கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 20, 2017
பார்வையிட்டோர்: 9,070 
 
 

தோளைத்தட்டி யாரோ உசிப்பியது போலிருந்தது. பதறியவாறு எழுந்து உட்கார்ந்ததும் புறவுலகின் வெளித்தோற்றத்தை உடனடியாக அவளால் ஜீரணிக்க முடியவில்லை.

சிம்னி விளக்கிலிருந்து கசிந்து கொண்டிருக்கும் சிறிதளவான வெளிச்சத்தின் ஊடாக மண் சுவர்களாலான குறுகிய பரப்பளவுள்ள அக்குடிசையின் அடையாளம் அன்னியத்தன்மையோடு அவளை வெறித்துப் பார்த்தது.

பார்வையை சுழற்றியவளின் கவனம் பக்கவாட்டில் நிலைகொண்ட போது இடுப்பு வேட்டி அவிழ்ந்து கிடப்பது தெரியாமல் வாய்பிளந்தபடியே தூங்கும் கதிர்வேலு தெரிந்தான். இவ்வளவு நேரமும் பீதியில் நடுங்கிக்கொண்டிருந்த நெஞ்சில் இப்பொழுது பேரமைதி உண்டானது. அத்தோடு முகத்தில் செம்மையின் ரேகைகள் படரவும் செய்தன.

திருமணத்தின் காரணமாக ஓர் ஆண்மகனோடு ஏற்படுகின்ற நெருக்கமும், அவனுடன் இரண்டற கலந்துவிட்டபின் உண்டாகும் புதிய அனுபவமும், அது தருகின்ற அளவிட முடியாத சந்தோசமும் அஞ்சலையை சுகமான மயக்கத்தில் ஆழ்த்தியிருந்தன.

தொலைவிலிருக்கும் ஏதோவொரு வீட்டிலிருந்து சத்தமாகக் கூவிடும் சேவலின் குரலைக் கேட்டதும் ஆடைகளை ஒழுங்கு செய்தவாறு எழுந்து சென்று சிம்னியின் திரியைத் தூண்டி விட்டாள்.

சற்றுப் பெரிதாக விரிந்திடும் அவ்வொளியின் வழியாக நடந்து சென்று வாசல் கதவை திறந்து வெளியே வந்தாள். இடப்பக்கம் இருக்கும் குறுகிய திண்ணையில் மாமியாரும், வலப்பக்கமிருக்கிற அகண்ட திண்ணையில் மாமனாரும் உறங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தவாறு வெளிவாசலுக்கு வந்தபோது பொழுது விடிவதற்கு இன்னும் நேரமிருப்பது தெரிந்தது.

சாம்பல் படர்ந்திருக்கும் அடிவானத்தையும், சந்தடியற்றுக் கிடக்கும் தெருவின் சித்திரத்தையும் மெளனமாய் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு அருகாமையிலிருக்கும் அடிகுழாயிலிருந்து அந்த நேரத்திற்கு யாரோ தண்ணீர் அடிப்பதனால் எழுகின்ற அதீத சப்தம் மிகுந்த ஆறுதலைக் கொடுத்தது.

கண்களை இடுக்கி உற்றுப் பார்த்தாள். அந்த உருவம் தெளிவாக தெரியாவிட்டாலும் அதன் இயக்கம் ஓரளவு கண்டு கொள்ளக்கூடியதாகவே இருந்தது.

திண்ணைக்குக் கீழாக மண் கலயத்தில் உருட்டி வைக்கப்பட்டிருந்த மாட்டு சாணத்தையெடுத்து கரைத்து வாசல் தெளித்து கூட்டி முடித்தாள். வீட்டினுள் சென்று வாயகன்ற ஒரு அலுமினிய அண்டாவோடு திரும்பி வந்தவள் குழாயடிக்கு சென்றாள்.

இதற்கு முன்பாக அங்கே தண்ணீர் அடித்துக் கொண்டிருந்த உருவம் கிளம்பிப் போயிருந்தாலும் அடிகுழாயின் கைப்பிடியில் இன்னும் மீதமிருந்தது அதன் வெம்மையின் ஈரம்.

கைப்பிடியைப் பிடித்து அழுத்தியதும் திபுதிபுவென கொட்டும் என்று எதிர்பார்த்தவளுக்கு மெதுவாக வந்து விழும் தண்ணீரைக் கண்டு ஏமாற்றமே எழுந்தது.

அண்டா நிரம்பியதும் எடுத்து வந்து வாசலில் வைத்து விட்டு எங்கே குளிப்பது என யோசித்தாள். குளிப்பதற்கு தோதான மறைவிடம் ஏதும் அவளுடைய கண்களுக்கு புலப்படவில்லை. அவர்கள் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் இடையே இருக்கிற மிகக் குறுகலான சந்தின் மூலையில் ஒண்ணுக்குப் போவதற்காக தட்டி வைத்து மறைத்திருந்த இடமே தட்டுப்பட்டது.

தெருவிளக்கின் வெளிச்சம் சந்துக்குள் ஒரு மெலிந்த கோடாக விழுந்து கிடந்தது.

தண்ணீர் பாத்திரத்தை எடுத்து சென்று அங்கே வைத்து விட்டு மாற்றுத்துணிகளை தட்டியில் போட்டாள். புடவையைக் களைந்து விட்டு பாவாடையை உயர்த்திக் கட்டிக்கொண்டு தண்ணீரை மொண்டு ஊற்றியதும் உடம்பு உதறலெடுத்தது.

குளியல் முடிந்து வந்ததும் அவளுக்குப் பிடித்தமான ஆரஞ்சு நிறப் புடவையை உடுத்திக்கொண்டு நெற்றியில் சாந்துப்பொட்டு இடுகின்றபோது வாசலில் ” அம்மா… பால் ” என்ற சத்தம் கேட்டது.

லோட்டாவை எடுத்துக்கொண்டு அவள் வாசலுக்குப் போனாள். தலைப்பாகை கட்டிய பால்காரர் பிருஷ்டங்களை சைக்கிள் விட்டத்தில் அழுத்திக்கொண்டு வலது காலை பெடலிலும், இடது காலை தரையிலும் ஊன்றியவாறு நின்றிருந்தார்.

இவள் நீட்டிய பாத்திரத்தை வாங்கிப் பாலை அளந்து ஊற்றிவிட்டு புறப்படும்போது ” நீ கதிர்வேலுவோட சம்சாரமா தாயி” எனக் கேட்டார்.

அஞ்சலை ” ஆமாம் ” என்று தலையாட்டியதும் ” மகராசியா இரும்மா ” என வாழ்த்திவிட்டு கிளம்பிப்போனார்.

அடுப்பை மூட்டி பால் காய்ச்சினாள். சக்கரையும், காப்பித்தூளையும் கலந்து ஒரு தம்ளரில் கொஞ்சமாக ஊற்றி சுடாமலிருக்க ப்பூ… ப்பூ.. வென ஊதிவிட்டு அண்ணாந்து வாயில் சாய்த்து ருசி பார்த்தாள். நன்றாக இருப்பதாகவே தோன்றியதும் திருப்தியோடு கொண்டுபோய் மாமனார், மாமியாரை எழுப்பி குடிக்க கொடுத்தாள்.

” நீ, ஏம்மா சிரமப்படுறே, நான் எழுந்து போட்டுத்தர மாட்டேனா ” வென கரிசனத்தோடு சொல்லும் சரசம்மாவுக்கு புன்னகையைப் பதிலாகத் தந்து விட்டு உள்ளே சென்று கணவனை எழுப்பிக் கொண்டிருக்கும் வேளையில் வாசலில் அதிரடியான அக்குரல் வெடித்துக் கிளம்பியது.

” ஏய்… சரசு, வெளியே வாடி ” யாரோ வாசலில் நின்று அவளுடைய மாமியாரை வம்படியாக அழைத்தார்கள். அக்குரலைக் கேட்டதும் கடுங்கோவத்தோடு தனது சேலையை முழங்கால்கள் வரை சுருட்டிக்கொண்டு சரசம்மா வெளியே போனார். அஞ்சலையும் பதட்டத்தோடு பின்தொடர்ந்தாள்.

பக்கத்து வீட்டு காத்தாயீ தலைமயிரை அள்ளிக் கொண்டை போட்டுக்கொண்டு, ஒரு சண்டைக்குத் தயாராவது போல நின்றிருந்தாள்.

” ஏண்டி, நீ குளியலாடுறதுக்கு எங்வூட்டு சந்துதான் கெடைச்சதா, வந்து பாருடி முண்டே. எம்பூட்டு நீளத்துக்கு சொவுரு கரைஞ்சு போய் கிடக்குன்னு. ஏதோ ஆத்திர அவுசரத்துக்கு ஒண்ணுக்கு போகட்டுமேன்னு சும்மா இருந்ததுக்கு இப்படியா அழிச்சாட்டியம் பண்ணுவே ”

காத்தாயீ எதற்காக கத்துகிறாள் என்று முதலில் புரியாவிட்டாலும் சந்தில் சதசதவென்று தெரிகிற ஈரமும், மருமகளின் உலராத தலைகேசமும் என்ன நடந்திருக்கக்கூடும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தவே செய்தது.

” போதும் நிறுத்துடி, குளிச்சது நா இல்ல, என் மருமவ. அவ புதுசு இல்லையா, அதான் தெரியாம செய்திட்டா. இனிமேல இப்படியெல்லாம் நடக்காது, நீ ஒங் ஜோலிய பாத்துட்டுப் போ ”

சரசம்மாவின் பேச்சைக் கேட்டு விட்டு அஞ்சலையை உற்றுப் பார்த்தாள் காத்தாயீ. அவளது பார்வையில் ஓநாயின் ஆவேசம் மின்னியது.

”ஓம் மருமவகிட்ட சொல்லிவை. இன்னொரு வாட்டி இப்டி நடந்தா, நா மனுஷியா இருக்க மாட்டேன் ”

அவலட்சணமாக பிருஷ்டங்களை ஆட்டியபடியே கோணிக்கோணி, நடந்திடும் காத்தாயீயை வெறித்துப் பார்த்த சரசம்மா ” இப்ப மட்டும் என்ன மனுஷியாவா இருக்க ” என்றே முணுமுணுத்தவாறே திரும்பியவள் அஞ்சலையிடம் இரகசிய தொனியில் சொன்னாள்.

”யம்மாடி… காத்தாயீ ஒரு அடங்காப்பிடாரி, அவ வழிக்கு போயிடாதே. கும்பல் இல்லாத நேரமா பார்த்து அடிபைப்பில குளிச்சிக்க…. ”

இவள் சடாரென நிமிர்ந்தாள்.

” என்னது அடிபைப்பில குளிக்கணுமா. ”

” ஆமாம்மா. பைப்பில தண்ணீ பிடிச்சு அங்கேயே நின்னு குளிச்சிடு. நாங்கயெல்லாம் அப்படித்தான் செய்வோம் ”

அஞ்சலை பதறிப்போனாள். அடிகுழாயில குளிக்கிறதா… வெட்ட வெளியில நின்னுக்கிட்டு தெருவே பாக்கிறமாதிரி எப்படிக் குளிக்க முடியும்.

வீட்டுக்குள் நுழைவதற்கு முன்னால் ஒரு கணம் நின்று அடிகுழாயின் பக்கம் பார்வையை ஓட்டினாள். அங்கே நடுத்தர வயதுப் பெண்ணொருத்தி குளித்துக் கொண்டிருந்தாள். ஒரு காட்சிப்பொருளாய் தானிருக்கிறோம் என்கிற எந்தவித லக்ஜையுமின்றி தண்ணீரை மொண்டு ஊற்றிக் கொண்டிருந்தாள்.

மார்புவரை தூக்கிக் கட்டிய பாவாடையின் நாடாவை அவிழ்த்து இடது கையால் உயர்த்திப் பிடித்துக்கொண்டு சோப்பை எடுத்து நெஞ்சு, வயிறு என பரபரவென்று தேய்க்கவும் செய்தாள்.

தனக்குள் சகலமும் நொருங்கிப் போய்விட்ட அஞ்சலை குபுக்கென்று முளைவிடும் கண்ணீர் துளிகளை அவசரமாகத் துடைத்துக்கொண்டாள்.

அவளுடைய அம்மா வீட்டில் இதுபோன்ற எந்தவொரு நெருக்கடியும் இருந்ததில்லை. அவர்களுடைய வீட்டின் பின்புறம் இருக்கும் தோட்டத்தில் வற்றாத கிணறு ஒன்றிருந்தது. பனையோலைகளால் தடுக்கப்பட்ட பாதுகாப்பான குளியலறையின் உட்புறமிருக்கும் தொட்டி நிறைய தண்ணீரை ரொப்பிக் கொண்டு அவள் குளிப்பாள்.

கூட்டாளியின் கடையில் கிடைத்தது என்று சொல்லி மிகப்பெரிய சலவைக்கல் ஒன்றை கட்டைவண்டியில் ஏற்றிவந்து குளியலறையின் மூலையில் போட்டிருந்தார் அவளுடைய அப்பா.

அந்தக் கல் துணிதுவைப்பதற்கு உபயோகப்பட்டதோடு வசதியாக உட்கார்ந்து குளிப்பதற்கும் பயன்பட்டது.

இவ்வாறாக மறைவாகவே குளித்து பழக்கப்பட்டிருந்தவள் ஒரு முறை திருச்சியிலிருக்கும் அவளுடைய பெரியப்பா வீட்டுக்கு போயிருந்தபோது பெரியப்பா மகள்களோடு காவேரி ஆற்றுக்கு குளிக்கப்போனாள்.

பாவாடையோடு அப்பெண்கள் ரெண்டு பேரும் துள்ளிக்குதித்து ஆற்றில் விளையாடும்போது இவள் கூச்சத்துடன் கரையில் நின்றிருந்தாள். அவர்கள் எவ்வளவு வற்புறுத்தியும் இவள் குளிக்க விரும்பவேயில்லை.

இறுதியாக வேறு வழியின்றி போட்டிருந்த பாவாடை தாவணியோடு இறங்கிக் குளித்தாள். ஆனாலும் வெட்கமும், மிரட்சியும் அவளை விட்டு அகலவே இல்லை.

இப்பொழுதெல்லாம் பொழுது விடிவதற்கு நிறைய அவகாசம் இருக்கும்போதே அஞ்சலை தன்னுடைய குளியலை முடித்துக் கொண்டாள். இருள் விலகாதிருந்த போதிலும் அவள் நடுக்கம் குறையாமலே இருந்தது.

அன்று சற்று அசந்து தூங்கி விட்டதால் கண்விழித்து எழுந்தபோது பொழுது நன்றாக விடிந்திருந்தது. குளிக்காமல் இருந்துவிடலாம் என்று நினைத்தாலும் அதற்கு மனசு ஒப்பவில்லை.

நேற்றிரவின் உல்லாசமும், அதன் சுணக்கமும், பிசுபிசுவென்ற நமச்சலும் உடனே குளித்திட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அவளைக் கொண்டு வந்திருந்தது.

ஜன்னலில் நின்று பைப்படியைப் பார்த்தாள். நல்ல வேளையாக அங்கே கூட்டம் ஏதுமில்லை. ஒரு மூதாட்டி மட்டும் தன்னுடைய பழஞ்சேலையை கசக்கிக் கொண்டிருந்தார்.

புடவையை அவிழ்த்து விட்டுப் பாவாடையோடு மேலே ஒரு துண்டைப் போர்த்திக்கொண்டு பாத்திரமும், பிளாஸ்டிக் கப்புமாக குழாயடிக்கு சென்றாள்.

துண்டை சுருட்டி புல்தரையில் வைத்துவிட்டு பாத்திரத்தை நிரப்பினாள். தண்ணீரை மொண்டு மேலே ஊற்றியதும் முகத்தில் விழுந்து புரண்ட அவளது தலைமுடியானது வெள்ளைச்சுவற்றிலே தயிர்க்காரி இழுக்கிற கருப்புக் கோடுகளாக கீழிறங்கின. உடலெங்கும் தண்ணீர் சொட்டச்சொட்ட ஈரம் கௌவியிருக்கும் தனது மேனியைக் கண்டதும் பகீரென்றிருந்தது அவளுக்கு. மஞ்சள் வண்ண பாவாடையை உடுத்தி வந்தது மிகப்பெரிய தவறென உணர்ந்தாள்.

தயக்கத்துடன் வாசனை சோப்பையெடுத்து வலது கணுக்காலில் தேய்த்துப் பின் மெள்ள மெள்ள பாவாடையை உயர்த்தி முழங்காலுக்கு வந்ததும் தன்னை யாரோ தொடர்ந்து கவனிக்கிறார்கள் என்ற உள்ளுணர்வின் பொறி தட்டவே சட்டென்று நிமிர்ந்தாள்.

எதிர்புறம் மூன்றாவதாக வாசலிலே டிசம்பர் பூக்கள் பூத்திருக்கும் ஓட்டு வீட்டின் பக்கம் அவள் பார்வை சென்றது. ஒரு தையல் கடையாக உருப்பெற்றிருந்த அவ்வீட்டின் திண்ணையில் சீருடைகள் தைத்துக்கொண்டிருந்த அந்த வழுக்கைத்தலை டைலர் அஞ்சலையைக் கடித்துக் குதறி விடுவதைபோல பார்த்துக் கொண்டிருந்தான்.

அதைவிட கொடுஞ்செயலாக அவ்விடம் காஜா எடுத்துக்கொண்டிருந்த மீசை முளைக்காத பயலும் அவளுடலை ஆசையோடு பார்வையால் நக்கிக்கொண்டிருந்தான்.

அவமானத்தால் கூசிப்போன வேதனையோடு அவசரமாக துண்டை எடுத்துப் போர்த்திக்கொண்டு வீட்டுக்கு ஓடி வந்தாள்.

மூலையில் முடங்கிக் கதறிடும் அவளிடம் என்னவாயிற்று என்று கதிர்வேலு விசாரித்தபோதும் அவள் உணர்வின் வீச்சுகள் தடைப்படவே இல்லை.

சிறிது அவகாசத்திற்குப் பிறகு சட்டென்று அழுகையை நிறுத்திய அஞ்சலை முகத்தை அழுந்தத் துடைத்தபடியே மிக அவசரமாக தன் கழுத்தில் போட்டிருந்த இரண்டரை சவரன் சங்கிலியைக் கழற்றி அவனிடம் கொடுத்துவிட்டு சொன்னாள்.

” நீங்க, என்ன செய்வீங்களோ எனக்குத் தெரியாது, எப்படியாவது நம்ம வீட்டுக்குப் பின்னாடி இருக்கிற மீசை தாத்தாவோட பூமிய கிரயம் பண்ணிடுங்க ”

[ காக்கைச்சிறகினிலே – மே 2012 ]

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *