பதில் இல்லாத கேள்விகள்!

0
கதையாசிரியர்:
தின/வார இதழ்: கல்கி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: September 26, 2014
பார்வையிட்டோர்: 22,300 
 
 

கண்களை மெல்ல மெல்ல திறந்தபோது கொஞ்சம் கொஞ்சமாய் உணரத் தொடங்கினேன்…. நான் இன்னமும் உயிரோடு இருக்கிறேன் என்பதை. இந்த முறையும் சாகவில்லை என்பது உறுதியாகிவிட்டது. குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. நேற்று பாலில் தூக்க மாத்திரைக் கலந்து சாப்பிடும் போது.. கத்தரி பூ கலரில் சேலை கட்டிருந்தேன். ஆனால் இப்போது வெளிறிப் போன பச்சை நிற கவுன் போட்டு இருந்தேன். ஏதோ நாற்றம் வருவது போல் இருந்தது. அது நான் போட்டு இருக்கும் ஆஸ்பத்திரி கவுனிலிருந்து வருகிறதா… அல்லது என் சுவாசத்தில் இருந்தா என்று பிரித்து உணரமுடியவில்லை. ஆனால், உடனே எழுந்து போய் குளிக்க வேண்டும் போல் இருந்துச்சு. எழுந்திருக்க முயன்றேன்… ஆனால் முடியல.. நாத்த்த்தைப் பொறுத்துக் கொள்ள மூக்கைப் பழக்கினேன்; பழகிக்கொண்டது!

நான் கண் முழிச்சுட்டேன்ங்கிறதை தூரத்தில் இருந்து பார்த்து உறுதி செய்துகொண்ட என் ஆசைக் கணவர் கிளம்பிட்டார். சாப்பிடப் போகிறாரோ… அல்லது ஆஸ்பத்திரி பில் செட்டில் பண்ணப் போகிறாரோன்னு தெரியல. ஆனால் நான் பிழைத்துக் கொண்டதற்காக அவர் அலட்டிக் கொள்ளப் போவதும் இல்லை; பெரிதாய் அழப்போவதும் இல்லை.

பாவம்… அவர் பக்கமும் நியாயம் இருக்கிறது. நான்கு முறை தற்கொலைக்கு முயன்ற ஒருத்தி, எமனை க்ளாஸ் அப்பில் பார்த்த ஒருத்தி, ஒருமுறையாவது(?) செத்துப் போயிருக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் தப்பித்துக் கொண்டே இருந்தால்…? நானும் மனதைக் கல்லாக்கி, மண்ணாக்கி, சரியாக திட்டமிட்டு புதுப் புது ஐடியாக்களை யோசிச்சு, சரியான சமயத்தில் செயல்படுத்தியும் அது வெற்றி பெறவில்லைன்னா… என்ன செய்வது?. என் மீது எனக்கே அடக்கமுடியாத ஆத்திரமும் கோபமும் வரத்தான் செய்கிறது. உங்களுக்கும்தானே?! கதையைக் கேளுங்கள்…

முதல் முறை வீட்டில் தூக்குப் போட முயற்சித்து, ஃபேனில் எனக்கு ரொம்ப பிடிச்ச மயில்கழுத்துக் கலர் சில்க்காட்டன் புடவையை மட்டிக் கொண்டு இருந்த போது… பாழாய்ப் போன கலா அக்கா வீட்டில் டீத்தூளோ, காபித்தூளோ தீர்ந்து போக, என் வீட்டுக் கதவைத் தட்டி என் பேரைச் சொல்லிக் கூப்பிட என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி, சேலையை சுருட்டிக் கொண்டு இறங்கி வந்து அவங்க்கிட்ட ’தூங்கிக்கிட்டு இருந்தேன்க்கா” என்று பொய் சொல்ல வேண்டியதாகிவிட்டது. நான் என்ன செய்ய?

இரண்டாவது முறை எடுத்து கண்ணை மூடிக் கொண்டு ’ஆல் அவுட்” லிக்விடை ’மடக் மடக்’ என்று குடித்து முடித்தேன். கொஞ்ச நேரத்தில் மயக்கம் வருவது போல் இருந்தது. அந்த நேரம் பார்த்து, கரண்ட் மீட்டர் கணெக்கெடுக்க வந்த ஈபிக்கார்ர், கதவைத் தட்ட… நான் நெடும் நேரம் ஆகியும் கதவைத் திறக்காததால்.. அக்கம்பக்கத்து வீட்டுக்காரர்கள் எல்லாம் அந்த மத்தியான நேரத்திலும் கும்பலாய் ஓடிவந்து, நிலமையை உணர்ந்து வாயில் சோப்புத் தண்ணியை ஊற்றி பிழைக்க வைத்துவிட்டார்கள். (அந்த நேரம் ஏதாவது ஒரு சேனலில் ஒரு நல்ல படம் போட்டு இருந்திருக்கலாம்) ஆனால் அந்த ஆல் அவுட்டை அப்படியே முழுசா நான் முழுங்கி இருந்தாலும் அவுட் ஆகி இருக்க மாட்டேன் என்று டாக்டர் சொன்ன போது என்னால் அழவும் முடியவில்லை; சிரிக்கவும் முடியவில்லை. தற்கொலை செஞ்சு சாகவும் ஒரு யோகம் வேண்டும் போல!.

மூன்றாவது முறை கணவர் வெளியூருக்குப் போனவுடன்… எங்க ஊரு சிவன் கோவிலில் பூத்து இருந்த அரளிசெடியில் இருந்து கொண்டு வந்திருந்த அரளி விதையை அரைத்துக் குடித்தேன். என் நேரம்… என்னிக்கும் எனக்கும் போன் செய்யாத என் கணவர் அந்த நேரத்துக்கு சரியாக சொல்லி வச்ச மாதிரி போன் செய்தார். உயிரே போனாலும் போனை எடுக்க கூடாதுன்னு முடிவு செஞ்சு போனை எடுக்கல. மனுஷன் சும்மா விட்டாரா? இல்லையே. அடுத்த தெருவில இருக்குற அவருடைய பிரண்டுக்கு போன் செய்ய, பாவம் அந்த மனுஷன் குடும்பமாய் ஓடி வந்து, காப்பாத்திட்டாரு. அவருக்கு ஏதோ ஒரு பெரும் பாவத்துல இருந்து என்னை மீட்டுட்ட திருப்தி. போகிற போக்குல தற்கொலை பண்ணிக்கிறது முட்டாள்தனம். தற்கொலை பண்ணிக்க எடுக்கௌற ரிஸ்கை, வாழறதுக்கு எடுக்கலாமில்லன்னு அட்வைஸ் வேற. நம்ம நேரம் கேட்டுத்தானே ஆகனும். என் நிலைமை அவருக்கு வந்தா அவரும் அதைத்தான் செய்வாரு. நீங்களும்தான்!.

ஆனா, இந்த வாட்டி எல்லாம் சரியாக, ரொம்ப கரெக்ட்டா பண்ணினேன். அப்புறம் எப்படி பொழைச்சேன்னுதானே கேக்குறீங்க. பத்து தூக்குமாத்திரையை பக்கத்து வீட்டு பங்கஜம் அம்மா வீட்டுல இருந்து கிட்ட்த்தட்ட திருடிட்டு வர தெரிஞ்ச எனக்கு, மாத்திரையை முழுங்கினதும் அந்த அட்டையை யாரு கண்ணுலயும் படாம துக்கி எறிய புத்தி வரல. பால்கனியில மணிக்கணக்கா நின்னு போன் பேசிட்டு நட்டநடு ராத்திரிக்கு தூங்க வந்தவர் கண்ணுக்கு அந்த ஜீரோ லைட் வெளிச்சத்துலயும் அந்த அட்டை கண்ல பட்ட்டுருச்சு. மனுசனுக்கு அனுபவ அறிவு…உடனே என்னை அக்கம்பக்கத்துல யார்கிட்டயும் சொல்லாம இங்க வந்து சேர்த்திட்டாரு. பொழச்சுகிட்டென்.

’அடிப்பாவி செத்து போக தற்கொலை பண்ணிக்கிட்டதக் கூட இப்படி வடிவேலு காமெடி கணக்கா சொல்லூறியேன்’னுதானே யோசிக்கிறிங்க. எனக்கு வேற வழி தெரியலீங்க. பத்தாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். அதுக்கு மேல படிப்பு நம்மகிட்ட வரமாட்டேன்னு சொல்லிடுச்சு. ரெண்டு மூணூ வருஷம் சோறாக்க, குழம்பு வைக்க கத்துகிட்டு இருந்தேன். அப்பத்தான் எங்க அப்பா, எங்க அத்தை மகனை எனக்கு கல்யாணம் கட்டித் தர வேணும்னு எங்க அத்தைகிட்ட கிட்ட்த்தட்டக் கெஞ்சி இருக்காரு. அத்தையும் அண்ணன் மேல இருந்த பாசத்துல சரின்னு சொல்லிடுச்சு. எங்க அத்தை மகன், பார்க்க கமலஹாஸன் மாதிரி இருப்பாரு (நீங்களும் இப்படித்தான் சொல்லிட்டு இருக்கிங்களா?) நான் மாநிறமாத்தான் இருப்பேன். பத்தாவது நாலு பாடத்துல ஃபெயிலு. அவரு எம்டெக் படிப்பெல்லாம் படிச்சிருக்காரு. ஃபாரின் கம்பெனியில கைநிறைய… இல்ல பைநிறைய சம்பளாம் வாங்குறாரு.

நிறைய படிச்ச ஆளு, நம்மகிட்ட எப்படி இருப்பாரோன்னு ஆரம்பத்துல பயந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி எதுவும் நடக்கல. உன்ன மாதிரி கொஞ்சம் கிராமத்து களையில இருக்குற பொண்ணாத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நெனச்சிருந்தேன்னு சொன்னப்ப சந்தோஷமா இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அவர் மேல லவ்வுன்னா லவ்வு. அப்படி ஒரு லவ்வு. சாமி சத்தியமா சொல்றேங்க… என் உலகம், சந்தோஷம், நிம்மதி, அழகு, ஆசை எல்லாமே அவருன்னு மாறிட்டேன். எங்க அத்தை கூட சொல்லும், படிச்சவனா பார்த்துக் கட்டிக்கிடோம்கிற ஆணாவம் என் முகத்துல ப்படியே தெரியுதுன்னு சொல்லும். சரி அது போராமையில சொல்லுதுன்னு விட்டுடுவேன்.( ஆனா உணமை அதுதானே!)

கல்யாணம் கட்டிகிட்ட ஆறு வருஷம் என்மேல ஆசைய்யாத்தான் இருந்தாரு. ஆனா என்ன சாமி குத்தமோ எனக்கு புள்ளையே பொறக்கல. அவரு… ‘’நமக்கு இன்னமும் வயசிருக்கு… கொஞ்சம் வெயிட் பண்னுவோம். கண்டிப்பா குழந்தை பிறக்கும்னு சொல்வாரு’’ அந்த நம்பிக்கையில நானும் டாக்டர்கிட்ட போய் செக் பண்ணிக்கல. ஆனா நாள் போகப் போக அவர் என்னை வீடு கொஞ்சம் தூரமா போற மாதிரி ஒரு உணர்வு. இந்த ஊர்ல எனக்குன்னு யாரும் குளோஸ் ஃபிரண்ட்ஸ் கிடையாது. அழுகையும் ஆத்திரமா வந்தாலும் யார்கிட்டயும் இதை சொல்றதுல எனக்கு உடன்பாடும் கிடையாது. என் பிரச்னை; என் கஷ்டம் நானே சமாளிச்சுக்கணும்னு தோணுச்சு. எங்க அம்மா அப்பாகிட்ட கூட சொல்ல.

அவர் ட்ரெஸ் போட்டுக்குற ஸ்டைல் மாறுற மாதிரி தோனுச்சு. சின்ன பசங்க பண்ணிக்கிற மாதிரி ஸ்டைலா, டைட்டா சட்டை, பேண்ட், செருப்பு எல்லாத்தையும் மாத்திகிட்டார். அப்பக் கூட அவர் மேல எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ’என் புருஷன் நல்லவரு.. நிறைய படிச்சவரு, எனக்கு மட்டும் இல்லை..யாருக்கு தூரோகம் பண்ண மாட்டார்’னு ரொம்ப நம்பினேன். பக்கத்து வீட்டு கலா அக்கா கூட சொல்லுச்சு,’’ அஞ்சு கொஞ்சம் பார்த்து இருந்துக்கோ… அநியாயத்துக்கும் அப்பாவியா இருக்காத.. உன் புருஷன் நடை, உடை ஒண்ணும் சரி இல்ல’’ன்னு சொன்னாங்க. நான்தான் ’இந்த ரொம்ப்ப் படிச்ச பொம்பளைகளே அடுத்தவங்களை சந்தேகப்பட்டுகிட்டே இருப்பாங்க’ன்னு நினைச்சுட்டு விட்டுட்டேன்.

ஆனா ஒருநாளு எங்க வீட்டுக்கு ஒரு பொண்ணு வந்துச்சு. அவர் கூட வேலை பார்க்குறவங்கன்னு சொல்லுச்சு. பார்க்க அழகாத்தான் இருந்துச்சு. ஸ்டைலா பேண்ட், சட்டை போட்டுகிட்டு ஸ்டூல் மாதிரி செருப்பு போட்டுகிட்டு இருந்துச்சு. இந்த மாதிரி ட்ரெஸ் பண்றா பொண்ணூங்களைத்தான் இவருக்குப் பிடிக்காதெ. இப்படி வீட்டு வற்ற அளவுக்கு எப்படின்னு யோசிச்சுகிட்டே டீ வச்சு கொடுத்தேன். கொஞ்ச நேரத்துல போயிடும்னு நினைச்சா… மணிக்கணக்கா உட்கார்ந்து ரெண்டு பேரும் பேசினாங்க. மத்தியான சாப்பாடும் சாப்பிட்டுச்சு. அப்புறமும் பேசிச்சு. பேசுச்சு..அப்படி ஒரு பேச்சு. நமக்கு அது பேசுற இங்கிலீஷ் புரியாதால வேற ரூமுக்கு போயிட்டேன். ஆனா மனசெல்லாம் இங்கதான். போகும் போது போயிட்டு வர்றென்ங்கிறதை ஒரு சம்பிராதயத்துக்கு சொல்லிட்டுப் போச்சு. பார்த்தா என்ன விட நாலஞ்சு வருசம் சின்ன புள்ள மாதிரி தெரிஞ்சுச்சு. எனக்கும் இவருக்குமே பத்து வருஷம் வித்தியாசம்.

அந்தப் பொண்ணு இவர்கிட்ட எதைப் பார்த்து மயங்குச்சுன்னு தெரியாது. இவரு அந்த பொண்னுகிட்ட என்னத்தப் பார்த்து மயங்கினாருன்னு தெரியல. ஆனா ஊரு எல்லாம் ஒண்னாத்தான் சுத்துறாங்கன்னு தினம் செய்தி வந்துகிட்டு இருந்திச்சு.

ஒரு ஆணும் பொண்னூம் பழகறாதுக்கும் பிரியமா இருக்கிறதுக்கும் வெறும் அழகு மட்டும் போதுமா? என்னைமாதிரி அவளால அவரை அன்பா, அக்கறையா பார்த்துக்க முடியுமா? காதல்ங்கிறது எ அழகு மட்டுமா? உடம்பு மேல இருக்குற ஆசை மட்டுமா? அதைத் தாண்டி அதில் ஆத்மார்த்தமான அன்பும் கரை இல்லாத நம்பிக்கையும் வேண்டாமா?

எனக்கு அவரு இப்படி நாற்பது வயசத் தொடப் போற காலத்துல இன்னொரு பொண்ணு பின்னாடி சுத்துறாரேன்னு கோபம் வரல. அவ மேல எந்தப் பொறாமையும் வரல. ‘இவரா இப்படி?”ன்னு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. அவர் ’இப்படி” நடந்துக்கிறாருங்கிறதை என் மனசு உணரவும் நம்பவும் ரொம்ப நாளாசு. என்ன சொன்னாலும் யோசிச்சாலும் மனசு எப்படி சமாதானம் ஆகும்? எப்படி அந்த உறவை ஒத்துக்கும்? அவர்கிட்ட இதைப் பத்திக் கேக்கப் பிடிக்கல. தைரியமும் இல்ல. அவரை சங்கடப்படுத்த மனசு ஒத்துக்கல. ஆனா, அவரையும் அந்த உறவையும் சகிச்சுக்க முடியல. அழுதேன்.. அழுதேன்…. அழுதேன்… எப்படி அழுதும் என் துக்கம் தீரவே இல்ல. எப்படித் தீரும்?

’இவர் என்னை விட்டுவிட்டு போனால் சாப்பாட்டுக்கு என்ன செய்வேன்?” என்ற கவலையால சாகல. அவர் மேல இருந்த காதல்…! கல்யாணத்துக்கு முன்னாடிவரை இவர் எனக்கு புருஷனா வருவார்ன்னு ஒரு பேச்சுக்குக் கூட நினைத்துப் பார்த்தது இல்லை. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு இவரை காதலிப்பது மட்டும் தான் என் ஆயுசுக்கும் வேலை என்று ஆனது. இருந்தேன். அவருக்காகவே வாழ்ந்தேன். அவருடைய சிரிப்புக்காகவும் சந்தோஷத்துக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்தேன். சமையலில் இருந்து கம்ப்யூட்டர் வரை சகலமும் இவருக்காகக் கற்றுக் கொண்டேன். ‘இவருக்காகவே நான்” எனக்காகவே இவர்… குழந்தையே இல்லாட்டாலும் எங்களுக்கு நாங்கள்’ என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில இருந்தேன்.

ஆனா அந்த நம்பிக்கை பொய்யா போன போது…. தற்கொலை தவிர வேறு வழி தெரியவில்லை. அதுதான் சரியான முடிவுன்னு என் மனசும் புத்தியும் திரும்பத் திரும்ப சொல்லிட்டே இருந்துச்சு. என்று தோன்றியது. காரணம், அவங்க உறவை, அன்பை, முறிக்குற சக்தி எனக்குக் கிடையாது.

அடுத்த ரூமில் உட்கார்ந்து மணிக்கணக்காக அந்தப் பொண்னுகிட்ட போனில் பேசுறார். நான் இன்னொரு ரூம்ல அமைதியாகத்தான் இருக்கிறேன். அவர் அழகாக ட்ரெஸ் செய்து கொண்டு வெளியில் போகும் போது அவளைப் பார்க்கத்தான் என்று தெரியும். அவர்கிட்ட கேட்டு என்ன நடக்கப் போகுது? கிட்டத்தட்ட ரெண்டு வருஷம் நிலைமை இப்படித்தான் இருக்கிறது. என்ன செய்ய?

அன்பின் மிகுதி, காதலின் உச்சம் கொலையும் செய்யும். எனக்கும் சில சமயம் அப்படித் தோணும். ஆனால், தற்கொலையையே சரியா செய்ய முடியாத என்னால ஒரு கொலை செய்வது சாத்தியமா? ஆனா ஒரு நாள் நான் செய்யலாம்!

……..

கொஞ்சநாளைக்கு முன்பு திடீரென்று ஒருநாள் வந்து, ’’அஞ்சு சினிமாவுக்குப் போகலாமா, கமல் படம்”” னு கேக்குறார். எனக்கு ஒருபக்கம் கோபமும் எரிச்சலும் அழுகையும் ஆத்திரமும் வந்துச்சு. இன்னொரு பக்கம் என்ன ஆச்சு இவருக்குன்னு கேள்வியும் மனசுக்குள்ள ஓடிட்டு இருந்துச்சு. எதையும் காண்பித்துக் கொள்ளாமல், போனேன். படம் பார்த்தோம்..ஹோட்டலில் சாப்பிட்டோம். வந்தோம்.

என்ன ஆச்சுன்னு தெரியல இப்பக் கொஞ்ச நாளா ஆபிஸ் முடிஞ்சு வந்து, வீட்டிலேயே இருக்கிறார். எப்பவாச்சும்தான் போனில் பேசுகிறார். ரொம்ப சாதரணமா, இயல்பா இருக்கிறார்.

அதிசயமா ’’அஞ்சு கோடைக்கானல் போலாமா” ன்னு கேட்ட போது, எனக்கு பயமாக இருந்தது. நைசா கூட்டிட்டுப் போய் அவளுக்காக என்னைக் கொலை செஞ்சுட்டா?” இருந்தாலும் துணிந்து போனேன். ஒரு வாரம் பிளான் போட்டு போனோம். படகு சவாரி, நல்ல ஹோட்டல் சாப்பாடுன்னு டைம் நன்றாகப் போனது. ஆனாலும் ஒருவித பயம் மனசுக்குள்ள இருந்திட்டே இருந்துச்சு. ஆனா அவர் அங்கு வந்ததுக்குப் பிறகு ரொம்ப ரிலாக்ஸ்டாக இருக்குற மாதிரி தோனினாலும், சந்தேகமும் பயமும் மனசுக்குப் பக்கத்துலயே இருந்துச்சு.

ஒரு வாரப் பிளான் முழுசா முடியறதுக்குள்ள, அஞ்சாவது நாளே திரும்பி வந்தோம். வீட்டுக்குப் போக, கோயமுத்தூர்ல வந்து ட்ரெயின் இறங்கி, டாக்ஸி பிடிக்க வெளியில் வந்த போது… எதிரில் அந்த பொண்ணு. என் மனசுக்குள்ள இருந்த சந்தோஷம் எல்லாம் ஆவியாகிப் போற மாதிரி இருந்துச்சு. நான் இவரைப் பார்த்தேன். அவர் முகத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அவள் இவரை நேருக்கு நேராகப் பார்த்தாள்… இருவருக்கும் ஒரு பத்து அடி தூரம்தான். இவரை சில விநாடிகள் பார்த்தவ மூஞ்சியில எந்த சலனமும் இல்ல. சஞ்சலமும் இல்ல. நேரா நடந்து போய் ஒரு கார்ல உட்கார்ந்தா… அந்தக் கார் கதவ திறந்துவிட்டவனப் பார்த்தா, பார்த்தும் புடுச்சுப் போகுமே அப்படி ஒருமுகம். கமல், கார்த்திக் ரெண்டு பேரையும் கலந்து செஞ்ச ஒரு ஆளா இருந்தான். இவ உள்ள உட்கார்ந்த அடுத்த நொடி கார் விர்ர்ன்னு கிளம்புச்சு. அப்பவும் இவர் முகத்துல எந்த ரியாக்‌ஷனும் இல்ல.

எனக்கு இப்ப அந்தப் பொண்ணு மேல பரிதாபமும் இரக்கமும் வந்துச்சு. கூடவே அழுகையும் வந்திச்சு. மனசுக்குள்ள , அவளுக்கு இப்படி ஒரு தற்கொலை அனுபவங்கள் வராமல் இருக்கனும்னு ஒரு பதைபதைப்பு இருந்துச்சு.

முதன்முதலா என் புருஷன் மேல சொல்ல முடியாத கோபம், எரிச்சல், விரக்தி, அழுகை, ஆத்திரம்னு அத்தனையும் வந்திச்சு. கூடவே என்னைக் காலம் முழுக்க துரத்துற பல கேள்விகளும்!

– கல்கி இதழில் மே 19 2013ல் வெளியான சிறுகதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *