கொழும்பு கோட்டையிலிருந்து, காங்கேசன் துறை நோக்கிச் செல்லும் புகையிரதம்; தபால்வண்டி, இன்னும் சில நிமிடங்களில் முதலாவது மேடைக்கு வரும் என சிங்களத்திற் சொல்லப்பட்டது.
அநுராதபுர புகையிரத நிலையம்.
வடபகுதிக்குச் செல்ல இருந்த பிரயாணிகளிற் சிலர் ஓரளவாவது சிங்களம் தெரிந்தவர்களாயிருந்தபடியால் (அரசாங்க அலுவலர்) இந்த அறிவிப்பில் ஆயத்தமடைகின்றனர்.
“தமிழ் தெரிஞ்சவங்கள் ஆரேன் இல்லையோ…என்னவோ சிங்களத்திலை மாத்திரம் தான் சொல்லுறாங்கள்.” – இதை இன்னொருவர் எரிச்சலுடன் ஆமோதிக்கிறார்.
“ஓமெண்டுறன்!”
புகையிரதம் அட்டகாசத்துடன் வந்து நிற்கிறது.
“என்ன சனமப்பா!…ஒரு நாளும் இந்த றெயினுக்கு லீவே கிடையாது!”
“அறுவாங்கள்…அங்கைபார்! இந்த ராவிருட்டியிலையும்…வாசல்லை குந்திக்கொண்டிருக்கிற மாதிரியை…இக்கணம் விழுந்து துலையப் போறாங்கள்.”
“அண்ணை! கொஞ்சம் விலத்துங்கோ…ஏறுவம்!”
ஏறுபடியிற் குசாலாக கைகளைக் கோர்த்துக்கொண்டு இருந்த இரு தடியன்களும், உள்ளே ஏறுவதற்கு அவசரப் பட்டுக்கொண்டு நின்ற இளைஞனை எரிச்சலுடன் நோக்குகின்றனர்;
“இதுக்குள்ளாலை….எங்கை போகப்போறீர்?…உங்கை வழியிலை சனங்கள் படுத்துக்கிடக்கு….மற்றப்பெட்டிக் குள்ளை ஏறும்”.
அதைக் கேட்டு இது, அமைதியாகத் திரும்புகிறது – இது போலவே, இரண்டு மூன்று வாசல்களில் ஏறும் முயற்சியில் தோற்றுப் போய்விட்ட சோர்வு. எதையோ திறமையாகச் சாதித்துவிட்ட பெருமிதத்தில் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்கின்றனர். அச்சந்தோஷத்தில் இடி விழுவது போல;
“மே!…பொட்டக் அயிங் வெனவா ஐசே!” (ஓய்! கொஞ்சம் அரக்கும் காணும்!) – பலமாகப் பட்ட அடியைப்போல இக்குரல் நெஞ்சில் இறங்குகின்றது…
வாட்டசாட்டமான தோற்றம் தான், “ஆளும்…சிங்களவனாய்க் கிடக்கு…” – மகுடிக்குக் கட்டுப்படுகின்ற நாகத்தைப் போல், அந்தக் குரலில் இருவரும் ஒதுங்கிக்கொள்ள அவன் நெஞ்சை நிமிர்த்திக்கொண்டு ஏறுகிறான். இச்சந்தர்ப்பத்தை நழுவவிடாமல் முதலில் வந்தவனும் தந்திரமாக ஏறி விடுகிறான்.
அந்தத் தடியன்களின் மேல் எரிச்சலாக வருகிறது இவனுக்கு. “நாய் மூதேசியள் சிங்களவனென்டவுடனை பயந்து சாகுதுகள்!” என எண்ணியவாறே நுழைகிறான்.
“மனுசார நல்ல சனம்தான்!”
“இதேனப்பா, மாடுமாதிரி விளக்கிக்கொண்டு போறியள்?…இஞ்சை மனுசர் படுத்திருக்கிறது தெரிய யில்லையே?”
“நீங்கள் ஏன் பாருங்கோ, கால் கையுக்குள்ளை கிடக்கிறியள்?…ஆக்கள் போய்வாறயில்லையே?”
இந்த ஓர் இரவுக்குள்ளேயே, ஏதோ பறிபோய் விடுவது போல, நித்திரையைக் கட்டிப் பிடித்துக் கொண்டிருப்பவர்களைக் காண இவனுக்கு வேடிக்கையாயிருக்கிறது.
உள்ளே இருப்பவர்கள் புதிதாக ஏறியவர்களை விசித்திரமாகப் பார்க்கின்றனர்; “இவையள் இப்ப எங்கை இருக்கப் போகினமெண்டு பாப்பம்!”
முதலில் ஏறியவன், மேலே இருந்த பெட்டிகள் சிலதை ஒதுக்கிவிட்டு, தனது ‘பாக்’கை அந்த இடைவெளியில் வைக்கிறான். ஒர்கப்பட்ட பெட்டிகளின் சொந்தக்காரர்கள் அதை சற்று ஆத்திரத்துடன் சகித்துக் கொள்கின்றனர்.
தனது பையை வைப்பதற்காக, இவன் கொஞ்சம் சங்கடப்படுவதைக் கண்டு, அவன் சிநேக மனப்பான்மையுடன் உதவுகிறான்.
பெட்டிகள் வைக்கப்பட்ட பின்னர், இருவரும் ஒரு பக்கமாக நிலை பெறுகின்றனர் – வசதியாக கால்களை நீட்டிக் கொண்டு (சயனத்தில்) இருந்த ஒருவர். இவர்கள் நின்றதனால் கால்களை மடக்கவேண்டி ஏற்பட்ட அசௌகரியத்தில் எரிந்து, பார்வையில் நெருப்பைக் கக்குகிறார்; “ஒரு மனேஸ் தெரியாத சனியன்கள்…”
இவன், அதைத் தாங்கமுடியாமல், மற்றவனைப் பரிதாபத்துடன் நோக்குகிறான். அவன் அந்தச் சூட்டை அலட்சியம் செய்துகொண்டே இவனுடன் கதைக்கிறான்;
“நீங்களும் யாழ்ப்பாணத்துக்கே போறியள்?” – இவனுக்கு ஒரே ஆச்சரியம்!
“எட! இவனும் தமிழன் தான்…கொஞ்சத்துக்கு முந்தி அவனோடை சிங்களத்திலை விளாசினான்!…”
இந்த நினைவு. அவன்மேற் சரியான எரிச்சலைக் கொண்டு வருகிறது. அந்த ஆத்திரத்தில் கதைக்கவும் மனதின்றி மறுபக்கமாகத் திரும்ப, அவன் இவனுடைய பதிலுக்காக வற்புறுத்துகிறான்.
“உங்களைத்தான்!..நீங்களும் யாழ்ப்பாணமே?”
“ஓம்!” என ஒரே வார்த்தையில் சம்பாஷணையை வளர விடாமற் துண்டித்துவிட்டு இவன் திரும்புகிறான்.
புகையிரதம் ஒரு குலுக்கலுடன் கிளம்புகிறது.
இந்தக் குலுக்கலோடு குலுக்கலாக பக்கத்திலிருக்கும் பெட்டையுடன் சாதுவாகத் தட்டுப்படுகிறார் ஒருவர்! அதை அவள்; தெரியாதவள் போல அனுமதிக்கும் நளினம் இவனைக் கவருகிறது.
பிரம்மதேவ, பிரம்மதேவ…சகிக்க முடியல்லே…பாரிலுள்ள தமிழ்ப் பெண்களைப் பார்க்க முடியல்லே…
இன்னொரு பக்கத்திலிருந்த மாணவக் கும்பலொன்றின் இசைப்புயல்!
“ஏதோ இன்ரவியூவுக்குப் போட்டுப் போறாங்கள் போலை கிடக்குது.”
பாடல்களிலுள்ள நெளிவு சுளிவுகளுக்கேற்ப, சத்தத் தைக் கூட்டிக் குறைத்து, தந்திரமாக அந்தக் கலையைக் கையாளு கின்ற பக்குவம் சிரிப்பைத் தருகிறது. அந்தக் கும்பல், கதா நாயகனைப் போல நிற்கும் ஒருவன், விதவிதமாகப் பறவைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் சப்தம் செய்கிறான். (நல்ல ஏத்தம்!) இடைக்கொருதரம் தனது சடைமுடியை ஆசையோடு கோதிவிட்டுத் திருப்தியடைகிறான். இது; அண்மையிற் தொடை தெரிகின்ற சட்டையோடு இருக்கின்ற இரு குமரிகளையும் கவரு கின்ற முயற்சிபோலும்! பாடல்களில் வருகின்ற குறும்புகளைக் கேட்டு ‘அதுகள்’ சிரிக்க இவர்களுக்கு இன்னும் உற்சாகம் ஏற்படுகிறது.
இவற்றிலெல்லாம் மனம் இலயித்து; “அலுப்புத் தெரியாமல்…பைம்பலாய்ப் போயிடலாம்” என இவன் நினைக்கிறான்.
எனினும், இன்னுமொரு நினைவு மனதினுள்ளே கிடந்து குமைகிறது:
“அங்கை பார்த்தால்…தனிச் சிங்களத்திலை அறிவித்தல் கொடுக்கிறான்….இங்கை ஒருத்தன் சிங்களவனுக்கு வெருண்டடிச்சுக் கொண்டு இடம் குடுக்கிறான்….இன்னொரு தமிழன் தமிழனோடையே சிங்களம் கதைச்சுப் பெருமைப் படுகிறான்!”
அவனிடமே இதைக் கேட்டுவிடவேண்டும் போல, இவனுள் ஓர் ஆவேசம் எழுகிறது.
‘நீங்கள் சிங்கள ஆளாக்குமெண்டு நினைச்சன்” என, கொஞ்சம் சுடக்கூடிய விதமாகவே கேட்டுவிடுகிறான்.
இவனுடைய நியாயமான ஆத்திரத்தைப் புரிந்து கொண்டு, அவனுக்கு சிரிப்பு வருகிறது;
“உங்கடை கோபம் எனக்கு விளங்குது…என்னிலை மாத்திரம் ஆத்திரப்பட்டுப் பிரயோசனமில்லை…வாசல்லை இருந்த ரெண்டு தடியங்களையும் பாத்தனீங்கள் தானே?…சிங்களவ னெண்டு தெரிஞ்சவுடனை மறுபேச்சில்லாமல் இடம் குடுக்கிறாங்கள்…அவங்களுக்கு இடம் குடுக்க வேண்டாமெண்டு நான் சொல்லயில்லை…எட! தமிழ்…தமிழின ஒற்றுமை எண்டெல்லாம் கத்துறனீங்கள்…இந்தச் சின்ன விஷயங்களிலை…நீங்களே…தமிழனையும்…தமிழையும் புறக்கணிச்சுக் கொண்டு…பிறகேன் மற்றவனோடை கதைக்கப் போறியள்?”
அவன் சொல்வதை இவன் நிதானமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறான் …..
“முதல்லை…எங்களைத் திருத்திக்கொண்டுதான், மற்றவனைத் திருத்தப் போக வேணும்…எல்லாரும் சந்தர்ப்பவாதிகள். யாழ்ப்பாணத்திலை கூட்டமாய்ச் சேர்ந்துகொண்டு வாய் கிழியக் கத்துவாங்கள்…இங்காலை வந்தால்…பேச்சு மூச்சில்லை…சும்மா கத்தி என்ன பிரயோசனம்? செயல்லையும் காட்டவேணும்;…அங்கை பாருங்கோவன்….அதிலை இருக்கிற ரெண்டு பேருமே தமிழர்…பிறகு ஏன் இங்கிலீசிலை கதைக் கினம்?…காச்சட்டையைப் போட்டுக்கொண்டு தமிழிலை கதைக்க வெக்கம்!””
“ஆனால்…நீங்கள் எல்லாரையும் அப்பிடிச் சொல்லக் கூடாது” என்கிறான் இவன்.
“சாத்தியமாய்ச் சொல்லயில்லை, ஆனால் எங்கடை ஆக்கள் கனபேருக்கு இந்தப் பிறமொழி மோகம் இருக்குதெண்டதை நீங்கள் ஒத்துக்கொள்ளத்தான் வேணும்…அதுக்கும் மேலாலை எங்கடை தமிழ் மொழியிலை பற்று வரவேணும்….எட! தமிழராய்ப் பிறந்து போட்டு தமிழ் கதைக்க என்ன வெக்கம்?”
அவனுடைய வாதங்கள் நியாயமாகப்பட, அதில் இவன் திருப்தியடைகிறான். நெஞ்சு நிரம்பிவிட்டது தான்; உண்மையிலேயே எல்லோருமே வெறும் போலிகளல்ல. கோழைகளுமல்ல. தன்னைப்போல, அவனைப்போல், ஒரு தனித்துவமான கூட்டம் சேர்ந்து கொண்டிருப்பதை உணர்ந்து பெருமையடைகிறான்.
“உண்மைதான்! நானும் கன இடங்கள்ளை கண்டிருக்கிறன்…யாழ்ப்பாணத்துக்காரர் கனபேர், உத்தியோகங்களுக்காக வெளியிடங்களுக்குப் போறவையள், இப்ப; பிள்ளையளை சிங்களப் பள்ளிக்கூடங்களுக்கெல்லே விடுகினம்! வீட்டிலை…இங்கிலீசிலை கதைச்சுப் முக்குறது…வேலைக்காரப் பெடியனை பிள்ளையோடை சிங்களத்திலை கதைக்க வேணுமெண்டு கட்டளை. பிறகு…பிள்ளைக்குத் தமிழ் தெரியாது…இங்கிலீசும் சிங்களமும் தான் தெரியும். ‘நாங்கள் ஏதேன் தமிழிலை கதைச்சாலும் அவனுக்கு விளங்காது…’ எனத் தம்பட்டமடிக்கிறதிலை அவையளுக்கு ஒரு கண்டறியாத பெருமை!”
இருவரும் பாஸ்பரம் பல பிரச்சனைகளைப் பற்றியும் கருத்துப் பரிமாற்றம் செய்தவாறே செல்கின்றனர்.
“பயணம்!…பயணம்!…எத்தனை நாளாய் கெங்கேயோ பயணம்…எவரை எவர் வெல்லுவாரோ!”
இசைப்புயல் உச்சஸ்தாயியையடைந்து;
அந்த இளந்தாரிக்கும்பல் நோக்கில்லாமல் ஆடிக் கொண்டிருக்கிறது. புகையிரதம் காற்றைக் கிழித்துக்கொண்டு செல்ல, அதனால் ஏற்படுகின்ற ஒசை, இவர்கள் பாட்டுக்கு பின்னணி இசைப்பதைப் போலிருக்கிறது.
மதவாச்சி நிலையத்தில் புகையிரதம் நின்று, மீண்டும் கிளம்பியபொழுது –
“கள்ளன்! கள்ளன்!”
சடுதியாக மேலெழுந்த இக்குரலில் சனம் அமளிப்படுகிறது.
“டேய்! கள்ளன்! கள்ளன்!”
“பிடி, பிடி…”
“ஆளை விட்டுடாதையுங்கோ…பிடிச்சுப்போடுங்கோ..”
“கள்ள நாயள்…”
எல்லோரும், அவரவர் பெட்டிகளை அவசரமாகப் பார்த்துக்கொள்கின்றனர். பின்னர் இருக்கைகளின் மேல் எழுந்து நின்று பிடிப்பட்ட கள்ளனை வேடிக்கை பார்க்கத் தொடங்குகின்றனர். சனக் கும்பலின் மத்தியில், ஒரு சிறுவன் – பதின்மூன்று வயதுக்கு மேல் மதிக்க முடியாது. மிரள மிரள விழித்துக்கொண்டு நிற்கிறான்.
“எட! உந்தச் சின்னப் பெடியனே களவெடுத்தவன்?”
“என்னத்தையாம் எடுத்தவன்?”
“ஆருக்குத் தெரியும்…? பொறுங்கோவன் விசாரிச்சுப் பாப்பம்”.
“மெய்ய? என்ன தம்பி களவெடுத்தவன்?”
“அடியுங்கோ. அடியுங்கோ…மூதேசியளைச் சும்மாய் விடக்கூடாது.”
“பொறுங்கோ…இப்ப அடியாதையுங்கோ…ஆர் களவு குடுத்தாள்…? அவரை இஞ்சாலை கூப்பிடுங்கோ!”
“உந்தப் பேய்க் கதையளை விட்டிட்டு….முதல்லை உவன்ரை மூஞ்சையைப் பொத்தி ஒண்டு குடுங்கோ…கள்ளனைப் பிடிச்சு வைச்சுக் கொஞ்சிக் கொண்டிருக்கினம்.”
“இவர்தான்…களவு குடுத்தவர்!”
“அண்ணை! இஞ்சாலை வாங்கோ…என்ன எடுத்தவன். காசே?”
“ஓம்!…பேசோடை…காசும்…றெயின் ரிக்கட்டும் இருந்தது…”
“எவ்வளவு?”
“இருபத்தெட்டு ரூபா காசும்…ரிக்கட்டும்.”
“நீங்கள் என்ன பிடரிக்கையே கண்ணை வைச்சுக் கொண்டு நிண்ட நீங்கள்…அவன் எடுக்கும் வரையும்?”
“இல்லைப் பாருங்கோ…சாதுவாய் அயர்ந்து போனன்…றெயின் வெளிக்கிடயிக்குள்ளை…பொக்கெட்டிலை ஏதோ தட்டுப்பட்ட மாதிரி இருந்தது…பார்த்தா…இவன் பூந்து கொண்டு ஓடுறான்!”
“டேய்! வடுவா. எடுத்ததை மரியாதையாய்க் குடுத் திடு…இல்லாட்டிக் கொண்டு போடுவம்.”
“நே…நே…மம நொவே!” (“இல்லை நான் இல்லை”)
“எட இவன் சிங்களவனடா!”
“உவங்களுக்குத்தானே உந்தப் புத்தி வரும்!”
“குடுங்கோ!…ஆளின்ரை பல்லுப் பறக்கக் குடுங்கோ….உவங்களுக்கு ஈவிரக்கம் காட்டக்கூடாது.”
“பொறுங்கோ…அடியாதையுங்கோ….நான் கேக்கிறன்…” என்றவாறே ஒருவர் முன்வந்து;
“அட! உம்ப…கறிபள்ளா…” என ஆரம்பித்து, தனக்குத் தெரிந்த அரை குறைச் சிங்களத்திற் கலக்கத் தொடங்குகிறார்.
பெடியனை விசாரிக்க வேண்டுமென்ற முக்கியத்துவத்தை விட தனது சிங்களஞானத்தை எல்லோருக்கும் காட்ட வேண்டுமென்பதிற்தான் அவருக்குக் கரிசனை! அடிக்கடி பெருமை பொங்க மற்றவர்களைப் பார்க்கின்ற பார்வை இதை உணர்த்துகிறது.
பெடியன் மிகவும் பரிதாபமாக அழத்தொடங்கி விடுகிறான்.
“உவனோடை ஞாயம் பேசிறதை விட்டிட்டு…ரெண்டு செகிட்டாவடியிலை குடுங்கோ….தன்ரை பாட்டிலை வெளிவரும்”.
“இல்லை…நல்லாய்ச் சோதிச்சுப் பாத்திட்டம்! அவனிட்டை பேசைக் காணயில்லை…”
“அதை வைச்சிருக்கிறானே?…அது இப்ப மாறிப் போயிருக்கும்!”
“அடியுங்கோ மூதேசிக்கு!”
“சும்மா, பாத்துக் கொண்டிராமல் இழுத்துப்போட்டுக் குடுங்கோவன் – சிங்களப் பண்டி!”
அதிகப்படியான வேண்டுகோளின்படி அந்தச் சிறு வனுக்கு அடிக்க வேண்டுமென தீர்மானிக்கப்பட; பாட்டுக்காரக் கும்பலில் கதாநாயகன் போல நின்றவன், கையை உயர்த்திக் கொண்டு அதை நடைமுறைப்படுத்த முன்னே வருகிறான் – தனது நாயகத்தனத்தை இதிலும் காட்ட வேண்டுமென்ற ஆவல் அவனுக்கு.
இவ்வளவு நேரமும் பேசாமலே கவனித்துக்கொண்டு நின்ற இவன், சிறுவனுக்கு சனம் அடிக்க முற்பட்ட பொழுது மற்றவனைக் கவலையுடன் பார்க்கிறான். அநியாயமாக அந்தப் பெடியன் அடி வேண்டிச் சாகப்போகிறான் என மனது தவிக் கிறது. அவன் தான் உண்மையாகக் களவெடுத்தானோ, என்னவோ ?
அவன் கள்ளன் என்பதை விட, ஒரு சிங்களவன் என்பதற்காகவே…எல்லோரும் அடிக்கின்ற விஷயத்தில் சிரத்தையாக இருப்பது, சிறுவன் சிங்களவன் என்று தெரிந்த பின்னர் தோன்றிய ஆவேசத்திலிருந்து புரிகிறது. இது என்ன கொடுமை?
ஒரு சிங்களவன் எங்களுடைய எதிரியல்ல.
அவனும் மனிதன் என்பது தான் உண்மை.
மனிதன் எனும் ரீதியில் எல்லோருமே உறவினர்தான். தமிழை அழித்து, சிங்களத்தைத் திணிக்கின்ற அக்கிரமத்தைத் தான் நாம் எதிர்க்க வேண்டும்…
இந்த எண்ணங்களிற் தோன்றிய இவனுடைய கவலையான பார்வையை மற்றவன் உணர்ந்து கொள்கிறான்.
கணப்பொழுதில் இது நடந்தது.
சிறுவனுக்கு அடிப்பதற்காகப் பாய்ந்து வந்தவனை அவன் பாய்ந்து பிடித்துவிடுகிறான்.
“வேண்டாம். தொடக்கூடாது…பாருங்கோ…அல்லது பொலீசிலை குடுங்கோ…”
அவனுடைய ஆணித்தரமான வார்த்தைகளில் சனங்களுக்கு ஒரே ஏமாற்றமும் ஆத்திரமும்;
“உவருக்குக் குடுங்கோ…உவருக்கேன் தேள்வை யில்லாத வேலை…?”
சனங்களுடைய அறியாமையைக் கண்டு இவன் கலங்குகிறான்…
அவன் எதற்கும் அஞ்சாமல் திடமாக நிற்கிறான்.
“அடிக்கிறவன் துணிவிருந்தால்….முன்னுக்கு வா…! பெடியனிலை ஒரு பிள்ளை தொடக்கூடாது…பொலிசிலை குடுத்து விசாரியுங்கோ…”
முன்னர் “இங்கிலீசில்” கதைத்துக் கொண்டிருந்த இருவரில்; ஒருவர், வந்து அவனுடன் (இங்கிலீசிலேயே) நியாயம் பிளக்கத் தொடங்குகிறார். அவன் தமிழிலே நீதியைச் சொல்கிறான். ‘இங்கிலீசில்’ மடக்கியென்றாலும் அவனை அனுப்பிவிட முடியாதா, என அவர் படாதபாடு படுகிறார். அவன் தமிழிலே வெல்கிறான் –
இறுதியாக, பெடியனை இங்குள்ள பொலீஸ் நிலையங்களில் ஒப்படைக்கக் கூடாதென்றும், (“இவங்களும் சிங்களவங்கள் தானே…விட்டிடுவாங்கள்.”) யாழ்ப்பாண பொலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்ல வேண்டுமெனவும் முடிவெடுக்கப்படுகிறது.
“ஆளை…விட்டிடாதையுங்கோ…கவனமாய்ப் பிடிச்சிருங்கோ…பாய்ஞ்சு கீஞ்சு போயிடுவன்”.
“நல்லாய் விட்டம்!”
பாட்டுப் பாடி வந்த இளந்தாரிக் கும்பல் இப்பொழுது சிறுவனைத் தங்களிடையே மிகக் கவனமாக சிறைப்படுத்திக் கொண்டு வருகிறது…
விடியப்புறமான நேரம்…
பளை அண்மிக்கிறது…
சடுதியான ஓர் அவலக்குரல் எல்லோரையும் விழிப்படையச் செய்கிறது…
கள்ளனென்று பட்டம் சூட்டப்பட்ட சிறுவன் தான் – அவனை இந்தச் சனங்களிடமிருந்து காப்பாற்றிவிட்ட, இரு இளைஞர்களும் கூட, சற்று கண்ணயர்ந்து போயிருக்கவேண்டும். அதற்குள்ளே எல்லாம் நடந்து முடிந்து விட்டது.
“சப்பல் அடி!”
“உவனுக்குக் காணாது!”
சிறுவனுடைய கோலத்தைக் கண்ட இவ் இளைஞர்கள் இருவருக்கும் வயிற்றைப் பற்றிக்கொண்டு வருகிறது; “என்ன ஒரு மிருகத்தனமான வேலை செய்திருக்கிறாங்கள்…காட்டு மிராண்டிகள்.”
சிறுவனுடைய நெற்றிக்கு மேலாக , உடைந்திருந்த காயத்திலிருந்து இரத்தம் வழிந்து முகத்தைச் சிவப்பாக்கியிருக்கி றது. மூக்கும் சொண்டும் உடைந்து வீங்கியிருக்கிறது. ஒன்றோ, இரண்டு பற்கள் இல்லை. (‘பல்லுப் பறக்கக் குடுங்கோ’) கலந்து வழிந்து கொண்டிருக்கிறது:
“அம்மே…அம்மே!…”
அவனுடைய அவலக்குரலுக்கு செவிசாய்க்க யாரு மில்லை. அழுவதன் மூலம், அவன் யாசிக்கின்ற நியாயத்தை வழங்கவும் யாருமில்லை. தங்களெல்லோருக்கும் பொதுவான ஓர் எதிரியை முன்னே நிறுத்தி, தண்டனையளிப்பதைப் போல மகிழ்ந்து கொண்டிருக்கின்றனர்!
சிங்களத்தைத் திணிப்பதிலும், தமிழை அழிப்பதிலும் உள்ள கொடுமையை. ஓர் அப்பாவிச் சிங்களவனைத் தாக்குவதன் மூலம் பழிவாங்கவோ, தீர்க்கவோ முடியாது என்பதை இவர்கள் ஏன் உணர்கிறார்களில்லை என இவன் வெதும்புகிறான் –
ஏன் தாங்கள் இருவரும் கூட, இவ்வளவு நியாயத்தைப் பேசியும் இப்பொழுது மௌனிகளாகிவிட்டோமே? தங்களுடைய வாய்கள் ஏன் அடைத்துப்போய்விட்டன, என எண்ணுகிறான்:
“என்ன? நீங்களும் பாத்துக்கொண்டு சும்மா நிக்கிறியள்…அந்தப் பொடியன், பாவத்தை அடிச்சுக் கொல்லப் போறாங்கள்.” என்கிறான் இவன் மற்றவனிடம்…
“நாங்கள் ரெண்டு பேரும் இப்ப இதிலை கதைச்சு ஒண்டும் செய்யேலாது பாரும். இந்தக் கூட்டத்திலை இருக்கிற பெரும் பான்மை ஆக்களின்ரை எண்ணமும் நோக்கமும் வேறையாயிருக்கையிக்கை, எங்கடை வேண்டுகோள் நியாயங்களாயிருந்தாலும் எடுபடாது.”
“அப்பிடியெண்டால்…எப்பவுமே பெரும்பான்மையின ரின் மத்தியிலை…சிறுபான்மையரின் நியாயங்களுக்கு இடமில்லை யெண்டு சொல்லுறியளோ?…இதென்ன அக்கிரமமான நியதி?” என்கிறான் இவன் அவனைப் பார்த்து –
இருவருமே அந்த வாதத்திலிருக்கின்ற கசப்பை உணர்ந்து சற்று நேரம் மௌனமாயிருக்கின்றனர். பின்னர், இவனே ஏதோ தீவிரமான ஆவேசம் வந்துவிட்டவனைப்போலச் சொல்கிறான்;
“இல்லை….அப்படியொரு நியதியுமில்லை….. மண்ணாங் கட்டியுமில்லை. நாங்கள் கொஞ்சமும் கண்ணயர்ந்து போகாமல் இருந்திருந்தால் …. எங்கடை எண்ணத்திலை வெண்டிருக்கலாம் பாத்தீங்களே, நாங்கள் முழிச்சுக்கொண்டிருக்கும் வரைக்கும் அவங்களும் ஒண்டும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருந் தாங்கள்… கொஞ்சம் கண்ணயர்ந்தவுடனை தங்கடை காரியத் தைச் சாதிச்சுப் போட்டாங்கள்.”
“உண்மைதான்!…அவங்கள் நேரம் பார்த்துக் கொண்டு இருந்திருக்கிருங்கள்…கொஞ்சம் அசட்டையாயிருந்தவுடனை நடத்தி முடிச்சுப் போட்டாங்கள்…சிறுபான்மையினராயிருந்து கொண்டும் கண்ணயர்ந்து போனது பிழை”.
“பாவம், பொடியன்”.
யாழ்ப்பாணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது –
“அண்ணை…நீங்கள் தானே களவு குடுத்தனீங்கள்….யாழ்ப்பாணத்திலைதானே இறங்கிறியள்?…பெடியனைப் பொலீசிலை குடுத்து ஒரு முறைப்பாடு செய்யவேணும்…நாங்களும் வாறம்”
சிறுவனைத் தாக்குவதில் முன்னணியில் நின்றவர்கள் இப்பொழுது. அடுத்த நடவடிக்கையில் இறங்குகின்றனர் –
களவு கொடுத்தவர் ஓர் அப்பாவியாக இருக்கவேண்டும்;
“நான் இறங்கிறது…கொக்குவில் பாருங்கோ . நீங்களங்கை பெடியானுக்கு மூஞ்சை கீஞ்சையெல்லாம் உடைச்சுப் போட்டியள். நான் வரமாட்டன் – பிறகு என்னையெல்லே புடிச்சு அடைச்சுப் போடுவாங்கள்.”
“உங்கற்றா உதுதான்…இந்தத் தமிழன்ரை புத்தி! உவருக்காக நாங்கள் இப்ப அவனுக்கு அடிச்சுப்போட்டு நிக்கிறம்…அவர் இப்ப பின்னுக்கு நிக்கிறார்.”
“உவருக்கிப்ப, இதிலை இறங்கி வரேலாமல் என்ன அவசரமாம்? மனுசியிட்டைப் போகப்போறாராமே…!”
“நான் என்ன அவனுக்கு அடியுங்கோ எண்டு சொன்னனே?”
“ஓமண்ணை! தமிழனுக்கு உந்தப் புத்தி இருக்கும் வரைக்கும் கடைசி வரையும் உருப்படமாட்டான்.”
“ஓம்! அந்தாள் அப்போதைகூடிச் சொன்னதுதானே…அடியாதையுங்கோ அடியாதையுங்கோ எண்டு”.
“நீர்…பேய்க்கதை பேசாமல் இரும்!”
“உவருக்கு இப்ப வடிவாய்க் குடுத்தீங்களெண்டால் சரிவரும்”.
“சும்மாயிருங்கோப்பா! அந்தாள் களவு குடுத்த எக்கத்திலை நிக்குது.”
யாழ்ப்பாணம் நிலையத்தில் புகையிரதம் நிற்கிறது.
“டேய்! தம்பியவையள்…ஆர் நீதானே பெடியனுக்கு அடிச்சனீ?…ஓடுங்கோடா…போய் மற்றப் பக்கத்தாலை இறங்கிப் போங்கோ…அவன்ரை பல்லையும் உடைச்சுப் போட்டீங்கள்…இக்கணம், பொலீசிட்டைக் காட்டிக் குடுத்தானெண்டால்….வில்லங்கம்!”
இந்தக் கரிசனையான அன்புக்கட்டளையில் அந்தச் சண்டியர்கள் ஓடி, ஒழிந்து இறங்குகிறார்கள்.
சிறுவன் எழுந்து மற்றவர்களைப் பயத்துடன் நோக்குகிறான். பின்னர் வெளியே பார்க்கிறான். தெரியாத இடம் – மீண்டும் நடுக்கத்துடனும், விம்மலுடனும் அழுகை தொடங்கி விடுகிறது.
இவன் இரக்கத்துடன் சிறுவனை, “இறங்க வேண்டிய இடம் எது?” என சிங்களத்தில் கேட்கின்றான்.
“மதவாச்சிய”
அவரவராக மற்றவர்கள் இறங்கியதும், களவு கொடுத்தவர் தப்பினேன், பிழைத்தேன் என தனது பயணத்தை தொடர்கிறார்.
கொக்குவில்..
களவு கொடுத்தவர் இறங்கி தனது பேசைக் கையிலெடுத்து அதிலிருந்த ‘ரிக்கற்றை’ எடுத்துக் கொண்டு நடக்கிறார்.
புகையிரதம் குலுக்கலுடன் கிளம்புகிறது.
இவனுடைய மனதும் குலுங்குகிறது; பயணம் தொடர்கிறது.
– தொழிற் திக்களத் தமிழ்க்கழகத்தினால் அகில இலங்கை ரீதியிலே நடத்தப்பட்ட 1976-ம் ஆண்டிற் கான சிறுகதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை – பலாத்காரம் (சிறுகதைத் தொகுப்பு), முதற் பாதிப்பு: 10-07-1977, தமிழ்ப்பணிமனை, யாழ்ப்பாணம்