நிழல் தொலைத்தவர்கள்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 28, 2012
பார்வையிட்டோர்: 15,484 
 
 

எறும்புபோல் சாரைசாரையாய் மக்கள் கூட்டம் அந்த வீட்டில் குழுமிக் கொண்டிருந்தது. வீடு பிதுங்கி வீதியிலும், வீதி பிதுங்கி தெருவிலும், தெரு பிதுங்கி ஊரிலும் ஒரு சொட்டு வியர்வை விழக்கூட இடமின்றி கூட்டம் பெருகிக்கொண்டே இருந்தது.

அங்கு குழுமிய மனிதர்கள் அனைவருக்கும் ஒரே ஆச்சர்யம். தங்கள் மூதாதையர்கள் சொன்னவைகள் எல்லாம் கட்டுக் கதையென்றே இன்றுவரை நம்பி வந்தவர்களின் எண்ணம் எல்லாம் தவிடுபொடியாகிக் கொண்டிருந்தது. காவலர்கள் இடநெருக்கடியையும் போக்குவரத்தையும் சரிசெய்தபடி மேலிடத்திற்கு தகவல் அனுப்பிக் கொண்டே இருந்தார்கள்.

அதிசயம் என்னவென்றால் அங்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. குழந்தை பிறப்பதோ குழந்தையின் உருவிலோ அதிசயம் ஒன்றுமில்லை. எல்லாக் குழந்தைகளையும் போல்தான் இதுவும் உள்ளது. பின் ஏன் இந்த ஆர்ப்பரிப்பு? இத்தனை கூட்டம் வேடிக்கை பார்க்க?

அந்த வீட்டிற்குள் வரிசையாக ஒருவர் பின் ஒருவராகவேதான் செல்ல அனுமதிக்கப்பட்டார்கள். ஒவ்வொருவரும் உள்ளே சென்றதும் குழந்தையைப் பார்க்கவில்லை. மாறாக எதிரே உள்ள சுவரைத்தான் பார்த்து அதிசயித்தார்கள். ஒவ்வொருவர் உடலும் புல்லரிப்பதை அவர்களது உடலிலுள்ள ரோமங்கள் குத்திக் கொண்டு நின்று காட்டிக் கொடுத்தன.

உள்ளே நுழைந்த கிழவர் ஒருவர் ஆனந்தக் கண்ணீர் வடிய மெல்ல அந்தச் சுவரை தொட்டு ருசிக்க நெருங்கினார். திடீரென அலாரம் ஒலிக்க அருகிலிருந்த பெண் காவலாளி “தொடக்கூடாது. பாத்தாச்சுல்ல. கிளம்பிட்டே இருக்கணும்“ விரட்டாத குறையாக வெளியேற்றினாள்.

டிவிக்காரர்கள் செய்தியை படம்பிடிக்க உள்ளே நுழைய முற்படவும், அவர்களை காவலர்கள் தடுக்கவும் என கலவரம் மூளும் சூழலும் ஏற்பட்டது. இறுதியாக ஆளுங்கட்சியின் டிவியில் மட்டும் ஒளிபரப்பப்பட்டது. உலகமே ஆவென ஆச்சரியத்துடன் கண்டது.

வெள்ளை நிறச் சுவரில் குழந்தையின் நிழல் கறுப்பாக அசைந்து கொண்டிருந்தது. கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸோ கதையோ அல்ல. இது நிஜம். நிழலுடன் ஒரு குழந்தை பிறந்துள்ளது. ஆச்சரியம் ஆனால் உண்மை என பல அறிஞர் குழுக்கள் கூட்டி விவாதம் செய்யத் தொடங்கின.

ஆம் இப்போதுதான் புரியத் தொடங்குகிறது நிழல் என்பதே இல்லாத உலகம் இதுவென. உற்றுப் பார்த்தால் ஒரு மனிதனுக்கும் நிழல் இல்லை. இவர்கள் நிழலை இழந்த வரலாறு பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை.

குறைந்தது நான்கைந்து தலைமுறைகளாவது கடந்திருப்பார்கள். அதனால்தான் நிழல் குறித்த புரிதல் இல்லாமல் அதை கற்பனை என்று எண்ணி வாழ்கிறார்கள். கொஞ்சம் சுற்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் உங்கள் நிழல் உங்கள் வசம் உள்ளதா என்று? அப்படி நிழல் இருந்தால் நீங்கள்தான் மூதாதையர். இது உங்களது வருங்காலத்தில் நிகழப் போகும் நிகழ்வு. நிழல் இல்லை என்றால் இந்த கூட்டத்தில் நீங்களும் ஒருவர். இது நிகழ்கால நிகழ்வு. நிழல் பற்றி கவலைப்படாத ஆள் என்றால் இது இறந்தகால நிகழ்வு. நிகழ்வு என்பது உண்மையே. காலம் எதுவாயிருந்தால் என்ன? நிகழ்வை தரிசிக்க விரும்பினால் தொடருங்கள். இல்லை எனில் பத்தோடு ஒன்றாய் உங்கள் வேலையை நீங்கள் பார்க்கலாம்.

நிழல் இல்லாத பூமியில் வெப்பம் தன் விருப்பம்போல் ஆட்டம் போட்டு எல்லாப் பாதங்களையும் ரணமாக்கி ரணமாக்கி ரணங்களின் மத்தியில் பாதம் என்பதே தெரியாமல் போய்விட்ட உலகம்.

காவலாளி வெளியேற்றிய அந்த வயதானவர் புலம்பத் தொடங்கினார். “ஐயோ என்னோட நிழலை எங்க போய்த் தேடுவேன்?“

டிவிக்காரர்கள் சூழ்ந்து கொண்டார்கள். அடுக்கடுக்கா கேள்விகள் எழுப்பினர்.

“உங்களுக்கு நிழலைத் தெரியுமா?“

“உங்கள் வயது என்ன“

“உங்களுக்கு நிழல் இருந்ததா?“

“உங்கள் நிழலைக் களவாடினார்களா?“

“உங்கள் தாய் தந்தையர் முன்னோருக்கெல்லாம் நிழல் இருந்ததா?“

“உங்கள் நிழலின் அளவென்ன?“

“நிறமென்ன?“

அந்த முதியவர் தனது துண்டால் முகத்தை அழுந்தத் துடைத்தார். அந்த இடமே அமைதியானது.

“என்னோட வயசு 116. எங்க காலத்துல எல்லார்க்கும் நிழல் இருக்கும். பகலில் வெயிலில் போனா கூடவே வரும். இருட்டுக்கும் அதுக்கும் ஜென்ம ஜென்மாய் பகை. அதனால எப்ப இருட்டைப் பார்த்தாலும் ஒளிஞ்சிக்கிடும். நாங்க யாருமே நிழலை கண்டுக்கிட்டது கிடையாது.“

“எப்பவாவது வெயில் அதிகமா இருக்கத்துல அதைப் பத்தி யோசிப்போம். எனக்கு நல்லா நினைவிருக்கு. ஒரு சித்திரை உச்சி வெயிலில் எங்கப்பா எங்களை காவிரி ஆத்துக்கு கூட்டிட்டுப் போனாரு. ஆத்துக்கு நடுவுல கொஞ்சமா தண்ணீர் ஓடிக்கிட்டு இருந்துச்சி. அதுல குளிக்கணும்னு நானும் எந்தங்கச்சியும் ஆசைப்பட்டோம். அப்போ எங்க அப்பாவோட நிழலில் என் தங்கச்சியும், அங்க அம்மாவோட நிழலில் நானும் கால் சுடாம நடந்து போனது இன்னும் ஞாபகமிருக்கு“

கேட்டுக் கொண்டிருந்த எல்லோர் கண்களில் இருந்தும் கண்ணீர் யாரையும் கேட்காமல் வெளியேறியது.

கிழவரின் கண்ணிலும் ஊற்றெடுத்தது. “ம்… அதெல்லாம் ஒரு காலம். அப்போ எங்க காட்டிக்கு நிழல் கிடையாது. நான் சின்ன பிள்ளையா இருக்கத்துல ஒரு நாளு பாட்டிட்ட கேட்டேன் ‘உங்க நிழல் எங்க பாட்டி?‘ன்னு. அதுக்கு அவங்க ‘அந்த நிழலை வச்சி என் பிரயோசனம்? எதுக்கும் உதவாத கழுத. அது இருந்தாலும் ஒன்னுதான் இல்லாட்டியும் ஒன்னுதான். அஞ்சு வருசத்துக்கு ஒருக்க வந்து ஒருத்தன் ஓசியாவே கேட்டுக்கிட்டு இருந்தான். நான் குடுக்கல. உங்க தாத்தாதான் ஒருதடவ ஒருத்தன் சீலையும் வேட்டியும் தர்றான். என்னோட நிழலக் கொடுத்துட்டு வேட்டி வாங்கிட்டு வந்துட்டேன். நீயும் வா. உன்னோட நிழலைக் கொடுத்துட்டு சேலை வாங்கிடுவோம்னு சொல்லி கூட்டிட்டுப் போய் கொடுத்துட்டாரு“‘ என்று நீட்டி முழக்கினா.

“கொஞ்ச கொஞ்சமா நிழலோடையும் நிழல் இல்லாமையும் எல்லோரும் இருந்தாங்க. எனக்கு பன்னெண்டு வயசாகத்துல எங்க வீட்டுக்கு ஒருத்தரு வந்தாரு, ‘அண்ணே தலைக்கு ஒருநூறு ரூபாய் கொடுக்குறாங்க. நிழலைக் கொடுங்கன்னு‘ பல்லைக் காட்டினாரு. எங்கப்பா பயங்கரமா சண்டை போட்டு விரட்டி விட்டாரு. ஆனா எங்கத் தெருவுல நெறையப் பேரு ரூபாயை வாங்கிட்டு நிழலைக் கொடுத்திட்டாங்க. எங்கப்பா ஏன் அப்படி செஞ்சாருன்னு எனக்குப் புரியல. ஆனா எல்லோரும் எங்கப்பாவை பொழைக்கத் தெரியாதவன். மூளை இல்லாதவன்னு திட்டுனாக். அதுவும் ஒன்னும் புரியல.“

“அடுத்து அஞ்சு வருசம் கழிச்சி படாடோபமா நிழல் களவாடுற கூட்டம் வெள்ளையும் சொள்ளையுமா பவணி வர ஆரம்பிச்சாங்க. நெறையா வேரு ஆரத்தி எடுத்து வரவேற்றாங்க. நிழலை கொடுக்கிறவங்களுக்கு கறிச்சோறு, பிரியாணி, சாராயம்னு அள்ளிக் கொடுத்தாங்க. யாருமே நெனச்சிக் கூடப் பாக்கல. நிழலுக்கு இப்படி ஒரு மவுசு வரும்னு.“

“நிழல் கொடுத்தவங்க எல்லாரும் அடுத்த அஞ்சு வருசத்துக்கு ரொம்பதான் திண்டாடிப் போயிட்டாங்க. கால் எல்லாம் பொக்களம். நெறையப் பேரு ரணம் தாங்காம செத்துப் போயிட்டாங்க. ஆனால் இதுக்கெல்லாம் காரணம் நிழல் இல்லாம இருக்கிறதுதான்னு எங்கப்பா மாதிரி ஆட்களோட பரப்புரையை கேட்டுச் சிரிச்சாங்க. நிழல் வியாபாரிக மொத்த நிழலையும் கொண்டு போய் யார்ட்டையோ வித்து காச சுவிஸ் பேங்க்ல போட்டுக்கிட்டாங்க. அந்த புத்திசாலிக தங்களோட சொந்த நிழலையும் சேர்ந்து வித்து காசுபாத்தாங்க. வந்த காசுல கக்கூசிலிருந்து கட்டில் வரைக்கும் ஏசி மாட்டிகிட்டு வெப்பத்துக்கே தண்ணி காட்டிடோம்னு நெனச்சிக்கிட்டாங்க“

“எனக்கு பதினெட்டு வயசு ஆனப்போ நிழல் வாங்கிறவங்க ‘பதினெட்டு வயசுக்காரங்க்கூட நிழலை விக்கலாம்‘னு சட்டம் கொண்டு வந்து தங்களோட வியாபாரத்தப் பெருக்கிக்கிட்டாங்க. இந்தத் தடவை யார் நிழலையும் வாங்க விடாத மாதிரி எங்கப்பா தோழர்களோட சேர்ந்துக்கிட்டு அவங்கள துரத்தி துரத்தி அடிச்சாரு. ஒரு நாளு காத்தால கம்மாக் கரையோரம் யாரோ அவர வெட்டிப் போட்டாங்க. நாங்க என்ன செய்ய முடியும்? ரொம்ப சோகத்தோட வீட்டுக்குள்ள கிடந்தோம். திடீர்ன்னு சன்னல் வழியா ஆயிரம் ரூபா தாட்களை யாரோ விட்டெறிஞ்சாங்க. என்ன ஏதுன்னு யோசிக்கிறதுக்குள்ள எங்களோட நிழல்களை காணல. இதை திருட்டுன்னு எப்படி பதிய முடியும்ன்னு போலீஸ்காரர் கேட்டாரு. இப்பத்தான் எல்லா நிழல்களும் காணமப் போச்சி. இன்னும் பத்து தலைமுறைக்கு வரப்போற நிழலை பூராம் எழுதி கொடுத்துட்டானுக. அதனாலதான் ஆஸ்பத்திரியில பிறக்கிற குழந்தைகளோட நிழலைக்கூட சாக்கிரதையா பெட்டியில போட்டு அனுப்பிடுறாங்க.“

“இந்தக் குழந்தை ஆஸ்பத்திரிக்கு போறதுக்கு முந்தியே வீட்டுல பிறந்துட்டதால நிழலோட இருக்கு“

கிழவர் கதையைக் கூறிக்கொண்டு இருக்கும்போதே ஒரு 108 ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது. அதிலிருந்து வெள்ளை உடை அணிந்திருந்த தேசக்காவலர்கள் ஒரு பெரிய கருப்பு பெட்டியை கொண்டு வந்தார்கள். சுவரில் படிந்திருந்த நிழலை லாவகமாக அதனுள் அடைத்து வெளியேறினார்கள். எல்லா மக்களும் அழுது புலம்பினார்கள்.
மீண்டும் கறுப்பு நிழல் இல்லாத அந்த வெள்ளைச் சுவர் வெறுமையானது. ஏதுமறியாத அக்குழந்தை நிழல் களவாடப்பட்டது தெரியாமல் சிரித்துக் கொண்டிருக்கிறது.

(2012 பிப்ரவரி 18ஆம் நாள் அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மாவிபக‘வின் படைப்பரங்கில் வாசிக்கப்பெற்ற சிறுகதை)

– பிப்ரவரி 2012

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *