கதையாசிரியர்:
தின/வார இதழ்: விகடன்
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 11, 2018
பார்வையிட்டோர்: 15,403 
 

மழை தூறல் ஆரம்பித்திருந்தது. நல்லவேளை… வலுப்பதற்கு முன் அலுவலகத்திலிருந்து கிளம்பியாயிற்று. அவசரமாக ஜெயதேவா பேருந்து நிறுத்தத்திற்கு ஓடினேன்.

சாலையோர கடைகளில் உண்டான மசாலா வாசனை பசியை கிள்ளியது. ராகவன் சார் சூடாக மசால் வடை வங்கிக் கொண்டு வந்திருப்பார் என்று நினைத்தபோதே உதட்டில் சிரிப்பு பிறந்தது.

ஜெயதேவாவிலிருந்து சில்க் போர்டு செல்ல வேண்டும். சில்க் போர்டிலிருந்து மற்றொரு பேருந்தை பிடிக்க வேண்டும். சில்க் போர்டு வந்தடைவது பெரும் கண்டத்திலிருந்து தப்பித்து வருவது போன்று. அதிலும் ட்ராஃபிக் பெங்களூரின் பெரும் சாபம். இந்த மழை காலத்தில் அதீத பொறுமையுடன் இருக்க பழக வேண்டும்.

சில்க் போர்டிலிருந்து சந்தாபுராவிற்கு நீளமான மேம்பாலம் வழியாக செல்லும் பேருந்துதான் 20A. புதிதாக விடப்பட்ட இந்த பேருந்து எங்களுக்கு வரபிரசாதம். இல்லையென்றால் மேம்பாலத்தின் கீழுள்ள சாதரண சாலையில் சிக்னலிலும் டிராஃபிக்கிலும் 2 மணி நேர பயணத்தை கடக்க வேண்டியதாகிருக்கும்.

சுமார் 10 நிலோமீட்டர் தூரமிருக்கும் இந்த மிக நெடும் மேம்பாலத்தில் செல்வது அத்தனை வசதியாக இருந்த்து. இந்த பேருந்தில் சென்ற புதிதில் தனிமை பயணம்தான். மேம்பாலத்தில் போகும்போது மட்டும் பெங்களூர் அழகாய் தோன்றியது. பார்வையின் எல்லையில் தெரியும் ஆரஞ்சு நிற வானமும் உயரமான கட்டடங்களும் ஒரு புது நிறத்தை கண்களுக்கு தருவது போலிருந்தது.

பல மன ஓட்டங்கள் தனிமையான பயணங்களில்தான் அமைகின்றன. மற்ற நேரங்களில் எதனை நினைப்பதற்கும் நேரமிருப்பதில்லை.

பாலத்திலிருந்து சற்று தூரமாக தெரியும் அடுக்கு மாடி குடியிருப்பில் நான்காவது தளத்தில் ஒருவீட்டில் தினமும் பச்சை விளக்கு எரியும். அந்த வீட்டில் இருப்பவர்கள் இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள் என யோசிப்பேன். இந்த எண்ணம் புதிதல்ல.

இரவுகளில் நெடுந்தூரம் பயணிக்கும்போது கட்டடங்களே தென்படாத இருளான இடங்களில் எங்கோ தூரத்தில் ஒரு வீட்டில் விளக்கு மட்டும் எரிந்து கொண்டிருக்கும். அந்த வீட்டில் யார் இருப்பார்கள் என்ன செய்து கொண்டிருப்பார்கள் என்று நினைப்பேன். இப்படியெல்லாம் நமக்கு மட்டும்தான் தோன்றுகிறதா அல்லது நம்மை போல் மற்றவர்களும் நினைப்பார்களா என கேள்விகள் எழுவதுண்டு.

இந்த தனிமையை ரசிப்பது எல்லாம் ரெஞ்சு, தமயந்தி ராகவன் சார் அறிமுகம் கிடைக்கும் வரைதான்.அதன் பின் அந்த நான்காவது தளத்தில் எரியும் பச்சை நிற வீட்டையும், சிவந்த வானத்தையும் மறந்து போனேன்.

நான், தமயந்தி, ராகவன் சார் மூன்று பேரும் தமிழ் பேசுபவர்கள். ரெஞ்சு மலையாளி. ராகவன் சார் தமிழ் தாய்மொழி என்றாலும் சொந்த ஊர் மங்களூர் பக்கம். கன்னடம் கலந்த தமிழ் அவரது பேச்சிலிருக்கும்.

தாட்டியமான உடல் வாகு, சட்டையையும் தாண்டி முன் நிற்கும் தொப்பை, கோல்டர் ஃப்ரேம் கண்ணாடி சிவப்பு சதுரக் குடை. ராகவன் சாரை நினைக்கும்போதெல்லாம் இந்த உருவம்தான் கண்முன் வரும்.

தமயந்தியும் ரெஞ்சுவும் ஐ.டி துறையில் பணி. ராகவன் சார் தனியார் கம்பெனியில் நிர்வாகதுறையில் இருக்கிறார்.

அன்றாடம் வீட்டு வேலை, அலுவலகம் என இயந்திரமாகிப் போன நாட்களில் இந்த 1மணி நேர நட்பு மனதிற்குள் சந்தோஷ கீறலா விழுந்தது. அவ்வப்போது மாமியார், நாத்தனார் என பல தலைகள் உருளும். இதில் தமயந்தியின் கொழுந்தனார் விஷயம் பிரசதித்தமானது. அமர ஆரம்பிப்பதிலிருந்து அவனைப் பற்றியே புலம்பி தீர்ப்பாள்.

ராகவன் சார் அறிமுகம் கூட அவளின் கொழுந்தனார் பிரச்சனையின் போதுதான் கிடைத்தது. ஒரு நாள் அவன் செய்யும் அமர்க்களங்களையும் கோமாளிதளங்களையும் பற்றி அவள் புலம்பும்போது பின்னாடி அமர்ந்திருந்த ராகவன் சார் கேட்டுவிட்டு சப்தமாய் சிரித்தார். ” சார் நீங்க தமிழா ” என கேட்பதில் ஆரம்பித்து ஒரு வருடமாக தொடர்கிறது எங்களுடனான ராகவன் சாரின் நட்பு .

எந்த விஷயத்தையும் சுவாரஸ்யமாக அவரது கணீர் குரலில் சொல்வார். வெகுசிலருக்குதான் தங்கள் பேச்சில் மற்றவர்களை கட்டுப்படுத்தி வைக்கும் திறமை உண்டு. அது ராகவன் சாரிடம் உண்டு.

உலக வெப்பயமாதல் பற்றியும், சுட்டுப் போட்டாலும் புரியாத உலக பொருளாதாரத்தையும் சொல்லி எங்களுடைய எண்ணங்களை விசாலமாக்கியது அவர்தான்.

“ராஜஸ்தான்ல இருக்கிற ஒரு பொண்ணு ஐஐம் ல படிச்சுட்டு விவசாயம் பாக்குதும்மா. ஒயிட் காலர் வேலையை உதறிட்டு இப்படி விவசாயம் பாக்கனும்னு எண்ணம் எத்தனைப் பேருக்கு வரும். விவசாயம் முதுகெலும்பு ன்னு காந்தி காலத்துல இருந்து சொல்லிட்டு மட்டும்தான் இருக்கோம்.”என்று நாட்டு நடப்புகளை கூட கதை போல கூறுவார்.

” வேலைக்கு போறது என்ன சோகம்? உங்களுக்கு தெரியுமா? பொண்ணுங்க 14மணி நேரம் பிஸியாக இருந்தா எப்பவும் இளமையாக மார்கெண்டேயினி மாதிரி இருக்கலாமானு ஒரு ஆராய்ச்சி சொல்லுது ” என்று வேலையைப் பற்றி அலுக்கும்போதெல்லாம் உற்சாகம் தருவார்.

ரெஞ்சு எப்போதும் கண் மட்டும் தெரியும்படி முகத்தை மறைத்தபடி முக்காடு போட்டுதான் வருவாள். நாங்கள் அவள் முகத்தையே பல மாதங்கள் கழித்துதான் பார்த்தோம்.

“”நல்லதா போச்சு. இந்த மாதிரி முக்காடு போட்டுகிட்டு பஸ் பிடிக்க அவசரமா வர்றப்போ தடுக்கி விழுந்தா யாருக்கும் நம்மள அடையாளம் தெரியாது. அப்றம் ” உன்ன அந்த ரோடுல பாத்தேனே.. இந்த ரோட்ல பாத்தேனே. ” அப்டின்னு யாரும் கேள்வி கேக்க மாட்டாங்க. என்னைக்காவது அழுகை முட்டிகிட்டு வந்தா யாராவது பாப்பாங்களோனு வர்ற அழுகையெல்லாம் கட்டுபடுத்த தேவையே இல்ல..அப்டிதானேமா? என்பார்.

“குட் அனாலிசிஸ் சார் ” என்ற படி சிரிப்பாள்.

சில்க் போர்டு நிறுத்தத்தில் நிற்கும் தள்ளு வண்டியில் கடலை விற்பவன் தொடங்கி, தினமும் ராகவன் சாரிடம் 2 நிமிடமாவது பேசிவிட்டு செல்லும் திரு நங்கை வரை சகல மனிதர்களிடம் பேசிக் கொண்டிருப்பார்.

எங்கள் பேருந்து கீழே போகுமென நினைத்து தவறுதலாக ஏறுபவர்கள் உண்டு. மேம்பாலத்தில் வண்டி ஏறும்போது பதறி பாதியில் இறங்குவது தினமும் நடக்கும். புதிதாக யாராவது ஏறினால் இது மேம்பாலத்தின் மீது போகும்வண்டி யென கரிசனமாய் சொல்லிவிட்டு வருவார்.

வயதானவர்கள் குழந்தைக்கு ஒப்பானவர்கள். சூது கபடம் எல்லாம் மறைந்து எந்த தருணத்தில் அவர்கள் குழந்தையாகிறார்கள் என்ற நியதி விளங்குவதில்லை.

நான் சில்க் போர்டை அடைந்தபோது தூறல் அதிகமானது. . நச நசவென நான்கு முனை சாலையில் தெற்கு ஓரத்தில் ராகவன் சாரின் சிவப்பு குடை மட்டும் தனித்து தெரிந்தது.

என்னைப் பார்த்ததும்

” இன்னைக்கு வடைக்காரம்மாட்ட சண்டை போட்டு உனக்காக வடைய வாங்கிட்டு வந்தேன்மா. எனக்கு தர மாட்டேன்னு சொல்லிடுச்சு..ஏன் தெரியுமா அன்னைக்கு என்னாச்சுன்னா..” என்று சொல்லும்போது மழை இன்னும் வேகமெடுத்தது. எங்கள் பேருந்து வர , ஏறி அமர்ந்தோம். வடையை பார்த்த ஆர்வத்தில் அவரிடம் வடைகாரம்மாவின் சண்டையைப் பற்றி கேட்க மறந்து போனேன்.

சில நிமிடங்களில் தமயந்தி மழையில் பாதி நனைந்தும் நனையாமலும் ஏறினாள். பஸ் ஏறியதும் அவளைப் பார்த்து ராகவன் சார் கன்னட பாடல் ஒன்றை பாட ஆரம்பித்தார். சிரிப்பு தாங்காமல் சிரித்தாள்.

” ஏன் சார் இப்பிடி?” என்று மடக்கிய குடையை உதறியபடி கேட்டாள்.

பேருந்து கிளம்பிய நேரம் அர்பிதா என்ற கொங்கணிப் பெண் ஓடிவந்து ஏறினாள். முனகியபடியே வந்தமர்ந்தாள். அர்பிதா எப்பவாவது எங்கள் பேருந்தில் வருவாள். அர்பிதாவைப் பற்றி பெரிதாக பேச ஒரே ஒரு விஷயம்தான் உள்ளது. அவளுடைய கணவனைப் பற்றியதானது.. அவள் வீட்டிற்கு செல்லும்முன் அவள் கணவன் அலவலகத்திலிருந்து வந்து வீட்டில் சமையல் முதற்கொண்டு பெருமளவு வேலைகளை அவரே செய்து முடித்துவிடுவார்.

தனக்கு இப்போது வரை சப்பாத்தி பிணையக் கூட தெரியாது என்று ஒரு நாள் அவள் முகத்தை தீவிரமாய் வைத்துக் கொண்டு சொன்னபோது எங்களுக்கு அவள் வேற்றுகிரகவாசி போலத்தான் தெரிந்தாள்.

மழை இன்னும் அசாதரணமாகியது. எப்போதும் ஏதாவது புலம்பிக் கொண்டிருப்பது தமயந்தியின் இயல்பு. அன்றும் அப்படித்தான் தனது புராஜக்டில் தனக்கு நேரும் துரோகத்தைப் பற்றி புலம்பியபடி இருந்தாள்.

“மழையும் ஓயலை. தமயந்தியின் புலம்பலும் ஓயல” என்றார் ராகவன் சார்.

தமயந்தி பின்பக்கம் திரும்பி பார்த்து “சார் உங்களுக்கு அங்க நடக்கிற பாலிடிக்ஸ் பத்தி தெரியாது அதான் இப்டி சொல்றீங்க”

” இப்டி சதா பிரச்சனைகளை பேசறது சோக கீதங்களை கேட்கிற மாதிரி.. அது ஒரு போதை தெரியுமா?. திரும்ப திரும்ப சோகமாகி அந்த கவலைகளை நினைப்பதற்கு அடிமையாகிவிடுகிறோம். நாம மட்டும்தான் கஷ்டப்படறோம் என்று நினைக்கிற உளவியல் கோளாறு ” என்றார்.

” சார் மேடமும் உங்க பிள்ளைங்களும் எப்படி உங்களை சமாளிக்கறாங்க. உங்களை கோபமா திட்டக் கூட முடியாது போலிருக்கே. அவங்களை திருப்பி இப்டி கிண்டல் பண்ணி கடுப்பேத்திடுவீங்க போல்” என்று சிரித்தபடி கேட்டாள்.

அவர் சப்தமான சிரிப்பை மட்டும் தந்தார். அவர் சொன்னதுபோல் அவளின் புலம்பல் ஓயவேயில்லை.

ராகவன் சார் சாப்பாட்டு பிரியர். சமையலும் அருமையாக செய்வாராம். அவரே சில தடவை சில பதார்த்தங்கள் செய்து கொண்டு வருவார்.

ஒரு நாள் மீனில் பஜ்ஜி போன்று புதுவகை செய்து கொண்டு வந்தார். மாலை வரை அது எந்த சேதாரமும் ஆகவில்லை. மொறுமொறுப்பும் உள்ளே மெத்தென்றும் இருந்தது. சீஸ் சேர்த்ததாக சொன்னார். தன் சமையலைப் பற்றிய பெருமிதம் அவருக்கு இருந்தது.

” நானென்னமா..எங்க ஊர்ப்பக்கம் நிறைய ஆண்கள் சமைப்பாங்க. வீட்டு வேலையும் செய்வாங்க “என்று பெருமையாக சொன்னார்.

” வாவ் எனக்கு அங்கேயே மாப்பிள்ளை பாத்துட சொல்லி என் பேரண்ட்ஸ்ட்ட சொல்றேன் . இன்னொன்னு குடுங்க சார் நல்லாருக்கு ” என்றாள் ரெஞ்சு.

ராகவன் சார் குழந்தை போல் அக மகிழ்ந்து இன்னுமொரு துண்டை அவளுக்கு கொடுத்தார்.

எந்த வயதிலிருந்தாலும் சரி ஒரு ஆண் பல பெண்களிடம் கூடி பேசினால் அவன் பெண்பித்தன் என்ற எண்ணம் சுமந்தவர்கள் பலபேர். அப்படிதான் அன்றொரு நாள் ஒருவன் கேட்டேவிட்டான் ” என்ன சார் லேடிஸ் சீட் பக்கத்துலயே பட்டா போட்டுட்டீங்க. எங்க கூடல்லாம் பேசமாட்டீங்க போல ” என்று கன்னடத்தில் நக்கலாக கேட்டான்.

ராகவன் சார் நிதானமாக ” ஒர் மகளோட பேசறதே பாக்கியம். எனக்கு இத்தனை மகள்கள் வாய்ச்சிருக்காங்க. மஹா பாக்கியம். யார்கூட பேசறதுங்கறது என் விருப்பம். இதனால உனக்கு எதாவது பிரச்சனையாச்சா ” என்றார்.

அவன் சிரித்தபடியே வழிந்தான். இயல்பான பழக்கத்தை கொச்சைப்படுத்துபவர்களை கண்டால் ஒர் அருவெறுப்பு நம்மையறிமாலே ஏற்படுகிறது. அந்த சூழ் நிலையில் ராகவன் சாரிடம் வெளிப்பட்ட இந்த வார்த்தைக்கு நன்றி சொல்ல வேண்டுமென இருந்தது.

“தேங்க் யூ சார் எங்களை மகள்ன்னு சொன்னதுக்கு. ” என்றேன் நெகிழ்ச்சியுடன்.

“நான்தான்மா நன்றி சொல்லனும் எனக்கு பெண் குழந்தைகளே இல்லை. ரெண்டு பசங்கதான். அதனாலேயே பெண்களை பார்த்தா பாசம். அதோட இன்னொரு காரணமும் இருக்கு ”

என்னது? எனக் கேட்டேன்.

” நிறைய பாக்கிறோமேம்மா… பொண்ணுங்களால நிம்மதியா வேலைக்கும் கல்லூரிக்கும் போக முடியுதா? எவன் எப்போ பங்கம் செய்யறான்னு அடிச்சுக்குதே. இந்த பஸ்லையே எடுத்துக்கோ ..இருக்கற பாதி பொண்ணுங்க. அம்மா, அப்பா ன்னு எங்கயோ ஊர்ல விட்டுட்டு குடும்பத்துகாகத்தானே உழைக்க வர்றாங்க. எப்பவும் பயத்தோடயும் சந்தேகத்தோடயும் வாழறது அவ்ளோ ஈஸியா என்ன? . அதையும் மீறி இந்த வெளியுலகத்துல நடமாடறீங்களே. அதனாலயே பெண் குழந்தைகள் ரொம்ப பிடிக்கும்” என்றார்.

என்றைக்குமில்லாமல் அன்று மேம்பாலத்திலும் ட்ராஃபிக் ஜாம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் பேருந்துலேயே மேம்பாலத்திலேயே காத்திருந்தோம்.

மழையினால் மேம்பாலத்தில் முடிவில் உள்ள சிக்னலில் கடும் ட்ராஃபிக் உண்டாயிருக்கிறது என தெரிய வந்தது. சரி நடந்தாவது போகலாமென இறங்கினால் , வெளியில் கால் எடுத்து வைக்கக் கூட வழியில்லை. சந்து பொந்துகளிலும் இரு சக்ர வண்டிகள் ஆக்ரமித்தன. எதுவும் செய்ய இயலாமல் மேம்பாலத்திலிருந்து கீழே பார்த்துக் கொண்டிருந்தோம்.

கீழே கண்ணுக்கெட்டும் தூரம் வரை எங்கெங்கிலும் வாகனங்கள். எதுவும் நகரவில்லை. தலை சுற்றியது. ஒரே ஒரு ஆம்புலன்ஸ், வாகனங்களுக்கு நட்ட நடுவில் அலறிக்கொண்டிருந்தது. மாய மந்திரம் நடந்தால்தான் அந்த ஆம்புலன்ஸ் நகர வழியுண்டு என்று ராகவன் சார் முனகிக் கொண்டிருந்தார்.

“இன்னும் அஞ்சே வருஷத்துல நடந்து போகக் கூட வழியில்லாம போகப்போகுது பாருங்க. கவர்மென்ட் ஏதாவது பண்ணனும் சார் ” என்ற அரசாங்கத்தின் மீது பாரத்தை இறக்கியபடி ஒருவர் ராகவன் சாரிடம் கூறிக் கொண்டிருந்தார்.

நேரம் விரைந்து கொண்டிருந்த பொழுதில், ராகவன் சார் “வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ” என்று மெதுவாக பாடினார். ராகம் பிசகாமல் தேனில் நனைத்த பழத்தை சாப்பிடுவதுபோலத்தான் இருந்தது அந்த குரல். பின்னிருந்த வண்டிகளில் அமர்ந்தவர்கள் எல்லாம் எட்டிப்பார்த்தனர். அவர் பாடி அன்றுதான் முழுமையாக கேட்டோம். கொங்கணி ஆர்கஸ்ட்ராவில் பாடியிருப்பதாக அவர் முன்னமே சொன்னது நினைவிலிருந்தது.

ராகவன் சாரிடம் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்தது. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணமில்லாமல் தனக்கு தோன்றியதை செய்வார். ராகவன் சாரின் அந்த பாட்டு எனக்கு ஓயாமல் இரவு நேரங்களிலும் சில நாட்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தது.

ரெஞ்சுவிற்கு எலக்ட்ரானிக் சிட்டியிலேயே வேலை கிடைத்தது. இவ்வளவு தூரம் உள்ளே வர வேண்டியதில்லை. இனி இந்த பேருந்தில் வர மாட்டாள். கடைசி நாளன்று எல்லாருக்கும் ஒர் கடையில் சிறியதாய் ட்ரீட் கொடுத்தாள்.

அந்த கடை கூட ராகவன் சாரால் அறிமுகப்படுத்தப்பட்டதுதான். மடிவாலாவில் பரபரவென சாலையிலிருந்து விலகிய ஒரு குறுகிய சந்தில் ஒரு காபிக்காக எங்களை கால் வலிக்க அலைய வைத்த இடம் அது. அதற்காக அவரை நாங்கள் திட்டியது நினைவுக்கு வந்தது. அதே கடையில் ரெஞ்சு எங்களுக்கு பிரிவு உபசாரத்தை முடித்துக் கொண்டாள்.

எந்த நேரத்தில் ரெஞ்சு சென்றாளோ, சில மாதங்களிலேயே தமயந்தியின் கணவருக்கு சென்னையிலேயே மாற்றம் கிடைத்ததால் அவளும் எங்களுடனான பேருந்து பயணத்தை முடிக்க வேண்டியதிருந்தது. மறக்காமல் கொழுந்தனார் விஷயத்தை தீர்வு காணும்படி கூறியதும் சிரித்தாள்.

வாட்ஸ் அப், ஃபேஸ்புக் என்று தொடர்பிற்கு பல இருந்தாலும்,அவை பேருந்திற்கு இணையாகவில்லை. அந்த ஒரு மணி நேர பயணம் முழுதாய் எங்களுக்காக இருந்தது. எப்பவாவதுதான் குறுஞ்செய்திகள் பரிமாறிக் கொள்வோம்..அதுவும் சில சமயம் ஹாய் சொல்வதோடு முடிந்துவிடும்.

ரெஞ்சு பேருந்தில் வந்து கொண்டிருந்த சமயம்.. எங்களிடம் பேசிக் கொண்டே அவித்த கடலையை உடைத்து ஜன்னலின் வெளியே புறாக்களுக்கு போடுவாள். குறிப்பிட்ட ஒரு புறா மட்டும் தினமும் வந்து சாப்பிடும்.

ரெஞ்சு வராது போன பின்னும் அது தினமும் வந்து பெரிய மனிதன்போல் பேருந்திற்குள் நோட்டமிடுவது அழகாய் இருக்கும். அன்றாடம் அலுக்கும் பேருந்து பயணம் பெரிதாய் என்ன தந்துவிடும்? அழகான நினைவுகளை தரும். தமயந்தி ,ரெஞ்சு எனக்கு அழகிய நினைவுகளாகிப் போனார்கள்.

ஒரு நாள் வெறுமையான மனோ நிலையில் ராகவன் சாரிடம் அலுத்துக் கொண்டிருந்தேன்.

” ஆபிஸ்ல ஒரே வொர்க் பிரஷர் சார். வீட்டுக்கு வந்தா பிள்ளைங்க நச்சு, வீடே தலைகீழா இருக்கும். சுத்தம் பண்றதுக்குள்ள போதும்னு ஆகுது … அப்பாடா ன்னு யாருமே இல்லாம நிம்மதியா இருக்கனும்னு தோணுது சார்”

“அப்படியெல்லாம் சொல்லாதம்மா. தனிமை எவ்ளோ கொடுமையானதுன்னு எனக்குதான் தெரியும்.” என்றார்.

” என்ன இப்படி சொல்றீங்க வீட்ல உங்க வொயிஃப் பிள்ளைங்க இருக்காங்களே”

“அவங்கெல்லாம் என்னை விட்டு போய் பல காலமாச்சு. இப்பதான் நான் அன்பை தேடி தேடி கொண்டாடறேன். ஆனா ஒரு காலத்துல வாயில வார்த்தைகள் வராது. மற்றவர்கள் சுருண்டு போற அளவுக்கு விஷம் தெறிக்கும். . நல்ல அப்பாவா நல்ல கணவனா நான் இருந்ததில்லை. என்னோட கோபம்தான்… அப்படியொரு உக்கிரமான கோபம்.

சில நொடி அமைதியானார்.

நான் அதிர்வுடன் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ரொம்ப டிஸிப்ளின் எதிர்பார்ப்பேன். லீவு நாள்ல கூட 4 மணிக்கு அவங்க எழுந்தாகனும். இல்லைன்னா அவங்க மேல தண்ணிய ஊத்துவேன். பிள்ளைங்க படிப்புல 80 மார்க்கு குறைஞ்சா பாடப் புத்தகத்தை எல்லாம் கிழிச்சு வீதியில சாக்கடைல வீசுவேன். அவங்ககிட்ட சின்ன குறைய கூட கண்டுபிடிச்சுட்டே இருப்பேன். சின்ன தப்புக்கும் பெரிய தண்டனைதான்.

சந்தோஷமா அவங்கள வெளிய கூட்டிட்டு போனதில்லை. சாப்பாட்ல உப்பு இல்லைனா நான் தட்டையே தூக்கியெறிவேன்.

ஒன்னு தெரியுமா? வீட்ல டிவி கூட வாங்கலை. பொழுது போக்கு , விளையாட்டு இதெல்லாம் நேரத்தை வீணடிக்கறதுன்னு சொல்வேன்.

ஆனா நான் மட்டும் எனக்கு விருப்பமானதை செஞ்சுக்குவேன். அதையும் நான் சம்பாதிக்கிறேன்னு சொல்லி நியாயப்படுத்துவேன். அவர்களுக்குன்னு கனவோ, விருப்பங்களோ இருக்கும்ங்கறதை கூட நான் உணராத ஜென்மம் நான்.

என் மூத்த மகன் கொஞ்சம் பயந்தவன். என்கிட்ட இருந்து வந்த அமில வார்த்தை அவன் மனச ரொம்பவே பாதிச்சிடுச்சு. திடீரென “ஓ” ன்னு ரோட்ல அலறிட்டே போனான். பள்ளியிலும் இதே பிரச்சனை…பயந்து போய் மன நல மருத்துவர்ட்ட காமிச்சப்ப இவன் அதீத மன உளைச்சல்னால் பாதிக்கப்பட்டிருக்கான்னு சொன்னார். எல்லாத்துக்கும் ஒரு முடிவு இருக்கும் . அப்டிதான் என் மனைவி தன் பிள்ளைங்களுக்காக என்னை வேணாம்னு சொல்லிட்டு போயிட்டா.

குதிரைக்கு கடிவாளம் கட்டின மாதிரி விறைப்பா இருந்த நான் தனிச்சு போனப்பறம்தான் மெல்ல மெல்ல என்னை சுத்தியிருக்கவங்கள பார்க்க ஆரம்பிச்சேன். பணம் காசு ஒன்னுமேயில்லாம சந்தோஷமா வாழற பலரையும் பாத்ததுக்கு அப்புறம்தான் உண்மையான சந்தோஷம் என்னன்னு புரிஞ்சுகிட்டேன். நிஜமாவே மனசு திருந்திதான் என் பிள்ளைங்கள பார்க்க மங்களூர் போனேன். இப்ப ரெண்டு பசங்களும் நல்ல வேலைல இருக்காங்க. ஆனா தப்பியும் என்னை பாக்க கூட விரும்பல. ”

இப்படி ஒரு பயங்கரம் இவரிடம் இருந்ததா என என்னால் நம்பவும் முடியவில்லை.

ஜன்னலின் வெளியே பார்த்தபடி கண்ணீரை துடைத்தபடி அழுதுகொண்டேயிருந்தார். அவரை எப்படி ஆற்றுவது என தெரியாமலிருந்தேன்.

அன்றுதான் அவரை நான் இறுதியாக பார்த்தது. அதன் பின் அவர் வரவேயில்லை. அலைபேசிக்கு அழைத்தாலும் அவர் அழைப்பை எடுக்கவில்லை..அவரை இறுதியாக ஒரு கவலை தோய்ந்த முகத்துடன் பார்த்ததுதான் எனக்கு பாரமானது.

ஒரு நாள் அவரது அலைபேசி உபயோகத்தில்லை என வந்தது. சிவப்பு சதுரக் குடை, முன் நிற்கும் தொப்பை, கண்ணாடியுடன் அவர் சிரிக்கும் பெரும் சிரிப்பையும் நான் இழந்து கொண்டிருந்தேன்.

வெகு நாட்கள் பின் பேருந்தின் ஜன்னலில் வழியே அந்த அடுக்குமாடி நான்காவது தளத்தில் பச்சை விளக்கு எரிகிறதா என பார்த்துக் கொண்டிருக்கிறேன்

– 27/10/2016

Print Friendly, PDF & Email

1 thought on “பச்சை விளக்கு!!

  1. பல முறை வாசித்தும் ஒவ்வொருமுறை வாசிக்கும் போதும் மனதை தொடுகிறது.இது போன்ற கதைகள் அபூர்வமே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *