கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 26, 2014
பார்வையிட்டோர்: 17,454 
 
 

கந்தசாமிக்காகக் காத்திருந்தேன். இன்னும் வரவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை நிலங்கள் எல்லாம் பயிர் செய்யப்படாமல் வெறும் கறம்பாகவே கிடந்தன. புதரும் மண்டிக் கிடந்தது. வரப்புகள் தெரியவில்லை. வாய்க்கால் தெரியவில்லை. ஒரு காலத்தில்- ஒரு காலத்தில் என்ன பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு – அந்த நிலங்கள் எல்லாம் எனக்குச் சொந்தமாக இருந்தன. இப்போது அது கந்தசாமியின் கையில். கந்தசாமி அந்த நிலங்களை வேறு யாருக்கோ விற்கப் போகிறாராம். தகவல் கிடைத்ததும் கிளம்பிவிட்டேன்.

அத்தனையும் அருமையான நிலங்கள். போட்ட விதை ஒன்று கூட பழுதில்லாமல் விளையக் கூடிய விளைச்சல் பூமி. சொன்ன மகசூலை சொன்னபடி வாரிக் கொடுக்கும் சொர்ண பூமி எல்லாமே.

நிலம்சிந்தனை முள் பின்னோக்கி நகர்ந்தது. அப்போது ஆறாவது – ஏழாவது படிக்கும் சிறுவன் நான். அப்பா, பெரியப்பா, சித்தப்பா எல்லாருக்குமாகச் சேர்ந்து மூன்று ஏக்கர் நிலங்கள். ஒருமுறை வேர்க்கடலை பயிரிட்டால் மறுமுறை நெல் பயிரிடுவோம். வீட்டிலிருந்து கழனிக்கு எப்படியும் நான்கு கிலோ மீட்டர் தூரம் இருக்கும். காலையிலும் மாலையிலும் நானும் எனது சித்தப்பா மகனுமாக கழனிக்கு வந்துவிடுவோம். பள்ளி செல்வதற்கு முன்னும், பள்ளி விட்ட பின்னும்.

ஃபைவ் ஹார்ஸ் பவர் பம்ப் செட் அது. மெஷினை ஆன்செய்து விட்டு தண்ணீரை ஒரு கழனிக்கு மடைமாற்றிவிட்டு இருவரும் பெரிதாகக் கட்டப்பட்டிருக்கும் அந்தத் தண்ணீர் தொட்டியில் விழுந்து விழுந்து குளிப்போம். குழாயிலிருந்து வரும் நீரை இரு கைகளாலும் அழுத்திப் பிடித்து ஒருவர் மீது ஒருவர் பீய்ச்சி பீய்ச்சி அடித்து விளையாடுவோம்.

சட்டென்று எழுந்து ஓடிப்போய் தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் சேற்றுக் கழனியில் தொபுகடீர் என்று விழுந்து விழுந்து புரளுவோம். சேற்றையள்ளி ஒருவர் மீது ஒருவர் உடம்பெல்லாம் பூசி விளையாட்டாகச் சண்டை போடுவோம். பொறாமையினால் புரளி என்கிற சேற்றையள்ளி பூசத் தெரியாத பருவமல்லவா அது. அவன் என்னைத் துரத்த நான் அவனைத் துரத்த ஒரே கொண்டாட்டந்தான். மறுபடியும் ஓடிப்போய் தண்ணீர் தொட்டியில் விழுவோம். அப்படியே குழாயில் வாயை வைத்து மூச்சு முட்டத் தண்ணீரைக் குடிப்போம். மீண்டும் சேற்றுக் கழனி. மறுபடியும் தண்ணீர்த் தொட்டி.

சிந்தனை முள் நின்றது. ஒரு பத்து வயது திடீரென்று குறைந்துவிட்டதுபோல் உணர்ந்தேன். மீண்டும் சிந்தனை முள் ஓடியது.

“”டேய் ஆறுமுகம், சம்முவம் (சண்முகம்) இங்கே வாடா… அதோ களத்து மேட்டில இருக்கிற வேப்பந்தழை, நுணாத்தழை, வாதமடக்கி, பூவரசு, புங்கத்தழை எல்லாத்தையும் வாரி அதோ அந்தக் கீழண்டை இருக்கிற சேத்துக் கழனியில போட்டு தொளி மிதிக்க ஆள் வருவாங்க. நல்லா மிதிக்கணும்னு சொல்லுங்க. ரெண்டு பேரும் கிட்டக்க இருந்து பார்த்துக்கணும் என்ன…ணு” பெரியப்பா சொல்லிவிட்டு வேறு வேலையாகக் கிளம்பிப் போனார். அவர் சென்றவுடன் அந்த இலை தழைகளை எல்லாம் இரண்டு வேலையாட்கள் வாரி எடுத்துப் போய்ச் சேற்றில் ஆங்காங்கே குவியல் குவியலாகக் கொட்டினார்கள்.

“”தம்பீங்களா எல்லாத்தையும் கொண்டாந்துக் கொட்டிட்டோம். தொளி மிதிக்க ஆள் வருவாங்க. அப்ப நாங்க கௌம்பறோம்”

அந்தச் சேற்றுக் கழனி ஒரு பெரிய நீர்ப் பரப்பாகக் காட்சியளித்தது. அதில் முகம் பார்க்கலாம். அவ்வளவு தெளிவாக இருந்தது. நேரந்தான் போனதே தவிர தொளி மிதிக்க ஆள் வந்தபாடில்லை.

“”இப்போ என்னடா பண்றது?” நாங்கள் இருவரும் மாற்றி மாற்றிக் கேட்டுக் கொண்டோம். சட்டென்று இருவரும் சேற்றில் இறங்கிவிட்டோம். ஒவ்வொரு குவியலையும் பரவலாக வாரி இறைத்துக் கலைத்துப் போட்டு கால்களால் மாறி மாறி மிதித்து இலை தழைகளை சேற்றுக்குள் அழுத்தினோம்.

“”ம்… நல்லா… இன்னும் நல்லா…. அப்படித்தான்…. அப்படித்தான்… ஓங்கி மிதி…” எங்களைப் பொறுத்தவரை அவை இலை,தழைகளாகவே தெரியவில்லை. ஊரிலே நடமாடிக் கொண்டிருக்கும் பொறுக்கிகளும் போக்கிரிகளும் குடிகாரர்களாகவுமே உணர்ந்தோம். “”டேய் அவனை இன்னும் நல்லா மிதிடா… தலை தெரியறது பார்… அமுக்கு… அமுக்கு….” அவர்களையெல்லாம தட்டிக் கேட்க முடியாத குறையை இப்படியாகத் தீர்த்துக் கொண்டோம். அன்று நாள் முழுக்க கால்கள் இரண்டும் விண்விண் என்று வலித்தன. கால்கள் மட்டுமா? உடம்புந்தான்.

“”இன்னிக்கி இல்லாட்டி நாளைக்கு வந்து மிதிச்சுட்டுப் போறாங்க… உங்களுக்கேன்டா இந்த வேண்டாத வேலை?” பெரியப்பா அன்றிரவு எங்கள் கால்களை வாஞ்சையோடு பிடித்துவிட்டார். தலையைக் கலைத்து விட்டார் பாசத்தோடு. தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டார். ஓர் எட்டணாக் காசை எடுத்துக் கொடுத்து, “”நாளைக்கு ரெண்டு பேரும் ஆட்டத்துக்குப் போய்க்கோங்கோ (சினிமா)” என்றார்.

“”நாளைக்கு என்ன… இதோ இப்பவே ரெண்டாவது ஆட்டத்துக்குக் கிளம்பிட்டோம்” என்று சொல்லிக் கொண்டே நாங்கள் இருவரும் எழுந்து ஓட்டம் எடுத்தோம். கால் வலி போன இடம் கொஞ்சமும் தெரியவில்லை.

கந்தசாமி இன்னும் வரவில்லை. என் பழைய நினைவுகளும் பற்பல ரீல்களைத் தாண்டி ஓடிக் கொண்டிருந்தன.

“”அண்ணே… அண்ணே நானும் கொஞ்ச நேரம் ஓட்டட்டுமா… தள்ளிப் போங்கண்ணே… கலப்பையை இப்படிக் குடுங்க” உழுது கொண்டிருந்த ஆளைத் தள்ளிவிட்டு விட்டு ஏர்க்கலப்பையை இடதுகையில் பிடித்துக் கொண்டு வலது கையில் ஒரு பிரம்பை வைத்துக் கொண்டு ஏய் ஏய் என்று மாடுகளை விரட்ட, அவை தாறுமாறாக ஓட, கலப்பை கீழே விழ, ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்த சால் கோணல் மாணலானது. மாடுகள் கலப்பையைக் கயிறோடு இழுத்துக் கொண்டு ஓடின. நான் கீழே விழுந்தேன். என் சித்தப்பா பையன் என்னைப் பார்த்துச் சிரித்தான்.

“”அதுதான் அப்பவே சொன்னேன் இல்லே… நீ கேட்டியா?” என்று குதித்தான். உழுது கொண்டிருந்தவர் ஓடி வந்து மாடுகளை இழுத்துப் பிடித்து கலப்பையை நிறுத்தி நேர்ப்படுத்தி மீண்டும் உழ ஆரம்பிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

எனக்குக் கோபம் கோபமாக வந்தது. அவர் உழுதால் மட்டும் மாடுகள் சொன்னபடி கேட்கும்போது, என்னை மட்டும் ஏன் அவை ஏமாற்றுகின்றன? கையில் வைத்திருந்த பிரம்பால் நாலு வாங்கு வாங்கலாம் என்று ஓடினேன். பாவம் அவை என்ன செய்யும்? தப்பு உன் மீதுதான் என்று மனம் என்னை இடித்துரைத்தது.

“”அண்ணே,,, நீங்க கொஞ்சம் ஓய்வெடுத்துக்குங்க… நான் அண்டைக் கிழிக்கறேன் பாருங்க…” வரப்பை வெட்டிச் சீர் செய்து கொண்டிருந்தவரிடம் இருந்து மண் வெட்டியைப் பிடுங்கினேன். நூல் பிடித்த மாதிரி ஒரே நேராகச் சென்று கொண்டிருந்த வரப்பு நான் வெட்ட ஆரம்பித்தவுடன் சுருண்டு போன நூல் மாதிரி தாறுமாறானது. கோல்பட்டது.

“”போதுஞ்சாமி… போய் உக்காருங்க… இவ்வளவு நேரா யாரும் அண்டை கழிச்சி நான் இதுவரைக்கும் பார்த்ததே இல்லே” என்று கேலியாகச் சிரித்தபடி மண்வெட்டியை அவர் என்னிடமிருந்து பிடுங்கிக் கொண்டார். மாடுகள் தான் என்னைக் கொஞ்சமும் மதிக்கவில்லை யென்றால் மண்வெட்டி கூடவா? அதைத் தூக்கிப் போட்டுப் பந்தாட வேண்டும்போல் இருந்தது. முகத்தை இடது கையால் ஊன்றிய படி வரப்பின் மீது போய் உட்கார்ந்தேன். அவர் வெட்டுவதையே கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

அடேயப்பா… எத்தனை வருடங்கள் போனாலும் நினைவுகள் மட்டும் இன்னும் பட்டுப் போகாமல் அப்படியே இருப்பது எத்தனை எத்தனை ஆனந்தம்.

கந்தசாமி இன்னும் ஆளைக் காணோம். நினைவுகள் தொடர்ந்தன.

தாத்தா இறந்த பிறகு அண்ணன் தம்பிகளுக்குள் இறுதியான பாகப் பிரிவினை என்று வந்தபோது ஊருக்குள்ளேயே வீட்டில் அதிகமான பங்கை எடுத்துக் கொண்டு எனது பெரியப்பாவும் சித்தப்பாவும் அவர்கள் நிலங்களை எங்களுக்கே கொடுத்துவிட்டனர்.

காலம் உருண்டோடியது. அன்று நான் சிறுவன். இன்று என் குழந்தைகளுக்கும் குழந்தைகள் இருக்கின்றன. காலந்தான் எத்தனைத் துரித கதியில் ஓடுகிறது. யாராவது அதைத் துரத்துகிறார்களா? ஏன் இத்தனை வேகம்? யாருக்குப் பயந்து இப்படி ஓடிக் கொண்டே இருக்கிறது நிற்காமல்- திரும்பிப் பார்க்காமல்!

“”சீக்கிரமா எழுந்து எண்ணெய் தேய்ச்சி தலைக்குக் குளிச்சிடு., கழனிக்குப் போவணும்” களை வெட்ற வேலை இருக்கு. ஆளுங்க வந்துடுவாங்க…” காலையில் எழுந்தவுடன் அம்மா என்னை விரட்டு விரட்டு என்று விரட்டினாள். வாரம் தவறினாலும் தவறலாம். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது மட்டும் தவறவே கூடாது. அதை வைத்தே அன்று சனிக்கிழமை என்று தெரிந்து கொள்ளலாம்.

“”போம்மா உனக்கு வேறு வேலையில்லே” என்று நான் ஓடுவேன். அவளும் என் பின்னாலேயே ஓடி வந்து ஒரு கைப்பிடி அளவுக்கு நல்லெண்ணெய்யைக் கையில் ஊற்றி என் தலையில் தேய்ப்பாள். நன்றாக ஊறட்டும் என்பாள். குளியல் அறைக்குள் போய் நான் அங்கிருக்கும் மனையில் உட்கார்வதோடு சரி. அவளே சீயக்காய் போட்டுத் தேய்த்துக் குளிப்பாட்டிவிடுவாள். தலையை வேண்டுமென்றே ஓர் உதறு உதறுவேன். சீயக்காய் எல்லாம் அவள் புடவையில் பட்டுவிடும்.

“”என்னடா இது… நீ இன்னும் சின்னக் குழந்தையா? இதென்ன விளையாட்டு” என்று செல்லமாக என் குறும்புகளை கரும்பாக ரசித்தபடி தலையில் இடிப்பாள். அன்று காலை உணவாக வெறும் ரசம் சாதம்தான். தொட்டுக் கொள்ள நெய் கலந்த கடைந்த பருப்பு. தேவாமிர்தமாக இருக்கும்.

சாப்பிட்டுவிட்டு சீக்கிரமாகக் கிளம்பிப் போனோம். களை வெட்ட ஆள் வரவில்லை. ஈரம் போய்விட்டால் நாளை வெட்ட கடினமாக இருக்கும். அன்று பக்கத்தில் வெட்டிக் கதை பேசிக் கொண்டிருந்த இரண்டு பெண்களைக் கூப்பிட்டு வைத்துக் கொண்டு இவளும் களை வெட்டினாள்.

“”கண்ணூ… இங்கே வெய்யிலா இருக்கு… ஷெட்டில போய் இருந்துக்கோ” என்றாள் என்னைப் பார்த்து. நான் மறுத்துவிட்டதோடு “”எனக்கும் ஒரு களைவெட்டி கொடு,. நானும் கொத்துகிறேன்” என்று அடம் பிடித்தேன். கொடுத்தாள்.

“”அய்யா… இது என்ன? களையைக் கொத்தச் சொன்னா கடலைச் செடியைக் கொத்தறே? உங்கப்பாரு பார்த்தா கண்ணுல தண்ணீ வந்துடும். செடிங்க ஒவ்வொண்ணையும் எண்ணி வச்சிருப்பாரு மனுஷன்…. போ… போ… நீ வெட்டினது போதும்”

களைவெட்டிக்குக் கூட என் மீது கடுப்பு என்றபோது நானும் அதன் மீது கடுப்பாகித்தான் போனேன்.

இந்த வேகாத வெய்யில்ல குழந்தைய ஏன் கூட்டிட்டுப் போனே என்று அப்பா அம்மாவிடம் கோபிப்பார். வளமான நிலம் போல அவருடைய பாசம்.

“”டேய் ராஜா நேத்து கழனிக்குப் போனியே… கடலைச் செடி நல்ல வளர்ந்திருக்கா.. பிஞ்சி விட்டுருக்குமே… பார்த்தியா?” நான் அவரையே பார்ப்பேன்.

“”நாளைக்குப் போவே இல்ல… பார்த்துட்டு வா… எப்படிப் பார்க்கணும் தெரியுமா? ஒரு செடியை எல்லா இணுக்கோடும் சேர்த்து இடதுகையால் பிடிச்சிக்கிட்டு வலது கையால் சுத்தியிருக்கிற மண்ணை கொஞ்சகொஞ்சமா பக்குவமாக் கிளறி எத்தனைப் பிஞ்சுகள் இருக்குன்னு எண்ணிப் பார்த்துட்டு மறுபடியும் மண்ணைச் சேர்த்து நல்ல மூடிடணும். இணுக்குகளை முன்னே இருந்தா மாதிரி நல்லாக் கலைச்சி விடணும் சரியா ”

“”சரிப்பா, நீங்க அந்த மாதிரிப் பண்ணினதைப் பார்த்திருக்கேன்… எனக்குத் தெரியும் ” என்பேன்.

காய் முற்றிவிடும். செடிகளைப் பிடுங்கினால் அந்த இடம் நன்றாகத் தெரியும் என்பதால் செடியை ஓர் ஆட்டு ஆட்டுவது குடுமியைப் பிடித்து ஆட்டுவதைப் போல. ஆட்டம் கண்டவுடன் அடியில் இருக்கும் வேர்க்கடலைகளைப் பறித்துக் கொண்டு மீண்டும் செடியை அழுத்தி மண்ணால் மூடிவிடுவேன். பத்துப் பதினைந்து செடிகள் ஆங்காங்கே இப்படி ஒரே நேரத்தில் ஆட்டம் கண்டுவிடும் அடிக்கடி. எல்லாம் கூடப் படிக்கின்ற நண்பர்களுக்காகத்தான்.

அப்பாவிடம் கேட்பேன்.

“”அப்பா! நம்ம கழனியிலே மட்டும் எல்லாமே நல்லா வெளையறது. பெரியப்பாவோடது மட்டும் ஏன் நல்லால்லே?”

“”எருவைச் சரியாப் போட்டாத்தானே?”

“”ஏன் போடலே?”

“”பாவம்டா… உன் பெரீப்பா… ரொம்பக் கஷ்டம்… என்ன பண்ணுவார்?”

“”நமக்கு எவ்வளவுப்பா கெடைக்கும்?”

“”ஒரு நாப்பது அம்பது மூட்டை”

“”பெரீப்பாவுக்கு?”

“”இருபது முப்பது மூட்டை கூடத் தேறாது”

ஊரோடு இருந்த என் பெரியப்பாவின் கழனியையும் அதன் விளைச்சலையும் நினைக்கும்போது எனக்குச் சங்கடமாக இருக்கும்.

“”என்னடா ராஜா… என்னாச்சி உனக்கு?”

“”பாவம்ப்பா பெரீப்பா… ரொம்ப நல்லவர்ப்பா… நம்ம பங்கிலிருந்து நாம அவருக்குக் கொஞ்சம்…”

“”சரிடா கண்ணூ…. குடுத்துட்டாப் போச்சி”

அப்பா என்னை அரவணைத்துச் சொல்லும்போது, அவர் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்க்கும்.

பெரியப்பா என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். பெரியம்மாவுக்கும் என் மீது அளவு கடந்த பாசம். சாப்பிடுவது மட்டும்தான் என் வீட்டில். மற்றபடி இரவில் தூங்குவது எல்லாம் அவர்களோடுதான். பெரியப்பா நிறைய கதைகள் சொல்வார். ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன்கதை எல்லாமே அவர் சொன்னதுதான் எனக்கு.

நினைவுகள் நீண்டு கொண்டே சென்றன.

அதோ கந்தசாமி வந்துவிட்டார்.

“”ரொம்ப நேரமா காத்துக்கிட்டு இருக்கீங்களா? வழியில ஒரு வேலை. அதைப் பார்த்துட்டு வர்றதுக்குள்ளாற ரொம்ப நாழியாயிடுத்து… மன்னிக்கணும்… என்ன நெலத்தை அப்படி வச்ச கண் வாங்காம பார்க்குறீங்க… உங்க அப்பார் கையில் இருந்த வரைக்கும் என்னமா வெளஞ்சது. அப்படிப்பட்ட வெளைச்சல் அதுக்குப் பிறகு இல்லவே இல்லே… அவரு மனசுப்படியே மகசூலும் வாரிக் கொட்டும். அவர் கைப்பக்குவம் அப்படி. அவர் எதைப் போட்டாலும் பொன்னா வெளையும். பொன் வெளையுற பூமின்னு சொல்வாங்களே அதை அவரைப் பார்த்துத்தான் தெரிஞ்சிக்கிட்டேன். இப்ப இது வெறும் மண்ணுதான். பொன்னில்லே… இது கூட இன்னும் ரெண்டு வாரத்திலே கைமாறிப் போகப் போகுது…”

“”என்ன சொல்றீங்க பெரியவரே?”

“”பக்கத்தில இருக்கிற பத்து ஏக்கர் நிலத்தோடே இந்த நிலங்களையும் பக்கிரிசாமி வாங்கிக்கிறான். ஏதோ தோல் கம்பெனி வரப் போகுதாம்”

கந்தசாமி சொல்லும்போதே எனக்குக் கதி கலங்கிற்று. நிலம் எனதில்லை என்றாலும் மனதை

என்னவோ பிசைந்தது. மூளையின் ஒரு மூலையில் ஓங்கி ஒரு குரல் ஒலித்தது. அன்று மட்டும் நிலத்தை விற்காமல் இருந்திருந்தால் இந்நேரம் அவை இப்படியா புல்பூண்டு வளர்ந்து மண்டிக் கிடக்கும்? வரப்பு வாய்க்கால் எதுவும் தெரியாமல்”

நான் எங்கே விற்றேன்? கூடப் பிறந்தவன் சொன்ன ஒரு சொல் விற்க வேண்டியதாயிற்று. இத்தனைக்கும் நிலத்தில் என்ன விளைகிறது? எத்தனை விளைகிறது? என்று ஒருநாளும் கேட்டதில்லை. அவனே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ளட்டும் என்றிருந்தபோது, திடீரென்று ஒருநாள் அவன், “”நீ வந்து உன் நிலத்தை வித்து எடுத்துக்கிட்டுப் போ. உன்னால எனக்கு நஷ்டமாகிறது” என்று சொல்ல மனம் பொறுக்காமல் தானே அடிமாட்டு விலைக்கு விற்க நேரிட்டது.

கந்தசாமி நிலத்தை விற்றுவிட்டால், அப்புறம் இந்த நிலம் இருந்த இடத்தில் கட்டடங்களும், தோல் கம்பெனியின் நாற்றமடிக்கும் கழிவுகளும்… அய்யோ… அதற்கு மேல் நினைத்துப் பார்க்க முடியவில்லை. கந்தசாமியிடம் சொன்னேன்:

“”பக்கிரிக்கு அவசரப்பட்டு நிலத்தைக் கொடுத்துடாதீங்க. ரெண்டு நாள் கழிச்சு நான் வர்றேன். நான் வந்ததுக்கப்புறம் எந்தக் காரியம்னாலும் செய்ங்க”

கந்தசாமியிடம் சொல்லிவிட்டேனே தவிர, நிலத்தைத் திரும்பவும் என்னால் வாங்க முடியுமா? பழையபடி பயிர் செய்ய முடியுமா? மகன் நிலத்தைத் திரும்பவும் வாங்க ஒத்துக் கொள்வானா?

அன்றிரவே கிராமத்தைவிட்டுச் சென்னைக்குக் கிளம்பினேன். வழியெல்லாம் நிலத்தைப் பற்றியே எண்ணங்கள் ஓடின. என் தந்தையும் தாயும் பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா, சித்தி எல்லாரும் அந்த நிலத்தில் மகிழ்ந்து குலாவி அந்த நிலத்தில் பயிர் விளைவித்தது மனத்திரையில் படங்களாய் வந்து வந்து கண் சிமிட்டின.

மனைவி மக்களிடம் கூறினேன். பிள்ளைகள் சிரித்தார்கள்.

“”என்னப்பா இது… பைத்தியக்காரத்தனமா இருக்கு. நம்ம கையை விட்டுப் போயாச்சி. அதுக்கப்புறம் அதை யார் விற்றா என்ன? யார் வாங்கினா என்ன? அதிலே தோல் கம்பெனிதான் வரட்டும்… வேறு ஏதாவதுதான் வரட்டும்… விடுவீங்களா? அதையே நினைச்சி இப்படிப் புலம்புறீங்க?”

இருந்தாலும் மனம் கிடந்து தவியாய்த் தவித்தது.

“”டேய் ராஜா… மத்தவங்க மாதிரியெல்லாம் நான் சொல்ல மாட்டேன். நிலத்தை விக்காதே… அப்படி இப்படின்னு…. உனக்கு எப்படிச் செüகரியமோ அப்படிச் செய்… விப்பியோ அப்படியே வச்சிருப்பியோ… அது உன் பாடு”

அப்பா இப்படித்தான் அடிக்கடி சொல்வார். என்ன இருந்தாலும் அதை நான் விற்றிருக்கக் கூடாது. தப்பு பண்ணிட்டேன். அது வெறும் மண் இல்லே… என் தாய் முகத்தையும் தந்தை முகத்தையும் அவர்களுடைய சந்தோஷத்தையும் பிரதிபலிக்கிற கண்ணாடி… அதைப் போட்டு உடைச்சிட்டேன்.

இரவு நேரங்களில் கழனியில் காவல் இருந்தது, கடலைக் கொடி போட்டு வேர்க்கடலை சுட்டுச் சாப்பிட்டது, துவரை, காராமணி, பயிறு வகைகளை வேக வைத்துச் சாப்பிட்டது, சேற்றில் விழுந்தது, தொட்டியில் குதித்தது, எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக வந்து வந்து சென்றன. கிராமத்திலிருந்து வந்தது முதல் சரியாகப் பசிக்கவில்லை. தூக்கம் பிடிக்கவில்லை. எதையோ இழந்ததைப் போல பரிதவித்தது பாழும் மனம்.

இரண்டு நாள் ஆகிவிட்டது.

“”அப்பா… நாளைக்குக் காலையில நானும் வர்றேன். கிராமத்துக்கு ரெண்டு பேரும் போறோம்”

மகன் சொன்னது எது எதுவும் என் காதில் விழவில்லை. என்னைப் பிடித்து உலுக்கினான் மகன்.

“” ஊ…ம்… என்ன சொன்னே?”

“”சரியாப் போச்சி… நீங்க எங்கே இருக்கீங்க? நாளை காலைல மறுபடியும் கிராமத்துக்குப் போறோம். என்ன சரியா”

எதற்கு என்று தெரியவில்லை. இருந்தாலும் சொன்னேன்:

“”சரிப்பா….”

மறுநாள் கந்தசாமியைப் பார்த்து என் மகன் அவரிடம் பேசியதைக் கேட்டபோது ஒரு கணம் நான் அதிர்ச்சியானேன்.

“”ஆமாம் தாத்தா, இந்த நிலத்தை எல்லாம் நீங்க மறுபடியும் எங்களுக்கே கொடுத்திடுங்க… இது எங்க தாத்தாவோட நினைவா எங்களிடமே இருக்கணும்னு ஆசைப்படுறோம் நாங்க… ”

“”அப்பா… இப்ப சந்தோஷமா?”

என் பிள்ளை என்னைப் பார்த்தான். அவனுடைய முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

புல் பூண்டுகள் மண்டிக் கிடந்த அந்த நிலங்கள் எல்லாம் உடனே பச்சைப் பசுஞ்சோலையாய் என் கண்முன்னே விரியத் தொடங்கின.

கண்கள் பனித்தன. நா தழுதழுத்தது. என் கைகள் என் பிள்ளையின் கைகளுக்குள் அடங்கிப் போயின.

– செப்டம்பர் 2013

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி நடத்திய சிறுகதைப் போட்டிக்கு வந்த கதைகளில் பிரசுரிக்கத் தேர்ந்தெடுக்கப்பட்ட கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *