கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: April 24, 2015
பார்வையிட்டோர்: 12,337 
 
 

ராமநாதன் அலுவலகத்தில் இருந்து வரும் போதே ப்ரியா…, ப்ரியா…. என்று அழைத்தபடியே வந்தார். சொல்லுங்க, என்று வந்த ப்ரியாவிடம் ஒரு உறையை நீட்டினார்.

என்னங்க, இது என்றவளிடம் பாட்டு கச்சேரிக்கான நுழைவுச்சீட்டு இது, என் நண்பர் சக்கரபாணியின் மனைவி பாடுறாங்க. சக்கரபாணி கண்டிப்பா வரணும் என்று சொல்லிவிட்டார். நாளை சாயங்காலம் போவோம் என்றபடி அறைக்குள் சென்றுவிட்டார்.

ப்ரியாவுக்கும் பாட்டு கச்சேரி என்றால் மிகவும் பிடிக்கும்,உறையை பிரித்து என்ன பாடல்கள் பாடப்போகிறார் என்று நிகழ்ச்சி நிரலை பார்த்தப்போது அவள் சந்தோஷம் அதிகமானது.

அவளுக்கு பிடித்த குறையொன்றும் இல்லை கண்ணா பாடலும் இடம் பெற்றிருந்தது தான், அவளின் சந்தோஷத்திற்கான காரணம். அந்த பாடல் கேட்கும் போதெல்லாம், உண்மையாகவே கடவுள் தனக்கு குறையொன்றும் வைக்கவில்லை என்று மனநிம்மதி அடைவாள். ஆம், அவள் நினைப்பது போலவே கடவுள் அவளுக்கு அன்பான கணவன், தாயை போல பாசமான மாமியார், இரு நல்ல பிள்ளைகளை கொண்ட குடும்பத்தை கொடுத்திருந்தார்.

பின்னர் இரவு உணவை முடித்து அனைவரும் உறங்கிவிட்டனர், ஆனால் ப்ரியாவுக்கு உறக்கம் வரவில்லை. எம்.எஸ் அம்மாவின் குரல் அந்த பாடலின் வழியாக அவள் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.

அவள் எப்போது உறங்கினாளோ அவளுக்கே தெரியாது, அதிகாலையில் கடிகாரம் அழைக்கவும் எழுந்து கொண்டாள். பின்னர் தனது அன்றாட வேலைகளை முடித்து, கணவனை அலுவகத்திற்க்கும், பிள்ளைகளை கல்லூரிக்கும் அனுப்பி வைத்தாள். மாமியாருக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து, சற்று ஓய்வாக அமரும் போது மீண்டும் கச்சேரி பற்றி நினைவு வந்தது.

4:00 மணிக்கு வீட்டிற்கு தொலைபேசியில் அழைத்து, தான் இன்னும் சற்று நேரத்தில் கிளம்பப்போவதாகவும், ப்ரியாவை புறப்பட்டு தயாராக இருக்க சொன்னார், ராமநாதன். மாமியாரிடம் தொலைபேசி அழைப்பைப்பற்றி கூறிவிட்டு, இரவு உணவுக்கு தயார் செய்துவிட்டு புறப்பட தயாரனாள்.

ப்ரியா கிளம்பி நிற்கவும், ராமநாதன் வீட்டிற்கு வந்தார். அவர் சீக்கிரம் உடை மாற்றி கிளம்பிவிட்டார். இருவரும் கச்சேரி நடக்கும் சபாவுக்கு சென்றடையும் போது மணி 5:45, கச்சேரி ஆரம்பிக்க இன்னும் கால் மணி நேரம் இருக்கு என்றார் ராமநாதன்.

இருவரும் தங்கள் இருக்கைகளை கண்டுபிடித்து அமர்ந்தனர்.மேடையின் ஓரத்தில் நின்றிருந்த ஒருவர் ராமநாதனை பார்த்து கையசைத்தரர், பின் மேடையை நோக்கி கைகாண்பித்து தன் கட்டைவிரலை உயர்த்திக்காட்டினார்.

அவர் தான் ராமநாதனின் நண்பர் சக்கரபாணி என்று ப்ரியா புரிந்து கொண்டாள். ப்ரியா, சக்கரபாணியையும் அவர் மனைவியையும் பார்த்ததது இல்லை. அவர்கள் இருவரும் வேறு மாநிலத்தில் இருந்து மாற்றலாகி இப்போது தான் சென்னைக்கு வந்திருக்கிறார்கள். அவள் அப்போது தான் பக்கவாட்டில் இருந்த வளைப்பலகையில் ( flex board) பாடல் பாடுபவர் பெயரை கவனித்தாள், தனபாக்கியம் என்று எழுதியிருந்தது.

மேடையில் ஒருவர் கச்சேரி ஆரம்பிக்கப்போவதை தன் நீண்ட உரையின் மூலம் வெளிப்படுத்தினார். கச்சேரி ஆரம்பமானதும், ப்ரியா சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துவது போல் நிமிர்ந்து அமர்ந்தாள். மேடையில் அமர்ந்து பாடும் தனபாக்கியத்தை பார்த்தவுடன் எங்கோ பார்த்தது போல் உணர்ந்தாள்.

இப்பொழுது அவள் கவனம் சற்று தடுமாறி பாடலில் இல்லாமல் பாடும் தனபாக்கியத்தின் மீது இருந்தது, திடீரென்று நினைவு வந்தது இவள் தன்னோடு ஏழாம் வகுப்பு வரை படித்தவள் என்று. அதை தொடர்ந்து தனபாக்கியம் தங்கள் பள்ளியில் இருந்து விலகி வேறு பள்ளிக்கு சென்றதும் நினைவுக்கு வந்தது.

ஒரு நாள் ஆசிரியை பள்ளிக்கு வரவில்லை, வகுப்பில் இருந்த அனைவரும் பேசக்கொண்டிருந்தார்கள்.பக்கத்து வகுப்பு ஆசிரியை அனைவரையும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிட்டு, வகுப்பு மாணவியர்களின் தலைவி சவிதாவையும் திட்டிச்சென்றார். ஆசிரியை சென்ற சிறிது நேரத்துக்பின்னர் மீண்டும் அனைவரும் பேச்சை ஆரம்பிக்க, சவிதா சற்று மிரண்டுவிட்டாள். அவள் எவ்வளவோ கூறியும் யாரும் அமைதியாவதாக இல்லை. அப்போது தனபாக்கியம் அனைவரின் முன்பு வந்து, எல்லாரும் அமைதியா இருங்க இப்போ நான் பாட்டு பாடப்போறேன் என்றாள். அவள் ஏதோ தங்களை அமைதியாக இருக்க விளையாட்டாக பயமுறுத்திகிறாள் என்று எண்ணிய மாணவிகள், அம்மா தாயே நீ பாடதே நாங்கள் பேச மாட்டோம் என வாக்கு கொடுத்தனர்.

பின்வரும் நாட்களில் தனபாக்கியம் பாட முற்படும் போதேல்லாம் அனைவரும் அதையும் விளையாட்டாகவே எண்ணி தயவு செய்து பாடதே என்று அவள் வாயை அடைத்தனர்.

ஏழாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று புதுவகுப்பிற்க்குள் நுழையும் போதே தனபாக்கியம் வரவில்லை என்பதை ப்ரியா கவனித்தாள் ஆனால் யாரும் அவளைப்பற்றி நினைக்கவில்லை. சவிதாவிடம் கேட்டபோது தனபாக்கியம் வேறு பள்ளிக்கு சென்றுவிட்டாள், அனைவரும் அவளை பாடவிடாமல் செய்தது ஆரம்பத்தில் விளையாட்டாக எடுத்துக்கொண்டாளும், பின்னர் அவளுக்கு அது வேதனையாக இருந்தது என்று கூறிச்சென்றதாகவும்,வேறு யாரிடமும் அவள் சொல்லவில்லை என்றும் கூறினாள்.

அதற்கு பின்னர் இன்று தான் தனபாக்கியத்தை பார்க்கிறாள், ப்ரியா. மேடையில் தனபாக்கியம் குறையொன்றும் இல்லை கண்ணா என்ற பாடலை பாட ஆரம்பித்தாள். இப்போது நிகழ்காலத்திற்கு வந்திருந்த ப்ரியா, தனபாக்கியத்தின் பாட்டில் லயித்துப்போனாள். எம்.எஸ் அம்மாவின் குரலில்லை தான் என்றாலும், தனபாக்கியம் நன்றாகவே பாடினாள்.

கச்சேரி முடிந்ததும் சக்கரபாணி, ராமநாதனையும், ப்ரியாவையும் தனியே அழைத்துச்சென்று அறிமுகப்படுத்தினார். தனபாக்கியம், ப்ரியா அளவுக்கு யோசிக்கவில்லை சட்டேன அடையாளம் கண்டுகொண்டாள்.

நீ, ப்ரியா தானே என்று நட்புடன் கைகளைப்பற்றிக்கொண்டாள். தனம், நீ பாடியவுடன் நாங்க எல்லாரும் அமைதியாகிவிட்டோம், ஆனால் உன் குரலின் இனிமையாள் என்று ப்ரியா கூறியவுடன். தனபாக்கியமும், ப்ரியாவும் கலகலவென சிரிக்கத்தொடங்கினார்கள். எதற்கு என்று புரியாமல் ராமநாதன் விழிக்க, புரிந்தும், புரியாமலும் சக்கரபாணி சிரித்தபடி யோசிக்கலானார்.

திருக்குறள்: பழைமை எனப்படுவது யாதெனின் யாதும்

கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. (குறள்: 801)

பொருள்: நண்பர்கள் நம்மீது உரிமை எடுத்துக்கொண்டு தவறாக நடந்தாலும் அதைப் பொருட்படுத்தாத நட்பு, பழைமை என்று சொல்லப்படும்

(பொருட்பால்-நட்பியல்-பழைமை)-திருவள்ளுவர்

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *