கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமலர்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 1, 2013
பார்வையிட்டோர்: 17,272 
 
 

பிருந்தா மாமியின் முதல் ஆண்டு திதி, மூன்று நாட்கள் நடந்து முடிந்த பத்தாம் நாள், பிருந்தாவின் கணவர் மகாதேவன் காணாமல் போனார்.
சென்னையின் புறநகர் பகுதியொன்றின், தனி வீட்டில் தன் மூத்த மகன் ரவியுடன் இருந்தார் மகாதேவன். ரவி, ரவியின் மனைவி உஷா இருவருமே, வேலைக்குச் செல்பவர்கள். அவர்களுக்கு, 10 வயதில் ஒரு மகன், பள்ளியில் படித்துக் கொண்டிருந்தான்.
மகாதேவனின் இரண்டாவது மகன் குமார், மும்பையில் வேலையாக இருந்தான். அவன் மனைவி இந்துவும், வேலைக்குச் செல்லும் பெண்ணே. அவர்களுக்கு, ஆறு வயதில் ஒரு பெண் இருந்தாள். இந்துவின் பெற்றோர் அருகில் இருந்ததால், குழந்தையைக் கவனிப்பதில் பிரச்னை இல்லை.
திடீரென்று ஒரு விடியற்காலை நேரத்தில் தான், காணாமல் போனார் மகாதேவன். தங்கள் அறையிலிருந்து எழுந்து வந்து, தந்தையை காணவில்லையே, எங்காவது வெளியில் போய் இருப்பாரோ என்ற எண்ணத்திலும், ஏதும் சொல்லாமல் போக மாட்டாரே… என்ற குழப்பத்திலும், நியூஸ் பேப்பருடன் வந்து சேரில் அமர்ந்த ரவியின் கண்களில், மேஜை மீது, மடித்து வைக்கப்பட்டிருந்த கடிதம் தென்பட்டது.
பயணம்எடுத்து படிக்க ஆரம்பித்தான் ரவி…
அன்புள்ள ரவி,
இந்த கடிதத்தை நீ படிக்கும் போது, நான் எந்த ஊரில், எந்த இடத்தில் இருப்பேன் என்று எனக்கே தெரியாது. நான் இனி, என் எழுத்து மூலம் சொல்லப் போவதையெல்லாம் கேட்டு, உனக்கு ஆச்சரியம் ஏற்படலாம்; கோபம் உண்டாகலாம். என் மீது வெறுப்பு வரலாம் அல்லது “இந்த அப்பாவுக்கு என்ன ஆச்சு? பைத்தியம் பிடித்து விட்டதா?’ என்று கூட நினைக்கலாம்.
கவுரவமான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து, படித்து வேலைக்குப் போய் திருமணம் செய்து, அழகாகக் குடும்பம் நடத்தி, பிள்ளைகள் பெற்று, வளர்த்து ஆளாக்கி வேலையிலிருந்து ஓய்வு பெற்று, பேரன் பேத்திகளைப் பார்த்து, வாழ்க்கையில் எல்லா நிறைவுகளையும் பெற்ற பின், என்ன காரணத்தினால் திடீரென்று மூளை பிறழ்ந்து போய்விட்டது என்றும் தோன்றலாம்.
அதெல்லாம் ஒன்றுமில்லை; அப்படியெல்லாம் நீயோ, உன் மனைவி உஷாவோ, உன் தம்பி குமாரோ, அவன் மனைவி இந்துவோ பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் நல்ல தெளிவுடன் தான் இருக்கிறேன்.
பெரிய புகழுடனும், பணத்துடனும், பலத்துடனும் பெயர் சொல்லி அழைக்கப்படும் அவனோ, அவரோ, அவளோ அந்த உயிர் மூச்சுக்காற்று போய்விடும் போது அதுவாகி விடுகிறது. வாழ்க்கை என்பதும் அவ்வளவு தான்.
கடந்த ஓராண்டு காலத்தில், என் மனதில் ஓடிய ஓட்டங்கள் பல. அதில் சிலதான், என்னை இந்த முடிவுக்கு வரத் தூண்டின. விதியின் திட்டங்கள் எதுவாக இருந்தாலும், 62 வயதான எனக்கு, இனி வாழும் காலம் குறைவு என்பதுதான் நியதி.
இந்த வாழ்க்கையில் நான் பெற்றது அதிகம்; தொலைத்தது சில. அந்த சிலவற்றை இன்று நான் செயல்படுத்தி முடிக்காவிட்டால், என் ஆத்மா (அப்படி என்ற ஒன்று இருக்குமானால்) சாந்தி அடையாது என்று எனக்குத் தோன்றியது.
பயப்படாதே… என்னுடைய ஆசைகள் ஒன்றும் கேவலமானதல்ல. சின்ன வயசு முதல், எனக்கு பல இடங்களுக்குச் சென்று, அங்குள்ள மனிதர்களை, அவர்கள் வாழ்க்கையை ஒரு தேசாந்திரியாக பார்த்து ரசிக்க வேண்டும் என்ற ஆசை உண்டு. கறார், கட்டுப்பாடுகள் நிறைந்த என் பெற்றோரும், என் தொழில் மற்றும் தொடர்ந்து உண்டான குடும்பப் பொறுப்புகளும் அதற்கு இடம் தரவில்லை.
நான் வேலையிலிருந்து ஓய்வு பெற்ற பின், மனைவியுடன் போகலாம் என்று திட்டமிட்டதுண்டு. ஆனால், அதுவும் நிறைவேறவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளாக நான், கட்டுப்போட்டு வைக்கப்பட்டிருந்தேன்.
என் சுதந்திரம் கடந்த ஒரு ஆண்டு காலமாகத்தான். அந்த சுதந்திரம் எத்தனை நாட்கள் இருக்கும் என்று எனக்குத் தெரியாது. என் உடல் நிலை நன்றாக இருக்கும் நாளிலேயே, நான் பார்க்க வேண்டிய இடங்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தோன்றியது.
சுத்தப் பைத்தியக்காரத்தனமான செயலாக உனக்குத் தோன்றுகிறதா?
இருக்கலாம். அதுதான் என் ஆசை.
அதை நிறைவேற்றிக் கொள்ளத்தான், இன்று எத்தனையோ, முறையாகத் திட்டமிடப்பட்ட சுற்றுலாக்கள் இருக்கிறதே என்று சொல்வாய்.
ம்ஹூம்… அது எனக்கு சரிப்படாது.
நான், வெறும் நானாக, முகம் தெரியாத ஒருவனாக முற்றிலும், புதிய புதிய சூழல்களில் சென்று அங்குள்ள இடங்களை, மனிதர்களை, வாழ்க்கையைப் பார்க்க வேண்டும். எனக்கு அந்த இடம் அலுத்துப் போனதும், வேறோர் இடத்திற்குக் கிளம்பிவிட வேண்டும்.
மேற்கத்திய நாடுகளிலும், அவர்கள் வாழ்க்கையிலும் இது சகஜம்.
என் நண்பன் ஒருவன் வீட்டில், நான் சந்தித்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்மணி, ஐரோப்பிய நாடுகள் அனைத்தையும், “ஹிட்ச் ஹைகிங்’ அதாவது போகும், வரும் வாகனங்களில் ஏறி, “ஓசி சவாரி’ செய்தே பார்த்ததாகத் தெரிவித்தாள்.
ஆனால், இவை இங்கு அபூர்வம். நான் அந்த வகையில் அபூர்வமானவன் தான்.
“நீ எங்காவது போய் வியாதி, விபத்து என்று வீழ்ந்து என்னை அலைக்கழிக்கப் போகிறாயா?’ என்று நீ கேட்கலாம்? உனக்கு அப்படி ஒரு சந்தேகம் வர, எல்லா சாத்தியமும் உண்டு. அது நியாயமானதும் கூட. ஆனால், ஒன்றை நினைவில் வைத்துக்கொள்.
நான், இனி திரும்பி வரப்போவதில்லை. என்னிடம் எந்தவிதமான தொடர்பு சாதனங்களும் இல்லை. என் பையில் அல்லது பர்சில் உள்ள விலாசமோ, தொலைபேசி எண்ணோ அல்லது உன் தம்பியின் தொடர்பு எண்களோ கிடையாது.
எனக்கு ஏதாவது நேர்ந்தாலும், நான், உங்கள் விலாசங்களைத் தர மாட்டேன். நான் குடும்பம் இல்லாத, ஒரு தனிமனிதன் என்று சொல்லி விடுவேன்.
என் உடலில் தெம்பும், மனதில் தைரியமும், கையில் பணமும், (நம்முடைய கூட்டுக் கணக்கில் இருந்து எனக்கு எவ்வளவு தேவை என்று தோன்றியதோ அதை எடுத்துக் கொண்டு விட்டேன்! இனி, அதில் எனக்கு உரிமையில்லை) உள்ளவரை பயணித்துக் கொண்டிருப்பேன்.
அந்த நாட்களில் மன்னர்கள் கூட, தன் மகனுக்கு முடி சூட்டிய பின், “வானப்ரஸ்தம்’ என்று, நாட்டை விட்டு, குடும்பம் துறந்து, காட்டுக்குத் தவம் செய்யப் போய்விடுவர் என்று, இந்திய வரலாறு கூறுகிறது. அவர்களின் முடிவு, அங்கே எங்கோ தான் நிகழும்.
ஆனால், இன்றைய சூழ்நிலையில், “வானப்ரஸ்தம்’ என்பது முதியோர் இல்ல வாழ்க்கை என்றாகிவிட்டது. எனக்கு, அது பிடிக்கவில்லை.
எனவே, சர்வ சுதந்திரத்துடன், என் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள, புதிய உலகத்தை பார்த்து, என் மரணத்தை நானே எதிர்கொள்ளப் புறப்பட்டு விட்டேன். என் மரணம் கங்கைக்கரையிலும் நிகழலாம் அல்லது ஒரு கிராமத்து வீட்டிலோ, பெயர் தெரியாத ஒரு மருத்துவமனையிலோ நிகழலாம்.
அந்த செய்தி உனக்கு கட்டாயம் வராது. உன்னை பொறுத்தவரை, உன் அப்பாவின் சரித்திரம் முடிந்து விட்டது. இனி திரும்பி வரப்போவ தில்லை. என்னைத் தேட முயற்சி எடுக்காதே… அது அநாவசியம்; வீண்.
நான் கோழையல்ல; தற்கொலை செய்துகொள்ள மாட்டேன். என் ஆசை தீர, இந்த தேசத்தின் பல பகுதிகளையும், என் விருப்பப்படி எந்தவிதமான கட்டுப்பாடுகளும் இல்லாமல் சுற்றி வருவேன். அதில், எங்கே என் முடிவு நேருகிறதோ நேரட்டும்.
என்னுடைய இந்த முடிவுக்கு, எவரும் காரணமல்ல; நானே தான். சட்டரீதியாக, என் சேமிப்பு மற்றும் சில சிறிய சொத்துக்கள், உங்களுக்குச் சேர முறையான டாகுமென்ட்டுகளை தயாரித்து, நம் வீட்டு பிரோவில் வைத்து விட்டேன்.
யாராவது, உன் அப்பா எங்கே என்று கேட்டால், என்ன பதில் சொல்வது என்று நினைக்கிறாயா?
“ஓடிப்போய் விட்டார்’ என்பது தான் நம் நாட்டில், இதுபோல் எடுக்கும் முடிவுகளுக்கான பெயர். நீ அப்படிச் சொல்ல வேண்டாம். “குமாரிடம் இருக்கிறார்’ என்று சொல். குமாரிடம் கேட்டால், ­ நான் உன்னிடம் இருப்பதாகச் சொல்லட்டும். அப்படியும் இல்லை என்றால், “ஆன்மிகத் தலங்களுக்கு டூர் போயிருக்கிறார்…’ என்று சொல். நீங்கள் இந்த காலத்து இளைஞர்கள். உங்களுக்கு இந்தச் சின்ன விஷயத்தை மறைத்து, சமாளித்துப் பேசத் தெரியாதா என்ன? தவிர, இன்று அவரவர்களுக்கு அவரவர் பிரச்னைகளே தலைக்கு மேல் உள்ளது. ஊராரைப் பற்றி, ஒரு அளவுக்கு மேல் கவலைப்பட மாட்டார்கள்.
உங்கள் குடும்பத்திற்கும், குழந்தைகளுக்கும் என் ஆசிகள்.
இப்படிக்கு நீங்கள், “க்ரேசி ஓல்ட்மேன்’ என்று நினைக்கப் போகிற, உங்கள் அப்பா மகாதேவன்.
கடிதத்தை படித்து முடித்த ரவிக்கு, என்ன சொல்வதென்று தெரியாத பல உணர்ச்சிகள் அலைமோதின. “” என்ன ரவி… லெட்டர்?” என்ற மனைவி உஷாவிடம், கடிதத்தை கொடுத்தவன், தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தான்.
குமாருக்கு போன் பறந்தது. அவனும் போனிலேயே அழ ஆரம்பித்தான். “”என்ன அண்ணா… அப்பா இப்படி செய்து விட்டார்… அவர் என்ன லூசா… நாம் அவருக்கு என்ன குறை வைத்தோம்?” என்றான் அழுகையுடனே.
“”ஒரு குறையும் இல்லடா குமார்… அவரே தான் சொல்கிறாரே…” என்றான் ரவி.
கடைசியாக இரண்டு சகோதரர்களும், அவர்கள் மனைவிகளும் கலந்து பேசி, ஒரு முடிவுக்கு வந்தனர். மகாதேவனால், தினம், “தினமலர், இந்து’ இரண்டு நாளிதழும் பார்க்காமல் இருக்க முடியாது.
அதனால், பாலச்சந்தரின்,”மரோசரித்ரா’ படத்தில் வந்தது போல, “அப்பா… நல்லா இருக்கீங்களா… ரவி – உஷா, குமார் – இந்து என்று விளம்பரம் தருவோம். அதைப் பார்த்தாவது மனசு மாறி, ஏதாவது பதில் சொல்ல மாட்டாரா…’ என்று தீர்மானித்தனர்.
விளம்பரம் வெளியாகி, ஒரு வாரத்திற்கு ஒரு பதிலும் இல்லை. எட்டாம் நாள், இவர்கள் தந்த விளம்பரம் போலவே, “தினமலர், இந்து’ இரண்டிலும், அதே இடத்தில், மற்றொரு விளம்பரம் வந்திருந்தது…
“நன்றாக இருக்கேன் – அப்பா!’
அதைப் பார்த்து ரவியும், குமாரும் மகிழ்ச்சியடைந்தனர்.
“”டேய்… மாசாமாசம், இப்படி ஒரு விளம்பரம் தருவோம். ஒருநாள் இல்லை, ஒரு நாள், அப்பா மனசு மாறி, திரும்பி வந்திடுவார்,” என்று சொல்லிக் கொண்டனர்.
அன்று பிற்பகல் உஷா, தன் ஆபீசிலிருந்து குமாரின் மனைவி இந்துவுக்கு போன் செய்தாள்.
“”நம் கணவர்களை சந்தோஷப்படுத்த, நாம் மாசா மாசம் இப்ப கொடுத்தது போல், “நன்றாக இருக்கேன்…’ என்று, மறு விளம்பரம் தர வேண்டும் போல இருக்கு இந்து,” என்றாள்.
பதிலுக்குச் சிரித்த இந்து, “”அவர்களுக்கு விஷயம் தெரிகிற வரைக்கும் கொடுத்தால் போச்சு,” என்று பதில் சொல்லிவிட்டு, பெருமூச்சுடன் தன் வேலையில் ஆழ்ந்தாள்.

– நவம்பர் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *