”அபூ. . . சைத்தான் மெளத்தாயிட்டாண்டா. . . .” மதரசாவின் தங்கும் விடுதிக்குள் தலையை நீட்டி கத்தினான் சிக்கந்தர்.
அதிகாலையில் பஜர் தொழுதுவிட்டு வந்து , தங்கும் விடுதியை விட்டு வெளியே கிளம்பிக் கொண்டிருந்தான் அபு. அவனுக்கு சைத்தான் இறந்து விட்டதை நம்பவே முடியவில்லை.
வழக்கமாக, காலை பத்து மணிக்குத்தான் மதரசா ஆரம்பிக்கும். அதிகாலையிலேயே குளித்து விட்டு தொழுகப் போவார்கள் மதரசா மாணவர்கள். திரும்பி வந்தும் சிலர் குளிப்பதுண்டு. காலை ஆறு மணியில் இருந்து, பத்து மணி வரைக்கும் ஒரு வேலையும் இருக்காது. வீட்டுக்கு கடிதம் எழுதுவது, ஏற்கனவே வந்த கடிதத்தை மறுபடி மறுபடி படிப்பது அழுக்குகளை துவைப்பது என்று எல்லா வேலைகளும் இந்த நேரத்தில் தான். ஆலிம் பட்டம் பெற எட்டு வருஷம் ஓத வேண்டும். அபு இப்போது அஞ்சாம் வருஷம் ஓதிக் கொண்டிருக்கிறான்.
மதரசாவில் இருபது பேர் அபுவின் உடன் ஓதுபவர்கள் இருந்தார்கள். உள்ளூர் பையன்கள் காலை ஏழு மணிக்கு ஆரம்பித்து, எட்டு மணிக்கு முடியும் வெளி மதரசாவில் ஓதி விட்டுப் போய் விடுவார்கள். அவர்களுக்கு வுருஷக்கணக்கு எதுவும் இல்லை. மார்க்கத்தைப் பற்றிய அடிப்படைப் பாடங்கள் சொல்லித் தருவார்கள். அரபி மொழியின் அலிஃப், லாம் என்று எழுத்துகளில் ஆரம்பித்து, குரானை தானே ஓதும் வரைக்கும் பயிற்சி தொடரும். குரானை முடித்து விட்டால் பெரும்பாலான மாணவர்கள் போய்விடுவார்கள். ஆனால், ஆலிமுக்கு ஓதுபவர்களுக்கு அப்படியில்லை.
உள்மதரசாவில் பத்து மணிக்கு ஆரம்பிக்கும் பாடம், மாலை அசர் தொழும் வரை இருக்கும். அரபியிலேயே பல பாடங்களை மனப்பாடம் செய்து ஒப்பிக்க வேண்டியது இருக்கும்.
பெரும்பாலும் உள் மதரசாவில் ஓதும் யாரும் வெளி மதரசாவுக்கு போக மாட்டார்கள். மாலை நேரத்தில் பள்ளிவாசல் வேலைகளோ, யார் வீட்டுக்காவது போய் ஓதவேண்டியதோ இருந்தால் ஆலிமுக்கு ஓதும் பையன்களில் சிலரை கூட்டிக் கொண்டு போவார்கள். அப்படி போகும் நாட்களில் ஓதுபவர்களுக்கு கறிக் குழம்போடு சாப்பாடும், புரோட்டா சால்னாவும் கிடைக்கும். சில வீடுகளில் மதரசாவில் இருக்கும் எல்லாருக்கும் சாப்பாடு கொடுத்து விடுவார்கள். பெரும்பாலும் ஓதப் போகிறவர்களுக்கு மட்டும் தான் கிடைக்கும்.
வீடுகளில் ஓதுவதற்கான அழைப்பு நான்காம், ஐந்தாம் வருட பையன்களுக்குத்தான் கிடைக்கும். அதனாலேயே, ஓத வரும் பையன்களில் முதல் மூன்று வருடம் இருக்கும் பையன்கள் சின்னப் பையன்களாகவும், அடுத்தடுத்த வருடங்களில் பெரிய பையன்களாகவும் தெரிவதே இந்த சாப்பாட்டினால்தானோ என்று கூட அபுவுக்குத் தோன்றும்.
அபுவுடைய அத்தாவும் அஜரத்து தான். இவன் எட்டாம் வகுப்பு படிக்கும் போது உடம்பு சரியில்லாமல் இறந்து விட்டார். அதன் பின்பு குடும்ப சூழல் மாறிவிட்டது. அபுவின் மாமாதான் பத்தாம் வகுப்போடு நிறுத்தி விட்டு, மதரசாவில் சேர்த்து விட்டார். இங்கு வந்தும் நான்கு வருடங்கள் ஓடி விட்டன. வந்த புதிதில் நோன்பு மாதத்தில் ஊருக்குப் போய் அம்மாவையும், மாமாவையும் பார்த்து விட்டு திரும்பிவிடுவான். அபு இங்கு வந்த ஒரு வருடத்தில் அம்மாவுக்கு திருமணமாகி, புதிய அத்தாவோடு தொலைதூர ஊருக்குப் போய்விட்டார். அதற்கு பின்பு அபு ஊருக்குப் போவதில்லை. மாமா மட்டும் எப்போதாவது வந்து பார்த்து விட்டுப் போவார்.
அபுவுக்கு தமிழும், ஆங்கிலமும் நன்றாகவே வாசிக்க வரும். பத்தாம் வகுப்பு வரை தமிழ் மீடியத்தில் படித்தாலும் அவனுக்கு ஆங்கிலமும் எளிமையாகவே இருந்தது. அவனுடன் ஓதும் பெரும்பாலான பையன்கள் ஆங்கிலத்தைக் கண்டால் ஓடி விடுவார்கள். வசதி குறைவான வீட்டுப் பிள்ளைகளாகவும், பள்ளிப் படிப்பில் பெயில் ஆனவர்களுமே அதிகம் இருந்தார்கள். மதரசாவில் தரப்படும் இலவச உணவு, இருப்பிடத்துக்காகவே அவர்கள் இங்கு ஓதுவதாக அபு நினைத்துக் கொள்வான். கொஞ்ச நாள் கழித்து அவனும் அதே காரணத்திற்காகத் தான் அங்கு விடப் பட்டிருக்கிறான் என்று புரிந்து விட்டது.
இங்கு வந்த புதிதில் யாருடனும் பேச மாட்டான் அபு. ஒல்லியான உடம்போடு, ஈர்க்கும் படியான முகம் அபுவுக்கு. முதல் பார்வையிலேயே யாருக்கும் பிடித்துப் போகும். ஒரு வருடத்துக்குள்ளாகவே எல்லோருடனும் சகஜமாகி விட்டான். மதரசாவில் சேர்ந்த முதல் வருஷத்தில்தான் அபுவுக்கு சைத்தான் பழக்கமானான்.
சிக்கந்தர் சொன்ன விஷயத்தை இன்னும் நம்ப முடியவில்லை அபுவுக்கு. ”சைத்தான் அண்ணன் செத்துப் போனாரா. . .?”. மதரசாவின் மற்ற பையன்களும், வெளியில் உட்கார்ந்திருந்த ஜமாத் ஆட்களும் சிரிப்போடு பேசிக் கொண்டார்கள். “ஒரு வழியா இப்லீசு தொலைஞ்சது. . .அல்லா கபுருக்குள்ள அமுக்கீட்டான். . .”
ஏன் இவர்களுக்கெல்லாம் சைத்தான் அண்ணனைப் பிடிக்கவில்லை என்று அபுவுக்கு ரொம்ப நாளாகப் புரியவில்லை. மற்றவர்கள் போல் பீடி பிடிக்க மாட்டார். சாராயம் குடிக்க மாட்டார். ஹராமான எதையும் சைத்தான் அண்ணன் செய்ததாக அபு கேள்விப்படவே இல்லை. இதையெல்லாம் செய்யும் பலரை அபுவுக்குத் தெரியும். அவர்கள் எல்லாம் தலையில் தொப்பி வைத்துக் கொண்டு பள்ளிவாசலுக்கு வந்து போய்க் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்போது சைத்தான் இறந்ததற்கு சிரித்துக் கொண்டிருப்பவர்கள் எல்லாரும் அவர்களிடம் பணிவாக சலாம் சொல்வதும் அவனுக்கு நினைவுக்கு வந்தது. அவர்கள் மீது இல்லாத கோபம் எப்படி சைத்தான் அண்ணன் மீது மட்டும் வந்தது? என்று அபு யோசித்துக் கொண்டே இருப்பான்.
சைத்தானை முதன் முதலில் பள்ளிவாசல் தெருவின் கிணற்றுக்கு அருகில் தான் அபு பார்த்தான். காலையில் தொழுகை முடித்து விட்டு, வேறு துணி துவைக்கும் வேலை எதுவும் இல்லாததால் நான்கைந்து பேருடன் வெளியில் வந்தான் அபு. கிணற்றுக்கு பக்கத்தில் இருந்த கல்லில் உட்கார்ந்திருந்தான் சைத்தான். நீளமான தலைமுடியும், வெட்டி ஒதுக்கப்படாத தாடியுமாக பார்க்கவே வித்தியாசமாக இருந்தாலும், களையான முகம் சைத்தானுக்கு. உருட்டி உருட்டி பார்க்கும் கண்களும், ஊடுருவிப் பார்க்கும் பார்வையும் அவன் முன்னால் யாரும் நிற்க பயப்படுவார்கள்.
நண்பர்களோடு நடந்து போய்க் கொண்டிருந்த போது, முன்னாள் போன ரபீக், அவன் காலுக்கு கீழே மிதிபட்டுக் கிடந்த துண்டுச் சீட்டுகளைப் பார்த்தான். கண்கள் விரிய சொன்னான் . . “அரபில எழுதியிருக்குடா. . . குரானா இருக்கும். . .எல்லாத்தையும் எடுங்கடா. . கிணத்துல போடுவோம். யார் கால்லயாவது மிதி படப் போகுது. . .” பதட்டத்தோடு சீட்டுகளை எடுத்து, பணிவோடு அதற்கு முத்தம் கொடுத்து சேமித்துக் கொண்டிருந்தான். உடன் இருந்தவர்களும் ஆளுக்கொன்றாய் எடுத்து, கண்களில் ஒற்றிக் கொண்டிருந்தார்கள்.
அபு குனிந்து ஒரு சீட்டை எடுத்து, அரபி எழுத்துகளை உற்றுப் பார்த்தான். ஒவ்வொரு எழுத்தாக வாசித்து விட்டு ரபீக்கைப் பார்த்து சிரித்தான். “ டேய் . . நில்லுங்கடா. . .இதுல சைத்தான்னுதான் எழுதியிருக்கு. . . .இதப் போயி கண்ணுல ஒத்துறாங்கெ. . .”
ரபீக் ஒரு நிமிடம் நண்பர்களைப் பார்த்தான். “என்ன எழுதியிருந்தாலும் அரபிதான. . . மிதிக்கிறது தப்பில்ல . . .”
“இது என்ன குரானா. . .? இல்ல அல்லாணு எழுதியிருக்கா. . ? சைத்தான்னு எழுதினதுக்கு எதுக்கு நாம மரியாத குடுக்கணும். . ?” அபு அழுத்தமாகச் சொன்னான். கல்லில் உட்கார்ந்திருந்த சைத்தான் இவர்களை ஒரு சிரிப்போடு பார்த்துக் கொண்டே இருந்தான்.
நண்பர்கள் சமாதானம் ஆகவில்லை. எல்லா துண்டுச் சீட்டுகளையும் சேமித்து, கிணற்றில் போட்டு விட்டு நடக்க ஆரம்பித்தார்கள். அபு மட்டும் அப்படியே நின்றிருந்தான். என்ன செய்வது என்று அவனுக்குத் தோன்றவில்லை. அப்போதுதான் சைத்தான் அபுவை அழைத்தான். “இங்க. . . வாங்க மெளலவி. . .”
ஆலிமுக்கு ஓதி, பட்டம் பெற்று நன்மதிப்பை பெற்றவர்களை அழைக்கும் மெளலவி என்ற பெயரை தன்னை அழைத்ததும் அபுவுக்கு வெட்கமாக இருந்தது. தயங்கிக் கொண்டே சைத்தானின் அருகில் போனான். “என்னாங்க அண்ணே. . .?”
”இந்த பேப்பர்ல சைத்தான்னு எழுதி கீழே போட்டதே நாந்தான். . .என்ன எழுதியிருந்தாலும் அது அரபின்னா தூக்கி வஞ்சு கொஞ்சுவாங்களாம். . . . நல்லா வருவாங்கெ. . . மார்க்கத்துக்கு வழிகாட்ட. . . .” சைத்தான் கோபத்தோடு சொன்னான்.
அபு மெதுவாகச் சொன்னான். “அரபின்ன ஒடனே ஒரு பதட்டம் வருதுல்ல. . .”
“நல்லா வரும்டா. . . இவிங்க அரபி மட்டும் அல்லா படைச்ச மொழி. . .மத்ததெல்லாம் அல்லா படைக்கலயா. . . ?” சைத்தானும் மெதுவாகவே கேட்டான். அபுவுக்கு பதில் தெரியவில்லை. பொதுவாக சிரித்து வைத்தான். ”தெரியலண்ணே. . . ஆனா நீங்க சொல்றது சரிண்ணு தோணுது. எல்லா மொழியையும், மனுஷனையும் அல்லாதான படைச்சிருப்பான். . “
சைத்தான் அபுவைப் பற்றி விசாரித்தான். ஜிப்பா பாக்கெட்டில் கைவிட்டு, பேனா ஒன்றை அபுவிடம் கொடுத்தான். “போ. . . கவனமா ஓது. அவெங்க சொல்றத மட்டும் அப்படியே நம்பாம. . கவனமா ஓது. . “
“ நா கேட்டத ஒங்க அசரத்துகிட்ட கேட்டு வக்காத . . . அப்பறம் உன்னையும் சைத்தானு சொல்லீருவாங்கெ. . .”
சைத்தானையும், அவன் கொடுத்த பேனாவையும் அபுவுக்கு ரொம்ப பிடித்து விட்டது. ஒவ்வொரு முறை கிணற்றுப் பக்கம் போகும் போதெல்லாம் சைத்தான் இருக்கிறானா என்று பார்த்துக் கொள்வான். சில நேரங்களில் அங்கு இருக்கும் சைத்தான், பெரும்பாலான நேரங்களில் எங்கு செல்கிறான் என்று யாருக்கும் தெரியாது.
எப்போதாவது எதிர்ப்படும் போது, அபுவிடம் சில கேள்விகளைக் கேட்டுச் செல்வான். அபுவுக்கு என்ன சொல்வது என்று தெரியாவிட்டாலும்,அந்தக் கேள்விகள் ரொம்பப் பிடித்தன. கேள்விகளுக்காகவே சைத்தானை அபு தேடிக் கொண்டிருப்பான்.
இப்படித்தான் இன்னொரு நாள் அதே கல்லில் உட்கார்ந்திருந்தான் சைத்தான். அபு தூரத்திலிருந்தே பார்த்து விட்டான். நண்பர்களை விட்டுப் பிரிந்து, பக்கத்தில் போய் ” என்ன அண்ணே ஆளையே காணோம். . . ?” என்று வாஞ்சையாய் விசாரித்தான். சைத்தான் எப்போதும் பதில் சொன்னதாய் அபுவுக்கு நினைவில் இல்லை. அவன் என்ன பேசினாலும் கேள்வியில் தான் முடியும்.
”அபு. . .ரொம்ப நல்லவரு ஒருத்தரு இருக்காரு. . .அடுத்தவங்களுக்கு பசின்னா தன்னால முடிஞ்சத செய்வாரு. . நிறைய பசங்கள செலவு பண்ணி படிக்க வக்கிறாரு . . கல்யாணமாகாத பொண்ணுகளுக்கு செலவு பண்ணி கல்யாணம் முடிச்சு வப்பாரு. . . அவருக்கு சொர்க்கம் கெடைக்குமா. .? கெடைக்காதா. . ?“
அபு யோசிக்காமல் சொன்னான். . .”எல்லாமே சுன்னத்தான காரியம்தான. . .நிச்சயமா அல்லா அவர சொர்க்கத்துக்கு அனுப்புவான். . .”
சைத்தான் சிரித்துக் கொண்டே தொடர்ந்தான். “ஒண்ண சொல்ல மறந்துட்டேனெ . . . .அவரு நம்மாளு இல்ல. . .குடியானவரு. . . அவருக்கு தொழுக தெரியாது. . .அல்லாவையே தெரியாது. . . இப்பவும். . அவருக்கு சொர்க்கந்தானா. . .?”
வழக்கம் போல அபுவுக்கு தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் சைத்தானைப் பார்க்கும் போதும் அபுவுக்கு நிறைய கேள்விகள் கிடைக்கும். அப்படியே அதை மனதிற்குள் வைத்து யோசித்துக் கொண்டே இருப்பான். பதில் தெரிகிறதோ இல்லையோ, கேள்விகளை சுமந்து கொண்டேயிருப்பது மனதை உற்சாகமாக வைத்திருப்பதாக அபுவுக்கு தோன்றியது.
”ஒங்க அசரத்துக்கு ரெண்டு மனைவி. . . எங்க அத்தாவுக்கு மூணு மனைவி. . . எங்கெயாவது ஒரு பொண்ணுக்கு ரெண்டு, மூணு புருஷன் கேள்விப்பட்டிருக்கியா. . ?”
“தொழும் போது அரபியில ஓதிவாங்கள்ள . . . அதுக்கு எல்லாருக்கும் அர்த்தம் தெரியுமா. . ? அசரத்து எது ஓதுனாலும் என்னென்னே தெரியாம ஆமீன் சொல்லுவீங்களா. . .? “
“ரோட்டுல ஒருத்தர் அடிப்பட்டு ரத்தம் போக கெடக்காரு. . இப்ப தொழுகப் போவியா. . . ? அவருக்கு ஒதவி செய்வியா . . .?”
“நெத்தியில ஒரு தடவ பொட்டு வச்சாலே . . .கலிமா மறந்து போயிருமா . . . ? நா பொட்டு வச்சுக்கிட்டு, கலிமா சொல்லவா . . . ?”
இப்படி சைத்தான் கேட்கிற கேள்விகள் நியாயமானதாகவே அபுவுக்குத் தோன்றும். ஆனாலும், சில கேள்விகளுக்குப் பதில் கண்டுபிடிக்க முடிவதில்லை.
ஒருமுறை சைத்தான் கேட்ட ஒன்றிரண்டு கேள்விகளை அசரத்திடம் அபு தயங்கிக் கொண்டே கேட்ட போது பிரம்பை வைத்து வெளுத்து விட்டார் அசரத். ”சைத்தான் கூட சேந்து அவன மாதிரியே கேள்வி கேட்டுக்கிட்டு திரிஞ்சா எப்புடி கலிமா வெளங்கும். . நீயும் சைத்தானா போகப் போற. . .” அப்போதிருந்து எந்தக் கேள்வியையும் மதரசாவில் கேட்பதில்லை.
இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளை கொடுத்துக் கொண்டேயிருந்த சைத்தான் திடீரென இறந்து விட்டான் என்பதிலிருந்து அபுவால் மீளவே முடியவில்லை. அன்று முழுவதும் அபு எங்குமே செல்லவில்லை. சாப்பிடக் கூட தோன்றாமல், அசைவற்று அப்படியே இருந்தான் அபு. நண்பர்கள் தொழுகைக்கும், சாப்பிடவும் கூப்பிட்டுப் பார்த்தார்கள். அபு உடம்பு சரியில்லை என்று சொல்லி விட்டு, அங்கேயே இருந்து கொண்டான்.
இரவு உணவையும், இசா தொழுகையையும் முடித்து விட்டு விடுதிக்கு திரும்பிய நண்பர்கள் சொன்னார்கள். ”சைத்தானோட மையத்த சாயங்காலம் கபுர்ல அடக்கிட்டாங்க. யார் மெளத் ஆனாலும் நெறய பேர் வருவாங்க இல்ல. . . இந்த மையத்து கூட நாலஞ்சு பேருதான் வந்தாங்க. . .சக்கர கூட குடுக்கல. . . “ கல்கண்டும், பேரீச்சம்பழமும் எதிர்பார்த்து ஜனாசா இறுதி தொழுகைக்குப் போனவர்கள் சர்க்கரை கூட கிடைக்காத வருத்தத்தை அபுவிடம் சொல்லி கவலைப் பட்டார்கள். படுத்துக் கொண்டே அவர்கள் பேசியதை காதில் வாங்கிய அபு, பதில் சொல்லாமல் அப்படியே உறங்கிப் போனான்.
அதிகாலையில் மதரசாவிற்கு வெளியே கேட்ட குரல்தான் அபுவை தூக்கத்திலிருந்து எழுப்பியது. பள்ளிவாசலில் வேலை செய்யும் மோதினாரின் குரல். அதிகாலையில் பஜர் தொழுதுவிட்டு, பள்ளிக்கு பின்புறம் உள்ள மையத்தாங்கரைக்குப் போன மோதினார் அங்கு சைத்தானை அடக்கம் செய்த குழுயில் மட்டும் நெருப்பு எரிவதைப் பார்த்து கத்திக் கொண்டே மதரசாவுக்கு முன்பு வந்தும் சத்தமாகச் சொன்னார். “ நரக நெருப்பு. . . “
“அல்லாவோட பாதயில யாரு குறுக்க நின்னாலும் இப்புடித்தான் ஆகும். . .செத்தும் அவன் தண்டன முடியல பாருங்க. . . .கபுருக்குழி எரியுது. . .இது நரக நெருப்புதான். . .” அவர் முன்னால் நின்ற ஒன்றிரண்டு ஆட்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“எத வச்சும் அணைக்க முடியாத நரக நெருப்பு ஒருத்தன தேடி கபுர் வரைக்கும் வருதுண்ணா அவன் அல்லாவுக்கு எந்த அளவுக்கு பாவியாயிட்டான் பாத்தீகளா.. . .?
அபுவுக்கு இன்னும் மனச் சோர்வு தீரவில்லை, அதுவே அவன் உடலிலும் வெளிப்பட்டது. மெதுவாக எழுந்து, முகம் கழுவி வெளியில் வந்தான். மோதினாரைச் சுற்றி ஒரு சிறிய கூட்டம் திரண்டிருந்தது. ஒன்றிரண்டு பேர் பயத்தோடு போய், கபுர் எரிவதைப் பார்த்து விட்டு வந்து கூட்டத்தில் சேர்ந்து கொண்டார்கள்.
அபு மையத்தாங்கரைக்குள் நுழைந்து, சைத்தானின் கபுர் குழியைத் தேடிக் கொண்டே சென்றான். அடக்கம் செய்யும் போது அவன் வராததால் எந்தப் பக்கம் என்று யூகிக்க முடியவில்லை. போன வாரம் கடைசியாக மெளத் அடக்கம் செய்யப்பட்டது மேற்குப் பக்கம் என்பதால், அதை நோக்கி நடந்தான்.
வெளி மதரசா ஆரம்பிப்பதற்கு முன்னால் வந்து விடும் சிறுவர்கள் மையத்தாங்கரையில்தான் விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஊர் முழுவதும் எல்லா காலி இடங்களிலும் வீடுகள் வந்து விட்டதால், இது ஒன்றுதான் அவர்களின் விளையாட்டு மைதானம். சிறியதாய் தீ எரிவதும், அதன் பக்கத்தில் சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருப்பதும் அபுவுக்கு நேரே தெரிந்தது.
மெல்ல கபுரை நோக்கி நடந்தான். தீ இங்கு எப்படி வந்திருக்கும்? கபுரின் மேலே மண் ஈரமாக இருந்து, இப்போதுதான் காய்ந்திருக்கும். ஆனாலும், தீ இங்கு வருவதற்கு வாய்ப்பில்லையே. . .இது உண்மையில் கபுருக்கு உள்ளிருந்து வந்திருக்குமா? என்று யோசித்துக் கொண்டே அருகில் வந்து விட்டான் அபு.
“டேய். . . அந்தப் பக்கம் போயி வெளையாடுங்க. . . கபுரை மிதிக்காதீங்க. . .ஆகாது. . .” என்று சத்தமாகச் சொல்லி சிறுவர்களைத் துரத்தினான் அபு. சைத்தானின் கபுரை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் அபு. ”கேள்வி கேட்டால் நெருப்பு வருமா. . .? அப்படியே வந்தாலும் உசுரோட இருக்கும் போது வந்தா பரவாயில்ல. . செத்த பெறகு வருமா. . ?” என்ற யோசனையில் மூழ்கியிருந்தான்.
இடத்தை விட்டு நகர்ந்த சிறுவர்கள், சைத்தானின் கபுருக்கு கொஞ்சம் தள்ளி அங்கிருந்த மரத்தின் வேர்ப்பகுதியில் சிறுநீர் கழித்தார்கள். திரும்பிப் பார்தத அபு மறுபடியும் சத்தம் கொடுத்தான் . .” ஒக்காந்து ஒண்ணுக்குப் போங்கடா . . சைத்தாம் புடிச்ச பயலுகளா. . .” சட்டென்று சொல்லி விட்டாலும், சைத்தானின் பெயரை தவறாகச் சொல்லி விட்டோமோ என்று நாக்கைக் கடித்துக் கொண்டான்.
மரத்துக்கு கீழிருந்த கரட்டானின் மீது சிறுவர்கள் மொத்தமாக சிறுநீர் கழித்தார்கள். மழை போல பொழிந்த சிறுநீரில் நனைந்த படி குறுகிக் கொண்டது கரட்டான். கிழக்குப் பக்கமிருந்து திடீரென அடித்த காற்றில் சிறுநீர் திசை மாறி, தீயின் மீது விழுந்தது. எரிந்து கொண்டிருந்த தீ சிறுநீரின் குளிர்ச்சியில் குறைய ஆரம்பித்தது.
மதரசா முன்பு பேசிக் கொண்டிருந்த மோதினாரின் குரலையும் காற்று கொண்டுவந்தது. “நரக நெருப்பு எரியுது. . . ஒலகத்தயே அழிச்சிரும். . .”
#
அரபிச் சொற்களின் பொருள்
சைத்தான் – கடவுளுக்கு எதிரானவன்
மதரசா – இஸ்லாமிய மார்க்க கல்விக் கூடம்
ஃபஜர் – அதிகாலை தொழுகை
அசர் – மாலை நேரத் தொழுலை
இசா – இரவுத் தொழுகை
மையத்து – இறந்தவரின் உடல்
மெளத் – இறப்பு
அசரத், இமாம், ஆலிம் – மார்க்க குரு, தொழுகை நடத்துபவர்
மோதினார் – தொழுகைக்கான அழைப்பை அறிவிப்பர், பள்ளிவாசல் பணியாளர்
கபுர் – அடக்கம் செய்யப்பட்ட இடம்
மையத்தாங்கரை – அடக்கம் செய்வதற்கான பகுதி
(உயிரெழுத்து இதழில் வெளிவந்த சிறுகதை 2019 , மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நூறு கதைகள் தொகுப்பில் இடம்பெற்ற சிறுகதை)