கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: August 2, 2013
பார்வையிட்டோர்: 15,627 
 
 

காலையில் பெயரிடப் படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்தவுடன் புருவத்தை சுழித்து யாருடைய எண் என்று மூலை ஒரு பக்கம் சிந்திக்க தொடங்கிவிட்டது.. யாராக இருக்கும் என்று சில மணி துளிகள் மனதிற்குள்ளேயே ஒருசிறிய வடிகட்டியை போட்டு துழாவ ஆரம்பித்தேன்… செல்பேசியின் ரிங்டோனாக வைத்திருந்த “ஹௌ டு நேம் இட்” நெடுநேரமாக ஒலித்து கொண்டே இருந்தது..

பொதுவாக இது போன்று காலையிலேயே ஒரு அழைப்பு என்றால் அலுவலகத்தில் ஏதோ அவசர வேலை என்று அர்த்தம்… ஆனால் நேற்று இரவு 11 மணி வரை இருந்து விட்டு முடிக்க வேண்டிய எல்லா காரியங்களும் முடித்தாயிற்று… நிச்சயம் அலுவலகத்திலிருந்து இருக்காது… கடைசியில், எடுத்து தான் பார்ப்போமே என்று எடுத்தேன்…

மறு முனையில், “டே மணி..” என்று பதில் வந்தது… குரலை வைத்தே யார் என்று ஊகிக்க முடியாத, சமீபத்தில் இந்த குரலை கேட்ட வாறும் இல்லாததால், “யாரு??” என்றேன் தயக்கத்துடன்… “நான் தான் டா பாசித் பேசுறன்..” எனக்கு ஒரு நிமிடம் இருப்பு கொள்ளவில்லை… ஒரு நிமிடம் பால்ய நினைவுகளுக்கு போய் திரும்பி வந்தேன்…

நாகப்பட்டினத்தில் ஒன்பதாவது வரை படித்த காலம் என்றும் என் நினைவில் அழகான ஒரு பிம்பமாகவே உள்ளது… நிதானத்துக்கு வந்து, “டே பாசித்… எப்டிடா இருக்க??..” என்று முகம் மலர என்னையும் அறியாமலே உரக்க நலம் விசாரித்து கொண்டிருந்தேன்…

பக்கத்தில் இருந்த என் அறை நண்பன் சட்டென்று நான் போட்ட கூச்சலில் துயில் கலைந்து,”டே பரதேசி, ஏண்டா கத்தி தொலையர, வெளிய போய் பேசு..” என்று எரிந்து விழுந்தான்..

நான் போர்வையை உதறி வெளியே வந்தேன்.. கீழே சிந்திய தண்ணீர் சுட்டெறிக்கும் வெயிலில் மாயமாய் மறைவது போல, என்னுள் இருந்த தூக்க கலக்கம் விலகியது… நலம் விசாரிப்புகளுக்கு அடுத்து, ஊர் கதை, நண்பர்கள் பற்றிய உரையாடல் என்று பேச்சு சற்று நீண்டது…

எதேச்சையாக அவனிடம்,”எந்த கம்பெனி..?” என்று கேட்டு விட்டேன்…

அவன் குரல் தொங்கி போனது என்னால் ஊகிக்க முடிந்தது…

“இன்னும் கிடைக்கலடா… படிச்ச காலேஜ் அப்படி… ஏதாவது கிடைக்குமானு பாக்க தான் அடுத்த வாரம் பெங்களூர் வரலாம்னு இருக்கேன்…” என்றான்…

அவன் நாகப்பட்டினத்தில் ஒரு சராசரியான கல்லூரியில் படித்தது நினைவுக்கு வந்தது… நன்றாக மார்க் வைத்திருந்தும் குடும்ப சூழ் நிலை காரணமாக அவன் அங்கேயே படிக்க நேர்ந்ததை பற்றி அவனே ஒரு முறை நான் கல்லூரி படிக்கும் போது கூறி இருக்கிறான்.. அதன் பிறகு இப்போது தான் யாரிடமோ என் செல்பேசி எண்ணை வாங்கி என்னை தொடர்பு கொண்டிருக்கிறான்…

நான் அவனிடம்,”ஓ சூபர்ப்… வாடா பாத்துக்கலாம், என் கம்பெனியிலும் கேட்டு பாக்குறன், முதல உன் ரெஸ்யூம அனுப்பு…” என்றேன்..

இது போன்று உற்சாகமாக சந்தோஷத்துடன், எந்த வித பொய் சிரிப்பும் இல்லாமல் பேசியே ரொம்ப நாள் ஆகி விட்டது… பெங்களுரில் ஒரு தனியார் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பிறகு பல நண்பர்களிடமிருந்து தொடர்பை துண்டிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது… கல்லூரியில் படித்த நண்பர்கள் யாராவது செல்பேசியில் அழைத்தாலும், பேசுவதற்கு ஒன்றுமில்லையே இவன் எதற்கு இப்போது அழைக்கிறான் என்ற மன நிலையையே உருவானது…

ஒரு நாளில் கட்டாயம் 12 மணி நேரமாவது கணிணி முன்பு உட்கார்ந்து வேலை செய்ய வேண்டும் என்பது என் தலை விதியாகி விட்டது.. அலுவலக நேரத்தின் போது செல் பேசியில் நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தாலும், 10 நிமிடம் கழித்து மேனஜரே வந்து தோலை தட்டி,”கோ பேக் டு வர்க் மேன், டுடே டெலிவரபுல், யு நோ தட் ரைட்..??” என்று எச்சரிக்கை விடுவார்…

அப்பாவே ஒரு முறை “துரை வேலைக்கு போக ஆரம்பிச்சதுலேர்நது நம்மல கண்டுக்கவே மாட்டேங்குறீங்களே…” என்று நக்கல் அடிப்பார்..

அன்று முழுவதும், அப்துல் பாசித்தின் நினைவாகவே இருந்தது… அவன் வந்து ஒரு வார காலமாவது தங்குவான் என ஊகித்திருந்தேன்.. இன்றே மேனேஜரிடம் விடுப்பு பற்றி பேச வேண்டும்… இரண்டு நாட்களாவது விடுப்பு கேட்க வேண்டும்… நண்பன் வருகிறான் என்று ஆரம்பித்தால் உடனே எகிறி விடுவார்.. அதனால் வேறு என்ன சொல்லலாம் என்று குளிக்கும் போதும் காலை உணவு சாப்பிடும் போதும் யோசித்து கொண்டே இருந்தேன்… திடீரென்று போன வாரம் வேலையிலிருந்து தூக்க பட்ட மணிகண்டனின் ஞாபகம் வந்தது…

தொடர்ந்து பல முறை விடுப்பு எடுத்து கொண்டிருந்ததால், அவனுடைய மேனேஜர் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.. அந்த எச்சரிக்கைக்கு பின்பு இரண்டு நாள் வயிற்று போக்கு காரணமாக அலுவலகத்திற்கு அறிவிக்காமலே விடுப்பு எடுத்து விட்டான்… அந்த இரண்டு நாட்கள் அவனுக்கு வேலை ஒன்றும் இல்லை என்பதால் அவனும் தகவலை தெரிவிப்பதற்கு
சிரமபடவில்லை… விடுப்பு முடிந்து வந்தவுடன், அவன் ஒரு மாத கால கண்காணிப்புக்கு தள்ளபட்டான்… மேனேஜரை சற்று முறைத்து கொண்டதால், 15ஆவது நாளே அவன் வேலையிலிருந்து தூக்க பட்டான்…

போகும் போது என்னிடம் மிகுந்த மன விரக்தியில்,”தேவுடியா பசங்க, உடம்பு சரி இல்லேன்னு தானடா லீவ் போட்டேன்… எவ்ளோ செஞ்சிருப்பன் இந்த பிராஜக்ட்ல… ஐ ஈவன் வர்க்ட் ஆன் சாடர்டேஸ் அண்ட் சண்டேஸ்… முதல்ல வெள்ளகாரனுக்கு அடிமை இப்போ இவனுங்களுக்கு…”

நான் “விடுடா இந்த கம்பெனி இல்லனா இன்னொன்னு” என்றேன்…

அவன் “வேண்டாம் பா சாமி, அமெரிக்கா காரனுக்கு குண்டி கழுவி விட்டது போதும்… கோயம்பத்தூர்லயே ஏதாவது ஸ்டார்ட் அப் ஒன்னு ஆரம்பிக்கலாம்னு இருக்கன்… கொஞ்சம் பணம் தேவ படுது, புரட்டிட்டு யோசிக்கனும்…” என்றான்…

எனக்கு அவன் உணர்ச்சி வசப்பட்டு பேசி இருந்தாலும் அவன் சொன்னதில் எதுவுமே தப்பாக தோன்றவில்லை… நாவாழும் ஊரிலேயே ஆயிரெத்தெட்டு பிரச்சனைகள், எதை பற்றியும் கவலை இல்லாமல், ஏ.சி அறையில் கணிணி முன்பு உட்கார்ந்து ஏதோ ஒரு அமெரிக்க பல் பொருள் அங்காடிக்கு அடுத்த மாதம் என்ன செலவாகும், அவர்களின் வியாபாரத்தை எப்படி உயர்த்தலாம் என மண்டையை போட்டு பிசைந்தெடுக்கும் பிழைப்பு எதற்கு என்று தோன்றியது… ஆனால் அவன் கொடுக்கும் பிச்சையில் வாழும் என் போன்ற லட்சக்கணக்கான இளைஞர்கள் இப்படி யோசிப்பதே என் அமெரிக்க முதலாளிக்கு பிடிக்காது…

ஒரு வாரம் கழிந்தது… அப்துல் பாசித் என் அறைக்குள் கால் எடுத்து வைத்ததும் மூக்கை பொத்தி முகத்தை சுழித்தவாறே,”என்னடா ஒரே சிகரெட் நாத்தம்…” என்று வினவினான்…

“நான் எப்போவாவது தான் டா குடிப்பன்… ரூம் மேட்ஸ் டைலி அடிப்பானுங்க… தினம் ஒரு பாக்கெட் காலி பன்னா தான் அவனுங்களுக்கு ஒரு ரிலீஃப்… ஆஃபிஸ் டென்ஷன கொஞ்சம் குறைய..” என்று மழுப்பினேன்..

அவனால் அதை நம்பவே முடியவில்லை. எதற்கு டென்ஷன் குறைய சிகரெட் குடிக்க வேண்டும் போன்ற கேள்விகள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்… பாசித் சின்ன வயதிலிருந்தே அறை ஒழுங்கை கடை பிடித்து வருபவன்… அதெல்லாம் அவன் பெரியவனானதும் அந்த ஒழுங்கு எல்லாம் மறைந்திருக்கும் என்று நினைத்தேன்… அவனிடம் இன்றும் அந்த ஒழுங்கின் முகமும் தன்மையும் மறையவில்லை…

என் ரூம் மேட்டிடம்,”டே மை ஸ்கூல் ஃப்ரெண்ட், பாசித்…” என்று அறிமுகம் செய்து வைத்தேன்…. அவன் முகத்தை உர்ரென்று வைத்து கொண்டே,”ஹாய்” என்றான்… நாளுக்கு நாள் அவன் முக அமைப்பே அது போன்று உர்ரென்று மாறி வருவதை நான் கவனித்து வந்தேன்… மீறி அவன் வாயிலிருந்து புன்னகை வந்தாலும் அதற்கு நான் கொடுத்து வர வழைக்க வேண்டும்… அப்படி வந்தாலும் அவன் பழக்க படுத்தி வைத்திருந்த ஒரு பொய்யான சிரிப்பையே பதிலளிப்பான்… அவன் பாசித் வந்து தங்குவதற்கே ஒத்துக் கொள்ளவில்லை…

அவன்,”டே நானெல்லாம் நான்பிராமின்ஸ் வீட்டுக்கு கூட போக மாட்டன்… இப்ப வர போர உன் ஃப்ரெண்ட் முஸ்லீம் வேற…. எல்லாம் இங்க வந்து மாறிடுச்சு…. சரியா ரெண்டு நாள் தான்… உன் ரூம்லயே படுக்க வெக்ச்சுக்க… என் பிரைவஸிக்கு எதுவும் எடஞ்சல் வர கூடாது…” என்று ஒருவாறாக சம்மதித்தான்…

எனக்கு ஆச்சரியமாக இருந்தது… என்ன தான் பன்னாட்டு நிருவனம், கை நிறைய சம்பளம், மாடர்ன் என்று வந்தாலும் மனிதர்களுக்கு உள் மனதில ஜாதி மதம் பார்க்கும் தன்மை, நம் நாடு எவ்வளவு நாகரீகமாக மாறினாலும் அழியாது என்று தோன்றியது…

பாசித் முதலில் குளித்து முடித்ததும், நான் குளிக்க சென்றேன்… குளித்து முடித்து வெளியே வந்து பார்த்ததும் அறையே மாறி இருந்தது… என்றுமே திறக்கப்படாத அந்த அறையின் ஜன்னல் திறக்கபட்டது… கண்கள் கூசும் அளவுக்கு வெளிச்சம்… பாசித் தான் திறந்து வைத்திருக்க வேண்டும்…

அவர்கள் இருவரும் சிறு வயது ஞாபகங்களை பறிமாறி கொண்டே வெளியே கிளம்பி கொண்டிருந்தனர்… பேச்சு வாக்கில் நான்,”வாப்பா எப்படி இருக்காங்க?” என்றேன்…

அந்த கேள்வியை கேட்டிருக்க கூடாது என்று கேட்ட உடன் தான் தெரிந்து கொண்டேன்…

அவன் “வாப்பா இறந்து போய் ஒரு வருஷத்துக்கு மேலே ஆக போவுது…” என்றான்…

நான்,”சாரி…” என்றேன் ஏதோ ஒரு உந்துதல் என்னை அவனிடம்,”எப்டிடா…?” என்று கேட்க வைத்து விட்டது… அவன்,”இந்த காலத்துல ஒரு மீன் பிடிக்குறவன் செத்து போறான்னா ரெண்டே விஷயத்துனால தான், ஒன்னு காசில்லாம, இல்லனா ஸ்ரீலங்கா காரன் சுட்டு கொன்னுட்டான்… எங்கப்பா ரெண்டாவது கேஸு…” கேட்டவுடன் தூக்கி போட்டது…

எவ்வளவோ முறை செய்திகளிலும், செவி வழியாகவும் மீனவர்களின் பிரச்சனையை கேட்டிருக்கிறேன்… அதெல்லாம் வெறும் புள்ளி விவரங்களாகவே என் மன கண்ணுக்கு பட்டது… ஆனால் இப்போது நான் சிறு வயதில் என்னை எப்போது பார்த்தாலும் நலம் விசாரித்து, ‘நல்லா படிக்கனும்’ என்று ஒரு சொல்லி ஏதாவது திண்ண கொடுக்கும் நைனா மரைக்கார் அவர்கள் இதே போன்ற ஒரு சம்பவத்தால் இறந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை தந்தது…

அந்த பேச்சை அப்படியே துண்டித்து விட்டு, அவன் போக வேண்டிய கம்பெனியின் பெயரையும் அது இருக்கும் இடத்தையும் தெரிந்து கொண்டு பேருந்து நிலையத்துக்கு வந்தோம்.. ஏ.ஸி வோல்வோ பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும், அவன் “லோகல் பஸ்லலாம் ஏஸி வந்துடுச்சா..” என்று ஏதோ ஓர் அதியசத்தை பார்த்தவாறு கேட்டான்…

பஸ் டிக்கட் எடுத்தேன்… எவ்வளவு என்று கேட்டான்… “ரெண்டு பேருக்கும் சேத்து நூத்தி இருபது” என்றேன்… அவன் வாயை உண்மையாகவே பிளந்தவாறு, “எதுக்கு டா இவ்வளவு…? நான் திருச்சிக்கே போயிட்டு வந்துருவன்…” என்றான்… நான் சிரித்தேன்…

ஏதோ யோசித்து கொண்டிருந்த அவன்,”டே வரும் பொது நான் டிக்கட் எடுக்குறேன்..” என்றான்..

நான் “அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நீ என் ஊருக்கு வந்திருக்க… நான் பாத்துக்குறன்…” என்றேன்… நீண்ட நாள் கழித்து ஒரு உண்மையான மகிழ்ச்சி என்னிடம் தோன்றி மறைந்தது… அவன் ஏதோ குற்ற உணர்ச்சியில் அமர்ந்திருப்பவனாக உட்கார்ந்திருந்தான்…

ஏதாவது பேச்சை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைக்க அவனிடம் சினிமா, பெண்கள், சமூக பிரச்சனைகள் என்று அவனை ஓரளவுக்கு என்னால் இயன்றவரை இயல்பாக ஆக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன்… நாங்கள் போக வேண்டிய இடம் வந்ததும், இறங்கி அவன் செல்ல வேண்டிய கம்பெனிக்கு சென்று வருவதாக சொல்லி சென்றான்… என் வண்டி ஓட்டும் லைஸன்ஸை வைத்து ஒரு விஸிட்டர் கார்டை வாங்கி ஊள்ளே சென்றான்… நான் வெளியே நின்று எதிரில் இருந்த பொட்டி கடைக்கு சென்று ஒரு சிகரெட் வாங்கி ஊதி கொண்டிருந்தேன்….

வெயில் அப்போது தான் தன் முழு வெப்பத்தையும் வெளி தள்ளி கொண்டிருந்தது… என் சட்டை வேர்வையால் உடலோடு ஒட்டி கொண்டது.. காதுகளின் ஓரத்தில் வேர்வை அதன் தடத்தை பதித்து கொண்டிருந்தது… எங்கு காணினும் மக்கள், யாரும் யார் முகத்தையும் பார்த்து விட கூடாது என்பது போல்… கார்கள், பைக்குகள் என அனைத்தும் ரேஸிற்கு செல்வது போன்ற ஒரு வேகம்…

நான் காத்துகொண்டிருந்த கம்பெனிக்கு அருகாமையிலேயே, ஒரு மரத்தின் கீழே பல பொம்மைகளை வைத்து கொண்டு ஒரு வடக்கிந்திய குடும்பம் அமர்ந்திருந்தது… அப்பா, அம்மா மற்றும் குழந்தை… அவர்களை கடந்து எவ்வளவோ பேர் சிரித்து கொண்டும், சிகரெட்டை ஊதி கொண்டும் கோட்டு சூட்டுடனோ, உள்ளங்கையும் முகமும் மட்டும் தெரியும் அளவுக்கு உள்ள ஃபார்மல் சூட்டுடனோ செல்கின்றனர்… யாரை நம்பி இந்த குடும்பம் கடை போட்டிருக்கிறது… அங்கு செல்லும் மனிதர்கள் மற்ற மனிதர்களையே பார்த்து சிரிப்பவர்கள் கிடையாது… இந்த கொதிக்கும் வெயிலில் அங்கு வைக்க பட்டிருக்கும் மயில் பொம்மையையோ, கிருஷ்ணர் பொம்மையையோவா பார்த்து வாங்க போகிறார்கள்??…

பாசித் வெளியில் வந்து கிளம்பலாமா என்பது போல் சைகை காட்டி அழைத்தான்…. “இப்போ எதுவும் ரெக்ரூட்மண்ட் நடக்காதாம் அடுத்த மாசம் வர சொல்றான்”.

“ரெஸ்யூம் ஏற்கனவே கொடுத்து வெச்சிருந்தீயா..??” என்று கேட்டேன்…

“ஏற்கனவே மெயில்ல அனுப்பி இருந்தன்… நேரா வந்து பாத்தா கொஞ்சம் நல்லா இருக்கும்னு தோனுச்சு…” வேலை தேடி கம்பெனி கம்பெனியாக அலைந்த காலம் எல்லாம் போய் விட்டது… மெயில் அனுப்பி தகவல் கிடைத்ததும் வந்தால் போதும் இன்றைய நிலைமை மாறிய போதும், பல நிறுவனங்கள் கல்லூரியை வைத்தே பலரின் வேலை கோரிக்கையை நிராகரித்து விடுகிறது… அதனால் தான் பாசித் இப்படி நேரடியாக கம்பெனி கம்பெனியாக அலைந்து கொண்டிருக்கிறான்…

“உண்மையிலேயே என் காலெஜ்ல ரொம்ப நல்லா படிக்குற பசங்க நிறைய பேரு இருக்காங்க… அவங்களுக்கெல்லாம் ஒரு சான்ஸ் கூட கிடைக்க மாட்டேங்குது…” என்று ஆதங்கபட்டான்…

“சென்னையில இருக்குறவங்க எல்லாருக்குமே எப்படியாவது வேல கிடச்சிடுது… எந்த காலேஜா இருந்தாலும் சரி, அதுவே நம்ம ஊரு மாதிரியோ, திருநெல்வேலி, தூத்துக்குடி மாதிரி சௌத் சைட்லாம் இவனுங்க வர மாட்டேங்குறானுவோ.. வந்தாலும் 2000 பேர் எழுதுற டெஸ்ட் ல 100 பேர் எடுக்குறானுவோ….” அவன் சொல்வதில் ஒரு பாதி உண்மையாக தான் எனக்கும் பட்டது…

நான் ஓரளவுக்கு நல்ல கல்லூரியில் படித்ததால் எனக்கு இங்கே வேலை… என் கல்லூரியில் அடி மட்ட மார்க் வாங்கிய ஒருவன் கூட மிக எளிதாக ஒரு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டான்.. அந்த நிறுவனம் கூலி வேலைக்கு ஆள் எடுப்பது போல் வண்டி வண்டியாக ஆட்களை எடுக்கும் பழக்கம் உள்ளது… பாசித் போன்றவர்கள் என்ன தான் சுமாரான கல்லூரியில் படித்தாலும், நல்ல மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றாலும் இப்படித்தான் அலைய வேண்டி இருக்கிறது…

வேறு சில நிறுவனங்களுக்கும் சென்று வந்தோம்… பேருந்தில் பயணம் செய்யும் போது ஒரு பல் பொருள் அங்காடியின் அருகில் இருந்த ஒரு கடையில் பெண்கள் சிகரெட் பிடிப்பதை கண்டான்…

“என்னடா இது..!!” என்றான்… “ஏண்டா, பொண்ணுங்க தம் அடிக்குறாங்க… இதுல என்ன இருக்கு…” என்றேன்… அவன் “அடப்பாவி அது எப்படிடா இப்படி நடு ரோட்டுல..? எல்லாரும் பாக்குறாங்கனு அவங்களுக்கு தோனாது…?” என்றான்… நான் அவனிடம் கொஞ்சம் உணர்ச்சிபிரவாகமாக, “அப்போ ஆம்பளைங்களும் அப்படி நினைக்கனும்ல…” என்றேன்…

எங்கே நான் ஆண் – பெண் சம உரிமை பற்றி எல்லாம் பேச ஆரம்பித்து விடுவேனோ என்று அவனுக்கு பயம் விட்டது போல… அவன், “அப்படி இல்லடா, நான் இது மாதிரி பாத்தது இல்ல, எல்லாத்துக்கும் சம உரிம கேக்குறாங்க இதுலயும் எடுத்துக்கட்டும், யாரு வேண்டாம்னு சொன்னா…”

இரவு சாப்பாடு, தூக்கம் என்று அன்றைய தினம் கழிந்தது…

அறை நண்பர்கள் ஒன்றும் அவ்வளவு எளிதாக புதிய மனிதர்களிடம் பழக கூடியவர்கள் அல்ல… பாசித்திடம் இன்னும் மோசம்… பேரளவுக்கு சிரிப்பு கூட இல்லை… இது போன்றே அடுத்த இரண்டு நாட்கள் கழிந்தது…

பல இடங்களுக்கு அலைந்தாயிற்று.. தினமும் ஓட்டலில் சாப்பாடு… ஒவ்வொரு முறையும் நான் காசு கொடுக்கும் போதும் அவனுக்கு என்னவோ செய்திருக்க வேண்டும்… அவனுக்கும் வேறு வழி இல்லை… கையில் பணம் கம்மியாகவே வைத்திருந்தான் போல… வேலை எதுவும் உறுதியாவது போல் தெரியவில்லை…. என் அலுவலகத்திலும் எந்த பதிலும் இல்லை…

“என் எச்.ஆர் கிட்ட சொல்லி இருக்கன்… அவங்க பாத்து சொல்றேன்னு சொல்றாங்க” என்று அவனிடம் தெரியப்படுத்திகொண்டிருந்தேன்… இரண்டு நாட்கள் விடுப்பு மூன்று நாட்களாகி விட்டது… மேனேஜர் பல முறை என் செல்பேசிக்கு அழைத்து விட்டார்… அவரிடம் அடுத்த நாள் கண்டிப்பாக வருவதாக சொல்லி விட்டேன்…

அவனும் இதை கேட்டிருக்க வேண்டும்…”டே நீ நாளைக்கு ஆஃபிஸுக்கு போ… நான் பாத்துக்குறன்…” என்றான்…

எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை….

முதல் இரண்டு நாட்கள் இரவு சாப்பாடு முடிந்ததும் வீட்டிற்கு மேல் இருக்கும் மொட்டை மாடிக்கு சென்று அரட்டை அடித்து கொண்டிருந்தோம்…

முதல் நாள் இரவு விஸ்வரூபம் பற்றி பேச்சு எழுகையில்,”படம் பாத்தியா? உனக்கு ஏதாவது ஃபீல் பண்ற மாதிரி படம் இருந்துச்சா…” என்றேன் அவன் “அப்படிலாம் ஒண்ணுமில்ல, தட செஞ்ச முஸ்லீம் அமைப்பு பத்தி அவ்வளவா தெரியவே தெரியாது… இவங்களாம் இது மாதிரி ஏதாவது ஒரு பட விஷயத்துக்கு வெளிய வர்ரதுக்கு பதிலா, உண்மையிலேயே முஸ்லீம் மேல அக்கற வந்து வெளிய வந்தா நல்லா இருக்கும்… இது மாதிரி பல அமைப்புகள் தங்கள வெளி காமிச்சுக்கவும், வேற ஏதோவொரு அரசியில் கட்சியோட தூண்டுதல்னால வெளிய வர மாதிரியும் தோணுது…” என்றான்.

அந்த பதில் என்னை மிகவும் கவர்ந்தது… இது போன்று பல உரையாடல்கள் அந்த இரண்டு இரவுகளில் நடந்தது…

ஆனால் மூன்றாம் நாள் இரவு மிகவும் கனமாக இருந்தது அவனுக்கும் சரி எனக்கும் சரி…. எதுவும் பேசாமல் படுத்திருந்தோம்…

அந்த மௌனத்தை கலைப்பது போல அவன் செலபேசி அலறியது… 5 நிமிட சம்பாஷனைக்கு பிறகு செல்பேசியை வைத்தான்…

“யாருடா??” என்றேன்…

“டே நான் நாளைக்கு காலையிலேயே கிளம்புறன்… அங்க என் காலேஜ் ஜூனியர்ஸ் போராட்டம் ஆரம்பிக்க போறாங்கலாம்… பாத்தியா நம்ம ஊரு வரைக்கும் பரவிடுச்சு… நம்ம சைட்ல உள்ள பசங்க தான் முதல்ல ஆர்ம்பிச்சிருக்கனும் ஆனா பாரு லயோலா பசங்க தைரியமா வெளிய வந்து யாருக்கும் பயப்படாம ஆரம்பிச்சுட்டாங்க… என் ஜூனியர்ஸுக்கு என்ன பத்தி நல்லா தெரியும்… காலேஜ் படிக்கும் போது இந்த பிரச்சனைய பத்தி நிறையா பேசி இருக்கன்… இப்போ என்னையும் வர சொல்றானுங்க… நாளைக்கு வர முடியாட்டியும், நாளைக்கு மறு நாள் நானும் வந்து கலந்துக்கனும்னு கேக்குறானுங்க…” என்றான்…

இவனை நினைத்து பெருமைப்படுவதா இல்லை வருத்தப்படுவதா என்றே தெரியவில்லை…

காலை எழுந்ததும் அவனை பேருந்து நிலையத்தில் பஸ் ஏற்றிவிட்டதும் குளித்து விட்டு வழக்கமான சாப்பாட்டிற்கு பிறகு, வழக்கமான பாதையில், வழக்கமான சீட்டில் அமர்ந்து, வழக்கமான கணிணியை பார்த்து அதனுள் தலையை விட்டு அலசி ஆராய்ந்து என் வழக்கமான நாட்கள் மறுபடியும் தொடர ஆரம்பித்தது….

Print Friendly, PDF & Email

3 thoughts on “நவீன அடிமைகள்

  1. நாம் அடிமைகள்தான்… என்ன இந்த முறை நாம் அடிமை என்பதை முழுமையாக உணராமல் இருக்கிறோம்., நல்ல படைப்பு., வாழ்க வளமுடன்…

  2. நவீன அடிமைத்தனததை உணர்ந்துக் கொண்டதன் வெளிபாடு. நாம் இன்றும் அடிமையாக உள்ளதை உண்ர்ந்து கொண்டாலும், இதிலிருந்து வெளிவர முயற்ச்சி செய்யவில்லை என்பது உன்மை.பன்னாட்டு நிறுவனங்களில் சேர்ந்து எந்த அடிப்படை உரிமைகளையும் கேட்டுப் பெறவும், சுதந்திரமாகப் பணியாற்றமுடியாத நிலையை இக்கதை நன்கு உணர்த்துகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *