கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: சமூக நீதி  
கதைப்பதிவு: April 16, 2020
பார்வையிட்டோர்: 14,401 
 
 

“சார்…, உங்கள ஓவர்பெல் அடிச்சதும் ‘கரஸ்பாண்டண்ட்’ பாத்துட்டு போவ சொன்னாரு சார்..,”

‘ஓ ஏ’ சொல்லிவிட்டு சென்றதிலிருந்து அன்பரசனின் உடலும் மனமும் ஒருசேர உதறிக் கொண்டிருந்தது. “ஹாஃப் இயர்லி எக்ஸாம் ரிப்போர்ட்ல 100% டார்கெட் அச்சீவ் பண்ணல., அதுவும் இங்கிலீஷ்ல மட்டும் மொத்தம் நாலு பேரு ஃபெயிலு., நாலு பேரும் ஆவரேஜ் ஸ்டூடன்ட்ஸ்தான் எவ்ளோ கோச்சிங் குடுத்தாலும் கொஞ்ச நேரத்துலயே மறந்துடறாங்க. கேக்கும் போது கரெக்டா ஆன்சர் பண்றாங்க ஆனா எக்ஸாம் பேப்பர்ல ஒண்ணுமே இருக்கறதில்ல.., குவார்ட்டர்லிலயே இவங்க நாலு பேரும்தான் ஃபெயிலானாங்க அதுக்கே‌ அந்த ‘கரஸ்பாண்டண்ட்’ ஏத்து ஏத்துணு ஏத்திட்டான். இப்போ என்ன பண்ண போறானோ தெரியல..!!,

-மனம் அவனுள் இறைந்து கொண்டிருந்தது.

‘சிவஞானம் மெட்ரிகுலேசன் ஹைஸ்கூல்’ எனும் தனியார் பள்ளியில் அன்பரசன் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறான். +2க்கு பிறகு என்ன படிப்பது எனதெரியாமல் நான்கைந்து விண்ணப்பங்களை கல்லூரிகளுக்கு போட்டு வைத்ததில் திருச்சி ஈ.வே.ரா கல்லூரியிலிருந்து மட்டும் பி.ஏ. ஆங்கில இலக்கியத்திற்கு அனுமதி கிடைத்து இலவச விடுதி மற்றும் கல்வி உதவித்தொகையுடன் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று அன்பரசன் பி.ஏ ஆனான்.

பின்னர் உடன் படித்த மாணவர்கள் வற்புறுத்தலால் பெரம்பலூர் தனியார் கல்லூரியில் ‘ஃப்ரீசீட்’ விளம்பரத்தை நம்பி நாற்பதாயிரம் வட்டிக்கு பணம் வாங்கி பி.எட் முடித்து ஊருக்கு வந்து சேர்ந்தான்.

“என்னப்பா எப்ப வாத்தியார் வேல கெடைக்கும்?”

“வேலக்கி போனதும் மொத மாச சம்பளத்துல எனக்கு புடவை எடுத்து கொடுக்கணும்டா”

“கோயிலுக்கு சிமெண்டு எடுத்து குடுத்துடுப்பா..”,

வருடங்கள் கடக்கையில் மேற்கண்ட கேள்விகளும் விண்ணப்பங்களும் குறையத்துவங்கின.

எழுதிய ஆசிரியர் தகுதித் தேர்வுகளும் கைவிட்ட நிலையில் மனதை கோழைத்தனம் சூழ்ந்து எதிர்கால அச்சத்தை விதைத்திருந்தது. அவன் வீட்டில் நம்பிக்கையிழந்திருந்தனர்.

“ம்மா…, வேலையெல்லாம் ஒடனே கெடச்சிடாதும்மா..!, அதுக்கு நெறய படிக்கணும், பரீட்சை எழுதணும்..!, நாட்டுல லட்சக்கணக்கான பேரு வாத்தியாருக்கு படிச்சிட்டு சும்மா கெடக்குறான் தெரியுமா?”

“அது என்னடா? திருச்சில படிச்சதுபோதாதுனு எட்டு வட்டி காரன்ட்ட அஞ்சி, பத்துனு நாற்பதாயிரம் கணக்கு பண்ணி பெரம்பலூர்ல படிச்சிட்டு வந்த.., அதெல்லாம் பத்தாதுணு புதுசா படிக்கணும் பரீட்சை எழுதணும்கிற…?!”

“அய்யோ..! ஒனக்கு அதெல்லாம் புரியாது போம்மா..,

“ஆமாண்டா.., அந்தாளு மழை வெயிலுனு பாக்காம கேரளாவுல கெடந்து ஒன்ன படிக்க வெச்சாரு பாரு..!, அதான்டா..!!, வயசுக்கு வந்த பொட்டபுள்ளய கூட கூட்டிக்கிட்டு குடியான தெருவுல வூட்டு வேல தோட்ட வேல செஞ்சி கடன அடைக்க முடியாம கெடக்கிறோம்ல எங்களுக்கு எதுவும் புரியாதுதான்”.

“அய்யய்யே.., பெரிய தொல்லையா போச்சு ஒன்னோட.., எப்ப பாத்தாலும் ‘பணம் பணம்’னு ஏன் எழவெடுக்குற??, அந்த புள்ளய நானா படிக்க வேணாம்னு சொன்னேன்..?, பத்தாவது ஃபெயிலாயி ஊட்ல கெடக்குறதுக்கு நான் என்னா பண்ணுவேன்?”

“பாத்தியாடி.., இவன்தான் தங்காச்சிக்கு ஒன்னுன்னா நாளக்கி கைய அறுத்துகிட்டு வந்து நிக்கபோறான்.., பேசுறத கேட்டுகிட்டியா..?,

நாலு வருசமா வூட்ல ஒக்காந்து தின்னுகிட்டு ஒரு வேலக்கி போவல பேசுறாம் பாரு பேச்சி ஹ்ம்ம்.., எல்லாம் என்னய சொல்லணும் என்னக்கி இந்த கம்முனேட்டி பய வூட்டுல அடியெடுத்து வச்சேனோ அன்னையிலேர்ந்து நாசாமாப்போயித்தான் நிக்கிறேன். பெத்து போட்டதுவோளாவாவுது கடைசி நேரத்துல கஞ்சி ஊத்துமுன்னு பாத்தா லச்சணம் பல்லயிளிக்கிது. _ண்ட_க்கி கடவுளு இன்னும் இந்த உசுர உட்டுவச்சி எம் பாவத்த வாங்குது..”

“ம்மா.., கம்முனு இரும்மா.., வாத்தியாருக்கு படிச்சிட்டு அண்ணன எந்த வேலக்கி போவ சொல்ற..,?”

அண்ணே நீ கோயிலு பக்கம் போ..!, இது ஒப்பாரி வைக்க ஆரம்பிச்சிடுச்சி..,”

பேச்சை நறுக்கி காப்பாற்றிவிட்டாள் தங்கை.

“ச்சே…, தெனம் இதே வேலயாப் போச்சு..”,

– முனகிக்கொண்டே கையில் ‘ஸ்மார்ட்போனு’டன் அந்த சிறிய ஓட்டு வீட்டிலிருந்து வெளியே வந்து நடக்க ஆரம்பித்தான் ,

முன்ன மாதிரி இப்போ என்ன டி.ஆர்.பி ‘டேரக்ட் எக்சாமா’ வைக்கிறான்.?, ‘TET’ பாஸ் பண்ணனும் அதுலயும் +2 மார்க் , டிகிரி மார்க்-னு ஏகப்பட்ட கணக்கு இருக்கு.., நாமெல்லாம் ஸ்கூலுக்கு போனதே பெரிய விசயம் அதுலயும் கெமிஸ்ட்ரிக்கு வாத்தியாரே இல்லாத ‘வெல்ஃபேர்ஸ்கூல்ல’ +2 பாஸ் பண்ணினதே அப்போதைக்கு சாதனை. ‘TET’க்கு பதினஞ்சாயிரம் பணம் கட்டி ஜெயங்கொண்டத்துல கோச்சிங்கிளாஸ் போறவனாலயே பாஸ் பண்ணி ‘வெயிட்டேஜ்ல’ வர முடியல.., இதுல அங்க பாடம் நடத்துறவன் பாதிபேரு எக்ஸாம்ல பாஸ் பண்ணாதவன்தான், என்ன பண்ணி தொலைக்கப் போறேண்ணே தெரியல..??!!

-மனதின் விரக்தி நடையில் வேகத்தை கூட்டி மாரியம்மன் கோயிலில் கொண்டு வந்து சேர்த்தது.

“என்னடா அன்பு இந்த பக்கம்?”

“சும்மாதான் மாமா.., நீங்க ஆடலியா….?”

“வெச்சிருந்ததெல்லாம் வுட்டுட்டேன்டா சீட்டு நிக்கல”

“நீ ஆடறியா..? எவ்ளோ வெச்சிருக்க..?”

“அட ஏன்யா நீ வேற..?, இப்பதான் வேலக்கி போகலனு எங்கம்மா காறிதுப்பி அனுப்புது இதுல சீட்டு வெளையாண்டா அவ்ளோதான்.., வெளக்கமாத்தாலயே அடிக்கும்.”

“சரி.., அப்போ வேலக்கி போவவேண்டியதுதான??”

“போவுணும் மாமா …. ஏதாவது ஒரு எக்சாம்ல ‘க்ளிக்’ ஆகும்னு பாக்குறேன். அதுக்குதான் படிச்சிட்டிருக்கேன்..”,

“டேய் ஒங்கப்பனுக்கும் வயசாவுது தங்கச்சி வேற வூட்ல இருக்கு ஏதோ ஒரு வேலக்கி போடா., ரெஸ்ட்நேரத்துல படிச்சி எழிதிப்பாரு…”,

“பாக்கணும் மாமா..!”,

“மாப்ள..!, நான் ‘பி.எட்’ முடிச்சி பத்து வருசமாவுது.., இன்னும் எம் பொண்டாட்டி எனக்கு வேல கெடைக்கும்னு ஜாதகம் பாத்துட்டு அலையுறா.,

நானும் அத நம்பி இருந்தா குடும்பம் என்னாவுறது..? அதான் செக்யூரிட்டி வேலக்கி வந்துட்டேன்…”,

“நாமளும் எப்பதான்யா மாறுறது? செக்யூரிட்டி வேல, பெட்ரோல் பங்க், ஜவுளிகடைனு இதுலயே வாழ்க்கை போவுது..”,

“மாப்ள.., வேற வழியில்லடா சோறு திங்கனுமில்ல..!, நீ நெனைக்கிற செக்யூரிட்டி வேல கேவலம்னு ஆனா அதுக்கே ஆயிரத்தெட்டு போட்டி இருக்கு.., நீ போவுறதுன்னா சொல்லு…. சனிக்கெழம பெரம்பலூர் ‘எம்.ஆர்.எஃப்’ல இன்டர்வியூ நானே அழைச்சிட்டு போறேன்..

“இல்ல மாமா ஏதாவது ஸ்கூலுக்கு ட்ரை பண்றேன்”.

“நல்ல விசயந்தான்., ஆனா சீக்கிரம் போ.., அத விட்டுட்டு இப்படி தத்துவம் பேசிட்டிருந்தா தரித்திரம் தான் புடிக்கும், எனக்கு நைட் ஷிப்ட் நான் கெளம்புறேன்…”,

மனம் திணறிப்போயிருந்தது அம்மா வேற ஜவுளிக்கடைக்கு போக சொல்லுது, இந்தாளு செக்யூரிட்டி வேலக்கி போக சொல்றாரு, பாக்குறவன்லாம் காய்கறிகடை வையி, கூல்ட்ரிங்க்ஸ் கடை வையினு ஐடியா சொல்றான் கடைசி வரைக்கும் வாத்தியாரா ஆவ முடியாது போலிருக்கு..”,

குழம்பிப்போய் கோயிலின் பின்புறம் வேப்பமரத்தடியில் அமர்ந்து திறன் பேசியில் துழாவி ‘Saranya B.ed’ தேடி எடுத்தான் அவன் வகுப்புத்தோழி.

“ஹலோ…”

“சரண்யா நான் அன்பு பேசறேன்”

“சொல்டா”

“ஒன்னுமில்ல.., உங்க ஸ்கூல்ல ‘வேகன்ட்’ இருக்கா..?”

யாரோ தனியார் ஸ்கூல்ல வேல பாக்க மாட்டேன்னு சொன்னாங்களே ஞாபகம் இருக்கா?”

“அவன் செத்துட்டான் வேல இருக்கா இல்லியா?”

“இருக்குடா.., இந்த மன்த் ஒரு பொண்ணு ரிலீவ் ஆகறா மேரேஜ் ஃபிக்ஸ் ஆகிருக்கு இங்கிலீஷ் மேஜர்தான்., என்ன திடீர்னு?”

“வூட்ல ஒரே பணப்பிரச்சினை அதான்…”,

“இங்க சாலரி 4500 தான், வொர்க் லோடு அதிகம் காலைல 8.00 மணிக்கு வந்து ஈவ்னிங் 6.00 மணிக்குத்தான் விடுவாங்க. 9th லயே 10th சிலபஸ் எடுக்கணும் சனி ஞாயிறு ஃபுல் டே ஸ்பெஷல் கிளாஸ் உண்டு, ரிசல்ட் 100% கொடுக்கணும் உன்னோட ஒரிஜினல் டி.சி மார்க் ஷீட் கொடுத்துட்டு டூ இயர்ஸ் அக்ரிமெண்ட் சைன் பண்ணனும் ‘டக் இன்’ பண்ணி ஷூ போட்ருக்கணும் ஸ்டூடன்ஸ்கிட்ட நெருங்கி பேசக்கூடாது சாலரி ஒன் மன்‌த் பெண்டிங் வச்சிதான் தருவாங்க அப்புறம் ‘இயர்க்கு’ அஞ்சி அட்மிஷனாவது போடணும்”

“இதுக்கு செக்யூரிட்டி வேலயே பரவால்ல..”,

“என்னடா சொன்ன? உன்ன யாராவது வேலக்கி வா..ன்னு கூப்டாங்களா? நீ இல்லேன்னா ஆயிரம் பேரு வருவான் தெரிஞ்சிக்கோ..”,

“கோவப்படாத சரண்யா.., ஸ்கூல்ல வேல பாத்தா எக்சாம்ஸ் எழுத ஈஸியா இருக்கும் அதான் கேட்டுப்பாத்துட்டு நீயே கூப்டேன் பேலன்ஸ் வேற தீரப்போவுது”.

“சரி.., நாளைக்கு சொல்றேன்.”

ஒரு வார தொடர் நச்சரிப்புக்கு பிறகு,

“நாளைக்கு காலைல 7.30 பஸ்ஸ்டாண்டு வந்துடு நான் கூட்டிட்டு போறேன்”

-எனும் அவளது அழைப்பு அவனுள் சிறு நிறைவை தந்தது.

“எல்லா ஒரிஜினல்ஸ்ம் இருக்கா?”

“ம் இருக்கு..,”

“டேய் ஜென்ட்ஸ் ஸ்டாஃப் எடுக்க மாட்டாங்க கரஸ் எங்கப்பாவோட ஃப்ரெண்ட் நான் கேட்டதாலதான் தராங்க கரெக்டா நடந்துக்கோ ட்ரெயினிங்ல பண்ணின மாதிரி பில்டிங் சரியில்ல பாத்ரூம் சரியில்ல, பசங்கள வேலை வாங்க கூடாது, அடிக்க கூடாதுனு ஆரம்பிச்சிடபோற அப்புறம் என்னைதான் காய்ச்சுவாங்க மானத்தை காப்பாத்திடுடா..!”

“சரி சரண்யா..,”

பள்ளியின் பூசப்படாத கட்டிடங்களும் யூனிஃபார்மும் மனதில் சலம்பின.

“அண்ணா கரஸ் வந்ததும் இவன உள்ள அனுப்புங்க.,”

ஓ.ஏ விடம் அறிமுகப்படுத்தி அவள் வகுப்புக்கு சென்றாள்.

காலை 10.00 மணி

வெள்ளைநிற பேண்ட் சட்டையுடன் காரிலிருந்து இறங்கி தனது அறைக்குள் நுழைந்தார் ‘கரஸ்பாண்டண்ட்’

ஐந்து நிமிடம் கழித்து,

“எக்ஸ்க்யூஸ் மீ சார்…,”

“ம்…வாப்பா உக்காரு…,”

எதிரில் ‘லக்ஷ்மணன் ME’ எனும் சிறிய பெயர்ப் பலகை இருந்தது .

“நீங்க வெள்ளாழத் தெருவா?”

“இல்ல சார் அம்பேத்கர் நகர்….”

“ஓ.., அப்றம் எப்டி…?”

“நானும் சரண்யாவும் பி.எட். கிளாஸ்மேட் சார்..,”

“ஓ.கே., என்ன படிச்சிருக்கீங்க?”

“BA.B.Ed and doing final year MA in English.,”

“ம்., கவர்மெண்ட் ஜாப்க்கு ட்ரைபண்ணலயா…?”

“ப்ரிப்பேர் பண்ணிட்டுருக்கேன் சார்..,”

“உங்களுக்கெல்லாம் கோட்டாவுல சீக்கிரம் கெடச்சிருமே…,”

“——————————–”

“சரிப்பா.., நாங்க ஜென்ட்ஸ் ஸ்டாஃப் எடுக்கறதில்ல.., ஏற்கனவே பாத்தவங்க திடீர்னு மேரேஜ் ஃபிக்ஸாயிடுச்சி . சரண்யா தான் சொன்னாங்க.., நீங்க “எய்ட்டி” அபவ் பர்சென்டேஜ்னு அவங்கள நம்பிதான் உன்னை சேத்துகிறேன் மத்த டீடெய்லாம் சரண்யா சொன்னாங்களா?

“சொன்னாங்கசார்”

“ஒரிஜினல்ஸ் கொண்டு வந்துருக்கீங்களா?., டூ இயர் அக்ரிமென்‌ட் சைன் பண்ணலாமா?”

“பண்றேன் சார்..,”

-நடைமுறைகள் முடிந்தது.

“தம்பி 9th Cக்கு போங்க அங்க எல்லார்க்கிட்டேயும் 10th புக் இருக்கும் இப்பவே ஆரம்பிச்சிடுங்க எதும் டவுட்-னா சரண்யா கிட்ட கேட்டுக்கோங்க., ‘ஆல் தி பெஸ்ட்’.

அனைத்திற்கும் ஒரேயளவில் தலையசைத்து வகுப்பிற்கு கிளம்பலானான்.

துவக்கத்தில் நிர்வாகத்திற்கு அஞ்சி கடுமையாக நடந்து கொண்டவன் நாளடைவில் இயல்பாக பழக ஆரம்பித்தான் .

“சார் ஏன் சார் 9th லயே 10th புக் நடத்து றீங்க?

“இங்கிலீஷ கண்டுபுடிச்சது யாரு சார்?”

“ஹோம் ஒர்க் வேணாம் சார்..,”

“உங்களுக்கு இங்கிலீஷ்ல ‘லவ் கிங்’ தானே சார்..!,”

“கதை மட்டும் சொல்லாதீங்க சார் பிளேடா இருக்கும் சார்..,”

இரண்டு மாதங்கள் கடந்த பிறகு மாணவர்கள் தயக்கமின்றி கலந்துரையாடத் துவங்கினர். இவன் தம் பள்ளிக் காலத்தில் ‘உருப்படாத செட்’டிலிருந்து வந்தவனென்பதால் நல்ல புரிதலுடன் இலகுவாக கையாண்டான். ஆங்கில இலக்கணத்தை சிறு பகுதிகளாக பிரித்து மெல்ல கற்பித்து அச்சத்தை போக்கினான். மாணவர்கள் இவனிடம் கெட்ட பெயர் எடுக்காமலிருக்க விரும்பினர்.

ஊரில் மீண்டும் ‘வாத்தியார் தம்பி’ என்று பரவலாக அறியப்பட்டான். வீட்டிலும் நல்ல மரியாதையுடன் கறிக்குழம்பும் கிடைத்தது. வட்டி தொந்தரவும் குறையத் துவங்கியது, வேலைப்பளு வாட்டினாலும் மாணவர்களை மனதில் கொண்டு வகுப்பில் உற்சாகமாய் நடந்து கொண்டான்.

ட்‌ர்‌ர்‌ர்‌ர்‌ரிய்வ்ங்….,

பள்ளியின் கடைசி மணி ஒலித்து நிகழ்காலத்திற்கு வந்து சேர்ந்தான். மனதில் இரைச்சல் அதிகரித்தது.

“எல்லாம் ஃபைவ் மினிட்ஸ் பாத்ரூம் போயிட்டு ஸ்டடி கிளாஸ் வந்துடுங்க கிராமர் டெஸ்ட் எழுதனும்”

-உத்தரவிட்டு பதிலை எதிர் பார்க்காமல் தடதடத்து அலுவலகத்தை நோக்கி விரைந்தான். காலாண்டு தேர்வு நேரத்தில் வாங்கிய பேச்சுகள் அவன் நனவை இடைமறிப்பதை தவிர்க்க முடியவில்லை. அலுவலகத்தை நெருங்கியதும் அங்கே சரண்யா உட்பட மூன்று பேர் தயாராக வெளியே நின்று கொண்டிருந்தனர்.

“நீ ஏன் சரண்யா நிக்குற?”

“ரெண்டு பேரு தமிழ்லயே ஃபெயிலாயிட்டங்கடா”

“என்ன பண்ண போற?”

“என்ன பண்ணுறது..,கத்துவாரு.., கண்டுக்காம போயிட வேண்டியதுதான் எல்லாம் நம்ம தலவிதி மேரேஜ் ஃபிக்ஸ் ஆனதும் நானும் எஸ்கேப் ஆயிடுவேன்”

“சீக்கிரம் பண்ணு ”

“உனக்கு எத்தனை பேரு?”

“நாலு பேரு இப்போதான் ‘பிக் அப்’ ஆகறாங்க ஸ்லோ லேனர்ஸ்”

“சரி அந்தாளு எது பேசினாலும் தலையாட்டிட்டு வந்துடு எதித்து பேசி ஏழரைய கூட்டிடாத”

“சரி”

கண்ணாடி அறையிலிருந்த கரஸ்பாண்டண்ட் அன்பரசனை கையசைத்து அழைத்தார். கதவைத்திறந்து பவ்யமாய் உள்ளே நுழைந்தான். ஏ.சி வாசனையில் மூச்சிரைப்பின் சத்தம் அவனுக்கே கேட்டது. அருகில் சென்று நின்றதும் நெஞ்சங்குலையில் நடுக்கமெடுக்கத்துவங்கியது.

இந்த பொழுது எப்படிக் கழியும் என்று துடித்து எச்சிலை விழுங்கினான்.

“என்ன சார் பண்ணியிருக்கீங்க?”

குரல் நாண்களின் உச்சபட்ச டெசிபலில் ஆரம்பித்தார்.

நானும் புது ஸ்டாஃப் சரி பண்ணிக்குவீங்கனு பாத்தா.., மறுபடியும் நாலு பேரு ஃபெயிலாயிருக்காங்க.., போன முறையே சொன்னனா இல்லீயா?”

‘சொன்னீங்க சார்”

“பின்னே ஏன்யா நாலு பேரு ஃபெயிலாயிருக்கான்?? பேரண்ட்ஸ் என்னை தானே கேப்பாங்க..,

என் ஸ்கூல் நேம்தானே கெட்டுப் போவுது..!”

“இல்லசார்.., அவங்க ‘ஸ்லோ லேனர்ஸ்‌’ கிராமர்லாம் இப்போதான் க்ளியர் ஆகறாங்க”

“ஓ இத்தன நாளு இருந்தவங்க கிராமர் சரியா நடத்தலனு சொல்றியா?”

“அப்படி இல்ல சார்”

“வாய மூடுப்பா மொதல்ல.., எனக்கு கிளாஸ் எடுத்திட்டுருக்க.., உன்ன பாத்து எந்த ஸ்டூடன்ட்சாவது பயப்படறானா பாரு.!, எவனாவது படிக்கலன்னா தூக்கிப் போட்டு மிதி..!! ஃபெயிலாகிட்டா ‘கிளாஸ்ரூம்’ வெளியில ரெண்டு நாளு முட்டி போட வையி.., பேரண்ட்ஸ் கிட்ட நான் பேசிக்கிறேன். நீ தான் சப்ஜெக்ட் வெளிய போயி பாடம் நடத்துறீயாமே…, அப்புறம் எப்டி அவன் புக்கை படிப்பான்..? உன் கிளாஸ்ல எல்லாம் ஜாலியா கதை கேக்குற மாதிரி உக்காந்திருக்கான் எந்த கிளாஸ்லயாவது சிரிப்பு சத்தம் கேக்குதா?.., உன் கிளாஸ்ல மட்டும் தான் கேக்குது. அப்புறம் எப்டி படிப்பான்?

“இண்டர்பிரடேஷனுக்காகத்தான் சார்”

“யப்பா.., நான் சொல்றத கேட்டுட்டு ‘ஸ்ட்ரிக்ட்டா ஹேண்டில்’ பண்ண முடியும்னா பண்ணு இல்லனா ஹாஸ்டல்ல நைட் ஸ்டடி ‘சூப்ரவைசர்’க்கு போய்டு.., நான் புது ஆளு போட்டுக்கறேன் என்ன சொல்ற?

“இல்ல சார் இனிமே ஸ்ட்ரிக்டா இருக்கேன் சார்..”,

“அடுத்த மன்த்லி டெஸ்ட்ல 100% காட்டனும் இல்லனா ஹாஸ்டலுக்கு போயிடனும் சரியா?”

“———————————————–“

-தலையை மட்டும் அசைத்தான்.

“போ..!, ரெக்கமண்ட்ல ஆள எடுத்தா இப்டித்தான்..,”

-சொற்கள் கொதிக்கும் தாரை நெஞ்சில் கொட்டியது போல் கொப்பளித்தது விழியின் மேல் நீர்ப்படலம் உருவாகி ததும்பியது. கண்ணசைக்காமல் வெளியே வந்தான் .

“என்னடா கொத்துபரோட்டாவா?”

-சரண்யா.

“____________________________”

-பதில் பேசாமல் தலைகுனிந்தவாறே வகுப்பறையை நோக்கி சென்றான்.

ஒழுங்கா படிச்சி வேலைக்கி போயிருந்தா இவங்கிட்டலாம் நிக்க வேண்டிய அவசியமே இல்ல வேலை இல்லாம வீட்ல இருந்தா வட்டி காரன் தூக்கத்துல வந்து எழுப்புவான் கூலி வேல கூட கெடைக்கறதில்ல…,

மனதை குழப்பம் குதறுகையில் வகுப்புக்குள் நுழைந்திருந்தான்.

பேச்சு சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

“சார் டெஸ்ட்டுக்கு பத்து நிமிஷம் படிக்கணும் சார்”

“ஆமா சார்..,

“டவுட் அதிகமா இருக்கு சார்., சொல்லித்தாங்க சார்…!!”

சத்தம் கேட்க கேட்க கோபம் அதிகரித்து மேசை மீதிருந்த குச்சியை எடுத்து கண் முன் தெரியாமல் அனைவரையும் அடித்து வெளுக்கத் துவங்கினான்.

இதனை சற்றும் எதிர்பாராத மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் நெரித்துக்கொண்டு குற்றவாளியை போல் வாயில் ஒரு விரலை வைத்து அமர்ந்தனர். யார் கண்களிலும் நீர் வரவில்லை மாறாக அதிர்ச்சியில் அசைவற்று போயிருந்தது,

“எல்லாரும் பேப்பர எடுத்து நான் கொஸ்டியன் சொல்ல சொல்ல ஆன்சர மட்டும் எழுதுங்க தனித்தனியா உட்காருங்க…,”

குரலில் குரூரமேறியிருந்தது.

மயான அமைதிக்கு பிறகு விடைத்தாள்களை வாங்கிக் கொண்டு

“எல்லாரும் நாளைக்கு ஃபர்ஸ்ட் மூணு ‘எஸ்ஸே’ படிச்சிட்டு வந்திடுங்க காலைல 8.00 மணிக்கு வந்தவுடனே ‘டெஸ்ட்’

கெளம்புங்க…,”

“தேங்க்யூ…சார்…,”

யாரும் முகத்தை பார்க்காமல் கிளம்பினர்.

அவனுக்கு மனம் மிருகமாகிக் கொண்டிருந்தது புத்தகம், உணவுப்பை சகிதம் வீட்டுக்கு கிளம்பினான் மனதுடன் சேர்த்து நாக்கும் வறண்டிருந்தது.

“என்ன தம்பி கெளம்பியாச்சா..,?”

-நுழைவாயிலில் நின்றிருந்த செக்யூரிட்டி கேட்டார்.

“ஆமாண்ணே..,”

“நீங்க ஒரு ஆளுதான் தம்பி பிள்ளைங்கள அடிக்கமா திட்டாம அன்பா பாத்துக்குறீங்க.., மத்ததெல்லாம் நாய் ஜென்மமா இருக்கும் போல…,”

“_________________ ”

தலையசைத்தான்.

“அப்பா என்ன வேல தம்பி?”

“கூலி வேல தாண்ணே., கேரளாவுல..!,”

“இங்க சம்பளமெல்லாம் கரெக்டா தர்றாணுங்களா..?”,

“இல்லண்ணே இருபது தேதிக்கு மேலதான் தர்றாங்க..,”

“இங்க வந்துட்டா வேற வேலக்கி போக முடியாது.., மரியாதையும் இருக்காது வீடு எந்த தெரு தம்பி ?”

“அம்பேத்கர் நகர்..,”

“ஹ்ம்ம்ம்…, நம்மாளுங்களெல்லாம் அந்த காலத்துல ‘கோவணம்’ கட்டிக்கிட்டு பண்ணையடிச்சானுங்க.., இப்போ நாமெல்லாம் பேண்டு, சட்டை போட்டுக்கிட்டு பண்ணையடிக்கிறோம்”

“————————————————–”

– நவம்பர் 2017

Print Friendly, PDF & Email

1 thought on “சார்

  1. இது தான் இன்றைய ஆசிரியர்களின் நிலைமை. பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டும் அல்ல, கல்லூரி ஆசிரியர்களின் நிலைமையும் வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு அற்புதமான கதை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *