நீரும்…நெருப்பும்…

1
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: March 2, 2014
பார்வையிட்டோர்: 11,281 
 
 

1

குகைப்பாலத்திற்குள் எப்பொழுதும் போல் இயல்பாக நுழைந்த இரயில், வெளியேறுகிறபோது தீப்பிடித்தபடி வந்துகொண்டிருந்தது. பாலத்திலிருந்து வெளிவருகின்ற இரயிலின் ஒவ்வொரு ஜன்னலிலும், நெருப்பு தகதகவென பரவிக்கொண்டிருந்தது. பிரயாணிகளின் அபாய கூக்குரலும், மரண ஓலமும் வானில் மோதியது.

இரயில் கடந்துபோனதும், அங்கிருந்து வெறிநிறைந்த கூச்சல் கும்மாளத்துடன் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தவர்களின் கைகளில், தீப்பந்தங்களும், கொடூர ஆயுதங்களும் இருந்தது. அவர்களின் கேசம் முழுவதும் புழுதி படர்ந்திருந்தது. அவர்களின் ஆடைகளில் தெறித்திருந்த இரத்த துளிகளில் இருந்து, ஈரம் காயாத வாடை வீசிக்கொண்டிருந்தது.

அவர்களில் நிறைய பேர் இதுமாதிரியான கொடூரங்களுக்கு பழக்கப்படாத புதியவர்களாக இருந்தார்கள். அப்படிப்பட்டவர்களின் கண்களில் பழிவாங்கலோடு, பதற்றமும் தெரிந்தது.
வெறிபிடித்த கூட்டத்தின் செயல்களாலும், அதன்பொருட்டான சேதங்களினாலும் அதிர்ச்சியுற்றவர்கள், அவர்களை எதிர்த்து மறிக்கத் தொடங்கினர். அதையொட்டி அவர்களுக்கும், இவர்களுக்குமாய் கைகலப்பு நடந்தது. அவர்களில் அவனுக்கும், இவர்களில் இவனுக்குமாய் விவாதங்கள் நடந்தது.

2

“நீ எதனால் இப்படி ஒரு முடிவுக்கு வர தீர்மானித்தாய்?”

“என் மனைவியையும், குழந்தையையும் சிலரின் வெறியாட்டத்திற்கு பலிகொடுக்க நேர்ந்ததால்”

“அதற்காக இப்படி ஒரு முடிவு தேவைதானா?”

“தேவைதானென்று தோன்றுகிறது. நானும் உன்னைப்போல ஒரு சாமானியனாகத்தான் இருந்தேன். என் குடும்பம் கூட……… எந்தவொரு பாவமும் செய்யாத என் மனைவி சிலரால் கற்பழிக்கப்பட்டாள். ஏதும் அறியாத என் குழந்தை தீயிலிட்டு பொசுக்கப்பட்டது. இவை நடக்கும் போது என் கைகளை கட்டிப் போட்டிருந்தார்கள். அதையும் மீறி எதுவும் செய்து விட முடியாமல் என் தலை தாக்கப்பட்டிருந்தது. நான் மயக்கமுற்ற நிலையில் இருக்கும்போது எல்லாமே நடந்து முடிந்து விட்டது.”

“நீ நினைத்துக் கொண்டிருக்கிறாய் உன் மனைவி மட்டும்தான் கற்பழிக்கப்பட்டிருக்கிறாள் என்று. உன் குழந்தை மட்டும்தான் தீயில் எரிக்கப்பட்டிருக்கிறது என்று. அது மட்டுமில்லை. ஆயிரக்கணக்கான சகோதரிகள் கற்பழிக்கப் பட்டிருக்கிறார்கள். ஆயிரக்கணக்கான குழந்தைகள் எரிக்கப்பட்டிருக்கிறார்கள்.”

“என் வலியும், என் ரணமும் உனக்குப் புரியாது. நான் பறிகொடுத்தவன். நீ பார்த்துக்கொண்டிருந்தவன். என் வலிக்கும், ரணத்திற்கும் நான் ஆயுதம் ஏந்தியதே சரி.”

“இல்லை. உன் வலியும், ரணமும் மட்டுமல்ல. உன்னைப்போன்று பறிகொடுத்திருக்கிற அத்தனை பேருடைய வலியும், ரணமும் உணர்ந்தவன் என்பதாலயே நீ ஆயுதம் ஏந்தியது தவறு என்கிறேன்.”

“நீ உணர்ந்தவன் என்றால், நீயும் என்னுடன் ஆயுதம் ஏந்தி வந்திருக்க வேண்டும். இல்லையேல், உன்பங்கிற்கு என்னிடம் ஓரிரு ஆயுதங்களையாவது தந்திருக்க வேண்டும்.”

“என்னால் நிச்சயமாய் முடியாது நண்பனே. இன்னும் இன்னும் இங்கு குடிசைகள் எரிவதையும் குழந்தைகள் சாவதையும் அனுமதிக்க முடியாது.”

“என் வலியும், ரணமும் உனக்கு ஏற்படவில்லை என்பதால், உன்னால் சாமானியனாக பேசிக் கொண்டிருக்க முடிகிறது.”

“ஒருபோதும் நீ அப்படி எண்ணவேண்டாம். நான் சாமானியனாக இருந்திருந்தால் இப்போது உன்னிடம் பேசிக்கொண்டிருக்கவே மாட்டேன்.”

“என் மனைவியை கற்பழித்தவர்களும், என் குழந்தையை எரித்தவர்களும் ஆயுதம் ஏந்திக்கொண்டு வருகையில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?”

“எதுவும் விபரீதமாய் நடந்து விடக்கூடாதே என்று கவலையுற்று இருந்திருப்பேன். என்னால் அப்போது அதுதான் முடிந்திருக்கும்.”

“இப்போதும் அதுபோலவே இருந்துவிடு. என் மனைவியின் கற்புக்கும், என் குழந்தையின் மரணத்திற்கும் பதிலடி கொடுத்துவிட்டு வந்து விடுகிறேன். அதற்கு இந்த ஆயுதங்கள் எனக்கு தேவைப்படுகிறது.”

“உன்னைப்போன்ற சிலர் இதற்கு முன்பு ஆயுதம் ஏந்தியதால்தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன் ஆயுதம் ஏந்தியவர்களை தடுத்திருந்திருக்க வேண்டியது எத்தனை அவசியமோ, அதே அளவுக்கு இனியும் இதுமாதிரி செய்துவிட தயாராக இருக்கும் உன் போன்றவர்களை தடுப்பதுவும்……… உன் ஆயுதங்களை கீழே போட்டுவிடு.”

“இரக்கமற்ற வெறியாட்டம் நடந்துமுடிந்த வீதிகளைப் போய்ப்பார். இரக்கமற்றவர்கள் கும்மாளமிட்டுவிட்டுப்போன ஊர்களைப் போய்ப்பார். பிறகு வந்து சொல்.”

“நிறைய பார்த்துவிட்டேன். அதனால் தான் முடிந்தவரை ஒவ்வொருவரிடமும் சொல்கிறேன். இது வேண்டாம் விட்டு விடுங்கள் என்று. இப்போது உன்னிடமும்……… நீயும் இரக்கமற்றவனாக இருந்துவிடாதே.”

“நீ சொல்லி எத்தனை பேர் கேட்டிருப்பார்கள்?”

“எத்தனை பேர் கேட்டிருப்பார்கள் என்பதைவிட, எத்தனை பேர் அழிவிலிருந்து காப்பாற்றப் பட்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.”

“என் குழந்தை எரிக்கப்பட்டதற்கு பதிலாய் என் கைகளால் சிலரையாவது எரிக்கவேண்டும் நான்.”

“எரிப்பதும், எரிவதும் கொடுமையானது. அணைக்கப்படுவதுதான் அவசியம்.”

“அப்படியென்றால் ஒன்று செய். நான் எரித்துக்கொண்டே போகிறேன். என் பின்னால் நீ அணைத்துக்கொண்டே வா.”

“எல்லோரும் எரிக்கக் கிளம்பிவிட்டால் யார்தான் அணைக்க முடியும். ஒரு கட்டத்தில் எல்லாமே சாம்பலாகிப் போனதன் பிறகு, அணைப்பதற்கு என்ன தேவையிருக்கப் போகிறது. உன் வலிக்கு மருந்திடுவதைப்பற்றி யோசி. உன் ரணத்திற்காக பிறரை ரணப்படுத்த முயற்சிக்காதே.”

“எது எப்படியாயினும் என்னிடம் இருந்து பறித்ததற்கு, சிலராவது பதில் சொல்லியே ஆகவேண்டும்.”

“நாளை அந்த சிலரின் ஆயுதங்களுக்கு நீயும், உன்னுடனிருப்பவர்களும் பதில் சொல்ல வேண்டிவரும்.”

“அதுபற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை”

“எனக்கு கவலையாயிருக்கிறது நண்பனே. இப்படி ஒருவரின் ஆயுதங்களுக்கு மற்றவர்கள் பதில் சொல்லிக் கொண்டேயிருந்தால் எவருமே மிஞ்சியிருக்க முடியாது. எத்தனையோ ஊர்கள் சூறையாடப்பட்டுவிட்டது. எத்தனையோ அப்பாவிகள் பறிகொடுத்திருக்கிறார்கள். எத்தனையெத்தனையோ குழந்தைகள் அனாதைகளாகி அலைகிறார்கள்.”

“அந்த அனாதை குழந்தைகள் என்ன செய்து கொண்டு இருக்கிறார்கள்?”

“அவர்கள் இன்னும் பறிகொடுத்த வேதனையிலிருந்தே மீள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.”

“அதில் ஒரு சிலராவது ஆயுதம் ஏந்தியிருப்பார்கள் தானே?”

“இருக்கலாம். மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் தூண்டிவிடப்பட்டிருக்கலாம். தூண்டுதல் என்பது அடையாளங்களின் பொருட்டு”

“அடையாளங்களின் பொருட்டென்றால்?”

“உனக்கும் எனக்கும் பெயரிலும், பிறப்பிலும் என்றிருக்கும் அடையாளங்களை வைத்து தூண்டிவிடுவது. உன்னைப் போன்றவர்களை அடையாளங்கள் மூலம் வசியப்படுத்துவது. உன் வெறிநெருப்புக்கு, அடையாளங்கள் மூலம் நெய் ஊற்றி கொழுந்து விட்டு எரியச்செய்வது.”

“அதனால் யாருக்கு என்ன லாபம்?”

“நிறைய இருக்கிறது. உன்னைப் போன்றவர்களை அடையாளங்களால் கட்டிப்போட முடிகிறது. உன் வலி உணர்ந்து நீ வெறுமனே இருந்தால் கூட உன்னை தூண்டிவிட முடிகிறது. உன் போன்றவர்களை தூண்டி விடுவதன் மூலம் சிலர் நினைப்பதை எளிதாக சாதித்துக் கொள்ள முடிகிறது. உன் போன்றவர்களின் துணையோடு எல்லாவற்றையும் சூறையாட முடிகிறது. எதிரணியிலிருப்பவர்களை எளிதாக அழிக்க முடிகிறது. இறுதியில் இவை எல்லாவற்றுக்குமான பழிகளை அடையாளங்களால் மூடி மறைக்க முடிகிறது.”

“எதை எதையோ சொல்லி என் நேரத்தினை நீ வீணடித்துக் கொண்டிருக்கிறாய்.”

“இல்லை…… எரிப்பதும், வெடிப்பதும், இடிப்பதுமற்ற சமுதாயத்தினைப்பற்றி நீ தெரிந்து கொள்ள இந்த நேரம் தேவைப்படுகிறது.”

“அங்கு அப்படி என்ன இருக்கிறது?”

“அங்கு பச்சை பசேலென்று புற்கள் நிரம்பியிருக்கிறது. பூக்களின் வாசத்தில் நிரம்பியிருக்கும் தோட்டங்கள் இருக்கிறது. அங்கே கண்ணைகவரும் வண்ணத்துப்பூச்சிகள் கூட்டமாய்த் திரிவதை ரசிக்க வாய்ப்பிருக்கிறது. அங்கு வாழ்பவர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். ஒற்றுமையை நேசிப்பவர்கள். சிநேகம் பாராட்டத் தெரிந்தவர்கள். ஆயுதங்களை வெறுப்பவர்கள். குறிப்பாக அடையாளங்களிலிருந்து விடுபட்டவர்கள். நேற்றுவரை நீயும் அங்குதான் வாழ்ந்தவனாக இருக்க வேண்டும். இல்லை வாழ விரும்பியவனாக இருக்க வேண்டும். உனக்குள் ஏற்பட்டிருக்கும் இன்றைய மாற்றங்களினால் அவை உனக்கு மறந்து போயிருக்கலாம். இல்லை புதியனவாக தெரியலாம். உன் இந்த மாற்றமும், உன் போன்றவர்களின் இந்த வேகமும், வெறியும் எண்ணற்றவர்களை கண்ணீரில் தள்ளியிருக்கிறது. எண்ணற்றவர்களின் கனவுகளை சிதைத்திருக்கிறது.”

“அப்படி சிதைந்த கனவுகளில் என் குழந்தையின் ஆசைகளும் அடங்கியுள்ளது.”

“ அத்தனை குழந்தைகளின் கனவுகளுக்காகவும், ஆசைகளுக்காகவும் தான் உன்னிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். நீ செல்ல விரும்புவது முட்கள் நிரம்பிய பாதை. அங்கே சிறுபொறியும் பெருநெருப்பாக தகதகவென்று எரிந்துகொண்டேயிருக்கிறது. அடையாளங்களின் பொருட்டும், அதிகாரங்களின் பொருட்டும், கலவரங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. காற்றிலெங்கும் பிணவாடை வீசுகிறது. வானெங்கும் புகை சூழ்ந்திருக்கிறது. ஆயுதங்களில் ரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. ஊரும், உறவும் அழிந்து சிதைந்து சின்னாபின்னமாக கிடக்கிறது. இன்று உனக்கு ஏற்பட்ட வலியும், ரணமும் நாளை எனக்கு. அதன் பிறகு இன்னும் சிலருக்கு. ஒருவர் மாற்றி ஒருவர் ஆயுதங்களை ஏந்திக்கொண்டேயிருப்பது இதற்கு தீர்வாகிவிடாது. முட்கள் நிறைந்த பாதைக்கு செல்வதை தவிர்த்து, புற்கள் நிறைந்த பாதைக்கு எங்களுடன் வந்துவிடு. நான் உனக்கு சொல்வதுபோல், நீ நான்கு பேரிடம் போய் சொல். நான்கு நாற்பதாகட்டும்……. நாற்பது நாநூறாகட்டும்…….. கலவரங்கள் ஓய்ந்து போகட்டும். அடையாளங்கள் அழிந்து போகட்டும். வேற்றுமைகள் தீர்ந்து போகட்டும். இன்னொரு விடியலில் இந்த பூமியெங்கும் அமைதி நிலவட்டும்.”

“…………………………………………………..”

“இத்தனைக்குப்பிறகும் உன் வலிக்கும், உன் ரணத்திற்கும் நீ ஆயுதம் ஏந்தியது சரிஎன்று உனக்கு உறுதியாகத் தோன்றினால், உன் ஆயுதங்களுக்கு நானே முதல் பலியாக இருந்துவிட்டுப் போகிறேன். இதோ உன் முன் மண்டியிடுகிறேன். என் தலையை வெட்டி எறிந்துவிட்டு நீ புறப்பட்டுப் போ நண்பனே…. புறப்பட்டுப் போ……”

3

அவன் கைகள் நடுங்கின. அவன் விரல்களின் பிடியிலிருந்து ஆயுதங்கள் நழுவி கீழே விழுந்தன.

முட்கள் நிறைந்த நிலப்பரப்பெங்கும், பச்சைப்பசேலென்று புற்கள் பரவுவதற்கான ஆரம்பமாய் ……… கலவரப்புகைசூழ்ந்த வானம் வெறிச்சோடிப்போய் பறவைகள் சிறகடித்துப் பறக்கும் தருணத்தின் அறிகுறியாய் …….. நெருப்பின் வேகம் குறைய ஆரம்பித்தது. அது சிறிது சிறிதாய் அணைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இனி, யாராவது பற்ற வைக்காமலிருந்தால் போதும்.

Print Friendly, PDF & Email

1 thought on “நீரும்…நெருப்பும்…

  1. சமூக சிந்தனையுள்ள பாராட்டத்தக்க ஒரு நல்ல சிறுகதை…!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *