திங்களொடும் செழும்பரிதி தன்னோடும்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 29, 2015
பார்வையிட்டோர்: 11,431 
 
 

தொலைதூரம் நடந்த களைப்பில் நெஞ்சுக்கூடு மேலும் கீழும் இறங்கியது. சற்று நிதானித்துச் சுவாசத்தைச் சீராக்கிக் கொண்டார். நுதல் மலர்ந்த வியர்வையைத் தட்டி விட்டு அந்த மூதாட்டி முதுமை தின்ற யாக்கையை இழுத்துக் கொண்டு அரண்மணை நோக்கி மெல்ல அடி எடுத்தாள்.

இன்னும் சில காத தூரம் சென்றால் அரண்மனை வந்து விடும். உயர்ந்து நெடிந்து வானளாவ இருக்கும் கோபுரங்களைக் கண்டதும் மெல்லிய பரவசம் அவளின் நரம்புகளில் பூக்கத் தொடங்கியது.

கோலைத் தத்தி தத்தி நடந்தவள் அரண்மனை வாயிலை அடைந்தாள்.

“மன்னரைக் காண மூதாட்டி ஒருத்தி வந்திருப்பதாய் மன்னரிடம் உரைப்பாய் சேவகனே “

வந்தவர் யாரென உணராத வாயில்காப்போன் மன்னரைக் கண்டு உரைத்தான்.

உள்ளே வர அனுமதி கிடைத்ததும், அவர் மெல்ல அடி எடுத்து வைத்தார்.

மன்னர் இதைக் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.

“என்ன கொடுமை இது . . . தங்களையா இந்த சேவகர்கள் காக்க வைத்து விட்டார்கள். யாரங்கே . . .” மன்னரின் ஆவேசத்தைக் கண்டு அந்தச் சேவகர்கள் நடுங்கியே விட்டார்கள்.

“ஆத்தியும் கொன்றையும் தந்த தமிழ் மூதாட்டியே . . . பிழையைப் பொறுத்தளும். அறியாமல் நேர்ந்து விட்ட பிழைக்கு மன்னன் தலை வணங்குகிறேன்”

“ பிழை ஏதும் நடந்துவிடவில்லை மன்னா . . . மனம் தணிவாயாக !” மன்னர் உணர்ச்சி வசப்படுவதைக் கண்டு ஒளவை கனிவோடு விளித்தார்.

“ உங்களின் திருவடிப்பட எம் நாடு மீண்டும் பேறு பெற்றது. வாருங்கள் அன்னையே ! முதலில் இளைப்பாறுங்கள்“ என ஒளவைக்கு ஆசனம் காட்டினான் மன்னன் அதியமான்.

ஒளவை மீது அதியமானுக்கு எப்பொழுதும் அளவற்ற அன்பு இருந்தது. அவரைக் காணும் போதெல்லாம் அன்னையைக் கண்டு விட்ட கன்றைப் போல அன்பு சுரக்கும். அறிவொளியும் தமிழமுதும் ஒளவையின் மீது தன்னிகரற்ற பிணைப்பை ஏற்படுத்தியிருந்தது.

“ஒளவையே… தாங்கள் நலம் தானே ? ”

“ வழியில் வரப்பு உயர்ந்திருப்பதைக் கண்டேன் மன்னா. அதனால், நீரும் உயர்ந்து இருந்தது. நீர் உயர்ந்ததனால் நெல் உயர்ந்து இருக்கின்றது. உன் குடியும் உயர்ந்து உன் கோனும் உயர்ந்து இருப்பதைக் கண்ட பின்னே, என் நலனில் குறையொன்றும் இல்லை மன்னவனே . “

“நாடும் மக்களும் நலமுடன் இருந்தால்தானே நாடாளும் அரசன் வளமுடன் இருக்க முடியும்… இதைக் கற்றுத் தந்தவரும் தாங்கள் அல்லவா தாயே ” அடக்கத்துடன் மன்னர் பதிலுரைத்தார்.

மன்னரைக் காண ஒளவைக்கு ஆச்சரியமாக இருந்தது. போர்க்களத்தில் எதிரிகளைத் துவசம் செய்யும் யானை, நதிக்கரையில் யானையைக் குளிப்பாட்டும் சிறுவர்களுடன் சாந்தம் தவழ விளையாடி மகிழ்வது போல போர்க்களத்தில் எதிரிகளின் தலைகளைப் பந்தாடும் மன்னன் தன்னைப் போன்ற எளியவர்களிடம் குழந்தைப் போல இருப்பதைக் காண வியப்பாக இருந்தது.

“கேள்விக்குப் பதிலேதும் உரைக்கவில்லையே… என்ன ஆழ்ந்த சிந்தனை தாயே ? ”

“உன் கருணை உள்ளம் எண்ணி மலைக்கின்றேன். எந்நாளும் வாழிய நீ மன்னா.” மன்னவனின் உதட்டின் ஓரம் குறுநகை ஒன்று மின்னலாய் தோன்றி மறைந்தது. அவ்வையின் வாழ்த்தினை பணிவோடு ஏற்றுக் கொண்டார்.

“ தங்களுக்காகத்தான் இத்தனை நாளாகக் காத்திருந்தேன். இதோ வந்து விடுகிறேன் “ என அதியமான் விரைந்து உள்ளே சென்றான்.

அதே வேகத்தோடு வந்தவனின் கையில் ஒரு பொன் தட்டு இருந்தது.

அந்த பொன் தட்டில் ஒரு கனி இருக்க கண்டு ஒளவையின் கண்கள் அகல விரிந்தன. பொன்னும் மணியும் யானை சுமக்கும் அளவுக்கு அள்ளித் தரும் அதியமான் ஒரு கனியை மட்டும் ஏந்தி வந்த புதிர் ஒளவைக்கு விளங்கவில்லை.

“என்ன கனி இது ? இப்படியொரு கனியை இதுவரை நான் கண்டதில்லையே ”

“இதை அருநெல்லிக்கனி என்பார்கள். எங்கும் அரிதில் கிடைக்கப்பெறாத கனியிது. இதைத் தாங்கள் அவசியம் உண்ண வேண்டும். அதைக் காணும் பாக்கியம் அடியேனுக்கு வழங்க வேண்டும் “. அதியமான் ஒளவையை வேண்டி நின்றான்.

“அன்போடு நீ கொடுக்கும் இக்கனியை உண்ணாமல் மறுப்பேனா. . . “ என கூறியபடி அந்தக் கனியை எடுத்துக் கடித்தார்.

“ ஆகா. . . அமுதம் போல் சுவைக்கிறதே . .! என் வாழ்வில் இதுவரை இப்படியொரு சுவையை நான் கண்டதில்லை. . . உன் அன்பைப் போல் இனிமை தருகின்றது . “

மீண்டும் அக்கனியைச் சுவைக்கத் தொடங்கினார். நாவின் சுவை மொட்டுகள் தீண்டி வாயெல்லாம் இனிக்க அதன் சுவை நெஞ்சில் சுகமாக நிறைந்தது. இது சாதாரண கனியாக இருக்காது. சிறப்பு வாய்ந்ததாகவே இருக்க வேண்டும் என நினைத்து,

“அமுதம் போல் சுவைக்கின்ற இக்கனியின் பெருமைதான் என்ன ? “

என வினவினார்.

இப்படியொரு சிறப்பு அக்கனிக்கு இருக்கும் என்று ஒளவை சற்றும் எதிர்பார்க்கவில்லை.

“என்ன …ஆயுள் நீடிக்கச் செய்யும் கனியா ? “ அவ்வை மலைத்தபடி மன்னவனை நோக்கினார்.

“ ஆயுள் நீடிக்கச் செய்யும் இந்த அருநெல்லிக்கனியை எனக்களிக்காமல், நீயே உண்டிருக்கலாமே. உன் நல்லாட்சியால் மக்களும் நெடுங்காலம் பயன் அடைந்திருப்பார்களே. அதை விடுத்து இந்தக் கிழவிக்கு ஏனப்பா கொடுத்தாய் ? “ ஒளவை செல்லமாக அதியமானைக் கடிந்து கொண்டார்.

“ நான் உயிர் நீடித்து வாழ்வதால பயன் என்ன ? போர்க்களம் சென்று எமனுக்குப் பசி தீர்க்க மட்டுமே உதவ இயலும். நாளும் தமிழ் வளர்க்கும் தாங்கள் அல்லவோ பல்லாண்டு காலம் வாழ வேண்டும். இக்கனியை நான் உண்பதைவிட தாங்கள் உண்பதே சாலச் சிறந்தது.”

கள்ளமில்லா அதியமானின் சொல்லைக் கேட்டு ஒளவையின் கண்கள் பனித்தன.

“இக்கனியின் மகிமையை உணர்ந்தும், அதை நீ உண்ணாமல் எனக்குத் தந்த உன் பரந்த மனம் கொண்டவர் உனையன்றி வேறு யார் உளர்.”

“பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி

நீல மணிமிடற்று ஒருவன் போல

மன்னுக பெரும நீயே “

ஒளவையின் கன்னங்களில் சில துளிகள் சலனித்துச் சென்றன.

ஆண்டு 2300

“ பிழைத்துக் கொள்ள வேண்டும் . . . எப்படியாவது பிழைத்துக் கொள்ள வேண்டும் ! “ மகிழாவின் உள்ளம் மீண்டும் மீண்டும் இறைவனை வேண்டிக் கொண்டது.

இவரின் உயிர்ப்பிழைப்பால் கடந்த நூற்றாண்டின் தவறுக்குத் தீர்வு கண்டு விட முடியும் என மகிழா நம்பினாள். மலைச்சரிவில் விழுந்தவளுக்கு நூல் கொடுத்து மேலே ஏறச் சொல்வது போல் தான் அவளின் நிலை. ஏதோ ஒரு வித வேகம் அவளின் நம்பிக்கையைத் தகர்த்து விடாமல் உறுதிப்படுத்திக் கொண்டிருந்தது.

கண்ணாடிகளுக்கு அப்பால் அந்தக் கிழவியின் உருவம் படுத்துக் கிடக்கிறது. மெலிதாய் சருகாகிப் போயிருந்த தேகம். பலமுறை மடித்து மடித்து கசங்கிப் போன காகிதம் போல சுருங்கிப் போன தோல். அவரை முதுமை அதிகமாகவே தின்று துப்பியிருக்கிறது.

பிழைத்துக் கொள்வாரா. . .

பிழைப்பார் . . . நிச்சயம் பிழைப்பார் !

நம்பிக்கை நூல் அறுந்து விடாமல் பார்த்துக் கொண்டாள். எவ்வளவு பெரிய சுமையைத் தான் தாங்கிக் கொண்டிருக்கிறோம் என மகிழாவிற்கு நன்கு தெரியும். எந்தப் பிசகும் இல்லாமல் அதை நிறைவேற்றிட இருக்கிற வழிகள் யாவையும் முயற்சித்து விட வேண்டும் என நினைத்தாள்.

கண்ணாடிகளுக்கு அப்பால் பார்வை மீண்டும் படர்ந்தது. மருத்துவர் பச்சை நிற ஒளியைக் கிழவியின் இருதயத்திற்கு மேல் பகுதியில் செலுத்தினார். கணினித்திரையில் இருதயத்துடிப்பு கொஞ்சம் வேகம் எடுத்து சீராகத் தொடங்கியது. இப்போது வேறு ஒளி, வேறு நிறம் கிழவியின் உடலை நனைத்தது.

மாத்திரைகளும் ஊசிகளும் அற்ற மருத்துவத்தை நூற்றாண்டு அறிவியல் வளர்த்திருந்தது. ஒளிகள் மட்டுமே நோய்களைக் குணப்படுத்தும் பொறுப்பை ஏற்றிருந்தன.

“டாக்டர். . . இப்ப அவருக்கு எப்படி இருக்கு ?”

“ நிலைமை சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை. எங்களால் இயன்ற வரைக்கும் முயற்சிக்கிறோம்.”

அவரின் பதில் மகிழாவின் நம்பிக்கையில் சிறு அதிர்வை ஏற்படுத்தி உயிரை உலுக்கி எடுத்தது.

“ நீங்க பிழைக்க வைக்கப் போவது இவரின் உயிரை அல்ல, ஒரு மொழியின் உயிரை. . ! இறந்து போன மொழி மீண்டும் உயிர் பெற, இவர் உயிர் பெற்றே ஆக வேண்டும். உங்களால் முடியும். நம்பிக்கையை விட்டுடாதீங்க “

அவள் குரல் உடைந்தது.

கிழவி பிழைத்தால் ஒரு மொழிக்கு உயிர் கிடைக்கும். ஆம் . . . அவளின் மொழிக்கு உயிர் கிடைக்கும். தொன்மைக்கும் மேன்மைக்கும் பேர் போனவர்கள் அவளின் பண்டைய மூதாதையர். அவர்கள் தந்த அற்புத மொழிதான் தொலைந்து போயிருந்தது. எத்தனையோ நூற்றாண்டுகளை உண்டு வளர்ந்த மொழி சில நூற்றாண்டுகளில் நஞ்சாகிப் போகும் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்.

இழப்பதைத் தெரிந்தே இழந்தார்கள். இழப்பதற்கு யாரும் வருந்தியதாகவும் இல்லை. ஒன்று, இரண்டு என தொடங்கிய இழப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பட்டியல் நீண்டு போனது. அந்நிய மொழிகளுக்குத் தாரை வார்த்து விட்டு நிறமிழந்து போனார்கள். இழப்புகளை உணரும் தருணத்தில் அவை மீட்க முடியாத தொலைவினை கடந்திருந்தன. ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் நிமிர்ந்து ஓங்கி வளர்ந்த மொழி, சில நூறு ஆண்டுகளிலேயே மரணித்துப் போனது கொடுமையல்லவா.

அயல்மொழிகளில் முகம் தொலைத்து வாழ்ந்த தருணத்தில்தான் இந்தக் கிழவியைப் பற்றிய சேதி தோழி மூலமாக மொழிஆய்வாளரான மகிழாவிற்கு வந்தது.

“ நிசமாகவா சொல்கிறாய். . . அவர் பேசியது அந்த மொழிதானா ? எங்கள் தாய்மொழிதானா ? ”

மகிழாவின் கண்கள் வெளிச்சமிட்டன. அவளால் நம்ப முடியவில்லை, நேரில் காணும் வரை. இது எப்படி சாத்தியம் ? காண்பது நிசம்தானா..?

“இவர் பேசுவது எம்மொழிதான். எந்த மொழி உலகத்தின் பயன்பாட்டை விட்டு கழன்று விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றனரோ, அதே மொழி. எந்த மொழியின் பேச்சு வடிவம் சிதைந்து , திரிந்து, தன்னிறம் இழந்து, கரைந்து விட்டதாக உலகம் தீர்ப்பு எழுதியதோ அதே மொழி ! ”

“இது எப்படி சாத்தியம் ? ” அவள் மீண்டும் ஒரு முறை கிழவியைப் பேசச் சொன்னாள்.

“சந்தேகமே இல்லை. நிச்சயம் இது எம்மொழிதான்.”

ஒவ்வொரு தலைமுறையையும் கடந்து இந்த மொழி இவரின் குடும்பத்தில் தப்பிப் பிழைத்து வந்துள்ளது. நகரங்களைக் கடந்து , அறிவியலைக் கடந்து தொலைதூர கிராமத்தில், பண்பாடு கலையாத குடும்பத்தில் தலைமுறை சொத்தாக ஒவ்வொரு கைகளையும் தாண்டி வாழ்ந்துள்ளது. காலங்கள் உதிர, இந்தப் பயணமும் தேய்ந்தே போனது. அம்மொழியை பேசும் கடைசி தலைமுறையாக இந்தக் கிழவி மட்டுமே மிஞ்சி இருக்கிறாள்.

“அப்படியென்றால், அந்த மொழி இன்னும் இறந்துவிடவில்லை. எங்கள் மொழி இன்னும் சாகவில்லை”

மகிழாவின் உடலில் ஒருவித சிலிர்ப்பு படர்ந்து கண்களைக் குளமாக்கியது. இந்தக் கிழவியை முடிந்து போன முடிவின் முடிவு என்பதா. . . இல்லை தொடங்கப் போகும் தொடக்கத்தின் தொடக்கம் என்பதா. . . மகிழா ஆனந்தத்தால் கிழவியின் இருகரங்களையும் பற்றிக் கொண்டாள். தன்மொழி மீண்டு விட்ட உற்சாகம் அப்போதே அவளின் மனதில் ஊறத் தொடங்கி விட்டிருந்தது.

மகிழாவின் உற்சாகம் அதிக நாள்கள் நீடிக்கவில்லை. கிழவியின் முதுமை விழுங்கிய உடலை காலம் வெகுவிரைவிலேயே விழுங்கத் தொடங்கியது. மொழிகளற்று மௌனமாகி படுக்கையில் விழுந்த கிழவியை எப்படியாவது மீட்டு விட வேண்டும் என துடியாய் துடித்தாள்.

அவளுக்குத் தெரியும் . . . மரண விளிம்பில் இருப்பது கிழவி அல்ல, ஒரு இனத்தின் உயிர்ப்பாய் இருந்த மொழி என்று.

அவசர பிரிவுக்கான அறையிலிருந்து மருத்துவர் வெளியே வந்தார்.

“என்னாச்சு . . ? “

மருத்துவர் எதுவும் பேசாமலே அவள் புரிந்து கொண்டாள். அவரின் பார்வை தந்த செய்தியை உணர்ந்து அப்படியே உடைந்தாள்.

அறைக்குள் எட்டிப் பார்க்கிறாள்.

கிழவியின் நெஞ்சுக்கூடு மேலும் கீழுமாய் மெல்ல அசைந்து. . . மெல்ல. . . மெல்ல அப்படியே சலனம் குறைந்து, வேகம் குறைந்து, இதோ. . . இதோ. . . இன்னும் சில நொடிகள் . . . ஒன்று, இரண்டு . . .அவ்வளவுதான் !

மூன்று என சொல்வதற்குக் கூட அவகாசம் வழங்காமல் கிழவியின் மூச்சு அடங்கிப் போனது.

மொழி ஒன்றின் மரணத்தைக் காண சகிக்காமல் முகத்தை இருகைகளால் மூடிக் கொண்டாள். மீள்வது போல் மீண்டு மீண்டும் மரணித்தது அவளின் மொழி. உயிரின் வேரைப் பிடுங்கிய வலி உடலெங்கும் பரவி கண்களில் வந்து சேர்ந்தது. கன்னத்தில் விடாமல் நீர்க்கோடு ஒன்று விழுந்து கொண்டிருந்தது.

புகை போல ஏதோ ஓர் உருவம் கையில் நெல்லிக்கனியோடு கிழவியை நெருங்குவது போன்ற பிரமை அவளுக்குத் தோன்றி மறைகிறது.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *