நேற்று இரவு வெகுநேரம் கண்விழித்து மிட்டேர்ம் பரிட்சைக்குப் படித்துவிட்டுத் தூங்கி, காலையில் எழுந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது, என் செல்போன் அலறியது. என் க்ளாஸ்மேட் சந்தியா போனில் சொன்ன செய்தி கேட்டு அப்படியே கீழே சரிந்தேன். என் கைகால்கள் நடுங்க ஆரம்பித்தது. தலை சுற்றியது. வயிற்றில் ஒரு வலி ஆரம்பித்து என் நெஞ்சையும் தொண்டையையும் அடைத்தது. என் செல்போனைத் திறந்து பார்த்தேன். அதில் சுரேந்தரிடமிருந்து பன்னிரண்டு மிஸ்ட் கால்ஸும், மெஸேஜும் இருந்தது. என் உடம்பெல்லாம் வியர்த்தது.
அருகிலிருந்த நாற்காலியைப் பிடித்துக்கொண்டு மெதுவாக எழுந்து பாத்ரூம் சென்று முகத்தைக் கழுவினேன். கண்ணாடியில் முகத்தைப் பார்த்தபோது, கண்களில் பயம் உறைந்திருந்தது. உடல் நடுக்கம் நிற்கவில்லை. மூச்சடைத்தது. மார்பு படபடவென்று அடித்துக் கொண்டது. மெதுவாக என் அறையை விட்டு வெளியே வந்து, டிராயிங் ஹாலில் கீழே உட்கார்ந்து, ‘ஓ’ வென்று பெருங்குரலிட்டு அழ ஆரம்பித்தேன்.
ஆபீசுக்கு கிளம்பிக்கொண்டிருந்த அண்ணனும், பத்திரிக்கை படித்துக் கொண்டிருந்த அப்பாவும், சமையலறையில் எங்களுக்கு காலை உணவு சமைத்துவிட்டு, மதிய உணவை டிபன் கேரியரில் வைத்துக் கொண்டிருந்த அம்மாவும், ஓடி வந்து, ‘என்னாச்சு, ஏன் அழுறே, உடம்புக்கு என்ன?” என்று விசாரித்தார்கள்.
(உங்களுக்கும் சேர்த்து என்ன நடந்தது என்பதை விவரிக்கிறேன்).
என் பெயர் வந்தனா. நான் ஒரு தனியார் மேலாண்மைக் கல்லூரியில் எம்பிஏ முதலாமாண்டு படிக்கிறேன். எனக்குப் படிப்பு முக்கியம். எம்பிஏ முடித்து நல்ல வேலைக்குப் போய், பெற்றோருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பது என் லட்சியம். என் கவனம் வேறு எதிலும் சிதறாமல், எந்தவித கேளிக்கைகளுக்கும் இடம் தராமல் முடிந்தவரை கவனமாக நடந்து கொள்வேன். யாரிடமும் தேவைக்கதிகமாகப் பேச மாட்டேன். ஆனால் முசுடு அல்ல. எல்லோரிடமும் சகஜமாகப் பழகுவேன். பார்க்க சுமாராக இருப்பேன். யார் கண்களையும் உறுத்தாத அளவிற்கு சாதாரணமாகத் தான் உடை அணிவேன். வெளியில் சென்று நண்பர்களுடன் சுற்றுவது, முகநூலில் அடிக்கடி அப்டேட் போடுவது, வாட்ஸப்பில் காலம் கழிப்பது எல்லாம் எனக்கு ஒவ்வாத விஷயங்கள். முக்கியமான சமூக வலைத்தளங்களை நானும் உபயோகிப்பேன், மேனேஜ்மென்ட் படிப்பு சம்பந்தமான விஷயங்களுக்காக. எனக்கும் நண்பர்கள் உண்டு. ஆனால் அளவோடு தான் பழகுவேன். சாட்டிங் டேட்டிங் என்பதெல்லாம் அவரவர் தனிப்பட்ட விருப்பம். எனக்கு அதில் விருப்பமில்லை அவ்வளவு தான். தேவையற்ற விஷயங்களைப் பேச மாட்டேன். பெரும்பாலும் என் நண்பர்கள் படிப்பு சம்பந்தமான விஷயங்களைத் தான் என்னிடம் பேசுவார்கள். எனக்கு ‘ஜீவி’ என்று பட்டப்பெயரிட்டு கேலி பேசுவதும் எனக்குத் தெரியும்.
அப்படி தான் என் க்ளாஸ்மேட் சுரேந்தரும் என்னிடம் பேச ஆரம்பித்தான். ஆவெரேஜ் ஸ்டூடன்ட். பரீட்சை நெருங்கும் சமயங்களில் என் நோட்ஸ் வாங்கிச் செல்வான். சில க்ரூப் ப்ரொஜெக்ட்ஸ் நாங்கள் ஒன்றாகச் செய்திருக்கிறோம். நல்ல விதமாகத் தான் பழகி வந்தான்.
நான் வேறு ஒரு க்ரூப் ப்ராஜெக்ட் செய்யும் போது, அந்த க்ரூப்பில் அவனில்லை. வேறு இரண்டு மாணவர்களும் மாணவிகளும் இருந்தனர். ஒரு நாள் சுரேந்தர் என்னிடம் வந்து, ‘நீ மற்ற பையன்களிடம் பேசுவது எனக்குப் பிடிக்கவில்லை. அந்த க்ரூப்பிலிருந்து விலகி என் க்ரூப்பில் வந்து சேர்ந்து விடு” என்றான். “நான் ஏன் அந்த க்ரூப்பிலிருந்து விலகணும். அதனால் உனக்கென்ன ப்ராப்ளம்?’ என்று கேட்டேன். ‘உன்னை எனக்கு பிடிச்சிருக்கு. நீ என் கூட மட்டும் தான் பேசணும். மற்ற பையன்களோட நீ பேசறதை பார்த்தா எனக்குப் பொறாமையா இருக்கு. ஐ லவ் யு” என்றான். ‘ஹலோ! அந்த மாதிரி எண்ணமெல்லாம் எனக்கில்லை. ஐ வாண்ட் டு ஸ்டடி வெல் அண்ட் கெட் எ குட் ஜாப். இந்த மாதிரி நெனப்போட இனிமே என்கிட்டே பேசவேண்டாம். இனிமே உன்கூட எந்த க்ரூப் அசைன்மெண்டும் பண்ண மாட்டேன்’ என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டேன்.
அதன் பிறகு தான் எனக்கு டார்ச்சர் ஆரம்பித்தது. கல்லூரியில் அடிக்கடி வந்து என்னிடம் பேச முயற்சித்தான். நான் இடம் கொடுக்கவில்லை. என் செல்போனுக்கு போன் செய்தான். மெசேஜ் அனுப்பினான். நான் அதையெல்லாம் தவிர்த்து வந்தேன். கடந்த ஒரு வாரமாக அவன் தொந்தரவு அதிகமாயிற்று. நான் போகுமிடமெல்லாம் என்னைத் தொடர்ந்து வந்தான். அருகில் வந்து என்னைப் பேசும்படி கெஞ்சினான். நான் கோபமாக அவனைப் பார்த்து விட்டு பதில் பேசாமல் விலகிச் சென்றேன். அவனுடைய நண்பர்கள் சிலரைத் தூது அனுப்பி என்னை அவனிடம் பேசச் சொன்னான். மறுத்தேன். சில மாணவிகளும் என்னை சமாதானம் செய்ய வந்தார்கள். அவர்களைக் கடிந்து கொண்டேன்.
மிட் டேர்ம் எக்ஸாம் அறிவிப்பு வந்தது. என் நோட்ஸ் வேண்டுமென்று சுரேந்தர் நேரில் வந்து கேட்டான். சரி என்று கொடுத்தேன். நேற்று அந்த நோட்ஸை திருப்பித் தரும்போது, அதில் தன் காதலை வெளிப்படுத்தி, நானில்லை என்றால் அவனுக்கு வேறு உலகமே இல்லை என்றெல்லாம் பிதற்றி எழுதி இருந்த ஒரு கடிதத்தை வைத்துக் கொடுத்தான். அதை அவன் கண்ணெதிரிலேயே கிழித்துக் குப்பையில் போட்டுவிட்டு, ‘நீ திருந்தவே மாட்டியா? கோ டு ஹெல்” என்று திட்டிவிட்டு வந்தேன்.
நேற்று இரவு எக்ஸாமுக்காகப் படித்துக் கொண்டிருந்தபோது , அவனிடமிருந்து போன் வந்தது . போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு சார்ஜில் வைத்துவிட்டுப் படித்துக் கொண்டிருந்தேன். காலையில் கல்லூரிக்குக் கிளம்பும்போது என் போனை சுவிட்ச் ஆன் செய்யும்போது தான் சந்தியா எனக்கு போன் செய்திருந்தாள். சந்தியா சுரேந்தர் வசிக்கும் அதே அபார்ட்மெண்டில் தான் வசிக்கிறாள். என்னிடம் அவனுக்காகத் தூது வந்தவர்களில் ,அவளும் ஒருத்தி.
சந்தியா போனில் சொல்ல என் தலையில் இடிபோல் இறங்கிய செய்தி: “சுரேந்தர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டான். இன்று காலையில் தான் அவனுடைய பேரன்ட்ஸ் அவன் அறைக்கதவை உடைத்துப் பார்த்தார்கள். அவன் எழுதி வைத்திருந்த சூயிசைட் நோட்டில் உன்னைப் பற்றி எழுதி இருக்கிறானாம். இங்கே போலீஸ் வந்து விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். அவன் செல்போனில் உன் நம்பருக்கு நிறைய மிஸ்ட் கால்ஸும் மெசேஜும் இருக்குதாம். நீ பார்க்கலையா? நீ நேற்று ராத்திரி பேசி இருந்தா அவனைக் காப்பாத்தி இருக்கலாம்”.
சுரேந்தர் நேற்றிரவு ஒரு மணிக்கு எனக்கு அனுப்பி இருந்த கடைசி மெசேஜ், “என் உயிர் பிரியுமுன் ஒரு முறையாவது ஐ லவ் யு என்று சொல் வந்தனா”. என் பதில் வராததால்…….என்ன பைத்தியக்காரத்தனம்!?
நடந்த விஷயங்களை என் குடும்பத்தினரிடம் அழுதுகொண்டே சொல்லி முடித்ததும், என் செல்போனை வாங்கிப் பார்த்தார் என் அண்ணா. “ஐயோ, ஒரு பையன் அநியாயமா சாகக் காரணமாயிட்டியேடி” என்று அம்மா தலையில் அடித்துக்கொண்டாள். எனக்கு சுருக்கென்றிருந்தது. அவன் சாவுக்கு நான் காரணமா?
“என்ன அறிவு கெட்டத்தனமா பேசறே. அவன் செத்ததுக்கு நம்ம பொண்ணு எப்படி காரணமாவா? அவ என்ன தப்பு பண்ணா?” என்று அம்மாவை அடக்கிவிட்டு, “என்ன இருந்தாலும், நீ ஒரு தடவை அவன் கிட்டே போன்லெ பேசி இருந்தா, இந்த முடிவைத் தவிர்த்திருக்கலாம்னு தோணுது பாப்பா” என்றார் அப்பா. ” என்னப்பா சொல்றீங்க. நான் ஏன்பா அவன்கிட்டே ராத்திரிலே பேசணும்?” என்றேன்.
“இவ்ளோ நடந்திருக்கு, இப்போ சொல்றே விஷயத்தை. நீ அவன் கிட்டே பழகாமலேயா, இவ்ளோ பைத்தியக்காரத்தனமா ஒரு பையன் உயிரை மாச்சிப்பான்? இப்போ போலீஸ் வந்து விசாரிக்கப் போறாங்க. மானம் போகப் போகுது” என்று மீண்டும் அம்மா என் மீதே குறை சொல்லிப் பதறினாள். “ஆமாம்மா, ஏன் முன்னாடியே அந்த பையன் தொந்தரவு பண்ரான்னு எங்கிட்டே சொல்லலே. அப்பவே காலேஜில் சொல்லி கண்டிச்சிருந்தா, இவ்ளோ தூரம் வந்திருக்காதில்லையா? அனாவசியமா அந்தப் பையனும் செத்திருக்க வேண்டாம்” என்று அப்பாவும் பேசினார். நான் பதில் சொல்ல முடியாமல் விழித்தேன். ஒரு வயசுப் பெண் வெளியில் போகும்போது தினமும் எதிர்கொள்ளும் தொந்தரவுகளை எல்லாம் வீட்டில் சொல்லிக் கொண்டிருக்க முடியுமா? என் அண்ணன் முகத்தைப் பார்த்தேன். அவருக்கு என் மனவேதனைப் புரிந்தது.
“அப்பா, நம்மளே வந்தனா மீது குறை சொன்னா எப்படி? அவள் மீது எந்த தப்பும் இல்லை. வயசுப் பசங்க, பொண்ணுங்க கிட்டே அவங்க இண்டரெஸ்ட்டை சொல்றதும், அதை அவங்க ஏத்துக்கறதும், ரிஜெக்ட் பண்றதும் சகஜம் தான். இதையெல்லாம் காலேஜுல கம்ப்ளயின்ட் பண்ணிட்டிருக்க முடியாது. வந்தனா இந்த மாதிரி எந்த விஷயத்துக்கும் போறதில்லைன்னு எனக்குத் தெரியும். அப்படியே எந்த பையனும் அவள் பின்னாடி சுத்துனா, அவளே நல்லவிதமா பேசி சமாளிச்சிருக்கா.
இந்தத் தெருமுனையில் வேலைவெட்டி இல்லாம உதார் காட்டிகிட்டு பைக்கிலே ஒரு கும்பலோட சுத்துற ஒரு பையன் வந்தனாவை பாலோ பண்ணப்போ, அவன் கிட்டே போய் “அண்ணா, நீங்கெல்லாம் இங்கே சப்போர்ட்டா இருக்கீங்க என்ற பயத்திலே தான், மத்த ஏரியா பசங்க என்னைத் தொந்தரவு பண்றதில்லை. எனக்கு உங்க பாதுகாப்பு வேணும், ஆனா நான் போகும்போதெல்லாம் கூடவே வரவேண்டிய அவசியம் இல்லைண்ணா” னு சாமார்த்தியமாகப் பேசி அவனை அடக்கிட்டா. அந்தப் பையனே என்கிட்டே, “சிஸ்டர் ரொம்ப நல்ல மாதிரி, உங்களுக்கு ஏதாவது பிரச்சனைன்னா என்கிட்டே சொல்லுங்க ப்ரதர்”னு சொன்னான். வந்தனா மேலே எந்த தப்பும் இருக்காதுன்னு நான் நம்பறேன்” என்றார் அண்ணா.
“வயசுப் பையன் திடீர்னு தூக்குப்போட்டு செத்துட்டான்னா அவனைப் பெத்தவங்க எப்படித் தாங்கிப்பாங்க? அவன் உன்னைப் பத்தி என்ன எழுதி வெச்சானோ? வீடேறிவந்து சண்டை போட மாட்டாங்களா? போலீஸ் வந்து என்னெல்லாம் கேட்டு சித்ரவதை செய்வார்களோ? எனக்கு பயமா இருக்கு. உன்னை காலேஜுக்கு மேற்படிப்புக்கு அனுப்பினதே தப்பு. இவரைத் தான் சொல்லணும். கல்யாணத்தைப் பண்ணிடுங்கன்னு சொன்னதைக் கேக்காம, உன்னை எம்பிஏ படிக்கவெக்கிறேன்னு காலேஜுக்கு அனுப்பினார். இப்போ இந்த அசிங்கத்தை எல்லாம் அனுபவிக்கணும்னு தலையெழுத்து”, என்று அம்மா ஒப்பாரி வைத்தாள்.
“அந்த பையன் உன்கிட்டே அப்படி நடந்துக்கற விஷயத்தை அவன் வீட்டுக்குப் போய் அவங்க பேரன்ட்ஸ் கிட்டே சொல்லி இருந்தா, ஒரு வேளை அவன் தற்கொலை விபத்தை தடுத்திருக்கலாமோ?” என்றார் அப்பா.
நான் என் அழுகையை நிறுத்தினேன். என் மீது தவறிருப்பது போல் அம்மாவும் அப்பாவும் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. முகத்தைத் துடைத்துக் கொண்டு எழுந்தேன்.
“இங்க பாருங்க. என் மேல் எந்தத் தப்பும் இல்லை. காலேஜுக்குப் போற பொண்ணுங்களுக்குத் தான் இந்த மாதிரி தொந்தரவுகள் வரும்னு இல்லை. வெளியில் போற எல்லாப் பொண்ணுங்களுக்கும் வரும். எனக்கு ஐ லவ் யூ சொல்ற ஓவ்வொரு பையன் வீட்டுக்கும் போய் கம்ப்ளயின்ட் சொல்லிட்டிருக்க முடியாது. என்னை தான் திட்டி வெளியில் அனுப்புவாங்க. என்னை பெத்தவங்க நீங்களே என்மேல் சநதேகப் படறீங்களே, மத்தவங்க எப்படி நம்புவாங்க?
அந்த கோழை, ஒரு தோல்வியை தாங்க முடியாம தூக்குல தொங்குனா, அதுக்கு நான் காரணமாக முடியாது. ஒருத்தன் ப்ரபோஸ் பண்ணா அந்த பொண்ணு ஏத்துக்கலேன்னா, அவள் மூஞ்சிலே ஆசிட் ஊத்துவாங்க அல்லது அரிவாளால் வெட்டுவாங்க. அதைப் பார்த்து உச்சு கொட்ற சமுதாயத்திலே நம்ம வாழறதை நெனச்சாலே கேவலமா இருக்கு. ஒரு பொண்ணு வேண்டாம்னு சொன்னா, விட வேண்டியது தானே.
ஒரு வேளை அவனுக்கு சரின்னு சொல்லி, அவன் கூட சினிமா, பீச்சு, பார்க்குன்னு சுத்திட்டு, அவன் கூப்பிட்டா, நானும் கூடவே ஓடிப்போயிருந்தா உங்களுக்கும் அவன் பேரண்ட்ஸுக்கும் நியாயமா பட்டிருக்குமா?
என் மடியில் கனமில்லை. எனக்கு பயமில்லை. நான் எந்த தப்பும் பண்ணலே. போலீஸ் வந்து விசாரிச்சா நானே பதில் சொல்றேன். என் செல்போனைக் காட்றேன். காலேஜுக்குப் போய் என் க்ளாஸ்மேட்ஸ், லெக்ச்சரர்ஸ் எல்லாரையும் என்னைப் பத்தி விசாரிக்க சொல்றேன். நடந்த உண்மை அவங்களுக்கும் புரியும். நான் காலேஜுக்குப் போறேன்” என்று கிளம்பினேன்.
“வேண்டாம் வந்தனா. இன்னைக்கு காலேஜ் இருக்காது. இருந்தாலும் நீ ரெண்டு மூன்று நாட்களுக்கு காலேஜ் போக வேண்டாம். எல்லோரும் உன்மேல் கோவமாகத் தான் இருப்பாங்க. விசாரிக்கறதுக்கு போலீஸ் வந்தால், நீ இங்கே இருக்கணும். நானும் ஆபிசுக்கு லீவு போட்டுட்டு வீட்டிலேயே இருக்கேன்,. அவங்க வந்து கேட்டா, என்ன நடந்ததோ அப்படியே சொல்லு. நீ அமைதியா இரு” என்றார் அண்ணா.
“எவ்ளோ நெஞ்சழுத்தம் பாருங்க இவளுக்கு. படிக்கிறோங்கற திமிரு. எனக்கு கைகாலெல்லாம் நடுங்குது. அவளுக்கு எதனா பயமிருக்கா பாருங்க. இவ ஒரு தப்பும் பண்ணலேன்னா அந்த பையன் எதுக்கு தூக்குப் போட்டு செத்திருப்பான்? அவனை எல்லார் முன்னாடியும் அவமானப் படுத்திட்டாளோ என்னமோ? கடவுளே, எதுக்கு எங்களுக்கு இந்த சோதனை?” என்று அரற்றினாள் அம்மா.
“எனக்குத் தலை வலிக்குது. நீ வேறு அழுது எனக்குப் ப்ளட்ப்ரெஷர் ஏத்தாதே. போய் வேலையைப் பாரு. அந்தப் பையன் வீட்டாரோ, போலீசோ வந்து இங்கே ஏதாவது ரசாபாசமாகிடப் போவுது. நானும் ஆபிசுக்கு லீவு சொல்லிட்டு வீட்லே இருக்கேன்” என்றார் அப்பா. நான் எதுவும் பேசாமல் என் அறைக்குச் சென்று படுத்தேன். “சுரேந்தர் இறந்ததற்கு நானா காரணம்?” என்ற கேள்வி மண்டையைக் குடைந்தது. பொங்கி வந்த கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை.
மதியம் ஒரு சப்இன்ஸ்பெக்டரும் , ஒரு ஆண் போலீஸ்கான்ஸ்டபிலும் ஒரு பெண் போலீஸ்கான்ஸ்டபிலும் சுரேந்தரின் உறவினர் சிலருடன் வீட்டிற்கு வந்தனர். அறையிலிருந்த என்னை அழைத்து நடந்த சம்பவத்தைச் சொல்லி, அதற்கு எனக்கு என்ன தொடர்பு என்று விசாரித்தனர். நடந்ததை நிதானமாக நடந்தபடி சொன்னேன். அந்த பையன் இறக்கும்போது என்னைப் பற்றி எழுதி இருப்பது தெரியுமா என்று கேட்டனர். என் க்ளாஸ்மேட் சொல்லித் தெரியும், ஆனா என்ன எழுதி இருக்குன்னு தெரியாது என்றேன். என் அறையை சோதனை செய்து விட்டு, செல்போனைக் கேட்டு வாங்கி கொண்டனர். “ஏதாவது போனில் டெலிட் செய்தேனா” என்று கேட்டார்கள். இல்லை என்றேன். எந்தவித மிரட்டலுமில்லாமல் சாதாரணமாகவே விசாரித்தார்கள். ஸ்டேஷனுக்கு வந்து ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுக்கச் சொன்னார்கள். சுரேந்தரின் உறவினர் என்னை ஒரு கொலைகாரியைப் போல் வெறுப்புடன் பார்த்தனர். என் அம்மா வாயைப் பொத்திக்கொண்டு அழுதாள்.
அப்பா, அண்ணனுடன் ஸ்டேஷனுக்குச் சென்று ஸ்டேட்மென்ட் எழுதிக் கொடுத்தேன். நீங்கள் போகலாம், விசாரிக்கக் கூப்பிட்டால் வரணும். ஊருக்கு எங்கும் போக வேண்டாம் என்று சொன்னார்கள். ஸ்டேஷனை விட்டு வெளியில் வரும்போது, என்னை விசாரிக்க வந்த போலிஸ்காரரிடம் என் அண்ணா, “சுரேந்தர் எழுதி இருந்த கடிதத்தில் என் சிஸ்டரைப் பற்றி என்ன கம்ப்ளயின்ட் இருந்தது என்று நாங்கள் தெரிஞ்சிக்கலாமா சார்” என்று மெதுவாகக் கேட்டார்.
“கம்ப்ளயின்ட்டெல்லாம் ஒன்னும் இல்லே தம்பி. அந்த பொண்ணு மேலே தப்பில்லே. நான் தான் அவளுக்கு டார்ச்சர் குடுத்தேன். எம்மேலே தான் தப்பு. எனக்கு அவமானமா இருக்கு. இந்த காதல் தோல்வியை என்னால தாங்கமுடியலே. எனக்கு உயிர் வாழ புடிக்கல. என்னை எல்லாரும் மன்னிச்சுக்கோங்கன்னு எழுதி வச்சிட்டு தூக்குல தொங்கிட்டாம்பா அந்த லூசுப் பய” என்று கேஷுவலாகச் சொன்னார்.
“சார், எங்களுக்கு இதனால பிரச்சனை வருமா? அந்த பையன் வீட்லே இருந்து வந்து சன்டை போடுவார்களா?” என்று கேட்டதற்கு, “அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. காலேஜில் மத்த பசங்களை எல்லாம் விசாரிச்சுட்டோம். உங்க தங்கச்சி மேல எந்த கம்ப்ளயின்ட்டும் இல்லே. அதான் ஸ்டேட்மென்ட் எழுதி வாங்கிட்டோமில்ல, கேஸை க்ளோஸ் பண்ணிடுவோம். ரெண்டு மூணு நாள்லே செல்போனை செக் பண்ணிட்டு திருப்பி குடுத்துடுவோம். நீங்க போங்க. தேவைப்பட்டா கூப்பிடுவோம். அவங்க எதுனா டிஸ்டர்ப் பண்ணா எங்களுக்கு இன்பார்ம் பண்ணுங்க. எதுக்கும் சிஸ்டரை ஜாக்கிரதையா இருக்கச் சொல்லுங்க” என்றார் என்னைப் பார்த்தபடி.
கண்களில் நீர்மல்க நாங்கள் மூவரும் அவருக்கு நன்றி சொன்னோம். “எங்களுக்கும் பொம்பள பசங்க இருக்காங்க. இந்த காலத்திலே என்னவெல்லாம் தொந்தரவு அவங்களுக்கு இருக்குன்னு எங்களுக்கும் தெரியும். சிஸ்டர், நீங்க போய் நல்லா படிச்சு முன்னுக்கு வர வழியைப் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்குள் சென்றார் அவர்.
வீட்டிற்கு வந்து நடந்ததை அம்மாவிடம் சொன்னார் அண்ணா. “போலீஸ் அவங்க கிட்டே பணம் வாங்கிட்டு இந்த கேஸைப் பெரிசாக்கி நம்பளை ஹராஸ் பண்ணிடுவாங்களோன்னு பயந்துக்கிட்டிருந்தேன். அந்த பையன் உன்னைப் பத்தி கம்ப்ளயின்ட் எழுதி இருந்தா, தற்கொலையைத் தூண்டியதா, உன்மேலே கேஸ் போட்டிருப்பாங்க வந்தனா. கோர்ட், கேஸ், ஜெயில்னு உன் வாழ்க்கையே வீணாகி இருக்கும்.” என்றார் அப்பா. “அந்த பையன் உன் மேலே தப்பில்லைன்னு எழுதி உன்னைக் காப்பாத்திட்டான். அதனாலே தான் அவனுடைய சொந்தக்காரங்க நம்ம கிட்டே வந்து சண்டை போடலை. பாவம், அவன் செத்திருக்க வேண்டாம் அவன் நல்லவன் போலதான் தெரியுது. அனாவசியமா அவன் உயிர் இவளால் போய்டுச்சே” என்று அழுதாள் அம்மா. எனக்கு எதிரியே என் அம்மா தானா என்று தோன்றியது.
நான் இரண்டு நாட்கள் வெளியில் எங்கும் செல்லாமல் அழுது, தூங்கி, அழுது முடித்தேன். பிறகு கல்லூரிக்குச் சென்றேன். வகுப்பில் நண்பர்களால் தனிமை படுத்தப் பட்டேன். என்னைப் பார்ப்பதைக் கூடத் தவிர்த்தனர். நான் என் வேலைகளைப் பார்த்தேன். விடுபட்ட பாடங்களில் கவனம் செலுத்தினேன். மனதை சகஜமாக்க முயன்றேன். பழகி விடும். சகஜமாகி விடும்.
எல்லோரும் என்னை ஒரு குற்றவாளி போலவே பார்த்தார்கள் என் அம்மாவே அப்படித் தானே பார்த்தார். ஆனால் என் மனதுக்குத் தெரியும், நான் குற்றவாளி அல்ல என்று. உயிரைப் போக்கிக் கொள்ளும்போது, உண்மையை எழுதத் தெரிந்த சுரேந்தருக்கு, நட்பு மட்டும் போதும் என்று நான் சொன்ன உண்மையை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை? பாவி, அனாவசியமாக உயிரை மாய்த்துக் கொண்டிருக்க வேண்டாமே. நான் இன்னும் பொறுமையாக செயல் பட்டிருக்க வேண்டுமோ?
நீங்களே நியாயம் சொல்லுங்கள், நான் குற்றவாளியா?