கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: September 23, 2012
பார்வையிட்டோர்: 9,199 
 
 

“க்ராப் ட்ரீ” என்றார் அந்தக் கிழவர்.

இந்த குளிர்காலச் சனிக்கிழமை, நிஜமாகவே கூடுதல் விபரீதத்தோடு விடிந்திருக்கிறது. அம்சமாக உடுத்தி, அசைந்தாடி ஜாகிங் செய்கிற இளம் வயது வெள்ளைக் காரிகள் களுக்கென்று சிரித்தபடி கடக்க, முழங்காலுக்கு மேலே உயர்த்திக் கட்டிய லுங்கியும், பச்சை கலர் முண்டா பனியனும், கையில் காலி பக்கெட்டுமாக வீட்டு வாசலில் நிற்கிறேன் நான். பக்கத்தில் மினி ஸ்கர்ட் அணிந்த உயரமான ஒரு வெள்ளைக்காரக் கிழவர், என்னைவிட அதிகம் குளிரில் நடுங்கியபடி, ‘‘க்ராப் ட்ரீ’’ என்றார். நண்டு மரம்!

ஸ்காட்லாந்துக்காரர்கள் நாகரிகமானவர்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் கிடையாது. அதுவும் தலைநகரம், முழுக்க முழுக்க கனவான்களும் சீமாட்டிகளும் நிறைந்த ஊர். ஆனால், இந்தக் கனவான்கள் பண்ணுகிற அலப்பரையைத் தாங்கவே முடியவில்லை. வெள்ளிக்கிழமை ராத்திரியானால் கூட்டம் கூட்டமாக, என் வீட்டுக்குப் பக்கத்தில் நீட்டி நிமிர்ந்து நிற்கிற மதுக் கடையில் இஷ்டமித்ர பந்துக்களோடு படியேறுவார்கள். நடுராத்திரிக்கு மேல் அங்கே பாட்டும் கூச்சலுமாக அமளிதுமளிப்படும். அந்த இரைச்சலில் தூங்கவும் பழகிவிட்டது எனக்கு.

ஆனாலும், இன்னும் புரிபடாத சமாசாரம், இவர்கள் எப்போது மதுக் கடையிலிருந்து வெளியே வருகிறார்கள் என்பது. அதைவிட முக்கியம், அப்படி வரும்போது என் வீட்டு வாசலை ஏன் கழிப்பறையாக நினைத்துக் கொள்கிறார்கள் என்பது. விடிந்ததும் வாசல் கதவைத் திறந்தால், கதவு முழுக்கச் சொதசொதவென்று நனைந்து, படியெல்லாம் ஈரமாகி, கீழே தரையில் அங்கங்கே திட்டுக் கட்டி, குப்பென்ற வாடை எட்டுத் திக்கிலும் சுற்றி அடிக்க, யாராரோ முழுமூச்சாகச் செயல்பட்டதன் விளைவாக, மொத்தமும் மூச்சா! ‘வெள்ளைக்காரனாவது, வாசல்படியிலே குத்தவைக்கிறதாவது?’ என்று யாராவது அவநம்பிக்கை தெரிவிக்க முற்பட்டால், காலி பக்கெட்டை ஓரமாக வைத்துவிட்டு, உள்ளங்கையில் கற்பூரம் ஏற்றிச் சத்தியம் செய்ய இப்பவே நான் தயார்.

தற்சமயம் ரெண்டு சிக்கல்! முதலாவது… வெளியே வரும்போது அவசரத்தில் வீட்டுச் சாவியை இடுப்பில் செருகிக் கொள்ள மறந்துபோக, என்னை வெளியே தள்ளிவிட்டுக் கதவு சமர்த்தாக அடைத்துச் சாத்திக்கொண்டு, தண்ணீர் அபிஷேகத்துக்கு முதுகைக் காட்டி நிற்கிறது. அடுத்த சங்கடம்… இந்த ‘நண்டு மரம்’ பெரிசு!

கான்வென்ட்டில் படிக்கிற பெண் குழந்தை போல, கட்டம் போட்ட குட்டைப் பாவாடையும், அதோடு எந்தவிதத்திலும் சம்பந்தப்படாத வெள்ளைத் தாடியுமாக நிற்பவரின் காலிலிருந்து தலை வரை, என் பக்கெட் விளையாடியிருக்கிறது. மன்னிப்புக் கேட்பதைத் தவிர, வேறு வழி இல்லை.

“இட்ஸ் ஆல்ரைட் மேட்! என் பெயர் க்ராப் ட்ரீ!” என்று அவர் என் கையைப் பற்றிக் குலுக்கினார். பாவாடைக்கு முன்னால் அலங்காரமாகத் தொங்கிய பெரிய சைஸ் பர்ஸிலிருந்து ஒரு கவரை எடுத்தார். நசநசவென்று நனைந்து, லண்டன் தபால் முத்திரை குத்தியிருந்தது. பெயரைப் பார்த்தேன். எனக்கு வந்ததுதான். கதவு இலக்கம் எக்குத்தப்பாக எழுதியிருந்தது. ரெண்டாம் நம்பருக்குப் பதிலாக இருபத்துரெண்டு. போதாக்குறைக்கு க்ரோவ் ஸ்ட்ரீட் என்பதை கிரேவ் ஸ்ட்ரீட்டாக மாற்றி, தோப்புத் தெருவாசியான என்னைக் கல்லறைத் தெருவுக்கு பார்சல் செய்திருந்தார் அனுப்புநர்.

“அவசரத்துல பிரிச்சுட்டேன். ஆனா, படிக்கலே!” – நமுட்டுச் சிரிப்போடு அவர் நிற்க, என் கையில் வந்து சேர்ந்த கடிதத்தைக் கவனித்தேன். இந்த மாதம் எனக்குக் கிடைத்த சம்பள விவரங்கள் கடைசி பவுண்ட், பென்னி சுத்தமாகப் பெரிய எழுத்தில் பதிவாகி இருந்தது. ‘இ-மெயிலில் அனுப்புங்கப்பா’ என்று எத்தனைக் கெஞ்சினாலும், கேட்க மாட்டேன் என்கிறார்கள்.

“ரொம்ப நன்றி! உள்ளே வாங்க” என்றேன். அது சரி, எப்படி உள்ளே போக?

நண்டு மரம் என்னைக் கேள்விக்குறியோடு பார்த்தார். ‘சாவியை உள்ளாறவே விட்டுட்டியா?’ என்று கேட்கப்படாத கேள்வி அது. இடுப்பில் தொங்கிய பர்ஸில் உடனடியாகக் கைவிட்டு, பழைய இரும்புச் சாவிகள் நாலைந்து கோத்த கீ-செயினை எடுத்தார். இதுக்கெல்லாம் ஸ்காட்லாந்து கதவு மசியுமா என்ன?

“மேட், நகரு!” என்று கதவுக்கு முன்னால் மண்டி போட்டு உட்கார்ந்தார். சாவிக் கொத்திலிருந்து ரொம்ப ஆராய்ந்து ஏதோ ஒரு சாவியை எடுத்துச் செருகி, தமிழ் சினிமாவின் கடைசி வரிசை க்ரூப் டான்சர் போல இப்படியும் அப்படியும் நாலைந்து தடவை நெளிந்தார். ‘ஹ¨ம்’ என்று ஒரு உறுமல். சட்டென்று கதவு திறந்துகொள்ள, தொபுக்கடீரென உள்ளே போய்ச் சரிந்து விழுந்தார். நான் சுவரைப் பார்க்கத் திரும்பி நின்றபடி, உரக்க நன்றி சொன்னேன்.

“நான் இதே தெருவுல 22-ம் நம்பர்ல இருக்கேன். அந்தக் கோடியில கடைசி வீடு. அதாம்பா… நம்ம ஜேம்ஸ்பாண்ட் ஷான் கானரி வீடு தெரியுமில்லையா, அதுக்குப் பக்கத்து வீடு!” என்றபடி சமையலறையில் நுழைந்தார் அவர்.

அடுத்த அரை மணி நேரத்தில் ரொட்டி, காபியோடு பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை எடிட் செய்து ஒழுங்கு-படுத்தினால்…நண்டு மரத்துக்கு இப்போது 74 வயது. ஷான் கானரி எங்கள் தோப்புத் தெருவில் பிறந்து, இங்கே பால்காரன் உத்தியோகம் பார்த்தபோது, அவருக்கு சகா! அப்புறம் அந்த ஆசாமி அடித்துப் பிடித்து ஹாலிவுட் போய் சூப்பர்ஸ்டார் ஆகிவிட, நண்டு மரம் இங்கேயே வேர் விட்டு, வாடிக்கையாளர்களுக்குப் பால் சப்ளை தடைபடாமல் பார்த்துக்கொண்டு இருக்கிறது. பூர்வீகச் சொத்தான வீடு, கொஞ்சம் போல் கையிருப்பு, ஊர் முழுக்க பியர் விற்கிற கடைகள்… வாழ்க்கை ஏதோ ஓடிக்கொண்டு இருக்கிறது. பத்து வருடம் முன்னால் வீட்டுக்காரம்மா போய்ச் சேர்ந்தபோது, ஷான் கானரிக்குத் தகவல் தெரிவித்தார். துக்கம் விசாரித்து சூப்பர் ஸ்டார் எழுதிய கடிதம் வீட்டில் பத்திரமாக இருக்கிறது. நான் போனால் காட்டுவார்.

‘‘ப்ராஜெக்ட் நிர்வாகி என்றால், கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட தொழில்-தானே? தினசரி சாயந்திரம் ஷாம்பெய்ன் பாட்டில் திறக்க வசதியான வருமானமோ? ஒரு யூகம்தான். பியர் கடையில்கூடப் பேசிக்கொண்டார்கள். காசு இருந்தும் கஞ்சத்தனமாக இந்த வீட்டை ஏன் குடக்கூலிக்கு எடுக்க வேண்டும்? விக்டோரியா மகாராணி காலத்தில் கட்டிய வீடு இது. பக்கத்து மதுக் கடைக்கும் அதே போல் நூறு வருடப் பாரம்பரியம் உண்டு. அதனால் இந்த வீட்டுக் கதவு, வெள்ளிக்கிழமை ராத்திரிகளில் மூணு தலைமுறை ஸ்காட்லாந்துக்காரர்களால் சொட்டச் சொட்ட நனைக்கப்பட்ட பெருமை உடையது!’’

ஸ்காட்லாந்தில் ஃபுட்பால் மேட்ச், கல்யாணம் போன்ற முக்கியமான நிகழ்ச்சிகளின்போது கில்ட் அணிவார்கள். இன்றைக்கு கால்பந்தோ, கல்யாணமோ இல்லை. நகரசபைத் தேர்தல் வேலை பார்ப்பதால், கௌரவமான உடுப்பில் இருக்கிறார். கவுன்சிலராக அவரின் நண்பர் ஜெயித்தால், என் வீட்டு வாசல் அசுத்தமாவதைத் தடுக்க ஆவன செய்யப்படும். அடுத்த சனிக்கிழமை தேர்தல்.

“நீ யாருக்கு ஓட்டுப் போடப்போறே?” – விசாரித்தார். அது சரி, சொந்த ஊரிலேயே ஓட்டு இல்லாதவனுக்கு, அந்நிய தேசத்தில் ஓட்டுரிமை கிடைக்குமா, என்ன? ஆனால், கொடுப்பார்களாம். நண்டு மரம் தாடியைத் தடவிக்கொண்டு அமர்த்தலாகச் சிரித்தார்.

“ரெண்டு வருஷமா இங்கே பியர் வாடை பிடிச்சுட்டு இருக்கே! வீட்டு வரி வேற கட்டுறே. உனக்கு ஓட்டு இல்லேன்னா, எலிசபெத் மகாராணி கிட்டேயே போய் புகார் செய்யலாம். என் ஃப்ரெண்டுக்கு ஓட்டுப் போடு. எல்லாம் நடக்கும். எங்க கட்சி சுயாட்சிக்குப் போராடுது, தெரியுமா?”

நகராட்சித் தேர்தலில் ஜெயித்தால் அவர்கள் கட்சி முதல் நடவடிக்கையாக, என் வீட்டு வாசல் வெள்ளிக்கிழமை ராத்திரிகளில் நனைவதைத் தடுத்து நிறுத்துமா அல்லது ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்காகப் பாடுபடுமா என்று புரியாத குழப்பத்தில் கதவைச் சாத்தினேன். நண்டு மரம் சாவிக் கொத்தைச் சாப்பாட்டு மேஜையிலேயே விட்டுப் போயிருப்பது அப்புறம்தான் தெரிந்தது.

மதியம்… செயின்ட் ஜேம்ஸ் சர்ச் பக்கம் படியிறங்கி, பிரின்சஸ் தோட்டம் வழியாக நடந்தபோது, “மேட், நில்லு… நில்லு!” என்று பின்னால் குரல் கேட்டது. நண்டு மரம்தான். அவருடைய சாவிக் கொத்து பத்திரமாக வீட்டில் இருக்கிறது என்று சொல்ல வாயைத் திறந்தேன். அதற்குள்…

“உடனே என்கூட வா! வேட்பாளரை அறிமுகப்படுத்தி வைக்கிறேன். பக்கத்துலதான் எலெக்ஷன் ஆபீஸ். உன் பிரச்னை பற்றியும் விலாவாரியாகச் சொல்லிட்டு வரலாம்!”

அவர் என் கையைப் பிடித்து இழுக்காத குறையாகக் கூப்பிட, கவிதைப் பட்டறை என்று கழன்றுகொள்ள முயன்றேன். “என்னப்பா நீ, வீட்டுக் கதவுல அவனவன் காலைத் தூக்கிட்டுப் போறான். அது முக்கியமா, கவிதை முக்கியமா?” என்றார். வேறு வழியின்றிப் போனேன்.

நண்டு மரம் வயசில், இடுப்புக்கு மேல் வார் வைத்துத் தைத்த பேன்ட்டும், கையில் கிட்டத்தட்ட ஒரு லிட்டர் கொள்ளளவு உள்ள குவளை நிறைய நுரைத்த பியருமாக வேட்பாளர் வரவேற்றார். கூடவே அதே மாதிரி பேன்ட், குவளை சகிதம் அவருடைய சகாக்கள் தேர்தல் நோட்டீஸ் தயாரிப்பது பற்றி மும்முரமாக விவாதித்துக்கொண்டு இருந்தார்கள். என் கையிலும் ஒரு மெகா சைஸ் குவளை திணிக்கப்பட்டது.

“எல்லா நகரவாசிகளுக்கும் இலவச டிராம் சேவை!” – ஒரு சகா சொன்னது கொஞ்ச நேர விவாதத்துக்குப் பிறகு ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. “இங்கே டிராம் ஓடுதா என்ன?” – நண்டு மரத்திடம் கிசுகிசுத்தேன். “அட, நீ ஒண்ணு! அடுத்த வருஷம் டிராம் ஓடும்னு நாலு வருஷமா சொல்றாங்க. அது நடந்தா, இதுவும் நடக்கும். கேட்கத் திருப்தியா ஒரு வாக்குறுதி வேணும். அம்புட்டுதான்!” என்று என் தோளில் தட்டினார். ‘தெய்வங்களே, நீங்க பிறந்திருக்க வேண்டிய நாடும் ஊரும் நிச்சயம் இது இல்லை’ என்று நினைத்துக்கொண்டேன்.

“நான் கவுன்சிலரா வந்தா, தோப்புத் தெரு முனையில பொதுக் கழிப்பறை கட்டுவேன். பியர் கடை தொல்லை இனி இல்லை. உங்க வீட்டு வாசல்படியில் நீங்க படுத்தே உருளலாம்” என்று வேட்பாளர் எனக்கு ஸ்பெஷல் வாக்குறுதி கொடுத்தார். வீட்டுப் பக்கத்துப் பியர் கடையில் நுழைகிற கூட்டத்தில் இவரையும் பார்த்ததாக எழுந்த நினைவை பியரால் கழுவினேன். என் ஓட்டு இவருக்கே!

இரண்டு நாள் கழித்து, ராத்திரி எட்டு மணி சுமாருக்கு ஆபீஸிலிருந்து அலுத்துக் களைத்து வீட்டில் நுழையும்போது, வாசல்படியில் நண்டு மரம் உட்கார்ந்திருந்தார். பக்கத்திலேயே அவருடைய சிநேகிதர். வேட்பாளர் ஆபீஸில் சந்தித்தவர்தான்.

“மேட், நம்ப ஜிம் மெக்னயர் புகழ்பெற்ற டெய்லர், தெரியுமா? ஷான் கானரி எப்போ வந்தாலும் இவன் கையாலே கில்ட் தெச்சு வாங்காமப் போறதில்ல” என்றபடி, பஞ்சவர்ணத்தில் அடித்திருந்த தேர்தல் விளம்பர நோட்டீஸை என் கையில் திணித்தார் நண்டு மரம். நாலு பக்க நோட்டீஸின் முதல் பக்கத்தில் ‘இலவச டிராம் சேவை’ எனக் கொட்டை எழுத்தில் அறிவிப்பு. நேர் கீழே வேட்பாளரும் நண்டு மரம் உட்பட இதர சகாக்களும் தேசிய உடையில் நெருக்கியடித்து நின்று இரண்டு விரலை உயர்த்தி வெற்றிச் சின்னம் காட்டும் புகைப்படம்.

“அளவெடுப்பா!” – உள்ளே வந்ததும், நண்டு மரம் தன் சகாவிடம் உரக்கச் சொன்னார். அளவா? எதுக்கு? யாருக்கு? குழப்-பத்தோடு பார்த்தேன். “உனக்குத்தானப்பா! ஸ்காட்லாந்துல வருஷக்கணக்கில் தங்கியிருக்கே. தேசிய உடுப்பு தெச்சு வெச்சுக்க வேணாமா? மார்க் அண்ட் ஸ்பென்ஸர்ல போனா, ஐந்நூறு பவுண்ட் கேட்பான். இவன் நம்ம தோஸ்த். நூத்தம்பது பவுண்டு கொடுத்தாப் போதும்; அட்டகாசமா தெச்சுத் தருவான். உடுத்திக்கிட்டு ஷான் கானரி மாதிரி கம்பீரமா நடை போடலாம்!”

நான் வேண்டாம் என்று மறுக்க மறுக்க, நண்டு மரத்தின் சகா குனிந்து நிமிர்ந்து பத்து நிமிடம் போல் இன்ச் டேப்பால் என்னைச் சுற்றி வந்து அளவெடுத்தார். “அம்பது பவுண்ட் மட்டும் அட்வான்ஸ் கொடு. அடுத்த வாரம் எலெக்ஷன் முடிஞ்சதும், தெச்சு முடிச்சதை நீ உடுத்திச் சரிபார்க்கலாம். இஷ்டமிருந்தா மீதிக் காசு கொடு, போதும்!” – நண்டு மரம் பிடுங்காத குறையாக என் பாக்கெட்டிலிருந்த ஐம்பது பவுண்ட் நோட்டை வாங்கிக்கொண்டு, சகாவோடு பியர் கடையை நோக்கி நடந்தார்.

அவரை அதன்பின் பார்த்தது அடுத்த சனிக்கிழமை. வழக்கம் போல் வாசலைக் கழுவித் தள்ளிவிட்டு காலி பக்கெட்டும் கையுமாக வீட்டுக்குள் போகிறபோது, ஒரு பழைய கார் ஊர்ந்து வந்து வீட்டு வாசலில் தயங்கி நின்றது. “மேட், சாவி வெச்சிருக்கியா?” – காருக்குள்ளிருந்து நண்டு மரத்தின் குரல். “மதியம் ரெடியா இரு. ஓட்டுப் போடக் கூட்டிப் போறேன். வெற்றி நிச்சயம். அப்புறம் இந்த பக்கெட்டை எல்லாம் தூக்கிக் கடாசிடலாம். வேலை எக்கச்சக்கமா இருக்கு. வரட்டா? சியர்ஸ்!”

சாயந்திரம் அரக்கப்பரக்க வந்தார். “ஸாரி மேட்! வாக்காளர்களுக்கு எலெக்ஷன்னு நினைவுபடுத்தி ஓட்டுப் போட அனுப்பறதுக்குள்ள போதும் போதும்னு ஆயிடுச்சு. வா, உன்னோட ஓட்டையும் போட்டுட்டு வந்துடலாம். வாக்குச் சீட்டுல நாலாவது சதுரம், நம்ம ஆள். மறந்துடாதே!”

சொல்லிக்கொண்டே அவர் நுழைந்த இடம் டெஸ்கோ சூப்பர் மார்க்கெட். “ஓட்டுப் போட பூத்துக்கில்ல போகணும்?” என்றேன். என்னை அவர் அனுதாபத்தோடு பார்த்தார்.

“இது உங்க ஊர் இல்ல மேட். இங்கே நமக்கு வசதியா நாம புழங்கற சூப்பர் மார்க்கெட், போஸ்ட் ஆபீஸ், மருந்துக் கடை இப்படிச் சில இடங்கள்ல போய்ச் சாவகாசமா ஓட்டு போட்டுட்டு, மத்த காரியத்தையும் முடிச்சுக்கிட்டு வரலாம்!”

அவர் சொல்லி முடிப்பதற்குள் சூப்பர் மார்க்கெட் சிப்பந்திப் பெண் குறுக்கிட்டாள்… “ஸாரி சார், ஓட்டெடுப்பு ஓவர்! அஞ்சு மணிக்கே எல்லாம் முடிச்சு ஏறக்கட்டி, ஓட்டுப் பெட்டியை நகரசபைக்கு அனுப்பியாச்சு!”

நண்டு மரம் அழுதுவிடுவார் போல் இருந்தது. ஒரு பாட்டில் ரம்மும் இரண்டு பாட்டில் பியரும் அங்கேயே வாங்கிக்கொடுத்து அவரைத் தேற்றவேண்டியதாயிற்று.

அவரைக் கடைசியாகப் பார்த்தது அப்போதுதான்.

தேர்தலில் அவர் கட்சி வேட்பாளர் படுதோல்வி அடைந்ததாக உள்ளூர்ப் பத்திரிகையில் ஒரு ஓரத்தில் போட்டிருந்தார்கள். எனவே, ஸ்காட்லாந்துக்கு சுயாட்சி மற்றும் இலவச டிராம் சேவை கொடுப்பினை இல்லை. என் வீட்டு வாசல் நனைவதும் நிற்கவில்லை. எல்லாத் துக்கத்தையும் மறக்க, லண்டன் தவிர்த்த வேறு ஊருக்கு நண்டு மரம் போயிருக்கலாம். தோப்புத் தெரு 22-ம் நம்பர் வீட்டு வாசலில் தொங்கிய பூட்டைத் திறக்க வேறு சாவி இருப்பதாகவும் தெரியவில்லை.

போன மாதம் இந்தியா திரும்பியதற்குப் பத்து நாள் கழித்து, ஒரு கடிதம் வந்தது. விலாசம் அட்சரசுத்தமாக இருந்தது. நண்டு மரம்தான் எழுதியிருந்தார். ஆபீஸில் சகபாடிகளிடம் என் இந்திய விலாசம் வாங்கியிருக்கிறார். அவருடைய தையல்கார நண்பர் குடி மும்முரத்தால் தற்போது தோப்புத் தெருவிலிருந்து கல்லறைத் தெருவுக்குக் குடிபெயர்ந்து, சுகமான இறுதி உறக்கத்தில் இருக்கிறாராம். அவர் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தித்துக்கொண்டு, வேறு டெய்லரைத் தேடிக்கொண்டு இருக்கிறார் நண்டு மரம். என் கில்ட் தைத்துப் பூர்த்தியானதும், உடனே அனுப்பிவைக்கப்படும்.

நண்டு மரத்துக்குப் பதில் எழுத வேண்டும். பாக்கிப் பணம் அனுப்பி வைக்க வேண்டும். கில்ட் தைத்து வந்தால், அவரையே உடுத்திக்கொள்ளச் சொல்ல வேண்டும். அவர் உயரத்துக்கு அது மைக்ரோ மினி ஸ்கர்ட் போல இருக்கும். கில்ட்டுக்கு உள்ளே எதுவும் அணியக் கூடாது என்பதை நினைத்தால்தான் கொஞ்சம் கலவரமாக இருக்கிறது.

– 07th நவம்பர் 2007

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *