சாமிகளே நீங்க நாசமாப்போகனும்…

0
கதையாசிரியர்:
கதைத்தொகுப்பு: குடும்பம்  
கதைப்பதிவு: July 21, 2016
பார்வையிட்டோர்: 12,528 
 

ஒவ்வொரு தடவை வலி வரும்போதும் பிராணன் நின்று போகும். சதை பிய்ந்தது மாதிரி வலித்தபோது ‘ அம்மா’ என்ற அனத்தலோடு வேதனையை விழுங்க முயற்சித்து கொஞ்சம் சமாளிக்கப்பார்த்தார் அங்குசாமி. சோகத்துக்கும் துக்கத்துக்கும் உடலளவில் நிதர்சமான வலி கிடையாது.அவைகளே பரவாயில்லை என்றுதான் அவருக்குத்தோன்றியது. அவைகளைச்சமாளிக்க முடிகிறது. இந்த உடல் உபாதைகளைச் சமாளிக்கிற தெம்பை அவரது உடல் இழந்திருத்தது. இப்போது ஒரு தடவை சர சரவென்று மூத்திரம் போனால் போதும்.இந்த நிமிஷம் அவர் வேண்டும் வரம் இதுதான்…..

கொஞ்சம் போல கதவு திறந்து உடன் வேலை செய்யும் சரவணன் எட்டிப்பார்த்தான்..கையில் ஹார்லிக்ஸ் பழம் இருக்கலாம் என்று தெரிந்தது.

‘நைனா…. உடம்பு எப்பிடி இருக்கு நைனா…..’

‘வாப்பா உட்காரு …ஏதோ இருக்கு …நீ சௌக்கியமா…முதலாளி எப்பிடி இருக்கார்…… சௌக்கியமாஇருக்காரா…கடையிலே எல்லாம் சௌக்கியமா இருக்காங்களா……..’

‘எல்லாம் சௌக்கியம் நைனா …அத விடுங்க….ரொம்ப தொந்தரவுன்னு சொன்னாங்களே …வலி ஜாஸ்தியா…வாடிப்போயிட்டீங்க நைனா…பாவமா இருக்கு…’

‘என்னிக்குடா நாம செழிப்பா இருந்தோம்…இன்னிக்கு வாடி இருக்க…ம்…ம்..ம்…வலி உயிர் போற மாதிரிதான் இருக்கு…பெரண்டு படுக்க முடியலை…சடார்ன்னு வலி..இங்க ஈசியைச்சொறுகினமாதிரி…’அடி வயிற்றைக்காண்பித்தார்….

கழிவிரக்கத்துடன் பெரியவரைப்பார்த்தான் சரவணன்…உழைத்தே கூடாகிப்போன உடலில் கோடு கோடாய் எலும்புகள்…நேர்மையும் விஸ்வாசமும் உழைப்பும் அவருக்கக்கொடுத்திருந்த மொத்த பரிசுகள்…….பாவம்தான் ..இது பொது விதி இதில் தன் போன்றோருக்கும் எந்த விதி விலக்கும் கிடையாது….

‘எப்ப சரியாகுமாம்…’

‘நாலு நாள்ளே டிஸ்சார்ஜ் ஆகலாமாம்…மூனு மாசம் கழிச்சு டயாலிஸிஸ் பண்ணனுமாம்..என்னென்னமோ தொந்திரவுடா…’

‘ரெண்டு கிட்னியும் கெட்டுட்டதா சொன்னாங்க நாய்னா..’

‘ஆமாண்டா …நமக்கெல்லாம் வர்ர வியாதியா இது..’

‘வாஸ்த்தவம் நாய்னா…உங்களை மாதிரி நல்லவங்களுக்கு வர்ர வியாதியா இது இது விதி.. ‘சரவணனுக்கு வியாதியின் கொடுமை புரிந்தது…கொண்டு வந்த
பொருள்களை ஸ்டூலின் மேல் வைத்தான்..

‘என்னடா சரவணா நெறைய கொணாந்திருக்கே…’

‘எல்லாம் மொதலாளி உபயம் நைனா…’

முதலாளி கரிசனம் என்றால் அதற்கு காரணம் இருக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் அத்துப்படி…அவர் விஷம் கொடுக்க முடிவு செய்துவிட்டால் பக்குவமாகப்பேசி பழத்தில் வைத்துதான் கொடுப்பார்…சரவணன் என்ன கொண்டு வந்திருக்கிறான் என்று அவருக்குப்புரியவில்லை….

‘ முதலாளியா கொடுத்தார் ..ஆச்சரிமா இல்லே சரவணா…’

ஒரு வினாடி மௌனமாக இருந்த சரவணன் சங்கடத்துடன் ஆரம்பித்தான்…

‘இது மாத்திரமில்லே நைனா…பத்தாயிரம் பணமும் கொடுத்தனுப்பி இருக்கார்…’

‘பத்தாயிரமா….’

‘ஆமாம் நைனா…’

சட்டென்று அவருக்கும் கட்டுப்பாமல் கண்ணில் இருந்து நீர் பொங்கியது..

ஏண்டா சரவணா…எங்கணக்கை நிரந்தரமா ஒரேடியா முடிச்சாச்சா….

சரவணன் பதில் சொல்லாமல் மௌனமாக நின்றான்..அங்கு சாமியைப்பார்க்க பரிதாபமாக இருந்த்து..

‘நைனாநான் முதலாளியோட ஆள்ன்னு எல்லாருக்கும் தெரியும்..அவரு என் கிட்ட பேசினபோது எனக்கு தாள முடியாத சங்கடம்தான் …நான் ஒரு போக்கிடம் இல்லாத கூலிக்காரன் ..சொன்னதைக் கேக்கறது தவிரென்னாலே என்ன பண்ண முடியும்…

‘நீ ஒரு பாவண்டா…விடு என்னதான் சொன்னாரு மொதலாளி…சொல்லு….’

‘சங்கடமா இருக்கு நைனா ..ஆனா சொல்லிடறேன்…ஏண்டா சரவணா..பெரிசு தேறாது போலத்தெரியுது…நாளைக்கே பொட்டுனு போயிட்டா எவன் கிட்ட வச்சி கணக்கு தீர்க்கறது…அவரு நூறு வருஷம் நல்லா இருந்தா நல்லதுதான் ..திடீர்னு போயிட்டா எவனாவது வந்து” பாருங்க செத்தவன் இருபத்தி அஞ்சு வருஷமா உங்க கிட்ட வேலைக்கு அதுவும் விஸ்வாசமா சத்தியமா..ஒரு திருட்டு பெட்டில்லாம கடைசிவரை இருந்திருக்கான் …அவன் பையனோ மூளை வளர்ச்சி இல்லாதவன்..” அப்பிடி இப்பிடின்னு சொல்லி காசில்லே பிடுங்கப்பார்ப்பானங்க…அட அதோட திரும்பி வந்தா வேலையா செய்ய முடியங்கறே….என்ன நான் சொல்றது .அப்புறம் ஏதாவது ஆச்சின்னா அதுக்கு வேற நாம அழுவனும் இல்லியா…நமக்கு எதுக்குடா இத்தினி வம்பு…படக்குனு
கணக்கு தீத்துட்டா அவன் செலவுக்கும் கொடுத்தா மாதிரி கணக்கும் தீர்ந்த மாதிரி அப்பிடின்னார்… கேக்க சங்கடமா இருந்தது நைனா …உங்க மாதிரி விஸ்வாசமா ஒரு ஆள் இனி அந்த ஆளுக்கு கெடப்பானா நைனா…பேசறான் திருடன்…நாசமாப்போவான் நாளைக்கு எனக்கும் இதானே….அயோக்கியனுங்க….’

டேய்…எவனாவது கேக்கப்போறாண்டா..குடிக்கிற கஞ்சிக்கும் கேடு…சத்தமா பேசாத விடு…நமக்கு எழுதுனது அப்பிடி…என்கிட்ட பேசின மாதிரி மத்தவனுங்க கிட்ட போய் வெளியேபேசிடாதே….அழுவாதடா…நீயெல்லாம் நல்லா வருவே………

சரவணனை எல்லோரும் கருங்காலி என்று திட்டுவார்கள் ஆனால் அவனுள்ளேயும் மனிதமும் நெறுப்பும் கணிவது யாருக்குத்தெரியம்…

‘உட்காரு ..அந்த ப்ளாஸ்குலே காப்பி இருக்கு சாப்டு….விடரா…’

‘இதாங்க நைனா…பணம் ..அந்த நாயி கையெழுத்து கேக்கும்…’

சரவணன் நீட்டிய பேப்பரில் சிரமத்துடன் ஒருக்களித்து கையெழுத்திட்டுக்கொடுத்தார் அங்குசாமி…

‘சரவணா…தப்பு அவங்க பேர்லே இல்லே…யதார்த்தம் நாம புரிஞ்சிக்கனும்…’

‘என்ன யதார்த்தமோ …சாமிக்கு கண்ணிலே….. ‘

பணத்தை தலையனைக்குக்கீழே வைத்த சரவணன் எதிர் பாராமல் அவர் காலைத்தொட்டு கும்பிட்டான்……’நான் வரேன் நைனா….இதாங்க நைனா இதுலே
ஐநூறு இருக்கு…என் சொந்தப்பணம் …வேண்டாம்னு சொல்லாம என் திருப்திக்காக வச்சிகுங்க…என்று அவன் வேண்டியபோது அங்கு சாமி உடைந்து போனார்…..’

நீ நல்லா இருப்பேடா……’

===

சரவணன் கண்ணீரைத்துடைத்தபடி வெளியே போனான்……

இரண்டு சிறு நீரகமும் பழுதானால் என்னநடக்கும் என்று புரியாத ஆள் இல்லை அங்குசாமி.ஒரு குரூரமான முதலாளியிடம் இருபத்து ஐந்து வருசம் வேலை செய்ய எவ்வளவு சூட்சமம் வேண்டும் என்பது அந்தமாதிரி வேலை செய்தவனுக்கு மட்டுமே தெரியும்.இப்போது வேலை போனது ஒரு கவலை கிடையாது. இவ்வளவு வயசு வரை வேலை செய்த்தே பெரிய விஷயம்தான்.இன்னும் மூன்று மாசம் தாக்குப்பிடிக்கலாம் போலத்தெரிந்த்து. அப்புறம் மருந்து டயாலஸிஸ் என்று செலவு செய்ய பொருளாதாரம் இடம் கொடுக்காது.இதுவரை வந்த வருமானம் வயிற்றுப்பாட்டோடு சரி..எக்கிப்பிடத்து ஒரு இருபதாயிரம் சேமித்து வைத்திருந்தார்.அப்புறம் முதலாளி தந்த பத்தாயிரம்…இது என்னத்துக்காகும்…அவர் கவலைவேறு.பிரச்சினையேவேறு….

அன்று மாலை ரவி வந்திருந்தான்..அவன் வந்த்தும் தெரியாமல் மயக்கம் ..மயக்கம் தெளிந்து விழித்தபோது அவன் அவரையே பார்த்தவாறு உட்கார்ந்திருந்தான். அவரை விட உயரமாய் மழிக்காத தாடியுடன்…மெல்ல சிரம்பபட்டு உட்கார்ந்தார் அங்கு சாமி…

நீ எப்ப சாமி வந்தே…எழுப்பக்கூடாது…உனக்கோசரம் காத்திருந்தேன்…பழம் இருக்கு எடுத்துக்கோ…சாப்புடு…’

‘நான் அப்பவே வந்துட்டன்பா…நல்லா தூங்குனியா ..தூங்குன்னு…உட்கார்ந்திட்டேன் நான் வரல்லேன்னு நெனைச்சியாப்பா..நான் வராம இருப்பனா…உன்னைப்பாத்தா பாவமா இருக்குப்பா..வலிச்சதாப்பா…ரொம்ப அழுதியாப்பா… ‘

‘பாழாப்போன சாமிகளே..நீங்கள்ளாம் நாசமாப்போகனும்…இந்த வயசுக்கொழந்தையை நான் மருந்து வச்சி கொல்லவா முடியும்…இவனுக்ககவாது என் உசிரைப்பிடிச்சி நிறுத்தக்கூடாதா…இவனை வச்சிட்டு எப்பிடிய்யா நான நிம்மதியா சாவேன்…’.என்று மனசுக்குள் புலம்பியபோது அவரது கண்ணில் அடக்கமுடியாது கண்ணீர் வழிந்தது..

எனக்கு வலிக்கல்லேப்பா ..உன்னை நெனைச்சா எனக்கு வலி கூட வருமா என்ன..நான் நல்லா இருக்கேன்…மத்தியானம் சாப்ட்டியா..என்ன போட்டாள் உன் அண்ணி…வா இப்பிடி பக்கத்திலே உட்காரு…

‘அண்ணி பழைய சோத்தைப்பபோட்டதுப்பா…ஒரே நாத்தம்..சாப்புடவே முடியலை ..உப்பு போட்டு கரைச்சு குடிச்சிட்டேன்….வெங்காயம் கேட்டேன்..அது கூடத்தரல்லேப்பா….’

‘ஈஸ்வரா.’.என்று தலையில் அடித்துக்கொண்டார்

‘…சண்டாளப்பாவிகளே…இந்தக்கொழந்தையைஏண்டா சீரழிக்கறீங்க…நாலு நாள் நல்ல சோறு போடாத நீங்க நான் போனதுக்கப்புறம் என்னென்ன செய்யப்போறிங்களோ தெரியலையே….பகவானே…

‘ஏம்பா… நீ ஆஸ்பத்திரியலே இருந்து வந்ததும் சாம்பார் வச்சி சோறு போடறியா…’

‘கண்டீப்பா சாமி உனக்கில்லாத சாம்பாரா…நீ எது கேட்டாலும் செய்யறேன் சாமி ..ஆமா அண்ணி உனக்கு என்ன வேலை குடுத்தா…நீ செஞ்சியா சாமி….’

‘பாத் ரூம் கக்கூசு கழுவினேன்பா…பெட்சீட் எல்லாம் தொவச்சேன்…வீடு தொடச்சேன்..

‘தப்பில்லே…அதுவும் நம்மவீடுதானே….’

பெரிய வீடுப்பா…நாய்க்குக்கூட இத்தினி பெரிய ரூம்ப்பா…அந்த நாய் என் கிட்ட நல்லா பழகிடுச்சி…நான் அது கூடதான் படுப்பேன்…அழுவதப்பா வலிக்குதா….

‘இப்பதான்ய்யாவலிக்குது….ரொம்ப தாங்க முடியல்லய்யா….உன் கவலைதான்யா எப்பிடி பொழக்கப்போறியோ புரியலையே…’

அவனை எந்த தோண்டு நிறுவனமும் ஏற்கவில்லை..அப்போதுஅவனை அங்கெல்லாம் விட அவருக்கும் மனசில்லை’….இந்தா சாமி சாபுடு …அவர் தந்த காய்ந்து போன ரொட்டிஞைக்கூட ஆத்திரத்துடன் அவன் அலங்கோலமாக சாப்பிடுவதைப் பரிதாபமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்…

‘பசிப்பா…அண்ணிகிட்ட கேக்க பயம்மா இருக்குப்பா…நாயி நாயின்னு திட்டறாப்பா..’

அபையெல்லாம் பேசாதே…சாப்புடு….தண்ணி குடி….

அவன் சாப்பிடும் போது டாகடர் வந்தார்..உடம்பைத்தொட்டுப்பார்த்தார்நாலு நால்லே வீட்டுக்குப்போயிடலாம் ஆமா இந்தாளு யாரு..உங்களைப்பாத்தா மாதிரி இருக்கான்…

யாரு பெரிசு….

‘என் சின்ன மகன் கொஞ்சம் போல மூளை வளர்ச்சி குறைவு ..மத்தபடி சொன்ன வேலை செய்வான்..வயசு முப்பத்து அஞ்சாகுது….’

ஏன்.. இவன் கிட்னி உங்களுக்கு பொருந்தலாம்..ஒரு தொந்திரவும் யாருக்கும் இருக்காது…கொஞ்சம் அதிகமா செலவாகும்…ஒரு பத்து ரூபாய் மாதிரி
செலவாகும்..நான் எனஜினியர்கிட்டபேசறேன்…..

டாக்டர் போய் விட்டார்..

டாக்டர் சொன்னது அங்கு சாமிக்கு சிரிப்பை வரவழைத்தது..பத்து லட்ச ரூபாய் தன் மகன் தனக்கு செலவு செய்து கிட்னி மாற்றினால் அப்புறம் உடனடியாக அவன் பெண்டாட்டிக்கு ஹார்ட் அட்டாக் வரும்…அல்லது புருஷனை புடவையில் கட்டி தூக்குப்போட்டுவிடுவாள்..அதெல்லாம் இருக்கட்டும் மகனுக்கே செலவு செய்ய மனசு வந்து விடுமா என்ன…நாளைக்கு பத்தாயிரம் யாரும் கட்டப்போவதில்லை…அது கூடத்தான் தான் கட்டவேண்டி வரும்…பணத்தைக்கட்ட பயந்து தன் என்ஜினீயர் மகன் ஆஸ்பத்திரிப்பக்கம் நாளைக்கு வரப்போவதில்லை…பாவமெல்லாம் இவன்தான் ….

மறுநாள் அங்கு சாமிதான் பணம் கட்ட வேண்டி வந்தது.டிஸ் சார்ஜ் ஆனதும் ரவி ஞாபகம்…என்ன சாப்பிட்டானோ எப்படி அந்த ராட்சசி வத்திருக்கிறாளோ…முதலில் சாம்பாரோடு அவனுக்கு சோறு போட்டு விடவேண்டும்…இன்னுர் எத்தனை நாள்இப்படி சோறு போட முடியும் …ஆண்டவனுக்கே வெளிச்சம்…களைப்பாக இருந்த்து..ஒரு ஆட்டோ பிடித்து என்ஜினீயர் மகன் வீடு வந்துவாசலில் மருரகள் குரள்…அவளுக்கு தணித்துப்பேசிப்பழக்கமேயில்லை…பேசினாலே தெரு வுக்ககு கேட்கும்…

அந்த டாக்டருக்கு பைத்தியம் பிடிச்சிருக்கனும்..பத்து லட்சம் செலவு செஞ்சி கிட்னி ‘மாத்தி அப்புறம் கல்யாணம் பண்ணப்போமா என்ன..வாரா வாரம் மேஸ்த்திரிக்கு அஞ்சு லட்சம் தரல்லேவீட்டு வேலை நின்னுடும்…அப்புறம் இவன் மெடிக்கலுக்கு அம்பதா ஒண்ணா தெரியாது…மரத்துலே பறிச்சா கூட முடியாதே…’

‘டாக்டர் சொன்னதை உங்கிட்ட சொன்னேன் கீதா….’

‘பாருங்க..நடக்கிறதைச்சொல்லுங்க இப்ப டாக்டர் சொல்லுவான்..அப்புறம் ஊர்லே சொல்லுவான் …பணம் இங்கேயிருந்து புறப்படனும்….சொல்றவனா செய்யப்போறான் வீண் பேச்சு என்னத்துக்கு…அவரு கவர்மெண்டு ஆஸ்பத்திரியிலே பார்த்துகட்டும்..நூறு வயசு வரை நல்லா இருக்கட்டும்…சம்பாரிச்சு திங்கட்டும்…இன்னிக்கு கிட்னி நாளைக்கு ஹார்ட்டு…அப்புறம்..மூளையிலே கட்டி….வயசானாஎல்லாம் வரும்தான் எல்லாத்துக்கும் செலவு செய்ய ஆரம்பிச்சா எல்லாம் போயி அப்புறம் நம்மளைத்தான் அடகு வைக்கனும்….’

‘இல்லே ..காலம் பூரா எங்களுக்காக உழைச்சார்….தனக்குன்னு ஒன்னும் வச்சிகல்லே….எந்த சுகமும் அனுபவிக்கல்லே..பாவமில்லே இருக்கு…அதான் …..’

வாஸ்தவம்…கழுதை மாதிரி ஒழைக்கறவன் கடைசியிலே இப்படித்தான் சுமக்கனும்பா புத்தியோட ஒழைக்கனும்…பொழைக்கனும்…எங்கப்பா கூட குமஸ்தாவாத்தான் ஆரம்பிச்சார்…இப்ப எங்கயோ போயிட்டார்…புத்தியில்லாதவங்களுக்காக நாம வருத்தப்பட ஆரம்பிச்சா திருவோடுதான் தூக்கனும்…நீங்க நல்லா இருக்கீங்க விடுங்க..

கோவணத்தைக் கிழிச்சி கட்டுனா யாருக்கும் மானம் மிச்சமிருக்காது..அஞ்சு விரல்ல வித்தியாசம் இருக்கற மாதிரி ஒவ்வொரு குடும்ப ஆளுங்க மத்தியிலே வித்தியாசம்இருக்கும்…’

‘இப்ப நான் என்னதான் செய்யட்டும் கீதா…’

‘இது நியாயமான கேள்வி…அவரு காலம் முடிஞ்சாச்சி…உங்களைப்பாருங்க…உங்களுக்கு மோசமான சுகர்…ஒரு நாள் கிட்னி மாற்றத்தத்துக்கு தயாரா இருங்கன்னு டாக்டர் சொன்னது ஞாபகம் இருக்கா…..’

‘அது…சும்மா பேச்சுக்கு சொன்னது….’

‘அப்படியில்லைங்க…அதுலே நெறைய அர்த்தம் இருக்குங்க…அவரு எவ்வளவு பெரிய டாகடர் …உங்க கூட விளையாட அவருக்கு நேரம் இருக்கா என்ன…நாளைக்கு அப்பிடி நடந்தா அண்டை அசல்லே போய் அய்யா சாமி எனக்கு கிட்னி தானம் பண்ணுன்னு பிச்சை எடுக்கவா முடியும்…சட்டம் கூட அதை ஒத்துக்காதே…இதெல்லாம் யோசிச்சு ஒரு திட்டம் வச்சிருக்கேன்…’

‘என்ன கீதா….’

‘பாருங்க…உங்க தம்பி இருக்கானே அவன் ரத்தம் நகம் அந்தக்கிறுக்கனோட தல முடி கூட உங்களுக்குன்னு அமைஞ்ச மாதிரி இல்லே இருக்கு… எல்லாம் பார்த்தாச்சு..அவரு காலம் முடிஞ்சாச்சி…இந்த கிறுக்கனுக்கு எதிர்காலமே கெடையாது…எனக்கு என் புருஷன் முக்கியம் …புரிஞ்சுகங்க….’

‘இரு எனக்கு பாத்ரூம் போகனும்…வந்து பேசறேன்…’

அங்கு சாமி ஒரு முடிவோடு பக்கவாட்டில் சாய்ந்து கவனிக்க ஆரம்பித்தார்..அவரை கவனிக்கும் சுழ்நிலை அங்கே யாருக்கும் இல்லை…

என்ஜினீயரின் பையன் இப்போது ஆரம்பித்தான்…

‘அம்மா…அந்த கிறுக்கனை வச்சி நாம என்னம்மா செய்ய முடியும்..’

டேய் முட்டாள் பையா …நாளைக்கே உங்கப்பனுக்கு கிட்னி கெட்டா நீயா தர முடியும்..உனக்கு வரப்போறவ இல்லே அவளோட அப்பன் ஆயி விடுவான்களா.ஏன் நானே அதுக்கு ஒத்துக்கமாட்டேனே..புரியுதா…எனக்கு புருஷன் எப்பிடி முக்கியமோ அதேமாதிரி நீயும் முக்கியம்டா… பாரு இது கூட ஒரு மாதிரி ஸேவிங்ஸ்டா…இத்தனை சோறு போட்டு அவனை வச்சிகிட்டா வீட்டை சுத்தம் பண்ண..துவைக்க…மார்க்கட் போக வாட்ச்மேன் வேலைக்கு விஸ்வாசமான ஆள்டா…நாய்க்கூண்டுலே படுக்கை..மிச்சமாகிற எச்சி சோறு அவனுக்கு போதும்..எனக்கு பத்தாயிரம் மிச்சம்…என் புருஷனுக்கு கிட்னி கொடுக்க எந்த பிரச்சினையும் இருக்காது..எந்த ஹாஸ்டல் போனாக்கூட இந்த சோறு கெடைக்காது இவனுக்கு…யோசிச்சுப்பாரேன்…பெரிய மகனுக்காக சின்ன மகனை வீட்லே எடம் குடுத்து வைக்கலாம்…அதுக்காக அவனுக்கு சரி எடம் கொடுக்க முடயுமா…இதாண்டா எதார்த்தம்…அவன் பொறப்புக்கு அவ்வளவுதான்…என் மல தப்பில்லை…என்ன நான் சொல்றது…..

அங்கு சாமிக்குப்புரிகிறது…எச்சில் சோறோ, மிச்ச சோறோ அது பிச்சை எடுக்கிற சோறில்லை…அதோடு அவள் சோல்கிற மாதிரி ஹாஸ்டலில் ஆயிரம் அசிங்கம் ..அதுக்கு இது மேல்…ஒரு வேளை பெரியவனுக்கு ஏதாவது ஆனால் இவன் உதவலாம்….அடே இவனால் இப்பிடி ஒரு பிரயோஜனம் இருக்கோ…ஆக இவன் உசிரோட இருப்பான்..ஏதோ நல்ல சோறும் கெட்ட சோறும் தின்று கொண்டு…..

பின்னால் திரும்பியபோது ரவி வந்து கொண்டிருந்தான்…சத்தப்படாமல் அவனை வெளியே இருந்த ஒரு கொயிலுக்கு இழுத்து வந்தார் …

‘அப்பா உனக்கு ஒடம்பு சரியாயிடுச்சாப்பா..’

‘எனக்கு ஒடம்பு மனசு எல்லாம் சரியாயிடுச்சி சாமி…எம்புட்டுக்கோ சாமி எங்கண்ணனுக்கு கிட்னி கெடக்கூடாது அவரு ரொம்ப நா உசிரோடிருக்கனும்னு கும்பிட்டிக்கோ சாமி…..கும்பிடு….’

கண்ணை மூடி அவன் சாமி கும்பிட்டான்….’அப்பா ஏம்பா அப்பிடி கும்பிடனும்…’

‘அவன் உசிரோட இருந்தாதாண்டா உனக்கு சாம்பார் ரஸம் பாயஸம் எல்லாம் கடைக்கும் ரொம்ப அதிர்ஷ்ட்டக்காரண்டா நீ…சாமியைக் .கும்புடு… ஆங்காரமாய் பல்லைக்கடித்துக்கொண்டார்…

‘.ஏ..சாமிகளா…நீங்க இவனை மாதிரிப்பிறந்து நாசமாய்ப்போகனும்…….. ‘

Print Friendly, PDF & Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *