சொந்த மண்ணின் அந்நியர்

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: July 31, 2013
பார்வையிட்டோர்: 13,198 
 
 

அதிகாலை ஐந்து மணி நாற்பத்தைந்து நிமிடங்கள்.

அன்றைய காலைப்பொழுது இன்னமும் முற்றாகப் புலர்ந்திருக்கவில்லை. அன்றிரவு பெய்த மழையின் ஈரம் இப்போதும் பாதையில் சேற்றுப்பசையாய் பிசு பிசுத்துக் கொண்டிருந்தது.

கொழும்பில் இருந்து மலை நாட்டை நோக்கிச் செல்லும் பிரதான ரயில் வண்டியான உடரட்டமெனிக்கேயைப் பிடித்து விட வேண்டும் என்று நான் விரைந்து கொண்டிருந்தேன்.

ரயிலுக்கு இன்னமும் பத்து விநாடிகளே இருந்தன. நான் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தின் பிளாட்பாரம் இலக்கம் இரண்டை அடைவதற்கு முன்னமே ரயில் வண்டி வந்து சேர்ந்திருந்தது.

அன்று சாதாரண கிழமை நாட்களில் ஒன்றாக இருந்ததால் ரயில் வண்டியில் சனக்கூட்டம் அதிகமில்லை. அதற்காகவே எந்த விதப்பண்டிகையோ விடுமுறை ஆரவாரங்களோ இல்லாத ஒரு தினத்தை எனது பிரயாணத்துக்குத் தேர்ந்தெடுத்திருந்தேன். முன்னெச்சரிக்கையாகவே ஆசனப்பதிவும் செய்து வைத்திருந்ததால் விரைந்தோடி ஆசனம் ஒன்றைப் பிடிக்க வேண்டும் என்ற அவசரம் எனக்கிருக்கவில்லை.

எனக்கான ஆசனத்தை முற்பகல் வெய்யில் தாக்காத விதத்திலும் ஜன்னலோரம் இருக்கும் விதத்திலும் யோசித்துத் திட்டமிட்டு முன் கூட்டியே ஏற்பாடு செய்து கொண்டிருந்தேன்.

நான் ரயில் வண்டியில் ஏறி அமர்ந்து ஐந்து நிமிடங்களில் வண்டி புறப்பட்டது. அந்த நீண்ட ரயில் பிரயாணத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக ரஷ்ய புரட்சிகர நாவலாசிரியர் மார்க்ஸிம் கார்க்கியின் தாய் நாவலையும் கையோடு எடுத்துச் சென்றிருந்தேன். இந்த நாவலை நான் பலமுறை படித்திருந்த போதும் அதனை இந்தச்சந்தர்ப்பத்தில் மீண்டும் படிக்க வேண்டும் போல் தோன்றியது. அந்த நாவலில் நான் விரும்பும் பகுதிகளைச் சிவப்பு மையினால் அடிக்கோடிட்டிருந்தேன். எனது விரல்கள் அத்தகைய பக்கங்களை ஒவ்வொன்றாகப் புரட்டிய போதும் மனம் என்னவோ அதில் லயிக்கவில்லை. எனது சிந்தனைகளும் 25 ஆண்டுகள் பின் நோக்கி நகர்ந்தன.

***

ஊருக்குப் போக வேண்டுமென்ற இந்தப் பிரயாணம் இன்றே நேற்று ஏற்பட்டதல்ல. சுமார் இரண்டரைத் தசாப்த காலமாக இருந்து வரும் மனப்போராடத்தின் வெற்றி ஆரம்பத்தில் சில ஆண்டுகள் ஊர்க்கப்பக்கமே போகக்கூடாது என்று சங்கற்பம் பூண்டிருந்தேன். அப்போது அது அத்தனை மனக்கசப்பூட்டும் யோசனையாக இருந்தது. அக்காலத்தில் அந்தக் கசப்பான அனுபவங்களை மனத்திரையில் இருந்து நீக்குவதற்கு எவ்வளவு முயன்ற போதும் அவை பீனிக்ஸ் பறவையைப் போல மீண்டும் மீண்டும் புத்திளமை பெற்றுப் பசுமையுடன் உயிர்த்தெழுந்த வண்ணமிருந்தன.

அதன் பின் நான் ஊருக்குப் போகப் பல முறைகள் முயன்ற போதும் ஆகஸ்ட்டுக் கலவரங்களும் கறுப்பு ஜூலைகளும் அவ்வப்போது வந்து வந்து என் எண்ணத்தை இருட்டாக்கின. இம்முறை மிகப் பிரயத்தனத்தின் பின் தீர்மானித்து விட்டேன். எப்படியும் போயே ஆவதென்று இப்போது நான் தனியாள் அல்ல. எனக்கெனக் குடும்பமும் குழந்தையும் குட்டிகளும் உண்டு. ஆனால் அவர்கள் இந்தப் பயணத்துக்குப் பொருத்தமானவர்கள் அல்ல என்பதால் தனியாகவே போவதென்று தீர்மானித்தேன்.

ஊருக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்ததில் இருந்தே என்னுள் ஒரு பரவசமும் உந்துதலும் மேலோங்குவதனை நான் உணராமல் இல்லை. ஊரை விட்டு வந்து 25 ஆண்டுகளின் பின் ஊருக்குச் செல்ல நினைத்ததினால் ஏற்பட்ட விளைவாக இது இருக்கலாம்.

ஊருக்குப் போகிறேன் என்று சொன்னதும் தனது சொந்தக் கிராமத்தைத்தான் இவன் குறிப்பிடுகிறான் என்று நீங்கள் தவறாக எண்ணி விடக்கூடாது. பொதுவாக ஊர் என்பது பிறந்ததில் இருந்து வசித்து வரும் கிராமத்தையோ நகரத்தையோதான் குறிக்கும். அங்கு தான் ஒவ்வொருவனுக்கும் நிரந்தர முகவரியும் சொந்த வீடும் காணியும் பூமியும் இருக்கும்.

ஆனால் இந்த உரிமைகள் எங்களுக்கு எப்போதோ மறுக்கப்பட்டு விட்டன. 1948ஆம் ஆண்டு இந்திய வம்சாவளித் தமிழர்களின் பிரசா உரிமை ரத்துச் செய்யப்பட்ட பிறகு காணி பூமி வைத்திருந்த ஒரு சிலரும் அந்த உரிமைகளை இழந்தனர். வாக்குரிமை கூட மறுக்கப்பட்டது. அரசாங்கத் தொழில் செய்ய முடியாது. தப்பித்தவறிப் பல்கலைக்கழகம் வரை படிக்கவென்று சென்று விட்டால் அந்நிய நாட்டு மாணவர்கள் போல் படிப்புக்கும் காசு கட்ட வேண்டியிருந்தது.

ஊருக்குப் போகிறேன் என்று இங்கு குறிப்பிட்டது நான் பிறந்து வளர்ந்த அந்தத் தேயிலைத் தோட்டத்தைத்தான். என்னையும் என் குடும்பத்தினரையும் உற்றார், உறவினர்களையும் நண்பர்களையும் சுமார் 25 வருடத்துக்கு முன் அந்தத்தோட்டத்தை விட்டு வெளியேற்றி விட்டார்கள். அரசாங்கத்தின் காணி உச்ச வரம்புச்சட்டத்தின் கீழ் அயலில் உள்ள சிங்களக் கிராமத்தவர்களுக்குக் காணி பகிர்ந்தளிப்பதற்காகவே எங்களை அந்தத் தோட்டத்தில் இருந்து வெளியேற்றினார்கள்.

உண்மையில் அந்தச் சிங்களக் கிராமத்தவர்களுக்கு நாடு என்று அழைக்கப்படும் அவர்கள் ஊரிலேயே நிறையக் காணிகள் ஏற்கனவே சொந்தமாக இருந்தன. ஒரு அங்குலக்காணி கூட இல்லாதவர்கள் நாங்களே. உரிமையும் காணியும் இல்லாத எங்களுக்கு அவற்றைக் கொடுக்காமல் இவை எல்லாவற்றையும் அனுபவிக்கும் அவர்களுக்கு அவற்றைக் கொடுக்கின்றார்களே என்று அப்போது சிறுவனாக இருந்த என் சிறு மூளையில் எழுந்த சந்தேகத்தை என் தந்தையாரிடம் கேட்ட போது பளார் என்று விழுந்தது முதுகில் ஒரு அடி. இருக்க இடம் மறுக்கப்பட்ட என் தந்தை என் கேள்வியால் பாதிப்படைந்து இயலாமையின் மேலீட்டால் என் முதுகுத் தோலை உரித்து மிளகாய் தடவுவதாக உறுமினார். இத்தகைய தருணங்களில் அபயக்கரம் நீட்டி அரவணைக்கும் தாயுள்ளம் அன்றும் என்னை அணைத்துக் கொண்டமையை நினைவு கூர்ந்த போது இப்போதும் என் கண்களில் ஒரு துளிக்கண்ணீர் சொரிந்து உருண்டோடிக் கன்னத்தை நோக்கி வழிந்த போது அதனைத் துடைத்தெறிய வேண்டுமே என்ற அறிவு பூர்வ சிந்தனையை உள்ளத்தின் மென்னுணர்வுகள் மறுத்து விட்டன. அந்தக் கணங்களை அப்படியே நீடிக்கச் செய்ய வேண்டும் என்று என் உள்ளம் எனக்குக் கட்டளையிடுவதை என் காதுகள் தெளிவாகக் கேட்டன. என் புத்தி அதற்குள் கட்டுப்பட்டே இருந்தது. நான் அந்த எண்ணங்களில் தொடர்ந்தும் ஆழ்ந்திருக்கவே விரும்பினேன்.

***

அந்தக்காட்சி இப்போதும் என் மனதில் அச்சடித்த படம் போல் பதிந்திருந்தது. நாடெங்கும் பஞ்சம் தாண்டவமாடிக் கொண்டிருந்த காலம் அரிசியையும் பானையையும் கண்டு நாட்கள் பலவாகியிருந்தன. மரவள்ளிக் கிழங்கையும் இலை தழைகளையும் பழங்களையும் உண்டு பஞ்சம் போக்கிய காலம். உடம்பில் இருந்த எல்லா ஊட்டச்சத்துக்களும் வெளியேறிப் பஞ்சடைந்த வெருளிகளாகி உடம்பும் மனதும் சோர்ந்திருந்த காலம். வாழ்க்கையில் எந்த விதப்பிடிப்புமின்றி தொழிலாளர்கள் சோம்பிக் கிடந்தார்கள்.

அப்போது தான் பேரிடியென அந்தச் செய்தி வந்தது. காணி உச்ச வரம்புச் சட்டத்தின் கீழ் எங்கள் தோட்டத்தின் அரைவாசிக் காணியை அரசாங்கம் சுவீகரித்து விட்டதென்றும் அவற்றை அருகாமையிலுள்ள சிங்கள நாட்டவர்க்குப் பகிர்ந்தளிக்கப் போகிறார்கள் என்றும் பரவலாகப் பலர் கதைக்கத் தொடங்கினர்.

அதனை அடுத்துத் தோட்ட முகாமையாளர் எமது தோட்டத்தின் பணிய கணக்குப் பிரிவைச் சேர்ந்த தோட்டத்தொழிலாளரை அழைத்துக்கூட்டம் ஒன்றை நடத்தினார். அதில் சில தினங்களுக்குள் தோட்டத்தின் பணிய கணக்கைச் சேர்ந்த தொழிலாளர்களின் பட்டியல் ஒன்று வெளியிடப்படும் என்றும் அதில் தோட்டத்தில் இருந்து யார் யார் வெளியேற வேண்டுமென்று அறிவிக்கப்படும் என்று ஏனையோர் பணிய கணக்கில் இருந்து மேல் கணக்குக்கு (தோட்டத்தின் மற்றுமொரு பிரிவு) மாற்றப்படுவர் என்றும் கூறப்பட்டது.

எங்கள் தோட்டத்தின் அந்த டிவிஷனில் மாத்திரம் சுமார் 150 குடும்பங்கள் இருந்தோம். இதில் யார் போவார்கள்? யார் இருப்பார்கள்? அனைவரும் குழம்பிப் போனார்கள்.

சில நாட்களின் பின் எதிர்பார்த்த மற்ற அறிவித்தல் வந்தது. இதனைச் சக தொழிலாளர்கள் ஏற்கனவே தெரிந்து வைத்திருந்தார்கள். அந்த டிவிஷனில் இதுவரை காலம் கடுமையாக உழைத்து நிர்வாகத்துக்கு அதிக பிரயோஜனமாக இருந்தவர்களைத் தவிர ஏனையோர் பத்துச் சீட்டுகளை வாங்கிக் கொண்டு தோட்டத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

அந்தக்கால கட்டம் மிகச்சோக மயமானது. எதற்கு இறைவன் இப்படிச் சபிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை இவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்? ஒரு பக்கம் பசி பட்டினி மறுபக்கம் தோட்டங்களில் வேலை மிகக்குறைவு இந்த நிலையில் இந்தப் பாவப்பட்ட ஜன்மங்களை வேறு எந்தத் தோட்டத்தில் சேர்ப்பார்கள். இந்தியாவில் இருந்து இந்த நாட்டுக்குப் புறப்பட்ட நேரஞ்சரியில்லை என்றே பலர் அழுது புலம்பினர்.

***

அன்று ஏன் அப்படியொரு மழை பெய்ததென்று யாருக்கும் தெரியவில்லை. தொழிலாளர் கண்ணீர் வடித்ததால் அதனைவிட அதிகக் கண்ணீரைத் தான் உகுத்து அவர்களுக்கு அனுதாபம் காட்ட வேண்டுமென்று வருணபகவான் நினைத்தாரோ என்னவோ அப்படியொரு அடை மழை அன்று பெய்தது.

இருந்தாலும் தாம் வந்த வேலையை அன்றைக்குள் முடித்து விட வேண்டுமென்பதில் அவர்கள் மிகத்தீவிரமாக இருந்தார்கள்.

அரசாங்க நில அளவைத் திணைக்களம், காணி மதிப்பீட்டுத் திணைக்களம், பட வரைஞர் திணைக்களம், நகர அபிவிருத்திச் சபை இப்படிப் பல திணைக்களங்களில் இருந்து அதிகாரிகளும் ஊழியர்களும் குவிந்திருந்தனர் தொழிலாளர்களில் இருந்து அவர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதியதால் அவர்களைப் பாதுகாக்கப் பொலிஸ் படையொன்றும் அனுப்பப்பட்டிருந்தது. அந்தத் தோட்டத்தில் இப்படியொரு பரபரப்பான சம்பவம் நிகழ்ந்து நான் பார்த்ததில்லை.

தொழிலாளர்களும் காற்று, மழை என்று பொருட்படுத்தாது ஒரு புறம் கூடியிருந்தார்கள். நாட்டில் இருந்து சிங்களக் கிராமத்தவர்களும் நிறைய பேர் வந்து கூடியிருந்தார்கள்.

அன்று அந்தத் தோட்டத்தின் 150 ஏக்கர் காணியைச் சிறு சிறு துண்டுகளாகப் பிரித்து நாட்டுச் சிங்களவர்க்கு வழங்குவதாக அளந்து குறியீடு செய்வதற்காகத் திகதி குறிப்பிடப்பட்டிருந்தது.

தாம் பிறந்து வளர்ந்து இத்தனை காலம் வளர்ந்து நேசித்த பூமியைப் பிளந்து கூறுபடுத்தி யாருக்கோ வழங்கப்போகின்றார்கள் என்பதால் அந்தத் தோட்டத் தொழிலாளர்கள் நெஞ்சு வெடிக்கும் சோகத்தில் குமுறிக் கொண்டிருந்தார்கள். மறுபுறம் ஆங்கிலேயரால் கண்டிச் சிங்களவரிடமிருந்து பறிக்கப்பட்டுத் தேயிலைத் தோட்டங்களாக உருவாக்கப்பட்ட தமது மூதாதையரின் காணி நிலங்களின் ஒரு பகுதி தமக்கு மீண்டும் வழங்கப்படுகின்றதென்பதில் நாட்டுச் சிங்களவருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

இருவேறு சமூகங்களின் நலன்கள் மாபெரும் முரண்பாடுகளாக உருவாக்கப்பட்டு மோத விடப்பட்டு அவற்றால் கனன்றெரியும் வெப்பத்தில் குளிர் காய அரசியல்வாதிகள் நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு காத்திருப்பது எத்தனை பேருக்குப்புரிந்திருக்கும்?

ஏற்கனவே தொழிலாளர்கள் மேற்கணக்குக்கும் வேறிடங்களுக்கும் வெளியேறியிருந்ததால் அவர்கள் இதுவரை வாழ்ந்து வந்த அந்த நீளமான பதினெட்டு லயன் காம்பிராத் தொகுதிகளும் வெறிச்சோடிப் பாழடைந்து கிடந்தன.

அவற்றை உடைத்துத் தகர்த்தெறிந்து சம தளமாக்கவெனப் பாரிய புல்டோசர்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. அவற்றின் உறுமல் சத்தங்கள் பேரிடியாக அந்தப்பிராந்தியத்தையே குலுக்கிக் கொண்டிருந்தன. அவை மேலும் பாரிய சத்தத்துடன் வெப்பத்தையும் மூர்க்கத்தனமாக அந்த உயிரற்ற லயன் காம்பிராத் தொகுதிகளில் தமது அரக்கத்தனமான இரும்புப் பற்களை வாய் பிளந்து ஆழமாகப் பதிந்து உந்தித்தள்ளி உடைத்தெறிந்த போது… அந்த சோகத்தை எப்படி எழுதுவது.

தொழிலாளர்கள் தமது உடலையும் உள்ளத்தையும் கூரிய முள் கொண்டு குத்திக் குதறுவது போன்ற வேதனையை அடைந்தார்கள். பலர் வாய்விட்டுக் கதறி அழுதனர். மற்றவர்கள் சோகத்தைப் பார்த்த என் கண்களும் கூட பனித்திருந்தன.

சுமார் ஒரு மணித்தியாலத்துக்குள் அந்த ராட்சத இரும்பு அரக்கன்கள் எங்கள் நூற்றாண்டுக் கால வாசஸ்தலங்களைச் சின்னா பின்னப்படுத்தி இருந்த இடம் தெரியாமல் மண் மேடாக்கி விட்டன. நாங்கள் நூற்றாண்டு காலமாக எங்கள் பரந்த மண்மீது கொண்டிருந்த பற்றும் பாசமும் அன்பும் நேசமும் சில கணங்களுக்குள்ளேயே மண்ணோடு மண்ணாய்த் தூசிகளாக்கப்பட்டு நசித்துத் தேய்பட்டு விட்டன. அவை எம் கண்ணீருடன் இணைந்து அந்த அடை மழையில் பெருக்கெடுத்தோடும் நீர்ப்பிரவாகத்தில் பொங்கிப் பிரவகித்துச் செம்மண்ணுடன் கலந்து இரத்தமெனச் செந்நீராய் அருகிலுள்ள ஓடையில் வடிந்து போய் விட்டன.

எங்கள் உணர்வுகளும் அப்படித்தான் கண்ணீருடன் வடிந்து கரைந்து போய் விட்டன. எங்கள் போராட்ட உணர்வுகளை மழுங்கச் செய்து விட்ட அரசியல்வாதிகளும் தொழிற்சங்கத் தலைவர்களும் எங்கள் கண்ணீரில் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் எங்கோ சென்று ஒழிந்து கொண்டு விட்டார்கள். எங்கள் பிறந்த மண்ணிலேயே மீண்டும் ஒரு முறை நாங்கள் வேற்று மனிதர்கள் ஆக்கப்பட்டோம்.

***

ரயில் வண்டி கடக்கடக் ஓசையுடன் ஏதோ ஒரு ரயில் நிலையத்தில் சென்று குலுங்கி நின்றது. திடீரென ஏற்பட்ட சூழ்நிலைகளின் மாற்றமும் புதிய ஒலிகளும் என் சிந்தனையைக் கலைத்தன. ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து அப்போது தான் விழித்தது போன்ற உணர்வே எனக்கு ஏற்பட்டது.

இப்போது எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக ஜன்னலுக்கூடாகத் தலையைச் செலுத்தி வெளியே நோக்கினேன். ரயில் பேராதனைச் சந்தியை அடைந்திருந்தது. அடுத்த ரயிலுக்கு வழிவிடுவதற்காகச் சுமார் அரை மணி நேரம் தாமதமாகும் என்ற அறிவிப்பும் ஒலிபரப்பப்பட்டது.

கனத்த சிந்தனையின் பின்னர் மீண்டும் மனம் வெறிச்சோடியது. என் சிந்தனையை விட்ட இடத்தில் இருந்து தொடரலாம் என்று சிறிது பிரயத்தனம் செய்தேன். அதுவும் சாத்தியப்படவில்லை மாறாக மனம் எதிர்மறையாகச் சிந்திக்கத் தொடங்கி விட்டது.

உண்மையில் நான் எதற்காக இந்தப் பிரயாணத்தை மேற்கொண்டேன் என்பதே அர்த்தமற்றதாகத் தோன்றியது. பிறந்த ஊர் என்று அங்கே ஒன்றும் இல்லை. பிறந்த இடத்தில் வேற்றார் வீடு கட்டிக்குடியேறி 25 ஆண்டுகள் கடந்து விட்டன. சுற்றம், சூழம், நண்பர்கள் எங்கெங்கோ சிதறிப்போய் விட்டனர். நான் அந்த ஊரை அடைந்தாலும் யாரிடம் யாரென்று என்னை அறிமுகம் செய்து கொள்வது?

சிலவேளை அந்த இடத்துக்கு நான் சென்று என்னைப்பற்றியும் என் வரவைப் பற்றியும் எனது பிரயாணத்தின் நோக்கத்தைப் பற்றியும் கூறினால் அவர்கள் என்னைச் சித்த சுவாதீனம் அற்றவன் என்று கருதி ஏளனம் செய்யவும் கூடும்.

உண்மையில் இந்தப் பிரயாணத்தின் மூலம் நான் எதனைச் சாதிக்க விரும்புகிறேன்? எனது பழைய நினைவுகளை ஒரு முறை மீட்டுக்கொண்டு அந்தப்பழைய நினைவுகளில் சுகமான அரவணைப்பில் இதம் பெற நினைக்கிறேனா? அப்படிச் சொல்வதும் பொருத்தமானதன்று. ஏனெனில் நான் பெற்ற சுகமான அனுபவங்களை விட துக்ககரமான அனுபவங்களையே இந்த மனது தேர்ந்தெடுத்து மீட்டுப்பார்க்க விரும்புகிறது ஏன்? அதுதான் மனித இயல்போ?

என் மனம் மீண்டும் குழம்பிப் போனது இந்தப் பிரயாணத்தைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டுமா?

நான் தீர்மானித்து விட்டேன். அடுத்த அரை மணி நேரத்தில் கொழும்பு நோக்கிச் செல்லவிருக்கும் புகைவண்டியில் கொழும்புக்குச் செல்ல டிக்கட் பெற்றுக்கொள்வதற்காக கவுண்டரை நோக்கி விரைகின்றேன்.

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *