தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 7, 2013
பார்வையிட்டோர்: 10,843 
 
 

பார்வதிக்கு தான் அழுதுவிடுவோமோ என்கிற பயம் வந்தது. அழுகையை அடக்கப் பற்களைக் கடித்துக் கொண்டு, கண்களை இறுக மூடிக் கொண்டாள்.

“”கடவுளே… ஊர் போய்ச் சேர்ற வரைக்கும் என்னோட அழுகாச்சியை அடக்கி வை…”

பார்வதி, அமுதாவின் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள். மத்தியான நேர வெயிலில் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையம் கொஞ்சம் காற்று வாங்கிக் கொண்டிருந்தது. பார்வதியால் நிம்மதியாக நிற்க முடியவில்லை. குமரேசனை நினைக்க நினைக்க அவளுக்குள் ஆங்காரமும் கோபமும் பொங்கி வந்தது.

“நீயெல்லாம் ஒரு மனுசனா இப்படி தெனமும் குடிச்சுப்போட்டு வந்து அடிக்கறியே? உனக்கு மனசாட்சின்னு ஒண்ணு இருக்கா பேசாம என்னைக் கொன்னு போட்டுடு…

தண்டனைஎன்னை எதுக்கும்மா ஒரு மிருகத்துக்கு கல்யாணம் பண்ணி வச்சீங்க… நான் பாட்டுக்கு நூல் மில்லுக்கு கணக்கு எழுதற வேலைக்குப் போயிட்டிருந்தேன். எவ்வளவு சுதந்திரமா இருந்துச்சு அந்த வாழ்க்கை… நல்லவன்னு நெனைச்சு ஒரு குடிகாரப் பாவிக்கு கட்டி வெச்சிட்டீங்களே…’

பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டாள். நரகத்தில்கூட இத்தனை கொடுமைகள் இருக்குமா? என்கிற சந்தேகம் வந்தது அவளுக்கு. ஒருநாள்கூட நிம்மதியாக இருந்தது இல்லை.

அமுதாவுக்கு பாட்டி ஊருக்குப் போகிற சந்தோசம். அவள் கூட்டம் குறைவாக இருந்த பேருந்து நிலையத்தை உற்சாகமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறாள்.

“”முறுக்… முறுக்கேய்…” முறுக்கு விற்பவர் அவர்களைக் கடந்து போனார்.

“”அம்மா… முறுக்கு வாங்கித் தர்றியா?” அமுதா ஆசையோடு கேட்டாள்.

பார்வதியிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டு மட்டுமே இருக்கிறது. டிக்கெட் வாங்க சரியாக இருக்கும்.

“”இங்க வேண்டாம் சாமி… பாட்டி ஊருக்குப் போயி வாங்கித் தர்றேன். அம்மாகிட்ட காசில்ல…”

அமுதா சிரித்துக் கொண்டே, “”சரிம்மா” என்று சொன்ன போது பார்வதிக்கு தன்னை மீறி அழுதுவிடுவோமோ என்று தோன்றியது.

அய்யோ… இவ எது சொன்னாலும் கேட்டுக்கறாளே… எம் வயித்தில வந்து பொறந்துட்டு சிறுமைப்பட்டு சீரழியுறாளே…

அமுதா, பார்வதியின் கலங்கிய கண்களைப் பார்த்தாள்.

“”அம்மா… அழாதம்மா அப்புறம் எனக்கும் அழுகாச்சி வந்திடும்…”

“”இல்லடா செல்லம்… கண்ணுல ஏதோ விழுந்திருச்சு… நான் அழமாட்டேன்… ”

பார்வதி கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“”அப்பா இனிமே வராதாம்மா?”

பார்வதி பதில் சொல்லவில்லை.

“”நாம இனிமே அப்பாகூட போய் இருக்கமாட்டோமா?”

பார்வதி அழுகையை அடக்கிக் கொண்டு அமுதாவின் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தாள்.

அமுதா கேட்டுக் கொண்டிருக்கும்போதே ஆறாம் நம்பர் பஸ் வந்துவிட்டது.

“”அமுதா… பஸ் வந்துடுச்சு… வா வா…” பார்வதி அமுதாவைத் தூக்கிக் கொண்டு ஓடினாள். பஸ்சில் கூட்டம் இல்லை. உட்கார இருக்கை கிடைத்தது. தெரிந்த முகம் எதுவும் அகப்படாதது நிம்மதியாக இருந்தது.

“”ரெண்டு குளத்தூர்…” என்று டிக்கெட் வாங்கிக் கொண்டாள்.

காலையில் பத்து மணிக்கு திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் இருந்து புறப்பட்டது. பொள்ளாச்சி வந்து சேர இரண்டரை மணிநேரம் ஆகிவிட்டது. ஆறாம் நம்பர் பஸ்சுக்காக ஒரு முக்கால் மணிநோம் காத்திருப்பு.

மணி இப்ப ரெண்டுக்குப் பக்கம் இருக்குமே… அமுதா காலையில ரெண்டு இட்டிலி மட்டும் சாப்பிட்டது. “”அய்யோ… என்னோட பிரச்னையில் இவ பசியப் பத்தி யோசிக்காம விட்டுட்டனே… பாவம் புள்ள… ஒரு வாய் தண்ணிகூட குடிக்கலியே…

செல்லம் பசிக்குதாடா…?”

அமுதா சிரித்துக் கொண்டே பார்வதியின் கண்களைப் பார்த்தாள்.

“”பசியே தெரியலம்மா…” என்றாள். கண்களில் பசியின் வலி தெரிந்தது.

பசியோட இருக்கறா… என்னைத் திருப்திப்படுத்த பசியே தெரியலன்னு சொல்றாளே… கடவுளே… நான் என்ன செய்வேன்?

“”அம்மா… அப்பா இனிமே வராதா?” அமுதா மறுபடியும் அந்தக் கேள்வியைக் கேட்டபோது அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை.

“”அம்மா மடியில் சாஞ்சுக்க… பாட்டி வீட்டுக்கு போனதும் முதல்வேளையா வயிறு நெறக்க சாப்பிடனும்…”

மிஞ்சிப் போனால் அரைமணிநேரம். அதுகூட ஆகாது. குளத்தூர் வந்துவிடும்.

அம்மாவிடம் என்ன சொல்வது? அண்ணன் என்ன சொல்லப் போகிறானோ?

இந்த ஆறு வருட வாழ்க்கையில் பார்வதி ஒரு நாள்கூட நிம்மதியாக இருந்ததில்லை.

பார்வதி பிளஸ்-டூ முடித்துவிட்டு பக்கத்தில் ஒரு ஸ்பின்னிங் மில்லில் அக்கவுண்டட் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள். தூரத்துச் சொந்தமான நாராயணசாமி மாமா ஒருநாள் வீட்டுக்கு வந்தார். குமரேசனைப் பற்றி அம்மாவிடமும் அண்ணனிடமும் அவர் பேசினார்.

பையன் தங்கமான பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்லே. பனியன் கம்பெனியில சூப்பர்வைசர் வேலை. நல்ல சம்பளம். கொஞ்ச வருசம் போனா சொந்தமா ஒரு பனியன் கம்பெனியே வெச்சிருவான். நீங்க உங்க பொண்ணை நம்பிக் கொடுக்கலாம்…

நம்பிக்கையான பேச்சு. நம்பும்விதமாக அழகாகப் பேசினார். பொய்யான நம்பிக்கையை ஏற்படுத்தி நம்பிக்கைத் துரோகம் செய்யும் வார்த்தைகள். எதற்காக இப்படி பொய் சொல்லி அடுத்தவர் வாழ்க்கையில் நிம்மதியைக் கெடுக்க வேண்டும்?

நாராயணசாமி மாமா சொன்னதை நம்பி பார்வதியும் கனவு கண்டாள். அன்பான புருசன். நிம்மதியான வாழ்க்கை. குமரேசனைப் பற்றி கனவு கல்யாணத்தன்றே நொறுங்கிப் போனது.

மணமேடையில் பார்வதி குமரேசன் அருகே உட்காரும்போதே குப்பென்று வீசும் அந்த வித்தியாசமான வாசனையை உணர்ந்தாள். சந்தேகப்பட்டு அவனைப் பார்த்தாள். அவனால் சரியாக உட்காரக் கூட முடியவில்லை. அவன் லேசாக தள்ளாடிக் கொண்டிருந்தான். குடித்துவிட்டு வந்திருக்கிறான்.

பார்வதிக்கு திக்கென்றது. தாலிகட்டும் நேரத்தில்… இப்போது என்ன செய்வது சட்டென்று எழுந்து ஓடிவிட்டால் என்ன? குழம்பிப் போய் உட்கார்ந்திருந்தாள். அவளால் எதுவும் செய்யமுடியவில்லை. தாலிகட்டி முடித்த அரைமணிநேரத்தில் அவன் எல்லைமீறிய போதையில் இருப்பது தெரிந்தது.

பார்வதி அம்மாவிடம் அழுதாள்.

“”என்னம்மா இது என்னை பாழுங் கிணத்துல தள்ளிட்டியே”

அம்மாவுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

வாழ்க்கைப்பட்டு திருப்பூருக்குப் போன பின்னால்தான் தெரிந்தது. குமரேசன் உருப்படியாக ஒரு வேலையிலும் இல்லை. ஒரு நாள் வேலைக்குப் போனால் ஒன்பது நாள் சும்மா இருப்பான். ஆனால் குடிப்பதற்கு தினமும் காசு வேண்டும். அனுப்பர்பாளையம் ஜீவா நகருக்கு தனிக்குடித்தனம் வந்தார்கள். பார்வதி, பனியன் கம்பெனி வேலைக்குப் போனாள். அவள் சம்பாதிக்கும் காசு குமரேசன் குடிப்பதற்கே சரியாக இருந்தது. காசு இல்லையென்ற வார்த்தையைச் சொல்லக்கூடாது. சொன்னால் மிருகமாக மாறிவிடுவான்.

“”காசு இல்லியா… சம்பாதிச்ச காச என்னடி பண்ணினே? கள்ளப்புருசனுக்கு கொடுத்துட்டு வந்திட்டியா?”

அவளை எட்டி உதைப்பான். மோசமான கெட்ட வார்த்தைகளால் அவளைத் திட்டிக் கொண்டே அடிப்பான். விறகுக்கட்டை, தென்னைமட்டை என்று அவன் கைக்கு எது கிடைத்தாலும் எடுத்து பார்வதியை ஒரு மனுஷியாக நினைக்காமல் அடிப்பான்.

மிக்ஸி, கிரைண்டர், டி.வி. என்று எந்தப் பொருளையும் அவன் விட்டுவைத்ததில்லை. எடுத்துக் கொண்டுபோய் விற்றுவிடுவான். கிடைக்கிற பணத்தில் குடித்துவிட்டு வருவான்.

நல்லவேளையாக வீடு இவள் பெயரில் இருக்கிறது. இல்லையென்றால் அதையும் விற்றிருப்பான். போன வருசம் மாமியார் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்னால் மாமியார் ஒரு நல்ல காரியம் செய்தார். வீட்டை பார்வதி பேரில் எழுதிவைத்துவிட்டார்.

குமரேசன் ஒருநாளும் அன்பான வார்த்தைகளைப் பேசியதேயில்லை.

பஸ் திருவள்ளுவர் திடலுக்கு வந்தபோது அமுதா தூங்க ஆரம்பித்துவிட்டாள்.

அதுக்குள்ள தூங்கிட்டாளே… பாவம் பசி மயக்கம். முதல்ல போனதும் இவளுக்கு வயித்துக்கு ஏதாச்சும் கொடுக்கனும்…

பார்வதியால் இருக்கையில் சாய்ந்து உட்கார முடியவில்லை. முதுகில் தீக்காயம் எரிந்தது. குமரேசன் சிகரெட்டால் வைத்த சூடு எரிச்சலாய் வலித்தது.

நேற்று அவன் குடிக்காமலே வெறிவந்தவன் போல நடந்து கொண்டான். தொடை, கால், முதுகு என்று… சூடு வைத்தபோது வலி தாங்கமுடியாமல் கத்தினாள்.

“”அய்யோ… பாவி… இப்படி பண்றியே.. பேசாம என்னைக் கொன்னு போட்டுடு…”

“”பணத்தை எங்கடி வச்சிருக்கறே சொல்லுடி…”

“”என்கிட்ட பணம் இல்ல…”

“”பொய்யாடி சொல்றே? நேத்து கந்துவட்டிக்காரன்கிட்ட ஆயிரம் ரூபா கடன் வாங்கி இருக்கறே. பொய்யாடி சொல்றே பொய்யி… எங்கேடி அந்தப் பணம் எவனுக்காச்சும் தூக்கி குடுத்திட்டியா?” அவளை எட்டி உதைத்துக் கீழே தள்ளினான்.

வீடுபூராவும் தேடினான். அண்டா, குண்டா பாத்திரம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்தான். பணம் கிடைக்கவில்லை. வெறிவந்தவன் போல் சாமான்களையெல்லாம் போட்டு உடைத்தான்.

“”அம்மா… அம்மா… அழாதம்மா…” அமுதா பார்வதியைக் கட்டிப்பிடித்து அழுது கொண்டிருந்தாள்.

அமுதாவுக்கு போட்டுக் கொள்ள உருப்படியாக ஒரு துணிமணியும் இல்லை. எல்லாம் கிழிந்த துணிகள். இரண்டு – மூன்று துணிகள் வாங்கிவிட வேண்டும் என்று கந்து வட்டிக்காரரிடம் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தாள். அந்த கந்து வட்டிக்காரர் குமரேசனிடம் உளறித் தொலைத்திருக்கிறார்.

குமரேசன் வீடு பூராவும் தேடிப் பார்த்துவிட்டு சோர்ந்து போய்விட்டான். ஆத்திரம் அடங்காமல் கெட்ட கெட்ட வார்த்தைகளால் திட்டிக் கொண்டிருந்தான். கடைசியாக சந்தேகப்பட்டு அமுதாவின் புத்தகப் பையை எடுத்துப் பார்த்தான். அதில்தான் பார்வதி ஆயிரம் ரூபாயை மறைத்து வைத்திருந்தாள்.

“”பொய்யாடி சொல்றே… பணத்தை இதுல ஒளிச்சு வெச்சுட்டு… இல்லேன்னு சாதிக்கறே… எவ்வளவு கொழுப்புடி உனக்கு…” குமரேசன் வெறி தலைக்கு ஏறியது. அமுதாவின் புத்தகங்கள், நோட்டுகளை தாறுமாறாக கிழிக்க ஆரம்பித்தான்.

“”பாவி… பாவி… இப்படிப் பண்றியே… புள்ளைக்கு ஆசையா துணி வாங்க வச்சிருந்த காசு… புத்தகத்தை எல்லாம் போட்டுக் கிழிக்கறியே… நீ மனுசனா? மிருகமா?”

பார்வதி அழுது கதறியதை காதில் வாங்கிக் கொள்ளாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடினான். ஆயிரம் ரூபாயையும் ஒரே நாளில் குடித்துத் தீர்த்துவிட்டுத்தான் வருவான்.

பார்வதி நொறுங்கிப் போய்விட்டாள். விடிய விடிய தூங்காமல் அழுது கொண்டிருந்தாள்.

“”இத்தனை கொடுமையை அனுபவிச்சுட்டு எதுக்காக உயிரோட இருக்கணும்?”

அமுதா தூக்கத்தில் உளறிக் கொண்டிருந்தாள்.

“”அம்மா… அழுகாதம்மா… அழுகாதே…”

போதும்… இங்கிருந்து இந்தக் கொடுமையை அனுபவிக்கறதுக்கு பேசாம ஊருக்குப் போய் கூலி வேலை பாத்தாவது பொழைச்சுக்கலாம்… இது நரகம்… இது வேண்டாம்…

பார்வதி, அமுதாவோடு வாசலில் வந்து நின்ற கோலத்தைப் பார்த்து முத்தம்மாவின் அடிவயிறு கலங்கிப் போனது.

“”பார்வதி… என்ன இப்படி வந்து நிக்கறே?”

“”அம்மா… அமுதா பசியோட இருப்பா… சாப்பிட ஏதாச்சும் கொடும்மா”

பார்வதி திண்ணையில் உட்கார்ந்து கொண்டாள்.

“”அம்மா… நான் ஒரு முடிவோட வந்திருக்கறேன்… இனிமே நான் அந்த ஆள்கூட சேர்ந்து பொழைக்கிறதா இல்லே… என்னால முடியலம்மா… மனுசனா அவன் இங்க பாரும்மா எப்படி சூடு வச்சிருக்கறான்னு…”

முத்தம்மாள் அதிர்ந்து போனாள்.

“”அடப்பாவி… இப்படி கொடுமை பண்ணியிருக்கிறானே… எம் பொண்ணை நான் எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு வளர்த்தேன். அவ வாழ்க்கை இப்படி ஆயிப்போச்சே” முத்தம்மாள் தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

“”நான் இங்கேயே இருந்துடறேன்… கூலி வேலை இல்லாட்டி மில்லு வேலைக்குப் போயி எம் மகளைக் காப்பாத்திக்கறேன். அமுதா மட்டும் இல்லாட்டி நான் எப்பவோ செத்துருப்பேன். அவளை நல்லபடியா வளர்க்கணும்ங்கறதுக்காகத்தான் உயிரைக் கையில புடிச்சிட்டு இருக்கறேன்…”

அமுதா ரசத்தோடு சோற்றை உறிஞ்சி உறிஞ்சி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

“”நான் என்ன செய்வேன்… எம் பொண்ணு வாழ்க்கை போச்சே…” முத்தம்மாள் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள்.

ஏழெட்டு நாட்கள் கழித்து பார்வதியைத் தேடிக் கொண்டு குமரேசன் வந்தான்.

பார்வதியின் அண்ணன் மாணிக்கம் அவனை அடிக்கப் போய்விட்டான்.

“”மச்சான்… எம்மேல தப்புத்தான்… என்னை மன்னிச்சுடுங்க… உங்க கால்ல வேணும்னாலும் விழறேன். நான் செஞ்சது தப்புத்தான். இனிமே குடிக்கமாட்டேன். பாழாப்போன குடியினால அறிவுகெட்டத்தனமா நடந்துட்டேன்… என்னை மன்னிச்சுடுங்க… இனிமே நான் குடிக்கமாட்டேன்… நான் திருந்திட்டேன். டாக்டர் என்னைக் குடிக்கக் கூடாதுன்னு சொல்லிட்டாரு… இனி குடிச்சா நான் செத்தே போயிடுவேனாம்… நான் குடிக்கறதை விட்டுட்டேன். ஒழுங்கா வேலைக்குப் போயி எம் பொண்டாட்டியையும், புள்ளையையும் காப்பாத்துவேன். இது சத்தியம். உங்க கால்ல வேணும்னாலும் விழுறேன்”

குமரேசன், மாணிக்கத்தின் காலில் விழுந்தான். முகத்தில் அடித்துக் கொண்டு அழுதான்.

“”நான் இனிமே குடிக்கமாட்டேன்… இது சத்தியம்… எம் பொண்டாட்டி குழந்தையை நல்லபடியா காப்பாத்துவேன்….”

காலையில் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தவன் மத்தியானம் ஆகியும் அடங்கவில்லை. ஊர்க்காரர்கள் கூடிவிட்டார்கள்.

“”மாணிக்கம்… அவன் அழுறதைப் பாரு… பார்க்கவே பரிதாபமா இருக்கு… எத்தனை நாளைக்கு உன் தங்கச்சி தனியா இருக்கப் போறா… உனக்கும் கல்யாணம் காச்சின்னு பாக்க வேணாமா… உன்னைப் பாக்க பொண்ணு வீட்டுக்காரங்க வந்தாங்கன்னா, என்ன நெனைப்பாங்க உன் தங்கச்சி இப்படி இருக்கறதைப் பார்த்துட்டு பொண்ணு கொடுக்கறதுக்கு யோசிப்பாங்க… குமரேசன் மனசு மாறி வந்திருக்கறான்.. பொட்டைப் புள்ளை புருசன்கூட இருக்கறதுதான் நல்லது…”

மாணிக்கத்திடம் பக்கத்து வீட்டுக்காரர்கள் பேசினார்கள். மாணிக்கத்திற்கும் அது சரியென்றுபட்டது.

“”பார்வதி… உன் புருசன் மனசு மாறி திருந்தி வந்திருக்கறான்… பாக்கறதுக்கே பாவமா இருக்கு… நீயும் பொட்டைப் புள்ளைய வச்சிட்டு என்ன செய்வே… இனிமே குடிக்க மாட்டேன்னு சாமி மேல சத்தியம் பண்றான். திருந்தி வந்தவனுக்கு ஒரு வாய்ப்பு கொடு… போ… போய் சந்தோசமா குடும்பம் நடுத்து. பிரச்னை ஏதாச்சும்னா தகவல் கொடு. நாங்க எதுக்கு இருக்கறோம்?”

ஆள்ஆளாக்குச் சொன்னார்கள்.

பார்வதிக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி இப்படி மாறிவிட்டான்? பார்வதி எந்த முடிவும் எடுக்க முடியாமல் தவித்தாள்.

“”நீ என்னை நம்பலை… நான் உன்னோட கால்ல வேணும்னாலும் விழறேன்… சத்தியமா குடிக்கமாட்டேன் பார்வதி. என்னை நம்பு…” குமரேசன் காலில் விழ வந்தான். எல்லாரும் அவனைத் தடுத்தார்கள்.

திடீர்னு இப்படித் திருந்துறதுக்கு என்ன காரணம்? சரி நடப்பது நடக்கட்டும்… போய் பார்ப்போம்… பார்வதி முடிவெடுத்தாள்.

குமரேசன் இப்படி அழுது அவள் பார்த்ததில்லை.

முத்தம்மாவுக்கு ஒரு வகையில் சந்தோசமாக இருந்தது.

“”மாப்பிள்ளை திருந்திட்டாரு… இனி மகள் சந்தோசமா இருப்பா…” என்று நினைத்தாள். மத்தியானம் கோழியடித்து குழம்பு வைத்தாள். கறிக்குழம்பு சாப்பிட்ட கையோடு குமரேசனும் பார்வதியும் அமுதாவோடு கிளம்பினார்கள்.

பொள்ளாச்சி பேருந்து நிலையம். திருப்பூர் பஸ்சுக்காக காத்திருந்தபோது குமரேசன் சொன்னான்.

“”பார்வதி… அமுதாவுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டுப் போனான்.

“”அப்பா பாவம்… ஏம்மா இனிமே குடிக்கமாட்டாரு… ஏம்மா?”

அமுதா ஏதேதோ சொல்லிக் கொண்டிருந்தாள்.

கொஞ்ச நேரம் கழித்து குமரேசன் வந்து நின்றான்.

“”என்ன வெறுங்கையோடு வர்றீங்க?” பார்வதி கேட்கும்போதே குமரேசனிடம் குப்பென்ற வாடை. குடித்துவிட்டு வந்திருக்கிறான்.

“”குடிச்சிட்டு வந்திருக்கறியா?”

“”ஆமாண்டி… குடிச்சுட்டுத்தான் வந்திருக்கறேன்… அதுக்கு இப்ப என்ன?”

“”அடப்பாவி… நீயெல்லாம் ஒரு மனுசனா குடிக்கவேமாட்டேன்னு சத்தியம் பண்ணிட்டு இப்படி குடிச்சுப் போட்டு வந்து நிற்கறியே”

“”என்னடி சும்மா கத்தறே நீ பாட்டுக்கு பொறந்த வூட்டுக்குப் போயிட்டே… எனக்கு குடிக்கறதுக்கு யாருடி காசு தருவாங்க… இங்க பாரு… ஒழுங்கா திருப்பூருக்கு வந்து வீட்டை என் பேருக்கு மாத்திக் கொடுத்திடு… திருப்பூர் போற வரைக்கும் சமாளிக்கலாம்னு பார்த்தா… டாஸ்மாக் கடை கண்ணுல பட்டுத் தொலைச்சிருச்சு… என்ன பண்றது ரெண்டு கட்டிங் போட்டுட்டு வந்துட்டேன்…”

“”குடிகுடின்னு அலையற உனக்கெல்லாம் எதுக்கு கல்யாணம்? பொண்டாட்டி குழந்தைய வெச்சு காப்பாத்தத் துப்பில்லே… நீயெல்லாம் ஒரு மனுசன்… எத்தனை ஜென்மம் எடுத்தாலும் நீ திருந்தமாட்டே… ச்சே… உன்னோட முகத்தில முழிக்கறதே பாவம்… இனிமே என்னைத் தேடி வராதே…”

பார்வதி அமுதாவை அழைத்துக் கொண்டு வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.

“”ஏய்… நில்லுடி… என்னையே வேண்டாம்னு சொல்லிட்டுப் போறே… அப்புறம் நான் கட்டின தாலிமட்டும் எதுக்கடி கழட்டிக் கொடுடி…”

பார்வதி நின்றாள். திரும்பி அவனை எரித்து விடுவதைப் போல பார்த்தாள்.

“”உன்னால ஒரு நல்ல புருசனாவோ, நல்ல அப்பனாவோ இருக்க முடியலே… ஏன் நல்ல மனுசனாகூட இருக்க முடியல… என்னைய உன்னோட பொண்டாட்டின்னு சொல்லிக்கவே வெட்கமா இருக்கு… இந்தா… இந்தத் தாலியைக் கட்டியிருக்கறதால எனக்கு ஒண்ணும் பெருமை இல்லே…” தாலியைக் கழற்றி அவன் முகத்தில் விட்டெறிந்தாள்.

குமரேசனுக்கு செருப்பைக் கழற்றி அடித்த மாதிரி இருந்தது. அவனால் இப்படியொரு அவமானத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. கோபத்தோடு அவளை நெருங்கினான்.

“”பொட்டைக் கழுதை… உனக்கு அவ்வளவு திமிரா ஆயிடுச்சா புருசனை மதிக்காம எடுத்தெறிஞ்சு பேசுறியா?” குமரேசன் அவள் முடியை கொத்தாகப் பற்றி இழுத்தான்.

“”அய்யோ… கொல்றான்… என்னைக் காப்பாத்துங்க…” பார்வதி கத்தினாள்.

அவள் சத்தம் கேட்டு பேருந்து நிலையத்தில் நின்றிருந்தவர்கள் ஓடிவந்தார்கள்.

என்ன என்ன என்று கூட்டம் கூடிவிட்டது.

“”இந்த ஆள் என்கிட்ட தகராறு பண்றான்…” என்றாள் பார்வதி.

“”டேய்.. யாருடா நீ எடுடா கையை…” ஒரு ஆள் குமரேசனைப் அதட்டினான்.

“”அம்மா… அம்மா…” அமுதா, பார்வதியைக் கட்டிக் கொண்டு அழுதாள்.

“”இவ எம் பொண்டாட்டி… இது எங்க குடும்ப பிரச்னை… யாரும் தலையிட வேண்டாம்…”

“”இல்லீங்க …. இந்த ஆள் எம் புருசனே இல்லே… யாருன்னே தெரியாது…”

“”அடிப்பாவி… என்னை புருசனே இல்லைன்னு சொல்றியா?” பார்வதியை அடிக்க கையை ஓங்கினான் குமரேசன்.

“”என்னய்யா எல்லாரும் வேடிக்கை பார்த்துட்டு இருக்கறீங்க… பொம்பளை மேலே கை வைக்கறான்… அவனைப் புடிச்சு உதைங்கய்யா…” நுங்குக் கூடையோடு நின்றிருந்த பெண் ஒருத்தி ஆவேசக் குரலில் கத்தினாள்.

“”டேய்… எம்மேலே கை வச்சிருவீங்களா வாங்கடா பாக்கலாம்…” என்றான் குமரேசன்.

“”என்ன இங்க கூட்டம்? என்ன பிரச்னை?”

இரண்டு பெண் போலீஸ்காரர்கள் கூட்டத்தை விலக்கிக் கொண்டு வந்தார்கள்.

“”அம்மா… இந்த ஆள் குடிச்சுட்டு வந்து அந்த பொண்ணோட கையைப் புடிச்சு இழுத்து கலாட்டா பண்றான்….” என்றாள் கூட்டத்தில் ஒரு பெண்

“”யாருடா நீ?”

லத்தியால் இரண்டு சாத்து சாத்தினார்கள்.

“”அய்யோ… அடிக்காதீங்க… அவ எம் பொண்டாட்டி…” குமரேசன் அலறினான்.

“”ஏம்மா… இந்த ஆள் உம் புருசனா?”

ஒரு பெண் போலீஸ்காரர கேட்க-

“”இல்லீங்க… இந்த ஆள் எம் புருசன் இல்லே… இவன் யாருன்னே தெரியாது…” என்றாள் பார்வதி தெளிவான குரலில்.

– ஆகஸ்ட் 2012

தினமணி – நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறுகதைப் போட்டியில் ஆறுதல் பரிசு ரூ.1,250/-பெற்ற கதை

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *