கதையாசிரியர்:
தின/வார இதழ்: தினமணி
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: February 10, 2013
பார்வையிட்டோர்: 16,077 
 
 

என் பதிலை எதிர்பார்த்து பாரிஜாதம்மாள் நின்று கொண்டிருந்தாள். என் வளர்ப்புத்தாய். அவள் சொன்னது எனக்குள் மிகுந்த பதற்றத்தை உருவாக்கி விட்டிருந்தது. ஆனாலும் எனது பதற்றத்தை வெளிக்காட்டாமல் வெகு இயல்பாக இருப்பது போல் நின்று கொண்டிருந்தேன்.

மனபாரத்தை இடம் மாற்றிவிட்ட தற்காலிக நிம்மதியில் அவள் நின்று கொண்டிருந்தாள். வலது கை வரண்டாத் தூணை கெட்டியாகப் பற்றியிருந்தது. அதில் மெலிதானதொரு நடுக்கம்.

சிபிகளும் புறாக்களும்அவளை உள்ளே வந்து உட்காரச் சொல்லி நானும் அவரும் பலமுறை கூப்பிட்டுப் பார்த்திருக்கிறோம். வரவே மாட்டாள். ஏதோ தன் “லிமிட்’ அதுதான் என்பது போலவும் அந்த இடத்திலாவது என்னை நிற்க அனுமதித்தாயே என்பது போலவும் இறைஞ்சும் பார்வையோடு எப்போதும் போலவே இப்போதும் நின்றாள்.

கடந்த காலங்களில் அவள் பூசிய அரிதாரப்பூச்சுகள் சாம்பல் திட்டுகளாய் முகமெங்கும் பரவிக்கிடந்தன. புருவ நரையை அவளால் மை பூசி அழிக்க முடியவில்லை. ஆங்காங்கே சொட்டை விழுந்தது போக மீதி முடியில் மை பூசப்பட்ட முடி. “”அம்மா ஊருக்குப் போயிருக்க நேரத்தில இவ ஒக்காந்ததும் ஒருவகைக்கு நல்லது தான்….. நீ ஒண்ணு பண்ணு… வர்ற வெள்ளிக்கிழமை அந்தி பூஜைக்கு மீனலோசனியை அழைச்சிட்டு வா” “”இந்த நாள்லே அவள் கோயிலுக்கெல்லாம் வரக்கூடாது கண்ணு” “”சரி கோயிலுக்குக் கீழே அம்மா மண்டபத்துக்குக் கூட்டிக்கிட்டு வரியா?”

அவள் “சரி’ என்கிற பாவனையில் தலையசைத்தாள். நான் வீட்டுக்குள் சென்று பர்ஸிலிருந்து ஆயிரம் ரூபாயை ஒற்றைத் தாளாக எடுத்து வந்து கொடுத்தேன். எவ்வித தயக்கமுமின்றி அதை வாங்கி மார்புக்குள் செருகிக் கொண்டாள்.

திரும்பிப் போக எத்தனித்தவளை என் தயக்கமான குரல் நிற்க வைத்தது.

“”போகும் போது நாப்கின் வாங்கிட்டுப்போ… எப்படி வச்சிக்கணும்னு சொல்லிக்குடு… அவளை எதுக்கும் பயப்பட வேணாம்….அக்காவும் அத்தானும் பாத்துக்குவாங்கன்னு தைரியம் சொல்லு… அப்புறம்… அப்புறம் வந்து… அவளத் தொட்டுகிட்டு நீ எதுவும் பண்ண வேண்டாம்… அவளை அவளே பார்த்துக்குவா”

பாரிஜாதம்மாளின் கண்கள் அதற்குள் கலங்கி நின்றது. நான் மேலே பேசமுடியாமல் தடுமாறினேன்…

“”சாரிம்மா… என்னை மன்னிச்சிடு”

“”சேச்சே… நீ ஒண்ணுக்கும் கவலப்படாதே… அவளை நான் பாத்துக்கிறேன்”.

“”சரிம்மா… பத்திரமா போயிட்டு வா… ஏதாவது அவசரமுன்னா போன் பண்ணு”

“”சரி கோகிலாவாணி…. ஒடம்பப் பாத்துக்க… நா வாரேன்” என்று கூறி, பாரிஜாதம்மாள் நகர்ந்தாள்.

அவள் போய் வெகுநேரம் வரை நான் அப்படியே நின்று கொண்டிருந்தேன். அவள் செய்த பாவமோ அல்லது நானும் என் தங்கையும் செய்திருந்த புண்ணியமோ பாரிஜாதம் வளர்ப்புத் தாயாக எங்களுக்குக் கிடைத்தது.

என் அம்மாவைப் பற்றிய என் கணிப்பு தவறிப் போய்விட்டதை இன்று நான் பூரணமாக உணர்ந்தேன். ஆடி அடங்கி இனி தன் கடைசி காலத்தை வீட்டு வழக்கப்படி கோவில், குளம், பூஜை, புனஸ்காரம் என்று கழிப்பாள் என்று தப்புக் கணக்குப் போட்டுவிட்டேன். உடனடியாக நான் செயல்பட்டாக வேண்டும்.

என்னால் ஏற்பட்ட ஏமாற்றத்தை என் தங்கை மீனலோசனியை வைத்துத் தீர்த்துக் கொள்ளப் போகிறாள் என்பதைத்தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. என் அம்மாவைப் பொறுத்தவரைக்கும், நான் செய்ததும் செய்ய நினைத்ததும் எங்கள் குலத்துக்கும் கடவுளுக்கும் அவளுக்கும் செய்த துரோகம்.

என் வீட்டுக்காரர் வருவதற்கும் இன்னும் நேரமிருந்தது. போனில் அவ்வளவையும் சொல்ல முடியாது. அதனால் சீக்கிரமாக வரச் சொல்லி ஒரு மெசேஜ் கொடுத்துவிட்டு கடனே என்று வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன்.

தலைவலி மண்டையைப் பிளந்தது. முதலில் காபி போட்டுக் குடித்தேன். பாரிஜாதத்திற்கு ஒரு கப் காபி கூட போட்டுக்கொடுக்கவில்லை என்பது என் ஞாபகத்திற்கு வந்தது. போகும் போது எல்லாத் தாய்மார்களும் சொல்வது போல சம்பிரதாயமாக, “”ஒடம்பப் பாத்துக்க” என்று சொன்னது அந்த நிலையிலும் முறுவலை வரவழைத்தது. நான் அவளுக்குச் சொல்ல வேண்டியதை அவள் எனக்குச் சொல்கிறாள்.

நான் என் ரோஜா மொக்குப் போன்ற விரல்களைப் பார்த்துக் கொண்டேன். என்னுடைய செவ்விள நிறமும் அசரடிக்கும் உயரமும் வேம்பம்பட்டி ஜமீன்தாரால் கிடைத்தது என்பார் என்தாய். அவருக்கு தனக்கு இப்படியொரு பெண் இருக்கும் விபரம் தெரியுமா? தெரியாதா?

என்ற விவரத்தை என் தாய் இதுவரை சொன்னதில்லை.

நான் சிறுவயதில் நடனம் பயின்று வந்த நிலவறை முற்றத்தின் தூணில் ஒரு ஓவியம் இருந்தது. அதில் துப்பாக்கியோடு முறைத்தபடி நிற்பவர்தான் வேம்பம்பட்டி ஜமீன்தார் என்று ஓர் உல்லாசமான தருணத்தில் என் தாய் கூறி இருக்கிறாள்.

அம்மா ஒருத்தி என்பது போல் அப்பாவும் ஒருத்தர்தான் இருக்க முடியும் என்ற அறிவியல் விவரமெல்லாம் நான் பள்ளிக்கூடம் சென்று மூணாம் வகுப்பு படிக்கும் போதுதான் தெரியும். எங்கள் வீட்டுப்பெண்களில் பள்ளிக்கூடம் போய் படிப்பதெல்லாம் என் தலைமுறைக்குத்தான் வாய்த்தது.

என் தாய், பாட்டியெல்லாம் வீட்டிலேயே வாத்தியார் வைத்து படித்ததற்கும் நான் பள்ளிக்கூடத்திற்குச் சென்று பிள்ளைகளோடு பிள்ளையாய் படித்ததற்கும் என்ன காரணம் என்று ஆராய்வதற்கான வயது அப்போது எனக்கில்லை. கோயிலில் இருந்து “கொடைகள்’ வருவது ஏன்? என்று புரியாத வயது.

முத்துலட்சுமி ரெட்டி என்ற மாதரசி குரல் கொடுத்து குடும்பப் பாரம்பரிய வழக்கத்தை சட்டவிரோதமாக்கியதன் விளைவுதான் இது என்று போகப் போகத்தான் புரிந்தது.

மாற்றுத் தொழில் செய்து பிழைக்க விரும்பியவர்களுக்கு அரசே தொழிற்பயிற்சியும் கடனுதவியும் ஏற்பாடு செய்து கொடுத்தது. என் தாய்க்கு அதிலெல்லாம் இஷ்டமில்லை.

அதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. தங்களுக்கு விதிக்கப்பட்ட இந்த வாழ்க்கை கடவுளின் கட்டளை என்பதாக அவள் நம்பினாள்.

இரண்டாவதாக அவளின் கட்டழகு. இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்ற பின்னும் கட்டுவிடாத உடம்பு. அவளைத் தொடர்ந்து வரக் காத்திருந்த என்னுடைய இளமை, அழகு.

ஏற்கெனவே சேர்த்து வைத்துள்ள சொத்துகளே மூணு தலைமுறைக்கும் போதும். இங்கொன்றும் திருச்சியில் ஒன்றுமாக இரண்டு பங்களாக்களுக்குச் சொந்தக்காரி மடப்புறம் ஜமீன்தார் எழுதிவைத்த தோப்பு பணமாய்க் கொட்டிக் கொண்டிருந்தது. பீரோ கொள்ளாத தங்க நகைகள்….. போதாதற்கு லேவாதேவி வேறு…

இவற்றையெல்லாம் வைத்துக்கொண்டு பிழைக்கத் துப்பில்லாமல் மேலும் மேலும் பணம் பணம் என்று அல்லாடினாள். எனக்காக பட்டும் நகையுமாய் வாங்கி குவித்தாள். அவற்றையெல்லாம் விட்டு என் உள்மனது ஏதோவொன்றைத் தேடி அலைபாய்ந்து கொண்டே இருந்தது.

என் தாய் கொஞ்சம் கொஞ்சமாய் அன்னியமானாள். என் புற உலகம் எனக்குள் திறந்து விட்டிருந்த அக உலகை அறியாமல் என் தாய் என்னை வைத்து நிறையப் பணம் பண்ணலாம் என்று ஆகாயத்தில் கோட்டை கட்டிக் கொண்டிருந்தாள்.

அம்மை போட்டு படுக்கையோடு கிடந்தவளை என் பெற்ற தாயே தொட்டுத் தூக்கத் தயங்க, என்னை கவனித்து இளநீரும் மோரும் கொடுத்து மாரியம்மன் தாலாட்டுப்பாடி விதவிதமாய் கதை சொல்லி தூங்கவைத்த பாரிஜாதம் எனது நெஞ்சுக்கு நெருக்கமாகி விட்டாள்.

என்னைப் போலவே என் தங்கை மீனலோசனிக்கும் அவளை மிகவும் பிடித்துப் போய்விட்டது.

காலப்போக்கில் ஒவ்வொரு மாலை நேரமும் எனக்கும் என் தங்கைக்கும் பாரிஜாதத்தோடவே கழிந்தது. அவள் அருமையான கதை சொல்லி. அவள் கதையில் காட்டுத் தீ வந்தால் எங்களுக்கு அனலடிக்கும். மழைபெய்கிறதென்றால் நெஞ்சுக்குள் சளி கட்டும்.

ஆனால் பலதடவை அவள் சொல்ல முயன்றும் முழுதாகச் சொல்லிமுடிக்காத ஒரு கதை உண்டு. ஒவ்வொரு முறையும் அவளின் அழுகையோடோ விம்மலோடோதான் அக்கதை முடியும். அவள் கூடவே சேர்ந்து நாங்களும் அழுவோம். அது அவளின் பிறந்த வீட்டுக் கதை. அவள் சொன்னதை விடவும் சொல்லாமல் விடும் அந்த கண்ணீர்க் கதை எனக்குள் ஆயிரமாயிரம் சித்திரங்களை வரைந்துவிடும்.

நான் பள்ளிக்கூடம் போனபின் தோழிகள் வள்ளி, மேரி, செல்லம்மாள் இவர்களின் வீட்டுக்கெல்லாம் போகத் தலைப்பட்டேன். பத்தாவதில் நான் பருவமடைய அதோடு பள்ளிப்படிப்பு நின்றது. எனது பூப்பு நீராட்டு விழாவை ஒரு பிரமுகரின் தலைமையில் கொண்டாடி அமர்க்களப்படுத்தினாள் அம்மா.

யாரோ ஒரு தனவந்தன் பெரும்பொருள் கொடுத்து என்னைச் சிதைக்க வரப் போகிறான். நான் தூண்டிற் புழுவாய் துடித்துக் கொண்டிருந்தேன். நகைகளும் ஆடைகளுமாய் என் அம்மா வாங்கிக் குவித்துக் கொண்டிருந்தாள்.

அப்படித்தான் ஒருநாள் ஆடைகளுக்கேற்ப நகைகளை வடிவமைக்கும் அழகுக்கலை நிபுணனான கண்ணனை அம்மாவே வீட்டிற்கு அழைத்து வந்தாள். கண்ணனின் வசீகரப் பேச்சு என்னை ஈர்த்தது. நகை வாங்கும் சாக்கில் அடிக்கடி வரவழைத்தேன். ஓரிரு சந்திப்புகளிலேயே கண்ணனுக்கும் என்மீதுள்ள ஈர்ப்பை நான் கண்டு கொண்டேன்.

கதையை வளர்த்துவானேன், பாரிஜாதத்தின் துணையோடு காதல் வளர்த்ததும், ஒரு முகூர்த்த நாளில் கோவிலுக்குப் போய் வருவதாகக் கூறி கேரளாவிற்கு ஓடிப்போனதும், கண்ணனின் நண்பன் வீட்டில் தங்கியிருந்து இருவரும் குடித்தனம் நடத்தியதும், எனக்குப் பதினெட்டு வயது பூர்த்தியான பின் தமிழ்நாட்டுக்கே வந்து கண்ணனின் பெற்றோரின் விருப்பப்படி என்னைத் திருமணம் செய்து கொண்டதும், அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்ததும், இன்றுவரை நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதும் ஒரு நாவலாக எழுத வேண்டிய நெடுங்கதை.

நான் ஓடிப் போனதால் ஏற்பட்ட எதிர்பாராத அதிர்ச்சி என் தாயை பக்கவாதத்தில் தள்ளிவிட்டது. அது ஒன்றுதான் இதில் சோகம்.

அதனால்தான் என் வாழ்வும் தப்பிப் பிழைத்தது.

அம்மா படுக்கையில் விழுந்த செய்தி தெரிந்ததும் நான் துடித்துப் போனேன். கேரளாவிலிருந்து வந்து அம்மாவைப் பார்க்க அடம்பிடித்தேன். இலைமறை காயாய் இருந்த என் பாசம் பொங்கிப் பிரவாகித்தது. மூன்று நாட்கள் பச்சைத் தண்ணி பல்லில் படாமல் கொலைப்பட்டினி கிடந்தேன். பயந்துபோன கண்ணன் பாரிஜாதத்தை வரவழைத்து விட்டார். அவள் வந்துதான் என் நிலையை எனக்குப் புரியவைத்தாள்.

பாரிஜாதம் அடுத்தநாளே ஊருக்குத் திரும்பி விட்டாள் என்றாலும் எங்களின் தொடர்பு அம்மாவுக்குத் தெரிந்து போய்விட்டது. விளைவு என் தங்கை மீனலோசனிக்கும் பாரிஜாதத்துக்குமான கதவு மூடப்பட்டுவிட்டது.

நாள்பட நாள்பட காசுக்காக செய்யும் பணிவிடைகள் அம்மாவுக்குச் சலித்துப் போய், உள்ளன்போடு செய்யும் பாரிஜாதத்தின் பணிவிடைகளை மறுபடி ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தாள். அங்கு நடக்கும் எல்லாக் கூத்துகளையும் இந்தப் பத்து வருட காலத்தில் பாரிஜாதத்தின் வாயிலாகத்தான் அறிந்து கொண்டேன்.

தீவிரமான வைத்தியத்தால் ஓரளவிற்கு நடமாடித் திரிய ஆரம்பித்ததும் என்னிடமிருந்த எதிர்பார்ப்பை என் தங்கையிடம் இடம் மாற்றிக்கொள்ள ஆரம்பித்து விட்டாளாம் என் அம்மா. மீனாவை பிஞ்சிலேயே கனிய வைக்கும் முயற்சிகள் ஆரம்பித்துவிட்டன.

நேற்று முன்தினம் நாங்கள் தஞ்சையில் ஓர் உறவினர் வீட்டு விசேஷத்தில் இருந்தபோது பாரிஜாதம் போன் செய்திருந்தாள். வீடு வந்ததும் நான் அதை மறந்தே போய்விட்டேன்.

இன்று பாரிஜாதம் நேரிலேயே கிளம்பி வந்துவிட்டாள். அதற்குக் காரணம் மீனலோசனி இன்று பெரியவளாகிவிட்டாள். அம்மாவோ வருசம் ஒருமுறை செய்யும் வழக்கமான செக்-அப்புக்காக கேரளா போய் இருக்கிறாள். வருவதற்கு இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்றன.

அம்மா மிகவும் எதிர்பார்த்த ஒன்று இது என்றும், இவளது பூப்பு நீராட்டு விழாவிற்காக நிறையத் திட்டமிட்டு வைத்திருக்கிறார்கள் என்றும் பாரிஜாதம் சொன்னாள்.

பாரிஜாதம் வெற்றுக் கூச்சல் காரியல்ல, அவளது கணிப்பு பல நேரங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. அதுதான் என் அச்சத்திற்குக் காரணம்.

இருப்புக் கொள்ளாமல் மனம் தவித்தது. வீட்டுக்கு வரச் சொல்லி என் வீட்டுக்காரருக்கு இரண்டு முறை போன் செய்தாகி விட்டது. அவர் வந்த பிறகுதான் ஒரு முடிவெடுக்க முடியும்.

ஆனாலும் ஒரு தைரியமும் உள்ளுக்குள் இருக்கத்தான் செய்தது.

சகல படை பரிவாரங்களோடு ஏகப்பட்ட கட்டுக்காவல்களோடு இருந்த நானே விரும்பிய வாழ்க்கையை அடைய முடிந்திருக்கிறது. இன்று அம்மாவுக்கு அந்தளவிற்குச் செல்வாக்கில்லை. நோயாளி வேறு. மீனலோசனியை அந்த நரகத்திலிருந்து மீட்டுவருவது சுலபமானதுதான் என்று என் அறிவுக்குப் பட்டாலும் ஏதோ ஒன்று தொண்டையில் சிக்கிய முள்ளாய் அருவிக்கொண்டேயிருந்தது.

என் தாயிடமிருந்து மீனலோசனியைப் பிரிப்பது என் தாய்க்குச் செய்யும் துரோகமாகவும் பட்டது. உணர்வுப்பூர்வமாய் யோசிக்கும் போது அம்மாவிற்கும் அறிவு பூர்வமாய் யோசிக்கும் போது மீனலோசனிக்குமாக என் மனம் உருகித் தவித்தது.

இந்த இக்கட்டிலிருந்து இருவரும் தப்பித்து விட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்? எப்படியோ கண் அயர்ந்துவிட்டேன் போல…

செல்போன் ஒலிக்கும் சத்தத்தில் எழுந்தேன். நன்றாக இருட்டிவிட்டது.

மறுமுனையில் என் கணவர் பதற்றத்தோடு சொன்னார்.

“”கோகிலா… சீக்கிரம் கெüம்பு…. கேரளாவிற்கு போன உன் அம்மா உடம்பு முடியாம இறந்துட்டாங்களாம். ஏதோ தவறான மருந்தக் கொடுத்ததாலயாம்… இன்னும் பத்தே நிமிசத்தில் வந்துர்றேன்” நான் அழக்கூடத் தோன்றாமல் சிலையாய் நின்றேன்.

– டிசம்பர் 2012

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *