கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: March 3, 2023
பார்வையிட்டோர்: 2,327 
 

‘உள்ளே செல்லவா அல்லது திரும்பிப் போகவா?’

அவள் மனதில் ஊசலாட்டம். “என்ன திரும்பிப் போவதா? பதினைஞ்சு பதினாறு மைல் சைக்கிள் ஓடி வந்தம். அதுவும் எதிர்காத்துக்கை எவ்வளவு கஷடப் பட்டம். சும்மா திரும்பிப் போகவா இவ்வளவு கஷ்டப்பட்டம்?’

‘நான் என்ன ஊர் உலாத்தவா வந்தனான்.’

‘அப்ப, நான் எந்த முகத்தை வைச்சுக்கொண்டு மனிசருக்கு முன்னால போய் நிக்கிறது?’

‘இப்பிடிக் கேடு கெட்ட வேலையைச் செய்து போட்டு…..’

‘என்ன ஒரு தரமா? இரண்டு தரமா? மூண்டு தடவையள் படு கேவலமாய் நடந்துபோட்டு, எப்படி மனிசர் மக்களின்ரை முகத்திலை முளிக்கிறது?’ |

‘நான் திரும்பிப் போனால் உமா அக்கா என்னைப்பற்றி என்ன நினைப்பா?’

‘உமா அக்கா எவ்வளவு நம்பிக்கையோடை, என்னைக் கஷடப்பட்டு இஞ்சை கூட்டி வந்தா?’

‘அவவுக்கு இதில் என்ன லாபம்? என்ரை நன்மைக்குத்தானே அவ இவ்வளவு கஷ்டப்படுகிறா.’

‘அப்பிடி என்ன மற்றவை செய்யாததை நான் செய்து போட்டன்?’

‘உலகத்திலை இப்பவும் என்னைப்போல நடந்து கொண்டிருக்கினை.’

‘இவ்வளவும் நடந்து போச்சு. இனி இதுக்கு மேல என்ன நடக்கக் கிடக்கு.’

‘சரி, உள்ள போய்த்தான் பார்ப்பமே.’

அவள் உள்ளே செல்வதற்குக் காலடி எடுத்து வைக்கிறாள். மனதில் பதற்றம். ஆளரவம் கேட்டு, தலையை நிமிர்த்திப் பார்க்கிறாள் இந்திரா.

கோகிலாவின் உடலில் சிறு நடுக்கம். இந்திரா அப்பிரதேசத்தில் பெண்கள் பாதுகாப்பு நிலையப் பணியாளர்.

சாந்தம் நிறைந்த கம்பீரத்துடன் இருக்கின்றாள் இந்திரா.

நெற்றியில் நெருப்புத் தணலாய் பெரிய குங்குமப் பொட்டு. கண்களில் மலர்ச்சி, சிறு முறுவல்.

“வா மகள். இப்பிடி வந்து இரு மோனை.” வாஞ்சையுடன் கூறுகிறாள் இந்திரா.

தன் மேசைக்கு முன்னால் உள்ள கதிரையை இழுத்து விடுகின்றாள்.

கோகிலாவுக்கு வியப்பு. அவள் உள்ளத்தில் தென்பு. ‘என்ரை அம்மாவைத்தவிர, இப்படி ஒருதரும் என்னைப் பாசமாய்க் கூப்பிட்டதில்லையே. என்ரை அம்மாவின்ரை குரல் சாயலாய் இருக்கு. அம்மாவைப் பார்க்க வேணும் போலை கிடக்கு. என்ரை அம்மா இப்ப பள்ளிக்குடத்தில் படிப்பிச்சுக் கொண்டிருப்பா. இந்த நிலையிலை நான் என்னண்டு அம்மாவைப் பார்க்கிறது. இந்தக் கோலத்திலை அம்மா என்னைப் பாத்தா, அவவின்ரை மனம் என்ன பாடுபடும்? அதுவும் மூண்டு வரியத்துக்குப் பிறகு….

82

கனகசெந்தி கதா விருது பெற்ற சிறுகதைகள் – தொகுதி 01

என்ரை இந்த விதவைக் கோலத்தைப் பாத்தா அவவாலை எப்படித் தாங்கேலும்?’

கோகிலா பொருமுகிறாள். அவள் கண்கள் பனிக்கின்றன. “ஏன் தயங்கிறாய் மகளே. இரன்.” கோகிலா உட்காருகின்றாள்.

தனக்கு முன்னாலிருந்த புத்தகத்தை மூடுகின்றாள் இந்திரா கோகிலாவைப் பார்த்து முறுவலிக்கின்றாள்.

அவளது நிர்மலமான முறுவலிப்பில் கருணை பொங்கிப் பிரவகிக்கின்றது.

சஞ்சலமாய் இருந்த கோகிலாவின் உள்ளம் சாந்தமடைகின்றது.

“நல்லாய் களைச்சிருக்கிறாய் மோனை. என்னண்டு வந்தனி? சயிக்கிள்ளையே?”

“ஓமம்மா. சயிக்கிள்ளைதான் வந்தனாங்கள்.”

“என்ன செய்யிறது? இந்தக்காலத்தில் இப்படிக் கஷடப்பட வேண்டிக்கிடக்கு.”

“நான் மாத்திரமே அம்மா. என்னைப்போல எத்தனை ஆயிரம் பேர் சொல்லொணாத துன்பப்பட்டுக்கொண்டிருக்கினை.”

“ஆர் உமாவோடையே வந்தனி?” “ஓமம்மா. உமா அக்காதான் என்னை இஞ்சை கூட்டி வந்தவ.”

“உம்மைப்பற்றி உமா எல்லா விசயத்தையும் போன கிழமை சொன்னவ. ஏன் இப்படிச் செய்தனி மகளே?”

ஆதூரமாய்க் கேட்கிறாள் இந்திரா. சிலையாய் இருக்கிறாள் கோகிலா. சிறிது நேர அமைதி. திடீரென மடை திறந்தாற்போலக் குலுங்கிக் குலுங்கி அழுகிறாள் கோகிலா. அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்த படியே இருக்கின்றாள் இந்திரா.

இந்திராவின் உள்ளத்திலும் குமுறல். எவ்வளவு நேரம்தான் அவர்கள் அப்படி இருந்தார்களோ?

கோகிலா அழுது, ஆறி அமைதியடைகின்றாள்.

கோகிலாவின் மனச்சுமை மெல்ல மெல்ல அகல, அவளது முகம் நிர்மலமாகின்றது.

“பிள்ளை, அந்தப் பூக்கண்டடியிலை தண்ணிப் பைப் இருக்கு. முகத்தைக் கழுவிவிட்டு வாமோனை.”

விழிகளை மலர்த்தி, நிமிர்த்தி கோகிலாவைப் பார்த்து தணிவாய்க் கூறுகிறாள் இந்திரா.

கோகிலா முகம் கழுவிவிட்டு வருகின்றாள்.

தனது பிளாஸ்க்கிலிருந்து இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றுகின்றாள் இந்திரா.

“குடி மோனை.” நன்றிப் பார்வையுடன் தேநீரைக் குடிக்கின்றாள் கோகிலா. “சரி, என்ன நடந்ததெண்டு இப்ப சொல்லு மகளே.” “மூண்டு வரியத்துக்கு முந்தி, ஒருநாள்….. பின்நேரம் அஞ்சு மணியிருக்கும்.

நானும் இரண்டு சினேகிதிகளும் சயன்ஸ் அக்கடமியிலை ‘ரியூசன்’ முடிஞ்சு பஸ் எடுக்க வந்துகொண்டிருக்கிறம்.

திடீரென பாரிய குண்டுச் சத்தம்! நாங்கள் பயந்தபடி பஸ் ஸ்ராண்டுக்கு ஓடினம். பஸ் ஸ்ராண்டிலை ஒரு சனத்தையும் காணேல்லை. பஸ்கள் எண்டு ஒண்டும் இல்லை.

ஒரே ஒரு மினி பஸ்தான், பஸ் ஸ்ராண்ட் தொங்கலிலை நிண்டுது.

எங்களுக்கு என்ன செய்யிறதெண்டே தெரியேல்லை.

அந்த மினிபஸ்ச பிடிக்க ஓடினம். போய்ப் பார்த்தால் அது அச்சுவேலிக்கு ஓடுறது.

திகைச்சுப் போய் நிக்கிறம்.

“என்ன தங்கச்சியள்? எங்கை போக வேணும்?”

ஒரு இளைஞன் கேட்கிறான். “நாங்கள் கோண்டாவிலுக்குப் போக வேணும்.” “சரி ஏறுங்கோ . கொண்டே விடுகிறன்.” நிதானமாகக் கூறுகின்றான். எங்களுக்கு நம்பிக்கை இல்லை. நாங்கள் மௌனமாய் நிக்கிறம்.

“பயப்பிடாதையுங்கோ. நான் உங்களைப் பத்திரமாய்க் கொண்டு போய் விடுவன்.”

இன்னும் எங்களுக்கு நம்பிக்கை வரேல்லை. தயங்கி நிக்கிறம். “பயப்பிடாதையுங்கோ, ஏறுங்கோ.” திகைத்து நிக்கிறம்.

“ஆமிக்காரங்கள் வரப்போறாங்கள். நிக்கிறதுக்கு நேரமில்லை. கெதியாய் ஏறுங்கோ .”

அவன் அவசரப்படுத்துகின்றான். நிண்டாலும் பெரிய ஆபத்து. ஆமி வந்தால் எங்கடை கதை முடிஞ்சுது. வேறை வழியில்லை. பஸ்ஸிலை ஏறினம்.

எங்கடை நெஞ்சு ‘திக், திக்’ எண்டு அடிச்சுக்கொண்டு இருந்தது. பஸ் சரியான பாதையிலைதான் போய்க்கொண்டிருக்குது. யாழ் நகரம் கழிஞ்சிட்டுது. நகரத்திலை சண்டை பிரசண்டமாய் துப்பாக்கி வேட்டுச் சத்தம். இடைக்கிடை செல் சத்தம். அப்பாடா தப்பினம்!

பத்திரமாய்க் கொண்டு வந்து கோண்டாவில் சந்தியிலை இறக்கி விட்டார் அந்த அண்ணர்.

“அண்ணை நீங்கள் செய்த இந்த உதவியை நாங்கள் உயிருள்ளவரை மறக்க மாட்டம்.”

நாங்கள் மூண்டு பேரும் நன்றிப் பெருக்கோடு சொன்னம்.

அண்டையிலையிருந்து அவரைப் பாக்கவேணுமெண்ட தவிப்பு எனக்கு. ஆனால், அவற்றை ஊரையோ, பெயரையோ நாங்கள் அண்டைக்குக் கேட்டு வைத்திருக்கேல்லை.

நான் ‘டவுனுக்கு’ செல்லும் வேளைகளில் பஸ் ஸ்ராண்டில் என் கண்கள் அவரைத் தேடி அலையும். அவரைக் காண முடியேல்லை . மூண்டு மாதங்களின் பின்னர், ஒருநாள் பின் நேரம் நான் எங்கடை லைன் பஸ்ஸுக்காகக் காத்துக்கொண்டு நிண்டன்.

அச்சுவேலிக்கு ஓடுற மினிபஸ்களிலை ஒண்டு வந்து நிண்டுது. தற்செயலாய் நான் திரும்பிப் பார்த்தேன். அவர் நின்று கொண்டிருந்தார். நான் மெதுவாய் அந்த பஸ்ஸடிக்குச் செல்கின் றேன். என் மனதிலை கொந்தளிப்பு. அவர் என்னைக் கண்டிட்டார். நான் திகைத்துப் போய் நின்றன்.

“என்ன இண்டைக்கும் குண்டு வெடிக்கும் எண்டு எதிர் பார்க்கிறியளா?” சிரிச்சுக்கொண்டு கேட்டார். நான் மௌனமாய் நிக்கிறன். அண்டைக்கு துவங்கினதுதான் எங்கடை நட்பு. இரண்டு வரியங்களுக்கு மேலை எங்கள் சந்திப்பு தொடர்ந்தது.

ஆனால், மற்றவைமாதிரி அவர் என்னைச் சினிமாவுக்கோ, பாக்கிற்கோ ஒருநாளாவது கூப்பிட்டது கிடையாது. நானும் அதை எதிர்பார்க்கவில்லை.

அவரிட்டை ஒரு நல்ல பழக்கம். அதுதான் அவர் நிறையப் புத்தகம் வாசிப்பார்.

என்னையும் புத்தகங்கள் வாசிக்கும்படி ஊக்கப்படுத்துவார்.

முதலில் அவர் எனக்குக் கதைப் புத்தகங்களைத் தருவார். அப்புத்தகங்கள் வித்தியாசமானவை. சமுதாய மாற்றத்தை வேண்டி நிற்கும் சிறுகதைகள், நாவல்கள். இடைக்கிடை அரசியல் புத்தகங்களையும் தருவார்.

இலக்கியம் பற்றியும், அரசியல் பற்றியும் அவர் என்னோடை ஆர்வத்துடன் பேசுவார். அவற்றை பேச்சைக் கேட்க, சிலவேளை எனக்கு ஒருவித பயமாய்க் கிடக்கும்.

காலகெதியில் எங்களது வலுவான இரு இதயக் கொடிகளின் பிணைப்பு வலுப்பட்டு காதலாக மலர்ந்தது. திடீரென ஒருநாள் என்ரை அம்மா என்ரை கலியாணப் பேச்சை எடுத்தா. என்ரை அம்மாவின்ரை தம்பி ரவுணிலை நகை அடைவு கடை நடத்தி வருகின்றார். அவரைக் கலியாணம் கட்டும்படி அம்மா என்னை வற்புறுத்தினா. அந்த ஆளைக் கட்ட எனக்கு விருப்பமில்லை எண்டு நான் சொன்னன். அம்மா என்னை நிர்ப்பந்தித்தா. இந்தக் கலியாணத்துக்கு என்ரை அப்பாவுக்கும் விருப்பம் இல்லை. ஆனால், பயத்தினால் அவர் பேசாமடந்தையாயிருந்தார்.

அம்மா கலியாண எழுத்து நாளையும் குறிச்சிட்டார். முதலிலை நான் பயந்தன். பிறகு ஒரு முடிவுக்கு வந்தன். நான் திடீரென வீட்டை விட்டுக் கிளம்பினன். ரவுணிலை அவரைச் சந்திச்சன். என்ரை நிலைமையை அவருக்கு எடுத்துச் சொன்னன். ஆனால், அவர் என்னை வீட்டை திரும்பிப் போகும்படி வற்புறுத்தினார். நான் வீட்டை திரும்பிப் போக மாட்டன் எண்டு பிடிவாதமாய்ச் சொன்னன். அவர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். நான் ஒண்டுக்கும் மசியேல்லை. என்ரை மன வைராக்கியத்தைக் கண்ட அவர், கடைசியாய் என்னை ஏற்றுக் கொண்டார். அவர் என்னை அரியாலையிலை உள்ள தன்ரை நண்பன் வீட்டுக்குக் கூட்டிச் சென்றார்.

அடுத்த நாள் நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டம். ஒரு மாதம் அவர் என்னை மட்டுவில் மானாவளை என்ற இடத்திலை உள்ள தன்ரை நண்பன் வீட்டிலை தங்க வைத்திருந்தார். அந்த ஒரு மாதமும் அந்த நண்பன் வீட்டாரும், அந்தக் குறிச்சியிலை உள்ளவையும் எங்களை எவ்வளவு அன்பாய், கரிசனையோடு ஆதரிச்சினை என்பதை சொல்லி மாளாது. என்ரை வாழ்நாளிலே அவையளை எள்ளளவும் மறக்கேலாது.

ஒரு மாதத்தாலை அவர் என்னைத் தன்ரை வீட்டை கூட்டிச் சென்றார். சீதனமில்லாத ‘வெறும் பொம்பிளையை’ கூட்டிக் கொணந்திட்டுது எண்டு அவற்ரை அம்மா துள்ளிக் குதிச்சா. நான் ‘எந்தப் பகுதி’ எண்டதை அறிஞ்சதும் பெரும் சந்தோசப்பட்டார்.

“சீதனம் இல்லாட்டியும் பரவாயில்லை. என்ரை மோன் ஒரு வெள்ளாளப் பெட்டையைக் கொணந்திட்டான். எங்கட ஆக்களில் ஆரால் இப்பிடிச் செய்யேலும்?”

பெருமையோடை நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு அடிக்கடி சொல்லித் திரிவா. மூன்று மாதங்களின் பின் ஒருநாள் வேலைக்குச் சென்ற அவர் திரும்பி வரேல்லை. அடுத்த நாளும் அவர் வரேல்லை. காலையிலிருந்து நான் அவரைத் தேடத் தொடங்கினன். அவற்றை நண்பன் செல்லக்கண்டனும் அவரைத் தேடினான்.

அண்டைக்குக் காலையிலை, கறுப்புச் சேட் போட்ட இரண்டு பேர் சயிக்கிளிலை அவரை ஏற்றிக்கொண்டு போனார்கள் எண்டு சந்தையடியிலை சொல்லிச்சினை. வசாவிளான் செல்வநாயகபுர பக்கம் அவரைக் கொண்டு போனார்களாம்.

மதிய வேளை, கொழுத்தும் வெயில். நான் செல்வநாயகபுரப் பக்கம் போனன். காடாய் புதர்கள் மண்டிய பயங்கரமான பாதை. ஊர் தொங்கலிலை உள்ள ஒரு வீட்டை போய் விசாரிச்சன்.

நேற்றுப் பொழுதுபடேக்கை இரண்டு பேர் ஓர் ஆளைச் சயிக்கிளிலை கொண்டு போச்சினை. அந்தாளின்ரை கண், கறுப்புத் துணியாலை கட்டப்பட்டிருந்தது.

அந்த வீட்டுக்கார அன்ரி சொன்னா. “ஐயோ என்னைக் கொல்லாதையுங்கோ! எனக்கொண்டும் தெரியாது. என்னைக் கொல்லாதையுங்கோ.”

இரவு முழுவதும் வாசிகசாலைப் பக்கம் குழறிக் கேட்டுது. நாங்கள் ஒருத்தரும் அந்தப் பக்கம் போகேலாது. ஐயோ பாவம் அந்த ஆள். அதுக்கு என்ன நடந்ததோ தெரியாது.

வேதனையாய்ச் சொன்னா அந்த அன்ரி. நான் வாசிகசாலைக்குள்ள போய்ப் பாத்தன்.

ஐயோ! வாசிகசாலை உட்புறச் சுவரெல்லாம் இரத்தம் சொட்டுச் சொட்டாய் தெறித்துக் கிடந்தது. நான் அழுதபடியே திரும்பி வந்தன். நவக்கிரி எல்லாளன் வாசிகசாலையடியிலை ஒரு பிரேதம் கிடக்கு தாம். அச்சுவேலி கைத்தொழிற்பேட்டையடியிலை சொல்லிச்சினை. நான் அங்கை போனன். போற வழியில் ஒரு கிழிஞ்ச நீலக்கோட்டு சேட்டு கிடந்தது. அவற்றை ‘சேட் தான் அது. வாசிகசாலைக்கு முன்னாலை அவற்றை பிரேதம் கிடந்தது. அது முகம் குப்புறக் கிடந்தது. தலையின் பின்பக்கமாய் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்த மூண்டு காயங்கள்.

இரத்தம் வழிஞ்சு காஞ்சு கிடந்தது. நான் மயங்கி விழுந்தன். அதுக்குப் பிறகு என்ன நடந்ததெண்டு எனக்குத் தெரியாது. அவற்றை பிரேதத்தையும் என்னையும் வீட்டை கொண்ணந்தினை. செல்லக்கண்டன்தான் எங்களைக் கொண்டுவந்ததெண்டு பிறகு சொல்லிச்சின. இடைக்கிடை எனக்கு மயக்கம் வந்து கொண்டிருந் ததாம். சொன்னார்கள். அவற்றைப் பிரேதம் படலையாலை வெளிக்கிட்டுது.

“இனி எனக்கெண்டு ஆர் இருக்கினை? நான் இருந்து என்ன பிரயோசனம்?”

உடனை வளவுக்கை உள்ள கிணத்துக்கை குதிச்சன். அங்கை நிண்டவை என்னை உடனை தூக்கிக் காப்பாத்திப்போட்டினை.

“ஏன் அப்படிச் செய்தனி மோனை?” இந்திரா ஆர்வத்துடன் கேட்டாள்.

“அம்மா நாங்கள் கணவன் மனைவியாய் மூண்டே மூண்டு மாதங்கள் வாழ்ந்தம்.”

“அப்புறம்?”

அதை பாத்துப் பொறுக்க மாட்டாதவங்கள் பொய்த் தகவல் குடுத்து அவரை அழிச்சுப் போட்டாங்கள். இதுக்குப் பிறகு நான் இருந்து என்ன பிரயோசனம்? அதுதான் நான் என்னையே அழிச்சுக் கொள்ளத் துணிஞ்சன்.

அவர் தந்திட்டுப் போன அன்புச் சின்னம் என்ரை வயித்திலை இருந்தது. அதைக் காப்பாத்த வேணும் எண்ட எண்ணம் பிறகுதான் வந்தது. அதுக்காகவாவது நான் உயிரோடை இருக்கவேணுமெண்டு தீர்மானிச்சன். குழந்தை பிறந்தது. பெண் குழந்தைதான். அவர் இருந்திருந்தால் எவ்வளவு சந்தோசப்பட்டிருப்பார். நான் பிள்ளை யளுக்கு ‘டியூசன்’ குடுத்து, தையல்வேலை செய்து உழைச்சு மூண்டு வரியமாகக் கஷடப்பட்டு என்ரை குழந்தையை வளர்த்தன். அப்பா இல்லை என்டு அது நினைக்காத வண்ணம் ஒரு குறையும் வைக்காமல் பாடுபட்டு வளர்த்தன். அதையும் பார்த்து மனம் பொறுக்காமல் அவற்றை தாய் என்ரை அன்பு மகளை என்னட்டை யிருந்து வலோற்காரமாய் பறிச்செடுத்திட்டா. அது மாத்திரமே? அவவும் அவவின்ரை மருமகனும் சேந்து என்னைக் கெட்ட நடத்தையுள்ளவள் எண்டு கதை கட்டி விட்டினை.

அவற்றை சிநேகிதன் செல்லக்கண்டன் எங்களைப் பார்க்க இடைக்கிடை வருவார்.

என்னையும் செல்லக்கண்டனையும் சேர்த்து கதை கட்டி விட்டினை அவற்றை தாயும் மருமகனும்.

இந்த அவப்பேரைச் சுமந்துகொண்டு எப்பிடி என்னாலை தலை நிமிர்ந்து நடக்கேலும்.

தூக்குப்போட்டு என்ரை உயிரை மாய்க்க முயண்டன்.

பாழாய்ப் போனவங்கள் என்னை வாழவும் விடுகிறாங்கள் இல்லை. சாகவும் விடுகிறாங்கள் இல்லை.

கோகிலா குமுறினாள்.

சரி, அதுதான் கதையோடு கதையாய்ப் போகட்டும். அவ வின்ரை மருமகன் என்னை நிம்மதியாய் இருக்க விடுகிறானே?

“ஏன்?” இவர் செத்து மூண்டு மாதங்கூட ஆகேல்லை.

ஒரு நாள் நடுச்சாமம். அவன் என்ரை அறையுக்கை மெதுவாய் நுழைஞ்சான். நல்ல வேளை, நான் தூங்கேல்லை. முளிப்பாய்க் கிடந்தான். எனக்கு பயம் ஒருபுறம். ஆத்திரம் மறுபுறம். அவன் என்ரை காலை மெதுவாய்த் தடவினான். எனக்கு அருவருப்பு: ஆவேசம்.

ஒரு உதை! அவன்ரை நெஞ்சிலை. “கள்ளன்! கள்ளன்!” உரத்துக் கத்தினன். பொசுக்கெண்டு விழுந்த அவன், எழும்பி ஓடிட்டான்.

பாழாய் போன என்ரை உடம்புக்குத்தானே அவன் நாயாய் அலையிறான்.

இதுக்கு ஒரு முடிவு கட்ட நினைச்சன். உடனே நான் என்ரை உடம்பிலை மண்ணெண்ணெயை ஊத்தி நெருப்பு வைச்சன். என்ரை

அலறல் சத்தம் கேட்ட அயல் வீட்டாக்கள் ஓடி வந்தினை.

ஈரச் சாக்கைப் போட்டு என்னைக் காப்பாத்திச்சினை. என்ரை உடம்பிலை சில இடங்களிலைதான் எரிகாயங்கள். அதுக்குப் பிறகு அயல் வீட்டு அன்னமுத்தாச்சி எனக்கு இரவிலை துணையாய்ப் படுக்கிறவ.

“அந்த நாய் இனி இஞ்சை வந்தால், கொடுவாக் கத்தியாலை அவனை வெட்டிச் சாய்ப்பன்.”

அன்னமுத்தாச்சி சபதம் கூறினா. என்ரை வாழ்க்கை ஒருமாதிரி ஓடிக்கொண்டு இருக்குது அம்மா.

நீண்ட நாட்களாய் தன் சோகச் சுமையை இறக்கி ஆதரவு தர ஒருவரும் இல்லையே என ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தாள் கோகிலா. இன்று இந்திரா என்ற சுமைதாங்கி கிடைத்துவிட்டது. கோகிலா ஆசுவாசமாய் பெருமூச்சு விட்டாள்.

இன்று அவள் இதயச்சுமையை இறக்கிவிட்டாள். கோகிலாவின் துயரக்கதையைக் கேட்டுக்கொண்டிருந்த இந்திராவின் இதயத்தில், அதனைவிட பன்மடங்கு ஆழ்ந்த பெருமூச்சு ஒன்று கிளம்பி, அவள் முன்னால் இருந்தவளின் உள்ளத்தில் வேர்வரை சென்று நிசப்த அலைகளாய் மோதின என்பதை அவள் அறியவில்லை.

‘இந்தப் பிள்ள விழுந்து கிடக்கு. இதைத் தூக்கி நிறுத்த வேணும். இது தன்ரை காலிலை நிண்டால்தான் இதுக்கு நல்ல காலம். குழந்தைக்கும்.’

“கோகிலா நீ வாழ வேணும். வாழ்ந்து சாதிக்க வேணும்.” “அதெப்பிடி அம்மா முடியும்?” “முடியும். உன்னாலை நிச்சயமாய் முடியும், நீ நினைச்சால்.” “எனக்கு நம்பிக்கை இல்லை அம்மா.”

“கோகிலா, குமுதினிப் படகிலை அந்த நவீன நரகாசுரன்கள் நடத்திய படுகொலைகள் பற்றி உனக்குத் தெரியுமா?”

இந்திராவின் குரலில் இறுக்கம்.

“ஓ, அந்த படுபாதகங்கடை கொலைவெறி பற்றிக் கதை கதையாக் கேள்விப்பட்டு இருக்கிறன்.”

“அதிலை செத்த ஒரு அப்பாவிப் பொடியனுக்கு இருபத்தெட்டு வயதுதான்.”

“அப்படியா?” “அதின்ரை மனிசிக்கு இருபத்தொரு வயது. மூண்டு பிள்ளைகள்.”

“ஐயோ பாவம்!”

“தன்ரை துணைவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அந்தப் பிள்ளை கேள்விப்பட்டுது.”

“அது என்ன பாடுபட்டிருக்குமோ?”

“என்ன பாடு. உடனை நஞ்சு குடிச்சிட்டுது.”

“பிறகு?”

“அயலவை காப்பாத்திப் போட்டினை.”

“பாவி என்னைப்போலத்தான்.”

“கொஞ்ச நாளைக்குப் பிறகு உங்கடை உமா அக்காவைப் போல ஒரு பிள்ளை அதை உதவி கேட்டு எங்களிட்டைக் கூட்டி வந்துது.”

“அப்புறம்?”

“அந்தப் பிள்ளை கலியாணம் கட்ட முந்தி ஏ.எல். சோதினை யிலை நல்லாய் பாஸ் பண்ணி இருந்தது. நாங்கள் உதவி செய்தம். அதோடை மேலே படிக்கச் சொல்லி ஊக்கப்படுத்தினம்.”

அது படிச்சுதா? அதாலை எப்படிப் படிக்கேலும்?” “படிச்சுதோ? படிச்சுப் பட்டதாரியாச்சுது. இப்ப ரீச்சர். நல்லாய் படிப்பிக்குது அந்தப்பிள்ளை.”

“அப்பிடி கனக்கப்பேர்.” கோகிலாவின் விழிகளில் நம்பிக்கைச் சுடர்.

“கோகிலா, துணைவன் பறிக்கப்பட்டவர்களில் நானும் ஒருத்தி.”

இந்திராவின் குரலில் சிறுநடுக்கம். கோகிலாவிற்குப் பேரதிர்ச்சி. திகைப்புற்றவளாய் இந்திராவையே வெறித்துப் பார்த்தவளாய் இருக்கின்றாள்.

“அவங்கள் எனக்கு அனுப்பி வைச்சாங்கள் வெள்ளைச் சேலை. வெள்ளைச் சேலையை நான் கட்டேல்லை.” கோகிலாவின் உடலெல்லாம் புல்லரிப்பு. அவளது இதயத்தில் புத்தொளி சுடர் விடுகிறது.

“சரி, கோகிலா உமா உனக்காகக் காத்துக் கொண்டிருப்பா. நீர் போட்டு வாரும்.”

“அம்மா, உங்களைப் பார்க்க நான் நாளைக்கு வரட்டா?”

இரந்து கேட்கின்றாள் கோகிலா.

“ஓ. தாராளமாக நீ வரலாம்.”

பூரண திருப்தியுற்றவளாய் கூறுகின்றாள் இந்திரா.

“நிச்சயமாய் நான் நாளைக்கு வருவன் அம்மா.”

உறுதியுடன் கூறுகின்றாள் கோகிலா.

“சரி கோகிலா, போயிற்று வா.”

உளப்பூரிப்புடன் தலையசைத்து விடை கொடுக்கின்றாள். கோகிலாவும் உமாவும் சயிக்கிளில் சென்றுகொண்டிருக்கின்றனர்.

இப்போ இயற்கை வெகு உல்லாசமாய், மாமியார் வீட்டிற்கு வந்திருக்கும் புதுமணப் பெண்போல் தோன்றுகின்றது கோகிலா விற்கு. தண்மை நிறைந்த மாருதம் சிலிர்த்துக் குழைகின்றது. வெண்முகில் கூட்டங்கள் நீல வானில் கவிந்து நீந்தி மிதக்கின்றன.

காற்றை முத்தமிட இதழ் குவித்து மரக்கிளைகள் காற்றின் திசையில் சாய்கின்றன.

– ஞாயிறு தினக்குரல், 26 டிசம்பர் 2004 – கனகசெந்தி கதாவிருது பெற்ற சிறுகதைகள், முதற் பதிப்பு: 21-07-2008, தொகுப்பாசிரியர்: செங்கை ஆழியான், மீரா பதிப்பகம், கொழும்பு.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *