்னருகில் வந்து நின்றது அந்த டிராக்டர்.
ஓட்டிக்கொண்டு வந்தவர், “”இன்னா… அதுக்குள்ள புறப்பட்டுட்ட!” எனக் கேட்க, “”இல்ல… காலேஜ் இருக்கு. அதான்,” என்றேன்.
“”சரி… வண்டில ஏறிக்க,” என்று கூறியவர், என் பையை எடுத்து வண்டியில் போட்டார்.
நான் ஏறியவுடன், “”இந்த புத்தகத்தை மறந்துட்டு வந்துட்டியாமே… பாட்டி கொடுத்தாள். இந்தா,” என, நான் கொண்டு வந்த புத்தகத்தை என்னிடம் நீட்டினார். வாங்கி கொண்டு ஊர் போய் சேர்ந்தேன். அந்த மாதம் அப்பா அனுப்பிய பணத்திலிருந்து சிறிதளவு பணத்தை, பாட்டிக்குக் கொடுத்தேன். அடுத்த மாதம், பணம் மட்டும் அனுப்பி வைத்தேன்.
அதற்கு பின், அடுத்த மாதம் கொடுக் கலாம்… அடுத்த மாதம் கொடுக்கலாம் என, ஒவ்வொரு மாதமும் தள்ளி வைத்துக் கொண்டே சென்றேன். உண்மையாகச் சொன்னால், பிறகு பாட்டியை மறந்தே விட்டேன்.
ஒரு வருடத்திற்கு பிறகு —
பாட்டி இயற்கை எய்தினாள். அதுவரை வராத மாமன்கள், இறுதிச்சடங்கை முடித்தனர். எங்கள் குடும்பத்தில், என் அப்பாவின் கோபம், பெரியம்மா குடும்பத்தில் அவர்களின் விட்டுக் கொடுக்கும் குணம், இவையிரண்டும் மாமன்களுக்கு சாதகமானது. வீட்டையும், நிலத்தையும் விற்று, பணத்தை அவர்கள் பங்கிட்டுக் கொண்டனர்.
ஒரு நாள், அம்மா, என்னிடம் வந்து, “”இந்தாடா மணி… இதுல பதினைந்தாயிரத்து சொச்சம் ரூபாய் இருக்கு. நீ எனக்குத் தெரியாம, மாதா மாதம் பாட்டிக்குப் பணம் கொடுத்தியாமே… இறப்பதற்கு இரண்டு நாள் முன்னாடி தான், பாட்டி என்னைக் கூப்பிட்டு, “எம் பேரனுக்காக என்னால எதுவும் செய்ய முடியல… இந்த கிழவிக்கு எதுக்கு இவ்வளவு பணம். இதையெல்லாம், அவன் தான் எனக்கு வந்து கொடுத்திட்டு இருக்கான். அவன் பாசமே எனக்குப் போதும், புள்ளைக்கு எவ்வளவோ செலவு இருக்கலாம். நான் சேர்த்து வைச்ச கொஞ்ச பணத்தையும் இதுலே வைச்சுருக்கேன். நான் போன பிறகு, இதையெல்லாம் அவன்ட்ட எடுத்துக் கொடு…’ன்னு சொன்னாங்கடா. இந்தா, இது உன் பாட்டி உனக்காக கொடுத்தது. நீ தான் வச்சிக்கணும்…” என்றவாறு, என்னிடம் பணத்தைக் கொடுத்தார்.
பாட்டியின் பாசம், என்னை புரட்டித்தான் போட்டு விட்டது. பாட்டியின் உருவம் கண்முன் வந்து நிற்க, தலைக் குனிந்து நின்ற என்னையும் மீறி கண்ணீர் வந்துவிட்டது. பாட்டி தன் பாசத்தால் என்னை ஜெயித்து விட்டாள்.

– க.சுபாஷ் கண்ணன் (டிசம்பர் 2010)

இயற்பெயர் : க.கந்தவேல்.
வயது: 18.
கல்வித் தகுதி: பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார்.
இவர் எழுதிய முதல் சிறுகதைக்கு, ஆறுதல் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சி தருவதாக குறிப்பிடுகிறார். கதை, கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *