கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: December 14, 2019
பார்வையிட்டோர்: 15,534 
 
 

வளைவு நெளிவுகளை அழித்துக்கொண்டு உடலைச் சுமக்க வைத்த சதை வயசுக்கும் வாழ்வின் சரிவுக்கும் கட்டுவிட்டுத் தொய்ந்து ஆடுகிறது. ஓர் அடி பெயர்த்து வைக்கும் முன் இன்னோர் அடியில் தாங்காத உடல் தள்ளாடுகிறது. முண்டிதமான தலையை மறைக்கும் சேலை இறுக்கமாக இரு செவிகளையும் மூடிக் கொண்டிருக்கிறது. துல்லியமான பார்வை இல்லாத கண்களைப் பாதுகாக்க அமைந்தாற் போன்ற கண்ணாடி. டாக்ஸியை விட்டு மெல்ல இறங்கும் மருமகள் ஒவ்வோர் அடியாக வாயிற்படியிலேற்றிக் கூட்டி வருகிறாள். வளைவே இல்லாத மெத்தென்ற பாதம் மொஸைக் தளத்தில் சில்லென்று அழுந்தும்போது கூசுகிறது.

‘‘மெள்ள, மெள்ள!’’ என்று படி ஏற வைக்கிறார்கள். மூச்சு வாங்குகிறது.

‘‘இப்படி உட்காருங்கோம்மா. சோபா பிளாஸ்டிக் துணிதான்’’ என்று முதியவளை உட்கார வைக்கிறாள்.

சந்தேகம் தீர, கை சோபாவின் பரப்பைத் தொட்டுப் பார்க்கிறது.

இதற்குள் டாக்ஸிக்காரனுக்குப் பணம் கொடுத்துவிட்டு, பிள்ளை பெட்டியையும் பையையும் கொண்டு வருகிறார்.

‘‘குழந்தை இன்னும் வரலியாம்மா?’’

கண்ணாடிக்குள் இருக்கும் திரைபடர்ந்த விழிகள் எதிரே நிலைக்கின்றன.

‘‘நீங்க பல் தேச்சுக் காபி குடிக்கிறேளா?’’ என்று கேட்கிறாள் மருமகள்.

‘‘கப்பல் காலமேயே வந்திருக்கும்னானே! குழந்தை வரட்டுமே!’’ அந்தரத்தில் பிடிப்பின்றி அசையும் நூலிழை போல் ஒலிக்கிறது குரல்.

‘‘கப்பல் வந்திருக்கும். அவன் வரட்டுமே? நீங்க நேத்து ராவே பட்டினி. ரயில்லே வந்த சிரமம் வேறே. பல்லைத் தேச்சுக் காபியைக் குடியுங்கோ… மெள்ள… பாத்ரூமுக்கு வரேளா?’’

‘‘இப்ப ஒரு தரம், அப்புறம் ஒருதரம் எழுந்திருந்து போக வேண்டாம்னு பார்த்தேன்’’.

பஞ்சுப் பிசிறுகளைப் போல் மனப்பரப்பு முழுவதும் ஆசைகள் பரவிக் கிடக்கின்றன. ஒன்றாகத் திரட்டி முறுக்கிக் குரலாக்கக் கிழவிக்குச் சக்தி இல்லை. பிசிறுகள் குரலாக இழையுமுன் பொருள் கரைந்துவிடும் நலிவு.

‘‘ரெண்டு தரம் எழுந்திருக்க வேண்டாம்னா, இப்பவே பல் தேச்சு ஸ்நான பானத்தை முடிச்சிக்கலாம்மா. பாயிலரில் வெந்நீர் கொதிக்கிறது’’.

கிழவி சலனம் காட்டவில்லை.

புகையிலைச் சாற்றை வாஷ் பேஸினில் உமிழ்ந்து விட்டு வரும் பிள்ளை, குரலில் கொஞ்சம் கடுமையுடன் ‘‘ரெயில் தீட்டிலே காபி குடிக்கக்கூடாதுன்னா, குளிச்சிட்டுத்தான் குடியேன். இந்த ஆசாரமெல்லாம் ஊரோட மூட்டை கட்டணும். பேரனைப் பார்க்கப் பட்டணம் வரணும்னா ஆசாரம் பார்க்கக்கூடாதுன்னு சொல்லலே நான்?’’ என்று கேட்கிறார்.

‘‘அதுக்கில்லேடா; ரெயில் தீட்டென்ன ரெயில் தீட்டு? குழந்தையைப் பார்க்கணும்னுதானே இந்தச் சரீரத்தைத் தூக்கிண்டு உங்களுக்கெல்லாம் சிரமம் கொடுத்திண்டு வந்திருக்கேன்? சுமந்துண்டுவர ரெயிலுக்குத் தீட்டென்ன, தீட்டு? ஆசையைச் சுமந்துண்டு வரபோது மடியேது மடி?’’

‘‘பின்னென்ன யோசனை? காபி ஆறினா உனக்குப் பிடிக்காது. பல் தேச்சுட்டு வா. இங்கே பக்கத்தில்தான் பாத்ரூம்’’.

‘‘இங்கேயா?’’

‘‘ஆமாம்’’.

மருமகள் கையைப் பற்றி எழுப்பி ஒட்டிய வாயிற்படிக்கு அழைத்து வருகிறாள்.

‘‘இவ்வளவு பக்கத்திலியா இருக்கு?’’

‘‘ஆமாம்’’.

‘‘இது ராஜனுக்கு சிநேகிதாளாந்தானே? அவா ஒத்தரும் இல்லியா?’’

‘‘சிநேகிதாளாந்தான். அவா ரெண்டுபேரும் ஏதோ கல்யாணம்னு திருப்பதிக்குப் போயிருக்காளாம். சாவியைப் பக்கத்தாத்தில் கொடுத்திருந்தா’’.

‘‘மாடியா அழச்சிண்டு வந்தியேன்னு பார்த்தேன்’’.

‘‘இங்கெல்லாம் மாடி மாடியா ப்ளாட்தாம்மா. நம்ம கிராமம்னு நினைச்சேளா?’’

‘‘அப்படியா? எனக்கென்ன புரியறது? அப்ப பக்கத்தாத்துக்காரா பாயிலரில் நெருப்புப் போட்டு, வெந்நீர் போட்டு வச்சிருக்காளாக்கும்? வந்த இடத்தில் உனக்குச் சமையல் வேலை வேற புடிச்சிண்டுதா?’’

‘‘இல்லேம்மா, மடியா அடுத்தாத்திலே சமையல் பண்ண ஏற்பாடு பண்ணியிருக்கா. காபி அங்கேருந்துதான் கொண்டு வந்திருக்கேன்’’.

‘‘இதெல்லாம் என்ன விசாரணை வேண்டியிருக்கு?’’ என்று பிள்ளையின் கடுங்குரல் செவியில் விழுந்ததும் கிழவி மௌனமாகிறாள்.

மருமகள் கருவேலம்பட்டைப் பொடியை, டப்பியைத் திறந்து எடுத்துக் கொடுக்கப் பல் துலக்குகிறாள். மெல்லச் சோபாவுக்கு மீண்டதும் திருநீற்றுச் சம்புடத்தைத் திறந்து நெற்றியில் பூசிக் கொள்கிறாள்.

அடைத்த இடத்தில் நீர் பொசிவதுபோல் சந்தேகம் மீண்டும் கசிகிறது.

‘‘அதென்ன கட்டிலா?’’

‘‘ஆமாம். பெரிய கட்டில். நீ உட்கார்ந்திருக்கிறது பெரிய சோபா, பீரோ, நாற்காலி எல்லாம் இருக்கு. வெந்நீர்போட நெருப்பு மூட்ட வேண்டாம். ஸ்விட்ச் போட்டா சுட்டுடும்’’.

‘‘சமைக்கற ரூம்பு பின்னாடி இருக்கோ?’’

‘ராம ராமா!’ என்ற மருமகள் மனசோடு அலுத்துக் கொண்டு, ‘‘ஆமாம், பின்னே இருக்கு. அதை எல்லாம், பூஜை ரூமைக்கூடப் பூட்டிண்டு போயிருக்கா’’ என்று உரைக்கிறாள்.

விழிகள் சூனியத்தில் நிலைத்துவிட்டு மறுபடியும் தாழ்கின்றன.

‘‘ராஜனோட இந்தச் சிநேகிதனுக்கு நிறையச் சம்பளமோ?’’

‘‘ஆமாம்’’.

‘‘இல்லே, பட்டணத்திலே பெரிய வீடுன்னா, பங்களாவா, தோட்டம், ஹால்னு இருக்கும்னுதான் நினைச்சிண்டிருந்தேன். இப்ப எவ்வளவோ மாறிப்போச்சு. இந்த வீடு சொந்த வீடுதானாமா?’’

‘‘என்னெல்லாம் விசாரணை பாரு! எப்படியாயிருந்தா இவளுக்கென்ன?’’

‘‘இல்லேடா இல்லே. கேட்டேன். கீழெல்லாம் பளிங்காட்டமா இருக்கே. சுச்சி போட்டா வெந்நீர் மாதிரி, சமையலும் பண்ணுவாளா இருக்கும்’’.

குரலின் சுருதி இறங்கி, அவளுக்குப் பரிச்சயமான உலகத்தில் ஒன்றுகிறது.

பெரிய வாசல் – திண்ணைகள், ரேழி நடை, எடுத்துக் கட்டிய பெரிய பட்டகசாலை – பூஜையறை, இரண்டாம் கட்டு சாமான் அறை, சமையற்கட்டு, முற்றம், கொட்டில் என்று வாய்க்கால் கரைவரை நீண்டு செல்லும் உலகையே அவள் அறிவாள். அதுவும் சென்ற பதினைந்தாண்டுக் காலமாக அந்த எல்லையை விட்டு வெளியேறி அடுத்த ஊருக்கு சென்றிருக்கவில்லை. தாயின் கருப்பையை விட்டு வெளியேறிய சிசு பிரம்மமாய் ஒளியைப் பர்த்துக் கொண்டு கிடப்பதைப் போல் உட்கார்ந்திருக்கிறாள். இப்படி முன்பின் தெரியாத இடத்தில் ஜடமாய் வந்து உட்காருவோம் என்று கற்பனை கூடச் செய்திருக்கவில்லை.

அவள் கண்விழித்துக் கண்ட உலகும், ஆண்ட உலகும் இன்று கால ஓட்டத்தில் நிலை புரண்டு விட்டன. பிறந்த இடமும் புகுந்த இடமும் பூமியைக் கட்டி ஆண்டு அது பவித்த வளமையில் செழித்தவை. அரைப்படியும் காற்படியும் வடிப்பதைப்பற்றியே அவள் அறிந்ததில்லை. சமையற்கட்டில் கூலிக்கு வைத்துக் கொண்ட ஆட்களாகவே அந்த வீட்டில் யாரும் பணி செய்ததில்லை. தலைமுறை தலைமுறையாக அண்டி வாழ்ந்த ஏழைக் குடும்பங்கள் என்றுதான் சொல்லவேண்டும். மடியாகப் புடவை துவைத்துலர்த்த, வெந்நீர் வளாவி வைக்க, கால் பிடித்துவிட என்று வரும பெண்களை வெறும் சோற்றைப் போட்டுச் சம்பளத்தைக் கொடுத்து அனுப்பிவிடும் வழக்கம் அவளுக்குத் தெரியாதது. பாடசாலையில் வளரும் பையனோ, வாரச் சாப்பாட்டுக்கு வரும் இளைஞனோ அகப்படாமல் போகமாட்டான். கூறை தாலி வாங்கி, கெட்டிமேளம் கொட்டிக் குடித்தனம் வைப்பது வரையிலும் பொறுப்பேற்றிருக்கிறாள். இருக்கிறது இல்லை என்றோ முதல்தேதி கடைசித்தேதி என்றோ கணக்குப் பார்த்தறியாள்.

இன்று அந்தப் பிரபுத்துவ வாழ்க்கையின் வெறும் சின்னமாகக் கிழவி, இயங்கச் சுமையாக இருக்கும் சரீரத்துடன், மிஞ்சி இருக்கிறாள். அந்த வாழ்வின் தேய்மான காலப் பிரதிபலிப்பாய்ப் பிள்ளை, ஒரே வாரிசு. கும்பகோணம் கல்லூரியில் அவன் படித்ததெல்லாம் திண்ணை அரட்டையில் வெற்றிக்கொடி பிடிப்பதற்குத்தான் என்ற உணர்வுக்கு மேல் சம்பாதிக்க வேண்டும் என்ற ரேகை நினைவும் கிடையாது. செம்பு செம்பாகக் காபியும் கவுளி கவுளியாக வெற்றிலையுமாகச் சீட்டாட்டம் அமர்க்களப்படும். கிரிக்கெட் மாட்ச், சங்கீத சீஸன் என்றால் பட்டணம் போய் ஆயிர ஆயிரமாகச் செலவழிக்கும் வாய்ப்பு என்று பொருள். நண்பர்கள், தெரிந்தவர்கள் வந்தால் பாலும் நெய்யுமாகச் சாப்பாடு. இந்த வாழ்க்கையில் பழகி வந்தாலும் தேய்வின் கடுஞ்சரிவில் நின்று சமாளிக்க இளமை துணை இருப்பதால் மருமகள் தாங்கி நிற்கிறாள்.

நான்கு பெண் மக்கள். இரண்டு பேருடைய கல்யாணங்கள் குடும்ப கௌரவத்தின் எந்த அம்சத்துக்கும் பங்கம் வராமல் பணம் தண்ணீராய்ச் செலவழியும்படி நடந்தேறின. மூன்றாவது பெண்ணுக்குக் கல்யாணம் செய்யும் யோசனை இல்லை. தஞ்சாவூர் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். அவள் டாக்டராகப் போகிறாளாம். இடம் பிடிக்கவே ஆயிரக்கணக்கில் செலவழித்திருக்கிறார்கள். கடைசிப் பெண்ணும் சிதம்பரம் போய்ப் படிக்கிறாள். பையன், ஒரே கொழுந்தாய் நிற்கும் வாரிசு, படித்த படிப்புக்கு இரண்டாண்டுகள் வேலையின்றிச் சேர்ந்தபின் திரைகடல் மேலே போயிருக்கிறான். கப்பலிலே பணி. மண்ணின் வாசனையிலும் வண்மையிலும் சுகம் காணும் ருசி அறியாத குழந்தை அவன். இன்றையத் தலமுறையின் பிரச்னைகளை எதிர்க்க, கடல் மேல் பணி செய்யப் போகிறான். அவன் வாழ்வைத் தேடிக் கடல்மேல் செல்வதனால்தான் அந்தக் குடும்பத்தின் இன்றைய வாழ்வின் தேவைகளுக்கு வேண்டிய ஈரம் பசைக்கிறது.

‘‘காபி சாப்பிடறேளா? இந்தாங்கோ!’’

‘‘குழந்தை இன்னும் வரலியேம்மா? அவனைப் பார்க்காமலா காபி?’’

‘‘அவன் ஏறத்தாழ வருவான். நீ நொண நொணன்னு அரிக்காம காபியைக் குடியேன்’’. பிள்ளையின் அதட்டலில் கிழவி மௌனமாகக் காபியை வாங்கிக் குடிக்கிறாள்.

விழிகள் மறுபடியும் சூனியத்தில் நிலைக்கின்றன.

எப்போதோ பன்னிரண்டு வயசில் பட்டணத்தில் ஜட்ஜ் வீட்டுக் கல்யாணத்தக்கு அவளுடைய அப்பா கூட்டிக் கொண்டு வந்தார். அப்போது பீச், லைட்ஹவுஸ் எல்லாம் கொண்டு காட்டினார். அப்போது நடுச் சமுத்திரத்தில் அவள் ஒரு கப்பல் நிற்கக் கண்டாள். அதற்குள் டென்னிஸ் கோர்ட், வெள்ளைக்காரர்கள் ஆணும் பெண்ணுமாக டான்ஸ் ஆடும் கூடம் எல்லாம் இருக்குமென்று அவர் சொன்னார். அந்தக் காலத்தில் கப்பலேறிப் போய் வந்தால் பிராயச்சித்தம் பண்ணிக் கொண்டால்தான் உள்ளே சேர்ப்பார்கள்.

போன வருஷம் தீபாவளி கழிந்து ஒருநாள் ‘‘பாட்டி போயிட்டு வரேன்’’னு சொல்லிக் கொண்டு போன குழந்தை இன்று முகத்தைக் காட்டப் போகிறான். ‘‘கப்பல் மதராஸுக்கு வருகிறது. அப்போது பார்க்கலாம். பிறகு இந்தக் கரைக்கு வர மூன்று வருஷமாகும்’’ என்று பிள்ளை சொன்னதைக் கேட்டுத் துடித்துக் கொண்டு பேரனைப் பார்க்க வந்திருக்கிறாள்.

அந்தக் கூடத்தை விட்டு வெளியே வருவதைப் பற்றிய சிந்தையே இல்லாமல் இருந்தவள் எங்கோ வந்திருக்கிறாள்.

குழந்தை ஏன் இன்னமும் வரவில்லை?

நடுக்கடலில் ஆளுயர அலை அடிக்குமாம். பதினேழு பதினெட்டு வருஷங்களுக்கு முன் ‘அவர்’ இருந்த நாட்களில் தை அமாவாசை, ஆடி அமாவாசை ஸ்நானம் செய்ய, ‘பிளஷர்’ வைத்துக்கொண்டு போயிருக்கிறார்கள். அந்தச் சமுத்திரம் அவள் மனக் கண்ணில் எப்போதும் தெரிந்து கொண்டிருக்கிறது. இரவும் பகலுமாக அந்தச் சமுத்திர ராஜாவைக் குழந்தை போகும் கப்பலுக்கு ஒரு தடங்கலும் உண்டாக்காமலிருக்க வேண்டிக் கொள்கிறாள்.

‘‘கப்பல் அப்பவே வந்துடும்னியேம்மா?’’

‘‘அடடா! வந்தா அவனுக்கு எத்தனையோ வேலை இருக்கும். சித்தப் பேசாம ராமா கிருஷ்ணன்னு உக்காந்திரு’’ என்று பிள்ளை கோபிக்கிறார்.

‘ராமா கிருஷ்ணா’ என்று சொல்லப் பொருந்துகிறதா நெஞ்சம்? எதை எதையோ நினைக்கிறது. நடுக்கடலில் நிற்கும் கப்பல் கரை தட்டி வருவது போலவும், அதிலிருந்து குழந்தை இறங்கிப் பெரிய பெரிய பூட்ஸ் அடிகளை ஈர மண்ணில் பதித்துக் கொண்டு நடந்து வருவது போலவும் கிழவி கற்பனை செய்து கொள்கிறாள். நெஞ்சு வேகமாக துடிக்கிறது. மெல்லக் காலை நீட்டினால் பளீரென்று மூட்டில் வலி வெட்டுகிறது. உள்ளங் காலெல்லாம் இரத்தம் கட்டிய வலி. அந்தக் காலத்தில் சாப்பிட்டு ஊஞ்சற் பலகையில் படுத்தால் லட்சுமி இதமாகக் காலைப் பிடித்து விடுவாள். அவளை அன்னம்மா பிள்ளைக்குத்தான் கட்டிக் கொடுத்தார்கள். திருச்சி ரெயில் ஆபீஸில் வேலை பார்க்கிறான். மூன்று குழந்தைகளுடன் போன மாசம் கிராமத்துக்கு வந்து பார்த்துவிட்டுப் போனாள்.

சிந்தனையோட்டம் தேயச் சற்றே கண்ணயர்ந்து போனாற்போலும், குரல் கேட்டாற்போலும் திடுக்கிட்டு விழிக்கிறாள்.

‘‘குழந்தை வந்துட்டானாம்மா?’’

‘‘நீங்க குளிச்சு ஜபம் பண்ணிச் சாப்பிடுங்கோம்மா. மணி பத்தாயிட்டது’’.

‘‘பத்தாயிடுத்தா? தூங்கிட்டேனா என்ன? குழந்தை எங்கே? சாப்பிடறானா?’’

‘‘ராஜன் மத்தியானத்துக்கு மேல்தான் வருவானாம். இப்பத்தான் உங்க பிள்ளை டெலிபோன்லே கேட்டார்’’.

‘‘டெலிபோனா? அது இங்கே இருக்கா? குழந்தை அதிலே பேசினானா?’’

‘‘ஆமாம்’’.’

‘‘அப்படீன்னா அப்புறமாவே குளிச்சிக்கிறேனே? அவனைக் கண்ணாலே பாக்கறதுக்காகவா உக்காந்திருக்கேன்? தொட்டுப் பார்க்க முடியாதேன்னுதானே இத்தனை தூரம் வந்தேன்! அப்புறமா குளிச்சிட்டு அவனோட சாப்பிடறேனே? தினம் தினந்தான் பத்து மணிக்குச் சாப்பிடறேனே?’’

‘‘ராம ராமா! இவளுக்கு எத்தனை தரம் சொன்னாலும் புரியாது! அவன் குளிச்சுச் சாப்பிட்டப்புறந்தான் வருவான்’’ என்கிறார் பிள்ளை.

‘‘ஆமாம்மா, உங்க ஸ்நானம் ஜபம் முடிச்சு, சாப்பிட்டுடுங்கோ. அப்புறம் தொட்டா என்ன?’’

‘‘அதுவும் சரிதான். தொட்டுப் பேசிட்டுக் குளிக்கறதும் சரியில்லை, மனசுக்கு எப்படியோ இருக்கும்’’.

குளியலறைக்கு மருமகள் இட்டுச் சொல்கிறாள்.

நீராடி, மடிசஞ்சியிலிருந்து எடுத்த மடி உடுத்து, கீழே வழுக்குத் தரையில் உட்கார்ந்து அன்றாட வழிபாட்டில் ஒன்றுகிறாள்.

காலணி ஓசை கேட்கிறது.

‘‘வா’ வா! ஏன் இத்தனை நேரண்டா ராஜா?’’

உருத்திராட்ச மாலை நழுவ, கண்கள் பிரமித்து நிலைக்க, ‘‘குழந்தே!’’ என்ற குரல் துளும்புகிறது.

உணவு கொள்ளுமுன், இறை வழிபாடு முடிக்குமுன் எதையும் தொடாத ஆசாரம் கழன்று விடுகிறது.

‘‘ஏன் பாட்டி? கீழே தரையில் உட்கார்ந்திருக்கே?’’’

பேரன் கிழவியை எழுப்பித் தூக்கிச் சோபாவில் உட்கார்த்துகிறான். சுமையாய்ச் சுமக்கும் வலிகளெல்லாம் கரைந்து போகின்றன. பொன் முடிந்த துணிக்குத் தீட்டு உண்டா? வயிற்றில் பிறந்ததன் வாரிசுக்குக் கப்பல் தீட்டு ஏது?

கிழவிக்குப் பேச்சு எழவில்லை.

‘‘என்னடா ராஜா கையிலே பாண்டேஜ்?’’ என்ற மருமகளின் குரல் கேட்டு அதிர்ச்சியுறுகிறாள்.

‘‘ஒண்ணுமில்லேம்மா; பாயிலர்ல சுட்டுடுத்து’’.

‘‘சுட்டுடுத்தா? சுட்டுடுத்தா? பாயிலர்லேந்து வெந்நீர் எடுத்து வைக்க ஆளில்லையாடா குழந்தே?’’

பேரன் விழுந்து விழுந்து சிரிக்கிறான்.

‘‘ஐயோ பாட்டி, சுடவுமில்லே, ஒண்ணுமில்லை. சும்மாத்தான் துணியைச் சுத்திண்டிருக்கேன். நீ தொடுகிறாயான்னு பார்க்க!’’

பாட்டி விம்மிதத்துடன் அவன் முகத்தை, முடியை, சட்டைபோட்ட மேனியை, கைகளைத் தொட்டுப் பார்க்கிறாள். உயரமும் பருமனுமாக அவன் தாத்தாவைப் போலிருப்பான். அவர் குடுமி, இவன் கிராப்பு. காதுகளில் பிழம்பாய் ஒளிரும் கடுக்கன்கள் இருக்கும் அவருக்கு. ராஜ கம்பீர நடை, இவனுக்கு? இந்தக் குலக்கொடிக்கு அந்த மண்ணை நுகர நிழலில்லை.

வயிற்றில் சொரேலென்று குழி பறிக்கிறது.

‘‘குழந்தே நீ இளைச்சுப் போயிட்டியேடா?’’

‘‘ஐயையோ குண்டோதரன் மாதிரி இருக்கேன்னு எல்லாரும் சொல்றா!’’

கிழவியின் மனம் கப்பல் ‘ஞான’த்தை நினைவு கூருகிறது. அந்தக் காலத்தில் ரங்கூன் கப்பலுக்குப் போகிறவர்கள் எட்டு நாளைக்குக் காப்பி டிகாக்ஷனும் புளியோதரையும் பூரியும் காரத் துவையலும் கொண்டு போவார்களாம், டப்பிப் பால் காபிக்கு. கரைக்குக் கரை போகுமுன் நடுவிலே ரெயில் ஸ்டேஷன் மாதிரி என்ன கிடைக்கும்?

‘‘கப்பல்லே சாப்பாட்டுக்கு எல்லாம் கிடைக்குமாடா குழந்தே?’’

‘‘நிறையக் கிடைக்கும் பாட்டி. சாப்பாட்டுக்கு வேண்டியதெல்லாம் கரையிலேயே ஏத்திப்போம்’’.

‘‘சமையல்காரன் நன்னாச் சமைச்சுப் போடுவானோ ருசியா?’’

பிள்ளைக்குக் கோபம் வருகிறது.

‘‘இதான் இவகிட்ட, நொண நொணன்னு கேள்வி கேட்ப!’’

குற்ற உணர்வோடு மௌனமாகிறாள் முதியவள்.

‘‘பாட்டிக்கு இப்ப பார்வை சுத்தமா இல்லை போலிருக்கே? காட்ராக்ட் முத்திடுத்துன்னா பட்டணம் வந்திருக்கேள், கண்ணை நல்ல சர்ஜனிடம் காட்டலாமே?’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லேடா குழந்தே. எனக்கு நன்னாத்தான் எல்லாம் தெரியறது. உன்னைப் பார்க்கத்தான் நான் வந்திருக்கேன். சமுத்திரத்திலே பெரிய பெரிய அலை அடிக்கிறப்ப கப்பல் ரொம்ப ஆடுமோடா குழந்தே?’’

‘‘சே சே! சும்மா தொட்டிலாடறாப் போல இருக்கும், அவ்வளவுதான். பாட்டியை ஒரு டாக்ஸி வச்சு மட்றாஸெல்லாம் சுத்திக் காட்டுங்கோப்பா’’.

‘‘ஆமாம், ரொம்ப நாளாத் திருப்பதிக்குப் போகணும்னு சொல்லிண்டிருந்தா. ஊரை விட்டுக் கிளம்பியாச்சு, அங்கேயும் போயிட்டுத் திரும்பத்தான் உத்தேசம்’’.

‘‘எனக்கு ஒண்ணுமே பார்க்க வேண்டாம். இலையைப் போடம்மா. குழந்தையும் சாப்பிடட்டும்’’.

‘‘நானா? நான் ஒன்பது மணிக்கு பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டுத்தான் வந்தேன் பாட்டி. பகல் ஒண்ணரை மணிக்கு ஒரு சிநேகிதன் கல்யாண விருந்து கொடுக்கிறான். போகணும்’’.

‘‘அப்ப, இங்கே நீ சாப்பிடாமே, என்னை உன்னை வச்சிட்டுச் சாப்பிடச் சொல்றியா குழந்தே?’’

மருமகள் கீழே இலை போட்டுப் பரிமாறுகிறாள். கிழவியைப் பேரன் எழுப்பி உட்கார வைக்கிறான்.

பச்சடி, கூட்டு, கறி, பருப்பு என்று மருமகள் சாப்பாட்டு அடுக்கைத் திறந்து பரிமாறுகிறாள்.

‘‘ஒரு வாய் பருப்பும் சாதமும் தரேன். வாங்கிக்காட்டா மனசு கஷ்டப்படும் குழந்தே!’’

‘‘சரி’’ என்று பேரன் வாங்கிக்கொள்கிறான்.

‘‘சச்சு பிள்ளை நட்டு சுவாமிமலைக்கு வந்துட்டு வந்தான். ‘உங்க பேரன் கோழியும் மீனும் ஆடும் சாப்பிடக் கத்திண்டிருப்பான்’ என்றான். ‘வேற தண்ணி மேல போறப்ப பூசணிக்காயும் கொத்தவரங்காயுமா கிடைக்கும், அவியல் பண்ணித் திங்க? கடல் வாழக்காய்தான்’னான். நிசமாடா குழந்தே?’’

பாட்டிக்குக் கண்களில் நீர் தளும்புகிறது.

பேரன் குலுங்கக் குலுங்கச் சிரிக்கிறான்.

‘‘எதுக்குடா குழந்தை சிரிக்கறே? அப்படித்தானா? படிப்படியா வடிச்சு, வந்தவாளுக்கெல்லாம் போட்ட வீட்டில் பிறந்த உனக்கு அந்தச் சாதமும் நிழலும் இல்லாமப் போயிடுத்தேன்னு…’’

கிழவியின் புலம்பலில் பிள்ளையின் பொறுமை குலைகிறது.

‘‘ஆரம்பிச்சுட்டாளா? நான் என்ன சொல்லிக் கூட்டிண்டு வந்தேன்?’’

‘‘இல்லேப்பா, அந்த நட்டு பொய் சொல்றான்னு எனக்குத் தெரியாதா? நான் நம்பலை’’.

வெளிப்படையாக நா மழுப்பினாலும், ‘ஒரு சாக்கு அரிசி கொண்டு வந்து கப்பலில் ஏற்றக் கூடாதா? குழந்தைக்குப் பல நாளைக்கு அது வருமே?’ என்று நெஞ்சு பேதைமையுடன் நினைக்கிறது.

‘‘பாட்டி, என் சாப்பாட்டைப் பற்றிக் கொஞ்சங்கூடக் கவலைப்பட வேண்டாம் நீங்க. ஃபஸ்ட் கிளாஸ் அரிசிச் சாப்பாடு. உங்களை எல்லாம் அடிக்கடி பார்க்க முடியாது; அவ்வளவுதான்’’.

‘‘மிஷின்லே வேலை செய்வேன்னா, அதெல்லாம் தூக்கி எடுக்கப் பளுவா இருக்குமோ? கஷ்டமா…?’’

‘‘அதெல்லாம் ஒண்ணுமில்லை பாட்டி. சும்மா மனசை ஏன் அலட்டிக்கிறேள்?’’

‘‘ஆமாம். கேள்வி கேட்டுக் கேட்டு உண்டு இல்லைன்னு தீர்த்துடுவ. சாப்பிட்டுச் சாப்பிட்டுத் திண்ணையிலே உட்கார்ந்தா செலவுக்குப் பணம் வந்து குதிக்குமா? கிராமத்தில் என்ன இருக்கு இப்பல்லாம்? சொச்ச மிச்சம் இருப்பதை ஒழிச்சிண்டு பட்டணத்திலே ஒரு வீட்டைக் கட்டிப் போட்டால் எவ்வளவோ சௌகரியமாயிருக்கும்’’.

‘‘நல்ல யோசனைதான் அப்பா. இடம் ஏதேனும் பாருங்கள். பட்டணமாக இருப்பதனால் கப்பல் வரும்போது உங்களுக்கும் பார்க்க முடியும்’’.

கிழவி இடி விழுந்தாற்போன்று அதிர்ந்து சரிகிறாள்.

‘‘என்னடா சொல்றே குழந்தே!’’

‘‘ஒண்ணும் சொல்லலே. நீ சித்த பேசாம இரும்மா!’’ என்று மகன் வாய்ப்பூட்டுப் போடுகிறார்.

காலம் காலமாய் ஆற்றின் கரை ஈரப் பொசிவில் வேரோடி இருந்த மரம், வெட்டி வெட்டி மொட்டையாக்கினாலும், தளிர்த்துக் கொண்டிருந்தது. ஆறு மணலாறாய் வறள, பூச்சிகள் வேர்களை அரிக்கத் தொடங்கிய பிறகு தளிர்க்கும் ஈரமும் மாய்ந்து, எப்போதோ அடிக்கப் போகும் ஒரு பெருங்காற்றுக்குக் காத்திருக்கிறது. அதைப் பெயர்த்து இன்னொரு மண்ணில் நட முடியுமா?

அவளுடைய உடல் எப்போதோ சொன்னபடி கேட்காமலாகிவிட்டது. ஆனால் அந்த மனசு, என்றுமே தனக்கென்று மட்டும் நினைத்ததில்லை. கல்யாணம், கார்த்திகை, நோவு நொடி, பிள்ளைப்பேறு என்று யார் எந்த உதவி நாடி வந்தாலும் அந்தப் பெரிய வீட்டில் இடம் கொடுக்க அவள் மனத்தில் இடம் இருந்தது. அவர் இருந்த நாளில் எத்தனை ஏழைப் பிள்ளைகளுக்குப் பிரம்மோபதேசம் செய்து வைத்திருக்கிறார்கள்! பருப்புத் தேங்காய்ப் பாகு மணக்காத மாசம் இல்லை. அந்த நித்யகல்யாணக் கூடம் கோலாகலம் கண்டு எத்தனையோ நாட்களாயின. அந்தச் சமையலறை அடுப்பில் மருமகள் ஒரு வெண்கலப் பானையை வைத்து வடித்துச் சமைத்துவிட்டு அணைத்துவிடுகிறாள். மாசாமாசம் பாங்கிக் கணக்கில் பணம் வந்து செலவு செய்கிறார்கள். குலக் கொழுந்தான செல்வன் மண்ணும் வேருமில்லாததோர் வாழ்வுக்குப் போய்ப் பணம் சம்பாதிக்கிறான். அவன் கண்முன் நடப்புக்களை மறக்கும் இருட்டை வரவேற்காமல் எப்படி இருப்பாள்? இருட்டில் உட்கார்ந்து உண்மையை மறந்து, திரையில் காண்பதை ரசிப்பதுபோல, கடந்து போன நாட்களில்தான் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.

‘‘பாட்டி, போயிட்டு வரட்டுமா? மணியாயிடுத்து’’. அந்தக் கை படும்போது சிலிர்ப்பில் மூழ்கி எழுந்திருக்கிறாள்.

‘‘போயிட்டு வரியா குழந்தே?’’

நூழிலையில் தொங்கும் ஈயக்குண்டை நினைப்பூட்டுகிறது குரல்.

‘‘கண்ணை டாக்டரிடம் காட்டிண்டா, அடுத்த தடவை நான் வரப்ப உன்னைக் கப்பலுக்குக் கூட்டிப் போய்க் காட்டுவேன்; மாட்டேங்கறியே?’’

‘‘எனக்கு இப்ப என்ன தெரியலே? நீ போற சமுத்திரத்தின் அலை இந்த நெஞ்சிலே அடிச்சிண்டே இருக்குடா கண்ணா. இப்ப நீ எம் முன்னாடி இருக்கே. சித்தப் போனா, அந்த நெஞ்சுக்குள்ளே இருக்கற சமுத்திரத்திலே இருப்பே. வேற எனக்குக் கண்பார்வை எதுக்குடா குழந்தே?’’

ராஜன் அவள் பிடியினின்று விலகி விடைபெற்றுக் கொண்டு போகிறான். அவனைத் தொடர்ந்து தாயும் தந்தையும் வாசலுக்குச் செல்கின்றனர்.

வில்லை அணிந்த ஓட்டல் பணியாள் சாப்பாட்டு அடுக்கை எடுத்துச் செல்ல அறைக்குள் வருகிறான்.

கிழவி வெற்றிடத்தைப் பார்த்துக்கொண்டு துணி மூட்டையாய் அழுந்திப் போகிறாள். ‘படி இறங்கிப்போய், ரெயிலேறி, அந்தக் கூடம்…’ என்ற உணர்வே மிஞ்சுகிறது.

(பாரி புத்தகப் பண்ணை வெளியிட்ட ‘உயிர்ப்பு’ சிறுகதைத் தொகுப்பிலிருந்து…)

ராஜம் கிருஷ்ணன்

1925ம் ஆண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறியில் பிறந்தார். பள்ளிக்குச் சென்று முறையான கல்வி பயிலாதவர். 15 வயதில் இவருக்கும் கிருஷ்ணனுக்கும் திருமணம். கணவர் மின் பொறியாளர். அவர் உதவியோடு புத்தகங்களைப் படித்தார். பிறகு அவரே எழுத ஆரம்பித்தார். ‘கரிப்பு மணிகள்’, ‘முள்ளும் மலரும்’ உள்ளிட்ட இவருடைய பல நாவல்கள் கள ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டவை. பெண் மன உணர்வுகளை யதார்த்தமாக பிரதிபலிக்கும் எழுத்துக்கள் இவருடையவை. ராஜம்-கிருஷ்ணன் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. தொண்ணூறாம் வயதில் கணவர் இறந்த பிறகு தனியாக வசித்து வந்தார். சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்ற இவர், போது சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் பெண்களுக்கான பொது வார்டில் உடல்நலம் குன்றி படுத்த படுக்கையாக இருக்கிறார்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *