தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,097 
 
 

சம்பிரதாயமான நாலு வாக்கியம் கடிதத்தின் கடைசியில். “எதற்கும் உங்கள் அப்பாவை ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வரவும்’ என்று என் அப்பா உங்களுக்கு செய்தி அனுப்பச் சொன்னார் என்ற ரவியின் மின்னஞ்சலைப் பார்த்த போது இது உபசரிப்பு வார்த்தை என்றே அவன் கருதினான். ஒரு மாதம் கழித்து “சென்று பார்த்தாயா?’

என்று மறுபடியும் ஒரு மின்னஞ்சல். உடனடியாக தொலைபேசியில் இந்தியாவை அழைத்தபோது,

ந்யூரான் கொலைகள்அப்பாவை முழுக்க முழுக்க கவனித்துக்கொள்ளும் சகாயமேரி, “”ஆரோக்யம் நன்றாகவே உள்ளது. அப்பா தற்போது டிவி பார்த்துக்கொண்டிருக்கிறார்” என்று சொன்னாள். “”பிறகு தம்பி பேசுது, பேசுங்க” என்ற அவளுடைய குரல் அவனுக்கு கேட்க, அதைத் தொடர்ந்து டிவியின் ஒலிச்சப்தத்தின் பின்னணியில் ஒரு நிமிடம் கழித்து, “”ஹலோ” என்ற அப்பாவின் குரல்.

“”அப்பா எப்படியிருக்கீங்க?” என்ற அவனுடைய நான்காவது குரலுக்கு “”ஐ ஆம்…. ஃபைன்” என்ற சுவார்சியமற்ற குரல் ஒலித்தது.

“”ஆர் யு ஆல்ரைட்? ”

“”எஸ்… ஐ ஆம்…… ஆல்….ரைட்”

பத்து நிமிடமாகக் காதிலேயே கைபேசியை வைத்திருப்பதைக் கண்ட மேரி, “” ஏன் பேசாமலே இருக்கீங்க? ” என்று வாங்கி, “”ஹலோ… ஹலோ” என முயன்று “”லைன் கட்டாயிடுச்சி, இதை ஏன் காதுலயே வச்சிக்கிட்டு?” என்று சொல்லி கைபேசியை வாங்கிக்கொண்டு போனாள், மறுபடி அவன் அழைத்தபோது, “”லைன் கட்டாயிடுச்சு தம்பி, அப்பா ரூம்லதான் படுத்திட்டுருக்காரு”

“”தூங்கறாரா ? ”

“”இல்ல தம்பி தூங்கலை, சும்மாதான் படுத்திட்டுருக்காரு”

“”சரி அவரைத் தொந்தரவு பண்ணவேண்டாம், ஆனா அப்பாவை போய்ப் பாருன்னு ரவி மெயில் போட்டிருந்தானே? அதனாலதான் யோசனையா இருக்கு”

“”ஒண்ணும் கவலைப்படாதிங்க தம்பி, ஏதாவதுன்னா நானே ரவி அப்பா கிட்ட சொல்லி உங்களை கூப்டுவேனே” என்று தன்னுடைய இருப்பின் முக்கியத்துவம் மங்கிவிடக்கூடாதென்ற எச்சரிக்கையில் சொன்னாள்.

ஆனால் படுக்கையில் காலை பத்து மணிக்கு. அதுவும் வெறுமனே படுத்திருக்கும் அப்பா என்பது அவனுக்கு ஆச்சரியமானதாகவும் ஆரோக்கியமற்றதாகவும் தோன்ற, மனைவி ஜாஸ்மினிடம் பேசிவிட்டு உடனே மலிவு விலை விமானச்சேவை ஒன்றில் பயணத்திற்கு பதிவு செய்தான்,

தபால் இலாகாவில் இருந்து ஓய்வுபெற்று தற்போது எழுபதைத் தாண்டிவிட்டவர் ராஜாராமன். கச்சிதம், காலம் தவறாமை, செயலில் ஒழுங்கு, பேச்சற்ற செயல் தீவிரம்,திட்டநேர்த்தி, ஒரேவிதமான செயலை தொடர்ந்து செய்வதில் சலிப்பு தட்டாமை இதெல்லாம் அவருடைய குணாதிசயமா? அல்லது தபால் இலாகாவின் பாதிப்பா? என்று பிரித்தரிய முடியாதபடி இருக்கும் அவனுக்கு. மூன்றாம் பிறையைப் பார்த்து வணங்கும் பழக்கம் உடைய அப்பா. அவனுக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒரே பாணியில்தான் செய்துவருகிறார். நெற்றியில் காய்ந்தும் காயாத விபூதி. இடுப்பில துண்டு. மூன்றுமுறை தலைக்குமேல் கையை உயர்த்தி ஒரு கும்பிடு. இந்தக் காட்சி போன மாதத்து காட்சியா?இப்போதைய காட்சியா? என்று கூட அவனுக்கு சந்தேகம் கிளம்பும். சிரிக்கையில் கூட முகம் சிரிக்கும் ஆனால் அதில் குரல் இருக்காது, வேலை, குடும்பம், மாத வரவு செலவு, இரு குழந்தைகளின் படிப்பு, வளர்ப்பு விழுமியங்கள். அம்மாவின் ஆஸ்த்துமாவுக்கான மாதாந்திர மருந்து என எல்லாமே மாறுதலற்ற நேர்த்தியான நாட்கள் அவருடையவை. ஏதோ ஒரு தவறு நடந்து, பதறி, பிறகு போராடி, எல்லாம் சரியானபின் கிடைக்கும் ஆசுவாசமான நிம்மதி என்பதை அவர் அறிந்திருக்கவே மாட்டார். இப்படியான நேர்க்கோட்டு வாழ்க்கை நியதி அவருடையது. கண்ணாடிப் பேழையில் மனைவியை வைத்துவிட்டு, செய்தி அனுப்புதல் முதல் மதியச் சாப்பாடு வரை ஏற்பாடு செய்துவிட்டு வெளிநாட்டிலிருந்து வரும் மகனும் மகளும் வரும்வரை காத்திருந்தபோது – அவருடைய இழப்பை விடத் தனியாளாய், பிள்ளைகளின் தூரம் பற்றி சிறிதும் முணுமுணுக்காமல் உப்பிய கண்களும், உறிஞ்சிய மூக்குமாக அனைத்தையும் திட்டமிட்ட அவருடைய கடமைத்தனம்தான் பரிதாபத்திற்குரியதாய் இருந்தது. இதை ஓரளவு உணர்ந்தவர் அவருடைய நண்பர் சிவகுரு. வழக்கமாக இருவரும் அருகிலுள்ள ரயில் நிலையத்தின் பிளாட்பாரத்தில் மாலையில் நடைப் பயிற்சி செய்வதுண்டு. சிவகுருதான் வளவளா. ராஜாராமன் அவருடைய பேச்சைக் கேட்டுக் கொண்டேதான் வருவார். சிவகுருவுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும் ராஜாராமனுக்கு அவர் ஒருத்தர்தான்.

டாக்ஸி ஒன்று வாசலில் நின்றபோது. காம்பவுண்டு அருகே நின்று அடுத்த வீட்டுப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த மேரி யாரோ முகவரி கேட்டு வந்திருக்கிறார்கள் என்றே நினைத்தாள். பிறகு பதற்றம் கொண்டவளாய், “”வாங்க தம்பி வாங்க..என்ன திடீர்னு? எங்க கண்ணா அம்மா? ” என்று சிறுவனைக் கேட்டபடி உள்ளே அழைத்துப்போனாள்.

உள்ளே சென்றபோது ராஜாராமன் தன் அறையில் கை பனியனில். நாற்காலியில் உட்கார்ந்து முதுகைக் காட்டியபடி ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்தார். அசைவற்ற அப்பாவின் பின் தோற்றத்தையும் ஜன்னல் சதுரத்தைத்தையும் தாண்டி வெளியில் வாழையிலைகள் வெய்யிலில் அசைந்துகொண்டிருந்தன. அவருடைய பின்புறத்தை போட்டோ எடுத்துச் சட்டமிட்டிருப்பது போன்றிருந்த அந்தக் காட்சி அவனுக்குள் துணுக் கென்றது. இவர்கள் வந்தது, சாமான்களை வைத்தது உள்ளிட்ட எந்த சப்தங்களுக்கும் எதிர்வினையற்று நிச்சலனமாயிருந்தவரை, “”அப்பா” என்று மெல்லிய குரலில் அழைத்தபோது, மின்விசிறியால் படபடத்த காலண்டர் தாள்களின் சிறகடிப்பின் ஓசை துல்லியமாய்க் கேட்டது. அந்த நிசப்தம் அவனுக்கு பயமூட்டுவதாயிருந்தது. மேரி மென்பானம் ஒன்றை கண்ணாடி தம்ளர்களில் ஏந்தி வந்து நின்றாள்,

அவருக்குப் பக்கமாய்ப் போய், “”அப்பா” என்று அழைத்தான். குரலுக்கு அல்லாமல் ஏதோ ஓர் உருவம் தன்னருகே அசைகிறது என்பதான பாவனையில் மெதுவாய் வலப்புறமாய்த் திரும்பினார். வாட்ச் கட்டிய கையையும், மோதிரமிட்ட விரல்களையும் பார்த்துவிட்டு மறுபடி ஜன்னலைப் பார்க்க ஆரம்பித்தார். அவன் அவசரமாக முன்னே சென்று அவர் முன்னால் மண்டியிட்டபடி அவரைப் பார்த்து, “”அப்பா” என்று மறுபடியும் அழைத்தான். ஜன்னல் வெளிச்சத்தில் அவர் முகத்தைப் பார்த்தான். அவர் அவனைப் பார்த்தார். பழுத்த கண்களின் சாம்பல் பூச்சில் புகை வளையமிட்டிருந்த அக் கண்கள் வறட்சியுடன் அவனைப் பார்த்தன. பார்வை அர்த்தமற்றிருந்தது. நாலுநாள் வெண்முள் தாடிக் கன்னமும் அதில் பயனற்றது போலக் கிடந்த இறுகிய உதடுகளுமாய். ஏனோ ஒரு பழைய ஓலைச்சுவடியைப் போன்ற வாசமுமாய் இருந்தார். மறுபடி “”அப்பா” என்றழைத்துபோது அவன் குரல் முனையொடிந்து ஒலித்தது. சிரமப்பட்டு அடக்கிக் கொண்டு, “”எப்டியிருக்கீங்கப்பா?” என்றான். அவனைப் பார்த்து சில நொடிகள் கழித்து இயந்திரத்தனமாய் “”ஐ ஆம்… ஃபைன்” என்றார். அது அனிச்சையாகவும் ஒரு பொம்மை உதறும் வார்த்தைகளைப் போலவும் இருந்தது. அவருடைய கைகளை எடுத்துத் தன் கைகளில் பொத்தியபடி அவரிடம், “”ஆர் யு ஆல்ரைட்” என்றபோது அவர் நிதானமாய், “”ம்ம்” என்றார்.

காய்ந்த மூங்கிலைப் போன்றிருந்த கைகளின் விரல் நகங்களில் சாம்பார் கறை இருந்தது. “” ஹாலுக்கு வாங்கப்பா” என்றபோது எழுந்து நின்றார். வேட்டி நழுவுவதை சற்று தாமதமாக உணர்ந்து, சோம்பலாக இழுத்துச் செருகிக்கொண்டார். பிறகு உயரமாக மெலிந்த ஒரு பாக்கு மரத்தைப்போன்று மெதுவாக நடந்து வந்தார்,

“”அப்பா ஏன் இப்படி இருக்கார்? ஏன் என்கிட்ட ஒண்ணுமே சொல்லலை? ” என்று பதட்டப்பட்ட போது, மேரி சொன்னாள்: “”இல்ல தம்பி, அவரு ஒடம்பு நல்ல திடமாவே இருக்காரு, அவருக்கு பொழுதே போவறதில்லை, வெளியவும் போறதில்லை, அதால கம்முன்னு இருப்பார். அவ்ளோதான், சுகக்கேடு எதுவும் இல்லை” என்றாள்.

அவளிடம் கேட்பதில் பயனில்லை என்று அறிந்தவனாக, “”அநிருத் இப்டி வா” என்றழைத்து… “”அப்பா அநிருத் வந்திருக்கான் பாருங்க..” என்றவுடன் அவன் அவருடைய கையைப் பற்றிக் கொண்டு, “”தாத்தா” என்றழைத்தான். நிமிர்ந்தார். அதே அர்த்தமற்ற பார்வை. “”ஹவ் ஆர் யு? ” என்று கேட்ட பேரனிடம், சில நொடிகளுக்குப் பின் அதே அனிச்சையாய், “”ஐ ஆம்… ஃபைன்” என்றார்.

அடுத்த பதினைந்தாவது நிமிடம், “”சிவகுரு சார் ? வீடு இதுதானே? ” என்று கேட்டுக் கொண்டு உள்ளே போனபோது.. “”வாப்பா வாசு… ரவி மெயில் கிடைச்சுதா? ” என்று கேட்டபோது அது கிடைத்து ஒரு மாதம் கழித்து தான் வந்திருக்கிறான் என்பதையும் தனக்குக் குடல்வால் அறுவை மற்றும் மனைவிக்கு கருப்பை அறுவை நடந்த சிக்கல்களையெல்லாம் பற்றி சொல்ல முடியாமல் தடுமாறி.. “”ஆமா சார்… நீங்க எப்டி இருக்கிங்க? ” என்றான்.

“”தொடை எலும்பு முறிஞ்சு போனப்பறம். ஒண்ணரை வருஷமா நடமாட்டம் குறைவு, மத்தபடி ஒண்ணும் இல்லை. அதனால உங்கப்பாவை அடிக்கடி பாக்க முடியலை. நான் இல்லாம அவனும் வாக்கிங் போறதில்லியாம். நான் விழுந்ததைப் பாத்து பயந்து அதே சாக்கில் அவனும் வெளிய வரலை போலிருக்கு. சரி..பாத்தியா..எப்டியிருக்கான்னு? ” என்று கேட்டார்,

சட்டென்று கைக்குட்டையை எடுத்து கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்தபடி சுதாரித்துக் கொண்டு, “”ஏன் சார் அப்பா இப்படி பொம்ம மாதிரி ஆயிட்டார்? என்னாச்சு?” என்றான்.

“”நான் அவனை சமீபமா பாத்தப்போஅவனுக்கு டிமென்ஸியா இருக்கும் போல தோணிச்சுப்பா. அதனால் தான் ரவியை உனக்கு மெயில் போடச் சொன்னேன்”

அதிர்ச்சியுடன் அவரை நிமிர்ந்து பார்த்த அவன் தோளில் ஆதரவாய்த் தட்டி, “”பயப்படாத, உடனே சுப்ரமணியம் டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போ” என்றார்.

ராஜாராமை உட்காரவைத்து டாக்டர் கேட்டார். “”உங்க பேரென்ன? ”

“”ரா..ஜா…. ராம்” என்று மிக நிதானமாய்ப் பதில் வந்தது.

“”எங்க வேலை பண்ணிங்க? ” என்ற கேள்விக்கு பதில் சொல்லாமல் அமைதியாய் இருந்தார். ஒருமுறை கொட்டாவி விட்டார். மறுபடி கேட்டபோது, “” ஆமாம்” என்றார் சம்பந்தமில்லாமல். பிறகு சில கேள்விகள், மிகச்சில பதில்கள்.

“”வேற என்ன பண்ணுது உங்களுக்கு? ஹவ் டு யு ஃபீல்? ”

என்ற டாக்டரிடம் சில நொடிகள் கழித்து சுரத்தற்ற குரலில், “”ஐ ஆம் ….ஃபைன்” என்றார். “”என் விரலைக் கெட்டிமா பிடிங்க” என்று தந்தபோது அவர் பிடி இறுக்கமற்று வழுக்கி நழுவியது. டாக்டர் தன் சுட்டு விரலை அவர் கண்முன் இட,வல ஓரங்களுக்கு நகர்த்தியபோது கண்கள், விரலைத் தொடர்வதில் தடுமாறி நடுவில் நின்றுபோனது. பிறகு டாக்டரையே பார்த்துக் கொண்டிருந்தார். அவர் கை கழுவ எழுந்துபோனபோதும் பார்வையின் கோணம் மாறாமல் அப்படியே நாற்காலியைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தார். அந்த நிலையில் ஒரு நனைந்த காகிதத்தைப் போலிருந்தார் அவர்.

பிறகு டாக்டர் அவரை வெளியே அனுப்பிவைத்து மகனிடம் பேசினார். “”சார் அவருக்கு டிமென்ஸியா ஆரம்பிச்சிருக்கு. அதாவது மறதி நோய். உடலளவில் அவர் ரொம்ப ஆரோக்கியமாவே இருக்கார். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை, உப்பு என்று எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனா அவருடைய மூளையின் செல்கள் ஏற்கெனவே மெதுமெதுவா செயலிழக்க ஆரம்பிச்சிடுத்து. இது திடீர்னு வர்றது இல்லை. ஞாபக மறதி. கைநடுக்கம். வார்த்தைக் குழப்பம். புரிஞ்சுக்கறதுல பிரச்சனை இப்டி சில அறிகுறிகள் தெரியும். ஆனா இப்போ அதையெல்லாம் தாண்டி இருக்கு இவரோட நிலைமை. வயசானதால வர்ற மறதி. தள்ளாமை அப்டின்னு நீங்க கவனிக்காம விட்டிருக்கலாம். உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. மருந்தால இதனோட தீவிரத்தைக் குறைக்கலாமே தவிர. செயலிழப்பை சரி பண்ணவோ நிறுத்தவோ முடியாது. மருந்துகளை ரெகுலரா கொடுங்க. கிட்ட இருந்து பாத்துகுங்க. ஆரம்பத்துல சமீபத்தைய விஷயங்கள் மறந்து போக ஆரம்பிக்கும். அப்பறம் படிப்படியா பழைய புதிய எல்லாமே நினைவிலிருந்து அழிஞ்சு போகும். அவங்க பேர், ஊர், உறவு காலம் எல்லாமே மறந்து போயிடும். போகப் போக தனக்கு என்னவோ அப்டின்றதே அவருக்கு தெரியாமப் போக வாய்ப்பிருக்கு. அவருக்கு எதுவும் தெரியப் போறதில்லை. இருந்தாலும் அவருக்கான தேவை அன்பும் ஆதரவும்தான். சொல்லப் போனா, அவரை விட அவரை பாத்துக்கறவங்களுக்குத்தான் சிரமம். சரி அடுத்த மாசம் வாங்க” என்று விளக்கிவிட்டு அடுத்தவருக்கான அழைப்பு மணியை அடித்தார்.

டிமென்ஸியா எனும் மறதி நோய் பற்றி இணையத்தில் படித்தறிந்த விஷயங்களும், டாக்டரின் பரிசோதனையும் தந்த நிரூபணத்தில் – அப்பாவை அழைத்துக்கொண்டு வெளியே வந்தபோது ஓர் அதிசயப் பிராணியுடன் நடந்து வருவது போலிருந்தது அவனுக்கு. திடீரென கிலேசம் ஒன்று அவனைக் கவ்வியது. அவருடைய உயரத்திற்கு இந்த நீளமான சாலையைப் பத்தடியில் நடந்து கடப்பவர் இப்போது குழந்தைபோல நடந்து சென்று சிரமத்துடன் காருக்குள் ஒடுங்குகிறார். மனம் ரணம். கார் வீட்டை அடைந்தபோது ஒரு ஆறுதலைப் போல சிவகுரு வந்து காத்திருந்தார். பிறகு தனியறையில், அவன் கேட்ட மற்றும் கேட்காத கேள்விகளுக்குமான விளக்கமாய் அவனிடம் பேசினார்.

“”தம்பி, வருத்தப்படாத, இதுல நாம செய்யறதுக்கு ஒண்ணுமில்லை. இது வியாதி. நீ அவர் பக்கத்துலயே இருந்திருந்தாலும் ஒண்ணும் செஞ்சிருக்க முடியாது. மனசுல குற்ற உணர்வு வச்சுக்காத” என்று சொல்ல ஆரம்பித்தார்.

“”மூளையின் நரம்புச் செல்லான ந்யூரான்களின் படிப்படியான சாவுதான் இது, அதனால் அவருக்கு நினைவாற்றல் முதல் உணர்ச்சி வரை எல்லாம் சிறுகச் சிறுக மறைந்து கொண்டே வருகிறது. முதுமையில் நமக்கு மன ஆரோக்யமும் முக்கியம். முன்பெல்லாம் குடும்பங்களில் குழந்தைகளுக்கு கதை சொல்வதில் இருந்து, சண்டை போட்டுக் கொள்வது வரை எல்லாவற்றிலும் முதியவர்களுக்கு ஒரு பங்கு இருந்து வந்தது. இப்போது குடும்ப அமைப்பின் சிதைவில், வாழ்க்கை முறை மாற மாற. முதியவர்களுக்கு தேவை ஓய்வு ஒன்றே என்பதாக கற்பிதங்கள் நிரம்பி, சும்மா இருந்தால் போதும் என்று சொல்லி – அவர்களுடைய மூளைச் செல்கள் மந்தம் தட்டி அதுவே செயலிழப்பிற்கான ஒரு சாக்காக அமைந்துவிடுகின்றன. இப்படி சொல்லிக்கொண்டே போய் ஒரு நிலையில் வசதிங்கற பேர்ல தனிமைல வச்சு வச்சு எப்பவோ சாவப்போற நியூரானை மெதுமெதுவா நாமளே கொன்னுடறோம்” என்றார். அவனுக்கு அந்த விளக்கம் ஏனோ மிக இம்சையாய் இருந்தது.

முன்பொருமுறை அப்பாவைத் தன்னுடன் அழைத்து வைத்திருந்தபோது, வெளிநாடு அவரை ஈர்க்கவில்லை. அநிருத் ஈர்த்தான். அவனுக்குத் தானறிந்த சில புராணக் கதைகளை தினமும் சொன்னபோது ஜாஸ்மினின் தாய் அவர் மதம் சார்ந்து தன் பேரனை மூளைச் சலவை செய்வதாகச் சந்தேகித்து, பின் சலசலத்தபோது அவர் ஊர் திரும்பியது அவனுக்கு ஞாபகத்தில் புண்ணிட்டது. பிறகு ஊரில் ஒரு முறை வாக்கிங் போனவர். வீட்டைத் திறந்தே போட்டுவிட்டுப் போனார். கரண்ட் பில் கட்டச் சென்றவர் கோவிலுக்குப் போய்விட்டு கரண்ட் பில் விஷயத்தையே மறந்துபோன விஷயம் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்ட போதுதான் தெரிய வந்தது. ஆகவே ஓரிரு சிறுவேலைகள் செய்யும் அந்த வாய்ப்பும் தடைபட்டுப் போக – செய்நேர்த்தியுடன் சலிப்புத் தட்டாமல் தினசரிப் பணிகள் செய்தவருக்கு இப்போது செய்வதற்கு ஒன்றுமில்லாமலும் பேச்சுத் துணைக்கும் ஆளில்லாமலும். சரியோ தப்போ – அனுசரிக்கவோ, முறுக்கிக்கொள்ளவோ எதற்கும் வாய்ப்பின்றிப் போனபோது, யோசிப்பதற்கும் ஏதுமின்றிப் போக, மனம் காலிப் பானையானது. “”பாருப்பா. எங்களுக்கு படிக்கறதோ. பாட்டு கேக்கறதோ. அரசியல் பேசறதோ. வம்பு இல்லை. வயசான எங்களுக்கு நாளை அப்டின்றதே கிடையாது. எல்லாமே நேத்து தான். அதனால ஏதாவது பண்ணிகிட்டோ சொல்லிகிட்டோ இருக்கணும். பாரு நான் தினமும் குறுக்கெழுத்து கட்டம் விளையாடறேன். ஏன்னா தேகம் ஓய்ச்சல் கண்டா தவிர, சும்மா இருக்கறதுங்கறது சாபம். ஆனா உங்கப்பன் சுபாவம்தான் எப்பவும் குடும்பம் தினசரி ரொடீன் தவிர வேற எதுவுமே கிடையாதே. இந்த வியாதிக்கு மருந்து தனிநபர் மனமும் குடும்பம் சார்ந்த சமுதாயமும்தான் அப்டீங்கற விஷயத்தை நாம புரிஞ்சிக்கணும்” என்றார். நிமிடங்கள் மனதோடு சேர்ந்து கனத்துத் தொங்கின, இந்த நான்கைந்து நாட்களில். அவனுடைய உலகத்தையே காலம் புரட்டிப் போட்டுவிட்டது போன்ற ஆயாசத்தில் உடலும் மனமும் சோர்ந்தான்.

கடமைகள் துரத்த, மருந்துகளை மேரியிடம் ஒப்படைத்துவிட்டு மறுபடி வர உத்தேசித்து ஊர் திரும்ப கிளம்பிக் கொண்டிருந்தான். நேரம் செல்லச் செல்ல அவரை விட்டுப்போக வேண்டுமே என்ற கனம் அவனை அழுத்தியது. விமானம் சரியான நேரத்துக்கு கிளம்புவதாக குறுஞ்செய்தி வர தாத்தாவுக்கு டாட்டா சொல்லிவிட்டு சிறுவன் காரில் உட்கார்ந்தான். இவன் முன் வாசலில் நாற்காலியில் உட்கார்ந்திருந்த அப்பாவின் கையைப் பற்றி, “”கிளம்பறேம்பா, மறுபடி வரேன்” என்றான். அவனுடைய கை. அவருடைய கையை ஒரு முறை அர்த்தமற்று வருடியது. ஆனால் அவனுக்குள் ஏதேதோ அர்த்தங்கள் புரண்டு கண்ணிமைகள் நீர்த்தோரணம் கட்டின. அவர் கையை கழுவிக்கொண்ட பின் அவன் விலகிச் சென்று காரில் உட்கார அவனையே பார்த்துக் கொண்டிருந்தார். “முதியவர்களுக்கு நாளை என்பதில்லை எல்லாமே நேற்றுதான்’ என்ற சிவகுரு சாரின் வார்த்தைகள் திரும்பத் திரும்ப ஒலித்தன. ஆனால் அப்பாவுக்கு நேற்று இன்று நாளை என்பதன் வித்யாசமே இன்றிப் போய்க்கொண்டிருக்கிறதே என்று எண்ணியபோது ஒரு முறை அழுதுவிடலாம் போலிருந்தது. குத்துப்பட்டவன் நடந்த ரத்தத் தடத்தைப் பார்ப்பதுபோன்ற பயம் கலந்த வலி அவனுள் விரவியது.

கார் நகர்ந்து முன்னே சென்று கேட்டைக் கடக்கையில் அவரைப் பார்த்தான். நினைவுகளின் சமாதியைப் போன்ற உருவகமாய் அவர் இன்னும் அதே கோணத்தில் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்குக் கையசைப்பதில் அர்த்தமில்லை என்று தோன்றியபோதும் அவனையுமறியாமல் கை உயர்ந்து அசைந்தது.

கார் போய் வெகுநேரமான பின்பும்கூட, அப்படியே உட்கார்ந்துகொண்டிருந்தார் அந்த அப்பா.

– ஆகஸ்ட் 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *